லைலதுல் கத்ர் இரவை அடையும் நேரத்தில் அந்த இரவுக்காகவே உள்ள சூரத்துல் கத்ரை பற்றி படிப்பது நல்லது. கத்ருடைய இரவைத் தவிர வேறு எந்த இரவையும் அல்லாஹ் அத்தனை கண்ணியப்படுத்தவில்லை. இந்த மகத்தான இரவைப்பற்றி அல்லாஹ் (சுபஹ்) என்ன கூறுகிறான்? இன் ஷா அல்லாஹ், இந்த இரவின் நன்மையை சிறந்த முறையில் அடையும் நோக்கத்துடன் இந்த சூராவை விரைவாக ஒரு முறை பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.
1. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
இந்த இரவு கண்ணியத்திற்கு காரணம், இவ்விரவில் தான் குர்’ஆன் அருளப்பட்டது என்பது தான்! உலகம் அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கும்போது, ஊழல் மலிந்திருக்கும்போது, சமுதாயம் நாசமாகிக்கொண்டிருக்கும்போது, முஹம்மது (ஸல்) என்ற மனிதர் பாலைவனத்திற்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தார். தன்னைச் சுற்றிலும் நிகழ்பவைகளைக் கண்டு மனம் நொந்து போயிருந்தார். சில இரவுகள் ஹிரா குகையில் தனித்திருக்க ஆரம்பித்தார். அம்மாதிரி ஒரு இரவில் தான் அல்லாஹ் (சுபஹ்) குர்’ஆன் அருள முடிவு செய்தான். மிகைப்படுத்துதல் எதுவும் இல்லாமல், இது தான் மனித சரித்திரத்திலேயே மகத்தான இரவு. அந்த இரவில் தான் அல்லாஹ் அஸ்ஸவஜல், மிகவும் சக்தி வாய்ந்தவன், மிகவும் மேலானவன், தன்னுடைய சொந்த சொற்களை இந்த உலகிற்கு அனுப்ப தீர்மானித்தான். ஏழு வானங்களுக்கு மேலிருந்து, அவன் “வழிகாட்டியும், கருணையும்” என வர்ணிக்கப்படுவதை அருளினான். அந்த இரவில் தான் முஹம்மது என்ற ஆடுமேய்ப்பர், முஹம்மது நபி(ஸல்)யாக மாறினார். அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது, இறைதூதர் முஹம்மதாக மாறியபோது, கதீஜா (ரலி) அவர்களின் கணவர் முஹம்மது, முஹம்மது அல் முஸ்தஃபாவாக (தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர்) மாறினார்.
இன்று நமக்கு இருக்கும், நம் தொழுகைகள், தர்மங்கள், மற்ற நற்செயல்கள் அனைத்திற்கும் வேர் பற்பல ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த இந்த லைலதுல் கத்ர் இரவில் தான் இருக்கிறது. அவ்விரவு அல்லாஹ் (சுபஹ்), போர் விரும்பிகளாக இருந்த அரபுகளை இப்பூமியில் வாழ்ந்த மனித குலத்திலேயே மிகச் சிறந்தவர்களாக மாற்றக்கூடிய ஒரு செய்தியை அனுப்பினான். இன்று சுமார் இரண்டு பில்லியன் முஸ்லிம்களின் நம்பிக்கையின் அடிப்படை இந்த இரவில் தான் உள்ளது. நம்மிடம் இருக்கும் எல்லா நன்மைகளுக்கும் அந்த இரவில் தான் ஏற்பட்டது. அது தான் கத்ருடைய இரவு. குர்’ஆனில் ‘மௌ’இதா’ என அழைக்கப்படுவது இந்த குர்’ஆன் தான். ‘மௌ’இதா’ என்றால், ‘இதயத்தை துளைக்கக்கூடிய அறிவுரை’ என விளங்கலாம்.
வரலாற்றின் போக்கை மாற்றியது இந்த இரவு தான்.
குர்’ஆனில் சூரத்துல் அலக்கிற்கு பிறகு சூரத்துல் கத்ர் வருகிறது. சூரத்துல் அலக், குர்’ஆனுடைய முதல் அத்தியாயத்தில் இருப்பதை குறிப்பிடுகிறது. சூரத்துல் கத்ர், அது அருளப்பட்ட இரவைப் பற்றி குறிப்பிடுகிறது. சூரா அலக் அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்ற கட்டளையுடன் முடிகிறது, சூரா கத்ர், அல்லாஹ்வை வணங்கி அவனை மகிழ்விக்க ஒரு சிறந்த இரவைத் தருகிறது.
2. மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
இந்த சக்தி மிக்க வசனத்தில் நாம் அறியாத ஒன்றை அல்லாஹ் நமக்கு அறிவிக்கிறான். அவன் நமக்கு ஏராளமானவற்றைக் கற்றுக்கொடுத்தது போல், அவன் மட்டுமே நமக்கு கத்ருடைய இரவைப்பற்றி கூற முடியும். மீண்டும் இரண்டாவது வசனத்தில் அல்லாஹ், “லைலதுல் கத்ர்” என்று கூறுகிறான். இது அந்த இரவின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.
3. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்
ஆண்டு முழுவதிலும் நமக்கு இத்தகைய சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. ஆயிரம் மாதங்கள் என்பது 83 ஆண்டுகளை விட அதிகமானது. நம்மில் பலர் அத்தனை காலம் வாழ்வதுமில்லை (பெரும்பாலான நாட்டினருக்கு ஆயுள் 55-65 ஆண்டுகள் தான் உள்ளன). அல்லாஹ்வுடைய பெரும் கருணையால், 83 ஆண்டுகள் வணங்கியதற்கான நன்மையை, அவனை வெறும் ஒரு இரவு வணங்குவதற்கு தருகிறான்! இதை விட எளிதாக எதாவது இருக்க முடியுமா?
அதனால், கடைசி 10 இரவுகளில் நாம் முயன்று செய்ய வேண்டிய நியமங்கள், 1. உபரித் தொழுகைகள், 2. உபரி திக்ருகள், 3. கூடுதல் குர்’ஆன் வாசிப்பு, 4. தர்மங்கள்.
சில அறிஞர்கள், “ஆயிரம்” என்ற சொல் மிக அதிகமான ஒன்றைக் குறிப்பதற்கு அடையாளமாக கூறப்பட்டுள்ளது என கூறுகிறார்கள். உண்மையில் அதை விட அதிக நற்கூலிகள் கிடைக்கும். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் தாராளமானவன். உலகெங்கும் உள்ள சமுதாயங்களில் இந்த இரவு ஏற்படுத்திய தாக்கங்களைத் திரும்பிப்பார்த்தால், அது உண்மையில் எத்தனை சிறப்பானது என்பதை புரிந்து கொள்ளலாம்!
4. அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
லைலதுல் கத்ர் இரவில் தான் அல்லாஹ் (சுபஹ்) அடுத்த ஆண்டு நடைபெற வேண்டிய கட்டளைகளை அனுப்புகிறான். அந்த இரவில் தான் அடுத்த ஆண்டுக்கான நம்முடைய விதி விதிக்கப்படுகிறது. இறை விதியை மாற்றக்கூடியது ஒன்றே ஒன்று தான், அது தான் துவா என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதனால், எல்லா கட்டளைகளும் பூமிக்கு அனுப்பப்படும் இரவை விட துவா செய்வதற்கு ஏற்ற நேரம் வேறெதுவாக இருக்க முடியும்? மேலும், இந்த இரவின் கண்ணியம், ஜிப்ரீல் (அலை) அவர்கள் அந்த புனிதமான இரவில் இறங்கி வருவதால், அந்த இரவின் கண்ணியம் உறுதி செய்யப்படுகிறது. ஆயிரமாயிரம் மலக்குகள் உலகிற்கு இறங்கி வரும் இரவு அது. இது, அதிகமதிகமான துவாக்களை நாம் கேட்பதற்கும், அதிகமதிகமாக வணங்குவதற்கும் ஒரு சந்தர்ப்பம் நமக்கு.
5. சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
நம்முடைய நம்பிக்கையின் இறுதி முடிவு, இம்மையிலும், மறுமையிலும் நம் இதயத்தின் அமைதி தான். அது தான் இந்த லைலதுல் கத்ர் இரவு. அது அமைதி மற்றும் கருணையின் இரவு. அது நம் வாழ்வின் இரவு. நாம் செய்த ஒவ்வொரு பாவத்திற்கும் மன்னிப்பு பெறக்கூடிய இரவு இது. சுவனத்தில் நமக்கு ஒரு இடத்திற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இரவு இது.
லைலதுல் கத்ர் இரவு எப்போது என்ற பல வேறுபட்ட கருத்துக்களிடையே, நாம் செய்யக்கூடியவற்றில் மிகவும் சிறப்பானது, இன் ஷா அல்லாஹ், இறுதி பத்து நாட்களின் ஒவ்வொரு இரவிலும் வணக்க, வழிபாடுகளில் ஈடுபடுவது தான். அல்லாஹ் (சுபஹ்) நமக்கு அளித்துள்ள மாபெரும் சந்தர்ப்பத்தை நழுவ விட வேண்டாம். ரமதானின் கடைசி பத்து இரவுகளையும் மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தி, அல்லாஹ்வுடைய மகிழ்வையும், சுவனத்தையும் அடைவோம்! அல்லாஹ் (சுபஹ்) நம்மிடமிருந்து ஏற்றுக் கொள்வானாக.