ஆஷூறா தினம் நோன்பு நோற்பதற்கான தினம்

ஆஷூறா தினம் என்பது நபி மூஸா (அலை) அவர்களையும் அவரை விசுவாசித்த மக்களையும் பிர்அவ்னிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய தினமாகும். 

இதே தினத்திலேயே நபிகளாரின் பேரர் ஹுஸைன் (றழி) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள் என வரலாறு கூறுகிறது. 

நபிகளார் மதீனாவுக்கு வந்த போது அங்கு வாழ்ந்த யூதர்கள் தமது நபியை காப்பாற்றியதை நினைவுகூர்ந்து  ஆஷூறா தினத்தில் நோன்பு நோற்றதை அவதானித்து தாமும் நோன்பு நோற்று தமது சமூகத்தையும் நோன்பு நோற்குமாறு வலியுறுத்தினார்கள். 

எனவே ஆஷூறா தினம் நோன்பு நோற்பதற்கான தினம் என்பதையே நபிகளாரின் போதனை உணர்த்துகிறது. நபிகளாரின் மரணத்தோடு மார்க்கம் முற்றுப்பெற்று விட்டதால் இத்தினத்தில் வேறு ஒரு நிகழ்வொன்றை மார்க்கத்தின் பெயரோடு அரங்கேற்றுவதற்கு நாம் அனுமதிக்கப்படவில்லை.

இவ்வகையில் ஹுஸைன் (றழி) அவர்களது படுகொலையை நினைந்து மேற்கொள்ளப்படும் ஷீஆக்களின் செயற்பாடுகள் மார்க்கத்துக்கு அப்பாற்பட்ட வழிகேடுகள் என்பதில் சந்தேகமில்லை.

கன்னத்தில் அறைந்து அலறுவதும் சட்டைகளை கிழிப்பதும் இரத்தம் ஓட்டுவதும் தெளிவாகவே மார்க்கம் தடுத்த விடயங்கள்.

நபிகளார் உயிருடன் இருக்கும் போது உஹுத் யுத்தத்தில் ஹம்ஸா (றழி) அவர்கள்  ஷஹீதாக்கப்பட்டார்கள். அவர்களது உடல் மிக மோசமாக  சித்திரவதை செய்யப்பட்டிருந்தது. அதை பார்த்து நபிகளார் மிக கவலையுற்று கண்ணீர் வடித்தார்கள். ஆனால் அத்தினத்தை துக்கதினமாக அவர்கள் பிரகடனப்படுத்தவில்லை.

அதன் பின்னரும் பல ஸஹாபாக்கள் பல்வேறு முறைகளில் அநீதமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக கலீபாக்களான உமர் (றழி), உஸ்மான் (றழி) ஆகியோர் ஷஹீதாக்கப்பட்டதற்காக அத்தினங்களை துக்க தினங்களாக இந்த சமூகம் அனுஷ்டிக்கவில்லை. 

ஹுஸைன் (றழி) அவர்களின் தந்தையார் அலி (றழி) அவர்கள் கூட அக்கிரமமாக கொல்லப்பட்டவர்கள்தான். தந்தையின் மரணத்தின் பின் சுமார் 21 ஆண்டுகள் ஹுஸைன் (றழி) அவர்கள் உயிருடன் வாழ்ந்தும் துக்கம் கொண்டாடும் தினத்தையோ வழக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. ஹுஸைன் (றழி) அவர்களை விட அலி (றழி) அவர்கள் சிறப்புக்குரியவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆயினும் அலி (றழி) அவர்களுக்காக துக்கம் கொண்டாடாமல் ஹுஸைன் (றழி) அவர்களுக்காக மனித நாகரிகத்தையே குழிதோண்டிப் புதைக்கும் வகையில் அடித்துக்கொள்வதும் வெட்டிக்கொள்வதும் மிக விநோதமானது!

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
أحدث أقدم