இஸ்லாமிய அகீதாவின் மூலாதாரங்கள்

இஸ்லாமிய அகீதாவின் மூலாதாரங்கள், மற்றும் அவற்றை புரிந்து கொள்ளும் போது கையாளவேண்டிய, தவிர்க்க வேண்டிய வழிமுறைகள்.


அகீதா :

العقد என்ற சொல்லில் இருந்து தான் العقيدة என்ற வார்த்தை பெறப்பட்டது. العقد என்றால் உறுதிப்படுத்துதல் என்று பொருள். (பார்க்க லிசானுல் அரபிக்)

இஸ்லாமிய மரபில் "அகீதா" என்பதற்கு அல்லாஹ்வின் மீதும் அவனது மலக்குகள், வேதங்கள், தூதர்கள், மறுமை மற்றும் விதியின் மீதும் உறுதியான நம்பிக்கை கொள்ளுதல் என்பதாகும்.


அகீதாவின் மூலாதாரம்: 

அகீதாவின் மூலம் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் ஸுன்னத் (வழிமுறை) மற்றும் ஸலஃபு ஸாலிஹின்களின் இஜ்மாவை அடிப்படையாகக் கொண்டதாகும். 


ஸலஃபு என்றால் யார்? 

குர்ஆனும், ஸுன்னாவும் தான் மார்க்கத்தின் அடிப்படை ஆதாரம் என்பதை கருத்து வேறுபாடில்லாமல் சமுதாயம் அங்கீகரித்துள்ளது அதேவேளையில் குர்ஆனையும் சுன்னாவையும் புரிந்து கொள்வதன் வழிமுறை என்ன என்பதில் தான் சிக்கல் உள்ளன அதற்குரிய வழிகாட்டுதலாகத்தான் ஸலஃப் ஸாலிஹின்களின் இஜ்மாவை அடிப்படையாக கொண்டு விளங்க வேண்டும் என்பதாகும். 

 السلف  அஸ்ஸலஃப் என்பதற்கான விளக்கம்: 

ஸலஃபு என்ற சொல் அரபியில் பல பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. 
பூமியை சமப்படுத்துதல், 
தவணை வியாபாரம், 
முந்தியது - முன்சென்றது.  مختار الصحاح ٢٦٤ _ النهاية في غريب الحديث ٢ | ٣٨٩,٣٩٠ 

அல்லாஹ் கூறுகிறான்: 

 قُلْ لِّـلَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ يَّنْتَهُوْا يُغْفَرْ لَهُمْ مَّا قَدْ سَلَفَ وَاِنْ يَّعُوْدُوْا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْاَوَّلِيْنَ 

நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்: இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேறி இருக்கிறது. (அதுவே இவர்களுக்கும்.) (அல்குர்ஆன் : 8:38) 

 فَجَعَلْنٰهُمْ سَلَفًا وَّمَثَلًا لِّلْاٰخِرِيْنَ 

இன்னும், நாம், அவர்களை (அழிந்து போன) முந்தியவர்களாகவும், பின் வருவோருக்கு உதாரணமாகவும் ஆக்கினோம். (அல்குர்ஆன் : 43:56) 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் தன் அடியார்களில் ஒரு சமுதாயத்தாருக்கு அருள்புரிய நாடினால், அதற்கு முன்னரே அச்சமுதாயத்தின் நபியை கைப்பற்றி, அவரை அந்தச் சமுதாயத்தாருக்கு முன்பே சென்று (தக்க ஏற்பாடுகளுடன்) காத்திருக்கச் செய்கிறான். அல்லாஹ் ஒரு சமுதாயத்தாரை அழிக்க நாடினால், அந்தச் சமுதாயத்தாரின் தூதர் உயிருடனிருந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே அச்சமுதாயத்தாரை வேதனைக்குள்ளாக்கி அழிக்கிறான். அவரை நம்ப மறுத்து அவரது கட்டளைக்கு மாறு செய்யும்போது, அவர்களை அழிப்பதன் மூலம் அவரைக் கண் குளிர்ச்சி அடையச் செய்கிறான். அறிவிப்பாளர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 4596 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர்கூட விடுபடாமல் (நாங்கள்) அனைவரும் (நபி (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிக் கொண்டிருந்தபோது) அவர்களுக்கு அருகில் இருந்தோம். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் (தம் தந்தையை நோக்கி) நடந்துவந்தார். அவரது நடை அப்படியே நபி (ஸல்) அவர்களின் நடையைப் போன்றே இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "வருக! என் மகளே!" என்று அழைத்து,தமக்கு வலப் பக்கத்தில் அல்லது இடப் பக்கத்தில் அமர்த்திக்கொண்டார்கள். பிறகு ஃபாத்திமாவிடம் இரகசியமாக ஏதோ ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். அதைக் கேட்டதும் ஃபாத்திமா அழுதார். பிறகு அவரிடம் இரகசியமாக ஏதோ (இன்னொரு விஷயத்தைச்) சொன்னார்கள். அதைக் கேட்டதும் அவர் சிரித்தார். நான் அவரிடம் "ஏன் அழுதீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை" என்று கூறினார். அப்போது நான், "இன்றைய தினத்தைப் போன்று துக்கம் அண்டிய ஒரு மகிழ்ச்சியை (எப்போதும்) நான் பார்த்ததில்லை"என்று சொல்லிவிட்டு, அழுது கொண்டிருந்த அவரிடம், "எங்களை விட்டு உங்களிடம் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ சொன்னார்கள். (அதைக் கேட்டு) பிறகு நீங்கள் அழுகிறீர்களே! (அப்படி) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று (மீண்டும்) கேட்டேன். அப்போதும் அவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியமாகச் சொன்னதை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை" என்று கூறிவிட்டார். இறுதியில் நபி (ஸல்) அவர்கள் இறந்தபின் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "(வானவர்) ஜிப்ரீல் என்னை ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதச் செய்துவந்தார். இந்த ஆண்டு மட்டும் என்னை இரு முறை ஓதச் செய்தார். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்துவிட்ட(தைக் குறிப்ப)தாகவே அதை நான் கருதுகிறேன். என் குடும்பத்தாரில் என்னை முதலில் வந்தடையப்போவது நீதான். நான் உனக்கு முன்னால் நல்லபடியாக (இவ்வுலகை விட்டு) சென்றுவிடுவேன்" என்று கூறினார்கள். ஆகவே, நான் அழுதேன். பிறகு என்னிடம் "இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கு" அல்லது "இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு"த் தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா என்று இரகசியமாகக் கேட்டார்கள். அதற்காக நான் சிரித்தேன். ஸஹீஹ் முஸ்லிம் : 4845. 

மேற்கண்ட குர்ஆன் மற்றும் நபி மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ளதை போன்று முன்னோர் என்ற பொருளில் தான் ஸலஃபு என்ற சொல்லை நாமும் பயன்படுத்துகிறோம். இதன் அடிப்படையில் நமது முன்னோர்கள் சஹாபாக்கள், தாபியீன்கள், தபஉ தாபியீன்கள் மற்றும் மார்க்கத்தின் முன்னோடிகளான இமாம்கள் ஆவார்கள். இவர்களிடமிருந்து தான் முஸ்லிம் சமுதாயம் மார்க்கத்தை பெற்றுக்கொண்டது. அதேவேளையில் மார்க்கத்திற்கு முரணான பித்அத்களையும், வழிகேடுகளையும் உருவாக்கிக் கொண்ட ஹவாரிஜ், ராபிளா, முஃதஸிலா, கத்ரியா, முர்ஜியா, அஷாயிரா, ஜஹ்மியா, போன்ற வழிகெட்ட பிரிவினர்களை நாம் ஸலஃபுகள் என்று கூறமாட்டோம். சிறந்த நூற்றாண்டின் நேர்வழி நடந்த முன்னோர்களைத்தான் நாம் ஸலஃபு என்றும்  ஸலஃபு ஸாலிஹீன்கள் என்றும் கூறுகிறோம். இவர்களுக்குதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறந்த மக்கள் என்று சான்று பகர்ந்தார்கள். 

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

மக்களில் சிறந்தவர் என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: ஸஹீஹுல் புஹாரி - 2652, ஸஹீஹ் முஸ்லிம் - 4956 (முஹ்தஸருல் ஹஸீஸ் ஃபிபயானி உஸுலி மன்ஹஜு ஸலஃபு வ அஸ்ஹாபுல் ஹதீஸ் 32-33) 


இஜ்மா என்றால் என்ன? 

இஜ்மா என்றால் ஏகோபித்த முடிவு என்று பொருள். 

மார்க்க விஷயத்தில் ஸஹாபாக்கள் அவர்களுக்கு பின்னர் தாபியீன்கள் அதன் பின்னர் தபஉ தாபியீன்கள் ஆகிய நேர்வழி சென்ற முன்னோர்கள்  ஏகோபித்து கூறிய விஷயங்களுக்கு இஜ்மா என்று கூறுவோம். 

 وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَـنَّمَ‌  وَسَآءَتْ مَصِيْرًا 

 எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். (அல்குர்ஆன் : 4:115) 

ஸஹாபாக்களின் வழியைத்தான் இவ்வசனத்தில் அல்லாஹ் முஃமின்களின் வழி என்று கூறுகிறான். இந்த வசனம் அருளப்படும் போது அவர்களைத் தவிர வேறு யாரும் ஈமான் கொண்ட மக்களாக இருக்கவில்லை என்பதே அதற்கு போதுமான சான்றாக உள்ளன. இன்னும் அகீதா சார்ந்த விஷயத்தில் ஸஹாபாக்களுக்கு பின்னர் வந்தவர்களில் யாரும் அவர்களுடைய நிலைப்பாட்டிற்கு மாற்றமான கருத்தை கொள்ளவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஸஹாபாக்களால்  ஏகோபித்துச் சொல்லப்பட்ட விஷயங்களுக்குத்தான் நாம் இஜ்மா என்று கூறுகிறோம். குறிப்பாக அகீதா கொள்கைச் சார்ந்த விஷயங்களில் அவர்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.  அதில் அவர்களுக்கு மத்தியில், எவ்வித கருத்து வேறுபாடும் இருக்கவில்லை. 


தனி நபர் அறிவிப்பு:  

குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்ட ஒவ்வொரு செய்தியும் ஷரீஅத் ஆகும். ஹதீஸ் சில நபர்கள் அறிவித்த (ஆஹாதான ஹதீஸ்கள்) செய்தியாக இருந்தாலும் சரியே. 

மனித சமுதாயம் கடைப்பிடித்து வாழ வேண்டிய சட்ட திட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய வழிகாட்டியாக அல்லாஹ்வின் வேதம் அல்குர் ஆனும், நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களும் உள்ளன. இவ்விரண்டிலும் சொல்லப்பட்ட அனைத்து செய்திகளும் நாம் கடைப்பிடித்து வாழவேண்டிய வாழ்க்கைக்கான சட்டதிட்டங்களாகும். 

அல்லாஹ் கூறுகிறான்: 

 فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى ۙ فَمَنِ اتَّبَعَ هُدَاىَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقٰى 

அப்பொழுது நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார். (அல்குர்ஆன் : 20:123) 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏதேனும் முக்கிய விஷயம் குறித்து எச்சரிக்கை செய்து) உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்துவிடும்; கோபம் மிகுந்துவிடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப் போவது குறித்து "எதிரிகள் காலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்" என்று கூறி அவர்கள் எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றிருப்பார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நானும் மறுமை நாளும் இதோ இவ்விரு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பெற்றுள்ளோம்" என்று கூறியவாறு தம்முடைய சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டுவார்கள். மேலும், "அம்மா பஅத் (இறைவாழ்த்துக்குப் பின்!) உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்" என்று கூறுவார்கள். பிறகு "ஒவ்வோர் இறை நம்பிக்கையாளருக்கும் அவரது உயிரைவிட நான் நெருக்கமான (உரிமையுடைய)வன் ஆவேன். (ஆகவே,) எவர் (இறக்கும்போது) ஒரு செல்வத்தை விட்டுச்செல்கிறாரோ அது அவருடைய குடும்பத்தாருக்குரியதாகும். எவர் (இறக்கும்போது) ஒரு கடனை அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச்செல்கின்றாரோ அவர்கள் என்னிடத்தில் வரட்டும். என்மீதே (அவர்களைப் பராமரிப்பதும் அவர்களது கடனை அடைப்பதும்) பொறுப்பாகும்" என்று கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 1573. 

அல்லாஹ் கூறிய சட்டங்களை போன்று தான் நபி(ஸல்) அவர்கள் கூறியவைகளும். 

நபிமொழியை பொறுத்த வரையில் சொல், செயல், அங்கீகாரம் என நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமாக வந்துள்ள அனைத்து செய்திகளையும் ஏற்றுக் கொள்வதும் அதற்கு கட்டுப்படுவதும் மார்க்கத்தின் அடிப்படையாகும். 

தனி நபர் அறிவிக்கும் (ஆஹாதான) அறிவிப்புகளை அகீதா விஷயங்களை தீர்மானிப்பதற்கான ஆதாரமாக கொள்ளக் கூடாது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் மார்க்கத்தை பொறுத்தவரையில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று உறுதியானால் அச்செய்தி ஒரு நபர் அறிவித்த ஹதீஸாக இருந்தாலும் அதனை ஏற்கவேண்டும் என்பது தான் அஹ்லுஸ்ஸுன்னாவின் நிலைப்பாடாகும். 

நபி மொழிகளை பொறுத்த வரையில் அவை இரண்டு வகையாக பிரிக்கப்படும். 

1. முதவாத்திர், 
2. ஆஹாது 

முதவாத்திர் என்பது ஒவ்வொரு அறிவிப்பாளர் தொடரிலும் பல நபர்கள் இடம் பெறுவதாகும். 

ஆஹாது என்பது 3 வகைப்படும். 

1. மஷ்ஹூர், 
2. அசீச், 
3. கரீபு 

1. மஷ்ஹூர் 

மஷ்ஹூர் என்பதுஅறிவிப்பாளர் தொடர் வரிசையில் ஒவ்வொரு தொடரிலும் மூன்று அல்லது அதற்கு மேல்  நபர்கள் இடம் பெறுவதாகும். 

2. அசீச் 

அசீச் என்பது அறிவிப்பாளர் தொடர் வரிசையில் ஒவ்வொரு தொடரிலும் இரண்டு அல்லது அதற்கு மேல் நபர்கள் இடம் பெறுவதாகும். 

3. கரீபு 

கரீபு என்பது அறிவிப்பாளர் தொடர் வரிசையில் ஒவ்வொரு தொடரிலும் ஒரு நபர் இடம் பெறுவதாகும். (பார்க்க உலுமுல் ஹதீஸ் இப்னு ஸலாஹ் -244) 

இதற்கு உதாரணமாக புஹாரியில் இடம்பெற்ற முதலாவது ஹதீஸை கூறலாம். இந்த நபி மொழியை நபி தோழர்களில் உமர்(ரலி) அவர்கள் மட்டும்தான் அறிவித்துள்ளார்கள். 

'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள். ஸஹீஹுல்  புஹாரி - 1.

ஒருவர் அறிவித்த ஹதீஸாக இருந்தாலும் அதன் அறிவிப்பாளர் நம்பகமானவராக இருந்தால் அதனை ஏற்க வேண்டுமென்பதுதான் ஹதீஸ் கலை வல்லுனர்களின் நிலைப்பாடு. அந்த ஹதீஸ் அகீதா தொடர்பானதாக இருந்தாலும் சரியே. ஆனால் சிறந்த தலைமுறையினருக்கு பின் வந்தவர்கள் அகீதா விஷயத்தில் தனி நபர் ஒரு நபர் அறிவிப்பை ஏற்கமாட்டார்கள். அவர்களது வழிமுறை அஹ்லுஸ்ஸுன்னா வழிமுறைக்கு மாற்றமானதாகும். 


குர்ஆன் மற்றும் ஹதீஸை விளங்குவது எப்படி?   

குர்ஆன் மற்றும் ஹதீஸை புரிந்து கொள்வதில் ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் புரிதலையும் அவர்களின் வழிகாட்டுதலையும் எடுத்து கொள்ள வேண்டும். 

மனித சமுதாயம் நேர்வழிப் பெறுவதற்காகத்தான் அல்லாஹ் அவனது வேதத்தை தூதருடன் அனுப்பி வைத்தான். அல்லாஹ்வின் வேதத்தையும் அவனது தூதரின் உபதேசங்களையும் சரியான முறையில் புரிந்து கொள்வதற்கு, நபித்தோழர்களின் புரிதல் அவசியம். ஏனெனில் அவர்கள் வஹீக்கு சாட்சியாக இருந்தவர்கள். ஒவ்வொரு வசனமும் எங்கே அருளப்பட்டது; யாரைக் குறித்து இவ்வசனம் பேசுகிறது என்பதையும், அவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள சட்டங்கள் என்ன என்பதையும், நபித்தோழர்களே நன்கு அறிந்தவர்கள் இன்னும் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் விளக்கங்களை கற்று அறிந்தவர்கள். 

இப்னு மஸ்ஊது(ரலி) அவர்கள் கூறினார்கள்: 

நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் பத்து வசனங்களை கற்றுக் கொண்டால் அதில் சொல்லப்பட்டுள்ள கல்வியையும், அமலையும் குறித்து அறிந்து கொள்ளாதவரை அடுத்த பத்து வசனங்களை கற்றுக் கொள்ள மாட்டோம். (நூல்: ஷுஃபுல் ஈமான் - 1801, முஸ்த்தரகுல் ஹாகிம் - 2047, சுனனுல் குப்ராலில் பைஹகி - 5289) 

எனவே அவர்களுடைய விளக்கம் தான் பிறருடைய விளக்கத்தைவிட சிறந்ததும் பொருத்தமானதும் ஆகும். எனவே குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்பட்ட செய்திகளை மொழி அடிப்படையில் பொருள் கொள்ளாமல், வஹீக்கும், நபி(ஸல்) அவர்களின் ஸுன்னாவிற்கும் சாட்சியாக இருந்த நபித்தோழர்கள் எந்த பொருளையும், விளக்கத்தையும் வழங்கினார்களோ அதே பொருளைத்தான் குர்ஆனையும், ஹதீஸையும் புரிந்து கொள்வதற்கான விளக்கமாகக் கொள்ள வேண்டும். 

அதனை விட்டு விட்டு வேறு விளக்கங்ளை எடுத்து கொண்ட போது தான் முஸ்லிம் சமுதாயம் வழிகேட்டிற்கு சென்றது. 

வழி தவறிப்போன அனைத்து கூட்டமும் குர்ஆனுக்கும், ஸுன்னாவிற்கும் தங்களுடைய மனோ இச்சையின் அடிப்படையில் பொருள் கொண்டு தவறான விளக்கத்தை கூறித்தான் வழிகேட்டிற்கு சென்றார்கள். 

இதற்கு வரலாறு முழுக்க உதாரணங்களைக் காணமுடியும். ஹவாரிஜ், ராஃபிளா, முஃதஸிலா கத்ரியா, முர்ஜியா, அஷாயிரா, ஜஹ்மியா போன்ற வழிகெட்ட பிரிவினர்கள். மனோ இச்சையின் அடிப்படையில் குர்ஆனையும், ஹதீஸ்களையும் அணுகியதன் மூலம் தான் வழிகெட்டுச் சென்றார்கள். 

நாம் நேர்வழியில் இருந்து வழி தவறிவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் வழியை மார்க்கம் நமக்கு வலியுறுத்தியுள்ளது. (பார்க்க, அல்குர்ஆன் 2:137) 

இன்னும் ஸலஃபு ஸாலிஹீன்கள் வழியை பின்பற்றுவதை மார்க்கம் நம்மீது கடமையாகவும் ஆக்கியுள்ளது. 

அல்லாஹ் கூறுகிறான்: 

 وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَـنَّمَ‌  وَسَآءَتْ مَصِيْرًا 

எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். (அல்குர்ஆன் : 4:115) 

இந்த வசனத்தின் விளக்கவுரையில் இமாம் இப்னு கசீர்(ரஹ்) அவர்கள்  கூறினார்கள். நம்பிக்கை, வழிபாடுகள் சார்ந்த விஷயங்களில் முஃமின்களின் பாதை என்பது சத்திய ஸஹாபாக்கள் மற்றும் அவர்களை பின்பற்றிய தாபியீன்கள் இன்னும் தபஉ தாபியீன்கள் வழி என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. 

 அல்லாஹ் கூறுகிறான்: 

 وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌  ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ 

இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும்  பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் : 9:100) 

இந்த வசனத்தில் நபித் தோழர்களின் கொள்கையையும், அவர்களின் அமல்களையும் யார் பின் தொடர்வார்களோ அவர்களை அல்லாஹ் புகழ்ந்து கூறுகிறான். இன்னும் அல்லாஹ் அவர்களுக்கு சொர்க்கத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள இன்பங்களையும் தெளிவுபடுத்துகிறான். இதுவே நபித்தோழர்களின் வழியை அல்லாஹ் பொருந்திக் கொண்டான் என்பதற்கும், அதனைப் பின்பற்றுவது அவசியம் என்பதற்கும் சான்றாகும். (முஹ்தஸருல் ஹஸீஸ் ஃபிபயானி உஸுலி மன்ஹஜு அஸலஃபு வ அஸ்ஹாபுல் ஹதீஸ் -49) 

தனக்கு பின்னர் முஸ்லிம் சமுதாயத்திற்கான வழிகாட்டிகளாக தனது தோழர்கள் விளங்குவார்கள் என்பதை நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். 

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: 

(ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதோம்.   பிறகு நாங்கள், "நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுகை தொழும்வரை (இங்கேயே) அமர்ந்திருந்தால் நன்றாயிருக்கும்" என்று கூறிக் கொண்டு (அங்கேயே) அமர்ந்திருந்தோம். 

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, "ஏன் இங்கேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தங்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதுவிட்டுப் பிறகு "தங்களுடன் இஷாத் தொழுகையையும் தொழும்வரை அமர்ந்திருப்போம்" என்று கூறினோம்" என்றோம். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் செய்தது "நன்று" அல்லது "சரி" என்று சொல்லி விட்டு, வானத்தை நோக்கித் தமது தலையை உயர்த்தினார்கள்.   -(பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமாக வானத்தை நோக்கித் தமது தலையை  உயர்த்தக்கூடியவராக இருந்தார்கள்.- 

பிறகு, "நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் போய்விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பு ஆவேன். நான் போய்விட்டால் என் தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். என் தோழர்கள் என் சமுதாயத்தாருக்குப் பாதுகாப்பு ஆவார்கள். என் தோழர்கள் போய்விட்டால் என் சமுதாயத்தாருக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும்" என்று கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 4953. 

இந்த நபிமொழியை குறித்து இமாம் இப்னுல் கய்யீம்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

நட்சத்திரங்களுக்கும், வானத்திற்குமான தொடர்பைப் போன்றுதான் தனக்கும், தனது தோழர்களுக்குமான தொடர்பு என்றும், நபித்தோழர்களுக்கு பின்னர் வரக்கூடியவர்களுக்கும் நபித்தோழர்களுக்குமான தொடர்பென்றும் இந்த நபிமொழி தெரிவிக்கிறது. 

இந்த ஒப்பீட்டின் மூலம், நபித்தோழர்கள் எவ்வாறு நபி(ஸல்) அவர்கள் மூலம் நேர்வழி அடைந்தார்களோ, அவ்வாறே இந்த சமுதாயமும் நபித்தோழர்கள் மூலம் நேர்வழி அடைய வேண்டுமென்பதை அவசியமாக்குகிறது. நட்சத்திரங்களின் மூலம் மனிதர்கள் வழியை அறிந்து கொள்வது போன்றுதான் இது. இன்னும் நபித்தோழர்கள் எஞ்சியிருப்பது சமுதாயத்திற்கான பாதுகாப்பாகவும் தீமைகளை விட்டு தவிர்ந்துக் கொள்வதற்கான காரணியாகும் நபி(ஸல்) அவர்கள் ஆக்கினார்கள். எனவே அவர்கள் தீர்ப்பளித்த விஷயத்தில் அவர்கள் தவறு இழைத்து பின்னர் வந்தவர்கள் அது விஷயமாக சரியான தீர்ப்பை அடைந்து கொண்டார்கள் என்பதை சரி கண்டால் நபித்தோழர்களுக்கு பின்னர் வந்தவர்கள் அவர்களுக்கு பாதுகாப்பாகவும், அமைதி அளிப்பவர்களாகவும் ஆவார்கள் இவ்வாறு நிகழ்வது ஒருபோதும் சாத்தியமற்றதாகும். (நூல்: இஅலாமுல் முவக்கியீன் -4/137) 

இர்பாளு பின் ஸாரியா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்: 

ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஃபஜர் தொழுகையை தொழவைத்த பின்னர் எங்களை நோக்கி அமர்ந்து கண்கள் குளமாகும் அளவிற்கும், உள்ளங்கள் அஞ்சி நடு நடுங்கும் அளவிற்கும் உபதேசம் செய்தார்கள். அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! விடைபெற்று செல்வோரின் உபதேசம் போன்றல்லவா தங்களது உபதேசமுள்ளது என்று கூறி நீங்கள் எங்களுக்கு என்ன உபதேசம் செய்ய இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டுமென்று நான் உங்களை உபதேசிக்கிறேன். இன்னும் தலைவருக்கு செவிசாய்க்க வேண்டும், அவருக்கு கட்டுப்பட வேண்டும், அவர் ஒரு கருப்பின அடிமையாக இருந்தாலும் சரியே. நிச்சயமாக உங்களில் எனக்கு பின் உயிர் வாழ்பவர்கள் ஏராளமான கருத்து வேறுபாடுகளை காண்பீர்கள். அப்போது நீங்கள் எனது ஸுன்னத்தையும் (வழிமுறை) நேர்வழி பெற்று நேர்வழி நடந்த எனது கலீஃபாக்களுடைய வழிமுறையையும் பின்பற்றுங்கள். அதனை உங்கள் கடவாய்ப் பற்களால் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக புதிதாக உருவாகும் உருவாகக்கூடிய நூதன விஷயங்களைக் குறித்து நான் உங்களை எச்சரிக்கிறேன். 

நிச்சயமாக புதிதாக உருவாகக்கூடிய அனைத்து காரியமும் வழிகேடாகும் என்று கூறினார்கள். (நூல்: சுனனு அபிதாவூத் -4607, அஹ்மது) 

மேலே கூறப்பட்டுள்ள இரண்டு நபிமொழியும், நபித்தோழர்கள் மற்றும் தாபியீன்கள், தபஉ தாபியீன்களின் சிறப்பையும், அவர்களின் வழி தான் வெற்றிக்குரிய வழி என்பதையும், குழப்பத்திற்கும் கருத்து வேறுபாட்டிற்கு இடமளிக்காது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. இன்னும் அவர்களின் வழிமுறையை பின்பற்றுவதையும் அவசியமாக்குகிறது. 


இது தொடர்பாக ஸலஃபுகளின் நிலைப்பாடு:

இப்னு மஸ்ஊது(ரலி) அவர்கள் கூறினார்கள்: 

நீங்கள் நபித்தோழர்களை பின்பற்றுங்கள். புதிய புதிய பித்அத்களை உருவாக்காதீர்கள். அதுவே உங்களுக்குப் போதுமானதாகும். அனைத்து பித்அத்தும் வழிகேடாகும். (நூல்: இமாம் அஹ்மத் அவர்களின் அச்சுஹ்த் - 896, இமாம் வகீஃ அவர்களின் அச்சுஹ்த் - 315) 

இமாம் அவ்ஸாயி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

ஸுன்னாவை பின்பற்றுவதில் பொறுமையை கடைபிடியுங்கள். நபித்தோழர்கள் எதனை போதுமாக்கி கொண்டார்களோ அதனையே போதுமாக்கிக் கொள்ளுங்கள். அவர்கள் கூறியதையே கூறுங்கள், அவர்கள் தவிர்ந்தவற்றை தவிர்ந்து கொள்ளுங்கள், ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழியில் நடை போடுங்கள், அவர்களுக்கு போதுமானது உங்களுக்கும் போதுமானதே. (நூல்: இமாம் ஆஜுரி அவர்களின் அஷ்ஷரிஆ, பக்கம் - 155) 

நேர் வழியை விட்டு வழிதவறிய வழிகேடர்களின் அடையாளங்களை குறித்து இமாம் பர்பஹாரி (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். 

1. அவர்கள் ஸஹாபாக்களின் பாதையை விட்டு விலகி இருப்பார்கள். 

2. அவர்கள் ஸஹாபாக்களின் விளக்கங்களை ஏற்கமாட்டார்கள். 

 3. அல்லாஹ்வும், அவனது தூதரும் சொர்க்கத்திற்குரியவர்கள் என்று பொருந்திக் கொண்டவர்களை பித்அத்வாதிகளாக சித்தரிப்பார்கள். (நூல்: ஷர்ஹுஸ்ஸுன்னா) 


பரிபூரணமான மார்க்கம்:

மார்க்கத்தை முழுமைப் படுத்துவதன் மூலம் அல்லாஹ் இச்சமுதாயத்திற்கு அவனது அருட்கொடையை முழுமைப் படுத்தியுள்ளான். எனவே மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கத்தில் புகுத்துவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை. 

இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை அல்லாஹ் முழுமைப் படுத்தியுள்ளான். 

 اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ 

இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; (அல்குர்ஆன் : 5:3) 

நபி(ஸல்) அவர்கள் தமது வருகையைக் குறித்துக் கூறும்போது இவ்வாறு கூறினார்கள்: 

எனது நிலையும் (எனக்கு முன்பிருந்த) இதர இறைத்தூதர்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் ஒரு கட்டடத்தை நேர்த்தியாகவும் அழகாகவும் கட்டினார். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு "இதைவிட அழகான கட்டடத்தை நாங்கள் கண்டதேயில்லை. இதோ இந்த (மூலையில் வைக்கப்படாமலிருக்கும்) செங்கலைத் தவிர" என்று கூறினர். நான்தான் அந்தச் செங்கலாக இருக்கிறேன். அறிவிப்பாளர்:   அபூஹுரைரா(ரலி) ஸஹீஹ் முஸ்லிம் : 4592. 

கூட்டவோ குறைக்கவோ தேவையில்லாத விதத்தில் அல்லாஹ் அவனது மார்க்கத்தை முழுமைப்படுத்தி உள்ளான்.  எனவே இந்த மார்க்கத்தில் எதையும் கூட்டுவதற்கோ, குறைப்பதற்கோ யாருக்கும் அனுமதி இல்லை. அப்படி யாராவது செய்வாரேயானால் அவர் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவராக மாறுவார். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். 
அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) ஸஹீஹ் புகாரி : 2697. 

கொள்கை, வணக்கங்கள், சட்டதிட்டங்கள், ஒழுக்கம் என அனைத்தையும் முழுமைப்படுத்தி எல்லா காலத்திற்கும், இடத்திற்கும் தோதுவானதாக அல்லாஹ் அவனது மார்க்கத்தை ஆக்கியுள்ளான். அல்லாஹுவால் முழுமையாகப்பட்ட மார்க்கத்தில் புதிய ஒன்றை புகுத்துபவன் அல்லாஹ்வின் வசனத்தை பொய்யாக்குபவன் ஆவான். மேலும் பித்அத் தொடர்பாக விரிவாக பேச உள்ளோம். அதனை குறித்து பின்னர் விளக்கமாக பார்க்கலாம்.                                                


அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவது: 

வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் அல்லாஹ்விற்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட வேண்டும். மார்க்கத்தின் அடிப்படைகள் அனைத்தையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான நபிமொழியிலும் சொல்லப்பட்ட செய்திக்கு கியாஸ், விருப்பம், உதிப்பு, கனவு மற்றும் அறிஞர்களின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு முரண்படுவது கூடாது. 

உள்ளமும், உடலும் கட்டுப்பட்ட நிலையில் தான் ஒருவர் மார்க்கத்தை பின்பற்ற முடியும். அதன் தாக்கம் அவருடைய நடத்தையிலும், செயல்களிலும் பிரதிபலிக்கும். ஒரு முஸ்லிம் தனக்கும், தன்னுடைய ரப்பிற்குமான  தொடர்பை அவனுக்கு முழுவதுமாக கட்டுப்படுவதன் மூலம் தான் வலுப்படுத்த முடியும். முதலில் உள்ளம் கட்டுப்படவேண்டும். அதன் அடையாளங்கள் நாவிலும், உடல் உறுப்புகளிலும் வெளிப்படவேண்டும். கடமையாக்கப்பட்ட வழிபாடுகளை நிறைவேற்றுவது, நற்பண்புகளை கடைப்பிடிப்பது போன்ற அனைத்து நற்செயல்களும் கீழ்ப்படிதலின் அடையாளமாகும். இன்னும் சொல்லப்போனால் இஸ்லாம் என்பதே கீழ்ப்படிதல்தான். கட்டுப்படுவது, நேசம் பாராட்டுவது, அடிபணிவது ஆகியவற்றில் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் தான் இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது. 

அல்லாஹ் கூறுகிறான்: 

 وَاَنِيْبُوْۤا اِلٰى رَبِّكُمْ وَاَسْلِمُوْا لَهٗ مِنْ قَبْلِ اَنْ يَّاْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُوْنَ 

ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் : 39:54) 

                                                

கியாஸ் விளக்கம்: 

கியாஸ் என்றால் ஒப்பீடு செய்வது என்று பொருள். 

மார்க்கத்தின் சில சட்டங்கள் ஒப்பீட்டு ஆய்வின் மூலம் தீர்மானிக்கப்படும். இதுபோன்று எடுக்கப்படும் சட்டங்களுக்கு கியாஸின் மூலம் பெறப்பட்டது என்று கூறுவோம். 

நடைமுறை சார்ந்த சட்டங்கள் விஷயத்தில் ஆய்வு மேற்கொள்கின்ற அறிஞர்கள் கியாஸை பயன்படுத்தி மார்க்க சட்டங்களை நிர்ணயித்துள்ளார்கள். அதேவேளையில் கொள்கை மற்றும் வணக்கங்கள் சார்ந்த விஷயங்களை பொருத்தவரையில் இதில் ஆய்விற்கு இடமில்லை. இவை அனைத்தும் அல்லாஹ்வும், அவனது தூதரும் வரையறுத்துத் தந்த விஷயங்கள் ஆகும். இன்னும் அவற்றில் பெரும்பான்மையான விஷயங்கள் மறைவானவையாகும். மறைவானவற்றை பார்க்கப்படுகின்றவற்றுடன் ஒப்பிடுவது பொருத்தமற்ற செயலாகும். எனவே இதில் கியாஸிற்கு இடமில்லை. 

நம்பிக்கை கொள்கை, இபாதத்துக்கள் போன்றவற்றில் ஒப்பீட்டு ஆய்விற்கு இடமில்லை. அவைகளை அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறியதைப் போன்று நம்பிக்கை கொள்ள வேண்டும். இதனைத் தான் அல்லாஹ் முஃமின்களின் பண்பாக சொல்லிக்காட்டுகிறான்.          

 ذٰ لِكَ الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ 

 الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۙ 

 وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَ 

 اُولٰٓٮِٕكَ عَلٰى هُدًى مِّنْ رَّبِّهِمْ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ 

இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். 

(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். 

(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். 

இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் : 2: 2-5) 

                 

விருப்பம்,ஆசை (ذوق) :

மனோ இச்சையை  பின்பற்ற கூடியவர்களும், பித்அத்துக்களை செய்பவர்களும் அவர்களின் மனம் எதை விரும்புகிறதோ அதன்பால் சாய்வார்கள். அவர்கள் விரும்பும் அனைத்தும் உண்மை என்றும், அதுதான் மார்க்கமென்றும் வாதிடுவார்கள். இத்தகைய வாதம் உண்மைக்குப் புறம்பானதாகும். ஏனெனில் நபி(ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. மேலும் மார்க்கத்தை பொறுத்தவரையில் முழுவதுமாக அல்லாஹ்விற்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவதிலும் அவ்விருவருடைய வார்த்தைகளுக்கு செவி சாய்ப்பதிலும் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே யாருடைய விருப்பத்திற்காகவும் மார்க்கத்தில் புதியவற்றை உருவாக்கிக் கொள்ள அனுமதியில்லை. மார்க்க விஷயங்கள் அனைத்தும் ஆதாரங்களின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது. 

அல்லாஹ் கூறுகிறான்: 

 وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ  وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا 

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் : 33:36) 

அல்லாஹ்வின் கட்டளைக்கோ, அவனது தூதருடைய கட்டளைக்கோ புறம்பாக எதையும் உருவாக்கிக்கொள்ள யாருக்கும் மார்க்கத்தில் அனுமதியில்லை. 

                                                

உதிப்பு (كشف) :

நல்லடியார்களில் சிலருக்கு சிலருக்கு உதிப்பின் மூலம் மறைவான விஷயங்கள் வெளிப்படுகின்றன. இதன் மூலம் ஹலாலாக உள்ளதை ஹராமாகவும், ஹராமானதை ஹலாலாகவும் மாற்றும் அதிகாரம் அவர்களுக்கு இருப்பதாக சில வழிகெட்ட பித்வாதிகளும் மனோ இச்சையைப் பின்பற்றுவோரும் வாதிடுவார்கள். இத்தகைய வாதம் ஷைத்தானின் சூழ்ச்சியின் மூலம் உருவானதாகும். உதிப்பின் மூலம் ஏற்படும் விஷயங்கள் குர்ஆனுடனும், ஸுன்னாவுடனும் ஒத்துப் பார்க்கவேண்டும். குர்ஆன் ஸுன்னாவிற்கு ஒத்துப்போனால் அதனை நாம் ஏற்றுக் கொள்வோம். அதற்கு முரண்படும் போது அதனை பொருட்படுத்தக் கூடாது. மறைவான விஷயங்களை அல்லாஹ் தனது தூதர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கே தவிர வேறு யாருக்கும் வழங்க மாட்டான்.                                                 

 عٰلِمُ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلٰى غَيْبِهٖۤ اَحَدًا 

 اِلَّا مَنِ ارْتَضٰى مِنْ رَّسُوْلٍ فَاِنَّهٗ يَسْلُكُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖ رَصَدًا 

அவன் தான், மறைவானாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான். 

தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான். (அல்குர்ஆன் : 72: 26-27) 

அல்லாஹ்வுடைய, அவனது தூதருடைய கூற்றைவிட அறிஞர்களின் கூற்றுக்கு முக்கியத்துவம் வழங்கி அதன் அடிப்படையில் மார்க்கத்தை தீர்மானிக்கக் கூடாது. மாறாக குர்ஆனும், ஸுன்னாவும் சொல்லக்கூடிய சட்டங்களின் அடிப்படையில் தான் மார்க்கத்தை நிர்ணயிக்க வேண்டும். 

                                                

கனவு (منام) :

பித்அத்வாதிகள் தங்களுடைய பித்அத்களுக்கு கனவுகளை ஆதாரமாக காட்டுவார்கள். சிலர் மஹான் எங்கள் கனவில் தோன்றி கப்ரின் மீது கட்டிடத்தை எழுப்ப சொன்னார், விளக்கேற்றச் சொன்னார் என்று கூறி அனாச்சாரங்களை உருவாக்குவார்கள். சிலர் இது போன்ற பொய்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டுவார்கள். இத்தகைய பொய்யின் மூலம் அமல்களை உருவாக்கிக்கொள்ள மார்க்கத்தில் எவ்வித அனுமதியுமில்லை. 

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

கனவின் மூலம் மார்க்கச் சட்டத்தை உறுதிப்படுத்த முடியாது. தூக்கத்தின்போது கனவு காண்பவர் அதனை உறுதியாக சரியான ஒழுங்கமைப்பில் காண்பதில்லை. ஒருவரது சாட்சியம் ஏற்கப்பட வேண்டுமெனில் அவர் விழிப்புணர்வுள்ளவராகவும், அபார மறதிக்குட்படாதவராகவும், நினைவாற்றலில் குறையில்லாதவராகவும், மிகப் பெரிய தவறுகளுக்கு அப்பாற்பட்டவராகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவரின் சாட்சியமே ஏற்றுக்கொள்ளப்படும். இதில் அறிஞர்கள் ஏகோபித்துள்ளார்கள். தூக்கத்தில் இருப்பவன் மேற்கூறப்பட்ட நிலையில் இருப்பதில்லை. அவனது நினைவாற்றலில் குறையுள்ளது. எனவே அவனது சாட்சியம் ஏற்றுக் கொள்ள முடியாது. (நூல்: ஷரஹ் முஸ்லிம் 1/115) 


கனவை குறித்து நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்:

தூதுத்துவமும், நபித்துவமும் முற்றுப் பெற்றுவிட்டன. எனவே எனக்குப்பின் எந்த நபியும் இல்லை, எந்த ரஸூலும் இல்லை என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். இது மக்களுக்கு கவலையளிப்பதாக இருந்தது. அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எனினும் நற்செய்தி கூறுபவை உண்டு என்றார்கள். நற்செய்தி கூறுபவை என்றால் என்ன என்று நபித்தோழர்கள் கேட்ட போது முஸ்லிம் காணுகின்ற கனவாகும் என்று விளக்கினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக்(ரலி) நூல்: முஸ்னது அஹ்மது -13824.                                                

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (அச்சுறுத்தும்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவனவாகும். உங்களில் எவரேனும் அச்சுறுத்தும் தீய கனவைக் கண்டால் அவர் தன் இடப் பக்கத்தில் எச்சில் துப்பட்டும்; அல்லாஹ்விடம் அக்கனவின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோராட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அது அவருக்குத் தீங்கு செய்ய முடியாது. அறிவிப்பாளர்: கதாதா(ரலி) ஸஹீஹ் புகாரி : 3292.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நிச்சயமாக கனவு என்பது மூன்று வகைப்படும். ஒன்று ஷைத்தானின் புறத்திலிருந்து வருகின்ற அச்சுறுத்தல்.   அதன்மூலம் அவன் மனிதனை கவலை கொள்ளச் செய்கிறான். இரண்டாவது விழித்திருக்கும் போது மனிதன் ஆசைப்படுவதை அவன் கனவில் காண்பான். மூன்றாவது நுபுவத்தின் நாற்பத்தி ஆறு பங்கின் ஒரு பங்காகும். அறிவிப்பாளர்: அவுப்ஃ இப்னு மாலிக்(ரலி) நூல்: சுனனு இப்னு மாஜா - 3907.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: ஸஹீஹ் புகாரி : 6983.                                                 

மார்க்கத்தின் அடிப்படைகள் அனைத்தையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) தெளிவுபடுத்தியுள்ளார்கள். ஒருவரின் உதிப்புகளுக்கோ, கனவுகளுக்கோ முக்கியத்துவம் அளித்து அதனடிப்படையில் மார்க்கத்தில் அமல்களை புதிதாக ஏற்படுத்துவதோ அல்லது மாற்றுவதோ கூடாது. 


அறிவா? ஆதாரமா? :

சீரான அறிவு சரியான ஆதாரத்திற்கு ஒத்துப் போக வேண்டும். குர்ஆனிலும், ஸுன்னாவிலும் கூறப்பட்டவைகளுக்கு அது முரண்படக்கூடாது. முரண்பாடு இருப்பதாக தோன்றும்போது அறிவை விட ஆதாரத்தை முற்படுத்த வேண்டும். 

குர்ஆன் மற்றும் ஸுன்னாவை புரிந்துகொள்ளும் விஷயத்தில் ஆதாரத்தை முற்படுத்தி அறிவை பிற்படுத்த வேண்டும். 

மனித அறிவு வரையறைக்குட்பட்டதாகும் அறிவு சரிகாணும் அனைத்தும் உண்மையாகவோ, நன்மையாகவோ இருப்பதில்லை. அறிவு சிலபோது மனோ இச்சையின்அடிப்படையிலும், சிலபோது கற்பித்ததின் அடிப்படையிலும், யூகங்களின் அடிப்படையிலும் பலவற்றையும் சரி காணும். மனித அறிவு குறைபாடுள்ளதாக இருக்கிறது.                                                 

 وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا 

இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை எனக் கூறுவீராக. (அல்குர்ஆன் : 17:85)

மனிதனுக்கு வழிகாட்டுவதற்கு அவனது அறிவு மட்டுமே போதுமானதாக இல்லை. அப்படியிருந்திருந்தால் அல்லாஹு தஆலா தூதர்களையும், வேதங்களையும் அனுப்பி வைத்திருக்கமாட்டான். மாறாக மனிதனுக்கு வழங்கப்பட்ட அறிவின் மூலம் அவன் ஆதாரத்தை பின்பற்ற வேண்டும், அதன் மூலம் தான் அவன் நேர்வழி அடைய முடியும்.                                                 

 அல்லாஹ் கூறுகிறான்: 

 فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى ۙ فَمَنِ اتَّبَعَ هُدَاىَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقٰى 

அப்பொழுது நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார். (அல்குர்ஆன் : 20:123)

அறிவும், ஆதாரமும் முரண்படும் போது அறிவை பிற்படுத்தி ஆதாரத்தை முற்படுத்த வேண்டும். ஏனெனில் அறிவு ஆதாரத்தை உண்மைப்படுத்தும்; ஆதாரம் ஒரு போதும் அறிவை உண்மைப்படுத்தாது இதன் விளக்கத்தை அலீ (ரலி) அவர்களின் கூற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம்.                                              

 அலீ(ரலி) அவர்கள் கூறினார்கள்: 

அறிவை மட்டும் அடிப்படையாக கொண்டதாக மார்க்கம் இருந்திருந்தால் (மஸஹ் செய்யும் போது) காலுறையின் அடிப்பகுதி தடவுவது, மேல் பகுதியில் தடவுவதை விட ஏற்றமானதாக இருந்திருக்கும் நபி(ஸல்) அவர்கள் காலுறையின் மேற்பகுதியை தடவுவதை நான் பார்த்திருக்கிறேன். நூல்: சுனனு அபிதாவூது -162

கண்களால் காட்சிகளை பார்ப்பதற்கு வெளிச்சம் எவ்வாறு அவசியமோ, அதேபோன்று அறிவிற்கு ஆதாரம் அவசியமாகும். அறிவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவது தான் அதிகமான மக்கள் வழிகேட்டிற்கு செல்ல காரணம். முஃமின்களைப் பொறுத்த வரை ஆதாரங்களை நம்பி ஏற்றுக் கொள்வார்கள். எனவே தான் நாம் அறிவிற்குப் புலப்படாத மறைவானவற்றை நம்பிக்கை கொண்டுள்ளோம். அத்தகைய நம்பிக்கையை அல்லாஹு தஆலா முத்தக்கீன்களின் பண்பாக கூறுகிறான்.                                                 

 ذٰ لِكَ الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ 

 الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۙ 

 وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَ 

 اُولٰٓٮِٕكَ عَلٰى هُدًى مِّنْ رَّبِّهِمْ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ 

இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். 

(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் : 2: 2-5)                                                 

அல்லாஹ்வின் மார்க்கத்தில் அறிவிற்கு வேலையில்லை என்பதல்ல இதன் பொருள். மாறாக அறிவை விட ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதாகும். ஏனெனில் குர்ஆனிலும் ஸுன்னாவிலும் சொல்லப்பட்டுள்ள சில விஷயங்கள் நமது சிற்றறிவால் புரிந்து கொள்ள முடியாமல் போகும். அது போன்ற சந்தர்ப்பங்களில் ஈமானின் அடையாளமாக, அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியவற்றை நம்பிக்கையுடன் செயல்படுத்துவோம்‌. இதற்கு உதாரணமாக உளு செய்வதை எடுத்துக் கொள்வோம். 

உளு செய்த ஒருவருக்கு காற்று பிரிந்து விட்டால் அவரது உளு முறிந்து விடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அப்போது அவர் மீண்டும் உளு செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது காற்றுப் பிரிந்த இடத்தை அவர் சுத்தம் செய்வதுமில்லை, கழுவுவதுமில்லை. மாறாக ஏற்கனவே கழுவிய இடங்களைத்தான் கழுவுகிறார். இச்செயல் அறிவுக்கு பொருந்துமா என்று கேட்டால், இல்லை என்றுதான் கூறுவோம். ஆனாலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்யவேண்டுமென்று கட்டளையிட்டுள்ளதால் அதனையே நாமும் செய்கிறோம். 

இவ்வாறே குளிப்புக் கடமையான ஒருவர் குளிப்பதற்கு தண்ணீர் இல்லாதபோது தயமம் செய்துகொள்ள வேண்டும் என்று மார்க்கம் சொல்கிறது. தயமம் என்பது கைகளை மண்ணில் அடித்து கையில் படிந்துள்ள தூசியால் முகத்தையும் முன் கையையும் தடவிக் கொள்வதாகும். அசுத்தமான ஒருவர் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள தண்ணீரைப் பயன்படுத்துவது அறிவிற்கு பொருந்துகிறது. மண்ணைக் கொண்டு தடவுவது அறிவிற்கு பொருந்தாத செயலாகும். இன்னும் சொல்லப் போனால் தயமம் செய்வதைப் பொருத்தவரை அசுத்தம் ஏற்பட்ட இடத்தில் தடவுவதுமில்லை. ஆனாலும் இதைத்தான் நபி(ஸல்) காட்டித்தந்த வழிமுறை என்று கடைப்பிடிக்கிறோம். 

இதற்குத்தான் ஆதாரத்தை முற்படுத்தி அறிவைப் பிற்படுத்துவது என்று கூறுகிறோம். இதில் அடங்கியுள்ள ரகசியத்தை நாம் அறியமாட்டோம். மறைவான விஷயங்களை பொறுத்தவரையில் இது போன்ற ஏராளமான உதாரணங்கள் உள்ளன. அவைகள் நமது அறிவுக்கு புலப்படாதவைகள் தாம். அவற்றை அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியுள்ளார்கள் என்பதால் நாம் அதனை ஈமான் கொள்கிறோம். 



தவிர்க்க வேண்டியவை :                                              

அகீதா விஷயத்தில் அனைத்து விதமான பித்அத்தான வார்த்தைகளை தவிர்ந்து கொண்டு மார்க்கம் அனுமதித்த வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.                                                 

நம்பிக்கை, வழிபாடுகள் சார்ந்த அனைத்து, விஷயங்களுக்கும் குர்ஆன், ஸுன்னாவில் சொல்லப்பட்ட பெயர்களையே பயன்படுத்த வேண்டும்.

இமாம் இப்னு தைமியா(ரஹ்) கூறினார்கள்: 

குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ள வார்த்தைகளுக்கு விளக்கம் அறியப்பட்டால், நபி(ஸல்) அவர்கள் அதற்கு என்ன பொருள் நாடினார்கள் என்பதையும் அறிய முடிந்தால் மொழியியல் வல்லுநர்கள் அதற்கு என்ன பொருளை நாடுகிறார்கள் என்பதை கவனிக்கத் தேவையில்லை. நூல் : கிதாபுல் ஈமான் - 271,272

உதாரணமாக அல்லாஹ்வை கடவுள், இறைவன் என்றோ சக்தி அல்லது இயற்கை என்றோ அழைப்பது கூடாது. அவன் தனக்கு சூட்டிக் கொண்ட பெயர்கள் மற்றும் பண்புகள் அல்லாதவற்றின் மூலம் அவனை அழைப்பதும் கூடாது. அவ்வாறே மலாயிக்காவை குறிப்பதற்கு அமரர்கள், தேவதைகள் என்றோ சொல்வதும் தவறாகும்.                                                 

அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் மற்றும் செயல்களை உறுதி செய்வதிலும், மறுப்பதிலும் ஸலஃபுகள் குர்ஆன் மற்றும் ஹதீஸின் வார்த்தைகளை கவனிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்வின் பெயர்களையும், பண்புகளையும் உறுதி செய்வதிலும், மறுப்பதிலும் புதிய பித்அத்தான வார்த்தைகளை கொண்டு வர மாட்டார்கள். நூல்: மஜ்முஉல் ஃபத்வா - 5/432

இன்னும் தொழுகை, ஜகாத், நோன்பு மற்றும் ஹஜ் போன்ற கடமைகளை அதற்கு பொருத்தமில்லாத வார்த்தைகளால் வர்ணிக்கக் கூடாது. உதாரணத்திற்கு ஜகாத்தை ஏழை வரி என்று கூறக்கூடாது.                          

                       

தவறிழைக்காத தூதர் :

அல்லாஹ் கட்டளையிட்டவற்றை மனிதர்களுக்கு எடுத்துரைப்பதில் நபி(ஸல்) அவர்கள் எந்தத் தவறும் இழைக்கவில்லை, தவறுகளை விட்டு அல்லாஹ், நபி(ஸல்) அவர்களை பாதுகாத்துள்ளான் என்று பரிபூரணமாக நம்ப வேண்டும். அவ்வாறே நபியின் சமுதாயம் ஒட்டு மொத்தமாக வழிகேட்டிற்கு செல்வதை விட்டும் பாதுகாக்கப்பட்டுள்ளது. தனி நபர்களை பொறுத்தவரை அவர்களுக்கு எவ்வித பாதுகாப்புமில்லை. நபி(ஸல்) அவர்களைத் தவிர மற்றவரின் கூற்றுகள் ஏற்கவும், நிராகரிக்கவும்படும்.

அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்பட்ட மார்க்கத்தை மனிதர்களுக்கு எடுத்துரைப்பதில் நபி (ஸல்) தவறிழைக்கவில்லை, அவர்களிடம் தவறுகள் நிகழ்வதை விட்டு அல்லாஹ் அவரை பாதுகாத்துள்ளான்.                                                 

 اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ 

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (அல்குர்ஆன் : 15:9)                                                 

 لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖ 

 اِنَّ عَلَيْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗ  

 فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗ‌ 

(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர். 

நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன. 

எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 75:16-18)                                                 

 وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰى 

 اِنْ هُوَ اِلَّا وَحْىٌ يُّوْحٰىۙ 

அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் : 53:4)

ஆகிய வசனங்கள் அனைத்தும் வஹியை மக்களிடம் கொண்டு செல்வதில் நபி(ஸல்) அவர்களிடம் தவறுகள் நிகழாது என்பதற்கான சான்றாக உள்ளன. அல்லாஹ்விடமிருந்து நபி(ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதாக அல்லாஹ்வே உறுதியளிக்கிறான். இன்று சில வழிகேடர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்று நம்பினால், சூனியத்தின் பாதிப்பில் இருந்த காலத்தில் அருளப்பட்ட தவறு இழைத்திருப்பார் என்று வாதிட்டு சூனியத்தை மறுப்பதற்கு முயல்கிறார்கள். உண்மையில் இவர்கள் இதன் மூலம் மேற்சொன்ன வசனங்கள் அனைத்தையும் மருத்துதான் இத்தகைய வழிகெட்ட கருத்தை நிலைநாட்டுகிறார்கள். அல்லாஹ் இந்த மார்க்கத்தை பாதுகாப்பதற்கு பொறுப்பேற்ற பின்னர், சூனியமல்ல அதைவிட பெரிய பாதிப்பு நிகழ்ந்தாலும் அல்லாஹ்வின் மார்க்கத்திலோ, அவனது வஹியிலோ எவ்வித தவறும் நிகழாது என்றுதான் ஒரு முஃமின் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அதே போன்று நபி(ஸல்) அவர்களின் சமுதாயமும் ஒட்டுமொத்தமாக வழிகேட்டிற்கு செல்லமாட்டார்கள். வழிகேட்டில் ஒன்றுபடுவதை விட்டும் இந்த சமுதாயம் பாதுகாக்கப்பட்டுள்ளது.                                                 

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

என் சமுதாயத்தாரில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்கு ஆதரவாகப் போராடிக் கொண்டேயிருப்பார்கள். மறுமை நாள்வரை அவர்கள் (சத்தியத்தில்) மேலோங்கியே நிற்பார்கள். பிறகு மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கிவருவார்கள். அப்போது முஸ்லிம்களின் தலைவர், "வாருங்கள், வந்து எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்துங்கள்!" என்று (ஈசாவிடம்) கூறுவார். அதற்கு ஈசா (அலை) அவர்கள், "இல்லை (உங்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுவிக்கமாட்டேன்). உங்களில் சிலர்தாம் மற்றச் சிலருக்குத் தலைவராக இருப்பார்; இது, அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்கு அளித்துள்ள மரியாதையாகும்" என்று கூறிவிடுவார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்: முஸ்லிம் : 247.                                                 

தனி மனிதனை பொறுத்தவரை அவன் தவறுகளுக்கு அப்பாற்பட்டவனாக இருக்கமாட்டான். எனவே அவனது விஷயத்தில் இத்தகைய பாதுகாப்பு தன்மையை உறுதி செய்ய முடியாது.                                                 

இமாம் ஷாஃபி(ரஹ்) கூறினார்கள்: 

எனது கருத்து சரியானது; பிழையாவதற்கு வாய்ப்புள்ளது. மற்றவர்களின் கருத்து பிழையானது; சரியாவதற்கும் வாய்ப்புள்ளது.


கருத்து வேறுபாடுகளைக் களைவது எப்படி? :

மார்க்க விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் வரும் போது குர்ஆன் மற்றும் ஸுன்னாவை அடிப்படையாகக் கொண்டு தீர்வு காண வேண்டும். இஜ்திஹாத் (மார்க்க ஆய்வு) செய்பவர்கள் தவறிழைத்திருந்தால் அவர்களை விமர்சிக்காமல் அவர்களுக்காக துஆ செய்ய வேண்டும்.

முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்ட சமுதாயமாக ஓர் அணியில் வாழ வேண்டியவர்கள். முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் பிரிவினையையும், முரண்பாடுகளையும் தோற்றுவித்து அதன் மூலம் பரஸ்பரம் வெறுப்பு கொள்வதையும், சண்டையிட்டு கொள்வதையும் மார்க்கம் அனுமதிக்கவில்லை.                                                 

 அல்லாஹ் கூறுகிறான்: 

 وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌ وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا  وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ‌ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ 

 وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ 

 وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ تَفَرَّقُوْا وَاخْتَلَفُوْا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْبَيِّنٰتُ‌ وَاُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ عَظِيْمٌۙ 

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். 

மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை)  ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். 

(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. (அல்குர்ஆன் : 3:103 - 105)

அதே வேளையில் ஆய்வு ரீதியான (இஜ்திஹாதிற்கு இடமளிக்கக் கூடிய) விஷயத்தில் இருவேறு கருத்துக்கள் நிலவுவது என்பது தவிர்க்க முடியாது. அத்தகைய கருத்து வேறுபாடின் போது சமுதாயம் குர்ஆனின் பாலும் நபி(ஸல்) அவர்களின் ஸுன்னாவின் பாலும் மீள வேண்டும்.                                                 

 அல்லாஹ் கூறுகிறான்: 

 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ‌  ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا 

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன் : 4:59)

மார்க்க சட்டங்களை ஆய்வு செய்யும் அறிஞர்களின் கருத்துக்கள் முரண்படும் போது சரியான கருத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பிழையான கருத்தை கூறிய அறிஞர்களை விமர்சிக்கக்கூடாது. மாறாக அவருக்கு தெளிவு கிடைப்பதற்காகவும், அவரது பிழையை அல்லாஹ் மன்னிப்பதற்காகவும் துஆ செய்ய வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: 

 وَالَّذِيْنَ جَآءُوْ مِنْ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ 

அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். (அல்குர்ஆன் : 59:10)                                            

அவ்வறிஞர்கள் மார்க்கத்தை மக்களுக்கு விளக்க வேண்டுமென்ற நன்னோக்கில் ஆய்வுகளை மேற்கொண்டவர்கள். எனவே இரு தரப்பினரும் அல்லாஹ்விடம் நன்மைக்குரியவர்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு. அறிவிப்பாளர்: அம்ர் இப்னு அல்ஆஸ்(ரலி) ஸஹீஹ் புகாரி : 7352.

இதே ஹதீஸ் அபூஹீரைரா(ரலி) அவர்கள் வாயிலாகவும், அபூஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இத்தகைய போக்கைத்தான் நபித்தோழர்கள் தங்களுக்கு மத்தியில் கடைப்பிடித்தார்கள். 

 உமர்(ரலி) அவர்கள் சில மார்க்க விஷயம் தொடர்பாக தவறாக கருத்து கூறியதாக செவியேற்ற அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களை விமர்சிக்கும் போது அல்லாஹ் உமருக்கு கருணை புரியட்டும் என்று தான் கூறுவார்கள். அவர்கள் தங்களுக்கு மத்தியில் யாரையும் தரக்குறைவாக விமர்சித்ததை நாம் பார்க்க முடியாது.


கனவு ஒரு விளக்கம்:

நல்ல கனவு என்பது உண்மை தான் அது நுபுவத்தின் 40 -ல் ஒரு பங்காகும். நல்ல உள்ளுணர்வையும் மார்க்கம் அங்கீகரித்துள்ளது. ஆனால் இவ்விரண்டும் ஷரீஅத்திற்கு ஒத்துபோகும் போதுதான் அதனை ஏற்க வேண்டும். ஆனாலும் இவை அகீதாவிற்கான மூலாதாரமாகவோ, ஷரீஅத்திற்கான மூலாதாரமாகவோ எடுத்துக் கொள்ள முடியாது.

கனவைப் பொறுத்தவரை அதில் இரண்டுவகை உள்ளது. ஒன்று நல்ல கனவு, இன்னொன்று கெட்ட கனவு.                                                 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

 'நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் ஒருவர் தாம் விரும்புகிற கனவொன்றைக் கண்டால் தம் நேசத்துக் குரியவரைத் தவிர வேறெவரிடமும் அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டாம். மேலும், அவர் தாம் விரும்பாததைக் கண்டால் அந்த கனவின் தீமையிலிருந்தும் ஷைத்தானின் தீங்கிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி (தம் இடப் பக்கத்தில்) மூன்று முறை துப்பட்டும். அந்தக் கனவைப் பற்றி எவரிடமும் தெரிவிக்க வேண்டாம். (அவ்வாறு செய்தால்) அது அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஒருபோதும் ஏற்படுத்திட முடியாது' என்று கூறியதைக் கேட்டேன். அறிவிப்பாளர்: அபூ கத்தாதா(ரலி), ஸஹீஹ் புகாரி : 7044.

கனவில் காண்பதையும், உதிப்பில் தோன்றுவதையும் குர்ஆன், ஸுன்னாவுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அவ்விரண்டிற்கும் ஒத்துப்போனால், அதனை ஏற்றுக் கொள்வோம். அதற்கு முரண்படும் போது ஏற்கமாட்டோம். இந்த அளவுகோலின் அடிப்படையில் தான் கனவையும், உள் உதிப்பையும் நல்லதா? கெட்டதா? அல்லது ஏற்றுக் கொள்வதா? வேண்டாமா? என்று தீர்மானிக்க வேண்டும்.

கனவு தொடர்பாக மேலே விளக்கம் கூறப்பட்டுள்ளது.


தர்க்கம் செய்யாதீர் :                                                

மார்க்கத்தில் தர்க்கம் புரிவது வெறுக்கத்தக்கது. சத்தியத்தை தெரிந்து கொள்ள நல்ல விதத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்வதை மார்க்கம் அனுமதித்துள்ளது. அதே வேளையில் எந்த விஷயத்தில் தர்க்கம் புரிவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளதோ அதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மனிதனின் பலவீனங்களில் ஒன்று தான் தர்க்கம் புரிவது. தெளிவான ஆதாரங்கள் இருந்தாலும் அதில் தர்க்கம் புரிவது தான் மனித இயல்பு என்பதாக அல்லாஹ் கூறுகிறான். 

 وَلَقَدْ صَرَّفْنَا فِىْ هٰذَا الْقُرْاٰنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ‌  وَكَانَ الْاِنْسَانُ اَكْثَرَ شَىْءٍ جَدَلًا 

இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் : 18:54)                                                 

தர்க்கம் புரிவதை பொறுத்தவரையில் அதில் இரண்டு வகைகள் உள்ளன:

ஒன்று சத்தியத்தை நிராகரிப்பதற்காக புரியும் தர்க்கம், 

இரண்டாவது வழிகேட்டில் இருக்கும் மக்களை நேர்வழியின் பக்கம் கொண்டுவருவதற்காக புரியும் தர்க்கம். 


சத்தியத்தை நிராகரிப்பதற்காக தர்க்கம் புரிவது என்பது தான் நிராகரிப்பாளர்கள் செய்த தர்க்கம் அதன் மூலம் நேர்வழியில் செல்லும் மக்களை வழிகேட்டிற்கு அழைத்து செல்ல விரும்புகிறார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: 

 وَمِنَ النَّاسِ مَنْ يُّجَادِلُ فِى اللّٰهِ بِغَيْرِ عِلْمٍ وَّلَا هُدًى وَلَا كِتٰبٍ مُّنِيْرٍ 

 ثَانِىَ عِطْفِهٖ لِيُضِلَّ عَنْ سَبِيْلِ اللّٰهِ ‌ لَهٗ فِى الدُّنْيَا خِزْىٌ‌ وَّنُذِيْقُهٗ يَوْمَ الْقِيٰمَةِ عَذَابَ الْحَرِيْقِ 

இன்னும்: கல்வி ஞானமோ, நேர் வழி காட்டியோ, பிரகாசமான வேத (ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான். 

(அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது; கியாம நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்க செய்வோம். (அல்குர்ஆன் : 22:8,9)                                                

சத்தியத்தை மறுத்து மக்களை வழிகேட்டிற்கு அழைத்து செல்வதற்காக புரியும் தர்க்கம் ஷைத்தானால் செய்யப்படும் தர்க்கமாகும்.                                                

 وَاِنَّ الشَّيٰطِيْنَ لَيُوْحُوْنَ اِلٰٓى اَوْلِيٰٓـٮِٕـهِمْ لِيُجَادِلُوْكُمْ‌  وَاِنْ اَطَعْتُمُوْهُمْ اِنَّكُمْ لَمُشْرِكُوْنَ 

நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள். (அல்குர்ஆன் : 6:121)

 وَجَادَلُوْا بِالْبَاطِلِ لِيُدْحِضُوْا بِهِ الْحَقَّ 

அவர்கள் உண்மையை அழித்து விடுவதற்காகப் பொய்யைக் கொண்டும் தர்க்கம் செய்கிறார்கள். (அல்குர்ஆன் : 40:5)                                                 

நேர்வழியில் இருந்த சமூகம் தர்க்கம் புரிந்ததினால்தான் வழிகேட்டிற்கு சென்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நேர்வழியில் இருந்த சமூகம் வழிதவறியதற்கு காரணம் தர்க்கம் புரியும் கலையை அவர்கள் கற்றுக்கொண்டார்கள் என்பதுதான் என்று கூறி பின்வரும் குர்ஆனின் வசனத்தை ஓதினார்கள். 

 مَا ضَرَبُوْهُ لَكَ اِلَّا جَدَلًا  بَلْ هُمْ قَوْمٌ خَصِمُوْنَ 

வீண் தர்க்கத்திற்காகவே உம்மிடம் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்; ஆகவே அவர்கள் விதண்டா வாதம் செய்யும் சமூகத்தாரேயாவர். (அல்குர்ஆன் : 43:58)  அறிவிப்பாளர்: அபூஉமாமா அல் பாஹிலி (ரலி) நூல்: சுனனுத் திர்மிதி - 3253

இவ்வாறாக தர்க்கம் புரிபவர்கள் தான் அல்லாஹ்வின் வெறுப்பிற்குரியவர்கள் என்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான். அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: ஸஹீஹுல் புஹாரி - 2457                                                 


வழிகேட்டில் இருக்கும் மக்களை நேர்வழியின் பக்கம் கொண்டு வருவதற்காக புரியும் தர்க்கம்: 

வழிகேட்டில் இருக்கும் மக்களை நேர்வழியை நோக்கி அழைப்பதற்காக அழகிய முறையில் தர்க்கம் புரிவதை மார்க்கம் அனுமதித்துள்ளது. இத்தகைய விவாதத்தைத்தான் அல்லாஹ் அவனது வேதத்தில் கட்டளையிடுகிறான்.                                                 

 اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ‌ وَجَادِلْهُمْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ‌ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ‌ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ 

 (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (அல்குர்ஆன் : 16:125)

இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

யாரிடம் தர்க்கம் புரியவேண்டுமோ அவர்களிடத்தில் அழகிய முறையில், மென்மையாக, நளினமாக, நல்லவிதமாக உரையாட வேண்டுமென்று அல்லாஹ் கூறுகிறான் இதனையே வேறு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்: 

 وَلَا تُجَادِلُوْٓا اَهْلَ الْكِتٰبِ اِلَّا بِالَّتِىْ هِىَ اَحْسَنُ  اِلَّا الَّذِيْنَ ظَلَمُوْا مِنْهُمْ‌ وَقُوْلُوْٓا اٰمَنَّا بِالَّذِىْۤ اُنْزِلَ اِلَيْنَا   وَاُنْزِلَ اِلَيْكُمْ وَاِلٰهُـنَا وَاِلٰهُكُمْ وَاحِدٌ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ 

இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; “எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்” என்று கூறுவீர்களாக. (அல்குர்ஆன் : 29:46)

ஃபிர்அவ்னிடம் மூஸா(அலை) அவர்களையும் ஹாரூன்(அலை) அவர்களையும் அனுப்பி வைத்து அல்லாஹ் கூறுகிறான்: 

 اِذْهَبَاۤ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى‌ 

 فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى 

நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான். 

நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம். (அல்குர்ஆன் : 20:43,44) நூல்: தஃப்சீர் இப்னு கசீர்                                                 

எதிரிகளிடமும், பகைவர்களிடமும் கூட நல்ல முறையில் தான் விவாதம் புரியவேண்டுமென்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். இவ்வாறு சத்தியத்தை நிலை நாட்ட மேற்கொள்ளப்படும் விவாதம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.

தவிர்க்க வேண்டிய விவாதம்: 

குர்ஆனில் தர்க்கம் புரிவது வெறுக்கத்தக்க விஷயமாகும். 

குர்ஆனின் சில வசனங்களை வேறு சில வசனங்களுடன் மோதவிட்டு தர்க்கம் புரிவது வெறுக்கத்தக்க செயலாகும். அறியாமையின் காரணமாக சிலர் குர்ஆனை குறித்து முழுமையாக விளங்காமல் ஒரு சில வசனங்களை படித்து விட்டு பிறரிடம் விவாதம் செய்கிறார்கள். இவர்களை உள்ளத்தில் நோய் உள்ளவர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்கள், (நபியே!) அவனே இந்த வேதத்தை உங்களுக்கு அருளினான். இதில் தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக் கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் உள்ளன. (அல்குர்ஆன் 3:7) என்ற வசனத்தை ஓதினார்கள். பிறகு ஆயிஷாவே குர்ஆனில் தர்க்கம் புரிபவர்களை கண்டால் அவர்களிடம் எச்சரிக்கையாக இரு. அவர்களைத்தான் அல்லாஹ் உள்ளங்களில் நோய் உள்ளவர்கள் என்று கூறுகிறான் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) நூல்: சுனனு இப்னி மாஜா - 47.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நபியே!) அவனே இந்த வேதத்தை உங்களுக்கு அருளினான். இதில் தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக் கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் உள்ளன. (அல்குர்ஆன் 3:7) யாருடைய இதயங்களில் கோணல் உள்ளதோ, அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக் கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால் அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வையன்றி ‌எவரும் அறியார். உறுதியான அறிவுடையவர்கள் இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளிகளன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை எனும் (திருக்குர்ஆன் 3:7 வது) வசனத்தை ஓதிவிட்டு, முதஷாபிஹாத்தான வசனங்களைத் தேடித் திரிபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள் தாம் (இந்த வசனத்தில்) அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள் (என்பதைப் புரிந்து கொண்டு) அவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: ஸஹீஹுல் புஹாரி -4547, ஸஹீஹ் முஸ்லிம் - 2665, சுனனு அபிதாவூது - 4598, சுனனுத் திர்மிதி - 2994. 

                                                

விதி விஷயத்தில் தர்க்கம் புரிவது: 

மறைவானவற்றை நம்பிக்கை கொள்வது ஈமானின் அடிப்படையாகும். அதில் ஒன்று தான் விதியின் மீதுள்ள நம்பிக்கையும், விதியில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களையும் குறித்து நமக்கு புரியவில்லையென்றாலும் அதனை நம்பிக்கை கொள்ள வேண்டும். நமக்கு அறிவில்லாத விஷயத்தில் நாம் தர்க்கிப்பது கூடாது. 

நாங்கள் விதியைப்பற்றி சர்ச்சை செய்துகொண்டிருந்த போது எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களின் முகம் சிவக்குமளவுக்கு - அவர்களின் கன்னங்களில் மாதுளை பிழிந்தது போல் - கோபமடைந்தார்கள். இப்படித்தான் நீங்கள் கட்டளையிடப்பட்டுள்ளீர்களா?, இதைத்தான் நான் உங்களிடம் தூதுச் செய்தியாக கொண்டு வந்திருக்கிறேனா?, இந்த விஷயத்தில் சர்ச்சை செய்ததன் காரணமாகத்தான் உங்களுக்கு முன்னிருந்தோர் அழித்தனர். நீங்கள் இது விஷயத்தில் சர்ச்சை செய்யக் கூடாது என்று நான் வலியுறுத்துகிறேன் என்று அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: சுனனுத் திர்மிதி -2133. 

                                                

அசத்தியத்திற்காக வாதிடுவது: 

உண்மையை அறிந்த பிறகும் உண்மைக்கு புறம்பான கருத்தை நிலைநாட்டுவதற்காக தர்க்கம் புரிவது சிலரது வாடிக்கையாகும். இத்தகையவர்கள் அல்லாஹ்வின் வெறுப்பிற்குரியவர்கள் ஆவார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

யாருடைய பரிந்துரையின் காரணமாக அல்லாஹ்வின் சட்டம் தடுக்கப்படுகிறதோ அவன் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவன் ஆவான். அறிந்து கொண்டே அசத்தியத்திற்காக வாதிடுகிறானோ அவன் அதைவிட்டு விலகும்வரை அல்லாஹ்வின் கோபம் அவன் மீது உண்டாகும். யார் ஒரு முஃமினைக் குறித்து அவரிடம் இல்லாத குறையைக் கூறுவாரோ அவன் அதிலிருந்து பாவமன்னிப்பு கோரும்வரை அல்லாஹ் அவனை நரகத்தில் சேறும், சீழும் நிறைந்த இடத்தில் தங்கவைப்பான். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) நூல்: சுனனு அபிதாவூது - 3597, முஸ்னது அஹ்மது - 5544. 

                                                

வீண் தர்க்கத்தை தவிர்ந்து கொள்வோருக்கு கிடைக்கும் நன்மை: 

உண்மையிருந்தும் தர்க்கம் புரிவதை யார் விட்டுவிடுவாரோ அவருக்கு சுவனத்தின் ஓரத்தில் ஒரு வீட்டைப் பெறுவதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் விளையாட்டிற்காக பொய் சொல்வதை யார் தவிர்ந்து கொள்வாரோ அவருக்கு சொர்க்கத்தின் நடுவில் ஒரு வீட்டை பெறுவதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். யார் அவரது குணத்தை அழகாக்கிக் கொண்டாரோ அவருக்கு சொர்க்கத்தின் மேற்பகுதியில் ஒரு வீட்டைப் பெறுவதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஉமாமா (ரலி) நூல்: சுனனு அபிதாவூது - 4800. 


தவறுகளைக் களைவது எப்படி? :

தவறுகளைச் சுட்டிக் காட்டும் விஷயத்தில் வஹீயுடைய வழிமுறையை பின்பற்ற வேண்டும். ஒரு பித்அத்தை பித்அத் கொண்டு தடுக்கக் கூடாது. அதே போன்று வரம்பு மீறுதலை விரயம் மூலமாக தடுக்கக்கூடாது. 

மக்களிடம் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டும் போதும், அதனை சீர்திருத்தம் செய்யும் போதும் வஹீயின் வழிமுறையை பின்பற்ற வேண்டும் அவர்களிடம் காணப்படும் தீமைகளை நன்மையைக் கொண்டு தடுக்க வேண்டும். இருட்டை வைத்துக்கொண்டு ஓட்டையை அடைக்க முடியாது என்று நாம் சொல்வதுண்டு அதேபோன்று ஒரு தீமைக்கு இன்னொரு தீமை தீர்வாகாது.                                                 

அல்லாஹ் கூறுகிறான்: 

 وَلَا تَسْتَوِى الْحَسَنَةُ وَ لَا السَّيِّئَةُ  اِدْفَعْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ فَاِذَا الَّذِىْ بَيْنَكَ وَبَيْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِىٌّ حَمِيْمٌ 

 وَمَا يُلَقّٰٮهَاۤ اِلَّا الَّذِيْنَ صَبَرُوْا‌ وَمَا يُلَقّٰٮهَاۤ اِلَّا ذُوْ حَظٍّ عَظِيْمٍ 

நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். 

பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் : 41:34,35)

எனவே தான் அல்லாஹ் தீமையை நன்மையின் மூலம் தடுத்துக் கொள்ள வேண்டுமென்று கட்டளையிடுகிறான். இந்த வசனத்திற்கு விளக்கமாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்: கோபத்தின் போது பொறுமை காக்க வேண்டுமென்றும், அறியாமையின் போது சகிப்புத்தன்மை மேற்கொள்ள வேண்டுமென்றும், பிறர் நமக்கு தீங்கிழைக்கும் போது மன்னித்து விட வேண்டுமென்றும்,  அல்லாஹ் முஃமின்களுக்கு கட்டளையிடுகிறான். இதனை அவர்கள் செய்தார்களேயானால் அல்லாஹ் அவர்களை ஷைத்தானை விட்டு பாதுகாப்பான். அவர்களுடைய எதிரியும் உற்ற நண்பனைப் போன்று அவர்களுக்கு பணிந்து விடுவார்கள் என்றும் அவன் கூறுகிறான். பார்க்க: தஃப்ஸீர் இப்னு கஸீர்.

மக்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதிலும், அதனைக் களைய முயற்சிப்பதிலும் அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி உளள்து. 

தவறுகளை திருத்துவதில் நபி(ஸல்) அவர்கள் தவறின் அளவையும், தவறு செய்வோரின் நிலையையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டுள்ளார்கள். இதற்கு சில உதாரணங்களைக் காணலாம்.

கிராமவாசியிடம் நபி(ஸல்) அவர்கள் நடந்து கொண்ட விதம்: 

ஒரு கிராமவாசி மஸ்ஜிது(ந் நபவீ பள்ளி வாசலு)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார். அவரைத் தாக்குவதற்காக அவரை நோக்கி மக்கள் குதித்தெழுந்தனர். அப்போது மக்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரைவிட்டுவிடுங்கள்; அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். (எப்போதும்) நளினமாக நடந்து கொள்ளவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக நடந்து கொள்ள நீங்கள் அனுப்பப்படவில்லை' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி), ஸஹீஹ் புஹாரி : 220, 6128.                                                 

தவறுகள் கொள்கை சார்ந்ததாக இருக்கும் பட்சத்தில் தவறின் விபரீதத்தை கருத்தில் கொண்டு அதனை கடுமையாக விமர்சிப்பதிலும், சுட்டிக்காட்டுவதிலும் தவறில்லை. 

இன்னும் பித்அத் புரிகின்ற மக்களை அதிலிருந்து ‌மீட்பதற்காக வேறு பித்அத்துகளை காட்டிக் கொடுக்காமல் முற்றிலும் மார்க்ம் காட்டிய வழிமுறையில் மக்களை வழி நடத்த வேண்டும்.

 

பித்அத்தை உருவாக்க வேண்டாம் :

மார்க்கத்தில் இல்லாத, சொல்லப்படாத எல்லா விஷயங்களும் பித்அத்தாகும். எல்லா பித்அத்களும் வழிகேடு, எல்லா வழிகேடும் நரகத்திற்கு கொண்டு செல்லும்.                                                 

பித்அத் என்பதன் மொழி ரீதியான பொருள், புதிய செயல், நூதனமான செயல், முன்னுதாரணம் இல்லாமல் செய்யும் செயல் என்பதாகும்.

இதே கருத்தைத்தான் அல்லாஹ்வின் கூற்று தெளிவுபடுத்துகிறது: 

 بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ وَ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ 

(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன் : 2:117) 

எவ்வித முன் மாதிரியும் இல்லாமல் அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்தான் என்று கூறுகிறான். 

                                                

இஸ்லாமிய பார்வையில் பித்அத்: 

மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை நன்மையென்று கருதி செய்வதற்கு தான் பித்அத் என்று கூறுகிறோம். 

மார்க்கத்தின் அடிப்படையில் நன்மையைக் கருதி நாம் ஒரு செயலை செய்வதாக இருந்தால் அதற்கு அல்லாஹ்வின் கட்டளையோ, நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலோ இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத செயல்கள் மார்க்கத்தில் நூதனமாக செய்யக்கூடிய செயலாகும். 

புதுமையாக மார்க்கத்தில் புகுத்தப்படும் செயல்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும் என்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி), ஸஹீஹ் புகாரி : 2697.

பித்அத்துகளில் கொள்கை சார்ந்த பித்அத், வழிபாடு சார்ந்த பித்அத் மற்றும் கலாச்சாரம் சார்ந்த பித்அத் என பலவகை உள்ளது. 

கொள்கை சார்ந்த பித்அத்திற்கான உதாரணம் முஃதஸிலா, கவாரிஜ், கத்ரியா, ஜபரியா போன்ற பிரிவுகளாகும். இவர்கள் அல்லாஹ்வும், அவனது தூதரும் வழிகாட்டிய கொள்கையை விட்டு விட்டு நூதன கொள்கைகளை உருவாக்கிக் கொண்டார்கள். 

வழிபாடு சார்ந்த பித்அத்திற்க்கான உதாரணம் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத தொழுகை மற்றும் தொழுகை முறைகள், பிரார்த்தனைகள், மௌலூது போன்ற சடங்குகள் போன்ற வழிபாடு முறைகளாகும். 

கலாச்சாரம் சார்ந்த பித்அதிற்கான உதாரணம், பிற மதத்தவர்களின் விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களை கொண்டாடுவதாகும். 

யார் பிற மதத்திற்கு ஒப்பாக நடப்பாரோ, அவர் அவர்களைச் சார்ந்தவர் ஆவார். 

இவை அனைத்தும் மார்க்கத்தின் பார்வையில் பித்அத்களாகும் அனைத்து பித்அத்துகளும் வழிகேடுகளாகும். நமது நற்செயல் மீது பொறாமை கொண்ட ஷைத்தான்தான் பித்அத்கள் உருவாகக் காரணம்.                                                 

நபி(ஸல்) அவர்கள் தங்களுடைய விடைபெரும் ஹஜ்ஜின் போது ஆற்றிய உரையில் கூறினார்கள்: 

மக்களே! உங்களுடைய மண்ணில் ஷைத்தான் வணங்கப்படுவான் என்பது குறித்து அவன் நிராசையடைந்து விட்டான். ஆனாலும் உங்கள் செயல்களில் நீங்கள் அற்பமாகக் கருதும் இபாதத் அல்லாதவற்றில் நீங்கள் அவனுக்கு கட்டுப்படுவீர்கள் என்பதை அவன் திருப்தி கொண்டுவிட்டான். மக்களே! எச்சரிக்கையாக இருங்கள்! நான் உங்களுக்கு மத்தியில் விட்டுச் செல்வதை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொண்டு இருப்பீர்களேயானால் ஒருபோதும் நீங்கள் வழி தவறமாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமும் அவனது தூதரின் வழிமுறையும் ஆகும். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்தத்ரகுல் ஹாகிம் - 318

ஷைத்தானின் சூழ்ச்சி வலையில் சிக்காமல் இருப்பதற்காகத்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு அழகிய வழிகாட்டுதலை விட்டுச் சென்றுள்ளார்கள். அதனை நாம் உறுதியாகப் பற்றிப் பிடிக்கும் வரையில் வழி தவறமாட்டோம். பித்அத்தைக் குறித்து எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அது நரகம் செல்வதற்கான காரணமாக அமைந்துவிடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

காரியங்களில் மிகக்கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படும் செயல்களாகும். புதிதாக உருவாக்கப்படும் காரியங்கள் அனைத்தும் பித்அத் ஆகும். எல்லா பித்அத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் அதனை செய்பவர்களை நரகில் சேர்க்கும். அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: சுனனு நஸயி -1578.                                                

பித்அத் செய்பவர்களை விட்டும் அல்லாஹ் தவ்பாவின் வாசலை அடைத்து விடுகிறான்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

அனைத்து பித்அத் செய்வோரை விட்டும் அல்லாஹ் தவ்பாவின் வாசலை திரையிட்டு விடுகிறான்.  அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), நூல்: அல்முஃஜமுல் அவ்ஸத் லிதப்ரானி - 4202, ஷுஃபுல் ஈமான் - 9011.                                                 

பித்அத் செய்பவன், தனது செயல் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறக்கூடிய செயல் என்று கருதி செய்வதினால், அவன் தவ்பாவைக் குறித்து சிந்திப்பதற்கு வாய்ப்பில்லை எனவே அவனிற்கு முன்னால் தவ்பாவின் வாசல் மூடப்பட்டிருக்கும்.

இமாம் சுஃப்யானு ஸவ்ரி(ரஹ்) கூறினார்கள்: 

பாவம் செய்வதை விட பித்அத் செய்வதுதான் ஷைத்தானிற்கு மிகவும் பிடித்தமானது. பாவத்திலிருந்து தவ்பா தேடப்படும், பித்அத்திலிருந்து தவ்பா தேடப்படமாட்டாது. நூல்: ஹில்யத்துல் அவ்லியா - 7/26

நமது அமலை பாழ்படுத்தக்கூடிய, நரகத்திற்கு நம்மை இட்டுச் செல்லும் அனைத்து பித்அத்களையும் தவிர்ந்து கொள்வோமாக. 

                                                
- உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி 

நூல்: அஹ்லுஸ்ஸுன்னா கொள்கையின் அடிப்படைகள்.                                                
Previous Post Next Post