இஸ்லாமிய அகீதா ஓர் அறிமுகம்

- அஷ்ஷெய்க் ஸாலிஹ் பின் பவ்ஸான் அல்-பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ்

இஸ்லாமிய நம்பிக்கை (அகீதா இஸ்லாமியா) பற்றிய கல்விதான் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய, கற்றுக்கொள்ள வேண்டிய, செயல்படுத்த வேண்டிய அடிப்படைக் கல்வி என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. காரணம், இதைக் கொண்டுதான் செயல்கள் சீராகும்; அல்லாஹ்விடம் ஏற்கப்படும்; செயல்படுபவருக்குப் பலனும் கிடைக்கும்.
 
வழிகெட்ட கூட்டங்கள் பெருகிப் பரவிக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். நாத்திகம், சூஃபித்துவம், துறவறம், சமாதி வணக்கம், சிலை வணக்கம், கூடவே நபிவழிக்கு முரணாக மார்க்கத்தின் பெயரில் செய்யப்படும் அனாசாரம் இவை பரவி வருகின்றன. இந்த எல்லா வழிகெட்ட இயக்கங்களும் அபாயமானவை.
 
ஆனால் எந்த முஸ்லிம் குர்ஆனும் நபிவழியும் சொல்கின்ற, இந்தச் சமுதாயத்தின் முன்னோர்கள் (ஸலஃப்) பின்பற்றிச் சென்ற சரியான இஸ்லாமிய நம்பிக்கையை ஆயுதமாகத் தாங்கி நிற்கிறாரோ, அவரை எந்த வழிகேடும் தாக்கி வீழ்த்த முடியாது. அந்த முஸ்லிம், வழிகெட்ட இயக்கங்களின் கொள்கைகளை விட்டுத் தம்மைத் தூய்மையாக்கிப் பாதுகாத்துக்கொள்ள கவனம் செலுத்த வேண்டும். முழு கவனத்தையும் இதன் பக்கம் திருப்ப வேண்டும். இளைஞர்கள் சரியான அகீதாவை (நம்பிக்கையை) அதன் மூல ஆதாரங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
 
 
மொழிரீதியாக அகீதாவின் பொருள்:

அல் அகீதா எனும் சொல் அல்அக்த் என்ற வேர்ச் சொல்லிலிருந்து உருவாகிறது. ஒன்றை உறுதியாக இணைத்துக் கட்டுதல் என்று பொருள். ‘இஅதகத்து கதா’என்றால், என் உள்ளமும் சிந்தனையும் இதன் மீதே உறுதியாக நிலைத்துள்ளது என்பதாகும். மனிதன் எதைத் தன் மார்க்கமாக நம்புகிறானோ அதுவே அகீதா. “அவனுடைய அகீதா உறுதியானது”என்று கூறினால், அது சந்தேகத்தை விட்டு நீங்கியது என அர்த்தம். அகீதா என்பது உள்ளத்தின் செயல்பாடு. அதாவது, உள்ளம் ஒன்றை நம்பிக்கை கொண்டு, அதை உண்மைப்படுத்த வேண்டும்.
 
மார்க்க ரீதியாக அகீதாவின் பொருள்:

இஸ்லாமிய மார்க்கத்தில் அகீதா என்பது அல்லாஹ், மலக்குகள், வேதங்கள், தூதர்கள், மறுமை நாள், விதியின் நன்மை தீமை இவற்றின் மீது நம்பிக்கை வைப்பதாகும். இவற்றையே ஈமானின் தூண்கள் எனப்படுகிறது.
 
மார்க்கம் (ஷரீஆ) இரண்டு அம்சங்களைக் கொண்டது. ஒன்று, நம்பிக்கைகள். இன்னொன்று செயல்கள்.
 
நம்பிக்கைகள் என்பவை ஒரு செயல் எப்படிச் செய்யப்பட வேண்டும் என்பதற்குச் சம்பந்தப்படாத விஷயங்கள். உதாரணத்திற்கு அல்லாஹ்வின் வல்லமை (ருபூபிய்யத்) குறித்த நம்பிக்கை, அவன் ஒருவனையே வணங்க வேண்டும் என்ற கடமை குறித்த நம்பிக்கை, இன்னும் ஈமானின் தூண்களாக மேலே சொல்லப்பட்ட விஷயங்களில் நம்பிக்கை. இவைதாம் அடிப்படை விஷயங்கள், அடித்தளங்கள்.
 
செயல்கள் என்பவை ஒரு செயல் எப்படிச் செய்யப்பட வேண்டும் என்பதுடன் சம்பந்தப்பட்டவை. உதாரணத்திற்கு தொழுகை, ஸகாத் (கட்டாயத் தர்மம்), நோன்பு, இன்னும் இதுபோன்ற செயல்கள். இவற்றை மார்க்கத்தின் கிளைகளாக நம்பப்படும். ஏனெனில், இவை கட்டி எழுப்பப்படுவது நம்பிக்கைகள் மீது. அந்த நம்பிக்கைகள் சரியாகவும் இருக்கலாம், அல்லது கெட்டும் இருக்கலாம்.
 
ஆக மொத்தம் ஒருவரின் மார்க்கம் நல்ல, சரியான அகீதா (நம்பிக்கை) எனும் அடித்தளத்தின் மீது கட்டி எழுப்பப்பட வேண்டும். அப்போதுதான் அவரின் செயல்கள் நல்லதாகவும் சரியாகவும் இருக்கும்.

மேற்கண்ட கருத்துக்குப் பின்வரும் இறைவசனங்கள் ஆதாரமாகின்றன.
 
அல்லாஹ் கூறுகிறான்:எவர் தம் இறைவனைச் சந்திக்க ஆதரவு வைக்கிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தம் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காமல் வணங்கி வரட்டும்.(அல்குர்ஆன் 18:110)
 
(நபியே!) உமக்கும், உமக்கு முன்னிருந்த ஒவ்வொரு (தூது)வருக்கும் உண்மையாகவே ‘வஹ்யி’ மூலம் அறிவிக்கப்பட்டது (இதுதான்:) நீங்கள் இணைவைத்து வணங்கினால், உங்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து, நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர்கள்.(அல்குர்ஆன் 39:65)
 
ஆகவே, முற்றிலும் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, பரிசுத்த மனதுடன் அவனை வணங்கி வருவீராக. பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்துகொள்வீராக.(அல்குர்ஆன் 39:2-3)
 
இந்தக் கண்ணியமிகு வசனங்களும் பல அறிவிப்புகளும் ஷிர்க்கை விட்டு, அதாவது அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை விட்டு செயல்கள் தூய்மையாக இருந்தால் மட்டுமே அவை அல்லாஹ்விடம் ஏற்கப்படும் என்று உறுதிசெய்கின்றன. இதனால்தான் நபிமார்கள் (அல்லாஹ்வின் தூதர்கள்) எல்லாவற்றுக்கும் முதலாவதாக நம்பிக்கைகளைச் சீர்திருத்துவதில் முக்கியத்துவம் கொடுத்தார்கள். தங்களின் சமுதாயங்களுக்கு அவர்கள் விடுத்த முதல் அழைப்பு, அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், அவனுக்கு இணையாக மற்றவதை வணங்குவதை விடுங்கள் என்பதுதான்.
 

அகீதாவின் முக்கியத்துவம்

அல்லாஹ் கூறுகிறான்: ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் நிச்சயமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம். “அல்லாஹ்வையே வணங்குங்கள். (அவனை வணங்குவதிலிருந்து உங்களை வழிகெடுக்கிற ஷைத்தான்களாகிய எல்லா) ‘தாகூத்தைவிட்டும் விலகிக்கொள்ளுங்கள்”என்றார்கள் அவர்கள்.(அல்குர்ஆன் 16:36)
 
ஒவ்வொரு தூதரும் தங்கள் சமுதாயத்திடம் பேசிய முதல் விஷயம் இதுதான்.
 
அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் உங்களுக்கில்லை. (அல்குர்ஆன் 7:59)
 
நபி நூஹ், ஹூது, ஸாலிஹ், ஷுஐப், இன்னும் எல்லாத் தூதர்களும் இதையே தங்கள் சமுதாயத்திற்குச் சொன்னார்கள்.
 
ஆது(என்னும்) மக்களுக்கு அவர்களுடைய சகோதரர் ஹூது (நபியை அனுப்பினோம்.) அவர் கூறினார்: என்னுடைய சமுதாயமே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத்தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் உங்களுக்கில்லை. (அல்குர்ஆன் 7:65)
 
ஸமூது(என்னும்) மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ் (நபியை அனுப்பினோம்.) அவரும் கூறினார்: என்னுடைய சமுதாயமே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்.அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் உங்களுக்கில்லை.(அல்குர்ஆன் 7:73)
 
மத்யன்(என்னும்) நகரத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஷுஐப் (நபியை அனுப்பினோம்.) அவர் கூறினார்: என்னுடைய சமுதாயமே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் உங்களுக்கில்லை. (அல்குர்ஆன் 7:85)
 

அகீதா சீர்திருத்தம்

நபி(ஸல்)அவர்களும் மக்காவில் பதிமூன்று வருடங்கள் தங்கியிருந்து மக்களைத் தவ்ஹீது பக்கம் அழைத்தார்கள். அந்த மக்களின் நம்பிக்கைகளை (அகீதாவை)ச் சீர்திருத்தினார்கள். ஏனென்றால், அகீதா எனும் அடித்தளத்தின் மீதுதான் மார்க்கம் கட்டி எழுப்பப்படுகிறது.
 
முன்னோர்களான நபித்தோழர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றிய ஸலஃபி அழைப்பாளர்களும் சீர்திருத்தக்காரர்களும் இதே பாதையில் போனார்கள். ஒவ்வொரு காலத்திலும் அவர்கள் நபிமார்களின், ரசூல்மார்களின் அழைப்பு எப்படி ஆரம்பித்ததோ, அதே முறையில் தவ்ஹீதின் பக்கம் அழைத்தார்கள். அகீதாவைச் சீர்திருத்தினார்கள். அதற்குப் பிறகுதான் அவர்கள் மார்க்கத்தின் மற்ற விவகாரங்கள் பக்கம் கவனம் செலுத்தினார்கள்.
 

அகீதாவின் மூலாதாரங்கள்

மார்க்க ஆதாரங்களைக் கொண்டு நிறுவப்படுவதே அகீதா. ஆதாரங்களில் உட்படாத எதையும் அகீதாவில் எடுக்க முடியாது. அதில் சுயவிளக்கங்கள், ஊகங்களுக்கு கொஞ்சமும் இடமில்லை. இதை ‘அல்அகீதத்து தவ்கீஃபிய்யா’எனப்படும். (தவ்கீஃபிய்யா என்றால் வரையறுக்கப்பட்டது, ஆதாரங்களால் மட்டுமே நிறுவ முடிந்தது என்று பொருள்.)
 
எனவே, அகீதாவை அல்லாஹ்வின் வேதம், அவனுடைய நபியின் விளக்கம் ஆகியவற்றில் தவிர வேறு எதிலிருந்தும் பெறக் கூடாது. வரையறுக்கப்பட்ட ஆதாரங்கள் இவை இரண்டுதாம்.
 
அல்லாஹ்வுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை அல்லாஹ்வை விட அதிகம் தெரிந்தவர் இருக்க முடியாது. அதற்குப் பின், அவனுடைய தூதரை விட அதிகம் தெரிந்தவர் இருக்க முடியாது. ஆகவேதான், நபித்தோழர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் குர்ஆன் மற்றும் நபிவழியால் மட்டுமே அகீதாவைக் கற்றார்கள்.
 
அல்லாஹ்வுக்குரிய கடமைகளாக குர்ஆனும் நபிவழியும் எதைக் கூறினவோ, அதை மட்டுமே நம்பிக்கை கொண்டார்கள்; அதன்படி மட்டுமே செயல்பட்டார்கள். இந்த ஆதாரங்களில் உறுதிசெய்யப்படாத அனைத்தையும் மறுத்தார்கள்.
 
இதனால்தான் அவர்களிடையே அகீதாவில் எந்தக் கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை. அவர்கள் அனைவரும் ஒரே அகீதாவில் ஒரே ஜமாஅத்தாக இருந்தார்கள்.
 
குர்ஆனையும் நபிவழியையும் பற்றிப்பிடிப்பவர்கள் மட்டுமே சரியான அகீதாவில் இருப்பார்கள்; அவர்களே ஒன்றுபடுவார்கள்; அவர்கள்தாம் ஒரு வழிமுறையில் இருப்பார்கள் என்கிறான் அல்லாஹ்.
 
நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வுடைய கயிற்றைப் பலமாகப் பற்றிப்பிடியுங்கள். பிரிந்துவிடாதீர்கள். (அல்குர்ஆன் 3:103)
 
அச்சமயம் நிச்சயமாக என் நேர்வழி உங்களிடம் வரும். எவர் என் நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் வழிகெடவும் மாட்டார்; நஷ்டமடையவும் மாட்டார்.(அல்குர்ஆன் 20:123)
 

வழிகெட்ட அகீதாவுக்குக் காரணங்கள்

நல்ல அகீதா நற்செயல்களைப் பலனளிக்க வைக்கும் உந்துசக்தியாக இருக்கும். கெட்ட அகீதாவோ அழிவையும் நாசத்தையும் கொண்டு வரும்.
 
கெட்ட அகீதா உள்ளவன் எப்போதும் குழப்பங்களிலும் சந்தேகங்களிலும் சிக்கி உழல்வான். எனவே, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையின் சரியான பாதைகளை அவனால் கண்டுகொள்ள முடியாது. அவை அவனுக்கு மங்கலாகவே இருக்கும். தடுமாறி நிம்மதி இழந்து கிடப்பான். மனஅழுத்தங்கள் காரணமாக தன் வாழ்க்கைக்கு முடிவைத் தேடுவான். இறுதியில் தற்கொலைக்கும் துணிந்து விடுவான்.
 
எந்தச் சமுதாயம் நல்ல அகீதாவைக் கொண்டு பலப்படுத்தப்படவில்லையோ அந்தச் சமுதாயம் மிருகச் சமுதாயமாகவே இருக்கும். மகிழ்ச்சியைக் கொண்டு வரும் சாதனங்கள் அனைத்தையும் அது இழந்திருக்கும். அவர்களிடம் உலக வசதிக்கான சாதனங்கள் கொட்டிக் கிடந்தாலும், அவையெல்லாம் அழிவுக்கே வழிவகுக்கும். காஃபிர் சமுதாயங்கள் இதற்குப் பெரிய சாட்சி.
 
ஏன் இப்படி என்றால், உலகச் சாதனங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அவற்றிலிருந்து எப்படி நன்மை அடைய வேண்டும், எதை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதெல்லாம் அந்தக் காஃபிர் சமுதாயங்களுக்குத் தெரிவதில்லை. நேர்வழி தேவைப்பட்டிருந்தும் அது இல்லாமல் இருக்கிறார்கள்.புரிந்துகொள்ளுங்கள். நல்ல அகீதாவில் தவிர வேறெங்கும் நேர்வழி இல்லை.
 
அல்லாஹ் கூறுகிறான்:என் தூதர்களே! தூய்மையானவற்றையே உண்ணுங்கள். நல்ல செயல்களையே செய்யுங்கள்.. (அல்குர்ஆன் 23.51)
 

நல்ல அகீதாவிலிருந்து வழிதவறக் காரணமாக இருப்பவை

கெட்ட அகீதா எங்கிருந்து எப்படி உருவாகிறது என்பதைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். அவற்றில் முக்கியமான காரணங்களை இங்கு குறிப்பிடலாம்.
 
அறியாமை:

இது நல்ல அகீதாவைக் கற்றுக்கொள்ளாமலும், அதைக் கற்றுக்கொடுக்காமலும் புறக்கணித்து விலகியிருப்பதால் ஏற்படுகிறது. அல்லது, அதற்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை; அதன் மீது கவனம் செலுத்தப்படுவதில்லை. இதனால் மக்களுக்கு நல்ல அகீதா தெரிவதில்லை; அதற்கு முரணானதும் எதிரானதும் தெரிவதில்லை.
 
வரட்டுப் பிடிவாதம்:

தன் மூதாதைகளின் பாதை சத்தியத்திற்கு முரணாக இருந்தாலும், அவர்களின் அசத்தியப் பாதையைப் பிடிவாதமாகப் பின்பற்றுவது.
 
கண்மூடித்தனம்:

அகீதா விசயத்தில் மனிதர்களின் பேச்சுகளை ஆதாரங்கள் அறியாமலே கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது.
 
வரம்பு மீறுதல்:

இறைநேசர்களையும் நல்லோர்களையும் அவர்களின் அந்தஸ்தை விட உயர்த்தி வரம்பு மீறுவது. நன்மையைக் கொண்டு வருவதும், தீமையிலிருந்து பாதுகாப்பதும் அவர்களால் முடியும் என்று நம்புவது. அல்லாஹ்வினால் மட்டுமே முடியும் என்ற இது போன்ற விஷயத்தை அவர்களாலும் முடியுமென நம்புவது.

அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் மத்தியில் அவர்களை இடைத்தரகர்களாகக் கருதி, தங்கள் தேவைகளை அவர்களிடம் முறையிடுவது, அவர்களிடம் பிரார்த்திப்பது, உதவி தேடுவது, பாதுகாப்புத் தேடுவது, அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுத்தரும் வணக்கங்களை, அதாவது நேர்ச்சைகளை, பலிகளை அவர்களுக்குச் செய்வது. இதுதான் நபி நூஹ்(அலை) அவர்களின் சமுதாயத்தில் நடந்தது.

அல்லாஹ் கூறுகிறான்:(ஒருவர் மற்றவரிடம்) “உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள். ‘வத்’(என்னும் விக்கிரகத்)தையும் விடாதீர்கள்.சுவாஉ, எகூஸ், யஊக், நஸ்ர்(ஆகிய விக்கிரகங்)களையும் விட்டுவிடாதீர்கள்”என்றார்கள்.     (அல்குர்ஆன் 71:23)
 
சிந்திக்காதிருத்தல்:

அல்லாஹ்வின் அத்தாட்சிகளையும் அவனுடைய குர்ஆன் வசனங்களையும் சிந்திக்காதிருப்பது. இதனால் இவ்வுலகின் முன்னேற்றங்கள் அனைத்திற்கும் மனிதர்களின் முயற்சிகளும் சக்திகளுமே காரணம் என்ற நம்பிக்கை உருவாகிவிடுகிறது.
 
குடும்பம் வழிதவறியிருத்தல்:

நேரான பாதை அறியாத குடும்பப் பின்னணியில் வளர்பவர்களும் அகீதா கெட்டவர்களாக மாறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்)கூறினார்கள்:ஒவ்வொரு குழந்தையும் இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றது. அதன் பெற்றோர்தாம் அதனை யூதனாகவோ, கிறித்துவனாகவோ, (நெருப்பை வணங்கும்) மஜூஸியாகவோ ஆக்கிவிடுகிறார்கள்.(ஸஹீஹுல் புகாரீ 1385)

இதிலிருந்து குழந்தைகளுக்கு நேர்வழி காட்டுவதில் பெற்றோருக்கு மிகப் பெரிய பங்கிருப்பதை அறியலாம்.
 
அகீதா பிரசாரம் இல்லாமை:

இஸ்லாமிய உலகில் மார்க்கக் கல்விக்கும் மார்க்கத்தின் அடிப்படைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பிரசாரங்கள் மிகக்குறைந்துவிட்டன. வீடியோ, ஆடியோ போன்ற செய்தி ஊடகங்கள், பெரும்பாலும் வழிகேடுகளையும் அழிவையும் சுமந்துவரும் சாதனங்களாக ஆகிவிட்டன. அவற்றில் உலக ஆதாயங்களே இருக்கின்றன. மார்க்கக் கல்வி கிடைப்பதில்லை.

நல்ல அகீதாவையும் அதன் அடிப்படையிலான நல்ல பண்புகளையும் ஒழுக்கங்களையும் விதைப்பதற்கு இந்த ஊடகங்கள் முக்கியத்துவம் தருவதில்லை. அதனால் வழிகேடுகளிலிருந்து தப்பிக்கும் சூழலே இல்லாமலாகிவிட்டது.

எப்படித் தற்காப்பு வசதிகள் இல்லாத ஒரு கூட்டம், பயங்கர ஆயுதங்களுடன் நிற்கும் ஒரு படையிடம் சிக்கிக்கொள்ளுமோ, அதைப்போன்ற ஒரு சூழ்நிலைக்கு மக்கள் உள்ளாகியுள்ளார்கள்.
 
வழிகேடுகளை விட்டுக் காத்துக்கொள்ள வழிகள்

அல்லாஹ்வின் வேதத்தின் பக்கமும் அவனுடைய தூதர் (ஸல்)அவர்களின் வழிமுறை (ஸுன்னா) பக்கமும் திரும்புவது. எப்படி அஸ்ஸலஃப் அஸ்ஸாலிஹ், அதாவது நபித்தோழர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் அவற்றிலிருந்து நல்ல அகீதாவைப் பெற்றுக்கொண்டார்களோ, அதுபோல் நாமும் பெற வேண்டும்.
 
நல்ல அகீதாவை, அதாவது அஸ்ஸலஃப் அஸ்ஸாலிஹ் கொண்டிருந்த அகீதாவை பல நிலைகளில் கல்விக்கூடங்களில் பாடமாக்கிப் போதிக்க வேண்டும். பாடத்திட்டத்தில் அதற்குப் போதுமான அளவு பாடங்களை ஒதுக்க வேண்டும். இவ்விஷயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து கண்டிப்பான தேர்வுகள் நடத்த வேண்டும்.
 
ஸலஃபின் தூய புத்தகங்களைக் கற்றுக்கொடுக்க வழிவகை செய்ய வேண்டும். சூஃபித்துவம், பித்அத்வாதிகள், ஜஹ்மிய்யா, முஅதஸிலா, அஷாஇறா, மாதூரீதிய்யா, இன்னும் இவர்களைப் போன்ற வழிகெட்ட கூட்டங்களின் புத்தகங்களைப் படிப்பதிலிருந்து மக்களைத் தூரமாக்க வேண்டும். இவர்களுக்கு மறுப்பு தரவோ, இவர்களின் புத்தகங்களில் உள்ள தீமைகளை அம்பலப்படுத்தவோ, இவர்கள் குறித்து எச்சரிக்கை செய்யவோ தவிர வேறு காரணங்களுக்காக இவர்களுடையதைப் படிக்க விடக் கூடாது.
 
ஸலஃபின் அகீதா பக்கம் மக்களை அழைக்கின்ற, வழிகெட்டவர்களின் வழிகேடுகளுக்குப் பதிலடி தருகின்ற, சீர்திருத்தமும் மறுமலர்ச்சியும் கொண்டு வருகின்ற அழைப்பாளர்களை உருவாக்க வேண்டும்.

யார் தமது அகீதாவைப் பாதுகாத்துக்கொண்டாரோ அவரே நபித்தோழர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் கொண்ட பாதுகாப்பு பெற்ற கூட்டத்தில் அடங்குவார். இந்த சமுதாயம் எழுபத்தி மூன்றுகூட்டங்களாகபிரியும். ஒரு கூட்டம் தவிர அனைத்தும் நரகம் நுழையும் என்று நபி (ஸல்)அவர்கள் கூறியபோது, ஒரு கூட்டம் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு,“நானும் என் தோழர்களும் எதன் மீது இருக்கிறோமோ அதன் மீது இருப்பவர்கள்”என்றார்கள் நபியவர்கள்.(ஜாமிவுத் திர்மிதீ 2641, அஸ்ஸஹீஹா 1348)

- நூல்: அகீதத்துத் தவ்ஹீது
Previous Post Next Post