த’வா செய்யும்போது தவிர்க்க வேண்டிய 4 விஷயங்கள்

குர்’ஆனில் அல்லாஹ் (சுபஹ்) மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்கும்படியும் கூறுகிறான். [“(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!” - அல் குர்’ஆன் 16:125]. இருப்பினும், இப்போதெல்லாம், அறிவற்ற, பயனற்ற த’வா செய்வது சாதாரணமாகி விட்டது ஒரு வருந்தத்தக்க விஷயம். இவை, மக்களை இஸ்லாத்தை நெருங்க வைப்பதற்கு பதிலாக, இஸ்லாத்தை விட்டு தூரமாக்குவதற்கு தான் உதவும்!

த’வாவில் சாதாரணமாக நாம் தவிர்க்க வேண்டிய நான்கு அறிவற்ற விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன!

1. பிரிவினைகளைப் பற்றி பேசுதல்

நான் முதன் முதலில் இஸ்லாத்திற்குத் திரும்பிய போது, நான் குர்’ஆன் எப்படி ஓதுவது, தொழுகையை எப்படி முழுமையாக்குவது, அல்லாஹ் என்றால் யார் போன்றவற்றை விட, இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள பிரிவினைகளைப் பற்றி தான் அதிகம் அறிந்து கொண்டேன்.

பிரிவினைகள் உண்டு என்பது உண்மை, ஆனால், அல்லாஹ் (சுபஹ்) தெளிவாகவும், சந்தேகத்திற்கு இடமில்லாமலும், பிரிவினைகளைத் தவிர்க்கும்படி கூறியுள்ளான். ஒரு முஸ்லிமல்லாத நபர், ஒரு புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர், அல்லது புதிதாக இஸ்லாத்தை கடைபிடிக்க ஆரம்பித்த ஒருவர் இஸ்லாத்தை நோக்கி வரும்போது, அவர் அல்லாஹ்வை அறிந்து கொள்வதற்கும், குர்’ஆனைப் படிப்பதற்கும், தொழுகையை முழுமையாக்குவதற்கும் வழிகாட்டுங்கள்.

பிரிவினைகளைப் பற்றி பேசி அவர்களுடைய மனதை மாசு படுத்தாதீர்கள். எங்கள் சமுதாயத்தில் ஒரு கிறிஸ்தவ பையன் முஸ்லிம் ஆனான். அதன் பின் இஸ்லாத்தை விட்டு வெளியேறினான். காரணம், முஸ்லிம்களாகிய நாம் எப்படி பிளவு பட்டு, ஃபேஸ் புக்கில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பார்த்தது தான்!

2. பிறருடைய தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுதல்

இன்று இஸ்லாமிய சமுதாயத்தின் சுன்னத் போல இது ஆகி விட்டது. நிச்சயமாக இது நபி (ஸல்) அவர்களுடைய சுன்னத் அல்ல. ஆனால், நம் சமுதாயத்தின் வழிமுறையாகி விட்டது. யாராவது பிரபலமாகி, இஸ்லாமிய சமுதாயத்திற்கு பயன் தருபவராக இருந்தால், சமுதாயத்துக்குள்ளேயே அவரை முற்றிலும் ஒழிப்பதற்கு தீவிரமான முயற்சிகள் இருப்பது போல் தோன்றுகிறது.

நம்முடைய அறிஞர்களும், பேச்சாளர்களும் கூட மனிதர்கள் தான் என்பதை உணர வேண்டிய தருணம் இது. ஒவ்வொரு மனிதரும் தவறு செய்யக் கூடியவர் தான். ஒரு பேச்சாளர் தவறு செய்த மூன்று நிமிடங்களைக் கண்டுபிடிக்க அவருடைய ஐந்து மணி நேர பேச்சைக் கேட்டு அவரை நாம் எப்படி தூற்ற முடியும்?
நாம் ஏன் நம்முடைய இத்தனை நேரம், முயற்சி, சக்தி இவற்றை மற்ற மனிதர்களை வீழ்த்துவதற்கு செலவழிக்கிறோம்? அதே சக்தி, முயற்சி மற்றும் நேரத்தை நம்முடைய முஸ்லிமல்லாத அண்டை வீட்டாரை இஸ்லாத்தின் பால் அழைப்பதற்கும், இஸ்லாத்தை அவ்வளவாக பின்பற்றாத உங்கள் இளைய சகோதரி ஈமானையும், குர்’ஆனையும் கற்றுக் கொள்வதற்கு உதவுவதற்கும் பயன்படுத்தலாம்.

3. மக்களை எடை போடுவது

இஸ்லாமிய சமுதாயம் மக்களை வாளின் முனையில் நிறுத்தி அவர்கள் சொர்க்கவாசியா, நரகவாசியா என்று தீர்ப்பு சொல்வதை மிகவும் நேசிக்கிறது. கூகுள் அறிவுடன் மற்றவர்களுடைய நடத்தையை ஹலால் அல்லது ஹராம் என தரம் பிரிக்கிறோம்.

இவையெல்லாம் அல்லாஹ்வுடைய விதிகள் – அதனால் அவை புனிதமானவை என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம். ஹலால், ஹராமை நிர்ணயிப்பதை அறிஞர்களிடம் விட்டு விடுவோம். அரபி அறிவோ, குர்’ஆன், சுன்னாவின் அறிவோ இல்லாத நாம் அதை கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம்!
நாம் அதை மட்டும் செய்வதில்லை. சில சமயங்களில், நாம் மக்களை சொர்க்கம் அல்லது நரகத்திற்கும் போகக் கூடியவர்கள் என்று தரம் பிரிக்கிறோம். நாம் மக்களை அவர்களைப் பார்க்கும் முதல் பார்வையிலேயே எடை போடுகிறோம் – அவர்களுடைய தாடியின் நீளம், கால் சட்டை எது வரை இருக்கிறது, ஹிஜாப் எத்தனை நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது, அவன் அல்லது அவள் யாரிடம் பேசுகிறார்கள் என்பது போன்ற விஷயங்களின் அடிப்படையில்.

இருப்பினும், ஒருவர் முற்றிலும் ஹராமான ஒன்றில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது நாம் அவர்களுக்கு த’வா செய்வது மிகவும் முக்கியம். அவர்களுக்கு அறிவுரை செய்ய மிகவும் நல்ல, மரியாதையான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்!

4. குர்’ஆன், சுன்னாவைப் பற்றி ஆழமற்ற, மேலோட்டமான பேச்சுக்கள்

குர்’ஆன், சுன்னாவுடைய ஆழம், மிக, மிக ஆழமான இலக்கியம் என்பதை நாம் நினைவில் வைத்திருப்பது அவசியம். நாம் எதையாவது ஆழமாக விவாதிக்கா விட்டால், தவறான புரிதலுக்கு அதிக இடம் இருக்கிறது. பல சமயங்களில். நாம் குர்’ஆனிலிருந்து வசனங்களை மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கிறோம்.

இது ஒரு வகையில் குர்’ஆனை மாசு படுத்துவது. அல்லாஹ்(சுபஹ்)வே நபி (ஸல்) அவர்களுக்கு குர்’ஆனை பகுதி, பகுதியாக பிரித்து, ஒரு தடவைக்கு சில வசனங்களாகவே அருளியுள்ளான்.

சில சமயங்களில் நம் தலைகளில் சில கருத்துக்களை வைத்துள்ளோம். அவற்றிற்கு பொருந்துவது போல் வசனங்களையும், உரைகளையும் திணிக்கிறோம். இது அல்லாஹ்வுடைய வேதத்திற்கு செய்யக்கூடிய பெரும் தீங்கு. இது ஒரு அவமதிப்பும் கூட. ஏனென்றால், அல்லாஹ்வுடைய வேதத்திற்கு மேலாக நம்முடைய கருத்துக்களை கருதுகிறோம். அதனால், வேதத்திற்கு பொருத்தமாக நம்மை ஆக்கிக் கொள்வதற்கு பதிலாக, நம்முடைய கருத்துக்குள் குர்’ஆனையும், சுன்னாவையும் திணிக்கப் பார்க்கிறோம்.

த’வா என்பது அதிகமாக மேற்கோள் காட்டுவதைப் பற்றியதல்ல, அது, உள்ளங்களை அடைவதைப் பற்றியது தான்.

ஒரு மனிதர் “அல்லாஹ் யார்?” என்று கேட்டதற்கு பதிலாக அல்லாஹ், மிகச்சிறிய சூராக்களில் ஒன்றான சூரா இக்லாஸை அருளினான். அதற்காக அல்லாஹ், பல சூராக்களை அருளவில்லை, அல்லது ஒரு நீண்ட குழப்பமான பதிலைத் தரவில்லை!

மாறாக, அல்லாஹ் ஒரு ஆழமான சூராவை அருளினான். ஒரு சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளக் கூடிய இந்த சூராவுக்கு மாத்திரம் பல பாகங்கள் தஃப்சீர் எழுதப்பட்டன!
أحدث أقدم