மறைவானவற்றை நம்புதல்


சூறதுல் பகரா -03

எஸ்.எச்.எம் இஸ்மாயில் (ஸலபி)

﴿ٱلَّذِینَ یُؤۡمِنُونَ بِٱلۡغَیۡبِ وَیُقِیمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقۡنَـٰهُمۡ یُنفِقُونَ﴾ [البقرة ٣]
 "அவர்கள் மறைவானவற்றை நம்பிக்கை  கொள்வார்கள்; தொழுகையையும் நிலை நாட்டுவார்கள்; நாம் அவர்களுக்கு வழங்கிய வற்றிலிருந்து (நல்லறங்களில்) செலவும் செய்வார்கள்." (2:3)

இந்தக் குர்ஆன் மூலம் நேர்வழி பெறுவதற்கு குர்ஆன் கூறும் முதல் தகுதியாக "மறைவானவற்றை நம்புதல்" என்ற பண்பைக்  குர்ஆன் குறிப்பிடுகின்றது. "மறைவானவை"

என்றால் மனிதனது பகுத்தறிவினாலோ ஐம்புலன்களினாலோ அறிந்து கொள்ள  முடியாத விடயங்களைக் குறிக்கும். இதன் அர்த்தம் மறைவானவை என்று கூறப்படும் அனைத்தையும் நம்ப வேண்டும் என்பதல்ல.'

அல்லாஹ்வும் அவன் தூதர்களும் அறிவித்த மறைவான விடயங்கள் அனைத்தையும் ஏன்? எதற்கு? எப்படி? என்ற எந்தக் கேள்வியும் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் மறைவான விடயங்களை ஆய்வு செய்தோ, தொட்டோ, நுகர்ந்தோ, சுவைத்தோ பரீட்சித்துப் பார்த்தோ ஏற்க முடியாது. சொன்னதை அப்படியே நம்ப வேண்டும் அதற்காக யார்யாரோ சொல்வதை எல்லாம் நம்ப வேண்டியதில்லை. அல்லாஹ் ஒருவன் மட்டுமே மறைவானவற்றை அறிந்தவன். அல்லாஹ்வோ அவனது தூதரோ கூறிய மறைவான விடயங்களை அப்படியே நம்ப வேண்டும். மறுமை, சுவனம்-நரகம், விசாரணை, அல்லாஹ்வின் பண்புகள், மலக்குகள், ஜின்கள் பற்றியெல்லாம் குர்ஆன் மற்றும் சுன்னா கூறுகின்றவற்றை அப்படியே நம்புதல் என்பதை இது குறிக்கும்

மறைவான விடயங்கள் குறித்து  தேவையற்ற ஆய்வுகள்,  ஆராய்ச்சிகள், குதர்க்கவாதங்கள் என்பவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். சிலர் ஆய்வு என்ற பெயரில் மறைவான விடயங்கள் தொடர்பில் மயிர் பிளக்கும் ஆராய்ச்சியில் இறங்கி தேவையற்ற குழப்பங்களையே கூட்டியுள்ளனர்.

அடுத்து அல்லாஹ்வையும் அவனது தூதரையும் தவிர மறைவான விடயங்களை யாராவது அறிவித்தால் அதை முழுமையாக மறுக்க வேண்டும். ஏனெனில், இது குறித்து அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவன் சொல்ல வேண்டும் அல்லது அவனால் அறிவித்துக் கொடுக்கப்பட்டு இறைத் தூதர்கள் கூற கூற வேண்டும். அப்படியில்லாது மறைவான விடயங்களைக் கூறும் சாஸ்திரக் காரர்கள், குறி சொல்பவர்கள் மறுக்கப்பட வேண்டியவர்களாவார்கள்.

மறுமை ஈடேற்றத்திற்குத் தேவையான மறைவான செய்திகள் அனைத்தையும் அல்லாஹ் நபிக்குக் கற்றுத் தந்துவிட்டான். எனவே, இதற்கு மேல் மறைவான செய்திகள் குறித்து தேடி அலைய  வேண்டியதில்லை.சொல்லப்பட்ட  செய்திகளை மட்டும் சொல்லப்பட்ட அமைப்பில் அப்படியே நம்ப வேண்டும். இதனை நேர்வழி பெறுவதற்கான முக்கிய தகுதியாக குர்ஆன் குறிப்பிடுகின்றது.
Previous Post Next Post