அத்தியாயம் - 95
வழங்கியவர் - அஷ்ஷேய்க் கலாநிதி ML முபாரக் மதனி
இது 8 வசனங்களைக் கொண்ட ஒரு சூராவாகும்.
சூரா அத்தீன் பொருள் விளக்கம்:
முதலாவது வசனம்:
وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِۙ
அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஸைத்தூன்) மீதும் சத்தியமாக.
وَالتِّيْن
அத்தியின் மீதும் சத்தியமாக.
وَالزَّيْتُوْنِۙ
ஒலிவத்தின் (ஸைத்தூன்) மீதும் சத்தியமாக.
இந்த அத்தியாயம் و என்ற எழுத்துடன் ஆரம்பமாகிறது. இது "வாவுல் கஸம்" என்று அழைக்கப்படுகிறது, சத்தியத்திற்காக பயன்படுத்தப்படுத்துகிற و ஆகும்
அல்லாஹ் அவன் விரும்பியவற்றின் மீது சத்தியம் செய்கிற உரிமை அவனுக்கு இருக்கிறது, அவனிடம் கேள்வி கேட்கிற உரிமை அவனுடைய அடியார்களுக்கு கிடையாது,
ஆனால், அடியார்கள் அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும், அதில் 'வல்லாஹி' அல்லது 'பில்லாஹி' என்று சத்தியம் செய்வது மிகவும் பிரபலியமானதாகும்.
அதேபோல், அல்லாஹ்வுடைய படைப்புகளுக்கு முன் ரப்பு என்பதை சேர்த்து சத்தியம் செய்யலாம்
உதாரணமாக - ரப்புல் கஃபா
இவ்வசனத்தில் அல்லாஹ் தீன் (அத்திப்பழம்) மற்றும் ஸய்தூன் (ஆலிவ்) என்ற இரண்டு பழங்களின் மீது சத்தியம் செய்கிறான்
இவ்வசனத்தை பற்றி தஃப்ஸீர் ஆசிரியர்கள் இரண்டு கருத்துக்களை முன்வைக்கிறார்கள் ;
சில அறிஞர்கள் கூறுகிறார்கள் தீன் மற்றும் ஸய்தூன் என்ற அந்த மரம் அல்லது அந்த பழத்தை தான் அல்லாஹ் இங்கே நாடுகிறான்.
வேறு சில அறிஞர்கள் கூறுகிறார்கள், இந்த வகையான பழ மரங்கள் எங்கே கூடுதலாக விளைகிறதோ, அந்த இடத்தை அல்லாஹ் நாடுகிறான் என்று கூறிகிறார்கள்.
தஃப்ஸீருடைய விதி என்னவென்றால், கூறப்படும் கருத்துக்கள் முரண்படாவிட்டால், அனைத்து கருத்துக்களையும் நாம் ஏற்றுக் கொள்ளலாம்.
அந்த வகையில், இவ்வசனத்தில் தீன் மற்றும் ஸய்தூன் என்ற இரண்டு பழங்களையும், மேலும், அவை விளைகின்ற இடங்களையும் அல்லாஹ் நாடுகிறான் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
ஸய்தூன் பற்றி வரக்கூடிய ஒரு ஹதீஸ்:
நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்,
كُلُوا الزَّيْتَ وَادَّهِنُوا بِهِ فَإِنَّهُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ
ஸய்தூனை சாப்பிடுங்கள், அதனுடைய எண்ணையையும் பயன்படுத்துங்கள், அது முபாரக்கான ஒரு மரத்திலிருந்து வரக்கூடியது (திர்மிதி)
இந்த ஹதீஸின் மூலம் ஸய்தூனை சாப்பிடுவது வலியுறுத்தப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம்.
இந்த சூராவில் மூன்றாவதாக அல்லாஹ் சத்தியம் செய்வது:
இரண்டாவது வசனம்:
وَطُوْرِ سِيْنِيْنَۙ
“ஸினீன்” என்ற இடத்தில் இருக்கக்கூடிய மலையின் மீதும் சத்தியமாக
அல்குர்ஆனில் இதைப் பற்றி வரக்கூடிய மற்றொரு வசனம் :
وَشَجَرَةً تَخْرُجُ مِنْ طُوْرِ سَيْنَآءَ تَنْبُتُ بِالدُّهْنِ وَصِبْغٍ لِّلْاٰكِلِيْنَ
இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணெயை உற்பத்தி செய்கிறது. மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிடுவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது).
அல்குர்ஆன் : 23:20
இந்த வசனத்தில் ஸய்தூன் மற்றும் தூர் இடையில் தொடர்பு இருப்பதை கூறுகிறான்
'தூர்' (மலை) என்ற வார்த்தை குர்ஆனில் 10 இடங்களில் கூறப்பட்டிருப்பதை நாம் காணலாம்.
இந்த சூராவில் நான்காவதாக அல்லாஹ் சத்தியம் செய்வது :
மூன்றாவது வசனம் :
وَهٰذَا الْبَلَدِ الْاَمِيْنِۙ
மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக
الْبَلَدِ - ஊர்
الْاَمِيْنِۙ - அபயமளிக்கும்
இவ்வசனத்தில் الْبَلَدِ الْاَمِيْنِۙ என்றால் அந்த ஊருக்குறிய ஒரு ஸிஃப்பத்தை குறிப்பதாகும் - அமைதியான பாதுகாப்பான ஊர்
மார்க்க ரீதியில், அமைதியான பாதுகாப்பான ஊர் என்பது மக்கா நகரம் என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான் ;
சூராத்துல் ஆல இம்ரான்(3 : 96,97)
சூரத்துல் அன்கபூத் (29:67)
சூரத்துல் பகரா (2:126)
எனவே, அமைதியான பாதுகாப்பான ஊர் என குறிப்பிடுகிற மக்கா நகரத்தில் குழப்பம் விளைவிப்பது அல்லது சண்டை செய்வது கூடாது, தடை செய்யப்பட்டது என்பதை அல்லாஹ் நமக்கு உணர்த்துகிறான்
அப்படி இருந்தும் மக்கா நகரத்தில் குழப்பம் விளைவித்து, இந்த குர்ஆன் வசனத்திற்கு நேரடியாக மாறு செய்பவர்களும் இருக்கிறார்கள், அப்படியானவர்களுக்கு கடுமையான தண்டனை இருக்கிறது என்பதை நாம் ஹதீஸ்களில் பார்க்கலாம்
எனவே, இந்த சூராவில் இதுவரை கூறிய மூன்று வசனங்களில், அல்லாஹ் நான்கு விஷயங்களின் மேல் சத்தியம் செய்கிறான் ;
தீன் (அத்திப்பழம்)
ஸய்தூன் (ஆலிவ்)
தூர் மலை
மக்கா நகரம்
இதைப் பற்றி இமாம் இப்னு தைமியா (ரஹி) அவர்கள் கூறும் பொழுது, அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் மூன்று இடங்களின் மேல் சத்தியம் செய்திருக்கிறான் என்று கூறினார்கள், அவை
தீன் மற்றும் ஸய்தூன் அதிகம் விளையக்கூடிய ஷாம் நகரம்
இங்குதான் ஈஸா (அலை) அவர்கள் நபியாக வந்தார்கள்
இங்குதான் பனூ இஸ்ரவேலர்களுக்கு பல நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள்
நபி (ﷺ) அவர்களும் அங்கிருந்துதான் மிஃராஜ் சென்றார்கள்
சினாயில் உள்ள தூர் என்ற மலைப்பகுதி - இங்குதான் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களிடம் பேசினார்கள்
மக்கா நகரம் - இங்கு தான் நபி (ﷺ) அவர்கள் தூதராக அனுப்பப்பட்டார்கள்.
இதுபோன்று அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் சத்தியம் செய்த மூன்று இடங்களைப் பற்றி இமாம் இப்னு தைமியா (ரஹி) அவர்கள் கூறினார்கள்.
நான்காவது வசனம்:
لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
لَقَدْ خَلَقْنَا திட்டமாக படைத்தோம்
الْاِنْسَانَ மனிதனை
فِىْۤ اَحْسَنِ அழகிய / ல்
تَقْوِيْمٍ அமைப்பு
இவ்வசனத்தில் الْاِنْسَانَ (மனிதன்) என்று அல்லாஹ் குறிப்பிடுவது பொதுவாக அனைத்து மனிதர்களையும் (முஸ்லிம்கள், காஃபிர்கள், மற்ற அனைவரையும்) குறிக்கும்,
அனைத்து மனிதர்களையும் அழகிய வடிவத்தில் படைத்திருக்கிறான் என்று அல்லாஹ் கூறுகிறான்
தஃப்ஸீர் ஆசிரியர்கள் மத்தியில், இவ்வசனத்தை பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன;
மனிதர்கள் நல்ல இயல்போடு படைக்கப்பட்டிருக்கிறார்கள்
மனிதர்கள் அழகிய, சிறந்த வடிவில் படைக்கப்பட்டிருக்கிறார்கள்
இந்த இரண்டு கருத்துக்களும் முரண்படவில்லை என்பதால் இரண்டையும் நாம் ஏற்றுக்கொள்ளலாம்.
தஃப்ஸீர் ஆசிரியர்கள் கூறுகிறார்கள், மனிதர்கள் அனைவரையும் பூரணமான வடிவிலும், இயற்கையான நிலையில் (உள்ளத்தில் எந்தக் களங்கமும் இல்லாத நிலை) அல்லாஹ் படைத்திருக்கிறான்
இதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
فَاَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ حَنِيْفًا فِطْرَتَ اللّٰهِ الَّتِىْ فَطَرَ النَّاسَ عَلَيْهَا لَا تَبْدِيْلَ لِخَـلْقِ اللّٰهِ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ ۙ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ ۙ
ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். அல்குர்ஆன் : 30:30
நபி (ﷺ) அவர்கள் இதைப் பற்றி தெளிவாக கூறினார்கள்,
"ஒவ்வொரு குழந்தையும் பிறக்கிற நேரத்தில், அதன் உள்ளத்தில் எந்த களங்கமும் இல்லாமல் ஒரு இயற்கையான இயல்போடு தான் பிறக்கிறது, அந்தக் குழந்தையின் பெற்றோர்தான் அதை ஒரு யூதனாகவும், கிறிஸ்தவனாகவும், நெருப்பு வணங்கியாகவும் மாற்றுகிறார்கள்" என்று கூறினார்கள்.
எனவே, அல்லாஹ் இவ்வசனத்தில் நமக்கு உணர்த்துவது, மனிதர்களை பூரணமான தூய்மையான வடிவில் எந்த களங்கமும் இல்லாமல் அவன் படைத்திருக்கிறான்.
இமாம் இப்னு அல் அரபி (ரஹி) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வுடைய படைப்புகளில் மனிதனை விட அழகிய ஒரு படைப்பு கிடையாது, உயிருடன், அறிவுடன், ஆற்றலுடன், நாட்டமுடன், பேசுகிற, கேட்கிற,பார்க்கிற தன்மையுடன், ஞானம் உள்ளவன் போன்ற அனைத்து பண்புகளுடன் அல்லாஹ் மனிதனை படைக்கிறான், இவை அனைத்தும் அல்லாஹ்வுடைய பண்புகளாக இருக்கின்றன"
அல்லாஹ்வுடைய படைப்புகளான நாம், அல்லாஹ் நம்மை எப்படி படைத்திருந்தாலும் முதலில் நம்மை நாமே ரசிக்க வேண்டும்,
நபி (ﷺ) அவர்கள் கண்ணாடி பார்க்கும் போது ஓதிய துஆ, ஷேக் அல்பானி (ரஹி) அவர்கள் சஹீஹ் என்று கூறிய ஹதீஸ்:
اللَّهُمَّ أَنْتَ حَسَّنْتَ خَلْقِي فَحَسِّنْ خُلُقِي
யா அல்லாஹ், என்னுடைய தோற்றத்தை நீ அழகாக ஆக்கியதைப் போன்று, என்னுடைய பண்புகளையும் அழகாக ஆக்கி விடுவாயாக.
குறிப்பாக பெண்கள் அவர்கள் அழகு தான் என்பதையும், அழகு என்பது உள்ளம் சார்ந்தது, நாம் ஒன்றை அழகாக பார்த்தால் அது நமக்கு அழகாக தெரியும் என்பதையும் நம்ப வேண்டும்,
அல்லாஹ் ஒட்டு மொத்த மனித இனத்தையும் அழகிய தோற்றத்தில் படைத்திருக்கிறான்.
ஐந்தாவது வசனம்:
ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سَافِلِيْنَۙ
பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.
ثُمَّ رَدَدْنٰهُ
பின்னர் /அவனை திருப்பினோம்
اَسْفَلَ
மிக்க தாழ்ந்தவனாக
سَافِلِيْنَۙ
தாழ்ந்தவர்களில்
இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுவது போல், கீழிழும் கீழான நிலைக்கு மனிதனைக் கொண்டு வந்தோம், என்பது இம்மையிலா அல்லது மறுமையிலா என்பதில் தஃப்ஸீர் ஆசிரியர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு இருக்கிறது
சில அறிஞர்கள் இது மறுமையை குறிக்கும் என்று கூறுகிறார்கள், ஏனென்றால், அல்லாஹ் மனிதனை அழகிய வடிவில் படைத்து, அவனுக்கு எல்லாம் கொடுத்த பிறகும் அவன் அல்லாஹ்வை நிராகரித்து விட்டான், எனவே, மனிதனை தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம், இவ்வாறு அவனை நரகத்தில் நுழையச் செய்தோம் என்று கூறுகிறான்
மற்றொரு கருத்து, உலகத்தில் மனிதனை அழகான தோற்றத்தில் படைத்து, அவனுக்கு சாதகமான வளர்ச்சிக் கட்டங்கள் :- சிறு பருவம், இளமைப் பருவம், முதுமை அடைந்த பிறகு, நம்மால் எதுவும் செய்ய முடியாத ஒரு இழிவான வயதை அடைந்து விடுகிறோம் என்ற கருத்தையும் சில அறிஞர்கள் முன் வைக்கிறார்கள்
இரண்டையும் ஒப்பிடும் போது, இவ்வசனத்தின் கருத்து மறுமையோடு தொடர்பாக வருவதுதான் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆறாவது வசனம்:
اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு.
اِلَّا - தவிர
الَّذِيْنَ اٰمَنُوْا -
நம்பிக்கை கொண்டவர்கள்
وَعَمِلُوا. -
செய்தார்கள்
الصّٰلِحٰتِ -
நற்செயல்கைளை
فَلَهُمْ. - மேலும் அவர்களுக்கு
اَجْرٌ - நன்மை
غَيْرُ مَمْنُوْنٍ - முடிவில்லாத
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு.
ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்தவர்களை அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான் என்று கூறுகிறான்.
ஒரு மனிதன் இவ்வுலகிலும் மறுமையிலும் கண்ணியமாக வாழ வேண்டுமென்றால், அவனுக்கு ஈமானும் ஸாலிஹான அமல்களும் தேவை.
ஈமானுடைய அடிப்படை கடமைகள் தெரியாமல் பல மனிதர்களும், தாயிகளும் கூட இருக்கிறார்கள்.
இன்றைக்கு நம்முடைய சமுதாயத்தில் 95% மக்கள் ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் என்னவென்று தெரியாமல் தான் இருக்கிறார்கள்.
இப்படியான மக்களுக்கு, தீன் தெரிந்தவர்கள் இஸ்லாத்தை எத்தி வைப்பது அவர்களுக்கு கடமையாக இருக்கிறது, அந்த வரிசையில் முதலில் அவர்களுடைய குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு அகீதாவை புரியவைக்க வேண்டும், பிறகு மற்ற மக்களுக்கு எத்தி வைக்க வேண்டும்
சரியான ஈமான் மற்றும் ஸாலிஹான நல்லமல்கள் இருந்தால் மட்டுமே, அல்லாஹ் கூறக்கூடிய அந்த தாழ்ந்த நிலையிலிருந்தும், நரகத்திலிருந்தும் நாம் பாதுகாப்பு பெறலாம்.
நல்லமல்கள் என்பதற்கான நிபந்தனைகள்:
நாம் செய்யக்கூடிய அமல் அல்லாஹ்வுக்காக மட்டுமே இருக்க வேண்டும்.
நபி (ﷺ)அவர்கள் காட்டிய முறையில் இருக்க வேண்டும்.
இதுபோன்ற ஈமான் கொண்டு ஸாலிஹான நல்லமல்கள் செய்பவர்களை தாழ்ந்த நிலையிலிருந்து பாதுகாப்பதுடன், குறைவில்லாத அல்லது கணக்கில்லாத அல்லது துண்டிக்கப்படாத நற்கூலி அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான்.
அப்படியானவர்கள் இறந்த பிறகும் அவர்கள் ஸாலிஹான அமல்களை விட்டுச் சென்றால் அதற்கான நற்கூலி அவர்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.
ஏழாவது வசனம் :
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّيْنِ
எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?
فَمَا يُكَذِّبُكَ -
யார் தான் உம்மை பொய்ப்பிப்பர்
بَعْدُ -
இதற்குப் பின்னர்
بِالدِّيْنِ -
மார்க்கத்தில்
இதில் தீன் என்ற வார்த்தைக்கு இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன ;
மார்க்கம்
கூலி வழங்குவது
இவ்வசனத்தில் தீன் என்ற வார்த்தை கூலி வழங்கக் கூடிய நாளை குறிக்கிறது
மனிதனை அழகான வடிவத்தில் படைத்து, நபிமார்கள் மற்றும் ரசூல்மார்களை அனுப்பி வைத்து சரியான மார்க்கத்தை சொல்லிக் கொடுத்த பிறகும், இவற்றைப் பொய்பிப்பதற்கு மனிதனை தூண்டியது எது என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கேட்கிறான்.
எட்டாவது வசனம் :
اَلَيْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِيْنَ
அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?
اَلَيْسَ - இல்லையா
اللّٰهُ - அல்லாஹ்
بِاَحْكَمِ -
மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவன்
الْحٰكِمِيْنَ -
தீர்ப்புச் செய்வோர்
அஹ்கமுல் ஹாகிமீன் اَحْكَمِ الْحٰكِمِيْن என்ற சொல்லிற்கு 3 அர்த்தங்களைத் தஃப்ஸீர் ஆசிரியர்கள் கூறுகிறார்கள் ;
அல்லாஹ்வுடைய தீர்ப்பு மிகவும் நியாயமானது, நீதியானது, அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு கடுகளவும் அநீதி இழைக்க மாட்டான்
தீர்ப்பு வழங்குபவர்களில் எல்லாம் மிகவும் சிறந்த முறையில் தீர்ப்பு வழங்கக் கூடியவனாக அல்லாஹ் இல்லையா?
அல்லாஹ் சொல்லக்கூடிய தீர்ப்புகள் எல்லாமே அழகானவை என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
مَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ حُكْمًا لِّـقَوْمٍ يُّوْقِنُوْنَ
உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்? அல்குர்ஆன் : 5:50
சிலநேரங்களில் அல்லாஹ்வின் தீர்ப்புடைய யதார்த்தத்தை மனிதனுக்கு புரியாததனால் அது அவனுக்கு கஷ்டமாக தெரிகிறது
அல்லாஹ்வுடைய தீர்ப்பை மனிதன் நடுநிலையோடும், நீதியோடும் அவன் பார்க்கிறபோது, அல்லாஹ்வுடைய தீர்ப்பு தான் இந்த உலகத்தில் சிறந்தது, உயர்ந்தது, அழகியது என்பதை அவன் புரிந்து கொள்வான்
உதாரணமாக
அல்லாஹ் ஹலாலாக்கியது அனைத்துமே மனிதனுக்கு பலன் தரக்கூடியதாக இருக்கும்,
அதே நேரத்தில், அல்லாஹ் ஹராமாக்கியது அனைத்துமே மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கும் (மதுபானம், விபச்சாரம், வட்டி, சூது, கொலை, பொய், கொள்ளை, புறம், அவதூறு, போன்றவை)
சில அறிஞர்கள் கூறுகிறார்கள் அஹ்கமுல் ஹாகிமீன் اَحْكَمِ الْحٰكِمِيْن என்ற சொல் 'இஹ்காம்' என்பதிலிருந்து வந்தது.
இஹ்காம் என்றால் 'ஒன்றை அழகாக சிறப்பாக செய்வது'
செயல்களை செய்யும் பொழுது மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் செய்யக் கூடியவனாக அல்லாஹ் இல்லையா?
பொதுவாக அல்லாஹ் அனைத்தையும் படைக்கும் பொழுது அழகாக படைத்து அழகான முறையில் வடிவமைக்கிறான்.
மேலும் சில அறிஞர்கள் கூறுகிறார்கள், அஹ்கமுல் ஹாகிமீன் اَحْكَمِ الْحٰكِمِيْن என்ற சொல் 'ஹிக்மா' என்ற சொல்லிருந்து வந்தது.
ஹிக்மா என்றால் 'ஒவ்வொன்றையும் எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் வைப்பது' ஆகும்
அந்த அடிப்படையில், அல்லாஹ் ஒவ்வொன்றையும் அதற்குரிய சரியான இடங்களில் வைத்துள்ளான்
வைக்க வேண்டிய ஒவ்வொன்றையும் அதற்குரிய இடங்களில் அல்லாஹ் வைக்கவில்லையா?
இங்கு கூறப்பட்ட மூன்று கருத்துகளிலும் முரண்பாடு இல்லாததனால், நாம் மூன்று கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளலாம்.
அல்லாஹ் தீர்ப்பு வழங்குவதில் மிகவும் சிறந்தவனாக இருக்கிறான்
ஒவ்வொன்றையும் செய்வதில் அல்லாஹ் சிறந்த முறையில் செய்பவனாக இருக்கிறான்
ஒவ்வொன்றையும் வைக்க வேண்டிய இடங்களில் வைப்பதில் அல்லாஹ் மிகச் சிறந்தவனாக இருக்கிறான்.
சிலர் இந்த சூராவின் கடைசி ஆயத்தை ஓதும் பொழுது,
'பலா வஅனா அலா தாலிக மினஷ்ஷாஹிதீன்'
பொருள் - ஆம், அல்லாஹ் தீர்ப்பு வழங்குபவர்களில் எல்லாம் மிகவும் சிறந்த முறையில் தீர்ப்பு வழங்கக் கூடியவன், இதற்கு நான் சாட்சி என்று கூறுவார்கள்.
அதேபோல், சிலர் குர்ஆன் ஓதி முடித்தப் பிறகு, 'சதகல்லாஹுல் அளீம்' என்று கூறுவார்கள்
இது போன்றவைகளை நபி (ﷺ) மற்றும் சஹாபாக்கள் செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை, இப்படி செய்வது பித்அத்தான செயலாகும்.
நபி (ﷺ) அவர்கள் சுன்னத்தான தொழுகைகளில் மறுமை, நரகம் அல்லது தண்டனைகளைப் பற்றி தொழுகையில் வசனங்கள் ஓதும் பொழுது, "அல்லாஹும்ம இன்னி அஊது பிக" என்று அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவார்கள் .
அதேபோல் ரஹ்மத்துடைய வசனங்கள் வரும்பொழுது, அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை கேட்பார்கள்.
சுன்னத்தான தொழுகைகளில் இது அனுமதிக்கப்பட்டிருக்கிறது.