மார்க்கத்தில் கருத்து வேற்றுமை ஏற்படக்கூடாத பகுதி யாது?

பலரும் நினைத்துக்கொண்டிருப்பது போல் பிக்ஹில் கருத்து வேற்றுமை ஏற்பட முடியும், அகீதாவில் கருத்து வேற்றுமை ஏற்பட முடியாது, அவ்வாறு ஏற்படுவது வழிகேடு என்ற கருத்து தவறாகும். 

ஏனெனில் அகீதா என்றால் உள்ளத்தால் நம்பவேண்டியவை என்பதே அர்த்தமாகும். அதில் கருத்து வேற்றுமை ஏற்படக் கூடாது என மார்க்கம் எங்கும் கூறவில்லை. அதனால்தான் நபித்தோழர்களுக்கு மத்தியிலும் கூட சில அகீதா விடயங்களில் கருத்து வேற்றுமை காணப்பட்டது. நபியவர்கள் மிஃராஜின் போது அல்லாஹ்வைப் பார்த்தார்களா?  மரணித்தவரால் உயிருள்ளவர்கள் பேசுவதைக் கேட்க முடியுமா? போன்ற விடயங்களை உதாரணமாகக் கூறலாம். இவைகள் பிக்ஹ் சட்டங்களல்ல அகீதா சார்ந்தவை என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயங்களாகும். 

அப்படியானால் கருத்து வேற்றுமைக்கொள்ளக் கூடாத பகுதி என்ன?

மார்க்கத்தில் கருத்து வேற்றுமை ஏற்படக்கூடாத பகுதி உஸூலுத்தீன் (மார்க்கத்தின் அடிப்படைகள்) என அழைக்கப்படும். இவை அகீதா சார்ந்ததாகவும் இருக்கலாம். பிக்ஹ் சார்ந்ததாகவும் இருக்கலாம். 

எனவே பிக்ஹ்தானே என எல்லாவற்றிலும் கருத்து வேற்றுமைப்பட முடியாது. உதாரணமாக இஸ்லாத்தின் நான்கு கடமைகள். தொழுகை 5 நேரமா 4 நேரமா? ளுஹர் எத்தனை ரக்அத்கள்? போன்றவற்றை உதாரமணமாகக் குறிப்பிடலாம். இவை பிக்ஹ் சார்ந்ததாக இருந்தாலும் மார்க்கத்தின் அடிப்படைகளில் உள்ளதாகும். இவற்றில் கருத்து வேற்றுமை கொள்வது தெளிவான வழிகேடாகும். இது போன்று எவற்றுக்கெல்லாம் மார்க்கத்தில் தெளிவான ஆதாரமும் அறிஞர்களின் ஏகமனதான தீர்மானமும் உண்டோ அவற்றில் கருத்து வேற்றுமை கொள்வது வழிகேடாகும். அதனைத்தான் நஸ் நேரடி ஆதாரம் உள்ளவற்றில் இஜ்திஹாத் செல்லுபடியாகாது என்ற விதி குறிப்பிடுகின்றது. 

அதே போன்று அகீதா என்பதற்காக அதில் மாற்றுக்கருத்துத் தெரிவிப்பது வழிகேடு எனக் கருதுவதும் தவறாகும். ஏனெனில் அனைத்து நம்பிக்கை சார்ந்த விடயங்களும் நேரடி ஆதாரம் மற்றும் இஜ்மாவை வைத்துத் தீர்மானிக்கப்படவில்லை. 

ஆனால் அகீதாவிலுள்ள பெரும்பாலான விடயங்கள் உஸுலுத்தீன் என்ற தரத்தில் உள்ளதாகும். அல்லாஹ்வின் பண்புகள் ஈமானின் ஆறு அம்சங்கள் போன்றவை இப்பகுதியைச் சார்ந்தவை என்பதனால்தான் அதில் மாற்றுக்கருத்துத் தெரிவிப்பது வழிகேடு எனக் கருதப்படுகின்றதே தவிர அவை அகீதா என்பதற்காக அல்ல.

-அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி
Previous Post Next Post