குப்ர் (இறை நிராகரிப்பு) மற்றும் நிபாஃக் (நயவஞ்சகம்)

அல்‌ குப்ர்‌ (இறை நிராகரிப்பு)

அதன்‌ விளக்கம்‌:

அகராதியில்‌ குப்ர் என்றால்‌, மறைத்தல்‌, மூடல்‌ என்று பொருள்படும்‌.

மார்க்க அடிப்படையில்‌ குப்ர்‌ என்பது, ஈமானுக்கு எதிர்‌ மறையானதாகும்‌. குப்ர்‌ என்பது அல்லாஹ்வையும்‌ அவன்‌ தூதரையும்‌ நம்பிக்கை கொள்ளாதிருப்பதாகும்‌. 

அவனுடன்‌ பொய்ப்பிக்கும்‌ கெட்ட குணம்‌ இருந்தாலும்‌ இல்லாவிட்டாலும்‌ சரியே. எனினும்‌ சந்தேகம்‌, மறுப்பு, பொறாமை, பெருமை, நபி (ஸல்‌) அவர்களின்‌ மார்க்கத்தை பின்பற்றாது தன்‌ இச்சைகளைப்‌ பின்பற்றல்‌ போன்ற காரணங்களாலும்‌ குப்ர்‌ ஏற்படுகிறது. பொய்ப்பிக்கும்‌ தன்மை அவனிடம்‌ இருந்தால்‌ அது மிகப்பெரிய குப்ராகும்‌, என்றாலும்‌
மேற்கூறப்பட்டவையும்‌ குப்ராகும்‌. அவ்வாறே இறைத்‌ தூதர்களின்‌ உண்மை நிலையை உறுதி கொண்ட போதிலும்‌ பொறாமையின்‌ காரணமாக அவர்களை பொய்ப்பித்து மறுப்பவனும்‌ காபிராவான்‌.


குப்ரின்‌ வகைகள்‌

குப்ர் ‌இரண்டு வகைப்படும்‌ :

முதல் பிரிவு: குப்ர்‌ அக்பர்‌ பெரிய நிராகரிப்பு : 

இது இஸ்லாத்தை விட்டும்‌ மனிதனை வெளியேற்றுகிறது. இந்த குப்ர்‌ ஐந்து வகைப்படும்‌.

முதல்‌ பகுதி: குப்ர்‌ அல்‌ தக்தீப்‌ அதாவது பொய்பித்தலுடன்‌ நிராகரித்தல்‌. இதற்கு பின்‌வரும்‌ இறைவசனம்‌ ஆதாரமாகும்‌.

 وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِالْحَـقِّ لَـمَّا جَآءَهٗ‌ؕ اَلَيْسَ فِىْ جَهَـنَّمَ مَثْوًى لِّلْكٰفِرِيْنَ‏
 அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட அல்லது தன் முன் சத்தியம் வந்திருக்கும்போது அதைப் பொய்யென வாதிட்டவனைவிடப் பெரும் கொடுமைக்காரன் யார்? இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு நரகம் இருப்பிடமல்லவா? (அல்குர்ஆன்: 29:68)

இரண்டாவது பகுதி : உண்மைப்படுத்துவதுடன்‌ பெருமையடித்தலும்‌ மறுத்தலும்‌. இதற்கு பின்வரும்‌ இறைவசனம்‌ ஆதாரமாக உள்ளது.

 وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّاۤ اِبْلِيْسَؕ اَبٰى وَاسْتَكْبَرَ  وَكَانَ مِنَ الْكٰفِرِيْنَ‏
 பின்னர், “நீங்கள் ஆதத்துக்குப் பணியுங்கள்!” என்று வானவர்களுக்கு நாம் கட்டளையிட்டபோது அவர்கள் எல்லாரும் பணிந்தார்கள், இப்லீஸைத் தவிர! அவன் கட்டளையை மறுத்தான். மேலும் ஆணவம் கொண்டுவிட்டான்; நிராகரிப்பவர்களில் ஒருவனாகவும் ஆகிவிட்டான். (அல்குர்ஆன்: 2:34)

மூன்றாம்‌ பகுதி : சந்தேகத்துடன்‌ நிராகரித்தல்‌ - இதை எண்ணம்‌ கலந்த நிராகரிப்பு என்றும் சொல்லலாம் இதற்கு உதாரணமாக பின்‌வரும்‌ வசனத்தைக்‌ கூறலாம்‌.

 وَدَخَلَ جَنَّتَهٗ وَهُوَ ظَالِمٌ لِّنَفْسِهٖ‌ ۚ قَالَ مَاۤ اَظُنُّ اَنْ تَبِيْدَ هٰذِهٖۤ اَبَدًا ۙ‏
 பிறகு அவன் தனது தோட்டத்தினுள் நுழைந்தான்; அப்பொழுது தன்னுடைய ஆன்மாவுக்கே கொடுமை இழைப்பவனாய்க் கூறலானான்: “இந்தச் செல்வம் என்றைக்காவது அழிந்துவிடும் என்று நான் கருதவில்லை! (அல்குர்ஆன்: 18:35)

 وَّمَاۤ اَظُنُّ السَّاعَةَ قَآٮِٕمَةً  ۙ وَّلَٮِٕنْ رُّدِدْتُّ اِلٰى رَبِّىْ لَاَجِدَنَّ خَيْرًا مِّنْهَا مُنْقَلَبًا‏
 மறுமை எப்பொழுதேனும் வரும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை நான் என் இறைவனிடம் திரும்பக் கொண்டு செல்லப்பட்டால்கூட திண்ணமாக இதைவிட மகத்தான இடத்தையே நான் பெறுவேன்!” (அல்குர்ஆன்: 18:36)

 قَالَ لَهٗ صَاحِبُهٗ وَهُوَ يُحَاوِرُهٗۤ اَكَفَرْتَ بِالَّذِىْ خَلَقَكَ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّـطْفَةٍ ثُمَّ سَوّٰٮكَ رَجُلًاؕ‏
 அதற்கு அவனுடைய நண்பன் அவனிடம் உரையாடிக் கொண்டே கூறினான்: “அந்த மாபெரும் ஆற்றலுடையவனையா நிராகரிக்கிறாய்? அவனோ உன்னை மண்ணிலிருந்தும் பிறகு விந்திலிருந்தும் படைத்தான். பின்னர் உன்னை ஒரு முழு மனிதனாய் ஆக்கினான். (அல்குர்ஆன்: 18:37)

 لّٰـكِنَّا۟ هُوَ اللّٰهُ رَبِّىْ وَلَاۤ اُشْرِكُ بِرَبِّىْۤ اَحَدًا‏
 ஆனால், என்னைப் பொறுத்தமட்டில் அந்த அல்லாஹ்தான் என்னைப் பரிபாலிக்கும் இறைவன்! அந்த இறைவனுடன் எவரையும் நான் இணையாக்குவதில்லை. (அல்குர்ஆன்: 18:38)

நான்காவது பகுதி : புறக்கணிப்பதுடன்‌ நிராகரித்தல்‌ - பின்வரும்‌ வசனம்‌ இதற்கு‌ ஆதாரமாக உள்ளது.

 مَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَاَجَلٍ مُّسَمًّى‌ؕ وَالَّذِيْنَ كَفَرُوْا عَمَّاۤ اُنْذِرُوْا مُعْرِضُوْنَ‏
 நாம் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையே உள்ள அனைத்தையும் சத்தியத்திற்கேற்பவும் ஒரு குறிப்பிட்ட கால நிர்ணயத்துடனும் படைத்திருக்கின்றோம். ஆனால், இந்த நிராகரிப்பாளர்கள், அவர்களுக்கு எந்த உண்மை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளதோ, அதனைப் புறக்கணிக்கின்றார்கள். (அல்குர்ஆன்: 46:3)

ஐந்தாவது பகுதி: நயவஞ்சகத்துடன்‌ மறுத்தல்‌ - பின்‌வரும்‌ வசனம்‌ இதற்கு ஆதாரமாக உள்ளது.

 ذٰلِكَ بِاَنَّهُمْ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا فَطُبِعَ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُوْنَ‏
 இவை அனைத்திற்கும் காரணம், இவர்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் நிராகரித்துவிட்டதுதான். இதனால் அவர்களின் உள்ளங்களின் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது. இனி இவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. (அல்குர்ஆன்: 63:3)


இரண்டாவது பிரிவு: சிறிய நிராகரிப்பு: 

இது மனிதனை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றாது. இது அமல்கள்‌ சார்ந்த நிராகரிப்பாகும்‌. குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பாவங்கள் என்று பெயர் சொல்லப்பட்ட நிராகரிப்புகளாகும். இது பெரிய நிராகரிப்பின் இடத்தை அடையாது. உதாரணமாக குர்ஆன் வசனத்தில் சொல்லப்பட்டது போன்று அருட்கொடைகளை மறுப்பதாகும்.

 وَضَرَبَ اللّٰهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ اٰمِنَةً مُّطْمَٮِٕنَّةً يَّاْتِيْهَا رِزْقُهَا رَغَدًا مِّنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِاَنْعُمِ اللّٰهِ فَاَذَاقَهَا اللّٰهُ لِبَاسَ الْجُـوْعِ وَالْخَـوْفِ بِمَا كَانُوْا يَصْنَعُوْنَ‏
 மேலும், அல்லாஹ் ஓர் ஊரை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றான். அவ்வூர் மக்கள் அமைதியுடனும் நிம்மதியாகவும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு எல்லாத் திசைகளிலிருந்தும் வாழ்க்கைச் சாதனங்கள் தாராளமாய்க் கிடைத்துக் கொண்டிருந்தன. இந்நிலையில், அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி கொல்லலாயினர். அப்போது அல்லாஹ் அவர்கள் செய்து கொண்டிருந்த தீவினைகளின் விளைவை சுவைக்கச் செய்தான் பசி, அச்சம் எனும் துன்பங்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டன. (அல்குர்ஆன்: 16:112)

மேலும்‌ ஒரு முஸ்லிமை கொலை செய்வதையும்‌ உதாரணமாகக்‌ கூறலாம்‌.

முஸ்லிமைத்‌ திட்டுவது பாவமாகும்‌, அவனை கொலை செய்வது நிராகரிப்பாகும்‌ என நபி. (ஸல்‌) அவர்கள்‌ மொழிந்தார்கள்‌. (ஆதாரம்‌: புஹாரி, முஸ்லிம்‌),

ஒருவருக்‌ கொருவர்‌ கொலை செய்து கொள்ளும்‌ நிராகரிப்பாளர்களாக நீங்கள்‌ எனக்குப்‌ பிறகு மீண்டு விட வேண்டாம்‌. (ஆதாரம்‌: புஹாரி, முஸ்லிம்‌)

அல்லாஹ்‌ அல்லாதவர்கனைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்வதையும்‌ இங்கு. உதாரணமாகக்‌ கூறலாம்‌.
யார்‌ அல்லாஹ்‌ அல்லாததைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்கின்றாரோ அவர்‌ இறைவனை நிராகரித்து விட்டார்‌ அல்லது இணைவைத்து விட்டார்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்.
(திர்மிதி).

மேலும்‌ பெரும்‌ பாவங்களை செய்தவனையும்‌ முஃமின்‌ என்றே குறிப்பிடுகிறான்‌.

விசுவாசங்கொண்டோரே! கொலைக்காக பழி தீர்ப்பது உங்கள்‌ மீது விதிக்கப்பட்டுள்ளது.
(அல்பகரா: 178)

கொலை செய்தவனை ஈமான்‌ கொண்டவர்களில்‌ நின்றும்‌ வெளிப்படுத்தப்படவில்லை. இன்னும்‌ கொலை செய்யப்பட்ட பொறுப்பாளருக்கு சகோதரனாக ஆக்கியுள்ளான்‌. இதைப்‌ பற்றி இறைவன்‌ கூறும்‌ போது பின்வருமாறு கூறுகிறான்‌:

 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِى الْقَتْلٰى  ؕ الْحُرُّ بِالْحُـرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْاُنْثَىٰ بِالْاُنْثٰىؕ فَمَنْ عُفِىَ لَهٗ مِنْ اَخِيْهِ شَىْءٌ فَاتِّبَاعٌۢ بِالْمَعْرُوْفِ وَاَدَآءٌ اِلَيْهِ بِاِحْسَانٍؕ ذٰلِكَ تَخْفِيْفٌ مِّنْ رَّبِّكُمْ وَرَحْمَةٌ  ؕ فَمَنِ اعْتَدٰى بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِيْمٌۚ‏
 இறைநம்பிக்கை கொண்டவர்களே! கொலை வழக்குகளில் பழிவாங்கல் உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. கொலை செய்தவன் சுதந்திர மனிதன் என்றால் அந்தச் சுதந்திரமான மனிதனிடமும், கொலை செய்தவன் அடிமை என்றால் அந்த அடிமையிடமும், கொலை செய்தவள் ஒரு பெண் என்றால் அந்தப் பெண்ணிடமுமே பழிவாங்கப்பட வேண்டும். கொலை செய்தவனுக்கு அவனுடைய சகோதரனால் (அதாவது கொல்லப்பட்டவரின் உறவினரால்) சலுகை அளிக்கப்பட்டால், பிறகு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் உயிரீட்டுத் தொகையை நேர்மையான முறையில் அவன் வழங்கிட வேண்டும். இது, உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும். இதன் பின்னரும் எவராவது வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் தண்டனை உண்டு.
(அல்குர்ஆன்: 2:178)

இங்கு சகோதரன்‌ என்று இந்த வசனத்தில்‌ கூறப்பட்டுள்ளது. இஸ்லாத்தின்‌ சகோதரத்துவம்‌ என்பதில்‌ எவ்வித சந்தேகமும்‌ இல்லை. இன்னொரு வசனத்தில்‌ இறைவன்‌ இவ்வாறு கூறுகிறான்‌.

 وَاِنْ طَآٮِٕفَتٰنِ مِنَ الْمُؤْمِنِيْنَ اقْتَتَلُوْا فَاَصْلِحُوْا بَيْنَهُمَا‌ۚ فَاِنْۢ بَغَتْ اِحْدٰٮهُمَا عَلَى الْاُخْرٰى فَقَاتِلُوا الَّتِىْ تَبْغِىْ حَتّٰى تَفِىْٓءَ اِلٰٓى اَمْرِ اللّٰهِ ‌ۚ فَاِنْ فَآءَتْ فَاَصْلِحُوْا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَاَقْسِطُوْا ؕ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏
 மேலும், இறைநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் போரிட நேர்ந்தால் அவர்களிடையே சமரசம் செய்து வையுங்கள். பிறகு, அவர்களில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரிடம் வரம்புமீறி நடந்து கொண்டால், வரம்புமீறிய குழுவினருடன் அவர்கள், அல்லாஹ்வின் கட்டளையின்பால் திரும்பும் வரை அவர்களுடன் போர் புரியுங்கள். அப்படி அவர்கள் திரும்பிவிட்டால், அவர்களிடையே நீதியுடன் சமரசம் செய்து வையுங்கள்; இன்னும் நீதி செலுத்துங்கள். திண்ணமாக, அல்லாஹ் நீதிசெலுத்துபவர்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன்: 49:9)

 اِنَّمَا الْمُؤْمِنُوْنَ اِخْوَةٌ فَاَصْلِحُوْا بَيْنَ اَخَوَيْكُمْ‌وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏
 இறைநம்பிக்கையாளர்கள், ஒருவர் மற்றவருக்குச் சகோதரர் ஆவார்கள். எனவே, உங்கள் சகோதரர்களுக்கிடையே தொடர்புகளைச் சீர்படுத்துங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் மீது கருணை பொழியப்படக் கூடும்.
(அல்குர்ஆன்: 49:10)

(இது ஷரஹ்‌ அத்தஹாவிய்யாவில்‌ இருந்து சுருக்கப்பட்ட உரை)


பெரிய குஃப்ர்,‌ சிறிய குஃப்ர் ‌இரண்டிற்கும்‌ உள்ள வேறுபாடு

1 பெரிய குஃப்ர்‌ மனிதனை இஸ்லாத்தை விட்டும்‌ வெளியேற்றுகிறது. இன்னும்‌ அவனின்‌ அமல்களையும்‌ வீணாக்கி விடுகிறது. சிறிய குஃப்ர்‌ இஸ்லாத்தை விட்டும்‌ மனிதனை வெளியாக்கி விடாது. ஆனால்‌ அந்த குஃ.ப்ரைப்‌ பொறுத்து நன்மைகள்‌ குறைக்கப்படும்‌. மேலும்‌ அந்த அடியானுக்கு தண்டனைகளும்‌ உண்டு.

2 பெரிய குஃப்ர்‌ மனிதனை நரகத்தில்‌ நிரந்தரமாக இருக்கச்‌ செய்கிறது. சிறிய குஃப்ர்‌ மனிதனை நரகத்தில்‌ நிரந்தரமாக இருக்கச்‌ செய்யாது. சிறிய குஃப்ரில்‌ ஈடுபடுபவன்‌ பாவமன்னிப்புச்‌ செய்தால்‌ இறைவன்‌ மன்னிக்கிறான்‌. மேலும்‌ நரகத்தில்‌ நுழையாமல்‌ அவனைப்‌ பாதுகாக்கின்றான்‌.

3 பெரிய குப்ர்‌ உயிர்‌ உடைமை இரண்டையும்‌ ஆகுமாக்கின்றது. சிறிய குப்ர்‌ உயிர்‌ உடமை இரண்டையும்‌ ஆகுமாக்காது.

4-பெரிய குஃப்ரில்‌ ஈடுபடுவனுக்கும்‌ முஃமீன்களுக்கும்‌ மத்தியில்‌ பெரும்‌ பகைமையை ஏற்படுத்துகிறது. அவனை அன்பு கொள்வதும்‌, அவனைத்‌ தலைவனாக ஏற்றுக்‌ கொள்வதும்‌ முஃமீன்களுக்கு ஆகுமானதல்ல. அவன்‌ மிக நெருக்கமானவனாக இருந்தாலும்‌ சரியே. ஆனால்‌ சிறிய குஃப்ர் தலைமைத்துவத்தை பொதுவாக தடுக்காது, எனினும்‌ அவனிடம்‌ இருக்கும்‌ ஈமானைப்‌ பொறுத்து அன்பு வைக்கப்படுவான்‌. தலைமைத்துவம்‌ கொடுக்கப்படுவான்‌. மேலும்‌ அவனிடம்‌ இருக்கும்‌ பாவத்திற்கேற்ப கோபமும்‌, பகைமையும்‌ கொள்ளப்படுவான்‌.



அன்னிபாஃக்‌

விளக்கம்‌: மார்க்க அடிப்படையில்‌ நிபாஃக்‌ என்றால்‌ சிறந்தவைகளையும்‌, இஸ்லாத்தையும்‌ வெளிப்படுத்தலும்‌; தீயவைகளையும்,‌ (குப்‌ஃர்) நிராகரிப்பையும்‌ மறைத்தலுமாகும்‌. 

இது இவ்வாறு பெயர்‌ கூறப்பட்ட காரணம்‌ யாதெனில்‌: அவன்‌ மார்க்கத்தில்‌ ஒரு வாசலில்‌ நுழைந்து மறுவாசலால்‌ வெளியாகின்றான்‌. இதனால்‌ இறைவன்‌ ஒரு வசனத்தில்‌ பின்வருமாறு கூறுகிறான்

 اَلْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ بَعْضُهُمْ مِّنْۢ بَعْضٍ‌ۘ يَاْمُرُوْنَ بِالْمُنْكَرِ وَيَنْهَوْنَ عَنِ الْمَعْرُوْفِ وَيَقْبِضُوْنَ اَيْدِيَهُمْ‌ؕ نَسُوا اللّٰهَ فَنَسِيَهُمْ‌ؕ اِنَّ الْمُنٰفِقِيْنَ هُمُ الْفٰسِقُوْنَ‏
நயவஞ்சக ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒரே விதமானவர்கள்தாம்! அவர்கள் தீமை புரியுமாறு ஏவுகிறார்கள்; நன்மையை விட்டுத் தடுக்கிறார்கள். மேலும், தங்களுடைய கைகளை (நன்மையானவற்றை விட்டு) முடக்கிக் கொள்கின்றார்கள். அவர்கள் அல்லாஹ்வை மறந்ததனால் அல்லாஹ்வும் அவர்களை மறந்தான்! திண்ணமாக, இந்நயவஞ்சகர்கள் தீயவர்கள்தாம்! (அல்குர்ஆன்: 9:67)

அதாவது இவர்கள்‌ மார்க்கத்தை விட்டும்‌ வெளியானவர்கள்‌. எனவே முனாஃபிகீன்களை
இறைவன்‌ காபீர்களை விட மோசமான இடத்தில்‌ வைத்துள்ளான் இதை இறைவன்‌ பின்வருமாறு குறிப்பிடுகிறான்‌

 اِنَّ الْمُنٰفِقِيْنَ يُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُهُمْ‌ ۚ وَاِذَا قَامُوْۤا اِلَى الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰى ۙ يُرَآءُوْنَ النَّاسَ وَلَا يَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا قَلِيْلً
இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகின்றார்கள். உண்மையில் அவனே இவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருக்கின்றான். இவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் சோம்பல்பட்டுக் கொண்டே நிற்கிறார்கள். மக்களுக்குக் காட்டிக் கொள்ளவே தொழுகிறார்கள். இன்னும், அல்லாஹ்வை மிகக் குறைவாகவே நினைவுகூருகிறார்கள்.
(அல்குர்ஆன்: 4:142)

 اِنَّ الْمُنٰفِقِيْنَ فِى الدَّرْكِ الْاَسْفَلِ مِنَ النَّارِ‌ ۚ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيْرًا ۙ‏
 திண்ணமாக, நயவஞ்சகர்கள் நரகத்தின் மிக அடித்தட்டிற்கே செல்வார்கள். மேலும், அவர்களுக்கு உதவி செய்வோர் எவரையும் நீர் காணமாட்டீர்.
(அல்குர்ஆன்: 4:145)

 يُخٰدِعُوْنَ اللّٰهَ وَالَّذِيْنَ اٰمَنُوْا ‌ۚ وَمَا يَخْدَعُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَؕ‏
 (இப்படிக் கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரேயன்றி வேறில்லை! எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை.
(அல்குர்ஆன்: 2:9)

 فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌۙ فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًا ۚ وَّلَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙۢ بِمَا كَانُوْا يَكْذِبُوْنَ‏
 அவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ் (இந்)நோயை அவர்களுக்கு இன்னும் அதிகப்படுத்திவிட்டான். மேலும் அவர்கள் பொய்யுரைத்துக் கொண்டிருந்த காரணத்தால் கொடிய தண்டனையும் அவர்களுக்குண்டு.
(அல்குர்ஆன்: 2:10)


நிபாஃக்கின்‌ வகைகள்

நிபாஃக்‌ இரண்டு வகைப்படும்‌

முதல்‌ பிரிவு: அன்‌ நிபாஃக்‌ அல்‌ இஃதிகாதி : 

இது நிபாஃக்‌ அல்‌ அக்பர்‌ எனும்‌ பெரிய நிபாஃக்காகும்‌. இது இஸ்லாத்தை வெளிப்படுத்தி நிராகரிப்பை மறைப்பதாகும்‌. இந்தப்‌ பிரிவு மனிதனை பூரணமாக இஸ்லாத்தை விட்டும்‌ வெளியேற்றுகிறது. 

மேலும்‌ இந்த நிபாஃக்‌ உடையவன்‌ நரகத்தின்‌ அடித்தளத்தில்‌ இருப்பான்‌. இவர்களை அல்லாஹ்‌ எல்லா தீய வர்ணனைகள்‌ மூலமும்‌ வர்ணித்துள்ளான்‌. 

நிராகரிப்பு, நம்பிக்கை (ஈமான்‌) இல்லாதிருத்தல்‌, இஸ்லாத்தையும்‌ இஸ்லாத்தில்‌ உள்ளவர்களையும்‌ பரிகசித்தல்‌, இன்னும்‌: அவர்களை ஏளனமாக நினைத்தல்‌, இஸ்லாத்திற்கு எதிராக காபிர்களுடன்‌ பூரணமாக சேர்ந்து கொள்ளல்‌, மேலும்‌ இவர்கள்‌ எல்லாக்‌ காலங்களிலும்‌ இருப்பார்கள்‌. குறிப்பாக: இஸ்லாம்‌ மேலோங்கும்‌ போது இவர்கள்‌ அதைத்‌ தாங்கிக்‌ கொள்ள மாட்டார்கள்‌. எனவே,
அச்சமயத்தில்‌ இவர்கள்‌ இஸ்லாத்திற்கும்‌, இஸ்லாத்தை பின்பற்றுபவர்களுக்கும்‌ அந்தரங்கமாக மோசடிகள்‌ செய்ய வேண்டும்‌ என்ற எண்ணத்தோடு இஸ்லாத்தில்‌ நுழைய முயற்சி செய்வார்கள்‌. மேலும்‌ அவர்களின்‌ உயிரும்‌, உடமைகளும்‌ பாதுகாக்கப்பட வேண்டும்‌ என்பதற்காக முஸ்லிம்களோடு இணைந்து வாழ்வார்கள்‌. எனவே முனாஃபிக்‌ இறைவனைப்‌ பற்றியும்‌, வானவர்கள்‌, வேதங்கள்‌, தூதர்கள்‌, இறுதி நாள்‌ பற்றியும்‌ அவனுடைய விசுவாசத்தை வெளிப்படுத்துவான்‌. ஆனால்‌ அந்தரங்கத்தில்‌ இவைகள்‌ அனைத்துக்கும்‌ மாற்றமாக இருப்பதோடு இவைகளை பொய்ப்பிக்கக்கூடியவனாகவும்‌ இருப்பான்‌. இறைவனை ஈமான்‌ கொள்ளவும்‌ மாட்டான்‌.

நபி(ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட குர்ஆனில் இவர்களைப்பற்றி அல்லாஹ் தெளிவாக குறிப்பிடுகிறான். அந்த நபி (ஸல்) அவர்களை மனிதர்களுக்கு தூதராகவும், இறைவன் அனுமதியுடன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடியவராகவும் அந்த மனிதர்கள் செய்துகொண்டிருக்கும் விடயங்களை எச்சரிக்கை செய்யக்கூடியவராகவும், இறைவன் தண்டனை பற்றி அச்சம் ஏற்படுத்தவும் அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.

இந்த நயவஞ்சகம்‌ உள்ள முனாஃபிகீன்களின்‌ திரையை இறைவன்‌ அகற்றி விட்டான்‌. இவர்களுடைய இரகசியங்களையும்‌ அல்லாஹ்‌ குர்‌ஆனில்‌ வெளிப்படுத்தி விட்டான்‌. இவர்களுடைய விடயங்களில்‌ அடியார்கள்‌ பங்கு கொள்ளாமல்‌ இருப்பதற்காகவும்‌, அவைகளில்‌ இருந்து எச்சரிக்கையாக இருப்பதற்கும்‌ இறைவன்‌ இவைகளை தெளிவுபடுத்தியுள்ளான்‌. ஸுரதுல்‌ பகராவில்‌ முதல்‌ பகுதியில்‌ மூன்று கூட்டத்தினரைப்‌ பற்றி குறிப்பிட்டுள்ளான்‌ :

(1) முஃமீன்கள்‌ (2) காபீர்கள்‌ (3) முனாபிகீன்கள்‌.

முஃமீன்கள்‌ விடயமாக 4 வசனங்களையும்‌ காபிர்கள்‌ விடயமாக 2 வசனங்களையும்‌ முனாஃபிகீன்கள்‌ விடயமாக 13 வசனங்களையும்‌ குறிப்பிட்டுள்ளான்‌. இவர்கள்‌ அதிகமாக இருப்பதாலும்‌ இவர்களுடைய சோதனைகள்‌ பரவலாக இருப்பதனாலும்‌ இஸ்லாத்திற்கும்‌, இஸ்லாத்தில்‌ உள்ளவர்களுக்கும்‌ அவர்களால்‌ கடினமான பிரச்சனைகள்‌ இருப்பதாலும்‌
இறைவன்‌ அவர்களைப்‌ பற்றி அதிகமாக குறிப்பிட்டுள்ளான்‌. இஸ்லாத்தில்‌ அவர்களது சோதனை மிகவும்‌ கடினமானதாகும்‌. 

ஏனெனில்‌ அவர்கள்‌ இதற்காகவே சாட்டப்பட்டவர்களாவர்‌. மேலும்‌ இஸ்லாத்தின்‌ தலைமைத்துவம்‌, இஸ்லாத்தின்‌ வெற்றி இவைகளை அனைத்தும்‌ இவர்களுக்கே சாட்டப்படடுள்ளது. உண்மையில்‌ இவர்கள்‌ இஸ்லாத்தின்‌ எதிரிகளே. மேலும்‌ இவர்களின்‌ எதிர்ப்புகள்‌ எல்லாக்‌ காலங்களிலும்‌ வெளியாகிக்‌ கொண்டே இருக்கும்‌. இவைகளை ஒரு மடையன்‌ அறிவு என்றும்‌, சீர்திருத்தம்‌ என்றும்‌ நினைப்பான்‌. ஆனால்‌ இது மடமையின்‌ உச்ச நிலையும்‌, பிரச்சனையுமாகும்‌.

இந்த நிபாஃக்‌ ஆறு வகைப்படும்‌:

1- நபி (ஸல்‌) அவர்களைப்‌ பொய்ப்பித்தல்‌.

2- நபி (ஸல்‌) அவர்கள்‌ மூலம்‌ வந்த சில செய்திகளைப்‌ பொய்ப்பித்தல்‌. 

3- நபி (ஸல்‌) அவர்களை வெறுத்தல்‌.

4- நபி (ஸல்‌) அவர்கள்‌ மூலம்‌ வந்த சில செய்திகளை வெறுத்தல்‌.

5- நபி (ஸல்‌) அவர்களின்‌ மார்க்கம்‌ தோல்வி காணும்‌ போது சந்தோஷப்படல்‌.

6- நபி (ஸல்‌) அவர்களின்‌ மார்க்கத்திற்கு வெற்றி கிடைக்கும்‌ போது வெறுப்புக்‌ கொள்ளல்‌.


இரண்டாவது பகுதி: அன்னிபாஃக்‌ அல்‌அமலி: 

உள்ளத்தில்‌ இறைநம்பிக்கை எஞ்சியிருக்க நயவஞ்சகர்களின்‌ செயல்களில்‌ ஈடுபடுதல்‌. இது மனிதனை இஸ்லாத்தை விட்டும்‌ வெளியேற்றாது என்றாலும்‌ இஸ்லாத்தை விட்டு வெளியேற்றுவதற்கு ஒரு வழியாக இது அமைகிறது. இதில்‌ ஈடுபடுபவன்‌ ஈமானில்‌ இருப்பதோடு, நயவபஞ்சகத்திலும்‌ இருப்பான்‌. மேலே கூறப்பட்ட தன்மைகள்‌ அதிகரிக்கும்‌ போது அதனால்‌ அவன்‌ சுத்த
முனாஃபிக்காக மாறிவிடுகிறான்‌. 

இதற்கு பின்வரும்‌ நபி மொழி ஆதாரமாக அமைகிறது;
நபி (ஸல்‌) அவாகள்‌ கூறினார்கள்‌ : “நான்கு பண்புகள்‌ உள்ளன, இவை யாரிடம்‌ உள்ளதோ அவன்‌ சுத்த நயவஞ்சகனாகி விடுவான்‌. இவைகளில்‌ ஒரு பண்பு யாரிடம்‌ உள்ளதோ அதை அவன்‌ விடும்‌ வரை நயவஞ்சகத்தின்‌ ஒரு பகுதி அவனிடம்‌ இருக்கும்‌.

நம்பிக்கை வைத்தால்‌ மோசடி செய்வான்‌, பேசினால்‌ பொய் உரைப்பான், உடன்படிக்கை செய்தால் மாற்றம்‌ செய்வான்,  விவாதம்‌ ஏற்பட்டால் சண்டை போடுவான்‌'. (ஆதாரம்‌: புஹாரி முஸ்லிம்‌)

இந்த நான்கு பண்புகள்‌ யாரிடம் ஒன்று சேருகிறதோ அவரிடம்‌ தீங்கு சேர்ந்து விட்டது. மேலும் அவரிடம் நயவஞ்சகர்களின்‌ பண்புகள்‌ இணைந்து விடுகிறது. இவைகளில்‌ ஒரு‌ பண்பு யாரிடம்‌ உள்ளதோ‌ நயவஞ்சகத்தின்‌ ஒரு பகுதி அவனிடம்‌ இருக்கும்‌. ஏனெனில்‌ சில நேரங்களில் ஓர் அடியானிடம்‌ நல்ல பண்புகளும்‌, தீய பண்புகளும்‌, ஈமானின்‌ பண்புகளும் நிராகரிப்பின் பண்புகளும்‌ சேர்கின்றன. அவன்
செய்யும்‌ கடமைகள்‌,‌‌‌ செயல்களைப் பொறுத்து நற்கூலிக்கும்‌, தண்டனைக்கும் ஆளாகின்றான்‌. அவைகளில்‌ ஒன்றுதான் பள்ளியில்‌ ஜமாத்துடன்‌ தொழாமல் சோம்பல்‌ காட்டுவது. ஏனெனில்‌ இது முனாஃபிகீன்களின் பண்பாகும். எனவே நிபாஃக்‌ என்பது மிக மோசமானதும்‌,‌‌ பயங்கரமானதுமாகும்‌. இந்த மோசமான பண்பில்‌ விழுவதை சஹாபாக்கள்‌ அஞ்சினார்கள்‌. இப்னு அபிமலீகா என்பவர் சொல்கிறார்‌: நபி (ஸல்‌) அவர்களின்‌‌ 30 சஹாபாக்களை‌ நான் சந்தித்தேன் அவர்கள் அனைவரும் நிபாஃக்கை அஞ்சக் கூடியவர்களாகவே
இருந்தனர்‌.


பெரிய நிபாஃக்‌ சிறிய நிபாஃக்‌ இரண்டிற்கும்‌ உள்ள வேறுபாடு:

1- பெரிய நிபாஃக்‌ மனிதனை இஸ்லாத்தை விட்டும்‌ வெளியேற்றுகிறது. சிறிய நிபாஃக் இஸ்லாத்தை விட்டும்‌ வெளியேற்றாது.

2- பெரிய நிபாஃக்‌ கொள்கையில்‌ உள்ளும்‌ புறமும்‌ மாறுபடுவது, சிறிய நிபாஃக்‌ கொள்கையல்லாது செயல்களில்‌ உள்ளும்‌ புறமும்‌ மாறுபடும்‌.

3- பெரிய நிபாஃக்‌ பொதுவாக முஃமினிடமிருந்து வெளிப்படாது. சிறிய நிபாஃக்‌ சில நேரம்‌ முஃமினிடம்‌ வெளிப்படுகிறது.

4- பெரிய நிபாஃகில்‌ ஈடுபடுபவன்‌ பெரும்பாலும்‌ மன்னிப்பு வேண்ட மாட்டான்‌. அவ்வாறு மன்னிப்பு வேண்டினாலும்‌ நீதிபதியிடத்தில்‌ அதை ஏற்றுக்‌ கொள்வதில்‌ கருத்து வேறுபாடு உள்ளது. சிறிய நிபாஃக்‌ இதற்கு மாற்றமாகும்‌. இறைவனிடத்தில்‌ இவன்‌ மன்னிப்பு வேண்டினால்‌ இறைவன்‌ அவனை மன்னித்து விடுவான்‌.


பெரிய நிபாஃக்‌ உடையவர்களைப்‌ பற்றிக்‌ கூறும்‌ போது இறைவன்‌ இவ்வாறு கூறுகிறான்‌.

 صُمٌّۢ بُكْمٌ عُمْىٌ فَهُمْ لَا يَرْجِعُوْنَ ۙ‏
 அவர்கள் செவிடர்களாய், ஊமையர்களாய், குருடர்களாய் இருக்கின்றனர். எனவே, இப்பொழுது அவர்கள் மீள மாட்டார்கள்;
(அல்குர்ஆன்: 2:18)

அதாவது அந்தரங்கத்தில்‌ இஸ்லாத்தின்‌ பால்‌ மீள மாட்டார்கள்‌. மீண்டும்‌ அவர்களைப்‌ பற்றி இறைவன்‌ இவ்வாறு கூறுகிறான்‌:

 اَوَلَا يَرَوْنَ اَنَّهُمْ يُفْتَـنُوْنَ فِىْ كُلِّ عَامٍ مَّرَّةً اَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوْبُوْنَ وَلَا هُمْ يَذَّكَّرُوْنَ‏
 ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறையோ இரு முறையோ அவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்பதை அவர்கள் கவனிப்பதில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் பாவமன்னிப்புக் கோருவதுமில்லை; நல்லுரை பெறுவதும் இல்லை!
(அல்குர்ஆன்: 9:126)

ஷைகுல்‌ இஸ்லாம்‌ இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌ கூறகிறார்கள்‌: நிபாஃக்‌. வெளிரங்கத்தில்‌ அறியப்படாத ஒன்றாதலால்‌ அதனுடையவர்களின்‌ தவ்பாவை வெளிரங்கத்தில் ஏற்றுக்கொள்வதில் கருத்துவேறுபாடு உள்ளது ஏனெனில் அவர்கள் எப்போதும் இஸ்லாத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்

Previous Post Next Post