அன்னை மர்யம் / மேரி (அலை)

 -எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி 


ஆல்குர்ஆன் சிறப்பித்துக் கூறும் அன்னை மேரியின் குடும்பப் பின்னணி

அல்குர்ஆன் அத்தியாயங்களின் பெயர்கள் ஒவ்வோன்றும் ஒரு முக்கிய வரலாற்றைப் பின்னணி உள்ளடக்கியே காணப்படுகின்றன.

அந்த வகையில் ஆலு இம்ரானும் அதில் இருந்து விதிவிலக்கல்ல.

ஆலுஇம்ரான்-  இம்ரானின் கிளையினர்-  சந்ததியினர் என்ற  பொருள் கொண்ட   அத்தியாயம் அல்குர்ஆனில் மூன்றாவது அத்தியாயமாக இடம் பெறுகின்றது.

நூஹ் நபியின் சந்ததியில் இருந்து இப்ராஹீம் நபி (அலை) அவர்களை அல்லாஹ் தேர்வு செய்து, அவர்களின் வழித் தோன்றல்களில் பல நபிமார்களை அனுப்பியது போன்று இப்ராஹீம் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களான  ஆலு இம்ரான் கிளையினரிலும் அல்லாஹ்வை தூயமுறையில் வணங்கி வழிபடும் நன் மக்களாக இம்ரான் குடும்பத்தை தேர்வு செய்தான்.

உலகிலுள்ள மனிதர்கள் அதி சிறந்த இறைத்தூதர்கள், நபிமார்கள், உண்மையாளர்கள், ஷுஹதாக்கள், நல்ல மக்கள் என இறைத்தெரிவிற்கும், கண்ணியத்திற்கும் ஏற்ப இஸ்லாத்தில் தரம்  பிரித்து வகுக்கப்பட்டுள்ளனர்.

அந்த அடிப்படையில் அல்குர்ஆன் சிறப்பித்துக் கூறும் இம்ரான் கிளையினர் சிறப்புக்குரிய நன் மக்களே!
 
۞ إِنَّ اللَّهَ اصْطَفَىٰ آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ ۞ (آل عمران /33).

நிச்சயமாக அல்லாஹ் ஆதம் , நூஹ், இப்ராஹீமின் கிளையினர், மற்றும் ஆலுஇம்ரான் கிளையினர் ஆகியோரை ( அக்கால) உலக மக்களை விட (சிறப்பாக்கி) தேர்வு செய்தான். (ஆலுஇம்ரான்- 33)

மேற்படி வசனத்தின்படி இம்ரானின் கிளையினர் என்போர் அல்லாஹ்வின் விஷேடமான அருள் பாக்கியம் பெற்ற நன்மக்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

அந்த வரிசையில் பரிசுத்தமான பாலஸ்தீன மண்ணில் பல்லாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த  மர்யம் (அலை) அவர்களின் தகப்பனாரே இம்ரான் என்ற நல்லடியாரும் ஒரு சிறந்த மத போதகருமாகும்.

மர்யம் (அலை) அவர்களின் தந்தை இம்ரான் (ரஹி) அவர்கள் அதி சிறந்த  பரம்பரைக்கு சொந்தக் காரர் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். 

மர்யம் (அலை) அவர்களின் குடும்பப் பின்னணி.

மர்யம் (அலை) அவர்களின் தந்தையின் பெயர் இம்ரான் எனக் குர்ஆனிலும் தாய் "ஹன்னா" என்று இஸ்லாமிய வரலாற்றிலும் கூறப்பட்டுள்ளது.

அன்னை மர்யமின் தந்தை அக்காலத்தில் வாழ்ந்த ஒரு சிறந்த மார்க்க மேதையாக வும் வணக்கசாலியாகவும் விளங்கியது  போன்று, அவரது தாயும் மிகச் சிறந்த வணக்கசாலியான பெண் என்பதை அவரது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டதை வைத்து அறிந்து கொள்ள முடிகின்றது.

இப்படி பார்க்கின்ற போது இம்ரானின் கிளையாரை அல்லாஹ்வின் அடியார்களில் அதி சிறந்த ஸாலிஹீன்கள் என்பதை அல்லாஹ் நமக்கு அடையாளப்படுத்தி உள்ளான்.
 
إهدنا الصراط المستقيم 
(யா அல்லாஹ்) எம்மை நேர் வழியில் செல்ல அருள் செய்வாயாக! என நாம் தொழுகையில் கேட்கும்  வசனத்தை
 
وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ ۚ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا[النساء/ 69]
எவர்கள் அல்லாஹ்வுக்கும் இந்த தூதருக்கும்  கட்டுப்படுகின்றார்களோ அவர்கள் (மறுமையில் ) அல்லாஹ் யாருக்கு அருள்பாக்கியம் செய்தானோ அப்படிப்பட்ட நபிமார்கள், உண்மையாளர்கள், அறப்போரில் பங்கேற்றோர், நல்லடியார்களோடு இருப்பார்கள் என்ற அந்நிஸா 69வது வசனத்தோடு இணைத்து விளங்க முற்படுகின்ற போது  இம்ரானின் குடும்பமும் அல்லாஹ்வின் தெரிவுக்கு உட்பட்ட முன்மாதிரிமிக்க, ஸாலிஹான முஸ்லிம் குடும்பம் என்பதில் சந்தேகமில்லை.

வரலாற்றுச் சுருக்கம்

மர்யம் (அலை) அவர்களின் தந்தையான இம்ரான் என்பவர் மிகச் சிறந்த வணக்கசாலியும் அக்காலத்தில் வாழ்ந்த சிறந்த மார்க்க அறிஞருமாகும்.

அவர்களின் தாய் ஹன்னா என்பவரும் அவ்வாறே.

அதனால்தான் அவர்கள் தனது கருவறையில் வளர்ந்த தனது குழந்தை மர்யத்தை ஆண் குழந்தையாக எண்ணி "பைத்துல் மக்திஸ் பள்ளியின் பணிக்காக அற்பணிப்பேன்" என நேர்ச்சை செய்து   தனது குழந்தையை பொறுப்பேற்கும்படி கருவில் இருந்த போதே அல்லாஹ்விடம் துஆக் கேட்டார்கள்.

இறுதியில் அது பெண் குழந்தை என்று அறியப்பட்டதும் தனது நேர்ச்சையில் இருந்து  பின்வாங்காமல்,  அதற்கு மர்யம் என பெயர்  சூட்டியதாகவும் அதனை அங்கீகரிக்குமாறும் தனது பிள்ளைக்காகவும் அவரது சந்ததிக்காகவும் ஷைத்தானின் தீங்கில் இருந்து    இறை  பாதுகாப்பு வேண்டி, அது சிறுபராயத்தை கடந்ததும், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து தூய எண்ணத்தோடு அந்த சிறுமியை பைத்துல் மக்திஸ் பணிக்காக  அற்பணித்தார்கள். 

மர்யம் அலை அவர்களின் தந்தை மரணித்த நிலையில் அவர்கள் அநாதையாகவே பிறந்தார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

மர்யம் (அலை) அவர்களின் தாயின் மாமாவாகிய நபி ஸகரிய்யா (அலை) அவர்கள் அக்குழந்தையை பொறுப்பேற்கச் செய்வதன் மூலம் அந்த தாயின் நல்லெண்ணத்தை அவர்கள் உயிர் வாழ்ந்த போதே அல்லாஹ் நிறைவேற்றி வைத்தான்.

தமது பாசத்திற்குரிய ஆசான மதகுருவான இம்ரானின் மகளல்லவா இது! இந்தப் பெண் பிள்ளை கற்பொழுக்கம் காத்து வளர்ப்பதற்காக மர்யமின் தகப்பனார் இம்ரான் (ரஹி) அவர்களின்  மாணவர்கள் அந்தச் சிறுமியை  அவர்களில் யார் பொறுப்பேற்பது என்பதில்  நல் எண்ணத்தோடு தமக்குள் கருத்து முரண்பட்டபோது, குலுக்கல் அடிப்படையில்
அவர்களின்  அப்பா முறையான நபி ஸகரிய்யா (அலை) அவர்கள் மூலம் அல்லாஹ் அவரை பொறுப்பேற்கச் செய்து அவரை கற்புக் காத்த நல்லொழுக்கமுள்ள பெண்ணாக வளர்தெடுத்தான் என குர்ஆனிய சரித்திரங்கள் சான்று பகர்கின்றன.

இது தொடர்பாக ஆலு இம்ரான் சூறாவின் தெளிவுரையில் மிகத் தெளிவாகவே விளக்கப்பட்டுள்ளது.

படிப்பினை 

(1) அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெற்றோர் இம்ரானின் கிளையினர் என அல்குர்ஆன்  3- 33- ல் குறிப்பிடும் நன்மக்களாகும்.

(02) ஒரு முஸ்லிமிடம் காணப்படுகின்ற உள், புற சீர்திருத்தம், வாய்மை, நன்நடத்தை போன்ற உயரிய ஆன்மீக பண்பாட்டு நடைமுறைகள் மற்றும் அவரது தூய பிரார்த்தனைகள்   மிக விரைவாக ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்பாக அமையும் என்பதற்கு இந்த தாயின் பிரார்த்தனைக்கு கிடைத்த அங்கீகாரமும் குடும்பமும் ஒரு உதாரணமாகும்.

(3) அன்னை மர்யமையும் அவரது மகன் ஈஸாவையும் அல்லாஹ் அகிலத்தாருக்கோர் அத்தாட்சியாக ஆக்கி இருப்பதனால் அவரது தாயை விட மர்யம்  சிறந்தவராகும். والله أعلم அதற்காக மேரியை கடவுளின் மகள் என்றோ, ஈஸா நபியை கடவுளின் குமாரன் என்றோ கூறுவது மிகப் பெரும் அபத்தமாகும்.

(4) மர்யம் - மேரியை பெற்றெடுத்த அவரது தாயை கடவுளின் தாய் என வாதிடுவது எவ்வளவு பெரிய அபத்தமோ, அவ்வாறே அவரையும் அவரது மகனையும்,  மும்மூர்த்திகளில் இருவர் என வாதிடுவதும் அபத்தமாகும்.

(05) நாமும் அவர்களைப் போல் அல்லாஹ்வோடு நெருக்கமான அடியார்களாக வாழ்வதால், நேரடியாக அவனிடம் பிரார்த்திப்பதால் நமது பிரார்த்தனைகளும் உடன் ஏற்கப்படும் # நாமும் நல்ல மனிதர்களாக மாறலாம்.


கற்புக்கரசி அன்னை மர்யம் (அலை) அவர்களின் அழகிய வரலாறு

அன்னை மர்யம் அவர்களின் குடும்பப் பின்னணி பற்றியும் அவரது பிறப்பு, வளர்ந்த முறை, அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட அவரது தாயின் பிரார்த்தனை எப்படியான அதிசயம் நிறைந்தது போன்ற பல விஷயங்கள் சென்ற தொடரில் கண்டோம்.

இந்த தொடரில் அன்னை மர்யமின் பிறப்பின் அதிசயம், அவரது சிறப்புக்கள் பற்றி  அறிய இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.

அறிமுகம் 

மர்யம் என இஸ்லாமிய சமய மக்களாலும் மேரி என கிரிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மக்களாலும் அழைக்கப்படுகின்ற அன்னை மர்யமின் பிறப்பு மற்றும் வாழ்வியல் பின்னணி பற்றி படிக்கின்ற போது ஆன்மீகத்தில்  காணப்படும் நமது வறுமை நிலை பற்றி ஒரு வகை வெட்க உணர்வு மேலிடுவதைத் தவிர்க்க முடியாதுதான்.

-நல்ல தாய் தந்தையின் நல்ல பிள்ளை,

-அங்கீகரிக்கப்பட்ட ஸாலிஹான ஒரு தாயின் பிரார்த்தனையின் பிரதி பலனாக, தனது மகனோடு அகிலத்திற்கு அத்தாட்சியாக மாறியமை,

-ஒரு நபியின் மூலம் பராமரிக்கப்பட்டமை,

-இறை உதவியை நேரடியாகப் பெற்றமை,

-அல்லாஹ்வால் ரூஹ் என சிறப்பித்துக் கூறப்படும் ஒரு குழந்தையை ரூஹ் என்ற சிறப்பு பெயருக்குரிய வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) மூலம் மர்யம் (அலை) அவர்களின் முன்நெஞ்சில் ரூஹ்-  ஊதப்பட்டு, பின் அது அவரது கருவறையை அடைந்து இறை அத்தாட்சியாக தனது மகனை பெற்றெடுத்தமை,

-தந்தை இன்றி வழமைக்கு மாறாக தன்னை பிரசவித்த தனது அன்புத் தாய் உலகில் ஒரு கற்புக்கரசி என்பதை தொட்டில் பருவ குழந்தையான தனது மகன் ஈஸா (அலை) மூலம் நிரூபிக்கப்பட்ட இனியும் நிகழாத அதிசயம் போன்ற மெய் சிலிர்க்க வைக்கும் பல உணர்ச்சிபூர்வமான, அதிசயமான பல உண்மையான வரலாறுகளின் உறைவிடமாக விளங்கியவர்தான் நமது அன்னை மர்யம் (அலை) அவர்கள்.

அன்னை மர்யம் (அலை) அவர்கள் பெயரில் தனி அத்தியாயம்.

அல்குர்ஆனில்  மர்யம் அலை பற்றி ஆலு இம்ரான், அல்அன்பியா போன்ற சூறாக்களில் சில இடங்களில் இடம் பெற்றாலும் அல்குர்ஆனின் 19வது அத்தியாயம் மர்யம் என்ற பெயரில் தனியான அத்தியாயம் 98 வசனங்களைக் கொண்டு இடம் பெறுவதன் மூலம் அன்னை மேரி (அலை) பற்றிய இஸ்லாமிய நம்பிக்கை பற்றி அறிய மிகச் சிறந்த வழியாகும்.

அன்னை மர்யம் (அலை) அவர்களின் பிறப்பு

இம்ரானின் மனைவி (மர்யமின் தாயார்) 'என் இறைவனே! என் வயிற்றில்  (கர்ப்பத்தில்) உள்ளதை உனக்காக முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்; எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்' என்று கூறியதையும் (3:35)

(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: 'என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்' எனக் கூறியதையும் நினைவு கூருங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கு நன்கறிந்தவன்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அவர்) 'அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன் என்றும் கூறினார். (3:36).

பிறப்பின் போது நடந்த அதிசயம். 

உலகில் பிறக்கின்ற குழந்தைகள் அழுது கொண்டு பிறக்கும் என நமது மூதாதையர் பேசிக் கொள்வது நமது செவிகளை எட்டும். அதன்  உண்மையான ரகசியம் என்ன என்பது பற்றி 1400 வருடங்களுக்கும் முன்னால் அல்லாஹ்வின் தூதர் பின்வருமாறு கூறி விட்டார்கள்.

ما من مولود يولد إلا نخسه الشيطان، فيستهل صارخاً من نخسة الشيطان إلا ابن مريم وأمه)، ثم قال أبو هريرة: اقرؤوا إن شئتم: {وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم} (آل عمران:36)، رواه مسلم.
பிறக்கும் குழந்தைகளில் மற்றொரு அறிவிப்பில் : ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை உடனே கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் தவிர’ மற்றொரு அறிவிப்பில்: பிறந்த குழந்தையான (மர்யத்தை பின் ஈஸா மஸீஹையும்) ஷைதான் தீண்ட முனைந்த போது குத்த முடியாதபடி அல்லாஹ் திரை ஒன்றைப் போட்டான். அத்திரையில்தான் அவன் குத்தினான்  என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு பிறகு, நீங்கள் விரும்பினால் ‘நான் இக்குழந்தைக்காகவும் அதனுடைய வருங்கால வழித்தோன்றலுக்காகவும் அருளில் இருந்து விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” (3:36-வது) என்ற வசனத்தை ஓதிப்பாருங்கள் – எனக் கூறினார்கள்.
(நூல்- முஸ்லிம்).

குறிப்பு- புகாரியிலும்  இது பதிவாகி இருக்கின்றது. 

அன்னை மர்யமின் சிறப்பு.

அல்லாஹ் உலகில்  பல ஆண்களைப் பூரணமானவர்களாகவும்  பெண்களில் சிலரைப்   பூரணமான சிறந்த மக்களாக ஆக்கி உள்ளான். 
அதில் அன்னை மர்யமும் அவரது   குடும்பமும்
ஒன்றாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: 

كَمَلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ، وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ: إِلَّا آسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ، وَمَرْيَمُ بنْتُ عِمْرَانَ، وإنَّ فَضْلَ عَائِشَةَ علَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ علَى سَائِرِ الطَّعَامِ.
الراوي : أبو موسى الأشعري | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 3411

ஆண்களில் நிறையப் பேர் முழுமை பெற்றிருக்கின்றனர். ஆனால், பெண்களில் இம்ரானின் மகள் மர்யமையும் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்கான சிறப்பு, மற்ற எல்லா உணவுகளையும் விட 'ஸரீத் ' என்ற உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.
எனக் கூறியதாக அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி)

குறிப்பு- 
சில அறிவிப்புகளில்
.خديجة بنت خويلد ، وفاطمة بنت محمد ) انتهى من "الكشف والبيان عن تفسير القرآن" للثعلبي (27/71).

وهذه رواية شاذة ضعيفة لمخالفتها لرواية الثقات من أصحاب شعبة بن الحجاج .
وفي سندها : الحسين بن محمد بن فنجويه شيخ الثعلبي ، قال عنه الذهبي : " كَانَ ثقة، صدوقًا ، كثير الرواية للمناكير". انتهى من "تاريخ الإسلام" (9/234) .
அன்னையர்களான கதீஜா (ரழி) மற்றும் ஃபாத்திமா (ரழி) ஆகியோர் மேலுள்ள அன்னையர்களுடன் அதிகப்படியானோரா இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பை ஹதீஸ் கலை வல்லுனர்கள் 
அதிநம்பகமான பலரின் அறிவிப்பதற்கு முரண்பாடாக மேற்படி அறிவிப்பனது இடம் பெற்றுள்ளதாகக் கூறி, அறிவிப்பவர் நம்பகமானவராக இருந்தாலும்  அது தள்ளுபடி செய்யப்பட வேண்டிய  அறிவிப்புக்களை  அறிவிப்பவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள
இமாம் ஸஃலபியின் ஆசிரியராகிய   
الحسين بن محمد بن فنجويه شيخ الثعلبي

அல்ஹுஸைன் பின் முஹம்மத் பின் ஃபன்ஜவைஹி
என்பவர் இடம் பெறுகின்ற காரணத்தால் அதனை
رواية شاذة அதி நம்பகமான அறிவிப்பாளர்களுக்கு நேர் முரணான  ஷாத்தான- குறைபாடுள்ள அறிவிப்பவர். அறிவிப்பு என்ற சட்ட விணியைக் காரணம் காட்டி  அதனைத் தள்ளுபடி செய்துள்ளார்கள்.

விபரம் மேலேயும் இணைப்பு கீழாலும் தரப்பட்டுள்ளது.



அன்னை மேரி (அலை) பெற்றெடுத்த அதிசயக் 
குழந்தையான நபி ஈஸா (ஏசு) அலை

மனித இனத்தின் தந்தை நபி ஆதம்  தந்தை, தாய்  இன்றி இறை வல்லமையின் வெளிப்பாடாக, அல்லாஹ்வின் இரு கரம் கொண்டு படைக்கப்பட்டதுடன், அவருக்கு அல்லாஹ்வே உயிரை ஊதினான் என குர்ஆன் குறிப்பிடுகின்றது.

நபி ஈஸா (அலை) அவர்களோ தந்தை இன்றி உலகுக்கு அத்தாட்சியாகப் படைக்கப்படவராக எடுத்துரைக்கும் குர்ஆன்  கற்புக்கரசியான அவரது தாயாரையும் ஒரு அத்தாட்சிப் பெண்ணாக அறிமுகப்படுத்தி உள்ளது. 
اِنَّ مَثَلَ عِيْسٰى عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ‌ؕ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
 அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதராக) ஆகிவிட்டார். (3:59). என்ற வசனமும்
وَ جَعَلْنٰهَا وَابْنَهَاۤ اٰيَةً لِّـلْعٰلَمِيْنَ‏
 இன்னும்  அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்." ( 21:91) என்ற வசனமும் இதனை உறுதி செய்கின்றது.

அன்னை மர்யம் அலை அவர்கள் தனது மகனை திருமண பந்தத்தின் மூலம் பிரசவிக்கவில்லை. மாறாக வானவர் ஜிப்ரீல் அலை அவர்கள் அவர்களின் முன்தோன்றி, அந்த உயிரை ஊதவே, அது அவரின் கருவறையை சென்றடைந்ததன் மூலம் தனது மகனைப் பிரசவித்தார்கள் என்பது அது தொடர்பான அறிஞர்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட  கருத்தாகும்.

இறை வல்லமையாலும் அத்தாட்சியாலும் நிகழ்ந்த இந்த அதிசய பிரசவத்தை மறுத்து, சாதாரண  மற்ற மனிதர்களைப் போன்று தவறான முறையில் பிறந்ததாக ஊகித்ததன் விளைவாக யூதர்கள் அவரை விபச்சாரத்தில் பிறந்த குழந்தை எனக் கூறி நிராகரித்தனர்.
نعوذ بالله من ذلك. அவரது பிறப்பில் காணப்படுகின்ற அதிசயங்களை சரியாக நோக்காது, அதில் எல்லை மீறி சிந்தித்த கிரிஸ்தவ சமுதாய மக்கள் அவரைக் கடவுளின் குமாரர், மும்மூர்த்திகளில் ஒருவர்  என்றனர்.

இரண்டு கோட்பாடுகளும் பிழை என இஸ்லாம் சுட்டிக்காட்டி அதில் காணப்படுகின்ற அதிசயங்களை உலகுக்கு விளக்கத் தவறவில்லை. 

அது பற்றிய சுருக்கமான செய்திகளே இங்கு தரப்படுகின்றன. 

தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அன்னை மர்யம் அலை அவர்கள்:

இது அன்னை மர்யம் அவர்கள் கற்பம் தரிப்பதற்கு முன்னால் அவருக்கு ஏற்பட்ட இறை உதிப்பின் அடிப்படையில்  நடந்த நிகழ்வாகும்.

 அதாவது அல்லாஹ் அவரை உதிப்பின் அடிப்படையில் அதிசயக் குழந்தை ஒன்றைப்  பெற்றெடுக்க தயார் படுத்துகின்றான் என்பது இதன்  பொருளாகும்.

 அதன் விளைவாக பைத்துல் மக்திஸில் இருந்து தூரமாக ஒதுங்கி,  மக்கள் பார்வையிலும் தனது குடும்ப உறவுகளை விட்டும் விலகி தூரமாகிச் சென்று 
 தனது தியானத்தை   நிறைவேற்றினார்கள் என அவர் தொடர்பான சரித்திரம் நமக்கு போதிக்கின்றது.

அல்குர்ஆன் இது பற்றி மர்யம் அத்தியாயத்தில் பின்வருமாறு பேசியும் இருக்கின்றது.

وَاذْكُرْ فِى الْـكِتٰبِ مَرْيَمَ‌ۘ اِذِ انْتَبَذَتْ مِنْ اَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا ۙ‏
. (நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக; அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, (பைத்துல் மக்தஸிற்கு)  கிழக்குப் பக்கமுள்ளதொரு இடத்தில் தனித்துதொதுங்கினார்.
فَاتَّخَذَتْ مِنْ دُوْنِهِمْ حِجَابًا فَاَرْسَلْنَاۤ اِلَيْهَا رُوْحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا‏
 பின்,  அவர்களிடமிருந்து அவர் (தன்னை மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நமது ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; அவர் அவரிடம் நேர்த்தியான மனித உருவில் தோன்றினார்.
 (அவரை அவர்  கண்டதும்,)
 قَالَتْ اِنِّىْۤ اَعُوْذُ بِالرَّحْمٰنِ مِنْكَ اِنْ كُنْتَ تَقِيًّا‏
 “நிச்சயமாக நான் உம்மை விட்டும் அர்ரஹ்மானிடம் பாதுகாவல் தேடுகின்றேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (என்னை (நெருங்காதீர்)” என்றார்." மர்யம்- 16-18) 
அதற்கவர்:
"قَالَ إِنَّمَآ أَنَا۠ رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَٰمًا زَكِيًّا (مريم - 19)"
உனக்கொரு பரிசுத்தமான குழந்தையை கொடையளிப்பதற்காக நான் உமது இரட்சகனின் (புறத்திலிருந்து வந்த வானவ) தூதாராவேன் எனக்
கூறினார். (19-19)

உலகில்  குழந்தைகள் பிரசவிக்கின்ற, வழமைக்கு நேர்மாறான, அதிசயமான இந்த வழிமுறையில் இந்த குழந்தை பிறக்கவிருப்பதை அறிந்த அன்னை மர்யம் அவர்கள் ஆச்சரியப்பட்டவராக 
 قَالَتْ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّلَمْ يَمْسَسْنِىْ بَشَرٌ وَّلَمْ اَكُ بَغِيًّا‏
“எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் தீய நடத்தை அற்றவராகவும்  இருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று (ஆச்சரியமாகக்) கேட்டார். (19-20).

அதற்கு  வானவர் ஜிப்ரீல் அலை அவர்கள் பின்வருமாறு பதில் கூறினார்கள்.
 قَالَ كَذٰلِكِ‌ ۚ قَالَ رَبُّكِ هُوَ عَلَىَّ هَيِّنٌ‌ ۚ وَلِنَجْعَلَهٗۤ اٰيَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا‌ ۚ وَكَانَ اَمْرًا مَّقْضِيًّا‏
 “அவ்வாறே நடக்கும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; என்பது முன்னரே விதிக்கப்பட்ட கட்டளையாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார். (19:21).
மற்றொரு இடத்தில் 
قَالَتْ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ وَلَدٌ وَّلَمْ يَمْسَسْنِىْ بَشَرٌ ‌ؕ قَالَ كَذٰلِكِ اللّٰهُ يَخْلُقُ مَا يَشَآءُ‌ ؕ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏. 
“என் இரட்சகனே! என்னை எந்த ஒரு மனிதனும் தொடாதிருக்கும் நிலையில் "எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” எனக் கேட்டார்.   (அதற்கு)  “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கின்றான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது என இறைவன் கூறினான். எனக் கூறப்பட்டுள்ளது. (3:47)

இவ்வாறான வழிகாட்டல்கள் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெண்களை இஸ்லாம்  கௌரவித்துள்ளது என்பதுடன், மர்யம் என்ற பெண்மணி  அவர்கள் எவ்வளவு பேணுதல் நிறைந்த, தகாத உறவுகள், தீய மனித தொடர்பாடல்களை விட்டும் தன்னையும் தனது  கற்பையும்  காத்து வந்த பெண் என்பதையும் அறிந்து கொள்ளலாம் .

கற்பொழுக்கம் பேணி வாழும் நடைமுறை பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்ற ஒரு உண்ணதமான நடைமுறையாகும். ஆனால் இன்று அது தலைகீழாக மாற்றப்பட்டு கருப் பை சுதந்திர நிலைக்கு உலகம் நகர்ந்து கொண்டிருப்பது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.

கற்பைக் காத்து கணவனோடு மாத்திரம் வாழ்கின்ற நடைமுறை ஒரு சமூகத்தில் காணப்படுமானால் விபச்சாரம் இல்லாது போகும்.

பெண்கள் அன்னை மேரி போன்று நோக்கப்படுவர். 

 அன்னை மேரி திருமணமாகாதவராக இருந்தும் அதிசயக் குழந்தையைப்  பெற்றெடுத்தைப் போல்  இனி யாரும் பெற முடியாது. 

அவ்வாறு நடை பெற்றால் அது விபச்சாரக் குழந்தையே எனக் கூறவதற்காவே தாயும், மகனும் உலக அத்தாட்சியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட்டுள்ளனர். والله أعلم

அன்னை மர்யமைப் பற்றிய அல்லாஹ்வின் சாட்சியம்:

அல்லாஹ்வின் சாட்சியத்தின் அடிப்படையில் அன்னை மர்யம் அவர்கள் உலகப் பெண்களில் மிகவும் பரிசுத்தமான பெண்ணாகும். அவர் ஆடவர் எவரையும் திருமணம் செய்து கொண்டவரோ, தகாத உறவில் ஈடுபட்டவரோ கிடையாது. மாறாக அல்லாஹ்வை தியானம் செய்வதற்கும் நின்று வணங்கவும் தன்னை அற்பணம் செய்த மகத்தான ஒரு பெண்ணாகும்.

இறை நேசர் இப்ராஹீம் நபியின் முதலாம் 
மனைவி சாராவுக்கு இப்ராஹீம் நபி இருக்கின்ற போதே இஸ்ஹாக் என்ற குழந்தை பற்றி வானவர்களால் நன்மாராயம் கூறப்பட்டது பற்றி நாம் அறிவோம்.

அன்னை மர்யமின் செய்தி அதற்கு மாற்றமானதாகும். அதாவது கணவர் இன்றி,  உலகில் அதசியக் குழந்தை ஒன்றை அன்னை மர்யம்  பெற்றடுப்பார் என உலகில் நேரடியாக வானவர்களால்  நற்செய்தி கூறப்பட்ட பெண்ணாக அன்னை மர்யம் அவர்கள் மாத்திரமே
விளங்குகிறார்கள்.

அதனால் அவர் கற்புக்கரசி, கற்பைப் பேணி வாழ்வதில் முன்னுதாதாரணப் பெண் என்பதை அல்லாஹ்வே பின்வருமாறு சாட்சி பகர்ந்து விட்டான்.

اِذْ قَالَتِ الْمَلٰٓٮِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ اسْمُهُ الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ وَجِيْهًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِيْنَۙ‏

“மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லை (கட்டளையை) க் கொண்டு உமக்கு (ஒரு மகன் வரவிருப்பது பற்றி) நன்மாராயம் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கவராகவும் (அல்லாஹ்வுக்கு) நெருக்கமாக்கமானவர்களில் ஒருவராகவும் இருப்பார்;" என வானவர்கள் கூறியது பற்றி நினைவு கூர்வீராக (3:45)

தந்தை இன்றி பிறக்கும் அந்தக் குழந்தை தகாத உறவில் பிறந்ததாக மனிதர்கள் தமது குறைவான அறிவை வைத்து தவறான முடிவு செய்வதைத் தவிர்க்கவும் இறையாற்றலால் இவ்வாறு நடத்த முடியும் என்பதை மனிதர்களுக்கு உணர்த்தவும் அதனை அதன் தாயுடன் சேர்த்து ஒரு அத்தாட்சியாக அல்லாஹ் ஆக்கி உள்ளான்.

وَالَّتِىْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَـنَفَخْنَا فِيْهَا مِنْ رُّوْحِنَا وَ جَعَلْنٰهَا وَابْنَهَاۤ اٰيَةً لِّـلْعٰلَمِيْنَ‏
 இன்னும் தனது கற்பைக் காத்துக் கொண்ட அந்த (மர்யமை)ப் பற்றியும் (நபியே! நீர் நினைவு கூறும்); எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்." ( 21:91)

குறிப்பு-
அவரில் நாம் நமது ரூஹில் இருந்து ஊதினோம் என்பது மர்யம் (அலை) மீது வானவர் ஊதிய ரூஹ் பற்றிக் கூறும் செய்தியாகும். அது ஈஸா நபியின் பிறப்பு தொடர்பான சிறப்பை எடுத்துக் கூறும் செய்தியே அன்றி வேறில்லை. ஆகவே அந்த உயிர்  அல்லாஹ்வின் யதார்த்தத்தின் ஒரு பகுதி என தவறாக விளங்க எந்த முகாந்திரமும் கிடையாது என்பதையும் அது இஸ்லாமிய நம்பிக்கைக்கு மாற்றமான நம்பிக்கை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் அல்லாஹ்வுக்கு மனைவி,  பிள்ளைகள் இருப்பதாக நம்புவது மிகப் பெரும் பாவமாகும் .
மாத்திரமின்றி, அல்லாஹ்வுக்கு புதல்வன் இருப்பதாக பேசுவது வானம் இடிந்து, பூமி வெடிக்கும் அளவு பாவமான வார்த்தை என்பதாக சூறா மர்யமில்  கூறப்பட்டுள்ளது .

அவ்வாறு  ஒருவர் வாதத்திற்கு கூறினால் 
நபி ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் நேரடியாக உயிரை ஊதியதன் காரணமாக அவர்கள் அல்லாஹ்வின் குமாரராக இருக்க அந்த முதல் மனிதர் ஆதம் நபி அலை அவர்களே மிகவும் பொருத்தாமானவராகும் என்பது பதிலாகும்.

பிரசவத்திற்காக தயார் படுத்தப்பட்ட அன்னை மர்யம்:

இது பல படிமுறைகளைக் கொண்டதாகும்.

(01) தனது சமூகத்தவரை, குடும்பங்களை விட்டும் தூர விலகி இருந்தமை.

(02) மனிதர்களின் பார்வை படாத விதமாக தன்னை மறைத்து திரையிட்டுக்  கொண்டமை,

(3) வானவர் ஜிப்ரீல் (அலை) சமூகம் தந்து குழந்தை பற்றிய நற்செய்தியோடு அவரில் ரூஹை  ஊதியமை போன்ற இன்னோரென்ன செய்திகள் இதில் உள்ளடங்குகின்றன.

இது தொடர்பான ஆதாரங்கள் மர்யம் அத்தியாயத்தில் இருந்து முன்னர் எடுத்தெழுதப்பட்ட்டுள்ளது.

அன்னை மர்யம் அவர்கள் தனது
பிரசவத்திற்காக ஒதுங்கி இருந்த கால கட்டம்  சாதாரண பெண்களின் கற்பகாலமா? அல்லது அதை விடக் குறுகிய காலமா என்பது பற்றிய எவ்வித தெளிவும் ஆதாரபூர்வமாக இல்லை. ஆகவே, இரண்டும் இடம்பாடானதே 
والله أعلم.

அன்னை மர்யம் அவர்கள் ஈஸா நபியை கருவுற்று பெற்றெடுத்தது பற்றிய சுருக்கம் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

فَحَمَلَـتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِيًّا‏
 பின்னர், மர்யம் அவரை (ஈஸாவை) கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார். (19-22)

 فَاَجَآءَهَا الْمَخَاضُ اِلٰى جِذْعِ النَّخْلَةِ‌ۚ قَالَتْ يٰلَيْتَنِىْ مِتُّ قَبْلَ هٰذَا وَكُنْتُ نَسْيًا مَّنْسِيًّا‏
 திடீரென (அவருக்கு ஏற்பட்ட)  பிரசவ வேதனை அவரை (கனிந்த) ஒரு பேரீத்த அடி மரத்தின்பால் கொண்டு சேர்த்தது. (பிரச வேதனையால்) “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று அலறினார்.(19-23)

பிரச உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் அல்லாஹ் வானவர் மூலம் உதவியதை இந்த நிகழ்வு நமக்கு பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றது.

فَنَادٰٮهَا مِنْ تَحْتِهَاۤ اَلَّا تَحْزَنِىْ قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا‏
(அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே  சிறிய தொரு ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்”  என்று அவரை அழைத்து கூறினார்.

 وَهُزِّىْۤ اِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسٰقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا
 “இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும். அது கனிந்த பேரீத்த பழங்களை உம் மீது அது உதிர்க்கும் .(19:25.) என்றும்,

 فَكُلِىْ وَاشْرَبِىْ وَقَرِّىْ عَيْنًا‌ ۚ فَاِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ اَحَدًا ۙ فَقُوْلِىْۤ اِنِّىْ نَذَرْتُ لِلرَّحْمٰنِ صَوْمًا فَلَنْ اُكَلِّمَ الْيَوْمَ اِنْسِيًّا ‌ۚ‏
 “பின்னும் , (அவற்றை) உண்டு, (அந்த நீரைப்) பருகி கண் குளிர்ச்சி பெற்றிருப்பீராக! பின்னர், எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “நிச்சயமாக நான் அர்ரஹ்மானுக்காக  (மௌன விரத) நோன்பிருக்க நேர்ச்சி செய்திருக்கின்றேன்; அதனால் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறுவீராக! என்றும் வழிகாட்டப்பட்டது. 
(19:26).

பிறப்பின் போது நடந்த அதிசயம்:

உலகில் பிறக்கின்ற குழந்தைகள் அழுது, கூச்சலிட்டுக் கொண்டு பிறக்கும் என நமது மூதாதையர் பேசிக் கொள்வது நமது செவிகளை எட்டும். அதன்  உண்மையான ரகசியம் என்ன என்பது பற்றி 1400 வருடங்களுக்கும் முன்னால் அல்லாஹ்வின் தூதர் பின்வருமாறு கூறி விட்டார்கள்.

ما من مولود يولد إلا نخسه الشيطان، فيستهل صارخاً من نخسة الشيطان إلا ابن مريم وأمه)، ثم قال أبو هريرة: اقرؤوا إن شئتم: {وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم} (آل عمران:36)، رواه مسلم.
பிறக்கும் குழந்தைகளில் மற்றொரு அறிவிப்பில் : ஆதமின் மக்களில்  பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதை (விரலால்) தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை உடனே கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் தவிர’ மற்றொரு அறிவிப்பில்:  குழந்தை மர்யத்தையும் பின் ஈஸா மஸீஹையும் ஷைதான் தீண்ட முனைந்த போது அவனது விரலால் குத்த முடியாதபடி அல்லாஹ் திரை ஒன்றைப் போட்டான். அத்திரையில்தான் அவன் குத்தினான்  என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு பிறகு, நீங்கள் விரும்பினால் ‘நான் இக்குழந்தைக்காகவும் அதனுடைய வருங்கால வழித்தோன்றலுக்காகவும் இறையருளில் இருந்து தூர விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” (3:36-வது) என்ற வசனத்தை ஓதிப்பாருங்கள் – எனக் கூறினார்கள்.
(நூல்- முஸ்லிம்).

மேற்படி வழிகாட்டல்கள் மனித கற்பனைகளைக் கடந்த யதார்த்தமான இறை வழிகாட்டல்களாகும்.

பிரசவ வேதனையால் தனிமையில் துடித்த மர்யம் அலை அவர்களுக்கு வானவர் ஜிப்ரீல் (அலை) மூலம் அல்லாஹ் வழிகாட்டி அவரது உள்ளத்தைப் பலப் படுத்தியதோடு, உண்ணுவதற்கு கனிந்த பேரீத்த பழத்தையும்,  குடிப்பதற்கு நீரையும் உண்டாக்கி அல்லாஹ் அவருக்கு விஷேசமாக  உதவினான் என்ற நிகழ்வுகளை அவதானிக்கின்ற போது அன்னை மர்யம் (அலை) அவர்கள் எவ்வளவு பெரும் இறை பாக்கியம் பெற்ற பெண் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஆகவே, உலகில் உள்ள ஆணோ, பெண்ணோ அல்லாஹ்வுடனான தமது தொடர்புகளை சீராக்கிக் கொண்டால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்விடம் நெருங்கிய அடியார்களே! நாமும் அதற்கு முயற்சி செய்வோமாக!

சென்ற தொடரில் அன்னை மர்யம் (அலை) அவர்கள் பற்றியும் அவர் தொடர்பான இறை சாட்சியம், அவரது வணக்கம், இறை கட்டுப்பாடு, உயர் ஒழுக்கம், அவரது அறநெறி , அவர், உலக அரங்கில் அப்பளுக்கற்ற தூய பெண் என்ற செய்திகளோடு அவர், இறை அத்தாட்சிகளிகளில் ஒருவர் என்ற தெளிவான ஆதாரங்களுடன் , அன்னை மர்யம்  அவர்கள் இறைத் தூதர்  ஈஸா நபி(அலை) அவர்களை தனது கருவில் சுமந்தது பற்றியும் சுருக்கமாக எடுத்தெழுதி  இருந்தோம்.

இந்த பகுதியில் அன்னை மர்யம் - மேரி (அலை)  அவர்கள் தனது மகனைப் பெற்றெடுத்த போது அக்கால மக்கள் குறிப்பாக இறை அத்தாட்சிகளை  சந்தேகத்திற்கு உட்படுத்துகின்ற யூதர்கள் எவ்வாறு அபாண்டம் சுமத்தினர், அதற்கு இறை அத்தாட்சியான குழந்தை ஈஸா (அலை) அவர்களால் எவ்வாறு பதில் கூறப்பட்டது? என்பன பற்றியும் இங்கு சுருக்கமாக உள்ளோம். இன்ஷா அல்லாஹ்.

மர்யம் அவர்கள் தனது குழந்தை பெற்றெடுத்த பின் என்ன நடந்தது என்பது பற்றிய செய்தியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

فَاَتَتْ بِهٖ قَوْمَهَا تَحْمِلُهٗ‌ؕ قَالُوْا يٰمَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْـٴًـــا فَرِيًّا‏
 பின்னர் (மர்யம்) அக்குழந்தையை தன்னுடன் சுமந்து கொண்டு, தனது சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் : “மர்யமே! நிச்சயமாக நீர் (கணவன் இல்லாத) ஆச்சரியப்படும்படினான ஒரு குழந்தையைக் கொண்டு வந்திருக்கின்றீரே!” என்றும் . (19:27.)

 يٰۤـاُخْتَ هٰرُوْنَ مَا كَانَ اَ بُوْكِ امْرَاَ سَوْءٍ وَّمَا كَانَتْ اُمُّكِ بَغِيًّا‌ ۖ‌ ۚ‏
 “ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை நடத்தை  கெட்ட மனிதராக இருக்கவுமில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவுமில்லையே” (என்றும் இழிவாகக் கூறினார்கள்).

குறிப்பு-
-நடத்தை தவறாது நடந்தவர்களாக அன்னை மர்யமின் பெற்றோரை குறிப்பிடும் யூதர்கள், தனது கற்பைக் காத்து வந்த,  அவ்வப்போது இறை உதவியை நேரடியாகப் பெற்று வந்தவராக ஸகரிய்யா நபி (அலை) மூலம் சாட்சியம் சொல்லப்படும் அன்னை மேரியை அவமதித்து,  நிராகரித்து தமது ஊகக் கருத்தை எப்போதும் போல் குதர்க்கமாகவே முன்வைத்துள்ளனர் என்பதை உணரலாம்.

அதற்கு இடி விழுந்தாற் போல பின்வருமாறு தொட்டில் பருவ குழந்தையை அல்லாஹ் பேச வைத்து அதற்கு பதிலளித்திருப்பது  அல்லாஹ் ஈஸா நபிக்கும் அவரது தாய்க்கும் அளித்த கண்ணியமும்.
அதனை அவன் தனது வல்லமை மூலம் நிரூபித்தான் என்பதே யதார்த்தமாகும். பின்னர் நடந்து பற்றி கீழே கவனியுங்கள். 

فَاَشَارَتْ اِلَيْهِ‌ ؕ قَالُوْا كَيْفَ نُـكَلِّمُ مَنْ كَانَ فِى الْمَهْدِ صَبِيًّا‏.

(உடனே அவர் ,  அதன் (தனது குழந்தையின்) பால் (அது பேசப் போவதை கேட்குமாறு ) சுட்டிக் காட்டினார்; அதற்கு அவர்கள் "தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் நாம் எப்படிப் பேசுவது?” என்று கேட்டனர்.
(19:29). 

தொட்டில் பருவக் குழந்தையின் தடாலடி பதில்:

قَالَ اِنِّىْ عَبْدُ اللّٰهِ اٰتٰٮنِىَ الْكِتٰبَ وَجَعَلَنِىْ نَبِيًّا ۙ‏
 “நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாவேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாகவும் ஆக்கியிருக்கின்றான். (19:30).

وَّجَعَلَنِىْ مُبٰـرَكًا اَيْنَ مَا كُنْتُ وَاَوْصٰنِىْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَيًّا ‌ۖ 
 “இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை (முபாரக்) நற்பாக்கியமளிக்கப்பட்டவனாகவும் ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், 
ஸகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு (வஸிய்யத்)  கட்டளையிட்டும் இருக்கின்றான்.(19:31).
மேலும்,
 وَّبَرًّۢابِوَالِدَتِىْ وَلَمْ يَجْعَلْنِىْ جَبَّارًا شَقِيًّا‏
 “என் தாயாருக்கு நன்மை  செய்பவனாக (எனக்கு அவன் ஏவியிருக்கின்றான்;) நற்பேறுகளை இழந்த பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.(19:32)

 وَالسَّلٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدْتُّ وَيَوْمَ اَمُوْتُ وَيَوْمَ اُبْعَثُ حَيًّا‏
 “இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று  மீண்டெழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்றும் (அக்குழந்தை) கூறியது.(19:33) .

ذٰ لِكَ عِيْسَى ابْنُ مَرْيَمَ ‌ۚ قَوْلَ الْحَـقِّ الَّذِىْ فِيْهِ يَمْتَرُوْنَ‏
அவர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).(19:34)

விளக்கம்:

ஈஸா நபி (அலை) அவர்கள் தொட்டில் பருவ குழந்தையாக இருந்த போது முதலாவது கூறிய வார்த்தை "நான்  அல்லாஹ்வின் அடியானாவேன்" என்பதாகும். அதன் பின்னரே தனது தாய்க்கு பணிவிடை செய்யக் கட்டளையிடப்பட்டது , தனக்கு அல்லாஹ் செய்த அருள் பாக்கியங்கள் என்பன பற்றிப் பேசியதோடு, தான் பிறந்த நாளிலும்,  மரணிக்கும் நாளிலும் (மறுமையில்)  உயிர் பெற்று  மீண்டெழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” எனக் கூறுவது அவர் பிறக்கும் மனிதர்கள் எல்லோரும் இறப்பை எய்துவர், இறந்த பின் மறுமை நாளுக்காக மீண்டும் எழுப்பப்பட்டும் போது அவர் இறையாசி பெற்றவராக இருப்பார் என்ற வாசகங்கள் அவர் இறையடியாரை அன்றி இறை மகன்  அல்ல நமக்கு ஆணித்தரமாகப் போதிக்கின்றது.

ஆகவே அவரை இறைவனின் குமாரராக சித்திரிக்காது
அவர் இறையடியாரும் தூதரும் என்பதை ஏற்பதால்தான்  ஒருவரின் இறை நம்பிக்கை பூரணமாகும் என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதனால்தான் அதே மர்யம் அந்தியாயத்தின் தொடரில் ,
"مَا كَانَ لِلّٰهِ اَنْ يَّتَّخِذَ مِنْ وَّلَدٍ‌ۙ سُبْحٰنَهٗ‌ؕ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُؕ‏
 அல்லாஹ் தனக்கு எந்த ஒரு புதல்வனையும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.  அவன் அதை விட்டும்  தூயவன்; அவன் ஒரு காரியத்தைத்  தீர்மானித்தால், (அதற்கு) “ஆகுக!” என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடும்.
(19:35). எனக் குறிப்பிட்டுள்ளான்.

மனைவி, குழந்தைகளை விட்டும் ஏசு நாதரைப் 
படைத்த அல்லாஹ் தூயவன் எனக் கூறி இருக்க இல்லை; இல்லை ஏசுவை நீ குழந்தையாக எடுத்துள்ளாய் எனக் கூறுவது அல்லாஹ்வின் கூறப்படும் மிகப் பெரும் பொய்யாகும்.

ஆகவே அல்குர்ஆன் கூறுவது போன்று
 وَاِنَّ اللّٰهَ رَبِّىْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ‌ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ‏
“நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடையவும் உங்களுடையவும் இரட்சகனாவான்.   ஆகவே அவனையே நீங்கள் வணங்குங்கள்; நிச்சயமாக இதுவே நேரான வழியயுமாகும்” (என்று நபியே! நீர் கூறும்)." (19:36) என ஈஸா நபியோடு தொடர்பான சம்பவத்தை முடித்து வைப்பதற்கு அமைவாக நாம் அனைவரும் அவனை வணங்கி, வழிபட கடமைப்பட்டுள்ளோம் .
அத்தோடு, ஜிப்ரீல் என்ற வானவரின் துணையோடு மர்யமில் ஊதப்பட்ட உயிர் (ஈஸா) என்ற பெயரை உடைய குழந்தையாக பெற்றெடுக்கப்பட்டுள்ளது என்ற மகத்தான சிறப்பை உணர வேண்டுமே தவிர, அவரை கடவுளாகவோ, கடவுளின் குமாரரகவோ சிந்திக்க முணைவது பெரும் பாவமாகும். 

மாத்திரமன்றி, அந்த நம்பிக்கை நபி ஈஸா (அலை) அவர்களின் அடிப்படையான இறை நம்பிக்கைக்கும், போதனைக்கும் நேர் முரணான கற்பனைக் கூற்றும் நம்பிக்கையுமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாதத்திற்கு கடவுளின் குமாரராக ஒருவரை எடுக்க வேண்டுமானால் தாய், தந்தை இல்லாமல் அல்லாஹ்வின் இரு கரம் கொண்டு, அவனே உயிர் ஊதிப் படைத்த ஆதம் -ஆதாம்-  (அலை) அவர்களை எடுக்க சம்மந்தப்பட்ட மக்கள் பரிந்துரை செய்யலாம். 

ஆனால் அவ்வாறு செய்யாது நபி  ஈஸா அவர்களை மாத்திரம் இறைமகனாக சித்திரிப்பது மற்றொரு வகையில் கற்பனையால் உருவான தமது மத நம்பிக்கையை அறியாத பாமர மக்கள் மனங்களில் வலுக்கட்டாயமாக திணிக்க முயல்வதாகும்.

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.
Previous Post Next Post