நோய்த்தொற்று காரணமாக இஸ்லாமிய வரலாறுகளில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டதற்கான சான்றுகள் இருக்கத்தான் செய்கின்றன.
ஹதீஸ் கலை, இஸ்லாமியக் கொள்கை கோட்பாடு மற்றும் வரலாறுகளில் தேர்ச்சி பெற்ற இமாம் அல் ஹாபில் தஹபி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:
ஹிஜ்ரி 448 காலப்பகுதியில், எகிப்து மற்றும் அந்தலுஸ் பகுதிகளில் கடும் வறட்சி ஏற்ப்பட்டது, இதைப்போன்ற வறட்சியோ தொற்று நோயோ குர்துபாவில் இதற்கு முன் வந்ததே கிடையாது, பள்ளிவாசல்கள் கூட எந்த ஒரு தொழுகையாளியும் இன்றி மூடப்பட்டுக் கிடந்தன. அந்த ஆண்டிற்கு பெரும் பசியாண்டு என்ற பெயரும் உருவாகியது.
நூல் : ஸியரு அஃலாமின் நுபலா (18/311)
*ஷெய்ஹுல் முஅர்ரிஹீன் - வரலாற்று ஆசிரியர்களின் ஆசான் என்றழைக்கப்படும் தகியுத்தீன் மக்ரீஸிz (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியதாவது :*
ஹிஜ்ரி 749 காலப்பகுதியில் தாஊன் அஸ்வத் என்று அழைக்கப்படும் கருப்பு கொள்ளை நோய் காரணமாக பல இடங்களில் அதான் சொல்லுவது விடுபட்டுப் போனது, (அனைவரும் கேட்கும் வகையில்) குறிப்பிட்ட ஓர் இடத்தில் மாத்திரம் ஒரு அதான் சொல்லப்பட்டது, பெரும்பாலான ஜுமுஆ பள்ளிவாசல்களும் தகிய்யா பள்ளிவாசல்களும் மூடப்பட்டன. மக்களிடையே திருமண வைபவங்கள் மற்றும் ஏனைய சந்தோச நிகழ்வுகள் அனைத்தும் மங்கி மறைந்து காணப்பட்டன.
நூல் : அஸ்ஸுலூக் லிமஃரிபfதி துவலில் மலூக் (4/88)