பிறை தொடர்பாக நிறைய தெளிவுகளும் விளக்கங்களும் எமது சமூகத்துக்கு தேவைப்படுகின்றன.
இது பற்றி இமாம்கள் பிக்ஹ் நூற்களில் பல மஸ்அலாக்களாக பேசியுள்ளனர், அவற்றில் ஒன்றை இங்கு பார்ப்போம்.
ஒருவர் பிறையைக் கண்டு உரிய அதிகாரமுள்ள இமாம் அல்லது குழுவிடம் கூறுகின்றன சந்தர்ப்பத்தில் ஏதேனுமொரு காரணத்துகாக அவரது சாட்சியம் மறுக்கப்படும் போது அவர் என்ன செய்ய வேண்டும் என்பதில் பிக்ஹ் அறிஞர்களிடத்தில் மூன்று கருத்துகள் நிலவுகின்றன.
1. முதலாவது கருத்து: இவ்வாறு தனியாக கண்டு சாட்சியம் மறுக்கப்படுபவர் தான் கண்ட பிறையின் அடிப்படையில் இரண்டு இடங்களில் தனியே செயற்படுவார். 1. மாத ஆரம்பத்தில் தனியாக நோன்பு நோற்பார் 2. மாத இறுதியில் தனியாக நோன்பை விடுவார்
இக்கருத்தை இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஆதரிக்கிறார்கள்.
எனினும் இவ்வாறு தனியாக செயல்படுபவர் மக்களுக்கு முரணாக நடக்காமல் இருப்பதற்காக நோன்பு நோற்பதையும், விடுவதையும் மறைமுகமாக (இரகசியமாக) செய்துகொள்வார்.
2. இரண்டாவது கருத்து: இவ்வாறு பிறையைக் கண்டு சாட்சியம் மறுக்கப்பட்டவர் மாத ஆரம்பத்தில் தனியாக நோன்பு நோற்பார், ஆனால் பெருநாளை பொறுத்தமட்டில் அதாவது மாத இறுதியில் அவர் நோன்பை விடாது மக்களோடு மக்களாக நோன்பு நோற்று பின்னர் அவர்களுடன் பெருநாள் கொண்டாட வேண்டும்.
அபூ ஹனீபா, மாலிக், அஹ்மத் ரஹிமஹுமுல்லாஹ் ஆகிய மூன்று இமாம்களும் இக்கருத்தையே கொண்டுள்ளனர்.
பேணிக்கையின் அடிப்படையில் இக்கருத்தை அல்லாமா முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் ஆதரித்துள்ளார்கள். (ஷர்ஹுல் மும்திஃ 6/330)
3. மூன்றாவது கருத்து: மாத ஆரம்பத்திலும் இறுதியிலும் குறிப்பிட்ட நபர் தான் கண்ட பிறையின் படி தனியாக செயற்படாது மக்களோடு மக்களாக அனைத்தையும் செய்வார்.
இது இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களது ஓர் அறிவிப்பின் பிரகாரம் அமைந்த கருத்து மட்டுமல்லாது இதனை ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வரும் சில ஆதரங்களை முன்வைத்து தெரிவும் செய்துள்ளார்கள். அத்தோடு இக்கருத்தையே அல்லாமா அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் ஆதரித்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "உங்களது நோன்பு நீங்கள் (மக்கள்) நோன்பு நோற்கும் நாளாகும், உங்களது நோன்பு விடும் விடயம் (மாத இறுதி) நீங்கள் நோன்பை விடும் நாளாகும், உங்களது ஈதுல் அழ்ஹா நீங்கள் ஈதுல் அழ்ஹாவாக எடுத்துக்கொள்ளும் நாளாகும்" (ஹஸன் கரீப், ஸஹ்ஹஹுல் அல்பானீ)
இதற்கு சில மார்க்க அறிஞர்கள் "நோன்பு நோற்பதும் விடுவதும் மக்களில் பெரும்பாலானோருடன் சேர்ந்து அமைதல் வேண்டும்" என்று விளக்கம் கொடுத்துள்ளனர். (மஜ்மூஉல் பதாவா 25/114)
இம்மூன்று கருத்துகளையும் அவதானிக்கின்ற போது பிறையை கண்டு சாட்சியம் மறுக்கப்பட்டவர் ஒன்றில் தனியாக செயற்படுவார் அல்லது மக்களோடு செயற்படுவார் இருந்தும் தனியாக செயற்படுமிடத்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தாது இரகசியமாக செயற்படுவார் ஆனால் தான் பிறை கண்டு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என மக்களை குழப்பி குழுக்களாக பிரித்து பிளவுக்கு வழி வகுக்கமாட்டார் என்பதை நன்கறிய முடிகிறது.
எது எவ்வாறாயினும் பெரும்பான்மை இமாம்களது கருத்து அல்லது மூன்றாவது கருத்து வேண்டி நிற்பது யாதெனில் பெருநாள் என்று வரும் போது அனைத்து மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து பெருநாள் கொண்ட வேண்டும் என்பதாகும்.
அல்லாஹ் அனைவருக்கும் மார்க்கத்தில் நல்ல விளக்கங்களையும் முறையாக செயற்படும் பேற்றையும் வழங்கியருள்வானாக! ஆமீன்
உசாத்துணை இணைய பக்கம்: அஷ்ஷைக் ஸாலிஹ் அல்முனஜ்ஜித் ஹபிழஹுல்லாஹ் அவர்களது
www.islamqa.info இணையதளம்
தொகுப்பு: அஸ்(z)ஹான் ஹனீபா