குர்ஆனிலும், ஸுன்னாஹ்விலும் கல்வி என்ற வார்த்தையைக் கொண்டு நாடப்படுவது மார்க்கக் கல்வியே ஆகும்

 - ஷைஃக் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான், ஷைஃக் ஸாலிஹ் அல்-உஸைமீ 


ஷைய்க் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் ஹஃபிதஹுல்லாஹ்:

உம்மத்தின் மீது கடமையாக இருக்கக்கூடிய கல்வியைக்கொண்டு நாடப்படுவதாவது - அது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையான கல்வியாக இருக்கட்டும் அல்லது உம்மத்தின் ஒரு சாரார்* மீது மட்டும் கடமையான கல்வியாக இருக்கட்டும் - (அதைக் கொண்டு நாடப்படுவது யாதெனில்) அது நபி ﷺ கொண்டுவந்த ஷரீயத்துடைய கல்வியே ஆகும்.

[*மார்க்கத்தில் இரு வகையான கடமைகள் உள்ளன. முதலாவது வகை: ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாக இருப்பது. இதற்கு "வுஜூப் ஐய்னிய்" எனக் கூறப்படும்.  உதாரணத்திற்கு ஜவேளைத் தொழுகைகள் ஆகும். இரண்டாவது வகை: முஸ்லிம்களில் ஒரு சாரார் மீது மட்டும் கடமையாக இருப்பது. இதற்கு "வுஜூப் கிஃபாயிய்" எனக் கூறப்படும்.  உதாரணத்திற்கு ஜனாஸா தொழுகை ஆகும். முஸ்லிம்களில் சிலர் அதை நிறைவேற்றிவிட்டால் மற்றவர்கள் மீதுள்ள கடமை நீங்கிவிடும். முஸ்லிம்கள் யாருமே இதை நிறைவேற்றவில்லை என்றால் அனைத்து முஸ்லிம்கள் மீதும் பாவமாகிவிடும்].

உற்பத்தி செய்தல், வியாபாரம், கணக்கு வகைகள் மற்றும் பொறியியல் போன்ற உலகக் கல்வியைப் பொறுத்தமட்டில், இந்தக் கல்வியைக் கற்றுக் கொள்வது அனுமதிக்கப்பட்டதாகும். எனினும், உம்மத் அதன்பக்கம் தேவையுடையதாக இருப்பின், சில நேரங்களில் அதைக் கற்றுக்கொள்வது அதற்கு சக்தி பெற்றவர் மீது கடமையாக இருக்கும். ஆனால் அது (அக்கல்வியானது) குர்ஆனிலும், ஸுன்னாஹ்விலும் நாடப்படும் கல்வி அல்ல. 

எதனுடைய மக்களை அல்லாஹ் புகழ்ந்து, போற்றியுள்ளானோ மேலும் எந்த கல்வியைக் குறித்து நபி ﷺ அவர்கள், "உலமாக்கள் (கல்வி சுமந்தவர்கள்) நபிமார்களுடைய வாரிசுகள்" என்று கூறினார்களோ, அதைக்கொண்டு நாடப்படுவது ஷரீஅத்துடைய கல்வியாகும். 

உலகக் கல்வியைப் பொறுத்தமட்டில் எவரொருவர் அதனை அறியாதவராக இருப்பாரோ, அவர் மீது எந்த பாவமும் இல்லை. எவர் அதனை கற்றுக் கொள்கின்றாரோ, அவருக்கு அது அனுமதிக்கப்பட்டதாகும். அதைக் கொண்டு உம்மத்திற்கு அவர் பயனளித்தாரெனில், அதற்கு அவர் கூலி கொடுக்கப்படுவார். இக்கல்வியை அறியாதவராக இருக்கும் நிலையில் ஒரு மனிதர் மரணிப்பாரெனில், மறுமையில் அதற்காக அவர் குற்றம் பிடிக்கப்படமாட்டார். 

ஆயினும், எவர் ஒருவர் ஷரீஅத்துடைய கல்வியை அறியாத நிலையில் மரணிப்பாரோ - அதிலும் குறிப்பாக அவர் மீது கடமையாக இருக்கக்கூடிய கல்வியாக இருக்கும் நிலையில் - நிச்சயமாக அதைக்குறித்து மறுமையில் அவர் கேள்வி கேட்கப்படுவார்.

 "ஏன் நீ அதனை கற்றுக் கொள்ளவில்லை?" 

 "ஏன் நீ அதைப் பற்றி கேட்கவில்லை?" (என விசாரிக்கப்படுவார்). 

கப்ரிலே வைக்கப்பட்ட பிறகு, 'அல்லாஹ் என்னுடைய இறைவன், தீனுல் இஸ்லாம் என்னுடைய மார்க்கம், முஹம்மது நபி ﷺ என்னுடைய தூதர்' என்று கூறியவரே வெற்றி பெறுவார். அவரிடத்திலே, "இதனை நீ எங்கே பெற்றுக் கொண்டாய்?" என்று கேட்கப்படும். (அதற்கு) அவர், "குர்ஆனை ஓதினேன் மேலும் அதனை கற்றுக் கொண்டேன்", என்று (பதில்) கூறுவார். 

ஆயினும், அதனை (அக்கல்வியை) புறக்கணித்த ஒருவர் கப்ரில் கேள்வி கேட்கப்படும் பொழுது, "ஹா! ஹா! இல்லை (எனக்கு தெரியாது). மக்கள் ஏதோவொன்றைக் கூற செவிமெடுத்தேன். நானும் (அவ்வாறே) கூறினேன்" என நிச்சயமாகக் கூறுவார். 

இவருக்கு, அவருடைய கப்ரானது அவர் மீது நெருப்பாக மூட்டப்படும். அல்லாஹ் (அதிலிருந்து நம்மை) பாதுகாப்பானாக. அவருடைய விலா எலும்புகள் இடம் மாறிவிடும் அளவிற்கு (அவருடைய கப்ரானது) அவர்மீது நெறுக்கப்படும். மேலும், அது நரகப் படுகுழிகளில் இருந்துள்ள ஒரு படுகுழியாக மாறிவிடும். ஏனென்றால், அவர் அறிந்து கொள்ளவும் இல்லை, படிக்கவும் இல்லை. அவரிடத்திலே "நீ அறிந்து கொள்ளவும் இல்லை, படிக்கவும் இல்லை" என்று கூறப்படும். 

அவர் கற்றுக் கொள்ளவும் இல்லை, கற்றுக் கொண்ட மக்களை (உலமாக்களைப்) பின்பற்றவும் இல்லை. (மாறாக) அவரோ அவருடைய வாழ்க்கையை வீணடித்தவராக மட்டுமே இருந்தார். இவரே துர்பாக்கிய நிலைக்கு செல்லக்கூடியவராவார். அல்லாஹ் பாதுகாப்பானாக.

ஹதீஸ்களில் புகழப்பட்டு வந்துள்ள கல்வியில் மருத்துவக் கல்வி, பொறியியல் கல்வி மற்றும் (அது போன்ற) பிற கல்விகள் உள்ளடங்குமா?

 ஷைக் ஸாலிஹ் அல்-உஸைமீ ஹஃபிதஹுல்லாஹ:

இந்த கேள்வியாளர் கூறுவதாவது: நபி ﷺ அவர்களுடைய வார்த்தையான, "எவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் செல்வாரோ" என்ற ஹதீஸ், இங்கே கல்வி என்ற வார்த்தையைக் கொண்டு நாடப்படுவது ஷரீஅத்துடைய கல்வியா அல்லது எந்த கல்வியில் எல்லாம் பயன் இருக்குமோ அவையனைத்துமா? அதாவது மருத்துவம், பொறியியல், உயிரியல் மற்றும் பிற கல்விகளும் அதில் இடம்பெறுமா?

 (அதற்குரிய) பதிலாவது: கல்வி எனும் சொல்லானது குர்ஆனிலும் ஸுன்னாஹ்விலும் பொதுவாக வந்திருக்குமேயானால், அது ஷரீஅத்துடைய கல்வியாகும். அவ்விரண்டிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் சிறப்புகள் மற்றும் புகழுக்குரிய தன்மைகள், அதற்கே (ஷரீஅத்துடைய கல்விக்கே) ஆகும். எனினும், உலகக் கல்வியிலிருந்து எவற்றையெல்லாம் கொண்டு பயனடைந்துக் கொள்ள முடியுமோ, அவையெல்லாம் அனுமதிக்கப்பட்ட கல்வியாகும். 

அதனை மேற்கொள்ளக்கூடியவரின் எண்ணம் சரியானதாக இருக்குமென்றால், நிச்சயமாக அவர் அந்த அனுமதிக்கப்பட்ட (கல்வியில்) அவருடைய ஸாலிஹான நிய்யத்திற்காக கூலி கொடுக்கப்படுவார். 

ஆனால், எந்த கல்வியானது தேடப்பட வேண்டுமோ மேலும் (எந்த கல்வியானது) ஆயுள்களையும், செல்வங்களையும் செலவு செய்யப்படுவதற்கு உகந்ததோ, அது குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்வுடைய கல்வியே ஆகும். 

குர்ஆன், ஸுன்னாஹ் உடைய அறிவை தேடுவதே புத்திசாலித்தனமான மக்களுக்கு உகந்ததாகும். ஏனென்றால், படைப்பினங்களிலேயே உள்ளத்தால் தூய்மையானவர்கள் மேலும் புத்தியால் உயர்வானவர்கள் நபிமார்கள் ஆவர். வஹீ உடைய கல்வியையே அவர்களுக்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். (இது மார்க்கக் கல்வியே சிறப்பான கல்வி என்பதை காட்டுகின்றது). 

எனவே, எவர் ஒருவர் தன்னுடைய புத்திசாலித்தனத்தைக் கொண்டு பயனடைய வேண்டுமென்றும், மேலும் (பிற) முஸ்லிம்களையும் பயனடையச் செய்ய வேண்டுமென்றும் விரும்புவாரோ, அவர் குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்வுடைய உடைய கல்வியைப் பெறுவதையே முயற்சிப்பார். 

உலகக் கல்வியை பொறுத்தமட்டில், முஸ்லிம் அல்லாத ஒரு காஃபிரிடம் இருந்து கூட அவற்றிலே முஸ்லிம்கள் பயன்பெற முடியும். (மார்க்கக் கல்வி என்பது அவ்வாறன்று). 

இந்தக் காலத்தில், ஷரீஅத்தின் கல்வியைப் பெற்ற உலமாக்களின் பக்கம் இருக்கும் தேவை கடுமையானதாக உள்ளது. இதற்குக் காரணம், மார்க்கத்தை எத்திவைப்பதற்கு, அதை மக்களுக்கு தெளிவுபடுத்துதற்கு, ஷரீஅத்தின் கல்வியை பரப்புவதற்கு, மேலும், (அதனை) மக்களுக்கு போதிப்பதற்கு இருக்கின்ற உலமாக்களின் எண்ணிக்கை தேவைக்கு போதாது (குறைவாக) இருப்பதால் ஆகும். 


மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வ அஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.
أحدث أقدم