வட்டியை இஸ்லாம் தடுப்பது ஏன்?

 



இது போன்ற கேள்வி, அடிக்கடிச் சில சமுதாயக் கூட்டங்களின்போது  எழுப்பப் படுகின்றது.  ஏனெனில், வட்டியைக் குறிக்கும் அரபுச் சொல்லான 'ரிபா' என்பது வேறு; ஆங்கிலச் சொல்லான 'இன்டரெஸ்ட்' என்பது வேறு என்று சிலர் கருத்துக் கொண்டிருப்பதுதான்.  அதனால், இரண்டையும் வேறு படுத்தி, இன்று பரவலாக இருக்கும் வட்டி முறையை நியாயப் படுத்துகின்றார்கள்.
'ரிபா' எனப்படும் இந்த வட்டிதான் குர்ஆனாலும் ஹதீஸாலும் தடை செய்யப் பட்ட ஒன்று என்பதில் ஐயமில்லை.  குர்ஆன் வட்டியைப் படிப்படியாக நான்கு இறைவசனங்கள் மூலம் தடை செய்துள்ளது.  அவற்றுள்   30:39 என்ற முதல் வசனம் மக்காவில் அருளப்பட்டது.  எஞ்சிய மூன்று வசனங்களும் (4:161, 3:130-2, 2:275-81) மதீனாவில் அருளப்பட்டன.  

இவற்றுள் இறுதியான வசனம் (2:275-81) அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்நாள் இறுதிப் பகுதியில் இறங்கிற்று.  வட்டியை வாங்கித் தின்றவர்களை இவ்வசனங்கள் வன்மையாகக் கண்டித்ததோடு மட்டுமன்றி, அவர்கள் இறைவனுடனும் இறைத்தூதருடனும் போர் தொடுப்போர் என்றும் பறை சாற்றின.  இவ்வசனங்கள் வட்டிக்கும் வணிகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தன.  நிலுவையிலிருந்த வட்டிகள் அனைத்தையும் விட்டுவிடும்படியும், அதில் அவர்கள் ஈடுபடுத்திய முதலீட்டை மட்டும் எடுத்துக்கொள்ளும்படியும் முஸ்லிம்களை வலியுறுத்தின.  தம்மிடம் வட்டி வாங்கியவர்கள் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத சிரமமான நிலையில் இருந்தால், அதைக்கூட விட்டுக் கொடுக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவான வார்த்தைகளால் வட்டியைத் தடை செய்துள்ளார்கள்.  வட்டி வாங்குபவர்களை மட்டுமன்றி, வட்டிக்கு அடிமைப்பட்டுக் கொடுப்பவர்களையும், வட்டிக் கணக்கு எழுதுபவர்களையும், அதற்குச் சாட்சியாக இருப்பவர்களையும் அதில் சபித்துள்ளார்கள்.

(ஆதார நூல்கள்: ஸஹீஹ் முஸ்லிம், திர்மிதீ, முஸ்னது அஹ்மத் )

வட்டியை, அது பாவம் என்று தெரிந்துகொண்டே, வாங்குபவர்கள் தம் சொந்தத் தாயை முப்பத்தாறு தடவை விபச்சாரம் செய்த குற்ற உணர்வைப் பெறுகின்றார் என்றும் நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

(ஆதார நூல்கள்:  இப்னு மாஜா, பைஹகீ)

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆனும் நபிவழியும் 'ரிபா' எனும் வட்டியைத் தடை செய்திருக்க, உலகின் பெரும்பாலான சமுதாயங்கள் – முஸ்லிம்கள் உள்பட – இன்னும் இதைப்பற்றிப் புரியாமல் தெளிவற்ற நிலையில் இருப்பது, அது சரியாக விளக்கப்படவில்லை எனக் கருதுவது வியப்பிலும் வியப்பாக உள்ளது!  எனவேதான், இந்த 'ரிபா' நம் முன்னோர்களால் எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டது என்பதை அதன் உண்மையான பொருளை விளக்கி நாம் அலச வேண்டியதாக இருக்கிறது. 

அரபுச் சொல்லகராதிகளை நமக்குத் தந்தவர்களான இப்னு மன்தூர் (லிசானுள் அரப்), அல்-ஜுபைதீ (தாஜுல் அருஸ்), ராகிப் அல்-இஸ்ஃபஹானி (அல்-முஃப்ரதாத்) ஆகியவர்களைச் சான்றுகளாகக் கொள்ளவேண்டிதாய் உள்ளது.  இவர்கள் அனைவரும் 'ரிபா' என்பது, 'கூடுதல்', 'மேலதிகமானது', 'விரிவடைவது' அல்லது 'வளர்ச்சியடைவது' போன்ற பொருள்களில் எடுத்தாள்கின்றனர்.  எனினும், எல்லாப் பொருள் வளர்ச்சிகளும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவையல்ல.  இதனடிப்படையில், இலாபம் என்பது, போட்ட முதலைவிடக் கூடுதலாக நமக்குக் கிடைப்பதாகும்; எனவே, அது நமக்குத் தடை செய்யப்பட்டதன்று.  அவ்வாறாயின், தடை செய்யப்பட்டது என்பது யாது?

இந்தக் கேள்விக்கு விடை தர முழு உரிமை பெற்ற மாமனிதர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவர் மட்டுமே எனக் கூறலாம்.  ஏனெனில், அவர்கள்தாம் கடன் அளித்தல் என்ற ஒன்றுக்காக ஏதேனும் அன்பளிப்பையோ, சேவையையோ, சலுகையையோ அடைவதைத் தடை செய்த பெருமான்.  அவர்கள்தான் சொன்னார்கள்:  "பிறருக்குக் கடன் வழங்குபவர், அதற்காக அன்பளிப்பு எதையும் பெறக் கூடாது."  நபிமொழிக் கலை வல்லுநர் இமாம் புகாரி (ரஹ்)அவர்கள் அறிவித்த இந்த நபிமொழியை இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தமது 'அல்-முன்தகா' எனும் நூலில் எடுத்துரைக்கிறார்கள்.

இன்னொரு நபிமொழியும் இதனைத் தெளிவு படுத்துகின்றது:  "மற்றவருக்குக் கடனுதவி செய்யும் ஒருவர், அவருடன் வழக்கமாக நடந்துகொள்வது போலன்றி, அதற்குப் பகரமாகக் கடன் பெற்றவரிடமிருந்து ஓர் உணவையோ அவருடைய வாகனத்தின் மீது சவாரி செய்வதையோ பகரமாகப் பெறக்  கூடாது."  (சுனன் அல்பைஹகி, கித்தாபுல் புயூஉ)

மேற்கண்ட நபிமொழிகள், 'ரிபா' என்பதும், இன்று மக்களின் புழக்கத்தில் இருக்கும் 'வட்டி'  (interest) என்பதும் ஒன்றுதான் என்பதைத் தெளிவாக்குகின்றன.  இஸ்லாமிய வரலாற்றில் முன்னிலை வகிக்கும் பேரறிஞர்கள் பலரின் எழுத்துகளும் இக்கருத்தைத்தான் பிரதிபலிக்கின்றன.  இதற்கு மாறான கருத்தைத் தரும் குர்ஆன் விரிவுரைகளோ அரபி மொழி அகராதிகளோ இல்லை என்பதுவே உண்மை நிலை.  பேரறிஞரும் வான்மறை குர் ஆனின் விரிவுரையாளருமான அல்-குர்த்துபி (இறப்பு: ஹிஜ்ரி 671 / கி.பி. 1070) அவர்கள் தமது விரிவுரையில் குறிப்பிடுவதாவது:  

"கடனாகக் கொடுக்கப்பட்ட தொகையைவிடக் கூடுதலாகப் பெறும் சிறிய பெரிய தொகை எதுவாயினும், ஒரு பிடி வைக்கோலாயினும் ஒரு தானியத்தின் பகுதியாயினும், அது வட்டியேயாகும் என்ற நபியவர்களின் அறவுரையை  முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்த அடிப்படையில் ஏற்றுக்கொள்கின்றனர்."

'லிசானுள் அரப்' எனும் அரபி அகராதியைத் தொகுத்த இப்னு மன்தூர் (இறப்பு: ஹிஜ்ரி 711 / கி.பி. 1311) அவர்கள் தெளிவாகக் குறிப்பிடுவதாவது:  ஒருவர் கொடுத்த கடனுக்காக எந்த ஒரு தொகையையோ வெகுமதியையோ ஒரு பிரதி உபகாரத்தையோ பெற்றுக்கொள்வதற்குப் பெயர்தான் தடை செய்யப்பட்ட வட்டியாகும்.  இக்கருத்தையே அறிஞர் ஃபக்ருத்தீன் அல்-ராஜி (தஃப்ஸீர் அல்-கபீர்), அபூபக்ர் அல்-ஜஸ்ஸாஸ் (அஹ்காம் அல்-குர்ஆன்) போன்ற அறிஞர்கள் வலியுறுத்திப் பேசுகின்றனர்.

எனவே, பண்டைக் காலம் முதல், 'ரிபா' என்ற சொல்லுக்கு, கடனுக்கான தவணையின் முடிவில் அந்தக் கடன் தொகையுடன் நிபந்தனையிட்டுச் சேர்த்துக் கொடுக்கும் தொகை என்றே பொருள் கொள்ளப்பட்டு வந்துள்ளது.  அண்மைக் காலத்தில் கூடிய அனைத்துலக இஸ்லாமியச் சட்ட வல்லுனர்களின் மாநாடுகளில் (பாரிஸ்-1951, கெய்ரோ-1965, 1985, மக்கா-1986) ஒருமித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தும் இதுவேயாகும்.

இவ்வாறான உறுதி மிக்க பெரும்பான்மைக் கருத்துகளுக்கு முன்னால், வட்டி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதன்று என்று ஓரிருவர் கருத்துத் தெரிவிப்பதால் உண்மைக்கு ஒன்றும் குறைவு வந்துவிடப் போவதில்லை.  இது போன்ற அங்குமிங்குமான 'புரட்சி' மொழிகளால் பொதுக் கருத்தில் எந்த விதப் பாதிப்பும் உண்டாகிவிடாது.  இவற்றின் காரணமாகவே சிலர் 'வட்டி' என்பதன் பொருள் யாது என்பதில் குழம்பி நிற்கிறார்கள்.  'ரிபா' எனும் சொல் 'ஷரீஆ'வில் இருவேறு பொருள்களில் கையாளப்படுவதுதான் இந்தக் குழப்பத்திற்குக் காரணம் எனலாம்.  அவ்விரண்டையும் அவற்றின் சரியான நிலையில் மக்கள் பொருத்திப் பார்க்காததும் மற்றொரு காரணமாகும்.
أحدث أقدم