வைத்தியசாலை அமைப்பதற்கு பொருத்தமான இடம் தேடிய வரலாறு

அபூபக்ர் அர் ராஸீ (கி.பி.865-923): உலகம் கண்ட மாபெரும் முஸ்லிம் மருத்துவ மேதைகளுள் ஒருவர். அவர் நிகழ்த்திய மருத்துவ, ரசாயன பரிசோதனைகள் இன்றும் மருத்துவ உலகால் நினைவுகூரப்படுகின்றன. தான் ஒரு தடவை மேற்கொண்ட ரசாயன பரிசோதனை முயற்சியின் போது நச்சுவாயுவை சுவாசித்தமையால் சிலகாலம் கடுமையான நோயுற்று, மற்றுமொரு பிரபல வைத்தியரின் நீண்ட சிகிச்சையின் பின் குணமடைந்தார்.

அப்பாஸிய கலீபா ஜஃபர் பின் அல்முஃதழத் ஆட்சித் தலைநகரான பக்தாதில் வைத்தியசாலை ஒன்றை அமைக்குமாறு அபூபக்ர் அர்ராஸீயை வேண்டிக்கொள்ளவே, அவர் தனது மருத்துவ மாணவர்கள், நண்பர்களுடன் வைத்தியசாலை அமைப்பதற்கு சுகாதார ரீதியாக பொருத்தமான இடமொன்றை தேர்வுசெய்வது தொடர்பாக பல நாட்கள் நீண்ட கலந்துரையாடல்கள் மேற்கொண்டார். 

கலந்துரையாடல்கள் திருப்தியளிக்காமல் போகவே, இடத்தை தேர்வுசெய்வதற்காக புதுமையான பரிசோதனை ஒன்றை மேற்கொண்டார். எப்படியென்றால், பெரிய இறைச்சித் துண்டொன்றை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டினார். ஒவ்வொரு துண்டையும் பக்தாத் நகரின் பல்வேறு பகுதிகளில் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்தார். ஒரு சில நாட்களின் பின் அனைத்து இடங்களுக்கும் சென்று, வைக்கப்பட்ட இறைச்சி துண்டுகளை பரிசோதித்தார். அந்த இடத்தின் சூழல் இறைச்சி துண்டில் பாதிப்பை செலுத்தியிருக்கிறதா என்பதை அவதானித்தார். 

சில இடங்களில் வைக்கப்பட்ட இறைச்சித் துண்டுகள் விரைவாகவே பழுதடைந்திருந்ததை கண்டறிந்தார். எனவே அத்தகைய இடங்கள் வைத்தியசாலை நிறுவ சற்றும் பொருத்தமற்றவை என்ற முடிவுக்கு வந்தார். மற்றும் சில இடங்களில் வைக்கப்பட்ட இறைச்சி துண்டுகள் சற்று தாமதித்து பழுதடைந்திருந்தன. மற்றும் சில இடங்களில் பழுதடையாமலே இருந்தன. அத்தகைய இடங்கள் மிக சிறந்த சூழல் ஆரோக்கியம் கொண்டவை என்பதனால்தான் இறைச்சி துண்டுகள் பழுதடையாமல் இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்து, கலீபாவிடம் சென்று தனது பரிசோதனை முயற்சியையும் பொருத்தமான இடத்தையும் குறிப்பிட்டார். அர்ராஸீயின் நுட்பம் கண்டு வியந்த கலீபா, அவர் குறிப்பிட்ட இடத்தில் வைத்தியசாலை நிறுவுமாறு பணித்தார். அவ்வைத்தியசாலைக்கு அர்ராஸீ அவர்களே தலைமை மருத்துவராக நியமிக்கப்பட்டார். அவரின் கீழ் அவரது மாணவர்கள் உட்பட பல மருத்துவர்கள் பணிபுரிந்தனர். இவ்வைத்தியசாலையில் ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவ சேவையை வழங்கவேண்டும் என்பதை அபூபக்ர் அர்ராஸீ தனது கொள்கையாக வைத்திருந்தார். 

வைத்தியசாலை அமைப்பதற்கு சுகாதார ரீதியாக பொருத்தமான இடத்தை தெரிவுசெய்ய அன்றைய முஸ்லிம் உலகில் இவ்வளவு பிரயத்தனம் எடுத்திருக்கிறார்கள். அரச, தனியார் மருத்துவ நிலையங்கள் நிறைந்துள்ள இக்காலத்தில் சுகாதார ரீதியான இடப்பொருத்தப்பாடு பற்றி சிந்திக்கிறார்களா என்று தெரியவில்லை.

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
Previous Post Next Post