சூறதுல் பகறா -05
எஸ்.எச்.எம் இஸ்மாயில் (ஸலபி)
صُمُّۢ بُكۡمٌ عُمۡیࣱ فَهُمۡ لَا یَرۡجِعُونَ ١٨﴾
"(அத்துடன் அவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். அதனால் அவர்கள் (சத்தியத்தின்பால்) மீளவே மாட்டார்கள்."
(2:18)
இந்த வசனம் நயவஞ்சகர்கள் பற்றி பேசும் போது அவர்கள் செவிடர்கள், ஊமையர்கள், குருடர்கள் என்று கூறுகின்றது. இவ்வாறு உண்மையான அர்த்தத்தில் கூறப்படவில்லை.
இதற்குப் பின்னால் வரும் வசனத்தில்,
"அம்மின்னல் அவர்களது பார்வைகளைப் பறிக்கப் பார்க்கின்றது. அது அவர்களுக்கு ஒளிதரும் போதெல்லாம் அதிலே நடக்கின்றனர். அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது நின்று விடுகின்றனர். மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களின் கேள்விப் புலனையும் அவர்களின் பார்வைகளையும் போக்கி இருப்பான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.' (2:20)
என்று கூறப்படுகின்றது. இங்கே உண்மையான கேள்விப் புலன். பார்வை பற்றிப் பேசப்படுகின்றது. அல்குர்ஆனின் மற்றும் பல வசனங்கள் அவர்களது பேசும் திறன் பற்றிப் எல்லம் பேசுகின்றன.
அவர்கள் சத்தியத்தைப் பேசும் விடயத்தில் ஊமைகளாகவும், 'சத்தியத்தைக் கேட்கும் விடயத்தில் செவிடர்களாகவும், சத்தியத்தைப் பார்க்கும் விடயத்தில் குருடர்களாகவும் இருக்கின்றனர் என்பதுதான் இதன் அர்த்தமாகும்.
"(மக்காவாசிகளாகிய) உங்களுக்கு ஏற்படுத்தித் தராத வசதிகளை, நாம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தோம். மேலும், அவர்களுக்கு செவிப்புலனையும், பார்வைகளையும், உள்ளங்களையும் நாம் ஆக்கினோம். அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை மறுத்துக் கொண்டிருந்தபோது, அவர்களது செவிப்புலனும், அவர்களது பார்வைகளும், அவர்களது உள்ளங்களும் சிறிதளவும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. அவர்கள் எதைப் பரிகசித்துக் கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொண்டது." (46:26)
பயனளிக்காத ஒரு பொருள் இருப்பது இல்லாமல் இருப்பதற்குச் சமமாகும். இவர்களிடம் பார்வையும். கேட்கும் திறனும், பேசும் ஆற்றலும் இருந்தும் அவை பயனற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டால் அவை இல்லாததற்கு சமமாகும் என்ற அடிப்படையில்தான் செவிடர்கள், குருடர்கள், ஊமையர்கள் என்று கூறப்படுகின்றது. அவர்கள் உண்மையிலேயே அப்படித்தான் இருந்தனர் என்பது இதன் அர்த்தம் அல்ல.
தொடரும்.....இன்ஷா அல்லாஹ்