உம்மு உமாரா (ரலி)

உம்மு உமாரா (ரலி)

இதோ! பனுநஜ்ஜார் என்னும் அன்சாரிக் குடும்பத்தைச் சார்ந்த நுஸைபா பின்த் கஅப் (ரலி) எனும் பெண்மணி வரலாற்றில் பிரவேசிக்கின்றார். அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமே அவரைப் பற்றி தெரியும் எனும் நிலைமாறி அவருடைய வீரமும், தியாகமும் எழுச்சி மிக்க வரலாறும் அங்கிங்கெனாதபடி எங்கும் பேசப்படலாகின்றன.

ஆம்! அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் நடைபெற்ற இரண்டாவது கணவாய் உடன்படிக்கையில் அப்பெண்மணி தம் குலத்தாருடன் கலந்து கொண்ட நிகழ்சியை வரலாறு பொன் எழுத்துகளால் பதிவு செய்துள்ளது.

ஹஜ் செய்வதற்காக மக்கா நகர் வந்திருந்த அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் மதீனத்து கோத்திரத்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணியால் ஈர்கப் பெற்றார்கள். அவர்களின் அறிவுரை கேட்டு - உண்மை உணர்ந்து இறைநெறியைத் தழுவினார்கள். இந்த முதல் சந்திப்பில் இறைச் செய்தியைச் செவியேற்பதற்கும் கீழ்படிவதற்கும் அண்ணலாரிடம் உறுதிமொழி அளித்தார்கள். அடுத்து வரும் ஹஜ்ஜுக் காலத்தில் மீண்டும் சந்திப்போம் என்று வாக்குறுதியும் கொடுத்தார்கள்.

வாக்குறுதி அளித்தபடி மறு ஆண்டு ஹஜ்ஜின்போது அந்த மதீனாவாழ் மக்கள் மாநபி (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். இப்பொழுது அவர்களின் எண்ணிக்கை பன்மடங்காகப் பெருகியிருந்தது. அவர்களிடையே சகோதரத்துவ வாஞ்சையும் வாய்மையும் வலுவடைந்திருந்தன. இந்தச் சந்திப்புதான் பைஅத்துல் அகபதிஸ்ஸானியா - இரண்டாவது கணவாய் உடன்படிக்கை என்னு வரலாற்றில் பிரபலமடைந்துள்ளது. இந்தச் சந்திப்பில் இரண்டு பெண்மணிகளும் கலந்து கொண்டார்கள். ஒருவர், உம்மு அம்ர் இப்னு அதீ. இரண்டாமவர் நுஸைபா பின்த் கஅப். இவர்தான் இஸ்லாமிய எழுச்சிமிக்க வரலாற்றில் பெண்ணினத்திற்கு அழியாப் புகழை ஏற்றிவிட்டுச் சென்றிருக்கும் உம்மு உமாரா (ரலி) ஆவார்.

இந்த இரண்டாவது உடன்படிக்கையில்தான் உம்மு உமாரா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களை முதன் முறையாக சந்தித்தார்கள். அதுதான் அவருடைய புகழ்மிக்க வரலாற்றுக்குத் தோற்றுவாயாக அமைந்தது!


உடன்படிக்கையைத் தொடர்ந்து..

இந்த உடன்படிக்கையில்தான் இறைச்செய்தியை செவியேற்பதற்கும் கீழ்படிவதற்கும் - அவ்வழியில் போராடுவதற்கும் தம் குலத்தாருடன் உம்மு உமராவும் அண்ணலாரிடம் உறுதிமொழி அளித்தார்கள். அண்ணலாருக்கு எதிரிகள் எவ்விதக் கேடும் அளித்திடாமல் பாதுகாப்போம் என்றும், அண்ணலாரின் அழைப்புப்பணி வெற்றிபெறப் போராடுவோம் என்றும், அவர்களுடன் போர் புரிய வருபவர்கள் யாராக இருந்தாலும் தம் உயிரையும் உடமையையும் தியாகம் செய்தேனும் அவர்களை எதிர்த்து போர் புரிவோம் என்றும் சபதம் ஏற்றார்கள்.

இந்த உடன்படிக்கை இஸ்லாமிய அழைப்புக்கு ஒரு மகத்தான வெற்றியாக அமைந்தது. காரணம் அவ்வழைப்பைப் பரப்புவதற்கு சிறிய - ஆனால் உறுதிமிக்க முன்னணிப்படை ஒன்று அதன் மூலம்தான் உருவானது. சுதந்திரமான பூமியொன்றும் கிடைத்தது என்பது மட்டுமல்ல - அவ்வழைப்புப் பணியில் ஈடுபடப் பெண்களும் முன்வந்திருந்தார்கள்! அதற்கான போராட்டத்தில் பங்கேற்க,போராட்டக் களத்தில் ஆண்களோடு ஓரணியில் நிற்கவும் - கொண்ட கொள்கைக்காக தியாகம் செய்யவும் உறுதிமொழி அளித்திருந்தார்கள்.

தியாகங்கள் என்றால் சாமானியப்பட்டவையா? இல்லை! இவ்வுலகில் இறைவனின் மார்க்கம் மேலோங்கும்வரை தம் குடும்பத்தாரையும் சமுதாயத்தையும் எதிர்த்து நின்று, வாழ்வின் அனைத்து இன்பங்களையும் துறந்துவிட்டு தொடர் போராட்டதில் குதித்திட வேண்டும்.

உம்மு உமாரா (ரலி) அவர்களின் உள்ளத்தில் வாய்மையான ஈமானும் கொள்கைப்பிடிப்பும் இடம்பிடித்துக் கொண்டன. தமது உள்ளம் ஏற்றிருந்த இறைநம்பிக்கையை அவர்கள் மிகச் சரியாக மதிப்பிட்டிருந்தார்கள். இஸ்லாம் என்னென்ன கடமைகளை - கீழ்படிதல்களை - தியாகங்களை நாடுகின்றது என்பதை சரியாகப் புரிந்திருந்தார்கள். அதனால்தான் உம்மு உமாரா (ரலி) அவர்கள், இறைவன் அவர்கள் மீது சுமத்தியிருந்த பொறுப்பை உறுதியோடும் திடத்துடனும் ஏற்றிட அவர்களால் முடிந்தது. தனது ஈமானியக் கொள்கையை காப்பாற்றுவதற்காக தொய்வில்லாத உறுதியான போராட்டத்தை மேற்கொள்ளும் வகையில் தம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டார்கள்;.

மதீனாவுக்குத் திரும்பிச் சென்று தமது குடும்பத்தார்களையும் மதீனத்துப் பெண்களையும் சந்தித்து அவர்களை ஏகத்துவக் கொள்கையின் பக்கம் அழைக்கவும், அதுபற்றி நற்செய்தி அறிவிக்கவும் ஆயத்தமானார்கள்!

உம்மு உமாரா (ரலி) அவர்கள் இஸ்லாத்தைப் பற்றிக் கேள்விப்பட்டபோது அதனை ஏற்றுக்கொள்வதால் அபாயமிக்க சோதனைகள் எதிர்ப்படும். தாம் இஸ்லாத்தில் இணைந்தது தெறியவந்தால் தம் சமுதாயத்தினர் அனைவரும் கொதித்தெழுவர் என்பதையெல்லாம் நன்கு அறிந்திருந்தார்கள். தம் குடும்பத்தினர் காலங்காலமாக மேற்கொண்டு வரும் வணக்க முறைகளையும் அரபிகளின் கொள்கை கோட்பாடுகளையும் மறுப்பதால் தம்மைத்தாமே பயங்கர அபாயத்திற்கு ஆளாக்கிக் கொள்ள நேரிடும். வழக்கமாக பெண்கள் தலையிடாத, அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லாத பிரச்சனைகளில் நாம் வலிந்து தலையிடுகின்றோம் என்றாகிவிடும் என்பதைத் தெளிவுபடப் புரிந்திருந்தார்கள்.

ஆயினும் அவர்கள் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் பெருமானாரைச் சந்திக்கச் சென்ற மதீனத்துக் குழுவினரைப் பின்தொடர்ந்தார்கள். இறைத்தூதரைச் சந்திக்க வேண்டும், அவர்களின் அறிவுரைகளைக் கவனமாக செவிமடுக்க வேண்டுமென்ற உறுதியுடன் தம் கூடாரத்திலிருந்து வெளிக் கிளம்பினார்கள். அவருடைய குழுவினர் தங்களைக் குறித்து இறைத்தூதரிடம் இவ்வாறு உறுதிமெழி அளிப்பதைக் கேட்கின்றார்கள்.

நாங்கள் உங்களைப் பாதுகாத்து உதவி புரிபவர்கள். நீங்கள் விரும்பும் பணிகளில் எங்களை ஈடுபடுத்தலாம். உங்களின் கட்டளைகளைத்தான் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அல்லாஹ்வின் தூதர் ஒரு சைக்கினை செய்தாலே போதும், அதற்கு எங்களை நாங்களே அற்பணிக்கத் தயாராய் இருக்கின்றோம். உங்களுடைய தீனை எதிர்த்துக் கொண்டும் உங்களுக்கு துன்பம் இழைத்துக் கொண்டும் உங்களைப்; பின்பற்றும் மக்களை உதாசீனப் படுத்திக் கொண்டும் இருக்கின்ற இந்தக் குறைஷிகளை எதிர்த்துப் போர் புரிய நாங்கள் தயார்!;

இதைக் கேட்ட உம்மு உமாரா (ரலி) அவர்கள் தம்முடைய அணியினர் தம் வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வந்தால் எத்தகைய விழைவுகள் ஏற்படும் என்பதையும், தவிர தாங்கள் ஹஜ் செய்வதற்காக அந்நிய நாடு வந்துள்ளோம் என்பதையும் புரிந்திருந்தார்கள். ஆயினும் சோர்ந்திடவில்லை. துவண்டிடவில்லை! மாறாக கொள்கைக்காக போராட வேண்டும் எனும் ஊக்கமும் உறுதியும்தான் அவர்களின் உள்ளத்தில் பொங்கியெழுந்தன!

உம்மு உமரா (ரலி) அவர்கள் புதிய உள்ளத்தோடும் உணர்வோடும் தம் குழுவினரிடம் மதீனாவுக்குத் திரும்பினார்கள். அவருடைய உள்ளத்தில் இறைமார்க்கத்தின் பற்றும் ஆழமான ஈமானும் நிறைந்திருந்தன. இரண்டாவது உடன்படிக்கைக்குப் பிறகு அவரும் அவருடைய குழுவினரும் ஆற்றவேண்டிய பணிகளோ அதிகப்பளு கொண்டவை! இறைமார்க்கத்தை நன்கு ஆழமாக அறிவது, அதனைப் பரப்புவதற்கும் அதன் பக்கம் பிற மக்களை அழைப்பதற்கும் அரங்கத்திலும், அந்தரங்கத்திலும் வாய்மையுடன் உழைப்பது ஆகியவைதான் அப்பணிகள்!

இறைவழியில் உடன்பாடான நடவடிக்கைகளை நிறைவேற்ற ஆயத்தமானது, மதீனா நகரம்! 

இஸ்லாத்தை விரைந்து ஏற்றுக்கொண்டு வருகின்ற மதீனா நகரையே அழைப்புப் பணியின் கேந்திரமாக அமைக்க துணிச்சலான முயற்ச்சிகளை மதீனத்து மக்கள் மேற்க்கொள்ளத் தொடங்கினர்.


மதீனாவின் எல்லையில் ஒரு காட்சி:

நபியவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்வது குறித்தும் அழைப்புப்பணி மற்றும் இறைவழிப் போராட்டத்தின் புதிய சகாப்தத்தை மதீனாவிலிருந்து தொடங்குவது குறித்தும் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் மதீனத்து முஸ்லிம்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்! யத்ரிப் எனும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு இறை சமிக்ஞையும் வந்தது!

ஆணவமும் பொறாமையும் கொண்ட குறைஷிகள் பல திக்குகளிலும் அண்ணலாரை பின் தொடர்ந்தார்கள். எப்படியும் அவர்களை கைது செய்து இஸ்லாமிய அழைப்பின் குரல்வளையை நெரித்திட வேண்டும் என்று கருதினார்கள். ஆயினும் அல்லாஹ்வின் நாட்டம் உறுதியானது. இந்த அழைப்புப் பணிக்கு அவனுடைய உறுதுணை உண்டு. அல்லாஹ்வின் அருளினால் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மதீனா நகர் வந்து சேர்ந்தார்கள்.

அங்கே...! அன்ஸாரிகள் வரவேற்க வந்திருந்தார்கள். நேரிய மார்க்கம், சத்திய அழைப்புப் பணி மற்றும் வழிகெட்ட, கண்மூடித்தனமான கொள்கைகளிலிருந்தும் நடைமுறைகளிலி ருந்தும் சுதந்திரம் ஆகிய அருட்கொடைகளுடன் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருகை தரும் அல்லாஹ்வின் திருத்தூதரைத்தான் வரவேற்கக் காத்திருந்தார்கள்!

மதீனத்துப் பெண்களிலேயே உம்மு உமாராவுக்குத்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வருகையை முன்னிட்டு அளவிலா மகிழ்ச்சி! அண்ணலாரை வரவேற்பதற்காக அவருடன் அவருடைய தேழியர்களும் அவரின் மூலம் இஸ்லாத்தை தழுவிய அண்டை வீட்டுப் பெண்களும் பெருந்திரளாய் வந்திருந்தார்கள். அனைவரின் உள்ளங்களிலும் முகங்களிலும் பேரானந்தம் தவழ்ந்து கொண்டிருந்தது!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனமா நகரில் தம் பொற்பாதம் எடுத்துவைத்து நுழைந்தபோது - பெறற்கரிய பேற்றைப் பெற்று விட்டோம் எனும் உளமகிழ்வுடனும் பூரிப்புடனும் கண்களில் நீர் மல்க காட்சியளித்தார்கள் உம்மு உமாரா (ரலி) அவர்கள்! இறைத்தூதரும் அவர்களின் தோழர் அபூபக்கரும் புதியதோர் பூமிக்கு வந்து கொண்டிருப்பதைபப் பார்க்கின்றார்கள்! அவ்விருரைச் சுற்றியும் ஏராளமான முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் புடை சூழ்ந்து வருகின்றார்கள்! இஸ்லாமிய அழைப்பிற்கு ஓர் பாதுகாப்பு அரணாகவும் இறைவழிப் போராட்டத்தின் பாசறையாகவும் திகழவிருக்கும் மதீனத்துப் பூமியில் உம்மு உமாராவின் சிந்தனைகள் சிறகடித்து பறக்கின்றது!

உயர்ந்த குறிக்கோள்களும் இலட்சியங்களும் கொண்ட ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றி அவர்கள் கற்பனை செய்து பார்க்கின்றார்கள்.

இஸ்லாமிய நெறி, இதோ புதிய சகாப்தத்தைத் தொடங்கிவிட்டது. இறைவன் முஸ்லிம்கள் மீது கடமையாக்கிய, போராட்டப்பணி செயல்படுத்தப் படலாகிறது. எனும் உண்மை உறுதியானது.!


மகளிர் உரிமைகள்...

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அவையில் ஆஜராகி அவர்களின் அருள்மொழிகளைக் கேட்டு அறிவுரை பெறுவதில் உம்மு உமாரா (ரலி) அவர்கள் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்கள். அப்பெண்மணியிடம் மார்க்க அறிவும், பண்பாடும் அதிகரித்து வந்தன. தினம் தினம் ஒரு புதிய கட்டளை அல்லது கடமையைக் கேள்விப்படுகின்றார். புதியவை ஒவ்வொன்றிலும் மனித சுதந்திரத்திற்கு முதலிடம் கொடுக்கப் பட்டிருப்பதையும் இறைவனால் வழங்கப்பட்ட மனித உரிமைகளுக்கு அவற்றில் உத்திரவாதம் அளிக்கப்பட்டிருப் பதையும் காண்கின்றார். இறைநெறியில் மகளிர் உரிமைகள் முழுமையாக வழங்கப்பட்டிருந்தன. வாரிசு, சொத்து, திருமணம், விவகாரத்து போன்றவற்றில் அன்றைய அறியாமைக்கால சமூகம் மறுத்து வந்த உரிமைகளை இறைவனும் அவனுடைய வேதமும் பெண்ணினத்திற்கு மீட்டுக் கொடுத்தன.

இஸ்லாமிய மார்க்கத்தில் பெண்களுக்கு நீதியும் நேர்மையும் சமத்துவமும் இருப்பதைக் காண்கிறார். அதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் முறையில் ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இவ்வாறு கேட்டார்.

அனைத்திலும் ஆண்களுக்குத்தானே உரிமையுள்ளது. பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாகத் தெரியவில்லையே!

பெண்கண் ஆண்களுக்குச் சமமானவர்கள் எனும் உண்மை இறைவாக்கிலும் கட்டளையிலும் அதிகாரப்பூர்வமாக இடம்பெற வேண்டும் என்பது உம்மு உமாரா (ரலி) அவர்களின் விருப்பம்.

அவருடைய விருப்பத்திற்கு பதிலளிக்கும் வகையில் இறைவசனம் இறங்கியது. நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும் பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும், உண்மையே பேசும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், உள்ளச்சமுள்ள ஆண்களும் பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோர்க்கும் ஆண்களும் பெண்களும், தங்கள் வெட்கத்தலங்களை (கற்பை) காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும் அல்லாஹ்வை நினைவு கூறும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான். (33: 35)

அறியாமைக்கால சமூகம், ஆண் மகன் அனுபவிக்கும் ஒரு பொருளாக மட்டுமே பெண்களைக் கருதியது! நீதி நெறி தவறிய இத்தகைய நியதிகளையும் பழக்கவழக்கங்களையும் கொண்ட சமூக அமைப்பை மாற்றிட வேண்டும் என்று கோரும் உரிமை கூட அன்று பெண்களுக்கு இருக்கவில்;லை! ஆனால் இஸ்லாம் அதனை மாற்றி அமைத்தது! இஸ்லாம் கொணர்ந்த புதிய வாழ்க்கை முறையில் பெண் குலத்திற்குப் போற்றத்தக்க அந்தஸ்து  இருந்தது.

இவ்வாறு இஸ்லாத்தில் பெண்ணினத்திற்கு முழு மரியாதையும் உரிமையும் வழங்கப்பட்டதால் அன்றைய பெண்களிடம் தீனின் பற்று அதிகமாகியது. அதிகமான பெண்களை ஈமான் கொள்ளத் தூண்டியது. இறைநெறியைத் தழுவுவதன் மூலம் இழிவு மற்றும் கேவலத்திலிருந்து மீண்டு சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பெற முடியும் என்று பெண்குலம் கருதியது!


இறைவழிப் போரில் பங்கேற்பு..

இஸ்லாத்தில் உம்மு உமாராவைக் கவர்ந்த சிறப்பு அம்சம் மகளிர்க்கு உரிமையும் மரியாதையும் கிடைத்தது என்பது மட்டும் அல்ல.

உம்மு உமாரா (ரலி) அவர்களுக்கு முழு மகிழ்வும் மனதிருப்தியும் எப்போது கிடைத்தது? ஜிஹாத் - இறைவழியில் போர் புரியுமாறு இறைக்கட்டளை பிறப்பிக்கப்பட்டு, அந்தப் போரில் தாமும் கலந்துகொள்ள முடியும் என்பதை உம்மு உமாரா (ரலி) அறிந்தபோதுதான் அவரின் உள்ளத்தில் பேரானந்தம் பொங்கியது எனலாம்! ஆம்! அறப்போரில் பெண்களும் கலந்த கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு கலந்து கொள்வது மூலம் போரில் ஆண்களுக்கு ஏற்படுகின்ற சிரமத்தையும் பளுவையும் குறைக்க முடியும், குறைக்க வேண்டும் என்றும் உறுதியாக உணர்ந்தார்.

அந்தக் கணத்திலிருந்தே உம்மு உமாரா (ரலி) அவர்கள் தன்னுடைய ஈடு இணையற்ற வீரத்தாலும் ஆற்றலாலும் இஸ்லாமியப் போரின் மாபெறும் வரலாற்றில் பிரகாசிக்கலானார்! வரலாறு உம்மு உமாரா (ரலி) அவர்களின் வீரத்தை ஒளிவீசும் பொன் எழுத்துக்களால் பதிவு செய்யலானது. இறைவழியில் நடைபெற்ற போரில் பெண்களுக்கே உரிய சில பணிகளில் உம்மு உமாராவும் பங்கேற்பதற்கான சூழ்நிலைகள் கனிந்து வந்தன!


கேடயத்தைப் போட்டுவிட்டுச் செல்!

பத்ருப் போரில் குறைஷிகள் படுமோசமான தோல்வியைத் தழுவிய நேரம். அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழிவினைத் துடைத்துவிட்டு இழந்த மதிப்பை மீண்டும் பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் பழிவாங்குவதற்காக எல்லாவிதமான சக்திகளையும் ஒன்றுதிரட்டி பெரும் படைகளை தயார் செய்தார்கள்.

இறைமறுப்பாளர்களின் இந்தப் பெரும் படையைக் கண்டு முஸ்லிம்கள் பலவீனப்படவுமில்லை. முன்பு இதனை விடவும் கடுமையான சூழ்நிலையில் - பத்ருப் போரில் அல்லாஹ் தங்களுக்கு உதவி செய்தது போன்று இப்போதும் உதவி செய்வான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் அவனையே முழுவதும் சார்ந்திருந்தார்கள். இத்தகைய அனைத்து நிகழ்ச்சிகளிலும் அளவிலா மகிழ்வுடனும் மன நிறைவுடனும் உம்மு உமாரா (ரலி) அவர்கள் இருந்தார்கள்.

குரோதமும் வெறியும் கொண்ட குறைஷகளின் படை முஸ்லிம்களை பழிவாங்கப் புறப்பட்டது. இரு படைகளும் உஹது மலை அடிவாரத்தில் மோதலாயின. குறைஷிகளின் படைக்கு அபூசுஃப்யான் தலைமையேற்றிருந்தார்.

உம்மு உமாரா (ரலி) தம் வாழ்நாளில் கிடைத்த அரியதொரு சந்தர்ப்பமாக இதனைக் கருதி, தண்ணீர் நிரப்பிய தோல்பையைச் சுமந்துகொண்டு போரில் கலந்திடப் புறப்பட்டார்கள்.

உம்மு உமாரா (ரலி) அவர்கள் தொடக்கத்தில் எதிரிகளுடன் மோதி, வெற்றியை உறுதிப்படுத்திய முன்னணிப்படையில் இருந்தார்கள். அவர்களுக்கு உதவியாகச் சென்றார்கள். முஸ்லிம் வீரர்களின் திகிலூட்டும் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் குறைஷிகள் ஆயுதங்கள், பொருள்களையெல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓடலாயினர்.

உஹது மலையின் பின்புறத்து கணவாயில் அம்பெறியும் வீரர்கள் சிலரை அண்ணலார் நிறுத்தியிருந்தார்கள். எதிரிகள் விட்டுச் சென்ற பொருள்களைப் பார்த்ததும் அவர்களின் மனம் சலனமடைந்தது. எத்தகைய சூழ்நிலையிலும் அவ்விடத்தைவிட்டு அகலக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் பிறப்பித்திருந்த ஆணையை மறந்த அவ்வீரர்களில் பெரும்பாலோர், எதிரிகள் விட்டுச் சென்ற பொருள்களைக் கைப்பற்றச் சென்றனர். உடனே அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அபாயகரமான அக்கணவாயைக் குறைஷிக் குதிரைப் படையினர் கைப்பற்றி உள்ளே புகுந்து முஸ்லிம்களைத் தாக்கினர். எதிரிகளின் இருமுனைத் தாக்குதலினால் முஸ்லிம்கள் சிதறலாயினர். போரின் நிலை தலைகீழானது. வெற்றிக்காற்று இணைவைப்பாளர்களின் பக்கம் வீசலானது.

புறமுதுகிட்டு ஓடிக்கொண்டிருந்த குறைஷிகளும் களத்திற்கு திரும்பினார்கள். புதிய தாக்குதலை தொடங்கியுள்ள குதிரைப்படையினருக்கு உதவிடத் திரண்டு வந்து தாக்குதல் தொடுத்தார்கள். கட்டுக்கோப்பு இழந்து சிதறிவிட்ட முஸ்லிம்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தலைகீழாக மாறிய சூழ்நிலையில் தப்பித்தால் போதும் என்ற நிலைக்கு ஆளாயினர்! முக்கிய தலைவர்கள் எல்லாம் வெருண்டோடலாயினர்.

இத்தகைய அபாயகரமான கட்டத்தில் - துன்பமிகு சூழ்நிலையில் இஸ்லாத்தையும் இறைத்:தூதரையும் பாதுகாப்பதற்காக நிலைகுலையாமல் இருந்தவர்கள் யார்? சுமார் 10, 13 பேர்தான் உறுதி குலையாமல் அண்ணல் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்து நின்று போரிட்டார்கள்! அவர்களின் முன்னணியில் இருவர் இருந்தனர். ஒருவர், அபூ துஜானா (ரலி) எனும் மாவீரர்! அவர் குறைஷிகள் வீசும் அம்புகள் கோமான் நபி (ஸல்) அவர்களின் பூமேனியைத் துளைத்திடாதவாறு தனது திருமேனியைக் கேடயமாகக் காட்டிக் கொண்டு பாதுகாத்து நின்றார்கள்! மற்றொருவர்தான் வரலாற்றுப் புகழ்பெற்ற - மாவீரம் கொண்ட பெண்மணி உம்மு உமாரா (ரலி) அவர்கள்! அந்தச் சந்தர்ப்பத்தில் அந்தப் பெண்மணியும் எதிரிகளின் அம்புகளை எதிர்நோக்கி நின்றுகொண்டு முடிந்தவரையில் அண்ணலாருக்குப் பாதுகாப்பு அரணாய் விளங்கினார்கள். வாளை எடுத்துச் சுற்றியும் நபியவர்களைக் காப்பாற்றினார்கள்!

ஒருகட்டத்தில் நிராகரிப்பாளர்கள் ;முஹம்மத் (ஸல்) கொல்லப்பட்டார் ; எனும் வதந்தியைப் பரப்பிவிட்டார்கள்.

அந்த வதந்தியைக் கேட்டதும் உம்மு உமாரா (ரலி)யோ கத்தலானார். ;; இறைத் தூதருக்குப் பிறகு வாழ்வதில் என்ன பயன்? அப்படி வாழவும் வேண்டுமா?;; என்று கூப்பாடு போட்டவாறு அப்பெண்மணியும் அவருடைய கணவரும், இரு புதல்வர்களும் அண்ணலாருக்கு அருகே வந்தார்கள். மற்றவர்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

அண்ணல் நபி (ஸல்) உம்மு உமாராவைப் பார்க்கின்றார்கள்! எந்த உம்மு உமாராவை? இறைக்கட்டளையைச் செவியேற்று கீழ்படிவேன். தியாகம் செய்வேன் என்று அன்று ஒரு நாள் தம்மிடம் வாக்குறுதி அளித்த உம்மு உமாராவைப் பார்க்கின்றார்கள். இதோ! அவ் வாக்குறுதியை அப்பெண்மணி நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார். ஆண்கள் எல்லாம் விட்டுவிட்டு ஓடுகின்ற சந்தர்ப்பத்தில் அண்ணலாரைப் பாதுகாத்திட அப்பெண்மணி உறுதி குலையாதிருக்கின்றார்.

தமக்கு முன்னால் உம்மு உமாரா (ரலி) கேடயமாக நின்று கொண்டிருப்பதை நபியவர்கள் பார்க்கின்றார்கள்! அப்போது வாட்கள் மற்றும் ஈட்டிகளின் தாக்குதலிலிருந்து அப்பெண்ணைக் காப்பாற்ற அருகில் யாரும் இல்லை!


அதே இடத்தில்...!

ஒருவர் களத்திலிருந்து திரும்பி ஓடுகின்றார். அவருடைய கையில் கேடயம் இருந்தது. அதனைக் கண்ட நபியவர்கள் உடனே, உனது கேடயத்தை போர் செய்பவருக்காகப் போட்டு விட்டுச் செல் என்று சப்தமிட்டுச் சொன்னார்கள். அப்போது அவர் தன் கேடயத்தை வீசியெறிந்தார். உம்மு உமாரா (ரலி) அவர்கள் விரைந்து சென்று - அதனை எடுத்து வந்து அன்று மாலை வரை அண்ணலாரின் அருகில் நின்று போர் முடியும் வரை அவர்களுக்குப் பாதுகாப்பு நல்கிக் கொண்டிருந்தார்கள்!


உஹதின் வீராங்கனை?

உஹதுப் போரில் தாம் கலந்து கொண்டது பற்றி உம்மு உமாரா (ரலி) அளித்த விவரத்தை இப்னு ஹிஷாம் அவர்கள் தமது ஸீறாவில் எழுதியுள்ளார்கள். அதில் உம்மு உமாரா (ரலி) கூறுகின்றார்.

எதிரிகள் குதிரைப் படையினர்தான் எங்களை அதிகமாகத் தாக்கினார்கள். எங்களைப் போன்று அவர்களும் வாகனமின்றி வந்திருந்தால் - இன்ஷா அல்லாஹ் அவர்களை ஒரு கை பார்த்திருப்போம்! ஒருவன் குதிரை மீது வந்து என்னைத் தாக்கினான். நான் கேடயத்தின் மூலம் அவனது தாக்குதலிலிருந்து என்னைத் தற்காத்தேன். அவனது வாளால் எதையும் சாதிக்க முடியாமல் திரும்பினான். அப்போது அவனது குதிரையின் குதிங்காலை வெட்டினேன். குதிரை கீழே விழுந்தது. உடனே நபி (ஸல்) அவர்கள் என்னுடைய மகனை அழைத்து அப்துல்லாஹ்வே, உன்னுடைய தாயைப் பார் உனது தாயைப் பார் என்று சப்தமிட்டார்கள். என்னுடைய மகன் வந்து எனக்கு உதவினான்.”

உம்மு உமாரா (ரலி) அவர்களைப் பற்றி இப்னு ஹிஷாம் (ரஹ்) கூறுகின்றார்கள். உம்மு உமாரா (ரலி) அவர்கள் போரிட்டுக் கொண்டும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டும், தண்ணீர் புகட்டிக் கொண்டும் இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அவருடைய மகனார் அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரலி) தாக்குதலுக்குள்ளாகி காயம் அடைந்தார். ஆனால் உம்மு உமாராவோ தன் மகனைக் கண்டுகொள்ளாமல் எதிரிகளுடன் போரிடுவதில் ஈடுபட்டிருந்தார்கள். இறுதியில் நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை அழைத்து “உமது காயத்திற்கு நீரே மருந்து கட்டிக் கொள்வீராக” என்று கூறியபோதுதான் தன்னுடைய மகன் காயமடைந்திருப் பதை உம்மு உமாரா (ரலி) உணர்ந்தார்கள். உடனே அருகில் சென்று, அவருடைய காலில் மருந்து வைத்துக் கட்டினார். பிறகு தனது மகனை நோக்கிக் கூறினார். மகனே, சென்று இறுதிவரை போராடு!”

உம்மு உமாரா (ரலி) அவர்களின் தியாகச் செயலைப் பார்த்துக் கொண்டிருந்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “உம்மு உமாராவே! உமக்குள்ள ஆற்றல் யாருக்குத்தான் வரும்?”

சிறிது நேரத்தில் அவருடைய மகன் அப்துல்லாஹ்வைக் காயப்படுத்தியவன் மீண்டும் தாக்குதல் தொடுக்க வந்துகொண்டிருந்தான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உம்மு உமாராவே, இவன்தான் உன்னுடைய மகனைக் காயப்படுத்தியவன் சுதாரித்துக் கொள்.”

உடனே உம்மு உமாரா (ரலி) அவர்கள் கோபாவேசத்துடன் அவன் பக்கம் பாய்ந்து சென்று வாள் கொண்டு அவனது முழங்காலைத் தாக்கினார்கள். அவன் இருதுண்டாகிக் கீழே சாய்ந்தான். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நபியவார்கள் “உம்மு உமாராவே, உன்னுடைய மகன் தாக்கப்பட்டதற்கு பழிவாங்கி விட்டீர்” என்று புன்முறுவலுடன் கூறினார்கள்.

போர் நடந்து கொண்டிருந்தபோது ஒரு அயோக்கியன் தூரத்திலிருந்து பொருமானார் (ஸல்) அவர்களை நோக்கி கல்லெறிந்தான். அக்கல் நபியவர்களின் இரு பற்களை உடைத்து விட்டது. இறைத்தூதர் பதற்றத்துடன் அந்தப் பக்கமாக திரும்பினார்கள். அப்போது இப்னு கமிஆ என்பவன் நபியவர்களை நோக்கி விரைந்து வந்து வாள் கொண்டு தாக்கினான். நபியவர்கள் இரும்புத் தொப்பி அணிந்திருந்தார்கள். அதனுடைய இரு வளையங்கள் தெறித்து வந்து அவர்களின் புனித முகத்தில் குத்தி நிற்க இரத்தம் பீரிட்டு ஓடியது! ஒரு கணப்பொழுதில் இப்படியெல்லாம் நடந்துவிட்டன!

உம்மு உமாரா (ரலி) அவர்கள் பதறிப் போய்விட்டார்கள். முன்னேறிச் சென்று இப்னு கமிஆவைத் தடுத்தார்கள். குறைஷி குலத்தைச் சார்ந்த அவன் குதிரை சவாரியில் திறமையானவன்! உம்மு உமாரா (ரலி) அவர்களும் சளைத்தவர்கள் அல்லவே! சிம்ம இதயம் கொண்ட அவர்கள் மிகவும் துணிச்சலுடன் அவனைத் தாக்கினார்கள். அவன் இரண்டு கவசங்கள் அணிந்திருந்தான். ஆதலால் உம்மு உமாராவின் வாள் ஒடிந்துவிட்டது. அதனால் பதில் தாக்குதல் தொடுக்க இப்னு கமிஆவுக்கு சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. அவனது தாக்குதலால் உம்மு உமாராவின் தோளில் கடுமையான வெட்டுக் காயம் ஏற்பட்டது. இப்னு கஆமியாவும் அங்கு நிற்கத் துணிவில்லாமல் வேகமாகக் குதிரையை முடுக்கிக் கொண்டு ஓடிவிட்டான்.

தோளில் பட்ட காயத்திலிருந்து இரத்தம் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது! இந்த நிலையில் உம்மு உமாரா (ரலி) அவர்கள் தம் பாதங்களை மெதுவாக எடுத்து வைத்து மெல்ல மெல்ல சென்று கொண்டிந்தார்கள். இந்தப் பாதங்கள் எங்கே செல்கின்றன?

ஒரு பயணி பல நாட்களாக அலைந்து திரிந்து தம் இல்லத்தை அடைந்து கொள்வது போன்று - அந்தப் பாதங்கள் அன்பிற்குரிய அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பாதங்கள் அருகே சென்று நின்றன!

இஸ்லாத்தின் மீதுள்ள எல்லையற்ற அன்பு கண்ணீர் வடிவத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது! ஓர் உணர்ச்சிமிகுந்த குரல் உம்மு உமாராவின் இதய ஆழத்திலிருந்து எழுந்தது.

அல்லாஹ்வின் தூதரே, எனக்காகத் துஆ செய்யுங்கள்! நான் மரணமான பிறகு மறுமையில் எழுப்பப்படும்போது என்னுடைய இந்த உடல், அருள்மிகு இப்பாதங்களின் அருகிலேதான் எழுப்பப்பட வேண்டும்.

இது ஒரு பெண்மணியின் உள்ளத்தில் தகித்துக் கொண்டிருந்த உறுதியான மறுமை நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்த இஸ்லாமிய எழுச்சி, ஈமானிய ஆர்வம்!

உடனே கருணை நபி (ஸல்) அவர்கள் உம்மு உமாராவுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். “இறைவா, இவர்கள் அனைவரையும் சுவனத்தில் என்னுடன் இருப்பவர்களாக ஆக்கி அருள்புரிவாயாக!”

இதனைக் கேட்ட உம்மு உமாரா (ரலி) அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் அறியாமலேயே அவர்களின் நாவு இப்போது இந்த உலகில் என்ன துன்பம் நேர்ந்தாலும் பராவாயில்லை என்று உச்சரித்தது!

நபி (ஸல்) அவர்களே உம்மு உமாரா (ரலி) அவர்களின் காயத்தில் மருந்து வைத்து கட்டிய வண்ணம் வீரமிக்க நபித்தோழர்கள் பலரை வரிசையாகச் சொல்லி, ‘இன்று இவர்கள் அனைவரை விடவும் உம்மு உமாரா அதிக வீரத்தைக் காட்டினார்கள்” என்று கூறினார்கள். உஹதின் வீராங்கனை| என்று வரலாறு இன்றும் அவரைப் புகழ்ந்து கொண்டிருக்கின்றது!

இவ்வாறு உயிர்கள், உடமைகளின் இழப்புடனும் கடுமையான காயங்களுடனும் உஹதுப் போர் முடிந்த மறுநாள் மற்றொரு பெரும் சோதனை காத்திருந்தது. குறைஷிகள் தொடர்ந்து தாக்குதல் தொடுக்க வருகின்றார்கள் எனும் செய்தியை அடுத்து நபி (ஸல்) அவர்கள் மீண்டும் போருக்கு ஆயத்தமானார்கள். உஹதுப் போரில் கலந்துகொண்ட அதே தோழர்கள்தான் இப்போது மீண்டும் புறப்பட வேண்டுமென அறிவிப்புச் செய்தார்கள். உம்மு உமாரா (ரலி) அவர்களும் உடனே கச்சையைக் கட்டிக்கொண்டு புறப்பட ஆயத்தமானார்கள். ஆயினும் வெட்டுக் காயங்களிலிருந்து இரத்தம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்ததால் அவர்களால் புறப்பட இயலவில்லை.

நபியவர்கள் ஹம்ராவுல் அஸத் எனும் இடம் வரை சென்றுவிட்டு எதிரிகள் யாரும் வராததால் மதீனா திரும்பினார்கள். வீட்டிற்கு செல்வதற்கு முன் அப்துல்லாஹ் இப்னு கஃப் - அல்மாஜினி (ரலி) எனும் தோழரை அனுப்பி உம்மு உமாராவின் நலம் பற்றி விசாரித்தார்கள். அவர்கள் சுகத்துடன் இருப்பதாக செய்தி வந்ததும் நபி (ஸல்) அவர்கள் பெரிதும் சந்தோஷம் அடைந்தார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்நாள் முழுவதும் இறைவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உம்மு உமாரா (ரலி) அவர்கள், பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்நாளுக்குப் பிறகாவது ஓய்வு எடுத்துக் கொண்டு அமைதியான - மகிழ்வான வாழ்வை நாடிச் சென்றார்களா? இல்லை!


விழுப்புண் தாங்கிய வீரப்பெண்மணி!

இறைவழில் போர் செய்யும் இஸ்லாமியப் படையில் சேராமல் இருப்பதை உம்மு உமாரா (ரலி) எப்போதும் விரும்பிதில்லை. ஜிஹாதுக்கான எந்தச் சந்தர்ப்பத்தையும் அவர் நழுவ விட்டது கிடையாது.

ஹிஜ்ரி 11-ம் ஆண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்து அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொருப்புக்கு வந்தபோது அரபு நாட்டின் ஒரு பகுதியில் சிலர் இஸ்லாத்தின் இனிய நெறியிலிருந்து மாறிச் செல்லும் குழப்பம் தலைதூக்கியது! இத்தகையவர்களைக் களையெடுப்பதற்காக நடைபெற்ற போர்களில் மிகவும் பிரபலமானது, பொய்யன் முஸைலமாவுடன் நடைபெற்ற போராகும்.

இந்த முஸைலமா, நஜ்த் தேசத்தில் யமாமா என்ற பகுதியில் வாழ்ந்த பனூஹனீஃபா என்னும் கோத்திரத்தின் தலைவன் ஆவான். இவன் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கடைசிக் காலத்தில் மதம் மாறியதோடு மட்டுமல்லாமல் தான் ஒரு நபி எனவும் வாதிட்டான்.

கொஞ்ச நாட்களில் நபியவர்கள் காலமான பிறகு முஸைலமாவின் வழிகேடு அதிகமானது. தன்னைச் சுற்றி ஒரு கும்பலை உருவாக்கிக் கொண்டு அவர்களின் மூலம் தன்னை நபியென ஏற்றுக் கொள்ளுமாறு மக்களை நிர்ப்பந்தித்தான்.

இதே காலகட்டத்தில் ஒரு நாள் உம்மு உமாரா (ரலி) அவர்களின் மகன் ஹபீப் (ரலி) என்பார் உம்மானிலிருந்து மதீனா திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் பொய்யன் முஸைலமாவிடம் மாட்டிக் கொண்டார். கொடியோன் முஸைலமா, ஹபீப் (ரலி) அவர்களைக் கைது செய்து முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரித்து விட்டுத் தன்னை நபியென ஏற்றுக் கொள்ளுமாறு நிர்ப்பந்தித்தான். அதனை மறுக்கவே அவர்களை சித்திரவதை செய்து கொன்றான்.

தம்முடைய வீரமிக்க மகன் அநியாயமாக கொல்லப்பட்ட செய்தி கேட்டு உம்மு உமாரா (ரலி) முதலில் இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள். ஆம்! தம் மகன் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்ட போதிலும் இறைநம்பிக்கையை இழக்காதிருந்தார். இறைவன் அவருக்கு கொள்கைப் பிடிப்பை வழங்கினான என்பதற்காக! அன்னையின் உள்ளம் முதலில் இறைவனை நினைவு கூர்ந்தது. அதன் பிறகு முஸைலமாவிற்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றது!

இந்த நிகழ்ச்சிக்குக் கொஞ்ச காலத்திற்குப் பிறகு கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள் முஸைலமாவை எதிர்த்து போரிடுவதற்காக காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைப் பணித்தார்கள்.
முஸைலமா கொல்லப்பட வேண்டும், சத்திய மார்க்கம் வெற்றி வாகை சூடுவதைக் கண்ணால் கண்டு மகிழ வேண்டும் எனும் நோக்கத்துடன் காலித்தின் தலைமையின் கீழ் உம்மு உமாரா (ரலி) போர்க்களம் நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்களின் அருகே இரண்டாவது மகன் அப்துல்லாஹ்வும் போரில் கலந்து கொண்டார். இறுதியில் உண்மை வென்றது. பொய்யன் முஸைலமா இழிவுடனும், கேவலத்துடனும் கொல்லப்பட்டான்.

உஹதுப் போரில் தமது தோளில் ஏற்பட்ட ஆழமான வெட்டுக் காயத்தைவிட கடுமையான மற்றொரு தாக்குதலை தாங்கியவண்ணம் உம்மு உமாரா (ரலி) அவர்கள் இந்தப் போரிலிருந்து திரும்பினார்கள். அது மட்டுமல்ல, இந்தப் போரில் அவர்களின் ஒரு கரம் முழுமையாக துண்டிக்கப்பட்டது! தவிர வாள் மற்றும் பட்டாக்கத்தியினால் ஏற்படுத்தப்பட்ட சிறிய, பெரிய 12 காயங்களையும் அவர்கள் வீர உடல் ஏற்றிருந்தது! இத்தனைக்கும் மேலாக அவர்களின் இரண்டாவது மகன் அப்துல்லாஹ்வையும் இந்தப் போர் பலி கொண்டது!

போர் முடிந்த பிறகு முஸ்லிம் படையினர் தத்தம் இருப்பிடங்களுக்க திரும்பினார்கள். படைத்தளபதி காலித் இப்னு வலீத் (ரலி) உம்மு உமாராவைச் சந்தித்தார்கள். அவர்களின் துண்டிக்கப்பட்ட கரத்தையும் எண்ணற்ற காயங்களையும் பார்த்து கண் கலங்கினார்கள்! பிறகு ஒலிவ எண்ணையின் மூலம் அவர்களின் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கமாறு ஏவினார்கள். கை துண்டிக்கப்பட்டபோது இருந்த வேதனையை விட இப்பொழுது சிகிச்சையினால் அதிக வேதனை ஏற்பட்டது. ஆயினும் இந்தச் சிகிச்சை நல்ல பலன் அளித்தது என்றே சொல்லலாம்.

உம்மு உமாரா (ரலி) இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் போதெல்லாம் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களை வெகுவாகப் புகழ்ந்து இப்படிக் கூறுவார்கள். ‘காலித் அவர்கள் மிகுந்த அக்கரையுடன் எனது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். அவர் மிகுந்த இரக்கமுடையவர், நல்ல இயல்புடையவருமாவார்.” 

உம்மு உமாரா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அளவுகடந்த மரியாதையும் பாசமும் கொண்டிருந்தார்கள். நபியவர்களுக்காக தம் உயிரையும் தியாகம் செய்ய எப்பொழுதும் தயாராய் இருந்தார்கள். நபியவர்களும் உம்மு உமாரா (ரலி) மீது அதிகப் பரிவு கொண்டிருந்தார்கள். இடையிடையே அவர்களின் இல்லம் சென்று நலம் விசாரிப்பார்கள்!

முஸ்னத் அஹ்மத், இஸாபா இவ்விரு நூல்களில் ஓர் அறிவிப்பு உள்ளது.

ஒரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம்மு உமாரா (ரலி) அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் உணவு கொண்டுவந்து வைத்தார்கள். உம்மு உமாரா (ரலி)! நபி (ஸல்) ‘நீங்களும் உண்ணுங்கள்” என்றார்கள்.

இறைத்தூதரே! நான் நோன்பு வைத்திருக்கின்றேன்” என்று உம்மு உமாரா (ரலி) பதிலளித்தார்கள்.
நோன்பாளிக்கு முன்னால் உணவு உண்ணப்பட்டால் உண்டு முடிக்கும் வரை வானவர்கள் நோன்பாளிக்காக துஆ செய்கின்றார்கள்” என்று கூறிய நபியவர்கள் உம்மு உமாரா (ரலி) அவர்களின் முன்னிலையில் உணவு உண்டார்கள்.

நபியவர்களுக்குப் பிறகு கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களும் இடையிடையே உம்மு உமாரா (ரலி) அவர்களின் இல்லம் சென்று அவர்களின் நலம் விசாரித்து வருவது உண்டு.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் உம்மு உமாரா (ரலி) உயிருடன் இருந்தார்கள். என்று நம்பகமான அறிவிப்பு கூறுகின்றது. முழுமையை அடைந்து விட்டிருந்த அவர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் அதிக அளவு மரியாதை செலுத்தி வந்தார்கள்.


இந்தப் பரிசுக்குரியவர் யார்?

ஒரு முறை! போரில் கைப்பற்ற பொருள்கள் மதீனாவுக்குக் கொண்டு வரப்பட்டன. விலை உயர்ந்த சேலைகள் இருந்தன. அவற்றில் பொன்னிழை கலந்து நெய்யப்பட்ட மிகமிக விலை உயர்ந்த இரு பட்டுப் புடவைகளும் அடங்கும்!

வந்த பொருள்களைப் பங்கிடும்போது கலீஃபா உமர் (ரலி) அவர்கள் அவையோரை நோக்கிக் கேட்டார்கள். “இந்த இரண்டு பட்டுச் சேலைகளுக்கு மிகவும் அருகதையுடையவர் யார்:?”

சிலர் சொன்னார்கள். ‘உங்களின் மகனார் அப்துல்லாஹ்வின் மனைவிக்கு கொடுங்கள்” (அப்துல்லாஹ் (ரலி) கலீஃபாவின் மகன் என்பதற்காக இவ்வாறு கூறப்படவில்லை. அவர் பல போர்களில் பங்கு பெற்ற முக்கியமான நபித்தோழர். இறையச்சம் உடையவர் என்பதால்தான் இவ்வாறு கூறப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்).

உமர் (ரலி) கூறினார்கள். இல்லை இல்லை! இவற்றை உம்மு உமாராவுக்குத்தான் கொடுப்பேன். அவர்தான் இவற்றிற்கு அதிகத் தகுதியானவர். ஏனெனில் உஹதுப் போருக்குப் கிறகு நபி (ஸல்) அவர்கள் உம்மு உமாராவின் வீரம் குறித்து இவ்வாறு கூறக் கேட்டுள்ளேன். ‘உஹதுப் போரில் வலது பக்கம் இடது பக்கம் எஹ்கு நோக்கினும் உம்மு உமாராவே போரிட்டுக் கொண்டிருப்பதை நான் கண்டேன்.”

அன்றைய கலீஃபா உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறி விட்டு - அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நினைவுகளை தம் உள்ளத்தில் பசுமையாக்கிய வண்ணம் மதீனமா நகரத்தின் ஓர் இல்லத்தில் வசித்து வந்த உம்மு உமாரா (ரலி) அவர்களுக்கு அச்சேலைகளை அனுப்பி வைத்தார்கள்.

உம்மு உமாரா (ரலி) அவர்களிடமிருந்து சில நபிமொழிகள் கிடைத்துள்ளன. அவை உம்மு ஸஃத் (ரலி) மற்றும் ஹாரீஸ் இப்னு அப்துல்லாஹ், உப்பாத் இப்னு தமீம் லைலா மற்றும் இக்ரிமா (ரஹ்) ஆகியோரின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தம்முடைய சிறிய தந்தையின் மகனார் ஜைத் இப்னு ஆலிம் என்பவரை மணம் முடித்திருந்தார்கள். அவர்களின் மூலம் அப்துல்லாஹ் (ரலி), ஹபீப் (ரலி) எனும் இரு ஆண்மக்களைப் பெற்றெடுத்தார்கள். ஜைத் இறந்த பிறகு அரபா இப்னு அம்ர் (ரலி) என்பவருக்கு மணம் முடிக்கப்பட்டார்கள். இருவருடன் வாழ்ந்து தமீம் என்று ஒரு ஆண் குழந்தையையும் கௌலா என்ற ஒரு பெண் குழந்தையையும் பெற்றார்கள்!

உம்மு உமாரா (ரலி) அவர்கள் மேற்கொண்ட மகத்தான வீரச்செயல்களின் மூலம் பெண் குலத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. போர் வலிமையும் ஆற்றலுமிக்க ஆண்களைவிட வீரத்திலும் தியாகத்திலும் தாம் எந்த வகையிலும் குறைந்தவர் அல்லர் என்பதை உம்மு உமாரா (ரலி) அவர்கள் நிரூபித்துக் காட்டினார்கள்.

இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களுக்காகவும் அவர்கள் ஆற்றிய நற்சேவைகளுக்காக அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக!!
Previous Post Next Post