ஜும்மாவை சிறப்பானதாக்கும் 5 விஷயங்கள்

நாம் பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றைக் கொண்டாடுவது ஹலாலா, ஹராமா என்று அடிக்கடி சர்ச்சை செய்கிறோம். உண்மையில் இது ஒரு மிகவும் சிக்கலான மற்றும் மதிக்கப்பட வேண்டிய விஷயமும் கூட. ஆனால், பதில் சொல்வதற்கு எளிதானதும், இன்னும் நடைமுறையில் சாத்தியமான கேள்வி, இந்த உபரியான விழாக்களைக் கொண்டாடுவது தேவையா? என்பது தான்.

இஸ்லாத்தில், கூட்டுத் தொழுகை, ஹஜ், ஒன்றாக அமர்ந்து உண்ணுவது, மற்றவர்களுக்கு உதவுவது, வலிமையுள்ளவர்கள், பலவீனமானவர்களுக்கு உதவுவது, ஆரோக்கியமானவர்கள், நோயாளிகளைச் சென்று பார்ப்பது, இளையவர்கள், பெரியவர்களைப் பார்த்துக் கொள்வது போன்ற, வணக்கங்களிலும், நடைமுறைகளிலும், குழுக்களாக செய்ய வலியுறுத்தப்படும் செயல்களின் விதிகளைக் காணலாம். இவையெல்லாம், கடமையானவை அல்லது மிகவும் பரிந்துரை செய்யப்பட்டவை.

திருமணம் மற்றும் குடும்ப அமைப்புக்கு இஸ்லாத்தில் மிக உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் விழாக்களையும், குடும்பங்கள் ஒன்று சேர்ந்து மகிழும் தருணங்களையும் இயற்கையாகவே விரும்புபவர்களாக நாம் இருக்கிறோம். கொண்டாடுவதற்கு எதுவும் இல்லையென்றாலும், நாம் புதிய விழாக்களைக் கண்டுபிடிக்கிறோம் அல்லது பிற சமுதாயத்தினருடைய கலாச்சாரங்களைப் பின்பற்றுகிறோம்.

இப்போது கேள்விக்குத் திரும்பி வருவோம்: இந்த உபரியான விழாக்களைக் கொண்டாடுவது தேவையா? ஆம் – ஒரு மாற்று வழி கிடைக்காத பட்சத்தில். வருடத்தில் இரண்டு நாட்களை – ஈத் அல் ஃபித்ர், ஈத் அல் அதா – அல்லாஹ் விழாக்களாக அறிவித்திருக்கிறான். ஆனால், அடிக்கடி வரும் மூன்றாவதாக உள்ள ஒரு விழாவை – ஜும்மா தினத்தை நாம் அலட்சியப்படுத்துகிறோம். அந்நாள் ஏன் அத்தனை சிறப்பானது என்ற காரணங்களைப் பார்ப்போம்:

1. நபி ﷺ அவர்கள் ஜும்மா தினத்தை பெருநாள் என்று கூறினார்கள்: இந்நாள், முஸ்லிம்கள் மீது அல்லாஹ் விதித்துள்ள ஒரு ஈத் (பெருநாள்). வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வரும் ஒருவர் குளித்து, நறுமணம் இருந்தால் அதைப் பூசிக்கொண்டு, மிஸ்வாக்கையும் பயன்படுத்தட்டும்.’ (இப்னு மாஜா 1098)
இந்நாளை நாம் உண்மையிலேயே ஒரு ஈத் பெருநாளைப் போல் ஆக்கினோம் என்றால், அதன் பிறகு நமக்கு வேறெந்த விழாவும் வேண்டுமென்ற தேவை ஏற்படாது.

2. குர்’ஆனில் ‘ஜும்மா’ (சூரா. 62)என்ற பெயரில் ஒரு முழு சூரா.

3. நபி ﷺ இதை ஒரு சிறந்த தினம் என்று கூறினார்கள்: சூரியன் உதிக்கும் நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமை. (முஸ்லிம் 854)

4. அன்று தான் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அன்றுதான் சொர்க்கத்திற்குள் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அன்றுதான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

5. அன்று தான் நபி ﷺ அவர்கள் அரஃபா பெருவெளியில் நின்று தன்னுடைய இறுதி உரையை நிகழ்த்தினார்கள். (புகாரி 45)

மனிதர்கள் சமூக பிராணிகள். நாம் அப்படி படைக்கப்பட்டுள்ளோம். நம்முடைய இறுதி நோக்கமான சுவனத்தை அடைவதற்கு நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும். அல்லாஹ் ﷻகூறுகிறான், “உமது இறைவனின் ரஹ்மத்தை (நல்லருளை) இவர்களா பங்கிடுகிறார்கள்? இவர்களுடைய உலகத் தேவைகளை இவர்களிடையே நாமே பங்கிட்டு இருக்கிறோம்.” இவர்களில் சிலர், சிலரை ஊழியத்திற்கு வைத்துக் கொள்ளும் பொருட்டு, இவர்களில் சிலரை, சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம்; உம்முடைய இறைவனின் ரஹ்மத்து அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதை விட மேலானதாகும்.” [அல் குர்’ஆன் 43:32]

நம்மால் ஜும்மாவுடைய பரிசை ஏற்றுக்கொள்ள முடிந்தால், “உபரி”யான விழாக்களை கொண்டாடுவதற்கு சாக்கு, போக்குகள் தேடுவதை விட்டுவிடக்கூடும்.
أحدث أقدم