பிறரை சிரிப்பூட்டுவதற்காக பொய் சொல்வது

'பிறரை சிரிப்பூட்டுவதற்காக யார் பொய் சொல்கிறாரோ அவருக்கு கேடு உண்டாகட்டும்' என நபியவர்கள் மூன்று தடவைகள் எச்சரித்தார்கள் (திர்மிதி, அபூதாவூத், நஸாஈ, அஹ்மத்).

இத்தகைய பொய்களுக்கும் புனைவுகளுக்கும் பின்னணியில் வெறுமனே வாசகர்களை சிரிக்க வைக்கும் நோக்கத்தை தவிர வேறு எந்த நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. யாராக இருந்தாலும் பிறரை சிரிப்பூட்டுவதற்காகவே பொய்களை அவிழ்த்துவிடுவது நபியவர்கள் மிகவுமே எச்சரித்த விடயமாகும்.

நகைச்சுவை இஸ்லாத்தில் கூடாது என்பதல்ல. அது வரையறைகளோடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எந்த நகைச்சுவையிலும் பொய் கலந்திருக்கக் கூடாது, பிறரை அவமானப்படுத்தக்கூடாது என்பன முக்கிய நிபந்தனைகளாகும்.

நபியவர்கள் கூட பல தருணங்களில் நகைச்சுவையாக பேசியிருக்கிறார்கள். ஒரு தடவை ஸஹாபாக்கள் நபிகளாரிடம், 'தாங்கள் எங்களோடு நகைச்சுவையாக பேசுகிறீர்களே...' என்று குறிப்பிட்ட போது, 'உண்மைதான், ஆனால் நகைச்சுவையாயினும் உண்மையைத் தவிர வேறு எதையும் நான் பேசுவதில்லை' என்று கூறினார்கள் (திர்மிதி).

ஆயினும் படிப்பினைக்காக கற்பனைப் பாத்திரங்களை உருவாக்கி, சிறுகதைகள், நாவல்கள், உருவகக் கதைகள் படைப்பது பொய் சொல்வதாக அமையாது.

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி) 
Previous Post Next Post