உம்மு அம்மாரா (ரலி)

 உம்மு அம்மாரா (ரலி)

சத்திய இஸ்லாத்தின் சன்மார்க்க ஒளியை உலகெல்லாம் பரப்பிட உவகை கொண்டு உயிரையும் உடலையும் அர்ப்பணித்த அண்ணலாரின் ஆரயிர்த் தோழிகளில் அன்னை உம்மு அம்மாரா (ரலி) அவர்களும் ஒருவராவார். வீரத் தாய் உம்மு அம்மாரா (ரழி) அவர்களும் ஒருவராவார். வீரத்தாய் உம்மு அம்மாரா (ரழி) அவர்களின் வீரமும், துணிவும் தியாக மனப்பாங்கும் எம்மனைவருக்கும் சிறந்ததொரு முன்னுதாரணமாகும்.

அறிமுகம்:

இவர் மதீனாவிலுள்ள கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர். தந்தை பெயர் கஃப் இப்னு அம்ர் என்பதாகும். நசீயா என்பது இவரது இயற்பெயராகும். உம்மு அம்மாரா என்ற சிறப்புப் பெயராலேயே இவர் பிரபல்யமானார்.

உறுதிமொழியில் பங்கேற்றல்:

ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவ தீபத்தை மக்கமா நகரில் ஏந்தி வந்த போது அதை அணைத்து விட ஆயிரம் கரங்கள் துடித்தன. எட்டுத் திசைகளிலிருந்தும் ஏச்சும் பேச்சுக்கள், எதிர்ப்புகள், எச்சரிக்கைகள் எண்ணிக்கையின்றி வந்து குவிந்தன. மக்கா பூமியே ஒரு சித்திரவதைக் கூடமாகக மாறியது.

இஸ்லாமிய நெறியை ஏற்ற ஆரம்ப முஸ்லிம்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். துவைத்து எடுக்கப்பட்டனர். எனினும் உள்ளத்தைக் கல்லாக்கிக் கொண்டு, கொண்ட கொள்கையில் கொஞ்சம் உறுதி தளராது உருக்குப் போல் இருந்தனர் உத்தமத் தோழர்கள்.

துன்ப துயரங்கள் துரத்த, தொல்லைகள் நிழலாய்த் தொடர ஒவ்வொரு விடியலிலும் ஒரு பூகம்பத்தைச் சந்தித்து, ஒவ்வொரு நாளையும் எரிமலையை, நெருப்பாற்றைக் கடப்பது போல் கடந்தனர்.

வேதனையில் விளிம்பைத் தாண்டிய நிலையில் இஸ்லாமிய ஜோதியை ஏற்றி வைக்க நல்லதொரு களத்தை உருவாக்கும் முயற்சியில் நபி (ஸல்) அவர்கள் இறங்கினார்கள். அதில் முதல் கட்டமாக மக்காவுக்கு ஹஜ் செய்ய வந்தவர்களிடம் பிரச்சாரம் செய்யலானார்கள். இதிலொரு கட்டமாக அகபா உடன்படிக்கை நடந்து. இதில் 12 யத்ரிப் (மதீனா) வாசிகள் பங்கு கொண்டு இஸ்லாத்தை ஏற்றனர்.

அடுத்த ஆண்டு அதே இடத்தில் மற்றுமொரு ரகசியக் கூட்டம் நடந்தது. அதில் 73 ஆண்களும், இரு பெண்களும் பங்கு கொண்டனர். அதில் 11 நபர்கள் அவ்ஸ் கோத்திரத்தினர். மற்றைய அனைவரும் கஸ்ரஜ் கோத்திரத்தினர்.

இந்த 75 பேரும் ஹஜ் கிரியைகளை முடித்து விட்டு நடுநிசி வரை காத்திருந்தனர். குறித்த நேரம் வந்ததும் ரகசியமாக எழுந்து அகபா பள்ளத்தாக்கு நோக்கி நகர்ந்தனர். அங்கே நபி (ஸல்) அவர்களுடன் இஸ்லாத்தை அதுவரை தழுவிடாத அவரது பெரிய தந்தை அப்பாஸூம் இருந்தார்.

அங்கே நபி (ஸல்) அவர்களது கையைப் பிடித்து நீங்கள் எங்களது பிரதேசத்துக்கு வந்தால் எமது மனைவி மக்களை எவற்றிலிருந்தெல்லாம் பாதுகாக்கிறோமோ அவற்றிலிருந்தெல்லாம் நாம் உங்களைப் பாதுகாப்போம் என்று சத்தியம் பிரமாணம் செய்யப்பட்டது.

ஆண்களெல்லாம் சத்தியம் செய்து முடிந்த பின் இரண்டு பெண்கள் மட்டும் எஞ்சியிருந்தனர். அதில் ஒருவர் உம்மு அம்மாரா (ரழி) ஆவார். அப்பொழுது உம்மு அம்மாரா (ரழி) அவர்களின் கணவர் கஸஜயதிப்னு அம்ர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இதோ எம்முடன் இரு பெண்களும் பைஅத் செய்ய வந்துள்ளனர் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் செய்த பைஅத்தை அவ்விருவரிடமு; நான் பெற்று விட்டேன். நான் பெண்களின் கரத்தைத் தீண்ட மாட்டேன் என்றார்கள்.

மிகப் பெரும் வரலாற்றுத் திருப்பத்திற்கும் புரட்சிக்கும் வழியமைத்த வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த இரண்டாவது அகபா உடன்படிக்கையில் பங்கு கொண்டதன் மூலம் உம்மு அம்மாரா (ரழி) அவர்கள் உயரிய அந்தஸ்தையடைந்து கொண்டார்கள் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

ஏகத்துவ ஒளியை இதயத்தில் ஏந்திய இக்கூட்டம் மதீனா நகர் சென்றது. ஏகத்துவம் பற்றியும் தூதுத்துவம் பற்றியும் மதீனத்து மக்களுக்குப் போதித்தது. ஆண்களுக்கு எடுத்துச் சொல்ல எழுபத்து மூன்று நபர்கள் இருந்தனர். பெண்களுக்கு இஸ்லாம் பற்றிய அறிமுகத்தைக் கொடுக்கும் பணியில் இவ்விரு பெண்களும் ஈடுபட்டனர். இதன் மூலம் மதீனா நகருக்கான நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு முன்னரே மதீனா பட்டணம் இஸ்லாத்திற்கு ஏற்ற சூழலாகச் சிறிது சிறிதாக மாற்றம் காணவராம்பித்தது.

உஹது போர்க்களத்தில் - உடன்படிக்கை காத்தல்:

உங்களைக் காப்போம் என அன்னையவர்கள் செய்த உடன்படிக்கையை நிறைவேற்ற உற்றதொரு தருணம் உஹதுக் களத்தில் அன்னையவர்களுக்குக் கிடைத்தது.

உஹதுப் போர் வீரர்களுக்கு உதவுவதற்காக அன்னையவர்களும் களம் சென்றார்கள். காயப்பட்டோருக்கு முதலுதவி அளித்தல், நீர் புகட்டுதல், உணவு தயாரித்தல் போன்ற பணிகளில் அன்னையவர்கள் ஈடுபட்டார்கள்.

அன்னையவர்கள் இயற்கையிலேயே துணிவு கொண்டவர்களாக இருந்தார்கள். இங்கு அவர் பற்றி நாம் எழுதுவதும் போர்க்களங்களில் பங்கு கொள்வதில் அவர்கள் பெண்களில் முதல் நிலைவகித்ததனாலேயாகும். யுத்த ஈடுபாட்டில் தான் அன்னையவர்கள் ஏனைய பெண்களிலிருந்து மாறுபடுகின்றார்கள்.

அன்னையவர்கள் காட்டிய வியக்க வைக்கும் வீரம் தளராத உறுதி, தியாகம் அனைத்தையும் அறியும் போது அவர் மீதுள்ள அபிமானம் மேலும் அதிகரிக்கின்றது.

உஹதுப் போர் நடக்கின்றது. அன்னையவர்கள் தனது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆரம்பத்தில் வெற்றிக் காற்று முஸ்லிம்கள் பக்கம் வீசுகிறது. எதிரிகள் பின்னங்கால் பிடரியில் பட ஓடவாரம்பிக்கின்றார்கள். இச்சந்தர்ப்பத்தில் குன்றொன்றில் நபி (ஸல்) அவர்கள் நிறுத்தி வைத்திருந்த வில் வீரர்கள் வெற்றி நம் பக்கம் வந்து விட்டதே, இதற்குப் பின் நமக்கென்ன வேலை என்று எண்ணி நபி (ஸல்) அவர்களின் கட்டளையையும் மீறிக் குன்றை விட்டுக் கீழே இறங்கி கனீமத் (எதிரிகள் விட்டுச் சென்ற) பொருட்களைப் பொறுக்கவாரம்பித்தார்கள்.

இதனை எதிரிப் படையொன்றை வழி நடாத்தி வந்த காலித் பின் வலீத் (இவர் பிற்காலத்தில் இஸ்லாத்தில் இணைந்து கொண்டார்) அவர்கள் கண்டு தன் படையைக் குன்றின் வழியாகக் கொண்டு வந்து முஸ்லிம்கதை; தாக்கவாரம்பித்தார். போர் நிலவரம் தலைகீழாக மாறுகின்றது.

இத்தருணத்தில் முஹம்மத் கொல்லப்பட்டு விட்டார் என்ற வதந்தியை எதிரிகள் பரப்பி விடுகின்றனர். பின்னர் போரிட்டு என்ன பயன் என்ற எண்ணத் தலைப்பட்டனர். மற்றும் பலர் என்ன செய்வது ஏது செய்வதென்றறியாது களத்தை விட்டு வெருண்டோட ஆரம்பிக்கின்றனர்.

அப்பொழுது நபி (ஸல்) அவர்களைச் சூழ பத்து, பதின் மூன்று பேரே நிற்கின்றனர். அவர்களில் அபூதுஜானா போன்ற மாவீரர்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்த வில்லையும் அம்பையும் தன் மார்பைக் கொண்டு தடுத்து நபியைக் காத்தனர். அப்போது நபியவர்களைச் சூழ இருந்தவர்களில் உம்மு அம்மாரா(ரழி) அவர்களும் அவர்களது இரு புதல்வர்களான அப்துல்லாஹ் இப்னு செய்த் (ரழி) மற்றும் ஹபீப் இப்னு செய்த் (ரழி) மற்றும் அன்னையின் கணவர் என முழுக் குடும்பமும் உள்ளடக்கமாகும்.

இதே உஹதுக் கள நிலவரம் பற்றி அன்னையவர்களே கூறுவதைக் கேளுங்கள் :
உம்மு ஸஅத் என்ற பெண்மணி உம்மு அம்மாராவின் இல்லம் வந்து உஹதுக் களத்தில் நடந்தது என்ன என்று விவரித்துக் கூறுங்களேன்? என்று கேட்ட போது  உம்மு அம்மாரா(ரழி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : நான் உஹதுக் களத்துக்குப் படை வீரர்களுக்கு நீர் புகட்டுவதற்காகவும், உதவுவதற்காகவும் சென்றேன். ஆரம்பத்தில் வெற்றி முஸ்லிம்கள் பக்கமிருந்தாலும் இறுதியாக முஸ்லிம்கள் சோதிக்கப்பட்டனர். பலர் என்ன செய்தவதென்றேயறியாது போர்க்களம் விட்டுப் புறமுதுகு காட்டி ஓடவாரம்பித்தனர். நபி (ஸல்) அவர்களைச் சூழ சில நபித்தோழர்கள் நின்று கொண்டு அவர்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டனர். நானும் வாள் சுற்றி, அம்பெறிந்து நபி (ஸல்) அவர்களை நோக்கி வரும் எதிர்ப்புகளை எதிர்கொண்டேன். என் புஜத்தில் இந்தக் காணம் ஏற்படும் வரை மூர்க்கமாகப் போராடினேன் என்று கூறி தன் தோள்பட்டையில் இருந்த காயத்தைக் காட்டினார்கள்.

உம்மு ஸஅத் அக்காயத்தைப் பார்த்தார்கள். அதில் பள்ளம் விழுந்து போயிருந்தது. தொடர்ந்து உம்மு அம்மாராவே! இது யாரால் ஏற்பட்ட காணம் என உம்மு ஸஅத் கேட்க, அன்னையவர்கள் நடந்ததைக் கூறலானார்கள். மக்கள் நபி (ஸல்) அவர்களை விட்டும் விலகியிருந்த போது இப்னு கும்ஆ என்பவன் முஹம்மதைத் காட்டுங்கள்! அவரை இன்றுடன் தீர்த்துக் கட்டாவிட்டால் எம்மால் வெற்றி பெற முடியாது என்று முழங்கிக் கொண்டு நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்தான். அவனை முஸ்அப் இப்னு உமைரும் நானும் இன்னும் சிலரும் எதிர் கொண்டோம். அப்போது தான் இந்த வெட்டு விழுந்தது. பதிலுக்கு நானும் அவனை வெட்டினேன். அவன் இரண்டு கவசங்கள் அணிந்திருந்தான். அதனால் தப்பித்துக் கொண்டான் எனக் கூறினார்கள்.

இந்த யுத்தத்தில் கையில் கிடைத்த அனைத்தையும் வைத்துப் போராடிக் கொண்டிருந்த அன்னையவர்கள் களத்தில் மற்றுமொரு காட்சியை இப்படி விவரிக்கின்றார்கள்.

நானும் என் இரு ஆண்மக்களும் நபி (ஸல்) அவர்களுக்கு வரும் எதிர்ப்புக்களை எதிர் கொண்டு போரடிக் கொண்டிருந்தோம். அப்போது என் கையில் கேடயமிருக்கவில்லை. அந்நேரத்தில் ஒருவர் கையில் கேடயத்துடன் களத்தை விட்டும் ஓடிக் கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி, ஓடுபவனே! கேடயத்தைப் போராடுபவர்களுக்காகப் போட்டு விட்டுப் போ என்றார்கள். அவர் அதனைப் போட்டு விட்டு ஓட, அதை நான் எடுத்துக் கொண்டேன். அதன் மூலம் நபி (ஸல்) அவர்களை நோக்கி வரும் ஆபத்துக்களைத் தடுத்துக் கொண்டிருந்தேன். அன்றைய களத்தில் நிராகரிப்பாளர்களின் குதிரை வீரர்களால் தான் எமக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது. எம்மைப் போல் அவர்களும் கால் நடையாக வந்திருந்தால் ஒரு கை பார்த்திருப்போம் என்று கூறினார்கள்.

என் கையில் கேடயம் கிடைத்த பின் குதிரையில் வரும் எதிரிகள் வெட்டும் போது கேடயத்தின் மூலம் தடுத்துக் கொண்டே குதிரையின் காலை வெட்டி எதிரியைக் கீழே வீழ்த்துவேன். எனக்கு இதில் சங்கடங்கள் வரும் போதெல்லாம் நபி (ஸல்) அவர்கள் என் புதல்வர்களை அழைத்து, உன் தாயைக் கவனி! உன் தாயைக் கவனி! எனச் சத்தமிட்டுக் கூறுவார்கள்.

அப்துல்லாஹ் என்ற அன்னையின் வீர மைந்தன் கூறுகிறார் : நானும் என் தாயும் நபி (ஸல்) அவர்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது என் தாய்க்குக் கடினமான வெட்டு விழுந்தது. நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து தாயின் காயத்திற்குக் கட்டிடச் சொன்னார்கள்.

பின்னர் உங்கள் குடும்பத்திற்கு அல்லாஹ் பரக்கத் செய்வானாக! உன் தாய் இங்கிருந்து போராடுவது (சில பெயர்களைக் கூறி) இன்னின்ன யுத்த வீரர்கள் இங்கிருந்து போராடுவதை விடச் சிறந்தது. அவர்களின் கணவர் இங்கிருந்து போராடுவது இன்னின்ன நபர்கள் போராடுவதை விடச் சிறந்தது. உங்கள் குடும்பத்திற்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக! என்று பிரார்த்தித்தார்கள்.

அப்போது என் தாய் அல்லாஹ்வின் தூதரே! சுவனத்திலும் நான் உங்களுக்கு அருகிலிருக்கப் பிரார்த்தியுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இஜ்அல்ஹும் ருபகாயீ பில் ஜன்னா - யா அல்லாஹ் இவர்களை சுவனத்திலும் என் நண்பர்களாக ஆக்கி விடுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். இதைக் கேட்ட என் தாய் இந்தப் பாக்கியம் கிடைத்த பின் அழிந்து போகும் இந்தத் துன்யாவில் எமக்கு என்ன இழப்பு ஏற்பட்டால் தான் என்ன? என்று கூறி மீண்டும் போராடத் தொடங்கி விட்டார்கள் என்கிறார்கள்.

களத்தில் மற்றுமொரு காட்சியை அவரது மகன் இப்படிக் கூறுகிறார் : உஹதுக் களத்தில் நான் காயப்பட்டேன். நபி (ஸல்) அவர்கள் நீயே உன் காயத்தைக் கட்டிக் கொள் என்றார்கள். அப்போது என் தாய் வந்து என் காயத்துக்குக் கட்டுப் போட்டார்கள். பின்னர் மகனே எழுந்து போராடு என்றார்கள்.

சற்று நேரத்தின் பின் என்னை வெட்டியவன் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்தான். நபி (ஸல்) அவர்கள் என் தாயை நோக்கி உம்மு அம்மாராவே! அதோ உன் மகனை வெட்டியவன் வருகிறான் என்று கூறினார்கள். இது கேட்ட என் தாய் அவன் முன் போய் அவனது காலை வெட்டி அவனைக் கீழே வீழ்த்தினார்கள். தொடர்ந்து நாம் அவனைத் தாக்கினோம். நபி (ஸல்) அவர்கள் சிரித்தவர்களாக, உம்மு அம்மாராவே பழி தீர்த்து விட்டீரெ! எனக் கூறி துஆவும் செய்தார்கள்.

இந்நிகழ்ச்சிகள் யாவும் அன்னை உம்மு அம்மாரா அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது கொண்டிருந்த பாசத்தையும், அவர்களைக் காப்பதில் கொண்டிருந்த கரிசனையையம், ஆண்களையும் மிஞ்சும் அவர்களின் வீரத்தையும், துணிவையும் எடுத்துக் காட்டுகின்றன. ஒரு பெண் புலியாக நின்று போராடியுள்ளார்கள். இவர்களது ஈமானிய உணர்விலும் உறுதியிலும் ஒரு துளியாவது எம்மிடமிருந்தால் எம் வாழ்வில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்று எண்ணிப்பாருங்கள்.

பிள்ளைகள் பொது வேலையில் ஈடுபடும் போது தடுக்கும் தாய்மார்களையே நாம் காண்கின்றோம். ஆனால் இந்தத் தாய் தன் இரு குழந்தைகளையும் பொது வேலையில் ஈடுபடுத்தியது மட்டுமல்ல மகன் காயப்பட்ட பின்னர் கூட சற்றும் சலனமில்லாமல் மீண்டும் மகனைப் போராட்டத்தில் ஈடுபடுத்துகின்றார்கள். தாய்மை உணர்வை மிஞ்சிய இச்செயலைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் உம் அம்மாரே! உன்னைத் தவிர வேறு யாரால் தான் இது சாத்தியப்படும் என்று புகழ்ந்தார்கள்.

இது மட்டுமல்ல, யுத்தம் முடிந்த பின்னர்.. ..

என் வலப்புறம் இடப்புறம் ஏன் எத்திசையை நோக்கினாலும் அங்கு உம்மு அம்மாரா என்னைக் காப்பாற்றுவதற்காகப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டேன் என்றும் நபி (ஸல்) அவர்கள் புகழ்ந்தார்கள்.

தளராத உறுதி:

போர் என்பது அபாயகரமானது. அதிலும் போரில் பாதிப்பு ஏற்பட்டால் கேட்கவும் வேண்டுமா? உஹது யுத்தத்தில் அன்னையவர்களின் உடலில் பத்திற்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன. யுத்த முடிவின் பின் மீண்டும் குறைஷிகள் யுத்தத்திற்குத் தயாராகுவதாகச் செய்தி கிடைத்த போது நபி (ஸல்) அவர்கள் உஹது வீரர்கள் அனைவரும் அடுத்த யுத்தத்திற்குத் தயாராக வேண்டும் எனக் கூறி ஹம்ராஉல் அஸத் எனும் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கி எட்டு மைல் தொலைவிலுள்ள இடத்திற்குச் சென்று மூன்று தினங்கள் எதிரிகளின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். எதிரிகள் வராததால் பின்னர் மதீனா திரும்பினர்.

இந்நிகழ்ச்சியிலும் உடலில் பல காயங்கள் ஏற்பட்டு சோர்ந்து போயிருந்த நிலையிலும் அன்னையவர்கள் தளராக உறுதியுடன் பங்கேற்றார்கள். பெண்கள் யுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என்ற கட்டாயமில்லாத போதும் கூட ஈமானிய உணர்வு காரணமாக இத்தகைய தியாகங்களுக்கு அன்னையவர்கள் முன் வந்தார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த யுத்தங்களில் மட்டுமின்றி அதன் பின் நடந்த பல யுத்தங்களிலும் அன்னையவர்கள் பங்கு கொண்டு தனது வீரத்தைக் காட்டியுள்ளார்கள்.

பைஅதுர் ரிழ்வான்:

ஹுதைபிய்யாவின் உடன்படிக்கைக்குச் சற்று முன்னர் மக்கா நகருக்குள் தூதுவராகச் சென்ற உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார் என்ற வதந்ததியின்  பின் ஒரு மரத்தடியில் அங்கிருந்த அனைத்து முஸ்லிம்களும் உயிருள்ளவரை போராடுவோம் என்று செய்த பைஅத் இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமானதாகும். இந்த பைஅத்தில் பங்கேற்றோர் பற்றி அருள் மறை அல்குர்ஆனில் முஃமின்கள் மரத்தடியில் உம்மிடம் பைஅத் செய்ததை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களது உள்ளத்தில் இருப்பதை அறிந்து அவர்கள் மீது அமைதியையும் இறக்கி வைத்தான்.. .. .. (48:18) என்று கூறுகின்றான்.

நபி (ஸல்) அவர்களும் இந்த பைஅத்தில் பங்கேற்ற எவரும் நரகம் நுழைய மாட்டார்கள் என்று புகழ்ந்துரைத்துள்ளார்கள். சிறப்பு மிக்க இந்நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றுள்ளார். இது அன்னையவர்களுக்கு மேலும் சிறப்பை ஈட்டிக் கொடுத்த நிகழ்ச்சியாகும்.

தியாகம்:

பெண்கள் இயல்பிலேயே நாமுண்டு நம் வேலையுண்டு என்ற குணம் கொண்டவர்கள். தம் உறவுக்காரர்கள் கூட பொதுப் பிரச்னைகளில் தலையிடுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். இவ்வாறே தம் கணவர், புதல்வர்கள் சிரமப்படுவதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது. அதுவும் பொது வேலைகளுக்காகச் சிரமப்படுவதென்றால் நச்சரித்துக் கொண்டேயிருப்பர். ஆனால் உம்மு அம்மாரா (ரலி) அவர்கள் அப்படியிருக்கவில்லை. தன்னிருமகன்களையும் இறைவழியில் இழந்தார்கள். அதில் இன்பமும் கண்டார்கள்.

நபி (ஸல்) அவர்களது காலத்திலேயே பொய்யன் முஸைலமா தன்னை நபியெனக் கூறிக் கொண்டிருந்தான். இவனிடத்தில் உம்மு அம்மாராவின் மகன் ஹபீப் பின் செய்தை நபி (ஸல்) அவர்கள் தூதுவராக அனுப்பினார்கள். அவன் ஹபீப் (ரலி) அவர்களைப் பிடித்து சித்திரவதை செய்தான். முஹம்மத் இறைத்தூதர் என்கிறாயா? எனக் கேட்க ஆம் என்றார். என்னையும் இறைத்தூதர் என நீ சாட்சி சொல்வாயா? எனக் கேட்ட போது இல்லை என மறுத்தார். இதனால் அவர் அணுஅணுவாக வதை செய்ப்பட்டார். இறுதியில் ஷஹீதானார். இந்தத் துயரச் செய்தியைக் கேள்விப்பட்டு உம்மு அம்மாரா (ரழி) தாய்ப் பாசத்தால் கலங்கினாலும் தன் மகன் இறுதி வரை உறுதி தளராது போராடி உயிர் நீத்துள்ளார் என்பதையறிந்து ஆனந்தம் கொண்டார்கள்.

யமாமாப் போர்:

நபி (ஸல்) அவர்கள் மரணிக்க அபூபக்கர் (ரலி) அவர்கள் கிலாபத்தை ஏற்ற போது முஸைலமாவின் கெடுபிடிகள் அதிகரித்தன. இதனால் முஸைலமாவுக்கெதிராக அபூபக்கர் (ரலி) யுத்தப் பிரகடனம் செய்தார்கள். அந்நேரத்தில் சற்று வயது சென்றிருந்த அன்னையவர்கள் தானும் இந்த யுத்தத்தில் பங்கேற்க அனுமதி கோரிய போது அன்னையின் வீரத்தையறிந்திருந்த அபூபக்கர் (ரலி) அவர்கள் அங்கீகரித்தார்கள். எனவே, தனது அடுத்த மகன் அப்துல்லாஹ்வுடன் பொய்யன் முஸைலமாவின் படையை எதிர்கொள்ள காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் நீண்ட தூரப் பயணம் மேற் கொண்டார்கள்.

இந்த யுத்தத்தில் பலர் முஸைலமாவை என் கையாலேயே கொல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இ றங்கியிருந்தனர். உம்மு அம்மாரா இந்த யுத்தத்தில் நான் ஷஹீதாக வேண்டும், அல்லது முஸைலமாவை கொல்ல வேண்டும் என்ற சபதம் செய்திருந்தார்கள். தாயைப் போன்றே தனையன் அப்துல்லாஹ்வும் தன் உடன் பிறந்த சகோதரனின் உடலைச் சிதைத்து உயிரைக் குடித்த முஸைலமாவைப் பழிதீர்க்க வேண்டுமெனக் கங்கணம் கட்டியிருந்தார்.

உஹது யுத்தத்தில் காபிர்கள் அணியிலிருந்து ஹம்ஸா (ரலி) அவர்களை அம்பெறிந்து வீழ்த்திய வஹ்ஷி என்பவரும் இஸ்லாத்தை ஏற்றிருந்தார். தான் ஏற்கனவே சிறந்த மனிதரான ஹம்ஸாவைக் கொன்றதற்கு ஈடாக மனிதர்களில் மோசமானவனான முஸைலமாவைக் கொல்ல வேண்டுமென அவர் எண்ணி யுத்தத்திற்கு வந்திருந்தார்.

இதன்படி வஹ்ஷி (ரலி) அம்பெறிய, உம்மு அம்மாராவின் மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் வாளாள் வெட்ட முஸைலமா என்ற பொய்யனின் அட்டகாசம் அடங்கியது.

இந்த யுத்தத்தில் உம்மு அம்மாரா (ரலி) அவர்கள் தனது புதல்வர் அப்துல்லாஹ்வையும் இழந்தார்கள். உடம்பெங்கும் பன்னிரெண்டு வெட்டுக் குத்துக் காயங்களுக்கு அன்னையவர்கள் ஆளானார்கள். இது மட்டுமின்றி அன்னையவர்களின் ஒரு கரம் முற்றாகவே இந்த யுத்தத்தில் துண்டாடப்பட்டது.

இறை பாதையில் இரு மைந்தர்களை இழந்தார்கள். உடம்பெல்லாம் தழும்புகளைத் தாங்கினார்கள். ஒரு கையையும் இழந்தார்கள். இத்தனை தியாகங்களையும் அல்லாஹ்வுக்காக இஸ்லாத்தின் வளர்ச்சியில் கொண்ட பற்றால் செய்தார்கள்.

இந்த வீரப் பெண்மணியுடன் ஒப்பிடும் போது நாமெல்லாம் அவரின் கால் தூசிக்கும் சமமாகுவோமா என்பது ஐயமே! ஒரு பெண்ணாக இருந்த சமூகப் போராட்டத்தில் இவர்கள் பங்கேற்றுள்ளார்கள். நாமோ ஒதுங்கிப் பதுங்கிச் செல்லும் போக்கைக் கைக் கொள்கிறோம்.

வன்முறையும் இன, மத வெறியும் தூண்டப்படும் பெண்கள் பகிரங்கமாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் இந்த அநாகரீக காலத்தில் வாழும் பெண்களிடம் அன்னை உம்மு அம்மாராவின் வீரமும் துணிவும் மிக மிக அவசியமாகும்.

உம்மு அம்மாரா (ரலி) அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் படிப்பினையாகக் கொண்டு எம் வாழ்வைச் செப்பனிட நாம் கடமைப்பட்டுள்ளோம். எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பெண்மணிக்கு வழங்கிய சிறந்த குணங்களை எமக்குத் தந்தருள்வானாக! ஆமீன்
أحدث أقدم