சூதில் பகரா -02
எஸ்.எச்.எம் இஸ்மாயில் (ஸலபி)
﴿ذَ ٰلِكَ ٱلۡكِتَـٰبُ لَا رَیۡبَۛ فِیهِۛ هُدࣰى لِّلۡمُتَّقِینَ﴾ [البقرة ٢]
"இது வேதமாகும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பயபக்தியாளர்களுக்கு நேர்வழி காட்டக் கூடியதாகும். (2.2)
மேற்படி வசனம் இந்தக் குர்ஆன் பயபக்தியுடையவர்களுக்கு நேர்வழிகாட்டக் கூடியது என்று குறிப்பிடுகின்றது.
ரமழான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும். நேர்வழியைத் தெளிவுபடுத்தக் கூடியதாகவும், (சத்தியத்தையும், அசத்தியத் தையும்) பிரித்தறிவிக்கக் கூடியதாகவு முள்ள அல்குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டது." (2:185)
மேற்படி வசனத்தில் முழு மனித சமுதாயத்திற்கும் நேர்வழி காட்டக் கூடியது என்று கூறப்படுகின்றது. இரண்டையும் பார்த்தால் முரண்பாடு போன்று தெரியலாம். எனவே, குர்ஆனில் "ஹுதன்" அல்லது ஹிதாயத் என்ற இந்தப் பதம் பயன்படுத்தப்படுகின்ற விதத்தைப் புரிந்து கொண்டால் இந்தக் குழப்பம் நீங்கிவிடும்.
"ஹுதன்" என்ற பதம் இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தப்படும்.
01. சத்தியத்தைத் தெளிவுபடுத்துதல் .
02. சத்திய வழியில் செலுத்துதல் நேர்வழியைவழங்குதல் அருளுதல்.
முன்னையது பொதுவானது பின்னையது குறிப்பானது. .
'இன்னும், 'ஸமூத்' கூட்டத்தினருக்கு நேர்வழியைக் காண்பித்தோம். அவர்கள் நேர்வழியை விட குருட்டுத் தனத்தையே விரும்பினர். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவற்றின் காரணமாக இழிவு தரும் வேதனையாகிய இடியோசை அவர்களைப் பிடித்துக் கொண்டது. 41:17
மேற்படி வசனத்தில் "பஹதைனாகும்" என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அவர்களை நேர்வழியில் செலுத்தினோம் என்று அர்த்தம் கூற முடியாது. ஏனெனில், அவர்கள் குருட்டுத் தனத்தைத் தேர்ந் தெடுத்துக் கொண்டனர் என்று அடுத்து இடம்பெறுகின்றது.
இங்கே அவர்களுக்கு நேர்வழியைக் காட்டினோம் என்பதே அர்த்தமாகும்.
"நிச்சயமாக நாம். மனிதனுக்கு (நேர்) வழியைக் காண்பித்துள்ளோம். அவன் நன்றி உள்ளவனாகவோ, நன்றி கெட்டவனாகவோ இருக்கின்றான்.” (76:3)
இங்கு "ஹதைனாஹு" என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மனிதனை நேர்வழியில் செலுத்தினோம் என்று அர்த்தம் செய்ய முடியாது. நேர்வழியைக் காட்டினோம் என்றுதான் அர்த்தம் செய்ய முடியும். ஏனெனில் நேர்வழியையும் தவறான வழியையும் மனிதனுக்குப் பிரிததுக் காட்டியதாக இந்த வசனம் கூறுகின்றது.
எனவே, அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டக்கூடியது. இறையச்சம் உள்ளவர்களை நேர்வழியில் செலுத்தக்கூடியது என்று அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும். நேர்வழியில் செலுத்துதல் என்ற அர்த்தத்திலும் அல்குர்ஆனில் இந்த வார்த்தை இடங்களில் பயன்படுத்தப் பல பட்டுள்ளது.
யாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த விரும்புகின்றானோ, அவரது உள்ளத்தை அவன் இஸ்லாத்தின் பால் விரிவாக்குவான். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விட நாடுகின்றானோ, அவனது உள்ளத்தை வானத்திற்கு ஏறிச் செல்பவன் (உள்ளம்) போன்று இறுக்கமானதாகவும் கஷ்டமானதாகவும் ஆக்கிவிடுகின்றான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதோரின் மீது அவன் தண்டனையை ஏற்படுத்தி விடுவான். " (6:125)
இந்த இடத்தில் நேர்வழியைக் காட்டுவதற்கு என்று அர்த்தம் செய்ய முடியாது. நேர்வழியில் செலுத்துதல் என்றே அர்த்தம் செய்ய வேண்டும்.'
"(நபியே!) நீர் விரும்புபவரை நேர்வழியில் செலுத்த நிச்சயமாக உம்மால் முடியாது. எனினும், அல்லாஹ் தான் நாடுவோரையே நேர்வழியில் செலுத்துகின்றான். நேர்வழியில் செல்வோரை அவனே மிகவும் அறிந்தவன். (28:56)
இங்கு "இன்னக லா தஹ்தி" என்ற பதம் பயன் படுத்தப்பட்டுள்ளது. நபியைப் பார்த்து உம்மால் நேர்வழியைக் காட்ட முடியாது என்று இதற்கு அர்த்தம் செய்ய முடியாது. நபியவர்கள் நேர்வழியைக காட்ட வந்தவர்தான்.
எனவேதான் இங்கே நேர்வழியில் செலுத்த மூடியாது என்று அர்த்தம் செய்யப்படுகின்றது.
.
நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பதையில் வழி காண்பிக்கின்றீர்...42:52
இந்த வசனத்தில் இன்னக லதஹ்தி என்று வந்திருக்கும் வார்த்தைக்கு நீ நேர்வழியில் செலுத்துவார் என்று பொருள் செய்ய முடியாது.அப்படிச் செய்தால் முன்னைய வசனத்திற்கு அது முரணாகும்.
இந்த விளக்கத்தின் அடிப்படையில் ஆரம்பத்தில் கூறிய (2:2) வசனத்திற்கு பயபக்தியுடையவர்களை இது நேர்வழியில் செலுத்தக் கூடியது" என்று அர்த்தம் செய்வதே ஏற்றமானதாகும்.
அடுத்து நாம் தமிழில் பிரார்த்திக்கும் போது எமக்கு நேர்வழியைக் காட்டுவாயாக என்று பிரார்த்திக்காது,"எம்மை நேர்வழியில் செலுத்துவாயாக "என்றே பிரகர்த்திக்க வேண்டும். நேர்வழியைக் காட்டுவாயாக என்று பிரார்த்திப்பது பொருள் கனதி குறைந்ததாகும்.
அடுத்து அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழியைக் காட்டக் கூடியது. ஆனால், உலக மக்கள் அனைவரையும் நேர்வழியில் செலுத்தாது என்று அர்த்தம் கொள்வது குர்ஆனுக்கு குறைவுடையதாகாது.
ஒருவன் ஒரு பொருளைப் பார்க்க வேண்டும் என்றால் பார்ப்பவனின் கண்ணிலும் ஒளி இருக்க வேண்டும். பார்வையற்றவனால் பார்க்க முடியாது. பார்க்கப்படும் பொருளிலும் ஒளியிருக்க வேண்டும். இருளில் இருக்கும் பொருளைப் பார்வையுடையவனாலும் பார்க்க முடியாது.
பார்வையற்றவனுக்குப் பட்டப்பகலிலும் இருள் படர்ந்துதான் தெரியும். அது சூரியனின் குறைபாடு அல்ல. பார்ப்பவனின் பார்வையில் உள்ள குறைபாடு குர்ஆன் சூரியனைப் போன்று சத்திய ஜோதியைப் பிரகாசித்துக் கொண்டே இருக்கின்றது. உள்ளத்தில் "தக்வா" எனும் ஒளி இல்லாதவர்களை அல்குர்ஆன் நேர்வழியில் செலுத்தாது என்பது குர்ஆனின் குறைபாடு அல்ல. அது தவறான வழியில் உள்ளோரின் உளக் குறைபாடாகும்.