ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி)

ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி)

ஹிஜ்ரத் சகாப்தம் நடைபெற்று நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் கழித்து விட்டிருக்கலாம். ஒரு நாள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு துக்கச் செய்தியைக் கேள்விப்பட்டுக் கடும் துயரத்திற்குள்ளானார்கள். பெரும் சோகத்தில் ஆழ்ந்தார்கள். அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது! அது ஒரு பெண்மணியின் மரணச் செய்தி! உடனே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்த அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்றார்கள். நீண்ட நெடிய தூக்கத்தில் ஆழ்ந்து விட்டிருந்த அப்பெண்ணின் தலையருகே துயரமே உருவாக நின்று கொண்டு, என் அன்பிற்குரிய அன்னையே! இறைவன் உங்கள் மீது கருணை பொழியட்டும். என் தாய்க்குப் பிறகு நீங்கள் எனக்குத் தாயாக இருந்தீர்கள். நீங்கள் பசியோடு இருந்தும் எனக்கு உணவூட்டினீர்கள். நீங்கள் கந்தல் ஆடைகளை அணிந்து கொண்டு எனக்கு புத்தாடை வாங்கி அணிவித்து மகிழ்ந்தீர்கள் என்று கண்கலங்கியபடியே கூறினார்கள்!

அதன் பிறகு மாநபி (ஸல்) அவர்கள் தம்முடைய அங்கியைக் கொடுத்து அதில் தம் அன்னையை கஃபனிட்டு அடக்குவற்குப் பயன்படுத்துமாறு கூறினார்கள்.
     
பிறகு ஜன்னதுல் பகீஃ எனும் மதீனாவின் கப்றுஸ்தானில் ஒரு மண்ணறை தோண்டுமாறு உஸாமா இப்னு ஜைத் (ரலி), அபூ அய்யூப் அன்ஸாரி (ரலி) இருவரையும் நபி (ஸல்) அவர்கள் ஏவினார்கள். அவ்விருவரும் கப்றின் முதல் பகுதியை வெட்டி முடிந்தபோது நபி (ஸல்) அவர்களே உள்ளே இறங்கி தம்முடைய திருக்கரங்களால் கடைசிப் பகுதியைத் தோண்டினார்கள். தோண்டப்பட்ட மண்ணையும் நபியவர்களே மேலே அள்ளிப் போட்டார்கள். முழுமையாக வெட்டி முடித்தபோது நபியவர்கள் அம்மண்ணரையில் படுத்துக் கொண்டு,
     
இறைவனே, என் அன்னைக்கு கருணை புரிவாயாக! அவர்களின் மண்ணரையை விரிவாக்குவாயாக!என்று துஆ செய்தார்கள்.
     
இவ்வாறு இறைவனிடம் இறைஞ்விட்டு, அம்மண்ணறையிலிருந்து வெளியே வந்ததும் மிகுந்த வேதனையோடு தம் திருக்கரத்தால் தாடியைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தார்கள். கண்ணீர் பெருக்கெடுத்து அவர்களின் கன்னங்களில் வழிந்தது!
     
நபி (ஸல்) அவர்கள் தங்களின் அங்கியை கஃபன் துணியாகக் கொடுத்தது பற்றியும் கப்றில் இறங்கி கொஞ்ச நேரம் படுத்திருந்தது பற்றியும் மக்கள் வியந்து நின்றபோது நபியவர்கள் வளக்கம் அளித்தார்கள்.
     
அபூ தாலிபுக்குப் பிறகு இவர்களைவிடவும் அதிகமாக யாரும் என் மீது கருணை காட்டவில்லை. இவர்களுக்கு சுவனத்தில் ஆடையாக இருக்கட்டும் என்பதற்காக என் அங்கியை அணிவித்தேன். மண்ணறைத் தொல்லைகளின் கடுமை குறைய வேண்டும் என்பதற்காகவே நான் அதில் கொஞ்சநேரம் படுத்திருந்தேன்.
     
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இத்துணை உளப்பூர்வமான பாசத்தையும் அன்பையும் பொழியும் அளவுக்கு நன்மதிப்பும் நற்பேறும் வாய்க்கப்பெற்ற அந்தப் பெண்மணி யார் தெரியுமா? அவர்தான் அண்ணலாரின் பெரிய தந்தை அபூதாலிபின் மனைவியும் அலீ (ரலி) அவர்களின் தாயாருமான அன்னை ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) அவர்கள்!
     
ஆம்! எந்த அபூதாலிப் அண்ணல் நபியவர்களை, அவர்களின் குழந்தைப் பருவம் முதலே பாதுகாத்து வளர்த்து வரும் பாக்கியம் பெற்றிருந்தும் கூட என்றோ வருகின்ற மறுமை வாழ்வின் தண்டனைக்கு அஞ்சி இஸ்லாத்தில் இணைந்து விட்டார் என்று குறைஷியர் இழிவாகப் பேசுவார்களோ என அஞ்சி அண்ணலாரை இறைத் தூதராக ஏற்றுக் கொள்ள மறுத்தாரோ – அந்த அபூதாலிபின் துணைவியர்தான் அண்ணலாரின் மீது ஈமான் கொண்டு – அதாவது அவர்கள் இறைவனின் திருத்தூதர்தாம் என ஏற்றுக் கொண்டு உண்மை விசுவாசியாக வாழ்ந்துள்ளார்கள்! உலக முஸ்லிம்கள் அனைவரும் என்றென்றும் பெருமையோடு நினைவு கூர்ந்து வருகின்ற கண்ணியத்திற்குரிய நபித்தோழியர்களில் ஒருவராய் ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) திகழ்கின்றார்கள்.
பிறப்பும் சிறப்பும்
     
அன்னை ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) அவர்கள் குறைஷி வம்சத்தின் மிக உயர்ந்த கண்ணியமான குடும்பமாகிய பனூஹாஷிம் குலத்தில் பிறந்து அவர்களிடமே மிகச் சிறந்த முறையில் வளர்ந்தார்கள். குழந்தைப் பருவம் முதலே சிறந்த குணங்களுக்கும் உயர்ந்த பண்பாட்டுக்கும் உரைவிடமாய்த் திகழ்ந்தார்கள்.
     
அதனால்தான் தூர நோக்கும் தீர்க்கமான அறிவும் கொண்ட அப்துல் முத்தலிப், ஒழுக்கத்தின் சிகரமாய் விளங்கிய ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) அவர்களைத் தேர்ந்தெடுத்து தம் மகன் அபூதாலிபுக்கு மணம் முடித்து வைத்தார்கள்.
     
அல்லாமா இப்னு அப்துல் பர் (ரஹ்) அவர்கள் இஸ்தீ-ஆப் எனும் நூலில்  ஹாஷிம் குலத்தில் பிறந்த இவர், அக்குலத்தில் பிறந்த ஒருவருக்கே வாழ்க்கைப் பட்டு, அவரின் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுத்த முதல் ஹாஷிம் பெண்மணி ஆவார் என்று கூறியுள்ளார்.
நபியவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல்
     
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் மரணமான பிறகு நபியவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அபூதாலிப், ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) இருவரின் பொறுப்பாயிற்று! இருவரும் நபியவர்களைப் பாதுகாக்க உளப் பூர்வமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். அவர்களுக்கு அவர்களின் பிள்ளைகளை விடவும் நபியவர்களின் மீதுதான் அதிக அன்பும் பாசமும் இருந்தன.
     
மக்காவில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொண்ட ஆரம்ப காலத்தில் ஆபத்தான – கொடூரமான தாக்குதலைத் தொடுக்கும் அளவுக்குத் துணியவில்லை, குறைஷிகளுக்கு மத்தியில் பனூஹாஷிம் குலத்துக்கு இருந்த தனிப்பட்ட மரியாதைதான் அவர்களின் கைகளைக் கட்டிப் போட்டிருந்தது. குறிப்பாக அபூதாலிப் - அவர்தம் மனைவி ஃபாத்திமா (ரலி) ஆகிய இருவரின் செல்வாக்கும் அந்தஸ்தும்தான் எதிரிகளை அந்த அளவுக்கு எதுவும் செய்யவிடாமல் தடுத்து வந்தன என்பது மிகையான ஒன்றல்ல!

பொறுமையின் சிகரம்
     
குறைஷிகள் அண்ணலார் மீது கொடூரமான தாக்குதல் தொடுக்கத் துணியவில்லையே தவிர, நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களை நம்பி வந்த ஏழை எளிய முஸ்லிம்களுக்கும் தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் தொல்லைகளையும் துன்பங்களையும் தொடர்ந்து கொடுத்து வந்தனர். இப்படி எதிரிகளால் இழைக்கப்பட்ட துன்பங்கள் அனைத்திலும் ஏனைய முஸ்லிம்களைப் போன்று ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) அவர்களும் பொறுமையின் சின்னமாய் விளங்கினார்கள்.
   
குறைஷிகளின் அத்துமீறிய கொடுமைகளைத் தாங்க முடியாமல், நபிப்பட்டம் வழங்கப்பட்டு 5வது 6வது ஆண்டுகளில் அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்த முஸ்லிம்களின் குழுவுடன் ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்களும் அவர்களும் மனைவி அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களும் புறப்பட வேண்டியதாயிற்று! அந்த சந்தர்ப்பத்தில் ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) அவர்கள் தம் மகனும் மருமகளும் பிரிந்து போவதைப் பொறுமையோடு சகித்துக் கொண்டார்கள்.
     
இதேபோன்று :-
     
நபிப்பட்டம் வழங்கப்பட்டு 7ஆம் ஆண்டு அபூதாலிப் அவருடைய குடும்பத்தார்கள், முஸ்லிம்கள் - அவர்களின் ஆதரவாளர்கள் ஆகிய அனைவரையும் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கத் தீர்மானித்தார்கள் மக்கத்து குறைஷிகள். ஊரில் எவரும் திருமண உறவு ஏற்பட எந்தத் தொடர்பும் அவர்களுடன் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தீவிரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அபூதாலிப், அவருடைய சகோதரரின் மகனார் முஹம்மத் (ஸல்) அவர்களைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும், தாங்கள் அவரைத் தீர்த்துக் கட்டிவிட்டு இஸ்லாத்தின் பிரச்சாரத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பது குறைஷிகளின் கோரிக்கை! அது ஏற்றுக் கொள்ளப் படாததால் இந்த சமூக பகிஷ்கரிப்பு! இது ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல, சுமார் மூன்றாண்டு காலம் வரையில் நீடித்தது!
     
இந்த நீண்டகால பகிஷ்கரிப்பினால் பாதிப்பிற்குள்ளான பனூஹாஷிம் குடும்பத்தினர், ஏழை முஸ்லிம்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் பொறுமையை மேற்கொண்டு இஸ்லாமியப் பற்றையும் கொள்கைப் பிடிப்பையும் வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக அன்னை ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) அவர்கள் - தமது முதுமை தளர்ச்சிகளினூடே அந்தச் சோதனைக் காலத்தில் வெளிப்படுத்திய ஊக்கத்துக்கும், உறுதிக்கும் ஈடிணை இல்லை என்றே சொல்லாம்!
     
நபித்துவத்தின் பத்தாம் ஆண்டில் அபூதாலிப் மரணம் அடைந்தார். அதன் பிறகு ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) அவர்கள்தாம் பனூஹாஷிம் குலத்துக்கு இருந்த முழுச் செல்வாக்கையும் பிரயோகித்து நபியவர்களை பாதுகாத்திடச் சாத்தியமான அத்தனை வழிகளையும் மேற்கொண்டார்கள்!
     
மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு முஸ்லிம்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது மூதாட்டி ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) அவர்களும் தமது முதுமையையும் பொருட்படுத்தாமல் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தார்கள்!


மாமியாரும் மருமகளும்:
     
ஹிஜ்ரத்திற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகட்குப் பிறகு அன்னை ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) அவர்களின் மகன் அலீ (ரலி) அவர்களுக்கும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மகள் கண்மணி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும் திருமணம நடந்தது.
     
மங்கையர்த் திலகம் ஃபாத்திமா (ரலி) தம் கணவர் வீட்டிற்கு மருமகளாய் வருகை தந்தபோது அன்புக் கணவர் அலீ (ரலி) அவர்கள் மரியாதைக்குரிய தாயாரை நோக்கிக் கூறினார்கள்: முஹம்மத் நபி (ஸல்)  அவர்களின் மகள் ஃபாத்திமா வந்துள்ளார். நான் தண்ணீர்த் தேவை போன்ற வெளிவேலைகளைச் செய்து முடிக்கிறேன். மாவு அரைப்பதிலும் அதனைச் சமைப்பதிலும் உங்களுக்கு ஃபாத்திமா உதவி செய்வார்.
     
கீர்த்திமிக்க இம்மாமியார் - மருமகள் இருவரின் மூலமாக வீரர் அலீ (ரலி)யின் குடும்பம் மட்டும் கண்ணியம் பெறவில்லை. ஃபாத்திமா எனும் பெயரும் - புகழும் சிறப்புப் பெற்றது!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்னை ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) மீது பெரிதும் நேசம் கொண்டிருந்தார்கள். அன்னையின் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவர்களைச் சந்திப்பார்கள். அங்கே ஓய்வு எடுப்பார்கள். அன்னை அவர்களின் மேன்மை, அன்பு மற்றும் நற்குணங்களைப் பற்றி நபியவர்கள் பலமுறை புகழ்ந்து கூறியிருக்கின்றார்கள்!
     
அன்னை ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) அவர்களின் ஆண் மக்களில் அலீ (ரலி), ஜஅஃபர் (ரலி), உகைல் (ரலி) ஆகியோர் இஸ்லாத்தை ஏற்கும் பாக்கியம் பெற்றார்கள். பெண் மக்களில் உம்மு ஹானி (ரலி), ஜமானா (ரலி) இருவரும் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
     
அன்னை அவர்கள் கவிதைகள் புனைவதிலும் ஈடுபாடு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தம்முடைய மகனார் உகைல் (ரலி) அவர்களைப் பற்றி அவர் எழுதிய சில கவிதைகள் உள்ளன.
     
ஹிஜ்ரத்திற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு அன்னை ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) அவர்கள் மரணம் அடைந்தபோது நபி (ஸல்) அவர்களே தமது மேலங்கியை கஃபன் (பொதி) துணியாக வழங்கியதிலிருந்தும், அடக்கம் செய்வதற்கு முன் தமது புனித உடலை சிறிது நேரம் மண்ணறையில் கிடத்தியதிலிருந்தும், அன்னை அவர்களின் மதிப்பும், அந்தஸ்தும் எத்துணை உயர்வானது என்பதை நாம் அறிந்திடலாம். அவர்களின் மீது அல்லாஹ் தனது முழுத் திருப்தியையும் பொழிவானாக!
Previous Post Next Post