உம்மு ஐமன் (ரலி)

உம்மு ஐமன் (ரலி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்றைய இஸ்லாமியப் பேரரசை வழிநடத்திச் சென்று கொண்டிருந்தார்கள். காருண்ய நபியவர்கள் உலகம் முழுவதற்கும் அருட்கொடையாய் அனுப்பப்பட்டவர்கள் அல்லவா? ஆகையால் அவர்களின் பெருங்கருணை எல்லாப் படைப்பினங்கள் மீதும் அதிகம் அதிகம் பொழிந்து கொண்டிருந்தது!

நபியவர்களின் திருச்சமூகம் நாடி வரும் எந்த மனிதரும் வெறுங்கையோடு திரும்பிச் செல்வதே கிடையாது. வறியவர்கள், வீடு வாசல் இல்லாத ஏழைகள் வள்ளல் நபியவர்களைத் தேடி வருவார்கள். தம் தேவைகளுக்குப் பரிகாரம் பெற்றுத் திரும்பிச் செல்வார்கள்!

ஒருநாள் வெளுத்த நிறமுடைய ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களின் திருச் சமூகம் வந்தார். அவருடைய முகம் மலர்ந்தும் வியக்கத்தக்க முறையில் ஒளிவீசிக் கொண்டும் இருந்தது! வயது முதிர்ந்த அப்பெண்ணைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள் ‘தாயே, என் அன்புத் தாயே!” என்று அழைத்து, கண்ணியத்தோடு எழுந்து வரவேற்று - மிக்க மரியாதையோடு அவரை அமரச் செய்தார்கள்.

தாயே, இன்று இவ்வளவு சிரமம் எடுத்து இங்கு வரவேண்டிய காரணம் என்ன? என்று வினவினார்கள்.

இறைத்தூதரே, எனக்கு ஒரு ஒட்டகம் தேவைப்படுகின்றது. அதனைத் தங்களிடம் பெற்றுச் செல்லலாம் என்றுதான் வந்தேன்.” என்று அப்பெண்மணி பதிலளித்தார்.

நபி (ஸல்):- ஒட்டகத்தை தாங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?

பெண்மணி:- இறைத்தூதரே, பயணம் செய்வதற்கேற்ற கோவேறு கழுதையோ, ஒட்டகமோ எதுவும் இப்போது என்னிடம் இல்லை. என்றைக்கேனும் தொலைதூரப் பயணம் செய்ய வேண்டியதாயின் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் புன்னகை புரிந்தவாறு கூறினார்கள். ‘அப்படியானால் ஓர் ஒட்டகக் குட்டியை வரவழைத்துத் தருகிறேன்”

ஐய்யய்யோ! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும்! ஒட்டகக் குட்டி எனக்கு எதற்கு? எனக்கு ஒரு ஒட்டகம்தான் தேவைப்படுகிறது.”

நான் ஒட்டகக் குட்டியைத்தான் தருவேன்.

ஒட்டகக் குட்டி என்னுடைய தேவையை நிறைவு செய்யாதே! என்னுடைய சுமைகளை சுமந்து செல்ல அதனால் இயலாதே! எனக்கு ஒட்டகத்தைத் தாருங்கள்.”

தங்களுக்கு ஒட்டகக் குட்டிதான் கிடைக்கும். அதில்தான் உங்களை நான் பயணம் செய்ய வைப்பேன்.

இவ்வாறு கூறியபடி நபி (ஸல்) அவர்கள் ஒரு பணியாளிடம் சாடை செய்தார்கள். அவர் கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய ஒட்டகத்தை கொண்டு வந்து அதன் கடிவாளத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘தாயே. பாருங்கள்! அது ஒட்டகத்தின் குட்டிதானா? அல்லது வேறெதுவுமா?

இப்போது அந்தப் பெண்மணி நபி (ஸல்) அவர்களின் இந்த அருமையான நகைச்சுவையைப் புரிந்து கொண்டு தம்மை அறியாமலேயே சிரிக்கலானார்கள். நபியவர்களுக்காக துஆ செய்தார்கள். அங்கு இதனைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இந்த அளவுக்கு கண்ணியம் அளித்து வந்த - இடையிடையே இவ்வாறு நகைச்சுவை செய்யும் அளவு உறவுமுறை கொண்டிருந்த பெண்மணியின் பெயர்தான் உம்மு ஐமன் (ரலி)!


அண்ணலாருடன் ஏற்பட்ட உறவு:

அன்னை உம்மு ஐம்ன் (ரலி) அவர்களின் பெயர் பரகத் ஆகும். மக்கள் அவர்களை உம்மு லிபா| என்று அழைப்பது பழக்கம். இவரின் தந்தை தஃலபா இப்னு அம்ர் என்பவர் அபிஸீனிய நாட்டுக்காரர். இவர் மக்கா நகருக்கு எப்போது, எப்படி வந்தார்? என்பது பற்றி வரலாற்றில் தெளிவு இல்லை.

ஆனால் நம்பகமான தகவல் இதுதான். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறக்கும் முன்பு இவர் விவரம் அறியும் பருவம் உடைய சிறுவராய் இருந்தார். நபியவர்களின் தந்தை அப்துல்லாஹ் இவரைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார். அப்துல்லாஹ் மரணம் அடைந்த பிறகு தஃலபா அன்னை ஆமினாவிடம் பணியாளாய் இருந்து வரலானார். அண்ணல் முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்தபோது அன்னை ஆமினாவுக்குத் தேவையான பணிகளைச் செய்து வர இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஹலீமா ஸஃதியா எனும் செவிலித்தாயிடம் ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் வரை வளர்ந்து வந்த நபியவர்கள் பின்னர் தம் தாயிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். கொஞ்ச நாட்களுக்குப் பின் அன்னை ஆமினா அவர்கள் குழந்தை முஹம்மதையும் தஃலபாவின் மகள் உம்மு ஐமனையும் அழைத்துக் கொண்டு மதீனாவுக்குச் சென்றார். இதுதான் மதீனாவுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முதல் வருகையாகும்! அப்போது அவர்களின் வயது ஆறு அல்லது ஏழு! மதீனாவில் ஆமினா அம்மா அவர்கள் பனூ நஜ்ஜார் குடும்பத்தில் தங்கியிருந்தார்கள். அது நபியவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப்புக்கு தாய்வழிப் பாட்டனாரின் குடும்பமாகும். மூவரும் ஏறக்குறைய ஒருமாத காலம் தங்கியிருந்து விட்டு மக்காவுக்குத் திரும்பினார்கள்.

வழியில் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையில் உள்ள அபுவா எனும் இடத்தை அடைந்தபோது அன்னை ஆமினா அவர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தார்கள்.

அன்னை ஆமினாவன் திடீர் மரணம் குழந்தை முஹம்மது (ஸல்), உம்மு ஐமன் (ரலி) ஆகியோருக்கு கடும் துயரத்தை அளித்தது. அப்போது உம்மு ஐமன் (ரலி) விவேகத்துடன் செயல்பட்டார்கள். சிறிதும் ஊக்கம் இழந்திடாமல் அன்னை ஆமினாவின் உடலை அங்கேயே அடக்கம் செய்தார்கள். பிறகு நபியவர்களை அன்போடு - பேணிக்கையாக அழைத்துக் கொண்டு சோகமே உருவாய் மக்கா நகர் வந்தடைந்தார்கள். அங்கு சிறுவர் முஹம்மதை அப்துல் முத்தலிப் தன் நெஞ்சோடு அணைத்து ஆறுதல் கூறி தன் பொறுப்பில் வளர்க்கலானார். தன் பேரக்குழந்தையைக் கண்காணித்துப் பேணி வரும்படி உம்மு ஐமனைப் பணித்தார்.

பேரறிஞர் இப்னு ஸஃத் (ரஹ்) கூறுகின்றார். நபியவர்கள் ஆமினா அன்னையோடு மதீனாவில் தங்கியிருந்தபோது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை உம்மு ஐமன் (ரலி) வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருந்தார்கள். அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். ‘மதீனாவில் தங்கியிருந்தபோது யூதர்களில் சிலர் குழந்தை முஹம்மதைப் பார்த்தார்கள். அவர்களில் ஒருவர், ‘இந்தச் சிறுவர் இறுதி நபிபயாய் வருவார் போன்று தோன்றுகிறது. இந்த ஊர்தான் இவர் ஹிஜ்ரத் செய்து வரும் நகரமாய் இருக்கும்” என்று கூறியதை நான் கேட்டேன். அவருடைய பேச்சு என் உள்ளத்தில் நன்கு பதிந்து விட்டது.”

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வளர்ந்து வாலிபம் அடைந்தபோது சொத்துப் பங்கீட்டில் உம்மு ஐமன் (ரலி) அவர்கள் நபியவர்களின் பங்கில் வந்தார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஐமனுக்கு உரிமை வழங்கினார்கள்!

உம்மு ஐமன் (ரலி) அவர்கள் முதலில் உபைத் இப்னு ஜைத் என்பாருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார்கள். இவர் மதீனா நகரின் கஜ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர்.

முஹம்மத் (ஸல்) அவர்களின் நபித்துவத்திற்கு முன்பு உபைத் மதீனாவிலிருந்து மக்காவுக்கு வந்து குடியேறினார். அங்கு உம்மு ஐமனுக்கும் அவருக்கும் திருமணம் நடைபெற்றது. வரலாற்றுச் சான்றுகளிலிருந்து தெறியவருகிறது. அதாவது நபித்துவம் வழங்கப்பட்ட பிறகு உம்மு ஐமனுடன் உபைதும் இஸ்லாத்தைத் தழுவினார். ஏனெனில் சில அறிவிப்புகளில் அவர் ஓர் அன்ஸாரி நபித்தோழர் என்று காணப்படுகிறது.

திருமணத்திற்குப் பிறகு கொஞ்ச நாட்களில் உபைத் (ரலி) அவர்கள் உம்மு ஜமனை அழைத்துக் கொண்டு மதீனாவுக்குச் சென்று விட்டார். அங்குதான் அவ்விருவருக்கும் ஐமன் (ரலி) எனும் குழந்தை பிறக்கிறது. ஐமன் (ரலி) பிரபலமான நபித்தோழராய்த் திகழ்ந்தார்.

ஐமன் (ரலி) பிறந்த பிறகு உபைத் (ரலி) அதிக காலம்  உயிர் வாழவில்லை. ஹிஜ்ரத்துக்கு பல ஆண்டுகள் முன்னரே மதீனாவிலேயே உபைத் (ரலி) மரணம் அடைந்து விடுகின்றார்கள்.

உபைத் (ரலி) அவர்கள் மரணம் அடைந்த பிறகு உம்மு ஐமன் (ரலி) அவர்கள், பால் குடியை மறந்துவிட்டிருந்த தம் மகன் ஐமனைத் தூக்கிக்கொண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அண்ணலார், உம்மு ஐமனை அன்புடன் வரவேற்றார்கள்.

நபியவர்கள் ஒருமுறை தம் தோழர்களின் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்கள். ‘எவரேனும் சுவனத்தப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பினால் அவர் உம்மு ஐமனை மணந்து கொள்ளட்டும்!”

இதனைக் கேட்டதும் ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள் உம்மு ஐமனை மணந்து கொண்டார்கள். நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு இத்தம்பதிக்கு உஸாமா (ரலி) அவர்கள் பிறந்தார்கள். தந்தை ஜைத் (ரலி) அவர்களைப் போன்று உஸாமா (ரலி) அவர்களும் நபியவர்களின் அன்பிற்குரித்தானவர்களாய்த் திகழ்ந்தார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு நபிப்பட்டம் வழங்கப்பட்ட பிறகு முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் நற்பேற்றை அடைந்த முஸ்லிம்களில் உம்மு ஐமனும் ஒருவர்! அப்படி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஆரம்பகால முஸ்லிம்களுக்கு எதிரிகள் எண்ணற்ற தொல்லைகள் அளித்தார்கள். வரலாற்றில் துன்பம் மிகுந்த இந்த அத்தியாயம், ஓரிறைக் கொள்கையில் இறுதி மூச்சுவரை நிலைத்து நிற்பதற்கான அழகிய முன்மாதிரியாகும். அன்னை உம்மு ஐமன் (ரலி) அவர்கள் இத்தகைய வீர வரலாற்றின் ஓர் அங்கமாய்த் திகழ்ந்தார்கள். ஆம்! கொடுமைபுரியத் துணிந்துவிட்ட எதிரிகள் இந்தப் பெண்மணியைக் கூட விட்டு வைக்கவில்லை!


இரு ஹிஜ்ரத்களின் சிறப்பு:

நிலமை கட்டுக்கடங்காமல் போனபோது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கினார்கள். நபித்துவ 5 ஆம் ஆண்டில் இது நடந்தது. இந்த ஆண்டு 11 ஆண்களும் 4 பெண்களும் ஹிஜ்ரத் மேற்கொண்டனர். பிறகு நபித்துவத்தின் 6 ஆம் ஆண்டு 83 ஆண்கள், 13 பெண்கள் கொண்ட பெருங்கூட்டம் ஒன்று தாய்நாடு துறந்திட இசைந்து அபிசீனியா சென்றது. அவர்களைத் தவிர இன்னும் அதிகமான முஸ்லிம்கள் தனிப்பட்ட முறையில் அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்தார்கள். உம்மு ஐமன் (ரலி) அவர்கள் இத்தகைய மஹாஜிர்களில் ஒருவராய்த் திகழ்ந்தார்கள்!

உம்மு ஐமன் ஹிஜ்ரத் செய்த காலம் எது என்பதை வரலாற்றாசிரியர்கள் தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆயினும் பெரும்பாலோரின் கருத்து இதுதான். நபித்துவத்தின் 6 ஆம் ஆண்டுக்குப் பிறகு அபிசீனியாவுக்குச் சென்று அங்கே பல ஆண்டுகள் தங்கியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து விட்டார்கள் எனும் செய்தி கிடைத்தபோது உம்மு ஐமன் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்தார்கள். இவ்வாறு அவர்களுக்கு இரு ஹிஜ்ரத்களின் சிறப்பும் கிட்டியது!


போரில் பங்கேற்றல்:

உம்மு ஐமன் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது பத்றுப் போர் நடந்து முடிந்திருந்தது. பிறகு ஹிஜ்ரி 3ஆம் ஆண்டில் உஹதுப் போர் நடந்தபோது உம்மு ஐமன் (ரலி) ஓரளவு முதிய வயதை அடைந்து விட்டிருந்தார்கள். ஆயினும் இறைவழியில் புனிதப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது வீட்டில் உட்கார்ந்திருக்க அவர்களின் உள்ளம் விரும்பவில்லை. எனவே போர் விரர்களுக்கு தண்ணீர் புகட்டுவதிலும் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் பிற பெண்களோடு சேர்ந்து ஈடுபட்டார்கள்.

உஹதுக்குப் பிறகு ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடந்த கைபர் யுத்தத்திலும் உம்மு ஐமன் (ரலி) கலந்து கொண்டு இதே பணிகளை ஆற்றினார்கள்.

அவர்களின் மகன் ஐமனும் கைபர் யுத்தத்தில் கலந்து கொண்டு - வீரத்தோடு போரிட்டு ஷஹீதானார் என்று சில அறிவிப்புகளிலிருந்து தெரியவருகிறது!

ஆயினும் பெரும்பாலான வரலாற்று நூல்களில் கைபர் போரில் ஷஹீதானவர்களின் பட்டியலில் ஐமன் (ரலி) பெயர் இடம்பெறவில்லை.

ஆனால் இப்னு இஸ்ஹாக் (ரஹ்), ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்ற ஹுனைன் போரில் கொல்லப்பட்ட வீரர்களில் உம்மு ஐமனைச் சேர்த்துள்ளார். மேலும் எழுதுகின்றார்: ‘ ஹுனைன் போரில், ஆரம்பத்திலிருந்து கடைசி வரை நபியவர்களோடு போர்க்களத்தில் நிலைத்திருந்த நபித் தோழர்கள் எட்டுப் பேரில் ஐமன் (ரலி) அவர்களும் ஒருவர். அந்த எண்மரில் ஐமன் (ரலி) மட்டுமே ஷஹீத் ஆனார்கள்.

தம்முடைய அருமந்தப் புதல்வர் ஐமன் (ரலி) மரணம் அடைந்தது குறித்து உம்மு ஐமன் பெரிதும் பொறுமையைக் கடைப்பிடித்தார்கள். தம்முடைய பேரரும் ஐமனின் மகனுமாகிய ஹஜ்ஜாஜை தம் அரவணைப்பில் எடுத்துக் கொண்டார்கள். இவர் பிற்காலத்தில் சிறப்பிற்குரியவராய் வளர்ந்து மதீனாவின் பெருந்தலைவர்களில் ஒருவராய்த் திகழ்ந்தார். இவரிடமிருந்து சில நபிமொழிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஹிஜ்ரி 8 இல் ஜமாதுல் அவ்வல் மாதத்தில் ரோம் நாட்டு கிறிஸ்தவர்களோடு நடைபெற்ற முஃதா போரில் அன்னை உம்மு ஐமனின் கணவர் ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) வீர மரணம் அடைந்தார். அப்போது உம்மு ஐமன் (ரலி) கண்கலங்கினார். ஆயினும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பும் ஆதரவும் அவரின் கவலையைப் பெரிதும் குறைத்தது!

முஃதா போருக்கு பதிலடி கொடுப்பதற்காக ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு படையை அனுப்பினார்கள். அந்தப் படையில் அபூபக்ககர் (ரலி), உமர் (ரலி) அபூ உபைதா (ரலி), சஃத் இப்னு அபீவகாஸ் (ரலி) மற்றும் சயீத் இப்னு ஜைத் (ரலி) போன்ற பிரபலமான மூத்த நபித்தோழர்கள் இடம் பெற்றிருந்தார்கள். ஆயினும் நபியவர்கள் இளைஞரான உஸாமாவைத்தான் படைத்தளபதியாக நியமித்தார்கள். இது நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட ஆரம்பக் கட்டத்தில் நிகழ்ந்தது. ஆயினும் நபியவர்கள் படை புறப்படுவதற்குக் கட்டளையிட்டார்கள்.

படை மதீனாவை விட்டுப் புறப்பட்டு ஜுரிஃப் எனும் இடத்தில் முகாம் அமைத்திருந்தது. அதற்குள்ளாக மதீனாவில் நோயுற்றிருந்த நபி (ஸல்) அவர்களின் உடல்நிலை மேலும் மோசமானது.
ஹாஷிம் கிளையில் பெரும்பாலானவர்கள் மரணம் அடைந்ததை உம்மு ஐமன் (ரலி) அவர்கள் பார்த்திருந்தார்கள். ஆகையால் மரணப்படுக்கையில் இருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு மரண நேரம் நெருங்கிவிட்டதற்கான சில அறிகுறிகள் உம்மு ஐமனுக்குத் தெரிந்தது. அவற்றின் மூலம் நபியவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரியப் போகின்றார்கள் என்பதை உறுதியாய் அறிந்த அவர்கள், உடனே உஸாமாவுக்குத் தூது அனுப்பி மதீனாவுக்கு வாருங்கள் என அறிவித்தார்கள். செய்தி அறிந்ததும் உஸாமா (ரலி) அவர்கள் முக்கியமான நபித் தோழர்கள் சிலரை அழைத்துக் கொண்டு மதீனா திரும்பினார்கள்.


அண்ணலார் மரணம் அடைந்தபோது...

உம்மு ஐமன் (ரலி) அவர்கள் அண்ணல் நபியின் மரணத்தால் கடும் துயரத்திற்கு ஆளானார்கள். மனம் நொந்து அழுது அழுது கடுமையான பலவீனம் ஏற்பட்ட பிறகும் அவர்களின் அழுகை நிற்கவே இல்லை! இதனைக் கேள்விப்பட்டதும் அபூபக்கர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வந்து உம்மு ஐமனைத் தேற்றினார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் இவ்வாறு கூறினார்கள். ‘ஏன் இவ்வளவு தூரம் கவலைப்படுகின்றீர்கள்! நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடத்தில் மிகச் சிறந்த சன்மானங்கள் உள்ளன.” அதற்கு உம்மு ஐமன் (ரலி) அவர்கள் ‘இதுதான் எனக்குத் தெறியுமே! நான் அழுது கொண்டிருப்பது இறைச் செய்தியின் வருகை (வஹீ) நின்று விட்டதே என்பதற்காகத்தான்!” என்று பதில் அளித்தார்கள். இதனைக் கேட்டதும் அவர்கள் இருவரின் நெஞசமும் இளகியது. அவர்களும் அழலாயினர். - ஸஹீஹ் முஸ்லிம்.

ஆனால் தபகாத் இப்னு சஃத் எனும் நூலில் இவ்வாறு உள்ளது:- மக்கள் உம்மு ஐமன் (ரலி) அவர்களுக்கு ஆறுதல் கூறி மரணம் ஏற்படுவது இயற்கையே எனப் புரியவைத்தபோது, ‘இறைவனின் விதிப்படி நபியவர்கள் மரணம் அடைந்தது குறித்து எனக்குத் தெரியும்! இறைச் செய்தியின் வருகை தடைப்பட்டு விட்டதே என்பதற்காகத்தான் நான் அழுகின்றேன்” என்று பதில் அளித்தார்கள்.

உம்மு ஐமன் (ரலி) அவர்கள், நபியவர்களை குழந்தையாய் இருந்தபோது கண்காணித்து வளர்க்கும் பாக்கியத்தைப் பெற்றார்கள் என்பது மட்டுமல்ல, நபியவர்களின் தாய், தந்தை, பாட்டனார் போன்ற பெரியோர்கள் அனைவர்க்கும் அறிமுகமாகியிருந்தார்கள். ஆகையால் உம்மு ஐமன் (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் பெரிதும் கண்ணியம் அளித்து வந்தார்கள். அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி செல்வார்கள். ‘என்னுடைய தாய்க்குப் பிறகு உம்மு ஐமன் எனக்குத் தாயாக இருந்தார்கள்” என்று கூறுவார்கள். அவர்களிடம் பேசும் போது தாயே! என்று அழைத்துப் பேசுவது வழக்கம்!


அண்ணலாரின் மீது கோபம்:

உம்மு ஐமன் (ரலி) நபியவர்கள் மீது அதிகம் உரிமை பாராட்டுபவர்களாய் இருந்தார்கள். ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஐமன் (ரலி) அவர்களின் இல்லத்துக்குச் சென்றிருந்தபோது அவர்கள் நபியவர்களுக்கு குளிர்பானம் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் அதைக் குடிக்க இயலாது என்று கூறிவிட்டார்கள். (நபியவர்கள் அப்போது நோன்பு வைத்திருக்க வேண்டும், அதனை வெளிப்படுத்தவில்லை) உம்மு ஐமன் (ரலி) அவர்கள் இது குறித்து கோபமாய் நடந்து கொண்டார்கள். கோபத்தில் அவர்கள் கூறியது எதையும் அண்ணலார் கோபமாக எடுத்துக் கொள்ளவில்லை.

அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அன்சாரித் தோழர்கள் வழங்கிய அதிகமான திராட்ச்சைத் தோட்டங்கள் இருந்தன. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களும் சில தோட்டங்களைக் கொடுத்திருந்தார்கள். அவற்றை நபியவர்கள் உம்மு ஐமன் (ரலி) அவர்களிடம் கொடுத்து வைத்தார்கள்.

பனூ குரைலா, பனூ நுலைர் ஆகிய யூதக் கூட்டத்தினரை முஸ்லிம்கள் வென்றபோது நபியவர்கள் அன்சாரிகளின் தோட்டங்களை அவர்களிடமே திருப்பிக் கொடுத்தார்கள். இவ்வாறே அனஸ் (ரலி)யின் தோட்டங்களையும் அவர்களிடமே திருப்பிக் கொடுத்தார்கள். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் அத்தோட்டங்களைக் கைப்பற்றச் சென்றபோது உம்மு ஐமன் (ரலி) அவர்கள் அவற்றைத் திருப்பிக் கொடுக்கத் தயக்கம் காட்டினார்கள். செய்தி அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அத்தோட்டங்களைவிட 10 மடங்கு அதிகமாகக் கொடுத்து உம்மு ஐமனைத் திருப்திப்படுத்தினார்கள்.


மரணம்:

அல்லாமா இப்னு அஸீர் (ரஹ்) கூறுகின்றார்:- ‘உம்மு ஐமன் (ரலி) அவர்கள் நபியவர்கள் இறந்த 5, 6 மாதங்கள் கழித்து அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மரணம் அடைந்தார்கள்.” இந்தக் கருத்துக்கு ஆதாரமாக பிற அறிவிப்புகள் ஏதும் வரவில்லை.

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகின்றார்கள்:- ‘ஹிஜ்ரி 24 ஆம் ஆண்டில் இரண்டாம் கலீஃபா உமர் (ரலி) ஷஹீதான போது உம்மு ஐமன் (ரலி) அவர்கள் கடும் துயரத்தில் ஆழ்ந்தார்கள். அழுது புலம்பியபடியே கூறினார்கள்:- ‘இப்போது இஸ்லாம் பலவீனமாகிவிட்டது.”

அல்லாமா இப்னு சஃத் (ரஹ்) அவர்களின் விளக்கம் வருமாறு:- உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது பேரீச்ச மரங்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. ஒரு மரத்தின் விலை ஆயிரம் திர்ஹத்ற்கும் அதிகம்!

இந்த காலகட்டத்தில் ஒருநாள் உஸாமா இப்னு ஜைத் (ரலி) அவர்கள் ஒரு மரத்தின் அடிப்பகுதியைக் குடைந்து அதன் குருத்தை வெளியே எடுத்தார்கள். இதனைக் கண்ணுற்ற மக்கள் திகைத்துப் போய் வினவினார்கள். ‘தாங்கள் என்ன செய்கின்றீர்கள்? இவ்வளவு மதிப்பு வாய்ந்த மரத்தை வீணாக்குகின்றீர்களே!

அதற்கு உஸாமா (ரலி) பதில் அளித்தார்கள்:- ‘எனது தாயார் பேரீச்ச மரத்தின் குருத்தைக் கேட்டார்கள். எதனை விரும்பி அவர்கள் கட்டளை இடுகின்றார்களோ - அதனை நிறைவேற்றுவது எனது கடமை என நான் கருதுகின்றேன்.

இந்த அறிவிப்பிலிருந்து உம்மு ஐமன் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலம் வரை உயிரோடு இருந்தார்கள் என்று தெரிகிறது. இதுவே நம்பகமன வரலாறு ஆகும். உம்மு ஐமன் (ரலி) மூலமாக சில நபிமொழிகளும் அறிவிக்கப்படுகின்றன. அவற்றின் அறிவிப்பாளர்களில் அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஹனஸ் இப்னு அப்துல்லாஹ் (ரஹ்) மற்றும் அபூயஜீத் மதனி (ரஹ்) ஆகியோரின் பெயர்கள் உள்ளன.
Previous Post Next Post