بسم الله الرحمن الرحیم
நீங்கள் தெரிந்துகொண்டே மெய்யைப் பொய்யுடன் கலக்கவோ உண்மையை மூடிமறைக்கவோ செய்யாதீர்கள்.
[அல் குர்ஆன், அல் பகரா, 02:42]
யூதர்கள் திட்டமிட்டுச் செய்துவந்த மோசடி வேலைகளுக்கு இவ்வசனத்தில் இறைவன் தடை விதிக்கின்றான். பொய்க்கு உண்மை முலாம் பூசுவது, உண்மையை மறைப்பது, தவறானவற்றை வெளியிடுவது ஆகிய குற்றங்களை யூதர்கள் செய்துவந்தார்கள்.
ஆகவே, "நீங்கள் அறிந்துகொண்டே மெய்யைப் பொய்யுடன் கலந்துவிடாதீர்கள்; உண்மையை மறைக்காதீர்கள்" என இறைவன் ஆணையிடுகின்றான். மெய்யைப் பொய்யுடன் கலப்பது, உண்மையை மூடி மறைப்பது ஆகிய இரண்டு மோசடிகளுக்கும் தடை விதிக்கும் இறைவன், உண்மையை வெளிப்படுத்த வேண்டும்; அதைத் தெளிவுபடுத்த வேண்டும் என அவர்களுக்குக் கட்டளையுமிடுகின்றான்.
இந்த வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (رضی الله عنه) அவர்கள் அளித்துள்ள விளக்கமாவது:
சரியானதைத் தவறுடனும், உண்மையைப் பொய்யுடனும் கலந்து விடாதீர்கள்.
அபுல் ஆலியா (رحمه الله) அவர்கள் கூறினார்கள்:
மெய்யைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; முஹம்மத் (ﷺ) அவர்களுடைய சமுதாயத்தாரான இறை அடியார்களுக்கு நல்லதையே நாடுங்கள்.
கத்தாதா (رحمه الله) அவர்கள் கூறியாவது:
இஸ்லாத்துடன் யூதத்தையும் கிறித்தவத்தையும் கலந்துவிடாதீர்கள். இஸ்லாம்தான் இறைமார்க்கம்; கிறித்தவமும் யூதத்துவமும் (நீங்கள் உருவாக்கிக்கொண்ட) புதியவை; அவை அல்லாஹ் வழங்கியவை அல்ல என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான்.
இப்னு அப்பாஸ் (رضی الله عنه) அவர்கள் கூறியதாவது:
"அறிந்துகொண்டே உண்மையை மறைக்காதீர்கள்" என்பதன் பொருளாவது:
'இறைத்தூதர் முஹம்மத் (ﷺ) அவர்கள் தொடர்பாகவும், அவர்கள் கொண்டுவந்துள்ள மார்க்கம் தொடர்பாகவும் உங்களிடமுள்ள அறிவை மறைக்காதீர்கள். உங்கள் கரங்களில் உள்ள வேதச் சுவடிகளில் முஹம்மத் (ﷺ) அவர்கள் குறித்து எழுதப்பெற்றிருப்பதைக் காண்கிறீர்கள்.
முஜாஹித் மற்றும் சுத்தீ (رحمه الله) ஆகியோர் கூறுகிறார்கள்:
உண்மையை - அதாவது முஹம்மத் (ﷺ) அவர்களை - மறைக்காதீர்கள்.
بسم الله الرحمن الرحیم
42. நீங்கள் தெரிந்துகொண்டே மெய்யைப் பொய்யுடன் கலக்கவோ உண்மையை மூடிமறைக்கவோ செய்யாதீர்கள்.
43. தொழுகையைக் கடைப்பிடியுங்கள். ஸகாத் (எனும் கட்டாயக் கொடையை) வழங்குங்கள். குனி(ந்து தொழு)கின்றவர்களுடன் சேர்ந்து நீங்களும் குனி(ந்து தொழு)ங்கள்.
[அல் குர்ஆன், அல் பகரா, 02:42,43]
உண்மையை மறைக்காதீர்கள்!
'உண்மையை மறைக்காதீர்கள்' என்பதைக் குறிக்க மூலத்தில் 'வ தக்த்துமுல் ஹக்க' எனும் சொற்றொடர் ஆளப்பட்டள்ளது. இதற்கு இரு வகையான பொருள் தரலாம். "உண்மையை மறைக்காதீர்கள்" என விலக்கல் வினையாகவும் பொருள் செய்யலாம். அல்லது 'உண்மையை மறைத்துக்கொண்டு' என நகழ்கால வினையாகவும் பொருள் செய்யலாம். அதாவது உண்மையையும் மறைத்துக் கொண்டு, மெய்யைப் பொய்யுடன் கலக்கவும் வேண்டாம். பாலை அருந்திக்கொண்டு மீனையும் சாப்பிட வேண்டாம் என்பது போன்று.
விரிவுரையாளர் ஸமக்ஷரீ (رحمه الله) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு மஸ்வூத் (رضی الله عنه) அவர்களது குர்ஆன் பிரதியில் 'வ தக்த்துமூனல் ஹக்க' என்று காணப்படுகிறது. இதன்படி "நீங்கள் உண்மையை அறிந்துகொண்டே அதை மறைத்தவர்களாக மெய்யைப் பொய்யுடன் கலக்காதீர்கள்" என்று பொருள் அமையும்.
அல்லது உண்மையை மறைப்பதால் மக்களுக்கு ஏற்படும் மிகப் பெரும் தீங்கை அறிந்துகொண்டே இவ்வாறு செய்யாதீர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். ஏனெனில், வேதக்காரர்கள் சரியான தகவல்கள் சிலவற்றைக் கூறிவிட்டு, அவற்றுடன் தவறான கருத்துகளையும் கலந்து வெளிப்படுத்தும்போது, மக்கள் நல்வழியிலிருந்து பிறழ்ந்து நரக வழிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இந்தப் பேராபத்தை அறிந்து கொண்டே உண்மையை மறைப்பதோ, மெய்யுடன் பொய்யை் கலப்பதோ தகுமா?
உண்மைையை விளக்கிச் சொல்வற்கு அரபியில் 'அல்பயான்' என்பர். அதற்கு எதிர்ச்சொல்லே 'மறைத்தல்' (கித்மான்) ஆகும். மெய்யுடன் பொய்யைக் கலப்பதும் அதற்கு நேர்மாறானதுதான்.
அடுத்த வசனத்தில், "தொழுகையைக் கடைப்பிடியுங்கள்; ஸகாத் வழங்குங்கள்; குனி(ந்து தொழு)கின்றவர்களுடன் சேர்ந்து நீங்களும் குனி(ந்து தொழு)ங்கள்" என்று கூறுகின்றான் இறைவன்.
முகாத்தில் (رحمه الله) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ﷺ) அவர்களுடன் இஸ்ரவேலர்களும் தொழ வேண்டும்; அவர்கள் தமது ஸகாத்தை நபியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். முஸ்லிம்களுடன் சேர்ந்து அவர்களும் தொழ வேண்டும். அதாவது இஸ்ரவேலர்களும் முஸ்லிம்களுடன் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என இறைவன் இவ்வசனத்தில் ஆணையிடுகின்றான்.
ஆதாரம்: தஃப்சீர் இப்னு கஸீர்