ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் சுவர்க்கம் சென்றபோது காலடியோசை ஒன்று கேட்டது. இது யார்? என்று வினவினேன். இவர்தான் ருமைஸா பின்த் மில்ஹான் என்று பதில் கூறப்பட்டது. -ஸஹீஹ் முஸ்லிம்-
இந்த நபிமொழியின் வாசகங்களைத் திரும்ப ஒருமுறை படியுங்கள்! பாக்கியமுள்ள ஒரு பெண்மணியைக் குறித்து அவர் சுவர்க்கத்திற்குரியவர் என்று எத்துணை அன்பான – சிறப்பான முறையில் நற்செய்தி சொல்லப்படுகிறது!
ருமைஸா பின்த் மில்ஹான் அந்-நஜ்ஜாரிய்யா என்பது உம்மு ஸுலைமின் இயற்பெயர். ருமைஸாவுக்கு வேறு சில பெயர்களும் உண்டு – ஸஹ்லா, ருமைலா, ருமைத்தா, மலிக்கா, குமைஸா என்று சிறு பட்டியல் அளவிற்குக் குறிப்பிடுகிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஆனால் வரலாற்றில் புகழ்பெற்று நிலைத்துப்போன பெயர், உம்முஸுலைம்.
இந்த மதீனத்துப் பெண்மணிக்கு பேரானந்தத்திற்குரிய இந்நற்செய்தி சாதாரணமாகக் கிடைத்து விட்டது என்றா நினைக்கிறீர்கள்? சுவர்க்கத்திற்கு செல்வதென்பது அவ்வளவு எளிதான காரியமா?
இல்லை உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் இறைவழியில் பல தியாகங்கள் புரிந்தார்கள். இஸ்லாத்தின் அழைப்புப் பணியை மேற்கொண்டு பல தொல்லைகளுக்கு ஆளானார்கள். அவ்வழியில் பொறுமையைக் கைக்கொண்டு எதிர்ப்பட்ட அனைத்துத் தடைகளையும் அகற்றி வெற்றி கண்டார்கள். இறைவன் மீதும் - அவனுடைய தூதர் மீதும் நீங்கா அன்பு கொண்டு மக்கள் அனைவரையும் பரிவுடன் நடத்தினார்கள். அதன் பிறகுதான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந் நற்செய்தி பரிசாகக் கிடைத்தது!
ஆம்! உம்மு ஸுலைம் (ரலி) சிறந்த மனைவியாக, தாயாக வாழ்ந்த அதே நேரத்தில் மிகச் சிறந்த இஸ்லாமிய அழைப்பாளராகவும் தியாகப் பெண்மணியாகவும் விளங்கினார். அறிவுத்திறனும், பொறுமையும் நன்றியுணர்வும் இன்னும் பல சிறப்பம்சங்களும் அவருடைய வாழ்க்கையில் பிரகாசிக்கின்றன!
நபிமொழித் தொகுப்புகளும் வரலாற்று ஏடுகளும் அவர்களின் வீரதீரச் செயல்களையும் தியாகங்களையும் பாதுகாத்து வைத்துள்ளன. அவற்றில் முக்கியமான படிப்பினை மிக்க நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் இங்கு காண்போம். அவற்றைப் படிக்கும் மக்கள் குறிப்பாக பெண்கள் பயன்கள் பல பெறுவர். இஸ்லாத்தின் அறிவுரைகளையும் ஒழுக்க மாண்புகளையும் பின்பற்றி வாழவேண்டும் என்ற உணர்வும் கொள்வர் என்பது திண்ணம்!
உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் பனூ நஜ்ஜார் கோத்திரத்திற்கும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையே ஓர் உறவு முறை உள்ளது. அது தூரத்து உறவாயினும் அண்ணலாரிடத்தில் அதிக மதிப்பும் முக்கியத்துவமும் பெற்றிருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸுலைமின் இல்லத்தை தம் வருகையால் அடிக்கடி சிறப்பித்துக் கொண்டிருந்தார்கள்!
அந்த உறவு எப்படி மலர்ந்தது? அது தொடர்பாக வரலாற்றில் ஒரு சுவையான நிகழ்ச்சியே உள்ளது!
குறைஷிக் குலத்தில் பனூ ஹாஷிம் கிளையின் மூலவராகிய ஹாஷிம் என்பவர் ஒரு முறை வியாபாரத்திற்காக ஷாம் தேசம் புறப்பட்டுச் சென்றார். வழியில் மதீனாவில் தங்கினார். அங்கு பலநாள் சந்தைக் கூட்டம் ஒன்று கூடியிருந்தது.
ஹாஷிம் சந்தைக்குப் போனார். அங்கு பேரழகு வாய்ந்த ஒரு பெண்ணைப் பார்த்தார். அப்பெண்ணின் தோற்றமும் நடையுடை பாவனையும் அவர் ஒரு சிறந்த பெண்மணி, உயர் குலத்தைச் சேர்ந்தவர், விவேகமிக்கவர் என்பதை உணர்த்தியது.
ஹாஷிம் அப்பெண்ணைக் குறித்து மக்களிடம் விசாரித்தார். அப்பெண் பனூ நஜ்ஜார் குடும்பத்தைச் சார்ந்தவர், பெயர் ஸல்மா என்பது தெரியவந்தது.
ஹாஷிம், அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தூது அனுப்பினார். அப்பெண்ணும் சம்மதிக்கவே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது!
ஹாஷிம் கொஞ்ச காலம் மதீனாவில் தங்கியிருந்து விட்டு பிறகு ஷாம் தேசம் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அங்கேயே அவர் மரணமாக நேரிட்டது. இங்கு... மதீனாவில் ஸல்மாவுக்கு ஒரு மகன் பிறந்தார். பிள்ளைக்கு ஷைபா என்று பெயர் சூட்டப்பட்டது.
குழந்தை ஷைபா எட்டு வயதை அடைந்தபோது இறந்துபோன ஹாஷிமின் குடும்பம் மதீனாவில் இருப்பது மக்காவில் ஹாஷிமின் சகோதரர் முத்தலிப்புக்குத் தெரியவந்தது. உடனே அவர் மதீனாவுக்கு வந்தார். தம் சகோதரர் மகனைத் தேடி அலைந்தார். மக்களிடம் விசாரித்தர்.
முத்தலிப் வந்த செய்தி ஸல்மாவுக்குத் தெரிய வந்தபோது அவரை அழைத்து வர ஆள் அனுப்பினார். முத்தலிபை மூன்று தினங்கள் விருந்தாளியாகத் தங்கச் செய்து, நான்காவது தினம் தம் மகன் ஷைபாவை முத்தலிபிடம் ஒப்படைத்தார்.
முத்தலிப் ஷைபாவை அழைத்துக் கொண்டு மக்கா திரும்பினார். அங்கு மக்கள் முத்தலிபுடன் ஷைபாவைக் கண்டதும் அவரை அப்துல் முத்தலிப் (முத்தலிபின் அடிமை) என்று செல்லமாக அழைக்கத் தொடங்கினர். அதே பெயர்தான் அவருக்கும் பிரபலமாயிற்று! இந்த அப்துல் முத்தலிப்தான் நபி (ஸல்) அவர்களின் பாட்டனார்!
அப்துல் முத்தலிபின் (ஷைபாவின்) தாயார் ஸல்மா, மதீனத்துத் தலைவர்களுள் ஒருவராகிய ஜைத் என்பவரை மறுமணம் புரிந்த கொண்டார். இந்த ஜைத் என்பவர் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் முப்பாட்டனார் ஆவார். இந்தச் சுவையான உறவு முறையின் மூலம் உம்மு ஸுலைமும் அவரின் சகோதரி உம்மு ஹராமும் அண்ணலாரின் சிறிய தாயார்கள் எனும் சிறப்பைப் பெற்றார்கள்!
இஸ்லாத்தைத் தழுவுதல்:
மதீனத்து முஸ்லிம்களில் முதன் முதலாக இஸ்லாத்தைத் தழுவியவர்களில் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் இஸ்லாத்தில் இணைந்தது குறித்து அவருடைய கணவர் மாலிக் இப்னு நள்ர் என்பவருக்கு பெரிதும் கவலை ஏற்பட்டது. அவர் சிலை வழிபாடு செய்பவராக இருந்தார். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்.
உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் குழந்தைக்குத் தினமும் இஸ்லாத்தின் ஏகத்துவக் கலிமாவை அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு கடவுள் இல்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் ஆவார்கள் என்பதை – கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இதனைக் கண்ணுற்ற மாலிக் கோபத்துடன் கூறினார்: நீ என்னுடைய மகனையும் கெடுப்பதற்காகவா இதையெல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கின்றாய்?
இவ்வாறு அவர் கோபித்துக் கொண்டு ஷாம் தேசத்திற்குச் சென்றார். அங்கு அவருடைய பரமவிரோதி ஒருவனால் கொல்லப்பட்டார்.
உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் அழகிலும் குணத்திலும் அறிவுத் திறனிலும் மதீனா முழுவதும் புகழ் பெற்றிருந்தார்கள். அவர்கள் விதவை ஆனதும் மறுமணம் தொடர்பாக பலரிடமிருந்தும் தூது வந்தது. அதற்கு அவர்கள் அளித்த பதில் இதுதான்.:
என்னுடைய மகன் சான்றோர்களின் அவைகளில் உட்காருவதற்கும் பேசுவதற்கும் தகுதி பெற்று வளரும் வரை நான் மறுமணம் செய்ய மாட்டேன். அவன் பெரியவனாகி சம்மதம் தெரிவித்தால்தான் நான் மறுமணம் செய்து கொள்வேன்.
தம்முடைய மகனை நல்ல முறையில் பயிற்றுவித்து ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும் என்பதில்தான் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் அதிகமாக அக்கரை கொண்டிருந்தார்கள். நடமாடும் இஸ்லாமிய முன்மாதிரியாய் அவன் ஆகவேண்டும் என்பது அவர்களின் நோக்கம். நன்மைகளை மேற்கொள்ளுமாறு அனுதினமும் தன் மகனுக்கு ஊக்கமளித்துக் கொண்டிருந்ததும் இஸ்லாத்தின் அடிப்படைகளைப் போதித்ததும் இந்நோக்கம் நிறைவேறுவதற்காகத்தான்!
தன் மகன் எப்போது பெரியவனாய் வளர்ந்து இஸ்லாத்தின் கடமைகளையும் பணிகளையும் முழு விருப்பத்துடன் நிறைவேற்றப் போகிறான், அதனைத் தாம் எப்போது கண்டு மகிழ்ந்திடப் போகிறோம் என்று தாயின் ஆவல் அதிகமாகிக் கொண்டிருந்தது.
அல்லாஹ்வின் அருளைப் பாருங்கள்! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வருகை தந்திருந்தார்கள். விவேகத்தின் சிகரமான உம்மு ஸூலைம் (ரலி) இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தம் மகன் அனஸைப் பணிவிடைக்காக வைத்துக் கொள்ளுமாறு| நபியவர்களிடம் கோரிக்கை சமர்ப்பித்தார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களும் பெரும் மகிழ்ச்சியுடன் அனஸை தங்களிடம் வைத்துக் கொண்டார்கள்.
அன்ஸாரிக் குடும்பத்துப் பெண்மணியிடம் வளர்ந்து வந்த சிறுவன் இப்போது அல்லாஹ்வின் இறுதித் தூதரின் சமூகத்தில் பணிவிடை செய்து பயிற்சி பெறலானார். அனஸுக்கு அப்போது வயது எட்டு.
இந்த அனஸ்தான், ஏராளமான நபிமொழியின் பிரபலமான அறிவிப்பாளராகத் திகழ்பவரும் - இம்மை-மறுமை வெற்றிக்காக அண்ணலாரின் துஆவைப் பெற்றவருமான பிரபல நபித்தோழர் அனஸ் (ரலி) ஆவார்.
அனஸ் (ரலி) அவர்கள் பிற்காலத்தில் ஒரு முறை கூறினார்கள், அல்லாஹ் என்னுடைய தாயாருக்கு நற்கூலி வழங்குவானாக! என்னை அவர்கள் நல்ல முறையில் வளர்த்தார்கள்.
இவ்வாறு தம் தாயார். அண்ணலாரின் திருச்சமூகத்தில் தன்னை ஒப்படைத்து உபகாரம் செய்ததை அனஸ் (ரலி) என்றென்றும் நினைத்து – தாயாருக்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தார்கள். ஆம்! அல்லாஹ்வின் தூதருக்கு சேவகனாக இருப்பதைக் காட்டிலும் வேறு உயர்வு என்ன இருக்கிறது?
இதன் பிறகும் - தன் மகனின் நடைமுறைப் பழக்கங்களைக் கண்காணிப்பதில் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் ஒரு குறையும் வைக்கவில்லை.
ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களை ஒரு பணிக்காக எங்கோ அனுப்பியபோது இதைக் குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்கள். பணியை முடிப்பதில் கொஞ்சம் நேரம் அதிகமாகி விட்டது. முடித்துக் கொண்டு திரும்பியபோது, தாயார் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் எதிர்ப்பட்டு எங்கே போய்விட்டு வருகின்றாய்? என்று வினவினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் பணிக்காகச் சென்று விட்டு வருகின்றேன். அது இரகசியமான ஒன்று! அதை வெளியில் சொல்லமாட்டேன்| என்று அனஸ் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.
மகனின் இந்தப் பதிலைக் கேட்டதும் தாயாருக்குப் பேரானந்தம் ஏற்பட்டது. ஒருபோதும் வெளியிடக் கூடாது. யார் கேட்டாலும் சொல்லக் கூடாது. இது நபி (ஸல்) அவர்களின் இரகசியமாகும் என்று மேலும் அறிவறுத்தினார்கள்.!
அழைப்புப் பணி:
அறிவுக் கூர்மையும் உத்வேகமும் கொண்ட உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அழைப்புப் பணியில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சத்திய இஸ்லாத்தின் அடிப்படைகளை எல்லோரிடமும் தெளிவாக எடுத்துக் கூறி வந்தார்கள்.
தம்முடைய கோத்திரத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் அனைவரிடேயேயும் பிரச்சாரம் செய்து வந்தார்கள். அதிலும் இப்போது தம் மகன் அண்ணலாரிடம் பணிவிடையாகச் சேர்ந்தபிறகு அழைப்புப் பணிக்காக அதிக நேரம் அவர்களுக்குக் கிடைத்தது. அத்துடன் அனஸ் (ரலி) அவர்கள் அண்ணலாரிடம் அறிவு பெற்று வளர்ந்த வருவதால் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களுக்கு பெரிதும் மன நிம்மதி ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், அதே பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்த அபூ தல்ஹா என்பவர் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களைத் திருமணம் செய்திடத் தூது அனுப்பினார். அவரோ இணைவைப்பாளராய் இருந்தார். அவருடைய கோரிக்கையை மறுத்த உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் அறிவார்ந்த முறையில் இப்படிக் கூறினார்கள்.
அபூ தல்ஹாவே, நான் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள் என்று சாட்சியம் அளித்துள்ளேன். ஆனால் அறிவுத் தெளிவுடைய மனிதராகிய நீங்கள் இன்னும் முஸ்லிம் ஆகவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. இதில் மிகவும் வேதனைக்குரிய விடயம் என்னவெனில், நீங்கள் மரத்தையும் கற்களையும் சிலையாக வடித்து வணங்கிக் கொண்டிருப்பதுதான்! உயிரற்ற இந்தச் சிலைகளால் உங்களுக்கு லாபமோ நட்டமோ அளித்திட இயலாது. நீங்கள் சிந்திக்க வேண்டும்! ஆழமாக ஆராய்ந்திட வேண்டும்! முஸ்லிமாகிய நான் சிலைவணக்கம் செய்யும் உங்களை எப்படி மணந்து கொள்ள முடியும்?
அபூ தல்ஹா நற்பேறுடைவர் போலும்! உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் இந்த அறிவுரை அவரின் மனத்தைத் தொட்டது! அவர்கள் கூறியவை பற்றிப் பரிசீலனை செய்தார். உம்மு ஸுலைமின் கொள்கைதான் சத்தியம் என்பதை உணர்ந்தார். நேரிய மார்க்கம் அவருக்குப் புலப்பட்டு விட்டது!
மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் வந்து இஸ்லாத்தில் இணைந்தார். அவர் இஸ்லாத்தைத் தழுவியது குறித்து உம்மு ஸுலைம் (ரலி) அவர்களுக்கு அளவலா மகிழ்ச்சி! வறியவரான அபூ தல்ஹா (ரலி) அவர்களின் வறுமை நிலையையும் பொருட்படுத்தாமல் அவரை மணந்து கொள்ள மனம் ஒப்பினார்கள்!
திருமணத்தில் மஹ்ராய் அளிப்பதற்குக் கூட அபூ தல்ஹாவிடம் எதுவும் இல்லை! அதற்கு உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.: சிரமம் ஏதுமில்லை. நான் உங்களை மணந்து கொள்கிறேன். நீங்கள் இஸ்லாத்தைத் தழுவியதையே மஹ்ராய் ஏற்றுக் கொள்கிறேன்.
தம் மகனார் அனஸ் (ரலி) அவர்களின் மீது உம்மு ஸூலைம் (ரலி) அவர்கள் எவ்வளவு அன்பும் பாசமும் கொண்டிருந்தார்கள் என்பது தெரிந்ததே! இப்போது அபூ தல்ஹா உம்மு ஸுலைம் தம்பதிக்கு மற்றொரு மகன் பிறந்தார். அவருக்கு அபூ உமைர் என்று பெயர்! இவரும் அன்புக்குரிய குழந்தையாய் இருந்தார்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸுலைமின் இல்லத்திற்கு வருகை தந்தால் அபூ உமைர் மீது அன்பு மழை பொழிவார்கள்! அவருடன் கொஞ்சி மகிழ்ந்து விளையாடுவார்கள்.
ஒருமுறை அண்ணலார் வருகை தந்தபோது அபூ உமைரின் முகம் வாடியிருந்தது. என்ன விடயம்? இன்று அபூ உமைர் சோர்ந்திருக்கிறார் என்று உம்மு ஸுலைமிடம் கேட்டார்கள்!
அல்லாஹ்வின் தூதரே, அபூ உமைருக்கு நுகைர் என்று ஒரு குருவி இருந்தது. அதனுடன் விளையாடிக் கொண்டிருப்பார். இன்று திடீரென அது இறந்துவிட்டது.
அண்ணல் நபியவர்கள் அபூ உமரை அருகில் அழைத்துத் தமது அன்புக் கரத்தை அவருடைய தலை மீது வைத்துத் தடவிக் கொடுத்தார்கள்.
பிறகு மாஃப அலந் நுகைர் யா அபா உமைர் (என்னுடைய உமைர், என்னவாயிற்று நுகைர்?) என்று சொல் நயத்துடன் அண்ணலார் கேட்டதும் சிறுவர் அபூ உமைர் தம் கவலையை மறந்து சிரித்தபடி மீண்டும் விளையாடுவதில் ஈடுபட்டார்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மொழிந்த அந்த வாசகம் இன்று வரைக்கும் பழமொழியாய்ப் புகழ் பெற்றுள்ளது.
கொஞ்ச நாட்களில் சிறுவர் அபூ உமைர் மரணம் அடைந்து விட்டார். அபூ தல்ஹா (ரலி) வெளியில் சென்றிருந்தார். உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் அசாதரணமான பொறுமையை மேற்கொண்டார்கள். பொறுமையிலும் மன உறுதியிலும் வியக்கத்தக்கதொரு முன்மாதிரியை அந்தப் பெண்மணியிடம் மக்கள் கண்டார்கள்!
பாசத்திற்குரிய தனது அன்பு மகன் திடீரென இறந்து விட்டது குறித்து அழுது ஓலமிட்டுக் கதறவில்லை. பரிதவிப்பிற்கோ பதற்றத்திற்கோ ஆளாகவில்லை. தம் அருமந்த மகனின் உடலைக் குளிப்பாட்டி, கஃபன் - துணியால் பொதிந்து வீட்டில் ஒரு மூலையில் வைத்து விட்டார்கள்! பிறகு தம் கணவர் வந்து செய்தியைக் கேட்டதுமே அதிர்ச்சி அடைந்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டில் உள்ளவர்களிடமும் வெளியே மக்களிடமும் பின்வருமாறு சொன்னார்கள்.
அபூ தல்ஹா வந்ததும் அபூ உமைரின் மரணச் செய்தியை நீங்கள் யாரும் தெரிவிக்க வேண்டாம்.
அபூ தல்ஹா (ரலி) அவர்கள் இரவில் வீட்டுக்கு வந்தார். அவருக்கு உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் உணவு பரிமாறினார்கள். பிறகு அவர் நிம்மதியுடன் படுக்கச் சென்றபோது அவரிடம் கேட்டார்கள்.
யாராவது ஒரு பொருளை உங்களுக்கு இரவலாகக் கொடுத்து, பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டால் அந்த மனிதரை நீங்கள் வெறுக்க மாட்டீர்கள்தானே?
இதென்ன கேள்வி! அவர் கொடுத்த பொருளை மகிழ்ச்சியுடன் அவரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டியதுதான்.
உங்களுடைய குழந்தையும் அல்லாஹ் வழங்கிய ஓர் அடைக்கலப் பொருளாய் இருந்தது. இப்போது அவன் அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். எனவே நீங்கள் பொறுமையை மேற்கொள்ளுங்கள்!
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் (தின்னமாக நாம் அல்லாஹ்வுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச் செல்லவேண்டியவர்களாய் இருக்கின்றோம்) என்ன? நீ இதனை முதலிலேயே கூற வேண்டியதுதானே!
நீங்கள் நிம்மதியுடன் உணவு உட்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
மறுநாள் அதிகாலையில் அபூ தல்ஹா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்து நடந்த நிகழ்ச்சி முழுவதையும் எடுத்துச் சொன்னார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் பொறுமையையும் உளத்திண்மையையும் சிறப்பித்துக் கூறினார்கள். பிறகு அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அபூ உமைருக்குப் பகரமாக ஒரு நல்ல குழந்தையை வழங்குவானாக! என்று துஆ செய்தார்கள்.
இதன்பிறகு அவ்விருவருக்கும் அப்துல்லாஹ் என்றொரு மகன் பிறந்தார். அனஸ் (ரலி) அவர்களைப் போன்று அப்துல்லாஹ்வும் அண்ணல் நபியவர்களின் கண்காணிப்பில் வளரும் பாக்கியம் பெற்றார். அவர்களின் நற்பிரார்த்தனைகளும் அவருக்குக் கிடைத்தன!
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனைகளினால் பெரும் பலன்கள் விளைந்தன. அனஸ் (ரலி) அவர்களைப் பொறுத்தமட்டில், ஒருபுறத்தில் உலகின் அனைத்து அருட்கொடைகளும் அவர்களுக்குக் கிடைத்தன. மறுபுறத்தில் பிள்ளைச் செல்வங்கள் அதிகமாயின!
அப்துல்லாஹ் (ரலி) அவர்களைப் பொறுத்தமட்டில், அவருடைய சந்ததிகளில் காரிகள் மற்றும் இஸ்லாமியக் கலை வல்லுனர்கள் பத்துப்பேர் தோன்றினார்கள்!
விருந்தோம்பல்:
பசித்தோர்க்கு உணவளிப்பதற்கும் விருந்தினரைக் கௌரவிப்பதற்கும் இஸ்லாம் அதிகம் சிறப்பளித்துள்ளது. விருந்தளித்து மகிழ்விப்பது தொன்றுதொட்டு அரபிகளின் பழக்கமாக இருந்து வருகிறது.
அண்ணல் நபி (ஸல்) கூறியுள்ளார்கள்: யார் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவர்கள் தம்முடைய விருந்தினரைக் கௌரவிக்கட்டும்.- புகாரி, முஸ்லிம் -
இதுபோன்ற அழுத்தமான அறிவுரைகளுக்கேற்ப நபித்தோழர்கள் அனைவரும் எளியோர்க்கும் வறியோர்க்கும் விருந்திட்டு உபசரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆயினும் அபூ தல்ஹா உம்மு ஸுலைம் (ரலி) இருவரின் வாழ்வு இப்பண்பாட்டில் சிறந்த வியக்கத்தக்கதொரு முன்மாதிரியாய் திகழ்கின்றது! மனித வரலாற்றில் இதற்கு மற்றோர் உதாரணத்தைக் காண்பது அரிது!
ஒருமுறை ஒரு மனிதர் கடும் பசியுடன் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து உணவு அளிக்கும்படி வேண்டி நின்றார். நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் ஆள் அனுப்பி, வீட்டில் உண்பதற்கு ஏதேனும் உண்டா? எனக் கேட்டார்கள். இன்று எதுவும் இல்லை என்றே பதில் வந்தது.
நபியவர்கள் தம் அன்புத் தோழர்களின் பக்கம் பார்வையைத் திருப்பி, அல்லாஹ்வின் இந்த அடிமையை அழைத்துச் சென்று விருந்தளிப்பவர் உங்களில் யாரேனும் உண்டா? என வினவினார்கள்!
இதனைக் கேட்டதும் அபூ தல்ஹா (ரலி) எழுந்து இறைத்தூதரே! இவரை, எனது வீட்டிற்கு விருந்தாளியாய் அழைத்துச் செல்கிறேன் என ஏற்றார்கள்.
வீட்டிற்குச் சென்று ஏதேனும் உணவு உள்ளதா? என்று தம் அருமை மனைவியார் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களை நோக்கிக் கேட்டார்கள்!
பிள்ளைகளுக்காக உணவு சமைத்துள்ளேன். அதைத் தவிர அல்லாஹ்வின் மீது ஆணையாக வேறு உணவு எதுவும் இல்லை.
பரவாயில்லை குழந்தைகளைத் தாலாட்டித் தூங்கச் செய்துவிடுங்கள். அவர்கள் தூங்கி விடுவார்கள்! அப்போது நாம் இந்த உணவை விருந்தாளிக்கு முன்னால் வைத்துவிடுவோம், பிறகு நீங்கள் எழுந்து விளக்கைச் சரி செய்வது போன்று பாவனை செய்து அணைத்துவிட வேண்டும்! இருளில் விருந்தாளியே உணவு முழுவதையும் திருப்தியாக உண்ணும் வகையில் நாம் வெறுமனே வாயை அசைத்து உண்பதாகக் காட்டிக்கொண்டிருக்க வேண்டும்.
இவ்வாறே, இருந்த கொஞ்ச உணவையும் அந்தப் பசியாளி வயிறாற உண்பதற்கு அளித்துவிட்டு – குழந்தைகளை பசியோடு தூங்கச் செய்துவிட்டு ஒருவாறு விருந்தாளியை மகிழ்வித்தோம் என்ற திருப்தியுடன் கணவனும் மனைவியும் இரவைக் கழித்தார்கள்.
காலையில் அபூ தல்ஹா (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமூகம் வந்தபோது நபியவர்களின் புனித நாவில் இந்தத் திருவசனம் ஒலித்தது:
மேலும், அவர்கள் தங்களைவிட பிறருக்கே முன்னுரிமை அளிப்பார்கள், தமக்குத் தேவை இருப்பினும் சரியே!| (59 : 9)
பிறகு அபூ தல்ஹா (ரலி) அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், இரவில் நீங்கள் இருவரும் விருந்தாளியை உபசரித்த விதம் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகி விட்டது. அதன் பிறகு அபூ தல்ஹா (ரலி) அவர்களின் குடும்பச் சேமத்திற்காக நபியவர்கள் இறைவனை இறைஞ்சினார்கள்!
மற்றொரு தடவை,
அபூ தல்ஹா (ரலி) அவர்கள் வீட்டுக்கு வந்து உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் கூறினார்கள், நபி (ஸல்) அவர்கள் பசியுடன் இருக்கின்றார்கள். ஏதேனும் உண்பதற்குக் கொடுத்து அனுப்புங்கள்!
இதனைக் கேட்டதும் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் மிகவும் பதறிப்போய் விட்டார்கள். உடனே, கொஞ்சம் ரொட்டிகளை ஒரு துணியில் வைத்துச் சுருட்டி அனஸ் (ரலி) அவர்களிடம் கொடுத்து அனுப்பினார்கள். அனஸ் (ரலி) அவர்கள் அவற்றை வாங்கிக் கொண்டு மஸ்ஜிதுந் நபவியை அடைந்தபோது அங்கு... அண்ணலாரைச் சுற்றி நிறையத் தோழர்கள் அமர்ந்திருந்தார்கள். அனஸ் (ரலி) அவர்களைக் கண்டதும் அண்ணலார் புரிந்து கொண்டார்கள்.
அபூ தல்ஹாதானே உம்மை அனுப்பினார்கள்?
ஆமாம், இறைத்தூதரே!
உணவு உண்பதற்காகத்தானே!
...ஆமாம்
உடனே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அனைத்துத் தோழர்களையும் அழைத்துக் கொண்டு உம்மு ஸுலைம் (ரலி) இல்லம் நோக்கிப் புறப்பட்டார்கள்!
இத்தனை பேருக்கும் எங்கே உணவு இருக்கிறது எனும் கவலை அபூ தல்ஹாவை ஆட்கொண்டது! உம்மு ஸுலைமிடம் கேட்டார்கள்:
இப்போது என்ன செய்வது? எல்லாத் தோழர்களுக்கும் உணவு அளிக்க முடியவா செய்யும்?
அப்போது நிதானமாக – ஆனால் முழு நம்பிக்கையுடன் உம்மு ஸுலைம் (ரலி) அளித்த பதில் இதோ:
இதனை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நன்கு அறிவார்கள்!
பிறகு சொர்ப்ப அளவே இருந்த அந்த உணவு அனைவர் முன்னிலையிலும் வைக்கப்பட்டது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அனைத்துத் தோழர்களுடன் உண்டு மகிழ்ந்தார்கள். உணவு எல்லோருக்கும் போதுமானதாய் இருந்தது! இது முஃஜிஸா எனும் அற்புதம் அல்லவா?
ஓர் உண்மையான இறைநம்பிக்கையாளன் இறைவனின் திருப்தியையும் அவனுடைய தூதரின் திருப்தியையும் அடிப்படையாகக் கொண்டு விருந்தாளியைக் கௌரவிப்பதில் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்பது இதிலிருந்து பெறப்படுகிறது!
ஜிஹாதில் - இறைவழிப்போரில் பங்கேற்றல்:
இறைவழியில் ஜிஹாது செய்வதற்கு – அதாவது இறைவன் வழங்கிய வாழ்க்ககை நெறி மேலோங்கி, உலகில் உண்மையும் நீதியும் நிலைபெறுவதற்காகப் புனிதப்போர் மேற்கொள்வதற்கும் இஸ்லாம் அதிக அளவு சிறப்பும் புனிதமும் அளித்துள்ளது. அப்படிப் போராடி, தம் இன்னுயிரையும் தியாகம் செய்பவர்களுக்கு மறுமை வாழ்வில் பல உயர்ந்த அந்தஸ்துகள் உண்டு என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நற்செய்தி அறிவித்துள்ளார்கள். இறைவழியில் புனிதப்போர் புரிவதை விடவும் பெரியதொரு வணக்கமோ நன்மையோ இல்லை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
ஜிஹாதுக்கு அளிக்கப்பட்ட இத்துணை உயர் சிறப்புதான் புனிதப் போரில் கலந்துகொள்ள வேண்டுமெனும் பேரார்வத்தை நபித் தோழர்களின் உள்ளத்தில் உந்தியெழச் செய்தது. ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் எவ்வித அச்சமுமின்றி போர்க்களம் நோக்கி விரைந்தார்கள். தம்மால் இயன்ற ஏதேனும் பணியை நிறைவேற்றிட இஸ்லாத்திற்காக உழைத்திடத் துடித்தார்கள்!
சில பெண்கள் வீரர்களுக்குத் தண்ணீர் புகட்டினார்கள். வேறுசிலர் காயமுற்றோருக்கு சிகிச்சை அளித்தார்கள். இத்தகைய அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்ட நபித் தோழியர்களில் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவார்கள்!
ஹிஜ்ரி 3ம் ஆண்டு நடந்த உஹதுப் போரில் அபூ தல்ஹா (ரலி) அவர்களுடன் உம்மு ஸுலைமும் கலந்து கொண்டார்கள். பெரிய முன்னேற்பாட்டுடன் தண்ணீர் கொண்டு சென்று காயம் அடைந்த வீரர்களுக்குப் புகட்டினார்கள். மிகக் கடுமையான அபாயம் நிறைந்த சூழ்நிலைகளிலும் மிகுந்த எச்சரிக்கையுடன் களத்தினுள் ஊடுருவிச் சென்று காயம் அடைந்தவர்களைக் கணடுபிடித்து தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்தார்கள்!
அவர்களின் மகனார் அனஸ் (ரலி) கூறுகின்றார்கள், உஹதுக் களத்தில் நான் ஆயிஷா (ரலி) அவர்களையும் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களையும் பார்த்தேன். இருவரும் தோல்ப் பைகளைத் தண்ணீரால் நிரப்பிக் கொண்டு வந்து காயமுற்றவர்களுக்குத் தண்ணீர் புகட்டினார்கள். தண்ணீர் தீர்ந்து விட்டால் வேகமாகச் சென்று மீண்டும் நிரப்பிக் கொண்டு வருவார்கள்.
ஹிஜ்ரி 6ம் ஆண்டு இறுதியில் நபி (ஸல்) அவர்கள் கைபர் யுத்தத்திற்காகப் புறப்பட்டார்கள். அப்போது உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் பிற தோழியருடன் சேர்ந்து கொண்டு படை வீரர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். அது நபியவர்களுக்குத் தெரியவந்தபோது அதிருப்தி கொண்ட தோரணையில் கேட்டார்கள்.
நீங்கள் யாருடன் யாருடைய அனுமதியின் பேரில் போர் நோக்கிப் புறப்பட்டுள்ளீர்கள்?
அல்லாஹ்வின் தூதரே, எங்கள் தாய் தந்தையர் உங்களுக்காக அர்ப்பணம் ஆகட்டும்! நாங்கள் கம்பளி உடைகள் செய்கின்றோம். அதன் மூலம் அல்லாஹ்வின் பாதையில் உதவி புரிகின்றோம். காயம் அடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் எங்களிடம் உள்ளன. மேலும் அம்பெறியும் வீரர்களுக்கு அம்புகளை எடுத்து எடுத்துக் கொடுப்போம். உணவும் தயாரித்துக் கொடுப்போம்.
இந்தப் பதிலைக் கேட்டதும் அப்பெண்களுக்கு அண்ணலார் (ஸல்) அனுமதி அளித்தார்கள்.
ஹிஜ்ரி 8ம் ஆண்டு மக்கா நகரத்தின் வெற்றிக்குச் சில தினங்களுக்குப் பிறகு ஹுனைன் போர் நடைபெற்றது. உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் தம் கணவர் அபூ தல்ஹா (ரலி) அவர்களுடன் மிகுந்த உற்சாகத்துடன் இந்தப் போரில் கலந்து கொண்டார்கள்! இந்தப் போர் பனூ ஹவாஸின் கோத்திரத்தாருடன் நடைபெற்றது.
போரின் ஆரம்பத்தில் எதிர் அணியைச் சேர்ந்த அம்பெறியும் வீரர்கள் மறைவிடங்களில் இருந்து முஸ்லிம்களின் மீது அம்புமாரி பொழிந்தார்கள். எந்த அளவுக்கெனில் அம்புத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் முஸ்லிம்களின் அணி சிதறுண்டது!
அந்நேரத்தில் தம் இன்னுயிரையும் தியாகம் செய்யத் துணிந்துவிட்ட சில தோழர்கள்தான் அண்ணலாரின் அருகில் குன்றென உறுதி குலைந்திடாமல் நின்றிருந்தார்கள்! அப்போது நபி (ஸல்) அவர்கள் உணர்ச்சி ததும்ப இவ்வாறு முழங்கினார்கள்:
நான் நபிதான், இது பொய்யல்ல! நான் அப்துல் முத்தலிப்பின் மகனாவேன்.
அண்ணலாரின் இந்தக் குரல் யார் யாரின் காதுகளில் விழுந்ததோ அவர்கள் அனைவரும் உடனே களத்திற்குத் திரும்பினார்கள். பிறகு நபியவர்களின் சைக்கினைப்படி அப்பாஸ் (ரலி) அவர்கள் உரத்த குரலில் முஸ்லிம்களை நோக்கிக் கூறினார்கள்: அன்ஸாரிகளே! முஹாஜிர்களே! நீங்கள் அனைவரும் நபியவர்களின் இடத்திற்கு முழு உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் ஒன்று திரண்டு வாருங்கள். மேலும், இறைமறுப்பாளர்கள் தோல்வியுற்று ஓட அவர்கள் மீது முழு வலிமையுடன் தாக்குதல் நடத்துங்கள்!
இப்படியாக போர் மீண்டும் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தபோது அபூ தல்ஹா (ரலி) அவர்கள் அண்ணலாரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் நின்று பேராண்மையுடன் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் கையில் பட்டாக்கத்தியை வைத்துக் கொண்டு அண்ணலாரின் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்தார்கள்.
ஜிஹாத் பெண்களின் மீது கடமையா?
அன்னை உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் இந்தப் போரில் ஆயுதம் ஏந்திய இந்நிகழ்ச்சியை அனஸ் (ரலி) அவர்கள் ஓர் அறிவிப்பில் விளக்கியுள்ளார்கள்!
ஹுனைன் யுத்தத்தின் போது உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் பட்டாக்கத்தி ஒன்றை தம்முடன் வைத்திருந்தார்கள். அதனை அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் பார்த்துவிடவே, உடனே நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே, இதோ! உம்மு ஸுலைம் பட்டாக்கத்தியுடன்! என்று முறையிட்டார்கள்.
உம்மு ஸுலைமிடம் நபியவர்கள் கேட்டார்கள். இதென்ன பட்டாக்கத்தி?
அல்லாஹ்வின் தூதரே! இணைவைப்பவர்களில் எவனாவது என்னை நெருங்கி வந்தால் இதனைக் கொண்டு அவனது வயிற்றைக் கிழிப்பதற்காகத்தான் இதனைக் கொண்டு அவனது வயிற்றைக் கிழிப்பதற்காகத்தான் இதை எடுத்துள்ளேன், வேறொன்றும் இல்லை! என்று விளக்கினார்கள் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள்.
இதனைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் புன்னகை வெளிப்படுத்தினார்கள்.
உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் தொடர்ந்து சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதரே, நாம் திரும்பிச் சென்றதும், (மக்கா வெற்றியின்போது) விடுதலை அளிக்கப்பட்ட இவர்களைக் கொன்று விடுங்கள்! ஏனெனில், உங்களை விட்டுவிட்டு தோற்றுப்போய் புறமுதுகிட்டு ஓடிவிட்டார்கள்.
உம்மு ஸுலைமே! இணைவைப்பாளர்களின் சூழ்ச்சியை அல்லாஹ் முறியடித்து விட்டான். விடுதலை செய்யப்பட்டவர்களான இவர்களின் உதவியை நமக்குத் தேவை இல்லாமலாக்கிவிட்டான் என்று நபியவர்கள் பதில் அளித்தார்கள். -முஸ்லிம்-
இந்த நிகழ்ச்சி, பல விடயங்களை நமக்கு உணர்த்துகின்றது.
ஆண்களைப் போன்று ஆயுதமேந்தி, போரில் நேரடியாகக் குதிப்பதை இஸ்லாம் பெண்களின் மீது கடமையாக்கவில்லை. இருப்பினும் அதிலிருந்து அவர்களுக்கு விதிவிலக்கு அளித்து அவர்களின் கௌரவத்தைக் காத்தது!
ஏனெனில், போர் ஒரு கொடூரமான சூழ்நிலை. அதன் கேடுபாடுகளிலும் அபாயங்களிலும் பெண்கள் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. மேலும் பெண்கள் களத்தில் குதித்தால் எதிரிகளின் தாக்குதலுக்கு ஏற்ப, ஆயுதங்களைச் சுழற்றி ஓடியாடி இயங்க நேரிடலாம். சிலபோது மானபங்கத்துக்கும் ஆளாக வேண்டியதுவரும்.
ஆயினும் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இறைவழிப் போரில் நேரடியாகக் கலந்து கொண்டு அதன் அபரிமிதமான நன்மையைப் பெறுவதற்கு பெண்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் நபி (ஸல்) அவர்களிடத்தில் வினவப்பட்டது. ஜிஹாத் - போர் புரிவது பெண்களின் மீது கடமையாக்கப்பட்டுள்ளதா?
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்! சண்டையில்லாத போர். ஹஜ்ஜூம் உம்ராவும் என்று பதிலளித்தார்கள்.
ஒரு சந்தர்பத்தில் வில்லையும் அம்பையும் ஏந்திக் கொண்டிருந்த ஒரு பெண்மணியைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ஆண்களைப் போல் பாவித்து நடக்கும் பெண்களையும் பெண்களைப் போல் பாவித்த நடக்கும் ஆண்களையும் அல்லாஹ் சபித்துள்ளான் என்று கண்டித்துக் கூறினார்கள்.
இதன் அடிப்படையில்தான் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் பட்டாக்கத்தியுடன் இருப்பதைக் கண்டதும் அவர்களின் அவர்களின் கணவர் அபூ தல்ஹா (ரலி) அவர்கள் அண்ணலாரிடம் சென்று முறையிட்டார்கள்.
இங்கு உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாறு செய்துவிட்டார்களோ என்று யாரும் கருதிவிடக்கூடாது. ஆயுதம் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. அதனை அவர்களே நபியவர்களிடம் விளக்கியுள்ளார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களைத் தனியே விட்டுவிட்டு முஸ்லிம் விரர்கள் தோற்றோடிய நேரத்தில் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் நபியவர்களின் அருகிலேயே நின்று பாதுகாப்பு அளித்திட்ட சூழ்நிலையில் தற்காப்புக்கு என்ன செய்வது? ஆயுதம் ஏந்தத்தானே வேண்டும்?
இது நியாயமான காரணமாக இருந்ததால்தான் இதனைக் கேட்டதும் நபியவர்கள் புன்னகை புரியலானார்கள்!
இவ்வாறு உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் இறைத்தூதரின் மீதும் இஸ்லாத்தின் மீதும் வைத்திருந்த அளவிலா அன்பினாலும் அனல் தெறிக்கும் ஈமான் - இறைநம்பிக்கை, வீராவேசம், விழிப்புணர்வு ஆகியவற்றினாலும்தான் நபி (ஸல்) அவர்களிடத்தில் இப்படியொரு துணிச்சலான கோரிக்கையை வைத்தார்கள். அதாவது போரின் தொடக்கத்தில் எதிரிகளின் முன்னிலையில் புறங்காட்டி ஓடியவர்களை ஏன் கொல்லக் கூடாது? அவ்வாறு ஓடியதன் மூலம் நமது பேராண்மையைக் கேவலப்படுத்தி விட்டார்கள்! நமது அணியின் வலிமையை பலவீனப்படுத்தி விட்டார்கள்! என்று முறையிட்டார்கள்!
இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: ஈமான் - நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் படையாகத் திரண்டு சென்று இறை நிராகரிப்பாளர்களுடன் போரிட நேர்ந்தால் அவர்களுக்கு புறமுதுகு காட்டி ஓடாதீர்கள்! அந்நாளில் யாரேனும் புறமுதுகு காட்டி ஓடினால் போர் தந்திரத்திற்காகவோ வேறொரு படையுடன் சேர்ந்து கொள்வதற்காகவோ செல்பவரைத் தவிர மற்றவர்கள் திண்ணமாக அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி விடுவர். மேலும் அவர்களுடைய புகலிடம் நரகமாகும். அது மோசமான இருப்பிடமாகும். (8:15,16)
மேலும் போரில் புறமுதுகு காட்டி ஓடுவதை அழிவில் ஆழ்த்தும் ஏழு பாவங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
போரில் புறமுதுகு காட்டி ஓடுவதைக் குறித்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கைகளை முன்னிட்டுத்தான் அன்று களத்திலிருந்து ஓடியவர்களை நபியவர்களை எதிரிகளிடம் விட்டுவிட்டு தாங்கள் மட்டும் பிழைத்தால் போதும் என்று கருதிய வீரர்களை சும்மா விட்டு வைப்பதா என்று இந்த வீரத்திருமகளின் உள்ளம் குமுறியது!
அண்ணலாரின் மீது அன்பு
இப்படி எல்லா வகையிலும் இஸ்லாத்திற்காகவும் இறைத்தூதருக்காகவும் தியாகங்கள் பல புரிற்து வந்த அன்னை உம்மு ஸுலைம (ரலி) மீது அண்ணலார் அவர்கள் அளவிலா மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள்!
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜூக் கடமையை நிறைவேற்றப் புறப்பட்டபோது உம்மு ஸுலைமிடம் கேட்டார்கள். நீங்கள் ஹஜ்ஜூக்குப் புறப்படவில்லையா?
இறைத்தூதரே, என்னுடைய கணவரிடம் இரு வாகனங்கள் மட்டுமே உள்ளன. அவற்றின் மீது அவரும் அவருடைய மகனாரும் புறப்பட்டு விட்டார்கள். நானும் வருவதாயின் எனக்கு வாகனம் இல்லையே?
இதனைக் கேட்டதும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியருடன் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களையும் ஒட்டகையில் ஏறச் செய்து தம்முடன் ஹஜ்ஜூக்கு அழைத்துச் சென்றார்கள்.
வழியில், நபியவர்களின் பணியாள் அன்ஜஷி (ரலி) அவர்கள் ஒட்டகங்களிகளை வேகமாக ஓட்டிச் செல்ல ஆரம்பித்தார்கள். ஒட்டகங்கள் தலைதெறிக்க ஓடலாயின. உடனே நபியவர்கள், அன்ஜாவே, ஒட்டகங்களின் மேலே கண்ணாடிகள் (பெண்கள்) இருக்கின்றன! மெதுவாக ஓட்டிச் செல் என்று கட்டளையிட்டார்கள்.
உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் அண்ணலார் மீது எத்துணை உயர்வான, புனிதமான அன்பு வைத்திருந்தார்கள் தெரியுமா?
மினாவில்....
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி முடித்து தங்களின் தலைமுடியை மழித்தபோது உம்மு ஸுலைம் (ரலி) தம் கணவரிடம் கூறினார்கள்: நாவிதனிடமிருந்து அந்த முடிகளை வாங்குங்கள். அபூ தல்ஹா (ரலி) அவ்வாறு செய்யவே, அண்ணலாரின் திருமுடிகளை ஒரு கண்ணாடிக் குப்பியில் அடைத்துப் பாதுகாப்பாய் வைத்துக் கொண்டார்கள் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள்!
மற்றொரு நிகழ்ச்சி....
நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் வீட்டில் இருக்கும்போது தொழுகை நேரம் வந்து விட்டால் அங்கேயே கட்டிலின் மீது தொழுகையை நிறைவேற்றுவார்கள். ஒருமுறை உம்மு ஸுலைமின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது நபியவர்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அங்கிருந்த தண்ணீர்ப் பையில் அப்படியே தம் திருவாயினை வைத்துத் தண்ணீர் அருந்தினார்கள்! இதனைக் கண்ணுற்ற உம்மு ஸுலைம் (ரலி) உடனே எழுந்து சென்று தோல்பையின் வாய்ப் பகுதியை வெட்டி வைத்துக் கொண்டார்கள். நபியவர்களின் புனித உதடுகள் அதனை முத்திமிட்டன என்பதற்காக!
இவ்வாறு அண்ணல் நபியவர்களின் அதிக அன்பையும் நெருக்கத்தையும் பெற்ற – அவர்களின் தூரத்து உறவு சிற்றன்னையான உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் அண்ணலாரிடமிருந்து தீன் சம்பந்தமான நுணுக்கங்களையும் ஏராளம் கற்றுக் கொண்டார்கள்! பிற்காலத்தில்.... நபித் தோழர்கள் இருவரிடையே ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் வந்து அதுபற்றி விளக்கம் பெறுவது வழக்கமாய் இருந்தது! இத்தகைய அறிவுக்கூர்மையான தீனைக் கற்றுணர்ந்த பெண்மணியாகத் திகழ்ந்தார்கள் என்பது இதிலிருந்து புலனாகிறது!
அனஸ் (ரலி), அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), ஜைத் இப்னு ஸாபித் (ரலி) மற்றும் அமர் இப்னு ஆஸிம் (ரலி) ஆகியோர் அன்னை உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடமிருந்து சில நபிமொழிகளை அறிவித்துள்ளார்கள். அன்னை உம்மு ஸுலைம் மீது அல்லாஹ் தன் பேரருளைப் பொழிவானாக! அவர்களைப் போல் அல்லாஹ் மீதும் அவனுடைய திருத்தூதர் மீதும் இஸ்லாத்தின் மீதும் பற்றுக் கொண்டு உண்மை முஸ்லிம்களாய் வாழும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்குவானாக!