நல்வாழ்த்துகள் அவர்களுக்கு...

'1996 அல்லது1998 காலப் பகுதி. புனித மக்கா ஹரம் ஷரீபில் முதல் ஸப்பில் பஜ்ர் தொழுகைக்காக ஆர்வத்துடன் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். முன்னே பொலிஸ்காரர் ஒருவர் நின்றுகொண்டு முதல் ஸப்பில் இடம்பிடிக்க வேண்டுமென்ற ஆசையோடு விரைந்துவருகின்ற மக்களை தடுத்துக்கொண்டிருக்கிறார், முதல் ஸப்பில் அறிஞர்களும் ஷெய்க்மார்களும் அமர வேண்டும் என்பதனால்... சில எட்டுகள் தள்ளி மகாமு இப்றாஹீமுக்கு முன்னாலும் சில பொலிஸார் நின்றுகொண்டு முதல் ஸப்பை நோக்கி விரையும் பொதுமக்களை அங்கே செல்ல விடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வேளையில், வெண்ணிற தாடியுடன் வயது முதிர்ந்த ஒருவர் முதல் ஸப்பை நோக்கி விரைந்து வருகிறார். பொலிஸார் அவரை தடுக்கிறார்கள். எவ்வழியிலாவது முதல் ஸப்பை அடையவேண்டும் என்பதற்காக புனிதமிகு கஃபாவை சுற்றி சுற்றி பார்க் கிறார். பொலிஸார் அவரை ஒரு பக்கத்தாலும் விடுவதாக இல்லை. அப்போது ஒரு பொலிஸ்காரர் வேறுபக்கம் திரும்பியிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒருவழியாக முதல் ஸப்பை அடைந்துகொண்டார்முதியவர். அடைந்தவுடனேயே தாமதியாது பஜ்ருடைய ஸுன்னத்தை தொழ ஆரம்பித்துவிட்டார். தான் திரும்பிநின்ற நொடிப்பொழுதில் முதல் ஸப்பிற்கு வந்த முதியவரை கண்டு கோபமுற்ற பொலிஸ்காரர், அவர் தொழுது முடியும் வரை அவருக்கு பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்தார், அவர் தொழுதுமுடிந்ததும் அங்கிருந்து வெளியேற்றிவிட... 

தொழுதுமுடிந்ததும் அவரது தோளைப் பற்றி எழும்புமாறு கூறிய  பொலிஸ்காரரிடம் 'என்ன?' என்று வினவினார் முதியவர். அதற்கு அப்பொலிஸ்காரர் 'இவ்விடம் அறிஞர்களுக்கும் ஷெய்க்மார்களுக்குமென ஒதுக்கப்பட்டுள்ளது, பின்னால் செல்லுங்கள்' என கடுந்தொனியில் கூறினார். அதற்கு அம்முதியவர் 'அப்படியென்றால் அவர்கள் நேரகாலத்தோடு வருகைதந்திருக்க வேண்டுமே' என்றார். பொலிஸ்காரர் மேலும் கோபமடைந்தார்.

இதை சற்று தூரத்திலிருந்து  அவதானித்துக்கொண்டிருந்த ஒருவர் அந்த முதியவரை நன்றாகவே அடையாளம் கண்டு கொண்டார். உடனே அந்த பொலிஸ்காரரை நெருங்கி அவரது கையைப் பற்றி அவரது காதுக்குள், 'அந்த முதியவர் யாரோ ஒருவரல்ல, அவர்தான் பேரறிஞர்  இப்னு உதைமீன்' என்று கூறினார். இதை கேட்டதுதான் தாமதம் பொலிஸ்காரர் உடனடியாக அறிஞரிடம் விரைந்து சென்று அவர்களின் தலையிலே முத்தமிட்டார். தன் செயலுக்கு மன்னிப்பு கோரினார். அப்போது அறிஞர் அவர்கள் 'பொலிஸ்காரரிடம் தன்னை அடையாளம் காட்டியது ஏன்?' என்பது போல் அந்த மனிதரிடம் சைகையால் வினவியதும், அந்த மனிதரோ தனக்கு வேறு வழி தெரியவில்லை என்பது போல்  சைகையால் மன்னிப்புகோரினார். சற்று நேரத்தில் ஸுப்ஹ் தொழுகை நடத்துவதற்காக ஹரம் ஷரீபின் இமாம்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் ஸுஊத் அஷ்ஷுரைம் அவர்கள் வந்தார். பேரறிஞர் இப்னு உதைமீன் (றஹ்) அவர்களை கண்டதும் அவர்களையே தொழுகை நடத்துமாறு இமாம் அவர்கள் வினயமாக வேண்டிய போதிலும் அறிஞர் அவர்கள் மறுத்துவிடவே அஷ்ஷெய்க் ஷுரைம் அவர்களே தொழுகையை நடத்தினார்கள்.

முஸ்லிம் உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு பேரறிஞரின் பணிவுத்தன்மை இது. உண்மையான அறிஞர்கள் இவ்வாறுதான் திகழ்வார்கள். 

******

பஜ்ர் தொழுகையை உரிய வேளையில் ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர்களே! உங்களுக்கு நற்சோபனங்கள்!!

பஜ்ர் தொழுகை என்பது ஒரு முஸ்லிம் தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் முதல் பரீட்சை. படுக்கையை உதறிவிட்டு பள்ளிவாசல் சென்று அதை கூட்டாக நிறைவேற்றுவோர் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள்!

******

பஜ்ர் தொழுகையை நிறைவேற்றுவதற்காக மஸ்ஜிதினுள் நீங்கள் நுழைகிறீர்கள், ஒரு சொற்பத் தொகையினரே அங்கு காணப்படுகிறார்கள் எனில் மகிழ்ச்சியடையுங்கள், மாட்சிமைமிகு அல்லாஹ் அவனது அடியார்களிலிருந்து உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறான்... 

******

பஞ்சணை மெத்தையில் உறக்கத்தை அணைத்துக்கொண்டிருக்கும் ஒரு மன்னனின் கிரீடத்தை விட மஸ்ஜிதில் பஜ்ர் தொழுகையை நிறைவேற்றும் ஓர் ஏழையின் செருப்பு மிக அழகானது...

******

தொழிலுக்காக, படிப்புக்காக, இன்ன பிற உலக அலுவல்களுக்காக என்ற நோக்கத்தோடு அதிகாலையில் எழாமல் அரசர்களின்   அரசனாகிய அல்லாஹ்வின் அன்பை பெற வேண்டுமென்பதற்காக அதிகாலையில் துயிலெழுந்து பஜ்ர் தொழுகையை நாள் தவறாமல் பேணுகின்ற ஒவ்வொருவருக்கும் நற்சோபனங்கள்!

******

'யார் பஜ்ர் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றுகிறாரோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார்' என்ற நபிகளாரின் நற்சோபனம் அதிகாலைத் தொழுகையை கூட்டாக நிறைவேற்றும் அனைவருக்கும் உரித்தாகட்டும். 

******

நற்சோபனம் பெற்றுக்கொள்ளுங்கள் பஜ்ர் தொழுகையாளிகளே!

நீங்கள் வீட்டிலிருந்து மஸ்ஜிதை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும்  உங்கள் அந்தஸ்துகள் உயர்ந்து, பாவங்கள் மன்னிக்கப்பட்டிருப்பதை மறுமையில் காண்பீர்கள்! நபிகளாரின் நற்சோபனத்தை நினைவுகூருங்கள் : 'இரு குளிர்நேரத் தொழுகைகளை நிறைவேற்றுபவர் சுவர்க்கம் நுழைவார்' .

******

இம்மை, மறுமை இரண்டினதும் வெற்றியைப் பெற்றுத்தரும் தொழுகையைப் பாழாக்கி, விரும்பிய நேரமெல்லாம் உறங்கி, விரும்பிய நேரத்தில் எழுபவர்கள் கவலைகள் சூழ் உலகிலேயே சஞ்சரிப்பார்கள். 

*****
- அறபு மொழியில் வந்த பதிவொன்றிலிருந்து...

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
Previous Post Next Post