ஆலிம்களுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டுமா!

மார்க்கத்தின் அடிப்படை அம்சங்கள், கிளை விடயங்கள், இதர இஸ்லாமிய விடயங்களை முடிந்தளவு கற்றிருப்பவர்கள் ஆலிம்கள். அவர்கள் மார்க்க விடயங்களை தம்மிடம் இருக்கும் அறிவுக்கேற்ப மக்களுக்கு அவற்றை ஏதோவொரு வகையில் -தஃவா முறைகளை கையாண்டு- தெளிவுபடுத்துவர்.

ஆலிம்கள் அனைவரும் மார்க்க விடயங்கள் அனைத்திலும் பாண்டித்தியம் பெற்றவர்கள் அல்லர். அவ்வாறு யாரும் வாதிட்டதுமில்லை, வாதிடப்போவதுமில்லை. ஒருவருக்கு தெரிந்த ஒரு விடயம் மற்றவருக்குத் தெரியாமல் இருக்கலாம், ஒருவர் ஆழமாக அறிந்துள்ள செய்தியை மற்றொருவர் மேலெழுந்தவாறு அறிந்திருக்கலாம். ஒருவருக்கு தெரிந்த விடயம் மற்றவருக்கு தெரியாததால் தகுதியற்றவர், அறிவற்றவர், வால் பிடிப்பவர் என்று கூறுவதும் நினைப்பதும் அறிவார்ந்த செயற்களல்ல.

மாபெரும் இமாம்களுள் சிறந்து விளங்கிய முவத்தா நூலைத் தொகுத்தவரும் மாலிக் மத்ஹபின் ஸ்தாபகருமாகிய இமாமுல் மதீனா என்று அழைக்கப்படும் இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் சுமார்  40 மஸ்அலாக்கள் கேட்கப்பட்ட போது அவற்றில் 36 க்கு தெரியாது என்றே பதிலளித்துள்ளார்கள்.

அவ்வாறே ஆறு மாத காலம் பிரயாணித்து ஒருவர் இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒரு மஸ்அலா பற்றி வினவிய போது "எனக்குத் தெரியாது" என்று இமாமவர்கள் கூறியதைக் கண்டு அம்மனிதர் "எனது ஊருக்கு சென்று என் மக்களுக்கு நான் என்ன சொல்வேன்?" என்று வினவிய போது இமாமவர்கள் "மாலிக் தனக்குத் தெரியாது என்று கூறினார் என்று கூறு" என்று கூறி வழியனுப்பியுள்ளார்கள்.

இவ்வளவு பெரிய இமாமாக திகழ்ந்தவர்கள் ஒரு விடயம் தெரியாத போது அது தெரியாது என்பதை எவ்வித தயக்கமும், வெட்கமும் இன்றி கூறியுள்ளார்கள். இது தான் கற்ற ஆலிம்களது அழகிய நடைமுறை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வபாத்தாகிய போது உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்கள் மரணிக்கவில்லை, அவ்வாறு யாராவது கூறினால் அவர்களை கடுமையாக தாக்குவதாக கூறி கிளம்பிய தருவாயில் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ் அருளிய பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக் காண்பித்தார்கள் "

وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ   قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ‌ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ‌ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللّٰهَ شَيْئًا‌  وَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ‏

முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.
(அல்குர்ஆன் : 3:144)

اِنَّكَ مَيِّتٌ وَّاِنَّهُمْ مَّيِّتُوْنَ‏
நிச்சயமாக நீரும் மரணிப்வர்; நிச்சயமாக அவர்களும் மரணிப்பவர்கள்.
(அல்குர்ஆன் : 39:30)

பின்னர் உமர் ரலியல்லாஹு இவ்வசனங்களை கேட்டதும் அமைதியாக அடங்கியது மாத்திரமல்லாது இவற்றை நான் ஓதியதே இல்லை -இப்போது தான் எனக்கு தெரிய வருகிறது- என்று கூறினார்கள்.

அவ்வாறே தமக்குத் தெரியாதவை அல்லது ஒரு விடயம் தொடர்பாக ஒருவர் சிறப்புத் தேர்ச்சி அல்லது நிபுணத்துவம் பெற்றிருந்தால் தம்மை விட குறித்தவரிடம் செல்லுங்கள் என்று அறிவில் சிறந்தவர்களை மேன்மைப்படுத்தி மக்களுக்கு அறிமுகப்படுத்தியும் பண்புடன் ஆலிம்கள் நடந்துள்ளதை வரலாற்றுப் பதிவுகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

ஒரு மஸ்அலா பற்றி அபூ மூஸா அல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வினவப்பட்ட போது அதற்கு அவர்கள் பதலளித்தார்கள் பின்னர் அதே மஸ்அலா இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வினவப்பட்ட போது வேறு விதமாக பதிலளித்ததை செவியுற்ற அபூ மூஸா அல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் "இவ்வளவு பெரிய அறிவில் சிறந்து விளங்குபவர் உங்கள் மத்தியில் இருக்கும் போது என்னிடம் ஒன்றையும் கேட்காதீர்கள்" என்று மக்களுக்கு கூறினார்கள்.

இதனால் தான் அல்லாஹ் அல்குர்ஆனில் 

 وَفَوْقَ كُلِّ ذِىْ عِلْمٍ عَلِيْمٌ‏
 கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!
(அல்குர்ஆன் : 12:76)
என்று குறிப்பிடுகிறான்.

அல்லாஹ் மேலும் அல்குர்ஆனில் 

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِىْۤ اِلَيْهِمْ‌ فَسْــٴَــلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَۙ‏
(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக).
(அல்குர்ஆன் : 16:43)

தெரியாதவற்றை தெரிந்தவர்களிடம் கேட்டறிந்துகொள்ளுமாறு சுட்டிக்காட்டுவதை காண முடிகிறது. 

அத்தோடு ஓர் ஆலிம் தனக்கு கிடைத்த தகவல், கற்ற அறிவுக்கு ஏற்ப தீர ஆய்வு செய்த பின்  
வழங்கிய பத்வா அல்லது கூறிய கருத்து பின்பு தவறென உணரும் பட்சத்தில் அதை வாபஸ் பெறுவதும் அழகிய நடை முறையாகும்.

இதன் முன்மாதிரிகளை ஸஹாபாக்கள் உட்பட முன் சென்ற ஸலப் அறிஞர்களிடம் தெளிவாக அவதானிக்க முடியும். 

இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் ஈராக்கில் வசிக்கும் போது தாம் வழங்கிய பத்வாக்களை எகிப்துக்கு சென்ற பின் வாபஸ் பெற்றுள்ள செய்தி அனைவருக்கும் தெரிந்த விடயம், ஆதலால் தான் அவர்களுக்கு قول قديم பழைய கருத்து என்றும் قول جديد புதிய கருத்து என்றும் இரு வேறுபட்ட நிலைகள் உள்ளன.

இவ்வாறு இமாம்களான மாலிக், அஹ்மத், இப்னு தைமிய்யா, அல்பானீ, இப்னு உஸைமீன் ரஹிமஹுமுல்லாஹ் உட்பட பல இமாம்கள் தாம் இருந்த நிலைப்பாடு, கூறிய கருத்து, தெரிவித்த பத்வா ஆகியவை ஆதாரங்களுக்கு முரணானவை என்று தெளிவாகிய போது தமது நிலைப்பாடுகளை மாற்றி ஏலவே கூறியவற்றை வாபஸ் பெற்றுள்ளனர். 

இவற்றிலிருந்து எமக்கு சில விடயங்கள் மிகவும் தெளிவாக புலப்படுகின்றன அவை ஆலிம்கள் சில வேளைகளில்  தவறிழைப்பதற்கும் சாத்தியமானவர்கள், அவர்களுக்கு அனைத்தையும் பற்றிய ஆழமான அறிவு இருக்க வேண்டிய அவசியமில்லை, அவர்களுள் ஒரு சிலரை விட பலர் சிறப்பாக அறிவுள்ளவர்களாக இருப்பர்.

 ஆதலால் இவ்வடிப்படைகளை விளங்கி ஆலிம்களை தரக்குறைவாகவும், கேலி கிண்டல் செய்வதையும் தவிர்த்து நடக்க முயல்வோமாக!


_ அஸ்ஹான் ஹனீபா


أحدث أقدم