கன்ஸா பின்த் அம்ர் (ரலி)
கன்ஸா பின்த் அம்ர் (ரலி) அவர்கள் அரபி இலக்கிய உலகில் புகழ் பெற்ற பெண் கவிஞர். குறிப்பாக இரங்கற்பா இயற்றுவதில் அவர்களுக்கிருந்த தனிப் புலமையை அனைத்துக் கவிஞர்களும் அன்று மட்டுமல்ல, இன்றும் போற்றுகின்றார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு நபிப் பட்டம் வழங்குவதற்கு சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பிறந்த கன்ஸா (ரலி) அவர்கள், அன்று நிலவிய அஞ்ஞான சமூக அமைப்பையும், பிறகு இஸ்லாத்தைத் தழுவி, அதன் ஏற்றமிகு ஆட்சியையும் சீர்மிகு கொள்கைகளின் சிறந்த பலன்களையும் கண்டவர்கள்!
கன்ஸா (ரலி) அவர்களுடைய வாழ்க்கையின் இரு காலகட்டங்களையும் - அறியாமைக்கால வாழ்க்கையையும் இஸ்லாமிய வாழ்க்கையையும் ஆராயும்போது ஒரு மனிதனின் சிந்தனை தெளிவடைந்து, கொள்கை மாற்றம் ஏற்பட்டுவிட்டால் அவனுள் எத்துணை உறுதியான புரட்சி தோன்றிவிடுகிறது என்பது தெளிவாகப் புரிய வருகிறது. மேலும், இஸ்லாமிய வாழ்க்கைக்கும் இஸ்லாமல்லாத வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடும், இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ளும் ஒருவன் அதன் அறிவுரைகளின் காரணத்தால் எத்துணைப் பொறுமையாளனாகவும் நன்றியுணர்வு கொண்ட நல்லடியானாகவும் ஆகிவிடுகின்றான் என்பதும் தெளிவாகின்றன!
கன்ஸா (ரலி) அவர்களுடைய முந்தைய – பிந்தைய இரு வாழ்க்கை முறைகளையும் இப்பொழுது காண்போம்.
அறியாமைக்கால வாழ்க்கை:
கன்ஸா (ரலி) அவர்களின் தந்தை அம்ர், பனூ ஸுலைம் கோத்திரத்தின் தலைவர். அவர் தன்னுடைய பணபலம், தலைமைப் பதவி ஆகியவற்றினால் மக்களிடையே நல்ல செல்வாக்கும் மதிப்பும் பெற்றிருந்தார். கன்ஸா அவர்களைத் தவிர முஆவியா, ஸக்ர் என்ற இரண்டு மகன்களும் அவருக்கு இருந்தார்கள்.
தன்னுடைய பிள்ளைகள் அனைவரையும் அன்போடும் பரிவோடும் வளர்த்தார். அவர்கள் எல்லாத் திறமைகளையும் பெற்றுத் திகழ்வதுடன் நற்குணமுடையவர்களாகவும் வளர்ந்து வரவேண்டும் என்பதில் தனிக்கவனம் செலுத்தினார்.
அம்ர் தம்முடைய பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து தம் மனதில் எழுப்பிக் கொண்டிருந்த ஆசைகள் அனைத்தையும் அவருடைய குறைந்த ஆயுள் இடித்துத் தகர்த்தது. ஆம்! கன்ஸா (ரலி) அவர்கள் பால்முகம் மாறாத சிறுமியாய் இருந்தபோதே அம்ர் உலகை விட்டு விடைபெற்றுச் சென்றார்.
தந்தையின் பிரிவினால் கன்ஸா (ரலி) அவர்கள் கடும் துயரத்திற்கு ஆளானார்கள். உள்ளம் நொந்து உடல் உருகலானார்கள். தந்தையின் திடீர் பிரிவினால் வாடி வதங்கிய கன்ஸா (ரலி) அவர்களை ஆறுதல் கூறித் தேற்றியது இரு சகோதரர்களும்தான்! தந்தையை விடவும் அதிகமாக பாசமழை பொழிந்து தம் தங்கையைப் பாதுகாத்து வந்தார்கள். அவ்விருவரின் பரிவான அரவணைப்பில் தந்தையின் பிரிவை மறந்து, கவலை நீங்கி இயல்பு நிலை அடைந்தார்கள் கன்ஸா (ரலி) அவர்கள்.
அவர்கள் பருவம் அடைந்ததும் அவர்களின் இரு அன்புச் சகோதரர்களே அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். பனூ ஸுலைம் எனும் அவர்களுடைய கோத்திரத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர்தான் மணமகன். அவருடன் வாழ்ந்து ஓர் ஆண்மகனை பெற்றெடுத்ததும் அவர் மரணமடைந்தார். பிறகு கன்ஸா (ரலி) அவர்கள் மர்தாஸ் இப்னு அபீ ஆமிர் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்கள். அவரின் மூலம் அம்ர், ஜைத், முஆவியா எனும் மூன்று மகன்களையும் உம்றா எனும் ஒரு மகளையும் பெற்றெடுத்தார்கள். பிறகு மர்தாஸும் நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தார்.
அதன்பிறகு கன்ஸா (ரலி) அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. விதவையாகவே வாழ்நாளை கழித்து வந்தார்கள்! இந்நிலையிலும் அவர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் அன்போடு கவனித்துப் பாதுகாப்பதில் அவர்களின் இரு சகோதரர்கள் எவ்வித குறையும் வைக்கவில்லை. சகோதரர்களின் அன்பாதரவில் கவலை மறந்திருந்த கன்ஸா (ரலி) அவர்கள் தம் பிள்ளைகளை வளர்ப்பதிலும் அவர்களுக்கு ஒழுக்கப் பயிற்சி அளிப்பதிலும் முழுமையாக ஈடுபட்டு வந்தார்கள்.
கன்ஸா (ரலி) அவர்கள் முன்பே கவிபாடுவதில் திறன் மிக்கவர்களாய் இருந்தாலும் அவர்களின் கவிதைக்கு புது வேகத்தையும் கவர்சியையும் கொடுத்தது அவர்களுடைய சகோதரர்களின் மரணம்தான்! தம் சகோதரர்களின் நினைவாக இரங்கற்பாக்களை இயற்றி, சென்ற இடமெல்லாம் அவற்றைப் பாடினார்கள். அவர்களுடைய அந்தக் கவிதைகள் அரபி இலக்கிய உலகில் இன்றும்கூட போற்றப்படுகின்றன. அவை மிக உயர்வானவை, நயமிக்கவை என்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அவருடைய சகோதரர்கள் மரணம் அடைந்தது எப்பேர்து?
அரபிகளின் போர் ஒரு தொடர்கதை:
அன்றைய அரபிகள் இறைவனின் வழிகாட்டலை இழந்து மனஇச்சையின் அடிப்படையில் தம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டதால் பலவிதமான சிக்கல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாகியிருந்தார்கள். எந்த அளவுக்கெனில், ஒரு சிறு பிரச்சனை எழுந்தாலும் வாளின் முனையில்தான் அதற்குத் தீர்வு காண முடியும் என்றாகிவிட்டிருந்தது! அதனால் தனிப்பட்டவர்களுக்கிடையிலும், குலங்களுக்கிடையேயும் நீண்ட நெடிய போர்கள் மூண்டு ஒருவருக்கொருவர் வெட்டி மாய்த்துக் கொண்டிருந்தார்கள்!
ஒரு முறை கன்ஸா (ரலி) அவர்களின் கோத்திரத்திற்கும் பனூஅஸத் என்ற கோத்திரத்திற்கும் மோதல் ஏற்பட்டு, பிறகு அது பெரியதொரு போராய் வெடித்தது. அதில் அவர்களின் சகோதரர் முஆவியா கொல்லப்பட்டார். அதற்குப் பழிவாங்குவது தொடர்பான சண்டையில் மற்றொரு சகோதரர் ஸக்ர் அம்பினால் தாக்கப்பட்டு பலத்த காயத்திற்கு ஆளாகி படுத்த படுக்கையானார்!
ஒரு சகோதரனை அநியாயமாக இழந்த கன்ஸா (ரலி) அவர்கள், மற்றொரு சகோதரனையாவது எப்பயாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று பெரிதும் முயற்சி செய்தார்கள். தமது உடல்நிலையைக்கூட கவனிக்காமல், உரிய சிகிச்சையளித்துப் பணிவிடைகள் செய்வதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். ஆனாலும் ஸக்ர் குணமடையவில்லை. படுத்த படுக்கையாய்க் கிடந்து இறுதியில் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுச் சென்று விட்டார்.
அளவு கடந்த துக்கமும் ஆண்டவனின் மீது அவநம்பிக்கையும்:
கன்ஸா (ரலி) அவர்கள் தம்முடைய இரு சகோதரர்களின் மீதும் அளவு கடந்த அன்பு கொண்டிருந்தாலும் ஸக்ரின் மீதுதான் உயிரையே வைத்திருந்தார்கள். அவருடைய வீரம், கொடைத்தன்மை மற்றும் பிற நல்ல அம்சங்கள் ஆகியன அவர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தன. ஆகையால் ஸக்ரின் மரணம் அவர்களின் இதயத்தையே நொருக்கி விட்டது. இரவு பகல் எந்நேரமும் அவர்களின் கண்கள் கண்ணீர் வடித்துக் கொண்டே இருந்தன!
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஸக்ரைப் பற்றிய பசுமையான எண்ணங்களில் சஞ்சரித்த அவர்களின் சிந்தனைக்கு ‘வடிகால்’ தேவைப்பட்டது. அதுதான் இரங்கற்பாவாக வடிவம் பெற்றது. அவர்களின் நாவிலிருந்து வெளிப்பட்ட பாடல்களைப் பொது மன்றங்களில் சமர்ப்பித்தார்கள். இதயமே உருகி ஓடும் வண்ணம் கடும் சோகத்துடன் பாடுவார்கள். தாமும் அழுவார்கள். கேட்போரையும் அழவைத்து விடுவார்கள்.
அப்படி அழும்போது தம் சகோதரரை நினைத்து அவர் காட்டிய அன்பை – பாசத்தை எண்ணியெண்ணி... உள்ளம் நொந்து, நிலைகுலைந்து நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறுவார்கள். அருகில் உள்ள கற்களிலும் சுவர்களிலும் தலையால் மோதிக் கொள்வார்கள். “ஐயகோ!” என்று பெருங்கூக்குரலிட்டு அலறி ஒப்பாரி வைப்பார்கள். அதைக்கேட்ட, பார்த்த மக்களெல்லாம் அலறினார்கள். எதிரிகள் கூட அதைக்கேட்டு கன்ஸா (ரலி) அவர்கள் மீது இரக்கப்படலானார்கள்!
கன்ஸா (ரலி) அவர்கள் இவ்வளவு தூரம் மனவேதனைப் பட்டு அழுது புலம்பியதற்கு அன்றைய அறியாமைக்கால சமூக அமைப்பும் அதன் தவறான நடைமுறைகளுமே காரணமாகும். அன்று கன்ஸா அவர்களும் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள்தாம். என்றாலும் பல தெய்வ வழிபாட்டினாலும் அதன் அடிப்படையிலான கண்மூடித்தனமான போக்குகாளாலும் கன்ஸா (ரலி) அவர்களின் கடவுள் நம்பிக்கைகூட எடுபட்டுப் போயிருந்தது. ஆகையால்தான் தமது வாழ்வுக்கும் மகிழ்வுக்கும் தம்முடைய சகோதரர் ஸக்ர்தான் மூலகாரணம் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அன்று அவர்கள் பாடிய பின்வரும் கவிதை வரிகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன.
“(ஸக்ரே) நீ உயிருடன் இருந்தபோது உனது ஆதரவு கொண்டுதான் துன்பங்கள் துயரங்களை விட்டு என்னை நான் தற்காத்துக் கொண்டிருந்தேன். ஐயகோ! இப்போது இப்பெருந் துன்பத்தை அகற்றுவதற்கு யார் இருக்கிறார்?”
இஸ்லாத்தைத் தழுவுதல்:
உலகில் இறைவன் தன் படைப்பினங்களின் மீது கொண்டுள்ள பரிவும் கிருபையும் அளவிட முடியாதவை. துன்பங்களைக் கொடுத்து சோதனைக் குள்ளாக்குவதும் அவனே. அவற்றைக் கழைந்து இன்பங்களை வழங்கும் ஆற்றலும் அவனிடமே உள்ளது எனும் உண்மையை அறியாதிருந்த காரணத்தால், தம்முடைய அன்புச் சகோதரர்களின் பிரிவு குறித்து சதா அழுது புலம்பிக் கொண்டும், இனி நம்மைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லையே என்று அலட்டிக் கொண்டும் திரிந்த கன்ஸா அவர்களின் வாழ்க்கைப் போக்கு சத்திய நெறியாம் இஸ்லாத்தின் பக்கம் திரும்பலானது. அதற்கான நல்ல சூழ்நிலை மலர்ந்தது!
அண்ணல் நபி (ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பிறகு அங்கு சிறிய அளவில் ஓர் இஸ்லாமிய அரசு நிறுவப்பட்டது. மதீனா நகரம் அதன் மையக்கேந்திரமாய்ச் செயல்படலானது. அப்பொழுது சத்திய இஸ்லாத்தின் அழைப்பு அரபு நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பரவியது. கன்ஸா (ரலி) அவர்களின் காதுக்கும் எட்டியது!
சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் இயல்பை அல்லாஹ் கன்ஸா (ரலி) அவர்களுக்கு வழங்கியிருந்தான். ஏகத்துவ அழைப்பைச் செவியேற்றதும் அவர்களின் உள்ளத்திலும் சிந்தையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ஏகத்துவக் கருத்துக்களின் எளிமையும் தெளிவும் அவர்களைப் பெரிதும் கவர்ந்தன. அதே நேரத்தில் பல தெய்வக் கொள்கை, அது தொடர்பான நடைமுறைகள், அவற்றால் மனித வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தீராத சீர்குலைவுகள் ஆகிய அனைத்தையும் ஆழமாக அணுவளவும் மனமாச்சரியத்திற்கு இடமளிக்காமல் சிந்தித்தார்கள். பலதெய்வக் கொள்கையில் குழப்ப நிலையைத்தான் கண்டார்கள். ஆகையால் இறைத்தூதரைச் சந்தித்து, இஸ்லாத்தைக் குறித்து தெளிவான விளக்கம் பெற்று அதில் இணைந்திட முடிவு செய்தார்கள்.
கன்ஸா (ரலி) அவர்கள் தம்முடைய குலத்தைச் சேர்ந்த சிலரையும் அழைத்துக்கொண்டு மதீனா நோக்கிப் புறப்பட்டார்கள். பயணத்தின் கஷ்ட, நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் ‘மைல்’கள் பல கடந்து மாநபி (ஸல்) அவர்களின் இல்லம் வந்தடைந்தார்கள். அப்போதே இஸ்லாத்தை உளப்பூர்வமாக விரும்பி ஏற்றுக் கொண்டார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கன்ஸா (ரலி) அவர்களுடனும், அவர்களுடன் வந்த குழுவினருடனும் வெகு நேரம்வரை உரையாடிக் கொண்டிருந்தார்கள். கருத்தாழத்துடனும் பொருள் நயத்துடனும் தெளிவாகப் பேசும் கன்ஸா (ரலி) அவர்களின் பேச்சின் இடையிடையே ‘சபாஷ் கன்ஸா’ என்று நபியவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். அந்த அளவுக்கு – அரபி இலக்கியத்தில் கைதேர்ந்த கன்ஸா (ரலி) அவர்களின் பேச்சுக்களில் நல்ல கவர்ச்சி இருந்தது. அவர்களிடம் அமையப் பெற்ற இத்தகைய பேச்சுவன்மை அவர்கள் மேற்கொண்ட இஸ்லாத்தின் அழைப்புப்பணியில் நல்ல பயனை விளைவித்தது.
ஆம்! கன்ஸா (ரலி) அவர்கள் தம் குலத்தார்களிடம் திரும்பிச் சென்று, அவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி எடுத்துச் சொன்னபோது எண்ணற்ற மக்கள் அவர்களின் பிரச்சாரத்தால் தெளிவடைந்து இஸ்லாத்தில் சேர்ந்தார்கள்.
அவ்வப்போது மதீனா நகர் வந்து மாநபி (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தைக் குறித்து மேலும் விளக்கங்களையும், அறிவுரைகளையும் பெற்றுச் செல்வது கன்ஸா (ரலி) அவர்களின் வழமையாய் இருந்தது. அதற்கேற்ப நபியவர்கள் மரணமான பிறகும் மதீனா வருவார்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்து பேசிக் கொண்டிருப்பார்கள். அப்போது முன்பு தம்முடைய சகோதரர்களுக்கு நடந்த கதியை எடுத்துச் சொல்வார்கள். அவர்களின் பெயரில் தாம் பாடிய இரங்கற்பாக்களையும் படித்துக் காட்டுவார்கள். அந்நேரத்திலும் அவர்களின் துக்கமும், சோகமும் வெளிப்படும். பொறுமையைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவறுத்துவார்கள்.
இஸ்லாத்தைத் தழுவியதால் ஏற்பட்ட மாற்றங்கள்:
இவ்வாறு - இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகும் தம் சகோதரர்களின் பசுமையான நினைவால், குறிப்பாக ஸக்ரின் பாசத்தால் அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த கன்ஸா (ரலி) அவர்களை, அறியாமைக் காலத்தின் தவறான பழக்கம் ஒன்றும் தொற்றிக் கொண்டிருந்தது. அதாவது தம்முடைய கூந்தலின் ஒரு பகுதியை ஒருவிதமாக அள்ளி முடித்து கொண்டை போட்டிருந்தார்கள். அது ஸக்ரின் மீதான துக்கத்தை வெளிப்படுத்தக் கூடியதாய் இருந்தது. அளவுகடந்த கவலையை வெளப்படுத்துவதற்கு அன்றைய அறியாமைக்கால அரபிகள் இப்படிச் செய்வது வழக்கம்.
இஸ்லாத்திற்கு முரணான இந்த வழக்கத்தையும் அவர்களைக் கைவிடச் செய்தது பற்றி வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி கூறப்படுகிறது:
ஒருமுறை கன்ஸா (ரலி) அவர்கள் தலையில் இந்தக் கொண்டையுடன் கஅபா ஆலயத்தை தவாஃப் - சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அதைக் கண்ணுற்ற கலீஃபா உமர் (ரலி) அவர்கள் கன்ஸா (ரலி) அவர்களை அழைத்து “இப்படித் துக்கம் கொண்டாடுவதற்கு, தலையில் கொண்டை போடுவதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கவில்லை” என்று எடுத்துச் சொன்னார்கள்.
“இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே, என்னைப் போன்று எந்த ஒரு பெண்ணுக்கும் இவ்வளவு கொடுமையான துன்பமும் துயரமும் ஏற்பட்டிருக்காது. என் சகோதரர்களின் இழப்பால் ஏற்பட்ட இத்துன்பத்தை நான் எவ்வாறு சகித்துக் கொள்வேன்!” என்று கன்ஸா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் ஆறுதல் அளித்தவாறு கூறினார்கள்:
“இவ்வுலகில் மக்கள் இதனை விடவும் பெரிய பெரிய துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். வேண்டுமானால், கொஞ்சம் அவர்களின் உள்ளத்தைப் பிளந்து பாருங்கள்! இஸ்லாம் தடைசெய்துள்ளதை மேற்கொள்வது இறைவனுக்கு மாறு செய்வதாகும்.
இதன் பிறகு கன்ஸா (ரலி) அவர்கள் அவ்வாறு கொண்டை போட்டுக் கொள்வதைக் கைவிட்டு விட்டார்கள். ஸக்ரைப் பற்றி அவர்கள் அழுது புலம்புவதும் வெகுவாகக் குறைந்தது. பிறகு பாடிய ஒரு சில கவிதைகளில் இஸ்லாமியச் சிந்தனையும் கொள்கையும் இடம்பெற்றிருந்தன. அவற்றுள் ஒன்றுதான் இது:-
குன்து அப்கீ லஹு மினஸ் ஸஃரி
வ அனல் யெவ்ம அப்கீ லஹு மினந் நாரி
அதாவது முன்பு நான் ஸக்ருக்காகப் பழிவாங்குவது குறித்து அழுத் கொண்டிருந்தேன்! இப்பொழுது அவர் (தவறான கொள்கையில் இருக்கும் நிலையில் கொல்லப்பட்டு விட்டாரே, ஆகையால்) நரகில் அல்லவா தள்ளப்படுவார் என்பதற்காக அழுகின்றேன்.
உமர் (ரலி) அவர்களின் பாராட்டு:
கன்ஸா (ரலி) அவர்களுக்கு இவ்வாறு இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் நல்ல பிடிப்பும் உறுதியும் படிப்படியாக ஏற்பட்டு வந்தன. மறுமை வெற்றியை மட்டுமே வாழ்க்கையின் முழு இலட்சியமாகக் கொண்டு வாழலானார்கள்.
கலீஃபா உமர் (ரலி) அவர்களின் சகோதரர் ஜைதுப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு போரில் ஷஹீதானார்கள். அவர்கள் இறை அச்சமும் ஒழுக்கமும் கொண்ட உத்தமராய்த் திகழ்ந்தார்கள். இப்படி வாய்மையுடன் வாழ்ந்த தம் சகோதரர் மீது கலீஃபா உமர் (ரலி) அவர்கள் அளவுகடந்த அன்பு வைத்திருந்தார்கள். அவருடைய திடீர் மரணத்தால் பெரும் துக்கத்திற்கும் துயரத்திற்கும் ஆளானார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் கலீஃபாவைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கன்ஸா (ரலி) அவர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் தம் பாசத்திற்குரிய சகோதரர் மீது இரங்கற்பா எழுதித் தருமாறு உமர் (ரலி) அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதனை ஏற்றுக் கருத்தாழமிக்க - இலக்கிய நயம் செறிந்த கவிதைகளைப் பாடினார் கன்ஸா (ரலி) அவர்கள்!
இஸ்லாத்தைத் தழுவிய பிறகு, இறைப்பற்று மற்றும் மறுமை நம்பிக்கை ஆகியவற்றில் எவ்வளவு உறுதியான நிலையை அடைந்துவிட்டிருந்தார்கள் என்பதற்கு அக்கவிதைகளிலிருந்து இதோ சில வரிகள்:-
“இறைவன் மீது சத்தியமாக
ஸக்ர், முஆவியா மீது
ஒருபோதும் நான் அழுதுகொண்டு
திரிந்திருக்க மாட்டேன் -
அவர்கள்
ஜைதைப் போன்று மரணமடைந்திருந்தால்!
கன்ஸா (ரலி) அவர்கள் எத்துணை உண்மையைக் கூறினார்கள்! அவர்களின் இரு சகோதரர்கள் ஸக்ரும், முஆவியாவும் குஃப்ர் - இறைவனை நிராகரிக்கும் நிலையில் கொல்லப்பட்டார்கள். ஆனால் உமர் (ரலி) அவர்களின் சகோதரர் ஜைத் (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக நடைபெற்ற போரில் இறைவழியில் மரணத்தைச் சந்தித்தார்கள். ‘ஷஹீத்’ எனும் இறைவனுக்கு உவப்பான பதவியை – மிக உயர்ந்த மறுமைப் பேற்றினை ஈந்து தரக்கூடிய மகத்தான அந்தஸ்தை அடைந்தார்கள்!
இதனைச் செவியுற்றதும் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் உற்சாக மேலீட்டால் தம்மையும் அறியாமல் “என்னுடைய சகோதரர் குறித்து கன்ஸாவை விடச் சிறப்பாக வேறு யாரும் ஆறுதல் மொழி கூறவில்லை” என உரக்கக் கூறினார்கள்.
பிள்ளைகளுக்கு ஊக்கமளித்தல்:
அன்னை கன்ஸா (ரலி) அவர்களின் உறுதியான இறைநம்பிக்கையையும், தம்முடைய உயிர் உடமைகளையும் ஏன், பாசத்திற்குரிய பிள்ளைச் செல்வங்கள் அனைத்தையும், இறைவழியில் அர்ப்பணிக்கும் அவர்களின் தியாக மனப்பான்மையையும் எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்ச்சி காதிஸிய்யா போரின் போது நிகழ்ந்தது. இது கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஈராக் நாட்டில் நடைபெற்ற முக்கியமான போராகும்.
இதில் அன்றைய ஈரான் அரசாங்கம் சுமார் இரண்டு இலட்சம் போர் வீரர்கள் கொண்ட பெரும் சேனையையும் பெரியதொரு யானைப் படையையும் முஸ்லிம்களுக்கு எதிராக அனுப்பி வைத்திருந்தது. முஸ்லிம்களின் படையோ சுமார் 30-ல் இருந்து 40 ஆயிரம் வரையிலான வீரர்களை மட்டும் பெற்றிருந்தது.
அப்போது கன்ஸா (ரலி) அவர்களும் ஜிஹாதின் - இறைவழிப் போராட்டத்தின் ஆர்வமிகுதியால் களம் நோக்கிப் புறப்பட்டார்கள். போர்த்திறனும் இளமைத் துடிப்பும் மிக்க தம்முடைய நான்கு மகன்களையும் உடன் அழைத்து வந்திருந்தார்கள்.
முதல் நாள் முன்னிரவில் அனைத்து வீரர்களும் சிந்தனை வயப்பட்டிருந்தனர். மறுநாள் விடிந்ததும் நடைபெற உள்ள பயங்கரமான காட்சியைத் தங்களின் மனத்திரையில் ஓடவிட்டுக் கொண்டு மௌனத்தில் ஆழ்ந்திருந்தார்கள். ஆனால் அங்கே களத்தின் ஓர் ஓரத்தில் அன்னை கன்ஸா (ரலி) அவர்கள் தம்முடைய நான்கு புதல்வர்களையும் அருகே அழைத்து அமர்த்தி ஓர் உணர்ச்சிமிகு உரையைத் தொடங்குகின்றார்கள்.
“என்னுடைய அருமந்தப் புதல்வர்களே! நீங்கள் சுய விருப்பமுடனும் மகிழிச்சியுடனும்தான் இஸ்லாத்தை ஏற்றிருக்கின்றீர்கள், விரும்பித்தான் ஹிஜ்ரத்தை மேற்கொண்டீர்கள். எந்த இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ – எவன் என்றென்றும் நிலைத்திருப்பானோ அந்த இறைவன் மீது சத்தியமாக! எவ்வாறு நீங்கள் ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறந்தீர்களோ – அவ்வாறே ஒரே தந்தைக்குப் பிறந்த சகோதரர்களாய் இருக்கின்றீர்கள். நான் உங்களின் தந்தைக்குத் துரோகம் செய்யவுமில்லை. உங்களின் மாமனார்களை இழிவு படுத்தவும் இல்லை. உங்களுடைய பரம்பரை மாசற்றது. உங்களுடைய குலம் குற்றமற்றது.
என் அன்புச் செல்வங்களே! இறைவழியில் ஜிஹாத் செய்வதை விடவும் அதிகமான நம்மையைப் பெற்றுத் தரும் காரியம் வேறொன்றும் இல்லை என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். மேலும் மறுமையின் நிலையான வாழ்க்கை, அழியும் இவ்வுலக வாழ்க்கையைவிட எவ்வளவோ சிறந்ததாகும் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்!
அல்லாஹ் கூறுகின்றான்:-
“இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையைக் கைக்கொள்வீர்களாக! அசத்தியவாதிகளுக்கு எதிரில் உறுதியாக நிலைத்து நிற்பீர்களாக! (சத்தியத்திற்காகத் தொண்டு புரிய) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருப்பீர்களாக! மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சியே வாழ்வீர்களாக! இதனால் நீங்கள் வெற்றியாளர்களாய்த் திகழக்கூடும். (3:200)
என் அருமைப் புதல்வர்களே! போர் சூடுபிடிக்க ஆரம்பித்து அதன் தீ கொழுந்து விட்டெரியத் தொடங்குவதை நீங்கள் கண்டதும் கிளர்ந்தெழுந்து – ஆர்ப்பரித்து எதிரிகளின் அணிகளிடையே ஊடுருவிச் செல்ல வேண்டும். இறைவழியில் பித்துப்பிடித்தவர்களாக வாட்களைச் சுழற்றித் தாக்குதல் தொடுத்திட வேண்டும். அல்லாஹ்விடம் உதவிகோரிப் பிரார்த்தனை புரிந்த வண்ணம் இருங்கள். வெற்றி கிட்டினால் அது நல்லது. ஆனால், மரணம் அடைந்திட நேர்ந்தால், மறுமையின் சிறப்பற்குரியவர்களாய் ஆவீர்கள் என்பது அதைவிடவும் மிக உயர்வானதாகும்.
மறுநாள் காலையும் போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது அந்த நான்கு புதல்வர்களும் தங்களுடைய தாயின் அறிவுரைக்கு ஏற்ப வீராவேசத்துடன் எதிரிப்படையினர் மீது ஊடுருவி தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தார்கள். வெகுநேரம் வரை அயராமல் சுழன்று சுழன்று தீர்க்கமாகப் போர் புரிந்து கொண்டிருந்தார்கள். இறுதியில் ஒருவர் பின் ஒருவராக ஷஹீதாக்கப்பட்டார்கள்.
தம்முடைய புதல்வர்கள் போரில் வீரமரணம் அடைந்த செய்தியை அன்னை கன்ஸா (ரலி) அவர்கள் கேள்விப்பட்டதும், “என்னுடைய புதல்வர்களுக்கு ‘ஷஹாதத்’ எனும் உயர்ந்த பதவியை வழங்கிய இறைவனுக்கு நன்றி உரித்தாவதாக! அல்லாஹ்வுடைய அருளின் நிழலில் என்னுடைய பிள்ளைகளை நான் சந்திப்பேன் எனும் நம்பிக்கை – அவனுடைய கருணையால் எனக்கு உள்ளது.
அன்று தம்முடைய சகோதரர்களின் பிரிவால் அழுது புலம்பிக்கொண்டு அளவு கடந்த துக்கத்தையும் மனவேதனையையும் வெளிப்படுத்தியவாறு அலைந்து திரிந்த அதே கன்ஸா (ரலி)தான் - இப்போது தங்களின் அன்பிற்குரிய புதல்வர்கள் போரில் மரணமடைந்த செய்தியைக் கேட்டதும் இறைவனுக்கு நன்றி செலுத்திப் பெருமைப்பட்டுக் கொள்கின்றார்கள். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளும் அதன் அழுத்தமான அறிவுரைகளும் கன்ஸா (ரலி) அவர்களை எந்நிலையிலிருந்து எந்நிலைக்கு உயர்த்திக்கொண்டு வந்துள்ளது என்பதை அறிபவர் எவரும் இஸ்லாத்தின் ஆற்றல் குறித்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.
கன்ஸா (ரலி) அவர்களின் வீரமிக்க இந்நான்கு புதல்வர்களும் காதிஸிய்யாப் போரைத் தவிர, அதற்கு முன் நடைபெற்ற வேறு பல போர்களிலும் கலந்து கொண்டு இஸ்லாத்திற்காக உழைத்துள்ளார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டு தோறும் அரசின் சார்பில் 200 வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்தப் போரில் அவர்கள், உதவித் தொகை முழுவதையும் அவர்களின் அன்னை கன்ஸா (ரலி) அவர்களுக்குத் தொடர்ந்து வழங்கப்படுவதற்கு ஏற்பாடு செய்தார்கள்.
படிப்பினை:
மரியாதைக்குரிய கன்ஸா (ரலி) அவர்களின் புகழ்மிக்க வாழ்க்கையில் பல படிப்பினைகள் உள்ளன. குறிப்பாக ஏகத்துவக் கொள்கைக்கு முரணான சமூக அமைப்பில் பிறந்து, அதன் தவறான நடைமுறைகளில் ஊறித் திளைத்து விட்டவர்களுக்கு நல்ல முன்மாதிரி உள்ளது.
பாருங்கள்! அன்றைய அறியாமைக்கால சமூக அமைப்பு ஆண்டாண்டு காலமாக நடைமுறைப்படுத்தி வைத்திருந்த மௌட்டீகக் கொள்கைகளிலும் அநாச்சாரங்களிலும் கன்ஸா (ரலி) அவர்கள் எவ்வளவுதான் பழகிப் போய் விட்டிருந்தாலும் இஸ்லாமிய அழைப்புப் பணி ‘சத்தியம் இதுதான்’ என்று அவர்களின் முன் தெளிவுபடுத்தியபோது எவ்விதத் தயக்கமுமின்றி அதனை ஏற்றுக் கொண்டார்கள். முதலில் ஏகத்துவக் கொள்கையை உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள். பிறகு தம்மிடம் இருந்துவந்த சில தவறான பழக்கங்களை இறைநம்பிக்கையின் வலிமை கொண்டு படிப்படியாகக் களைந்து, தமது வாழ்க்கையைப் புனிதப்படுத்தி முழுமையாக சீர்திருத்தம் அடையத் தொடங்கினார்கள்.
இது பாரம்பரியமாக நாம் பின்பற்றி வரும் நம்முடைய மூதாதையரின் பழக்கமாயிற்றே, அதை நாம் விட்டுக் கொடுப்பதா?” எனும் மனமாச்சரியத்துக்கு அவர்கள் ஆளாகவில்லை!
கன்ஸா (ரலி) அவர்கள் சொகுசு வாழ்கையைத் தேடி இஸ்லாத்திற்கு வரவில்லை. இஸ்லாத்தை ஏற்ற பிறகும் அவர்களின் வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. ஆயினும் பொறுமையை மேற்கொண்டு மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தைரியப்படுத்தி, சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டார்கள்.
இறுதிக் காலத்தில் இஸ்லாத்தின் வெற்றிக்காக தம் புதல்வர்கள் அனைவரையும் அவர்கள் தியாகம் செய்த சந்தர்ப்பத்தைப் பாருங்கள். போரில் அப்புதல்வர்கள் மரணம் அடைந்த செய்தியைக் கேட்டு எவ்வித சஞ்சலத்துக்கும் ஆளாகாமல் கொள்கைப்பிடிப்புடனும் நெஞ்சுரத்துடனும் அவர்கள் அளித்த பதில் இஸ்லாத்தை நேசிக்கும் - அதன் உயர்வுக்காக உழைக்க விரும்பும் அனைவர்கும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இஸ்லாமிய சமுதாயம் காலமெல்லாம் கன்ஸா (ரலி) அவர்களை நினைவு கூர்ந்து பெருமைப்பட்டு வருகின்றதெனில் அவர்கள் முற்றிலும் அதற்குத் தகுதியானவர்கள்தாம். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டு நற்கூலி வழங்குவானாக!