நிம்மதியான வாழ்க்கைக்கு இஸ்லாம் கூறும் வழி


தற்கால மனிதன் அதிகம் தேடும் அம்சங்களில் நிம்மதி, சந்தோசம் மிக முக்கிய ஒன்றாகும். உலகம் முன்னேற்றத்தின் உச்சத்தைத் தொட்டும்இ அதன் மூலம் மனிதன் தனது அனைத்துத் தேவைகளையூம் இலகுவாக அடைந்துகொண்டாலும் “நிம்மதி” என்பது அவனால் அடையமுடியாத ஒன்றாகவே இருக்கின்றது.

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தும் பணம் கோடியாகக் கொட்டியும் மனிதனால் அவற்றின் மூலமாக நிம்மதியை அடைந்துகொள்ள முடியாமல் இருக்கின்றதென்றால் சந்தோசம் நிம்மதியைத் தரும் அம்சங்கள் என்ன? நிம்மதியை அடையும் வழிகள் என்ன? என்பவற்றை அவன் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதே அதன் அர்த்தமாகும்.

நிம்மதியைத் தேடும் மனிதனை ஆறுதல் படுத்தும் உளவியல் கருத்தரங்குகள் உலகம் பூராகவும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. மட்டுப்படுத்தப்ட்ட சிந்தனை புரிதல் உள்ள மனிதனால் அவற்றில் வைக்கப்படும் தீர்வுகள் ஒருபோதும் நிரந்தரத் தீர்வாகவோ, அனைத்துவிதமான மக்களுக்கும் பொருந்தக் கூடியதாகவோ இருக்கமாட்டாது. எனவே இங்கு மனிதன் விடுகின்ற பெரிய பிழை நிம்தியை எங்கு தேடுவதென்பதைப் புரிந்துகொள்ளாமையே!

அல்லாஹ்வைத் தவிர ஒரு மனிதனை முழுமையாகவும் சரியாகவும் புரிந்துகொள்ளமுடியாது. மனிதனது இயல்புகளையும், தேவைகளையும் முழுமையாக அறிந்திருப்பவன் அவனே. எனவே மனித வாழ்க்கையின் நிம்மதி, சந்தோசம் எங்கிருக்கின்றது என்பதை அவனால் மாத்திரமே கூறமுடியும்.

மனிதனுக்கு நிம்மதியைத் தரும், அவனது உள்ளத்தை அமைதிப்படுத்தும் பல காரணிகள் அல்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளன. அவற்றை ஒரு மனிதன் வாழ்க்கையில் சரிவர எடுத்து நடந்தாலே அவனால் நிச்சயமாக நிம்மதியை அடைந்துகொள்ள முடியும். அவ்வாறான சில காரணிகளை நாம் நோக்குவோம்.

1. ஈமான் (இறைவிசுவாசம்)

மனிதனின் ஈமான் எந்தளவு பலமாக உள்ளதோ அந்த அளவு அவனால் நிம்மதியை அடையமுடியும். குறிப்பாக அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கை, மறுமை பற்றிய நம்பிக்கை விதி பற்றிய நம்பிக்கை ஆகிய மூன்றும் முக்கிய அம்சங்களாகும்.

தன்னைப் படைத்த அல்லாஹ்வைப் பற்றி ஒவ்வொரு மனிதனும் கற்பது கட்டாயமாகும். குறிப்பாக அவனது விசாலமான அன்பு, நீதி கொடையளித்தல் போன்ற பண்புகளையும் ஏனைய திருநாமங்கள் மற்றும் பண்புகளையும் ஆழமாகக் கற்கும் போது தனது வாழ்க்கை பற்றி பயப்படவேண்டிய எந்தவொரு அம்சமும் தனக்கு இல்லை என்பதை மனிதன் புரிந்துகொள்வான். விசாலமான அன்பைக் கொண்ட அல்லாஹ் ஒரு போதும் தன்னைக் கைவிடமாட்டான் என்பதை விளங்கிக் கொள்வான். அல்லாஹ் கூறுகின்றான் “யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ அவரது உள்ளத்தை அல்லாஹ் நேர்வழிப்படுத்துவான்” (ஸூரா அத்தகாபுன் : 11)

மறுமை பற்றிய நம்பிக்கை மனிதனை பல பகுதிகளில் அமைதிப்படுத்துகின்றது. தனக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நியாயம் பெற்றுக்கொள்ள முடியவில்லையே என மனிதன் கவலைப்பட்ட வேண்டிய அவசியம் இல்லை. அல்லாஹ்வின் விசாரணையிலிருந்து மறுமையில் யாரும் தப்பிக்க முடியாது. அல்லாஹ் கூறுகின்றான் “அநியாயக்காரர்கள் செய்பவற்றை விட்டும் அல்லாஹ் பராமுகமாக இருக்கின்றான் என நீங்கள் எண்ணாதீர்கள்! அவன் அவர்களைப் பிற்படுத்துவது பார்வைகள் நிலைகுத்திப் போகும் ஒரு நாளிற்காகத்தான்” (ஸூரா இப்ராஹீம் : 42)

தான் இவ்வுலகில் நல்லவனாக இருந்தும் கெட்டவனாகப் புரியப்பட்டுள்ளேன் என்றோ தனது நலவுகள் மறைக்கப்டுகின்றன என்றோ அவன் நொந்துகொள்ளவேண்டியதில்லை. யதார்த்தங்களை மாத்திரம் பார்க்கும் அல்லாஹ் மறுமையில் அதற்கான சரியான கூலியை வழங்கிவிடுவான்.

விதிபற்றிய நம்பிக்கை பல காயங்களுக்கு மருந்திடுகின்றது. என்னைப் படைத்த என் மீது அன்பு செலுத்துகின்ற அல்லாஹ் என் மீது கெடுதியை ஒரு போதும் நாடமாட்டான் என நம்பும் போது அவன் விதியால் ஏற்படும் எந்த இழப்பையும் உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்வான்.

2. தக்வா (இறையச்சம்)

ஒரு மனிதன் தன் வாழ்வில் எந்தளவு அல்லாஹ்வை அஞ்சுகின்றானோ அந்த அளவு அவனது வாழ்க்கையில் நிம்மதியைக் காண்பான். அல்லாஹ் கூறுகின்றான் “யார் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்கின்றாரோ அவருக்கு (அவரது கஷ்டங்களிலிருந்து) வெளியேறும் இடத்தை அல்லாஹ் ஏற்படுத்துவான். மேலும்இ அவர் நினைக்காத புறத்தில் அவருக்கு ரிஸ்க் அளிப்பான்” (ஸூரா அத்தலாக் : 2,3) 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் “யார் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்கின்றாரோ அவரது விடயங்களில் அவருக்கு அல்லாஹ் இலேசை ஏற்படுத்துவான்” (ஸூரா அத்தலாக் : 4)

மனிதனிடம் இறைநம்பிக்கையும் இறையச்சமும் ஒன்றுசேரும் போது பரக்கத்தின் பல வாயில்களையும் அது திறந்துகொடுக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான் “அந்த கிராமங்களின் மக்கள் விசுவாசம் கொண்டு அல்லாஹ்வை அஞ்சியிருந்தால் வானம் பூமியில் இருந்து பல பரக்கத்துகளை நாம் திறந்து கொடுப்போம்” (ஸூரா அல்அஃராப் : 96)

3. நல்ல அமல்கள்.

ஸாலிஹான, நபியவர்களின் வழிகாட்டுதல்களுக்கு நேர்பட்ட நல்ல அமல்கள் மனிதனின் நிம்மதியான வாழ்க்கைக்குக் காரணமாக அமைகின்றன. அல்லாஹ் கூறுகின்றான் “ஆண்களில் பெண்களில் யார்; ஈமான் கொண்டவராக, நல்ல அமல்களைச் செய்கின்றார்களோ அவர்களை சந்தோசமான வாழ்க்கையாக நாம் வாழவைப்போம்.” (ஸூரா அந்நஹ்ல் : 97)

4. பாவங்களைத் தவிர்த்தல்.

ஒரு மனிதனின் உள்ளத்தை சீர்கெடுத்து, அவனது வாழ்க்கையின் நிம்மதியை இல்லாதொழிக்கும் மிக முக்கிய காரணியாக பாவம் திகழ்கின்றது. பாவத்தின் பாரதூரம் எந்தளவு கடுமையாக இருக்கின்றதோ அதற்கு நிகராக நிம்மதியற்ற வாழ்க்கை காணப்படும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். “நிச்சயமாக பாவம் முகத்தைக் கருமையடையச் செய்யும். உள்ளத்தை இருளாக்கும். உடம்பைப் பலவீனப்படுத்தும். ரிஸ்கைக் குறைக்கும். மனிதர்களில் உள்ளத்தில் பாவம் செய்பவரைப் பற்றி வெறுப்பை ஏற்படுத்தும்.”

5. திக்ர் (அல்லாஹ்வை நினைவூகூர்தல்.)

மனித உள்ளத்திற்கு நிம்மதியைத் தரும் பிரதான காரணிகளில் ஒன்று அல்லாஹ்வை அடிக்கடி நினைவு கூர்வதாகும். அல்லாஹ் கூறுகின்றான். “விசுவாசம் கொண்டவர்களது உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு நிம்மதி அடைகின்றன. அல்லாஹ்வை நினைவுகூர்வது கொண்டே உள்ளங்கள் நிம்மதி அடைகின்றன.” (ஸூரா அர்ரஃத் : 28)

மறுபுறம் அல்லாஹ்வை யார் மறந்து வாழ்கின்றாரோ அவருக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அல்லாஹ் கூறுகின்றான் “யார் என்னை நினைவு கூர்வதைப் புறக்கணிக்கின்றாரோ நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு” (ஸூரா தாஹா : 124)

6. தொழுகை

நல்லமல்களில் தொழுகைக்கு மிக முக்கிய இடம் உண்டு. அது பல நல்லமாற்றங்களை மனிதனில் ஏற்படுத்துகின்றது. நபி (ஸல்) அவர்கள் “எனது கண்குளிர்ச்சி தொழுகையில் வைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.

தொழுகையை உள்ளச்சத்துடனும், முழு மன விருப்பத்துடனும் நிறைவேற்றும் போது நிச்சயமாக அது அமைதியைத் தரும்.

7. தஸ்பீஹ் (அல்லாஹ்வைத் துதித்தல்)

அல்லாஹ்வை அதிகம் துதித்து தஸ்பீஹ் செய்வது துன்பங்களில் இருந்தும் நெருக்கடிகளில் இருந்தும் விடிவைத் தரும் என்பதைப் பல அல்குர்ஆன் வசனங்கள் தௌபாவாக எடுத்துக் கூறுகின்றன. அல்லாஹ் கூறுகின்றான் “(நபியே!) அவர்கள் (மக்கா காபிர்கள்) கூறுபவற்றைக் கொண்டு உங்களது உள்ளம் நெருக்கடிக்குள்ளாவதை நாம் அறிவோம். எனவே நீங்கள் உங்கள் ரப்பின் புகழைக் கொண்டு துதியுங்கள். மேலும்இ ஸூஜூத் செய்பவர்களில் ஆகிவிடுங்கள்.” (ஸூரா அல்ஹிஜ்ர்; : 97,98)

இஸ்லாம் காட்டித் தந்துள்ள இவ்வாறான அம்சங்களை எப்போதும் கடைப்பிடித்து நடப்பதன் மூலம் எந்தத் துன்பத்திலும் இருக்கும் முஸ்லிமுக்கு நிச்சயமாக நிம்மதியை அடையலாம்.

-சுவன பாதை
أحدث أقدم