﷽
புத்தகம்: معنى لا إله إلا الله
மஅனா லா இலாஹ இல்லல்லாஹ்
(லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் விளக்கம்)
ஆசிரியர்: ஷெய்குல் இஸ்லாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்
விளக்கவுரை: அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி அஸ் ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்
தொகுப்பு: அபூ ஆஇஷா அப்துல்லாஹ் அல் ஹிந்தி வப்பகஹுல்லாஹ்.
முன்னுரை:
ஷெய்குல் இஸ்லாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வரலாறு (சுருக்கம்):
ஷெய்குல் இஸ்லாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹிஜ்ரி 1115 ஆம் ஆண்டு பிறந்தார்கள்.
ஷெய்க் அவர்களின் (குன்யா) புனைப்பெயர் அபூ அப்தில்லாஹ் அல்லது அபுல் ஹுசைன்.
இமாமவர்கள் இன்றைய சஊதி அரேபியாவில் உள்ள நஜ்து பகுதியில் பிறந்தார்கள். நஜ்து என்பது தற்பொழுது சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் ஆகும். அதனால் தான் இமாம் அவர்களின் பெயர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அந் நஜ்தி அத் தமீமி என்று அழைக்கப்படுகிறது.
இமாமவர்கள் சஊதி அரேபியாவில் ஷிர்க் நிறைந்திருந்த காலகட்டத்தில் தவ்ஹீதை புதுப்பித்து தவ்ஹீதை நிலைநாட்டினார்கள். அதன் பிறகு இந்த தஃவா சஊதியிலிருந்து இந்தியா இலங்கை உட்பட உலகம் முழுக்க பரவியது. இத்தகைய தவ்ஹீத் அடிப்படையிலான தஃவா பரவிய போது அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சூஃபியாக்கள் இதற்கு (வஹ்ஹாபிசம்) என்று பெயர் வைத்தனர்.
நஜ்து பகுதியின் ஆட்சியாளராக இருந்த முஹம்மது இப்னு சஊது ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய தஃவாவிற்கு உற்சாகம் கொடுத்து உதவி செய்து தவ்ஹீதை நிலைநாட்டினார்கள். ஆட்சியாளர் முஹம்மது இப்னு சஊது அவர்களுக்குப் பிறகு அவர்களது சந்ததியினர்கள் தவ்ஹீதை நிலைநாட்டினார்கள்.
இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் பனூ தமீம் கோத்திரத்தை சார்ந்தவர் ஆவார்.
அல்லாஹ் சுப்ஹானஹூ வ தஆலா கூறுகிறான்:
وَجَعَلۡنَٰكُمۡ شُعُوبٗا وَقَبَآئِلَ لِتَعَارَفُوٓاْۚ
ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். அல்குர்ஆன் 49:13
இமாமவர்களுடைய சந்ததியில் வரக்கூடிய உலமாக்களை ஆலுஷ்ஷெய்க் என்று அழைக்கப்படுகிறார்கள். இமாம் அவர்களின் சந்ததியில் வந்தவர்கள் ஆலிம்களாக உருவாகி புத்தகங்களையும் எழுதியுள்ளார்கள். இமாம் அவர்களுக்கு அப்துல்லாஹ், அலி, சுலைமான், இப்ராஹிம், ஹுஸைன், ஹஸன் என்று ஆறு மகன்கள் இருந்தனர்; அவர்களில் சிலர் பெரும் ஆலிம்களாகவும் இருந்தனர். மேலும் இமாம் அவர்களுக்கு நான்கு மகள்களும் இருந்தனர். ரஹிமஹுமுல்லாஹ். இமாம் அவர்களின் பேரன் அப்துர்ரஹ்மான் இப்னு ஹஸன் இப்னு முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஃபத்ஹுல் மஜீத் என்ற சிறப்பான புத்தகத்தை எழுதிய மாபெரும் இமாம் ஆவார்கள். தற்போது சஊதி அரேபியாவின் முப்தியாக இருப்பவரும் அல் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பரம்பரையை சார்ந்த ஷெய்க் அப்துல் அஸீஸ் ஆலுஷ்ஷெய்க் ஹபிழஹுல்லாஹ் ஆவார்கள். இவ்வாறாக ஹிஜ்ரி பன்னிரண்டாம் நூற்றாண்டு தொடங்கி தற்போதுள்ள ஹிஜ்ரி 15ஆம் நூற்றாண்டு வரை இமாமவர்களின் சந்ததியிலிருந்து உலமாக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
முஹம்மது இப்னு சஊது ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சந்ததியில் வரக்கூடியவர்களை ஆலு சஊத் என்று அழைக்கப்படுகிறார்கள். மன்னர் அப்துல் அஸீஸ், ஃபஹத், ஃபைஸல், அப்துல்லாஹ் உட்பட கடந்த 12ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை இவரது பரம்பரையை சார்ந்தவர்கள் தான் சஊதி அரேபியாவின் ஆட்சியாளராக இருக்கிறார்கள்.
அல் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மக்களை தவ்ஹீதின் பக்கம் அழைத்தார்கள். தவ்ஹீது இல்லாத வணக்க வழிபாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை மக்களுக்கு விளக்கினார்கள். இமாமவர்கள் மக்கா, மதினா, ஈராக் போன்ற இடங்களுக்கு சென்று உலமாக்களிடம் உட்கார்ந்து கல்வி பயின்றார்கள். முஹம்மது ஹயாத் அஸ் ஸிந்தி; அப்துல்லாஹ் இப்னு இப்ராஹிம் போன்ற மக்கா மதினாவில் இருந்த பல்வேறு ஆலிம்களிடம் கல்வியை கற்றுக் கொண்டார்கள். அதேபோன்று ஈராக்கில் பஸரா பாக்தாத் ஆகிய நகரங்களில் இருந்த உலமாக்களிடமிருந்தும் கல்வியை எடுத்துக் கொண்டார்கள். ரஹிமஹுமுல்லாஹ். அதேபோன்று கல்வியைத் தேடி ஷாம் தேசத்திற்கு இமாம் அவர்கள் சென்ற பொழுது வழிப்பறிக் கொள்ளையர்கள் இமாம் அவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டனர் இதனால் இமாம் அவர்களால் ஷாம் தேசத்திற்கு சென்று கல்வி தேட முடியவில்லை.
இமாம் அவர்களுடைய பாட்டன்மார்களின் பரம்பரை ரசூலுல்லாஹ் ﷺ அவர்களின் பரம்பரையோடு சென்று சேர்கிறது. சுமார் 30 பாட்டன்மார்களுக்கு முன்பு இமாம் அவர்களுடைய பாட்டனும் நபி ﷺ அவர்களுடைய பாட்டனும் ஒன்றாகும்.
இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளை சார்ந்த மாணவர்கள் இமாம் அவர்களிடமிருந்து கல்வி பயின்று சென்றுள்ளார்கள்.
இமாம் அவர்கள் தன்னுடைய 91 வது வயதில், ஹிஜ்ரி 1206 ஆம் ஆண்டு இறந்தார்கள். இமாமவர்கள் நிறைய புத்தகங்களையும், உலமாக்களையும் மாணவர்களையும் விட்டுச் சென்றார்கள் இது அல்லாஹ் அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா இமாம் அவர்களுக்கு செய்த பரக்கத் ஆகும்.
அல் இமாம் அல் முஜத்திது முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் தஃவாவின் தனித்துவமும்; இமாமவர்கள் எழுதிய புத்தகங்களின் முக்கியத்துவமும்:
இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தவ்ஹீதை பரப்புவதற்கு கடுமையாக பாடுபட்டார்கள். இமாம் அவர்கள் மேற்கொண்ட தவ்ஹீது அடிப்படையிலான தஃவா என்பது (PJ) பிஜே அல்லது ஜமாதுத் தவ்ஹீது போன்ற வழிகெட்ட கூட்டங்களைப் போல் அல்லாமல் உண்மையான தவ்ஹீதை பரப்புவதாக இருந்தது.
இமாமவர்கள் சஊதி அரேபியாவில் ஷிர்க் நிறைந்திருந்த காலகட்டத்தில் தவ்ஹீதை புதுப்பித்து; தவ்ஹீதின் பக்கம் மக்களை அழைத்து; தவ்ஹீதை நிலைநாட்டினார்கள். தவ்ஹீது இல்லாத வணக்க வழிபாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை மக்களுக்கு விளக்கினார்கள். அதன் பிறகு இந்த தஃவா சஊதியிலிருந்து இந்தியா இலங்கை உட்பட உலகம் முழுக்க பரவியது.
சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த அஷ்ஷெய்க் இப்னு பாஸ், அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுமுல்லாஹ் போன்றவர்களும்; அதேபோல் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான், அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் ஆலுஷ்ஷெய்க், அஷ்ஷெய்க் அப்துல் முஹ்ஸின் அல் அப்பாத் உட்பட மற்ற உலமாக்களும் (ஹபிழஹுமுல்லாஹ்) இமாம் அவர்களின் புத்தகங்களை பாடங்களாக நடத்தி வருகின்றனர். ஏனெனில் இமாம் அவர்களின் புத்தகங்கள் அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களாக இருக்கின்றன.
இமாமவர்கள் அவர்கள் எழுதிய ஸலாஸத்துல் உஸூல், உஸூலுஸ் ஸித்தா, கஷ்புஷ் ஷுபுஹாத், கிதாபுத் தவ்ஹீத், மஸாயிலுல் ஜாஹிலியா போன்ற சிறிய புத்தகங்கள் மக்களுக்கு மிகப் பெரிய பலன் தரக்கூடியதாக இருப்பதால் பெரிய உலமாக்கள் இந்த புத்தகங்களுக்கு நீண்ட விளக்க உரை கொடுத்துள்ளார்கள்.
معنى لا إله إلا الله
மஅனா லா இலாஹ இல்லல்லாஹ்
(லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் விளக்கம்)
شُرُوْطُ لٓا إِلٰهَ إلّا الله
லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவிற்கு 8 நிபந்தனைகள் இருக்கின்றன. அந்த நிபந்தனைகளை பரிபூரணம் செய்தால்தான் ஒருவர் உண்மையான முவஹ்ஹித் (موحد) - தவ்ஹீத்வாதியாக - ஏகத்துவவாதியாக இருப்பார்.
அல் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
وليس المراد قولها باللسان مع الجهل بمعناها
லா இலாஹ இல்லல்லாஹ் என்று வெறுமனே நாவால் உச்சரிப்பது மட்டும் போதாது மாறாக அதை பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும்.
லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை கூறி அதை அமல்படுத்துவதற்கு எட்டு நிபந்தனைகள் இருக்கின்றன.
அந்த நிபந்தனைகளை பரிபூரணம் செய்தால்தான் ஒருவர் உண்மையான முவஹ்ஹித் (موحد) - தவ்ஹீத்வாதியாக - ஏகத்துவவாதியாக இருப்பார்.
கவிதை வடிவில் தொகுக்கப்பட்ட லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவின் எட்டு நிபந்தனைகள் பின்வருமாறு:
شُرُوْطُ لٓا إِلٰهَ إلّا الله
عِلْمٌ يَقِيْنٌ إِخْلاَصٌ وَصِدْقُكَ مَعْ مُحَبَّةٍ وَانْقِيَادٍ وَالْقَبُوْلِ لَهَا وَزِيْدَ ثَامِنُهَا اَلْكُفْرَانُ مِنْكَ بِمَا سِوَى الْإِلٰهِ مِنَ الْأَشْيَاءِ قَدْ أُلِهَا
1.இல்ம் عِلْمٌ
2.யகீன் يَقِيْنٌ
3.இஃக்லாஸ் إِخْلاَصٌ
4.ஸித்க் صِدْقٌ
5.முஹப்பா مُحَبَّةٌ
6.இன்கியாத் انْقِيَادٌ
7.கபூல் الْقَبُوْلُ
8.குஃப்ரான் اَلْكُفْرَانُ
இந்த எட்டு நிபந்தனைகளையும் ஆதாரங்களுடன் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த நிபந்தனைகளை பரிபூரணம் செய்தால்தான் லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறினால் அது நமக்கு பலன் தரும். அப்பொழுதுதான் தவ்ஹீதை நமது உள்ளத்தில் நிலைநாட்டி அதை பிறருக்கு தெளிவாக எடுத்து சொல்ல முடியும்.
1) இல்ம்:
லா இலாஹ இல்லல்லாஹ்வின் முதல் நிபந்தனை அல்-இல்ம்; இல்ம் என்றால் அறிந்துக்கொள்வது. லா இலாஹ இல்லல்லாஹ் என்பதின் சரியான சத்தியமான உண்மையான பொருளை அறிந்து கொள்வது.
அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா கூறுகிறான்:
فَٱعۡلَمۡ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ
நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர உண்மையில் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லை என்பதை நீர் உறுதியாக அறிந்து கொள்வீராக.
[சூரா முஹம்மத்: 19]
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா فَٱعۡلَمۡ - அறிந்து கொள்ளுங்கள் என்று கட்டளை இடுகின்றான். எனவே லா இலாஹ இல்லல்லாஹ் என்பதின் சரியான சத்தியமான உண்மையான பொருளை அறிந்து கொள்வது கடமையாகும்.
அரபியில் லா இலாஹ இல்லல்லாஹ் என்பதற்கான உண்மையான சரியான விளக்கம்:
لٓا مَعْبُوْدَ بِحَقٍ إلا الله
மேற்கண்ட அரபிய வாக்கியத்திற்கு தமிழ் மொழிபெயர்ப்பு, 'உண்மையில் வணக்கத்திற்கு தகுதி வாய்ந்தவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை' என்பதாகும்.
அதாவது லா இலாஹ இல்லல்லாஹ் என்பதற்கு, 'வணக்கத்திற்கு தகுதி வாய்ந்தவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை' என்று பொருள் கொள்ளக் கூடாது. மாறாக 'உண்மையில் - الحَقُّ' என்ற வார்த்தையை சேர்த்து, 'உண்மையில் வணக்கத்திற்கு தகுதி வாய்ந்தவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை' என்று பொருள் கொள்ள வேண்டும்.
இதற்கான ஆதாரம், அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா கூறுகிறான்:
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ وَأَنَّ مَا يَدۡعُونَ مِن دُونِهِۦ هُوَ ٱلۡبَٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡعَلِيُّ ٱلۡكَبِيرُ
நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி (இறைவனென) அழைப்பவை அனைத்தும் பொய்யானவைதான்.
[சூரா அல் ஹஜ்: 62]
மேற்கண்ட இந்த வசனத்தில் அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா, அவன் மட்டுமே الحَقُّ - உண்மையானவன் என்றும் அவனைத்தவிர வணங்கப்படக்கூடியவை அனைத்தும் போலியானவை என்று கூறுகிறான். எனவே, லா இலாஹ இல்லல்லாஹ் என்பதற்கு, 'உண்மையில் - الحَقُّ' என்ற வார்த்தையை சேர்த்து, 'உண்மையில் வணக்கத்திற்கு தகுதி வாய்ந்தவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை' என்று பொருள் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட அந்த வசனம் குர்ஆனில் சூரத்துல் ஹஜ் மற்றும் சூரத்துல் லுக்மான் ஆகிய இரண்டு இடங்களில் வருகின்றன. இந்த இரண்டு வசனங்களில் ஒரு வசனத்தில் هو என்ற வார்த்தை கூடுதலாக வருகின்றது. மற்றபடி இரண்டு வசனங்களுமே ஒரே பொருளையே குறிப்பிடுகின்றது.
லா இலாஹ இல்லல்லாஹ்விற்கு பொருள் கொள்ளும் போது 'உண்மையில் - الحَقُّ' என்ற வார்த்தையை சேர்த்து பொருள் கொள்ள வேண்டும் என்பதற்கான மேலும் ஒரு ஆதாரம், அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா கூறுகிறான்:
وَلَا يَمْلِكُ الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الشَّفَاعَةَ اِلَّا مَنْ شَهِدَ بِالْحَـقِّ وَهُمْ يَعْلَمُوْنَ
மேலும், (அல்லாஹ்வாகிய) அவனையன்றி இவர்கள் (தெய்வங்களாக) அழைக்கின்றார்களே அத்தகையவர்கள் (இவர்களுக்காக அவனிடத்தில்) பரிந்துரை செய்ய அதிகாரம் உள்ளவர்கள் அல்லர், ஆயினும், அவர்கள் அறிந்தோராக இருக்க உண்மையை (الْحَـقِّ) கொண்டு சாட்சியம் கூறினார்களே, அவர்களைத் தவிர (வேறு எவரும் பரிந்துரை செய்பவர்களல்லர்).
[சூரா அஸ் ஸுக்ருப்: 86]
லா இலாஹ இல்லல்லாஹ் என்பதின் சரியான சத்தியமான உண்மையான பொருளை அறிந்து கொள்வது ஒவ்வொருவர் மீதும் கடமை என்பதற்கான ஹதீஸ் ஆதாரம், உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த ஹதீஸ்,
ரசூலுல்லாஹ் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் கூறினார்கள்:
مَنْ مَاتَ، وَهُوَ يَعْلَمُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ
யாரெல்லாம் லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருளை அறிந்து மரணிக்கிறார்களோ அவர் நிச்சயமாக சொர்க்கத்தில் நுழைவார்.
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 26
லா இலாஹ இல்லல்லாஹ் என்பதின் உண்மையான பொருளை அறியாமல் ஒருவர் இறந்தால் சொர்க்கம் செல்ல முடியாது. சொர்க்கம் செல்ல வேண்டுமென்றால் லா இலாஹ இல்லல்லாஹ் என்பதின் உண்மையான சரியான பொருளை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். எனவே, லா இலாஹ இல்லல்லாஹ்வின் முதல் நிபந்தனை அல்-இல்ம் ஆகும்.
2. அல்-யகீன் اليقين
லா இலாஹ இல்லல்லாஹ்வின் இரண்டாவது நிபந்தனை அல் யகீன் - اليَقِيْن. யகீன் என்றால் எந்தவொரு சந்தேகமும் இல்லாமல் உறுதியான நம்பிக்கையோடு இருப்பது.
எனவே லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறும்பொழுது சரியான பொருளை அறிந்து கூறுவதோடு அதன் மீது எந்தவொரு சந்தேகமும் இல்லாமல் உறுதியான நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.
இதற்கான ஆதாரம் அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா கூறுகிறான்:
إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ لَمۡ يَرۡتَابُواْ وَجَٰهَدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ فِي سَبِيلِ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلصَّٰدِقُونَ
(உண்மையான) நம்பிக்கையாளர்கள் எவர்களென்றால், அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாது, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிரையும் பொருளையும் தியாகம் செய்து போர் புரிவார்கள். இவர்கள்தான் (தங்கள் நம்பிக்கையில்) உண்மையானவர்கள்.
[சூரா அல் ஹுஜுராத்:15]
மேற்கண்ட வசனத்தில் நம்பிக்கையாளர்களின் பண்பை பற்றி அல்லாஹ் தபாரக வ தஆலா குறிப்பிடும் பொழுது, அவர்கள் எந்தவித சந்தேகமும் கொள்ளாது உறுதியாக நம்பிக்கை கொள்வார்கள் என்று கூறுகின்றான். இவ்வாறாக எந்தவித சந்தேகமும் கொள்ளாது உறுதியாக நம்பிக்கை கொள்வதைத்தான் யகீன் என்று கூறுவார்கள்.
யகீன் என்பது லா இலாஹ இல்லல்லாஹ்வின் ஒரு நிபந்தனை ஆகும் என்பதற்கு மேலும் ஒரு ஆதாரம், அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கக் கூடிய ஹதீஸின் ஒரு பகுதி:
فَمَنْ لَقِيتَ مِنْ وَرَاءِ هَذَا الْحَائِطِ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُسْتَيْقِنًا بِهَا قَلْبُهُ، فَبَشِّرْهُ بِالْجَنَّةِ
நீர் இந்தத் தோட்டத்திற்கு அப்பால் யாரையாவது 'உண்மையில் வணக்கத்திற்கு தகுதி வாய்ந்தவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று உள்ளத்தில் யகீனோடு கூறுவதை கண்டால் அவருக்கு சொர்க்கத்தை நன்மாராயம் கூறுவீராக என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 52
மேற்கண்ட ஹதீஸில், சொர்க்கத்திற்கு நன்மாராயமாக நபி ﷺ அவர்கள் முன்வைத்த ஒரு நிபந்தனை, லா இலாஹ இல்லல்லாஹ்வை யகீனோடு கூறுவதாகும்.
எனவே, யகீன் (எந்தவித சந்தேகமும் கொள்ளாது உறுதியாக நம்பிக்கை கொள்ளுதல்) என்பது லா இலாஹ இல்லல்லாஹ்வின் நிபந்தனை ஆகும்.
3. அல் - இக்லாஸ் الإخلاص
லா இலாஹ இல்லல்லாஹ்வின் முன்றாவது நிபந்தனை அல் - இக்லாஸ் الإخلاص. இக்லாஸ் என்றால் உளத்தூய்மை.
லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லும்பொழுது உளத்தூய்மையுடன் சொல்ல வேண்டும்.
(முனாஃபிக்கள்) நயவஞ்சகக்காரர்கள் உளத்தூய்மை இல்லாமல் உள்ளத்தில் குஃப்ரை வைத்துக் கொண்டு முகஸ்துதிக்காக லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்வார்கள். இது நிஃபாக் ஆகும். எனவே முனாஃபிக்குகளை போல் இல்லாமல் லா இலாஹ இல்லல்லாஹ்வை (இக்லாஸுடன்) உளத்தூய்மையுடன் கூற வேண்டும்.
இதற்கான ஆதாரங்கள்:
அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா கூறுகின்றான்:
وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ
மேலும், அவர்கள் அல்லாஹ்வை இஃக்லாஸோடு (உளத்தூய்மையுடன்) வணங்க வேண்டும் என்பதைத் தவிர கட்டளையிடப் படவில்லை
[சூரா அல் பய்யினா :5]
அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸ்:
أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ مَنْ قَالَ : لَا إِلَهَ إِلَّا اللَّهُ خَالِصًا مِنْ قَلْبِهِ أَوْ نَفْسِهِ
மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெற்றவர் யாரெனில், 'உண்மையில் வணக்கத்திற்கு தகுதி வாய்ந்தவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை' என்று (இக்லாஸுடன்) உளத்தூய்மையுடன் கூறியவரே ஆவார் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
நூல்: ஸஹீஹ் அல் புகாரி : 99.
அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா கூறுகிறான்:
فَٱعۡبُدِ ٱللَّهَ مُخۡلِصٗا لَّهُ ٱلدِّين • اَلَا لِلّٰهِ الدِّيْنُ الْخَالِصُ
பரிசுத்த மனதுடன் (இஃக்லாஸுடன்) அவனை வணங்கி வருவீராக.
பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
[சூரா அஸ்-ஸுமர்: 2-3]
எனவே, லா இலாஹ இல்லல்லாஹ்வை கூறும் பொழுது இக்லாஸுடன் (உளத்தூய்மையுடன்) கூறுவது லா இலாஹ இல்லல்லாஹ்வின் ஒரு நிபந்தனை ஆகும்.
4. அஸ் ஸித்க் الصِدْقٌ
லா இலாஹ இல்லல்லாஹ்வின் நான்காவது நிபந்தனை அஸ் ஸித்க் الصِدْقٌ.
அஸ் ஸித்க் என்றால் உண்மைத்துவம்.
லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறும்பொழுது பொய்யாக கூறாமல் உண்மையாக கூறவேண்டும். இதற்கான ஆதாரங்கள்,
அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா கூறுகிறான்:
أَحَسِبَ ٱلنَّاسُ أَن یُتۡرَكُوۤا۟ أَن یَقُولُوۤا۟ ءَامَنَّا وَهُمۡ لَا یُفۡتَنُونَ وَلَقَدۡ فَتَنَّا ٱلَّذِینَ مِن قَبۡلِهِمۡۖ فَلَیَعۡلَمَنَّ ٱللَّهُ ٱلَّذِینَ صَدَقُوا۟ وَلَیَعۡلَمَنَّ ٱلۡكَـٰذِبِینَ
மனிதர்கள் ”நாங்கள் விசுவாசங் கொண்டோம்” என்று அவர்கள் கூறுவது கொண்டு (மட்டும்) அவர்கள் விட்டுவிடப்படுவார்கள் என்றும், அவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்படவும் மாட்டார்கள் என்றும் எண்ணிக்கொண்டார்களா?
இவர்களுக்கு முன்னிருந்தோரையும் திட்டமாக நாம் சோதித்திருக்கின்றோம், ஆகவே, (விசுவாசங்கொண்டோம் என்று கூறும் இவர்களில்) உண்மை சொல்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான், (அவ்வாறே, இவர்களில்) பொய்யர்களையும் நிச்சயமாக அவன் அறிவான்.
[சூரா அல் அன்கபூத்2-3]
அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் அறிவிக்கக் கூடிய ஹதீஸ்:
مَا مِنْ أَحَدٍ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ صِدْقًا مِنْ قَلْبِهِ، إِلَّا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ
யாரெல்லாம் 'உண்மையில் வணக்கத்திற்கு தகுதி வாய்ந்தவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை; முஹம்மது ﷺ அல்லாஹ்வின் தூதராவார்கள்' என்று உள்ளத்திலிருந்து உண்மையாக சாட்சி கூறுகிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கி விட்டான் என்று இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்.
நூல்: ஸஹீஹ் புகாரி : 128.
மேற்கண்ட ஹதீஸில் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சாட்சி கூறும் பொழுது உண்மையாக சாட்சி கூறுபவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கி விட்டான் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால் அவர் நரகத்தில் நுழைய மாட்டார் மாறாக அவர் நரகத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு சொர்க்கம் செல்பவர் ஆவார்.
எனவே, இந்த மகத்தான கூலியை ஒருவர் அடைய வேண்டுமென்றால் அவர் லா இலாஹ இல்லல்லாஹ்வை கூறும்பொழுது அஸ் ஸித்க் - الصِدْقٌ - உண்மைபடுத்தல் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்ய வேண்டும்.
5. அல் மஹப்பா المَحَبَّةُ
லா இலாஹ இல்லல்லாஹ்வின் ஐந்தாவது நிபந்தனை அல் மஹப்பா المَحَبَّةُ.
அல் மஹப்பா என்றால் நேசம் கொள்வது என்று பொருளாகும்.
அதாவது லா இலாஹ இல்லல்லாஹ் கூறும்பொழுது உள்ளத்தில் வெறுப்பில்லாமல் நேசத்தோடு கூறவேண்டும்.
முஸ்லிம் என்பவன் தனது தாய் தந்தை உட்பட அனைத்தையும் விட அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலாவை மட்டுமே முதன்மையாக நேசிக்க வேண்டும். அல்லாஹ்வை நேசிக்கும் அளவிற்கு மற்ற எதையும் நேசிக்கக் கூடாது. அல்லாஹ்வை நேசிப்பது (இபாதத்) வணக்கம் ஆகும்.
அல்லாஹ்வை நேசிப்பது போன்று வேறு யாரையாவது நேசிப்பது ஷிர்க் ஆகும். இதற்கான ஆதாரங்கள்,
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَنْ يَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِيْـنِهٖ فَسَوْفَ يَاْتِى اللّٰهُ بِقَوْمٍ يُّحِبُّهُمْ وَيُحِبُّوْنَهٗۤ ۙ
விசுவாசங்கொண்டோரே! உங்களிலிருந்து எவர் தன் மார்க்கத்தைவிட்டும் மாறிவிடுவாரானால் (அப்பொழுது அவர்களுக்குப் பகரமாக) வேறு சமூகத்தாரை அல்லாஹ் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான், அவர்களும் அவனை நேசிப்பார்கள்,
[சூரா அல்-மாஇதா: 54]
وَمِنَ النَّاسِ مَنْ يَّتَّخِذُ مِنْ دُوْنِ اللّٰهِ اَنْدَادًا يُّحِبُّوْنَهُمْ كَحُبِّ اللّٰهِ وَالَّذِيْنَ اٰمَنُوْٓا اَشَدُّ حُبًّا لِّلّٰهِ
மனிதர்களில் அல்லாஹ்வையன்றி அவனுக்கு இணையாளர்களை (சமமானவர்களாக) ஆக்கிக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போன்று அவர்களை நேசிப்பவர்களும் இருக்கின்றனர்; (ஆனால்) விசுவாசிகளோ, அல்லாஹ்வை நேசிப்பதில் மிகக் கடினமானவர்கள்.
[சூரா அல்-பகரா :165]
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸ்:
ثَلَاثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلَاوَةَ الْإِيمَانِ : أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لَا يُحِبُّهُ إِلَّا لِلَّهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ
'எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) ஒருவருக்கு, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியவர்களாக ஆகுவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
நூல்: ஸஹீஹ் புகாரி : 16.
மேற்கண்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அல்லாஹ்வை நேசிப்பதின் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கின்றது. எனவே ஒருவர் ஈமானின் சுவையை உணர வேண்டுமென்றால் அவர் லா இலாஹ இல்லல்லாஹ்வின் ஐந்தாவது நிபந்தனையை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இதற்கு முரணாக அல் மஹப்பா என்ற இந்த ஐந்தாவது நிபந்தனை ஒருவரிடம் இல்லை என்றால் அவரிடம் ஈமானிய சுவை இருக்காது.
6. அல் இன்கியாத் الانْقِيَادُ
லா இலாஹ இல்லல்லாஹ்வின் ஆறாவது நிபந்தனை அல் இன்கியாத் الانْقِيَادُ.
அல் இன்கியாத் என்றால் கட்டுப்படுவது; வழிபடுவது; ஒப்படைப்பது என்று பொருளாகும். எனவே, லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறும்பொழுது அதற்கு கீழ் வரும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டு வழிபட்டு நடக்க வேண்டும்.
முஸ்லிம் என்பவன் அல்லாஹ் தபாரக வ தஆலா ஏவியுள்ள அனைத்து கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு வழிபட்டு நடக்க வேண்டும். இவ்வாறு நடந்து கொள்பவர் தான் உண்மையான முஸ்லிம் ஆவார்.
முஸ்லிம் என்ற வார்த்தைக்கும் இதுதான் பொருளாகும். முஸ்லிம் என்றால் அல்லாஹ்விற்கு முழுமையாக கட்டுப்பட்டு வழிபட்டு நடப்பவன் என்று பொருளாகும். அல்லாஹ் ஏவி உள்ள கட்டளைகளில் சிலவற்றிற்கு கட்டுப்பட்டு நடப்பதும் மற்றவைகளை புறக்கணித்து நடப்பதும் ஒரு உண்மையான முஸ்லிமுடைய பண்பு கிடையாது.
இதற்கான ஆதாரங்கள்:
وَمَنْ يُّسْلِمْ وَجْهَهٗۤ اِلَى اللّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى
எவர் அவர் நன்மை செய்கிறவராயிருக்கும் நிலையில் (தனது காரியத்தை முழுமையாக ஒப்படைத்து) அல்லாஹ்வின் பால் தன் முகத்தை திருப்புகிறாரோ அவர், நிச்சயமாக மிக மிக பலமானதொரு கயிற்றைப் பற்றிப் பிடித்துகொண்டார், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கின்றது.
[சூரா லுக்மான் :22]
மேற்கண்ட வசனத்தில், யாரெல்லாம் தமது முகத்தை முழுமையாக அல்லாஹ்வின்பால் ஒப்படைத்து கட்டுப்பட்டு நல்ல முறையில் நடக்கின்றாரோ, அவர் 'உர்வதுல் வுஸ்கா' என்ற உறுதியான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டவர் ஆவார் என்று அல்லாஹ் கூறுகின்றான். 'அல்-உர்வதுல் வுஸ்கா' என்றால் லா இலாஹ இல்லல்லாஹ் என்று பொருளாகும் என்பதை மேலே ஆதாரத்துடன் படித்தோம்.
எனவே யாரெல்லாம் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முழுமையாக கட்டுப்பட்டு வழிப்பட்டு அதில் நல்ல முறையில் இஹ்ஸானோடு நடந்து கொள்கிறாரோ அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை உறுதியுடன் பற்றி பிடித்தவர் ஆவார்.
லா இலாஹ இல்லல்லாஹ்வின் இந்த ஆறாவது நிபந்தனையான அல் இன்கியாத் என்ற நிபந்தனையை பரிபூரணம் செய்யாமல் அதில் பொடுபோக்காகுடனும் கவனயீன்மையுடனும் இருந்தால் அவருடைய ஈமானில் குறைவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
எனவே ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், அவனுடைய தீனுக்கும் முழுமையாகக் கட்டுப்படுதல் என்ற அல் இன்கியாத் என்ற நிபந்தனையை பரிபூரணம் செய்ய வேண்டும்.
7. அல் கபூல் الْقَبُوْلُ
லா இலாஹ இல்லல்லாஹ்வின் ஏழாவது நிபந்தனை அல் கபூல் الْقَبُوْلُ.
அல் கபூல் الْقَبُوْلُ என்றால் ஏற்றுக் கொள்வது என்று பொருளாகும். லா இலாஹ இல்லல்லாஹ்வின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது அல்லாஹ்விடமிருந்து வரக்கூடிய அத்தனை கட்டளைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில் எந்த ஒன்றையும் மறுக்கக்கூடாது. இதற்கான ஆதாரம்:
அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா கூறுகிறான்:
اِنَّهُمْ كَانُوْۤا اِذَا قِيْلَ لَهُمْ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُۙ يَسْتَكْبِرُوْنَۙ • وَيَقُوْلُوْنَ اَٮِٕنَّا لَتٰرِكُوْۤا اٰلِهَـتِنَا لِشَاعِرٍ مَّجْـنُوْنٍ •
“உண்மையில் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்.
"ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அல்குர்ஆன் : 37: 35, 36
ஸுரா அஸ் ஸாஃபஃபாத் வசனங்கள் 22 முதல் 36 வரை அல்லாஹு த ஆலா முஷ்ரிகீன்களை பற்றி சொல்லிக்காட்டுகிறான். லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறுங்கள் என்று முஷ்ரிகீன்களிடம் கூறப்பட்டால் அவர்கள் அதைக் கூறாமல் அதற்கு மாற்றமாக பெருமை அடித்து முஹம்மது நபி ﷺ அவர்களை பைத்தியக்காரன் என்று கூறி ஏளனம் செய்து லா இலாஹ இல்லல்லாஹ் சொல்ல மறுத்துவிட்டார்கள்.
எனவே குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ அல்லாஹ்வுடைய புறத்திலிருந்து ஏதாவது கட்டளை வந்தாள் பெருமை அடிக்காமல் அதை முழுமையாக (கபூல்) ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பரிபூரணமான முஸ்லிமாக ஆக முடியும்.
இதற்கு மாற்றமாக சில கட்டளைகளை ஏற்றுக் கொண்டு மற்ற சில கட்டளைகளை ஒருவர் புறக்கணித்து செயல்படுகிறார் என்றால் அது அவருடைய பலவீனத்தையே காட்டுகின்றது. அவர் ஒரு பலவீனமான முஸ்லிம். ஒரு முஸ்லிம் இவ்வாறு இருக்கக் கூடாது. மாறாக அல்லாஹ் ஒரு விஷயத்தை கட்டளையிட்டால் அதை நிறைவேற்றுவதும்; அதேபோன்று ஒரு விஷயத்தை தடுத்தால் அதிலிருந்து முழுமையாக தவிர்ந்து கொள்ளவும் வேண்டும்.
8. அல் குப்ரான் - اَلْكُفْرَانُ
லா இலாஹ இல்லல்லாஹ்வின் எட்டாவது நிபந்தனை அல் குப்ரான் اَلْكُفْرَانُ.
அல் குப்ரான் என்றால் நிராகரிப்பது என்று பொருளாகும்.
முஸ்லிம் என்பவன் தாகூத்தை நிராகரிக்க வேண்டும்.
அல்லாஹ் அல்லாமல் வணங்கப்படக் கூடியவை அனைத்துமே தாகூத் ஆகும்.
தாகூத் என்பது சிலைகளாகவோ அல்லது கப்ருகளாகவோ அல்லது வேறு வடிவத்திலும் இருக்கலாம்.
எனவே, அல்லாஹ்வுடைய தவ்ஹுது மீது ஈமான் கொள்ள கூடிய அதே வேளையில் அனைத்து விதமான ஷிர்க் குஃப்ரான தாகூத்தை நிராகரிக்க வேண்டும். இதற்கான ஆதாரம்,
அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா கூறுகிறான்:
فَمَنْ يَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَيُؤْمِنْ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى لَا انْفِصَامَ لَهَا
ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத பலமான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார்
[ஸுரா அல்- பகரா :256]
எனவே 'அல் உர்வதுல் வுஸ்கா' என்ற லா இலாஹ இல்லல்லாஹ்வுடைய அறுந்து விடாத பலமான கயிற்றை ஒருவர் உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டுமென்றால், அவர் லா இலாஹ இல்லல்லாஹ்வின் இந்த எட்டாவது நிபந்தனையான, 'அல்லாஹ்வுடைய தவ்ஹீதை ஈமான் கொண்டு அல்லாஹ் அல்லாமல் வணங்கப்படக்கூடிய அனைத்து தாகூத்துகளையும் நிராகரித்தல்' (அல் குஃப்ரான்) என்ற இந்த நிபந்தனையை நிச்சயமாக பரிபூரணம் செய்திருக்க வேண்டும்.
Copied from Facebook page:
https://www.facebook.com/Al-ilmush-sharee-العلم-الشرعي-100285895618125/