நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றியும், அவனது பெயர்கள் மற்றும் பண்புகளைப் பற்றியுமான பேச்சானது மகத்தான ஒரு பேச்சாகும். (அந்தப்) பேச்சிற்கு வேறு எந்த ஒரு பேச்சும் ஈடாகாது. அது புத்திகள் சூழ்ந்தறிந்து கொள்ள இயலாத, பார்வைகள் அடைந்து விட முடியாத, வஹியின் மூலமாக தூதர்கள் அறிவித்த அளவைத் தவிர எந்த ஒருவராலும் அவரின் அறிவினால் சூழ்ந்தறிந்து கொள்ள இயலாதவனைப் பற்றிய பேச்சாகும்.
அல்லாஹ்வுடைய அழகிய பெயர்களுடன் வாழ்வதும், அவற்றைப் பற்றி சிந்திப்பதும் வேறு ஒரு வாழ்க்கையாகும். அவற்றினால் ஒரு மனிதர் வேறொரு உலகத்திற்கு சென்று விடுவார். மனிதர்களுடைய குறுகிய பொருள் சார்ந்த வாழ்க்கையை விட்டுவிட்டு, அதைவிட விசாலமான வான்வெளிக்குப் பறந்து, சுற்றிட ஆரம்பித்து விடுவார்.
மேலும், ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கையானது அந்த பெயர்களைப் பற்றி படித்ததன் பிறகு மாறிவிடும் என நான் உறுதியாக கூறுகின்றேன். அதன் பிறகு இவ்வாழ்கையை வேறு ஒரு கோணத்தில் பார்க்க ஆரம்பித்து விடுவார். அதில் பல புதிய அர்த்தங்களைக் கண்டுகொள்வார். மேலும் நிறைய (உலக) இரகசியங்களுக்கு விளக்கங்கள் (அவருக்கு) வெளிப்பட்டுவிடும்.
அல்லாஹ்வுடைய அழகிய பெயர்களைப் பற்றி படிப்பதற்கு மிகப்பெரும் முக்கியத்துவமும், அதிகமான பயன்களும் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை பின்வருபவையாகும்:-
அல்லாஹ்வைப் பற்றி அறிந்து கொள்வது
எவர் தனது இரட்சகனைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவாரோ, மேலும் அவனிடத்தில் நெருக்கத்தைத் தேடுவாரோ, அவர் மீது அவனுடைய அழகிய பெயர்கள் மற்றும் அவனது உயரிய பண்புகளைப் பற்றிப் படிப்பதில் கவனம் செலுத்துவது கடமையாக இருக்கின்றது. இதன் காரணமாகவே, அல்லாஹ்வின் அழகிய பெயர்களைப் பற்றிய கல்வியானது மிகச்சிறப்பிற்குரிய கல்விகளிலிருந்தும் உள்ளதாகும். ஏனெனில், ஒரு கல்வியின் சிறப்பானது (அதிலுள்ள) கற்றுக்கொள்ளப்படும் விடயத்தின் சிறப்பைப் பொருத்தே இருக்கின்றது. மேலும், இங்கே கற்றுக்கொள்ளப்படுவது அல்லாஹ்வைப் பற்றியாகும்.
ஈமான் அதிகரிப்பது மேலும் அது (உள்ளத்தில்) உறுதியாகுவது
ஈமான் (நன்மையான காரியங்களைச் செய்வதன் மூலம்) அதிகரிக்கும், மேலும் (பாவங்கள் செய்வதினால்) குறையும். அல்லாஹ்வை அவனது பெயர்களைக் கொண்டு அறிந்துகொள்வது, (உள்ளத்தில் ஈமான்) அதிகரிப்பதற்கும், வலுப்பெறுவதற்கும், உறுதியாகுவதற்கும் உள்ள காரணிகளில் மிகவும் முக்கியமானவற்றிலிருந்து உள்ளதாகும்.
அவற்றை (அழகிய பெயர்களைக்) கொண்டு அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்திப்பது, மேலும் அவனிடம் (தேவைகளைக்) கேட்பது
எவர் அல்லாஹ்வுடைய அழகிய பெயர்களை அறிந்து கொள்வாரோ, மேலும் அவற்றின் அர்த்தங்களை விளங்கிக் கொள்வாரோ, அவர் (அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்திக்கும் பொழுது) எவற்றை (எப்பெயர்களைக்) கொண்டு அழைத்து பிராத்திக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வார்.
அல்லாஹ் கூறுகின்றான்:
وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اَسْمَآٮِٕهٖ ؕ سَيُجْزَوْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
'இன்னும், அல்லாஹ்வுக்கு மிக்க அழகான பெயர்கள் இருக்கின்றன, ஆகவே அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள், அவனுடைய பெயர்களில் (தவறான பொருள் கொண்டு) திரித்துக் கூறுவோரை விட்டுவிடுங்கள், அவர்கள் செய்து கொண்டிருந்தவைக்குரிய கூலியைக் கொடுக்கப்படுவார்கள்'. (அல்குர்ஆன் : 7:180).
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ ؕ اَ يًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى ۚ
'(நபியே!) நீர் கூறுவீராக! “அல்லாஹ் என்று அழையுங்கள், அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள், (இவ்விரண்டில்) எதைக் கொண்டு நீங்கள் அவனை அழைத்த போதிலும் அவனுக்கு அழகான பெயர்கள் இருக்கின்றன'. (அல்குர்ஆன் : 17:110)
உரிய முறையில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வது
அல்லாஹ்வை அறிய வேண்டிய முறையில் அறிந்தவரைத் தவிர, (வேறெவரும்) அவனை அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சமாட்டார்.
மேலும் அவனைப் பற்றி அறிந்து கொள்வது என்பது, அவனுடைய அழகிய பெயர்களையும், உயரிய பண்புகளையும் அறிவதைக் கொண்டே தவிர முழுமை பெறாது.
இமாம் இப்னு கஸீர் அவர்கள் கூறுகின்றார்கள்: "அவனைப் பற்றி அறிந்து வைத்திருக்கின்ற அறிஞர் பெருமக்களே, அவனை அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சுவார்கள். ஏனெனில், மகத்தான (யாவற்றின் மீதும்) ஆற்றலுடைய, (எல்லாவற்றையும்) அறிந்திருக்கின்ற, பரிபூரணமான பண்புகளையும், மிக அழகிய பெயர்களையும் கொண்டிருக்கின்றவனை (அல்லாஹ்வைப்) பற்றிய அறிவும், ஞானமும் எந்த அளவிற்கு (ஒருவரது உள்ளத்தில்) பரிபூரணமாக மற்றும் முழுமையாக இருக்குமோ, அந்த அளவிற்கு அவனைப்பற்றிய மகத்தான, அதிகமான உள்ளச்சம் இருக்கும்".
உள்ளத்தை பரிசுத்தப்படுத்துவது மற்றும் அதனை சீர்படுத்துவது
நிச்சயமாக உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துவதற்கு அல்லாஹ்வைப் பற்றி அறிந்து கொள்வதை விட மிகவும் பயன்மிக்க ஒரு விடயமில்லை.
யார் தனது இறைவனை, அவனது அழகிய பெயர்களைப் படிப்பதன் வாயிலாக அறிய வேண்டிய முறையில் அறிந்து கொள்வாரோ, அவருடைய உள்ளம் தூய்மையும், பரிசுத்தமும் அடையும். மேலும் சிறப்பு மற்றும் அந்தஸ்தில் உயர்வடையும்.
உள்ளத்தின் இன்பம், விசாலம் மற்றும் அமைதியை உண்மையான முறையில் பெற்றுக் கொள்வது
அல்லாஹ்வுடைய அழகிய பெயர்களையும் உயரிய பண்புகளையும் அறிந்து கொள்வதை விட மனதிற்கு மிகவும் இன்பமான, எந்தவொரு விடயமும் இல்லை.
அல்லாஹ்வுடைய அழகிய பெயர்கள் மற்றும் அவனது உயரிய பண்புகளுக்கு (அவற்றை அறிந்து கொள்வதற்கு) மகத்தான நலன்களும், சங்கைமிகு பலன்களும் உள்ளன. அவற்றை எந்த ஒருவராலும், (முழுவதுமாக) எண்ணிவிட முடியாது.
"உனது புகழ் முழுவதையும் என்னால் எண்ணி விட முடியாது (நான் எவ்வளவு முயன்றாலும் உனது தகுதிக்கேற்றவாறு என்னால் உன்னை புகழ இயலாது). நீ உன்னை எவ்வாறு புகழ்ந்தாயோ, அவ்வாறே நீ இருப்பாய்!" என்று நபி ﷺ அவர்கள் கூறுபவர்களாக இருந்ததே (இந்த விடயத்தில்) உனக்குப் போதுமானதாகும்.
இந்த சுருக்கமான (கட்டுரையில்), அல்லாஹ்வுடைய அழகிய பெயர்களையும் அவனது உயரிய பண்புகளையும் அறிவதன் மிக பிரபல்மான பயன்களை (மட்டும்) குறிப்பிடுகின்றோம்.
எந்தளவுக்கென்றால், நீ இந்த சுவனத்தில் நுழைந்துவிட்டால், (அதாவது) அல்லாஹ்வுடைய அழகிய பெயர்கள் மற்றும் அவனது உயரிய பண்புகளை அறிந்துகொள்வதன் சுவனத்தில் நுழைந்துவிட்டால், (ஆச்சரியத்தால் மிகைக்கப்பட்டு) "மாஷா அல்லாஹ்! அல்லாஹ்வைக் கொண்டே தவிர எந்த ஒரு ஆற்றலும் இல்லை" என்று கூறுவாய்.
அல்லாஹ்வுடைய அழகிய பெயர்களை அறிந்து கொள்வது, சுவனத்தில் நுழைவதற்குரிய மகத்தான காரணிகளிலிருந்து உள்ளதாகும்
இமாம் புகாரி, அவர்களுடைய ஆதாரப்பூர்வமான தொகுப்பில் அறிவிக்கின்றார்கள், நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொன்னுற்று ஒன்பது பெயர்கள் உள்ளன, அவற்றை யார் "இஹ்ஸா" செய்வாரோ அவர் சுவனம் நுழைவார்".
அவற்றை 'இஹ்ஸா' செய்வதின் அர்த்தமானது, இமாம் இப்னுல் கைய்யிம் அவர்கள் கூறுவது போன்று: அல்லாஹ்வுடைய பெயர்களை "இஹ்ஸா" செய்தலுடைய படித்தரங்கள் மூன்றாகும்:
1. அந்த வார்த்தைகளையும் (அப்பெயர்களையும்) அவை சுட்டிக்காட்டுபவற்றையும் மனனமிட்டுக் கொள்வது அல்லது நன்றாக அறிந்து கொள்வது.
2. அவற்றின் (அப்பெயர்களின்) அர்த்தங்களையும் அவை அறிவிப்பவற்றையும் விளங்கிக் கொள்வது.
3. அவற்றைக்கொண்டு அவனை அழைத்துப் பிராத்திப்பது.
அல்லாஹ் கூறியது போல:
وَلِلَّهِ ٱلْأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ فَٱدْعُوهُ بِهَاۖ
'அல்லாஹ்வுக்கு மிக்க அழகான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக்கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள்.' [7:180]
யார் அல்லாஹ்வுடைய அழகிய பெயர்களை மனனம் செய்து, அவற்றின் பொருளை அறிந்து, அவை அவசியமாக்குபவற்றைக் கொண்டு அமல் செய்து, மேலும் அவற்றைக் கொண்டு அல்லாஹ்விற்கு வணக்க வழிபாடு செய்வாரோ, அவருக்கு அல்லாஹ்வுடைய மதிப்புமிக்க விலைப்பொருளான சுவனம் இருக்கின்றது.
அல்லாஹ்வுடைய அழகிய பெயர்களையும் உயரிய பண்புகளையும் அறிந்து கொள்வதே, அல்லாஹ்வை அறிந்து கொள்வதற்குரிய தலையாய பாதையாகும்
அல்லாஹ்வை அறிந்து கொள்வது என்பது இருவகைப்படும்:
1. பொதுப்படையான அறிதல்:
அல்லாஹ் இருக்கின்றான் எனப் பொதுவாக அறிந்து கொள்வதாகும். இந்த வகை அறிதலில் நல்லவர், தீயவர், கீழ்படிப்பவர், மாறுசெய்பவர் என எல்லா மக்களும் கூட்டாகின்றனர்.
2. குறிப்பான அறிதல்:
(இந்த வகை அறிதலானது) அல்லாஹ் எப்பொழுதும் அடியார்களை கண்காணிப்பதை மனதில் கொள்வது, அவன் முன்னர் (அவன் தடுத்தவற்றை செய்ய) வெட்கம் கொள்வது, அவனை நேசிப்பது, (எப்பொழுதும்) உள்ளம் அவனுடன் தொடர்பில் இருப்பது, அவனை சந்திக்க பேராவல் கொள்வது ஆகிவற்றை அவசியமாக்கும். இந்த வகை குறிப்பான அறிதல் என்பது அல்லாஹ்வுடைய அழகிய பெயர்களையும் அவனது உயரிய பண்புகளையும் அறிந்து கொள்வதாலேயே தவிர ஏற்படாது.
இமாம் இப்னுல் கைய்யிம் அவர்கள் கூறுகின்றார்கள்: "ஆன்மாக்களுக்கு, அவற்றைப் படைத்தவனை அறிவதன் பக்கம் இருக்கும் தேவையை விட வேறு ஒரு மகத்தான தேவை இல்லவே இல்லை.
அவனது பண்புகளையும், பெயர்களையும் அறிந்து கொள்வதைத் தவிர இதற்கு வேறு ஒரு பாதை கிடையாது.
எந்த அளவிற்கு இவற்றை ஒரு அடியான் நன்கறிந்திருக்கின்றானோ, அந்த அளவிற்கு அல்லாஹ்வைப் பற்றி மிகவும் அறிந்தவனாகவும், அவனை அதிகம் நாடுபவனாகவும், அவனிடம் மிகவும் நெருங்கியவனாகவும் ஆகிவிடுவான்.
மேலும் எந்த அளவிற்கு இவற்றை ஒரு அடியான் அறியாதவனாக இருக்கின்றானோ, அந்த அளவிற்கு அல்லாஹ்வைப் பற்றி மிகவும் அறியாதவனாகவும், அவனிடத்தில் மிகவும் வெறுக்கப்பட்டவனாகவும், அவனை விட்டும் மிகவும் தூரமானவனாகவும் ஆகிவிடுவான்.
ஒரு அடியான் தனது உள்ளத்தில் அல்லாஹ்வை எந்த இடத்தில் வைத்திருக்கின்றானோ, அவ்வாறே அல்லாஹ்வும் தனது உள்ளத்தில் அவனை வைத்திருக்கின்றான்.
அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளின் பாதையின் வாயிலாக அவனை நோக்கி பயணிப்பதன் அந்தஸ்தும் வெற்றியும் ஆச்சரியமானதாகும். அவரோ களைப்படையாதவராக தனது விரிப்பின் மீது சாய்ந்திருக்கும் நிலையில் அவருக்கு (எல்லா) இன்பங்களும் வந்து சேர்ந்து விடுகின்றன.
படைப்பாளனின் பண்புகளை அறியவில்லையெனில், (அல்லாஹ்வை) வணங்குவதின் உண்மைநிலையை உணர்ந்து கொள்ளவும், அதனை சொல்லாலும் செயலாலும் (நிஜவாழ்க்கையில்) உரிய முறையில் உண்மைப்படுத்தவும் அடியார்கள் ஆற்றல் பெறமாட்டார்கள்.
ஒருவர், ஒரு மனிதரின் மகளை திருமணம் செய்ய நாடினால், அல்லது (தனது மகளை) ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க நாடினால், அல்லது ஒருவருடன் கொடுக்கல் வாங்கல் செய்ய நாடினால், அவரது பெயர், புனைப்பெயர், அவரது தந்தை மற்றும் பாட்டன் பெயரைக் (கூட) அறிய விரும்புவார். மேலும் அவரது சிறிய மற்றும் பெரிய காரியங்கள் (என அனைத்தையும்) குறித்துக் கேட்பார்!
எனவே, நம்மை படைத்த, நமக்கு வாழ்வாதாரங்களை வழங்குகின்ற, மேலும் எவனது அருளில் நாம் ஆதரவுவைத்து, எவனது கோபத்தை விட்டும் நாம் அஞ்சுகின்றோமோ, அத்தகைய அல்லாஹ்வுடைய பெயர்கள், பண்புகள் மற்றும் அவற்றின் விளக்கங்களை அறிவதென்பது (மற்றவற்றை அறிவதைக் காட்டிலும்) ஆகத் தகுதியானதாகும்.
உபை இப்னு கஅப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: (மக்கத்து) இணைவைப்பாளர்கள் நபியவர்களிடம், "முஹம்மதே! உமது இறைவனின் வம்சத்தை எங்களுக்கு குறிப்பிடுவீராக!" என்று கேட்டார்கள்.
எனவே, (அதற்கு பதிலாக) அல்லாஹ் (அல்-இஃக்லாஸ் அத்தியாயத்தை) இறக்கியருளினான்:
قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ
(நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன்தான்.
ٱللَّهُ ٱلصَّمَدُ
(அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.)
وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ
மேலும் அவனுக்கு ஒப்பாக ஒன்றுமில்லை. [112:1-4].
அல்லாஹ்வுடைய அழகிய பெயர்களையும் அவனது உயரிய பண்புகளையும் அறிந்து கொள்வதே, அனைத்து வணக்க வழிபாடுகளின் அடிப்படையாகும்
ஆம். அல்லாஹ்வை அறிந்து கொள்வதுதான் (அவனது) கட்டளைகளை ஏற்று கீழ்ப்படிந்து நடப்பதற்கும், (அவனது) விலக்கல்களை தவிர்ந்து கொள்வதற்கும் அடிப்படையாகும்.
அல்லாஹ்வை (அறிய வேண்டிய முறையில்) அறிந்தவரைத் தவிர (வேறெவரும்) அல்லாஹ்வைக் கோபப்படுத்துபவற்றை விட்டு விலகி, மேலும் அல்லாஹ் விரும்புகின்றவற்றை ஏற்றுக் கீழ்ப்படிந்து நடக்கமாட்டார்.
இதன் காரணமாகவே ஸஹீஹ் அல்-புஹாரி மற்றும் ஸஹீஹ் அல்-முஸ்லிம் ஆகியவற்றில் வந்திருப்பதாவது: 'நபி ﷺ அவர்கள் முஆத் இப்னு ஜபல் அவர்களை யமன் நாட்டிற்கு (தஃவா செய்வதற்காக) அனுப்பியபொழுது, "அவர்கள் அல்லாஹ்வை (வணக்கத்தில்) ஒருமைப்படுத்த வேண்டுமென்பதே, நீங்கள் அழைப்பவற்றில் முதலாவதாக இருக்கட்டும்.
பின்னர் அவர்கள் அல்லாஹ்வை அறிந்து கொண்டால், அவர்களின் இரவுகளிலும் பகல்களிலும் (தொழுகும் படியான) ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கியுள்ளான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக.
அதையும் அவர்கள் செயல்படுத்தினால், அவர்களின் செல்வந்தர்களிடம் இருந்து பெறப்பட்டு அவர்களின் ஏழைகளுக்கு வழங்கும் படியான ஜகாத்தை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கியுள்ளான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக...' என்று கூறினார்கள்.
அல்லாஹ்வுடைய அழகிய பெயர்களை அறிந்து கொள்வது, பிராத்தனைகள் பதிலளிக்கப்படுவதற்குரிய காரணங்களில் மிகவும் மகத்தானவற்றிலிருந்து உள்ளதாகும்
அல்லாஹ் கூறுகின்றான்:
وَلِلَّهِ ٱلْأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ فَٱدْعُوهُ بِهَاۖ
அல்லாஹ்வுக்கு மிக்க அழகான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக்கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். [7:180]
அவனது அழகிய பெயர்களைக் கொண்டு நாம் அவனை அழைத்து பிரார்த்திக்கும்படி நமக்கு அவன் கட்டளையிட்டுள்ளான். மேலும் நமக்கு அவன் பதிலளிப்பதாகவும் வாக்களித்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
ادْعُوْنِىْۤ اَسْتَجِبْ لَـكُمْؕ
“நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன்." (அல்குர்ஆன் : 40:60)
எனவே, "யா அல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக" என்று அழைப்பதற்கும் "யா அல்லாஹ்! யா கஃப்பார்! (யாவற்றையும் மன்னிப்பவனே!) என்னை மன்னிப்பாயாக" என்று அழைப்பதற்கும் மத்தியில் பெரிய வேறுபாடு உள்ளது. (அவ்வாறே), "யா அல்லாஹ்! எனக்கு அருள் புரிவாயாக" என்று அழைப்பதற்கும், "யா ரஹீம்! (நிகரற்ற அன்புடையவனே!) எனக்கு அருள்புரிவாயாக" என்று அழைப்பதற்கும் மத்தியில் பெரும் வேறுபாடு உள்ளது. (அவ்வாறே), "யா அல்லாஹ்! எனக்கு வாழ்வாதாரம் அளிப்பாயாக" என்று அழைப்பதற்கும், "யா ரஸ்ஸாக்! (வாழ்வாதாரம் அளிப்பவனே!) எனக்கு வாழ்வாதாரம் அளிப்பாயாக" என்று அழைப்பதற்கும் மத்தியில் பெரும் வேறுபாடு உள்ளது.
நிச்சயமாக நபி ﷺ அவர்கள் (அல்லாஹ்வை) அழைத்துப் பிரார்த்திக்கும் பொழுது, அவனது அழகிய பெயர்களையும், உயரிய பண்புகளையும் கொண்டு அவனை அழைத்துப் பிரார்த்திக்க கூடியவர்களாக இருந்தார்கள்.
மேலும் "அல்லாஹ்வே, யா ஹய்யு (பரிபூரணமான வாழ்வுடையவனே!), யா கய்யூம் (தன்னில் நிலையான மற்றும் அனைத்தையும் நிலைக்கச் செய்பவனே!), உனது அருளைக் கொண்டே நான் பாதுகாப்புத் தேடுகிறேன், நீ எனது எல்லா காரியங்களையும் சீராக்குவாயாக, மேலும் கண்சிமிட்டும் நேரம் கூட என்னை என்னிடமே விட்டு விடாதே!" என்று கூறக் கூடியவர்களாக (நபி ﷺ அவர்கள்) இருந்தார்கள்.
மேலும், தனது பிரார்த்தனைக்கு பொருத்தமான (அல்லாஹ்வுடைய) பெயர்களையும் பண்புகளையும் கொண்டு தனது பிரார்த்தனையை நபி ﷺ அவர்கள் துவங்கி இருக்கின்றார்கள்.
"உனக்கு இருக்கக் கூடிய எல்லா (அழகிய) பெயர்களையும் கொண்டு உன்னிடம் நான் கேட்கின்றேன் - அது உனக்கு நீ சூட்டிக்கொண்ட பெயராகவோ, அல்லது அதை உன்னுடைய வேதத்தில் நீ இறக்கியருளியதாகவோ, அல்லது உனது படைப்பினங்களில் இருந்தும் உள்ள ஒருவருக்கு நீ கற்பித்துக் கொடுத்ததாகவோ, அல்லது உன்னிடத்தில் உள்ள மறைவான ஞானத்தில் உனக்குத் தெரிந்தபடி மட்டும் வைத்ததாகவோ (இருக்கலாம், அத்தகைய எல்லா பெயர்களையும் கொண்டு நான் உன்னிடம் கேட்கின்றேன்).
இந்த மகத்தான அல்-குர்ஆனை என்னுடைய உள்ளத்தின் வசந்தமாகவும், எனது நெஞ்சத்தின் ஒளியாகவும், எனது வருத்தம், துக்கம் மற்றும் மனக்கவலையை போக்குவதாக ஆக்கியருள்வாயாக" என்று கூறக் கூடியவர்களாக (நபி ﷺ அவர்கள்) இருந்தார்கள்.
அறிஞர் பெருமக்கள் இதிலிருந்து (நபி ﷺ அவர்களின் இக்கூற்றிலிருந்து) 'அல்லாஹ்வை அவனுடைய அழகிய பெயர்களைக் கொண்டு அழைத்துப் பிரார்த்திப்பது என்பது, கஷ்டங்கள் நீக்கப்படுவதற்கும், மேலும் மன வருத்தங்களும், துக்கங்களும் அகன்று விடுவதற்குமுள்ள மகத்தான காரணிகளிலிருந்து உள்ளதாகும்' என்ற (விளக்கத்தை) எடுத்துள்ளனர்.
யார் அல்லாஹ்வுடைய அழகிய பெயர்களையும், உயரிய பண்புகளையும் நேசிப்பாரோ அவரை அவனும் நேசிக்கின்றான்
நீ அவனை அறிந்துகொண்டு, பின்னர் அவனை நேசிக்காமல் இருப்பது என்பது மிகவும் ஆச்சரியமான விடயங்களிலிருந்து உள்ளதாகும்.
மேலும் (அவனின் பக்கம் அழைக்கும்) அவனது அழைப்பாளரை செவிமடுத்தப் பின்பும், நீ (அவருக்கு) பதிலளிக்கத் தாமதிப்பது (மிகவும் ஆச்சரியமானவற்றிலிருந்து உள்ளதாகும்).
மேலும் அவனுடன் வர்த்தகம் செய்வதில் இருக்கும் இலாபத்தின் (பெரும்) மதிப்பை தெரிந்து கொண்டு, பின்னர் அவனல்லாத பிறருடன் நீ வர்த்தகம் செய்வது (மிகவும் ஆச்சரியமானவற்றிலிருந்து உள்ளதாகும்).
மேலும் அவனது கோபத்தின் (பெரும்) அளவைத் தெரிந்துகொண்டு, பின்னர் நீ (அவன் வெறுக்கும் விடயங்களைச் செய்து) அதற்கு உன்னை ஆட்படுத்திக் கொள்வது (மிகவும் ஆச்சரியமானவற்றிலிருந்து உள்ளதாகும்).
மேலும் அவனுக்கு மாறுசெய்வதால் ஏற்படும் தனிமையின் வேதனையை சுவைத்துக் கொண்டு, பின்பு அவனுக்கு கீழ்படிவதைக் கொண்டு அவனுடைய தோழமையைத் தேடாமல் இருப்பது (மிகவும் ஆச்சரியமானவற்றிலிருந்து உள்ளதாகும்).
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ﷺ அவர்கள் ஒரு சிறு படைக்கு, ஒருவரை (தலைவராக) அனுப்பி வைத்தார்கள். அவர் தன்னுடைய தோழர்களுக்கு (தொழுகை நடத்தும்போது அல்-குர்ஆனிலிருந்து) ஓதி, பின்பு சூரதுல்-இஃக்லாஸ் அத்தியாத்தைக் கொண்டு (தனது ஓதுதலை) முடிப்பவராக இருந்தார்.
அவர்கள் (அவருடன் இருந்தவர்கள் மதீனாவிற்கு) திரும்பிய பொழுது இதைப்பற்றி நபி ﷺ அவர்களிடம் கூறினார்கள். "எதற்காக அவர் அவ்வாறு செய்கின்றார் என்று அவரிடன் கேளுங்கள்" என நபியவர்கள் ﷺ வினவச் சொன்னார்கள். பின்பு அவர்களும் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் (பின்வருமாறு) பதில் கூறினார், "ஏனெனில் (அந்த அத்தியாயம்) அர்-ரஹ்மானுடைய பண்புகளை கொண்டுள்ளதாக இருக்கின்றது. நான் அதனை (தொழுகையில்) ஓதுவதற்கு விரும்புகின்றேன்".
அதற்கு நபி ﷺ அவர்கள், "அல்லாஹ் அவரை நேசிக்கின்றான் என்பதை அவருக்கு அறிவித்துவிடுங்கள்" என்று கூறினார்கள். மேலும் மற்றொரு அறிவிப்பில், "அதன் மீதுள்ள உனது நேசமானது உன்னை சொர்க்கத்தில் நுழைத்து விட்டது" என்று உள்ளது.
நீ அவனை நேசித்தால் அவனுக்கு கீழ்ப்படிவதில் உன்னை மாய்த்துக் கொள்வாய், மேலும் அவனைக் காண்பதற்கு பேராவல் கொள்வாய்.
ஏனெனில், நிச்சயமாக நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வுடைய பேச்சை செவியுற்ற போது - அல்லாஹ்வுடைய பேச்சானது அவனது பண்புகளிலிருந்துமுள்ள ஒரு பண்பாகும் - அவனை (அதற்குப் பின்பு அதிகமாக) நேசித்தார்கள். மேலும் அவனை சந்திக்கவும், காணவும் விரும்பினார்கள். அதனை (அல்லாஹ்வைக் காண்பதை) அவனிடம் கேட்டுக் கொண்டார்கள்.
அல்லாஹ் கூறுவது போல:
وَلَمَّا جَآءَ مُوسَىٰ لِمِيقَٰتِنَا وَكَلَّمَهۥ رَبُّهُۥ قَالَ رَبِّ أَرِنِىٓ أَنظُرْ إِلَيْكَۚ قَالَ لَن تَرَىٰنِى وَلَٰكِنِ ٱنظُرْ إِلَى ٱلْجَبَلِ فَإِنِ ٱسْتَقَرَّ مَكَانَهُۥ فَسَوْفَ تَرَىٰنِىۚ فَلَمَّا تَجَلَّىٰ رَبُّهُۥ لِلْجَبَلِ جَعَلَهُۥ دَكًّا وَخَرَّ مُوسَىٰ صَعِقًاۚ فَلَمَّآ أَفَاقَ قَالَ سُبْحَٰنَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا۠ أَوَّلُ ٱلْمُؤْمِنِينَ
மேலும், நாம் குறிப்பிட்ட நேரத்தில் (குறிப்பிட்ட இடத்திற்கு) மூஸா வந்து அவருடைய இறைவனும் அவருடன் பேசியபொழுது, “என் இறைவனே! நீ (உன்னை) எனக்குக் காண்பிப்பாயாக! உன்பால் நான் பார்ப்பேன்” என்று கூறினார்; (அதற்கு, அல்லாஹ், மூஸாவே!) நீர் என்னை பார்க்க முடியாது, எனினும், இம்மலையை நீர் பார்ப்பீராக! அது தன்னுடைய இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னை காண்பீர், என்று கூறினான்; ஆகவே, அவருடைய இறைவன் அம்மலைமீது வெளிப்பட்டபோது, அதை அவன் தூளாக்கினான், இன்னும் மூஸா (திடுக்கிட்டு) மூர்ச்சையாகி விழுந்து விட்டார்; பின்னர் அவர் தெளிவு பெற்றபோது (அல்லாஹ்விடம்) “நீ மிகப் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் பாவமீட்சி கோருகின்றேன்; இன்னும், (உன்னை) விசுவாசிப்போரில் நான் முதன்மையானவன்” என்று கூறினார். [7:143]
அழகிய பண்புகளையுடைய (இறைவனால்) படைக்கப்பட்ட ஒருவரைப் பற்றி நீ செவியுற்றால், நிச்சயமாக நீ அவரை சந்திக்கவும், காணவும் பேராவல் கொள்கின்றாய் என்பதை கவனித்துப் பார்த்தாயா?!
இவ்வாறெனில், படைப்பாளனின் (அழகிய) பெயர்களையும் (உயரிய) பண்புகளையும் பற்றி நீ அறிந்துகொண்டால் எவ்வாறு இருப்பாய்!? (நிச்சயமாக அவனை அதிகமாக நேசிப்பாய், மேலும் அவனை சந்திக்கவும், காணவும் பேராவல் கொள்வாய்).
யார் அல்லாஹ்வுடைய அழகிய பெயர்களையும் உயரிய பண்புகளையும் அறிய வேண்டிய விதத்தில் அறிந்து கொள்வாரோ, நிச்சயமாக அவர் (மற்ற) எல்லாவற்றையும் பற்றி அறிந்துகொள்வார்
யார் அல்லாஹ்தான் படைப்பாளன் என்பதை அறிந்து கொள்வாரோ, அவர் அவன் அல்லாத மற்ற அனைத்தும் படைக்கப்பட்டவை என்பதை அறிந்து கொள்வார்.
அல்லாஹ் கூறுகின்றான்:
ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَىْءٍۖ
'அல்லாஹ்வே எல்லா பொருள்களின் படைப்பாளன்'. [39:62]
யார் அல்லாஹ்தான் வாழ்வாதாரம் அளிப்பவன் என்பதை அறிந்து கொள்வாரோ, அவர் அவன் அல்லாத மற்ற அனைத்தும் வாழ்வாதாரம் அளிக்கப்படுபவை என்பதை அறிந்து கொள்வார்.
அல்லாஹ் கூறுகின்றான்:
وَمَا مِن دَآبَّةٍ فِى ٱلْأَرْضِ إِلَّا عَلَى ٱللَّهِ رِزْقُهَا
'உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத யாதொரு உயிரினமும் பூமியில் இல்லை'. [11:6].
மேலும் அதுபோலவே, அவன் அல்லாத வேறு எந்தவொருவரும் வாழ்வாதாரம் அளிக்க சக்தி பெற மாட்டார் என்பதையும் அறிந்து கொள்வார்.
அல்லாஹ் கூறுகின்றான்:
وَمَن يَرْزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِۗ أَءِلَٰهٌ مَّعَ ٱللَّهِۚ
'மேகத்தில் இருந்து (மழையை இறக்கிப்) பூமியில் (தானியங்களை முளைக்கச் செய்து) உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா?!'. [27:64].
யார் அல்லாஹ்தான் (உண்மையான) அரசன் என்பதை அறிந்து கொள்வாரோ, அவர் அவனல்லாத மற்ற அனைத்தும் அவனது ஆட்சிக்கு உட்பட்டவை என்பதை அறிந்து கொள்வார்.
அல்லாஹ் கூறுகின்றான்:
وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَاۚ يَخْلُقُ مَا يَشَآءُۚ
'வானங்கள், பூமி இன்னும் இவைகளுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்பியதை படைக்கின்றான்'. [5:17].
யார் தனது இறைவன் (எவரிடத்திலும்) தேவையற்று இருப்பதை அறிந்து கொள்வாரோ, அவர் தான் (அவனின் பக்கம் எந்நேரமும்) தேவையுடன் இருக்கும் நிலையை அறிந்து கொள்வார்.
.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ أَنتُمُ ٱلْفُقَرَآءُ إِلَى ٱللَّهِۖ وَٱللَّهُ هُوَ ٱلْغَنِىُّ ٱلْحَمِيدُ
'மனிதர்களே! நீங்கள் அனைரும் (எந்நேரத்திலும்) அல்லாஹ்வினுடைய உதவி தேவைப்பட்டவர்களாக இருக்கின்றீர்கள். அல்லாஹ்வோ (உங்களுடைய) தேவையற்றவனும் புகழுக்குரியவனுமாக இருக்கின்றான்'. [35:15]
யார் தனது இறைவன் (பரிபூரணமான) ஞானத்தை உடையவன் என்பதை அறிந்து கொள்வாரோ, அவர் தான் அறியாமையை உடையவர் என்பதை அறிந்து கொள்வார்.
அல்லாஹ் கூறுகின்றான்:
وَٱللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
'அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்'. [2:216]
யார் தனது இறைவன் என்றென்றும் நிலைத்திருப்பவன் என்பதை அறிந்து கொள்வாரோ, அவர் தான் அழிந்து போகக்கூடியவர் என்பதை அறிந்து கொள்வார்.
அல்லாஹ் கூறுகின்றான்:
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو ٱلْجَلَٰلِ وَٱلْإِكْرَامِ
'பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தே போகும். கண்ணியமும், பெருமையும் உடைய உமது இறைவனின் முகம் (அழியாது) நிலைத்திருக்கும். [55:26,27]
இதன் காரணமாகவே, "எவரொருவர் தன்னுடைய இறைவனை அறிந்து கொள்வாரோ, அவர் தன்னை அறிந்து கொள்வார்" என்று கூறப்படுகிறது.
எவரொருவர் அல்லாஹ்வை அவனது அழகிய பெயர்களையும் உயரிய பண்புகளையும் கொண்டு அறிந்து கொள்வாரோ, அவர் அவன் பரிபூரணத்தை உடையவன் என்பதையும், நன்மை, அழகு மற்றும் மகிமையைக் கொண்டு அறியப்பட்டவன் என்பதையும் அறிந்துகொள்வார்.
மேலும் முழுமையான இறை நம்பிக்கை, நற்செயல்கள் (செய்வது), உண்மையான அடிமைத்தனம் ஆகியவற்றை அல்லாஹ் அவருக்கு வழங்கினாலேயே தவிர, தான் (இவைகளன்றி) ஒவ்வொரு குறைகளையும் உடையவன் என்பதை அறிந்து கொள்வார். எனவே, அவனது கண்ணியம் மற்றும் வலிமைக்கு முன் தன்னை தாழ்த்திக் கொள்வார்.
அல்லாஹ்வுடைய அழகிய பெயர்களையும், உயரிய பண்புகளையும் அறிந்து கொள்வது உள்ளச்சத்தை ஏற்படுத்தும்
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆதரவு வைப்பவருக்கு இந்த ஒரு பயனே போதுமானதாகும்.
மேலும் இதுவே உண்மையான கல்வியாகும்.
இப்னு மஸ்வூது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வைப் பற்றி உள்ளச்சம் கொள்வதே போதுமான கல்வியாகும், மேலும் அல்லாஹ்வின் விடயத்தில் ஏமாறுவதே போதுமான அறியாமையாகும்"
யார் அல்லாஹ்வை அதிகம் அறிந்தவராக இருப்பாரோ, அவரே அவனை அதிகம் அஞ்சுபவராக இருப்பார். மேலும் யார் அல்லாஹ்வை அதிகம் தெரிந்தவராக இருப்பாரோ, அவரே அவனது ஷரீஅத்தில் மிகவும் நிலைபெற்றவராக இருப்பார்.
அல்லாஹ் கூறியது போல:
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاء
நிச்சயமாக அல்லாஹ்வை அவனுடைய அடியார்களில் பயப்படுவதெல்லாம் கல்விமான்கள் தாம். [35:28]
அதாவது: அவனைப்பற்றி அறிந்த கல்விமான்கள்.
நபி ﷺ அவர்கள் அல்லாஹ்வை மிகவும் அஞ்சுபவர்களாக இருந்தார்கள். இதற்குக் காரணம் ﷺ அவர்கள் மக்களிலேயே அல்லாஹ்வைப் பற்றி மிகவும் அறிந்தவராக இருந்ததாகும்.
"உங்களிலேயே அல்லாஹ்வைப் பற்றி மிகவும் அறிந்தவன் நான், மேலும் உங்களிலேயே அவனை அதிகமாக அஞ்சுபவனும் நான்" என்று (நபி ﷺ அவர்கள்) கூறுபவர்களாக இருந்தார்கள்.
அதாவது: உங்களிலேயே அல்லாஹ்வைப் பற்றி மிகவும் அறிந்தவன் நான், எனவே உங்களிலேயே அவனை அதிகமாக அஞ்சுபவனாக நான் இருக்கின்றேன்.
அல்லாஹ்வுடைய அழகிய பெயர்கள் உயரிய பண்புகளை அறிந்து கொள்வது, பாவங்கள் மற்றும் மாறு செய்தல்களை விட்டு பாதுகாப்பு பெறுவதற்கும், கீழ்ப்படிதலை நோக்கி (ஒரு அடியான்) ஆர்வத்துடன் செயல்படுவதற்குமான வழியாகும்
எவரொருவர் தொழிலில் (தனக்கு இருக்கும்) முதலாளி உறுதி மற்றும் பலம் மிக்கவர் என்பதை அறிந்து கொள்வாரோ, அவர் அவரது பொருத்தத்தை பெறவும், அவரது முன்னிலையில் வேலையை சிறப்பாக செய்திடவும் ஆர்வத்துடன் உழைப்பார்.
எந்த ஒருவர் ஒரு மனிதரை வள்ளல் என அறிந்து கொள்வாரோ, அவர் அவரது வாசலில் நிற்கவும், அவரது வழிப்பாதையில் அவர் முன்பு வரவும் விரைவார். மேலும் அவரிடம் தன்னுடைய தேவைகளையும் கேட்பார்.
யார் ஒரு காவல்காரரை கடுமையானவரென அறிந்து கொள்வாரோ, நிச்சயமாக அவர் அவருக்கு கடுமையாக பயப்படுவார். அவரது முன்னிலையில் அவர் பற்றிக் குறிப்பிடப்பட்டால் நடுநடுங்கி விடுவார்.
வானங்களிலும், பூமியிலும் மிக்க மேலான வர்ணனை(பண்பு) அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
யார் ஒருவர் அடக்கி ஆளுகின்ற, பலமிக்க, (யாவற்றின் மீதும்) ஆற்றலுடைய, (யாவற்றையும்) மிகைக்கின்ற, தண்டிப்பதில் கடுமையான, விசாரணை செய்வதில் விரைவானவனை (அல்லாஹ்வை) அறிந்து கொள்வாரோ, அவர் அவனுடைய கீழ்ப்படிதலை நோக்கி முன்நோக்குவார், மேலும் பாவத்தில் வரம்பு மீறி தமக்குத்தாமே அநியாயம் செய்து கொள்ளமாட்டார்.
ஹுசைன் இப்னு அஹ்மது அஸ்-ஸஃப்பார் கூறினார்கள், 'ஷிப்லி அவர்களிடம் - நான் (அங்கு) இடம்பெற்றிருந்த நிலையில் - "எந்த விடயும் மிகவும் ஆச்சரியமானது?!" என்று கேட்கப்பட்டது. அதற்கு, "தனது இரட்சகனைப் பற்றி அறிந்துகொண்ட பின்பு அவனுக்கு மாறு செய்கின்ற ஒரு உள்ளம்" என்று (பதில்) கூறினார்கள்'.
ஒரு அடியான் பாவத்தில் வரம்பு மீறி தனக்குத்தானே அநியாயம் செய்து கொள்வது, அவற்றைக்கொண்டு (பாவங்களைக் கொண்டு) இரட்சகனுக்கு எதிராக செயல்படுவது, தனிமையின் நேரங்களில் (அவன்) ஹராமாக்கிய விடயங்களில் ஈடுபடுவது ஆகியன
அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் பற்றிய அவனது அறியாமையின் காரணத்தினாலேயே தவிர இல்லை.
அல்லாஹ்வுடைய அழகிய பெயர்களையும் அவனது உயரிய பண்புகளையும் அறிந்து கொள்வதே, உள்ளங்களை சீர்படுத்துவதற்கும், ஆன்மாக்களை பரிசுத்தப்படுத்துவதற்கும் உள்ள வழியாகும்
நிச்சயமாக ஒவ்வொரு மனிதனும் கவனத்தில் கொள்ளவேண்டிய அவசியமானவற்றிலிருந்து உள்ளதாவது - குறிப்பாக (இந்த காலத்தில் ஏற்படும்) தொடரான மிகப்பெரும் குழப்பங்கள் மற்றும் திசை திருப்பக் கூடிய விடயங்களிலிருந்து - அவனது ஆன்மாவை பரிசுத்தப்படுத்துவதும், அவனது உள்ளத்தின் துருவை அகற்றுவதும் ஆகும்.
நிச்சயமாக அல்லாஹ் இதைக் கொண்டு ஏவியுள்ளான், மேலும் வெற்றியை இதனுடன் தான் இணைத்துள்ளான்:
அல்லாஹ் கூறுகின்றான்:
قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰٮهَا
எவர் அதை (ஆத்மாவை) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், திட்டமாக வெற்றியடைந்து விட்டார்.
(அல்குர்ஆன் : 91:9).
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰىۙ
பரிசுத்தமடைந்தவர் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டார்.
(அல்குர்ஆன் : 87:14)
மேலும் உள்ளங்களைப் பரிசுத்தப்படுத்துவதே நபிமார்கள் மற்றும் தூதர்மார்களின் அழைப்புப் பணியாகும்.
இதன் காரணமாகவே, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஃபிர்அவ்னுக்கு அழைப்புப் பணி செய்த பொழுது,
هَلْ لَّكَ اِلٰٓى اَنْ تَزَكّٰى
ۙ
'நீ பரிசுத்தமடைய (ஈமான் கொள்ள) உனக்கு (விருப்பம்) உண்டா?' (அல்குர்ஆன் : 79:18) என்று கேட்டார்கள்.
நபிகள் நாயகம் ﷺ அவர்களின் அழைப்புப் பணியைப் பற்றி (அல்லாஹ் இவ்வாறு) கூறுகின்றான்:
هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ
'அவன் எத்தகையவனென்றால், எழுத்தறிவில்லாத (அரபி) சமூகத்தார்களில், அவர்களிலிருந்தே ஒரு தூதரைத் தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்தான். அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கியும் வைத்து, அவர்களுக்கு வேதத்தையும், தீர்க்கமான அறிவை (ஸுன்னத்தையும்) கற்றுக் கொடுக்கின்றார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தனர்'.
(அல்குர்ஆன் : 62:2)
மேலும் நபியவர்கள் ﷺ 'உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துதல்' (என்பதன்) பொருளை விசாலமான அர்த்தங்களைக் கொண்ட சுருக்கமான வார்த்தைகளைக் கொண்டு தெளிவாக விளக்கியுள்ளார்கள். இதற்கு (உளத்தூய்மைக்கு) அல்லாஹ்வுடைய அழகிய பெயர்களையும், அவனது உயரிய பண்புகளையும் அறிந்து கொள்வதுடன் ஒரு தெளிவான தொடர்பு இருக்கின்றது.
'அல்லாஹ்வின் தூதரே! ஒருவரது உள்ளத்தை பரிசுத்தப்படுத்துதல் என்றால் என்ன?' என்று ஒரு மனிதர் நபி ﷺ அவர்களிடம் (கேள்வி) கேட்ட பொழுது, 'அவர் எங்கிருந்தாலும் அவருடன் அல்லாஹ் இருக்கின்றான் என்பதை மனதில் கொள்வதாகும்' என்று (பதில்) கூறினார்கள்.
இந்த வார்த்தையே 'அல்-இஹ்ஸான்' (என்ற படித்தரத்தை) உள்ளடக்கும் (வார்த்தையாகும்). மேலும் இது அல்-அலீம் (யாவற்றையும் அறிபவன்), அர்-ரகீப் (யாவற்றையும் கண்காணிப்பவன்), அல்-ஹஸீப் (விசாரணை செய்பவன்), அஷ்-ஷஹீது (அடியார்களின் காரியங்களை கண்டு கொண்டிருப்பவன்), அஸ்-ஸமீவு (யாவற்றையும் செவியுறுபவன்), அல்-பஸீர் (யாவற்றையும் பார்ப்பவன்) ஆகிய அல்லாஹ்வுடைய பெயர்களைக் கொண்டு வழிபட்டு நடப்பதாகும்.
இந்த பயன்களை மற்றொரு முறையும் படியுங்கள். இதனை விளங்கிக் கொண்டு இவற்றை (வாழ்வில்) பேணுங்கள். மேலும் இவற்றை உறுதியாக பற்றிக்கொள்ளுங்கள், பரிபூரணமான இன்பத்தை (பரிசாக) பெற்றுக் கொள்வீர்கள்.
- மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வ அஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.