அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஸ் (ரலி)

அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஸ் (ரலி)

ஒருநாள் இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களிடம், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

உங்களில் நீண்ட கரங்களைக் கொண்டவரான ஒருவரான அவர் தான் (நான் மரணமடைந்த பின்) மறுமையில் என்னைச் சந்திக்கக் கூடிய முதலாமவராக இருப்பார்.

அன்னையர்களிலேயே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்த பின் மரணமடைந்தவர்களில் முதலாமவராக மரணமடைந்தார்கள், இன்னும் சொர்க்கத்தின் விருந்தினராகவும் ஆனார்கள்.

அன்னையவர்கள் அதிகமதிகம் தான தர்மங்கள் வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவரிடம் இருந்த இந்த கொடைத்தன்மையை வைத்துத் தான் அவரை, நீண்ட கைகளை உடையவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றார்.

அன்னையவர்களின் பிறப்பு:
அன்னையவர்கள் உமைமா பின்த் அப்துல் முத்தலிப் பின் ஹாஷிம் அவர்களின் மகளாவார்கள். இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தந்தை வழி மாமியின் மகளுமாவார்கள். அன்னையவர்கள் தனிப்பெரும் தளபதியான அப்துல்லா பின் ஜஹ்ஸ் (ரலி) அவர்களின் தங்கையுமாவார்கள். அன்னையவர்களின் இன்னுமொரு சகோதரர் அபூ அஹ்மத் (ரலி) இஸ்லாத்தைப் பற்றி தனது பாடல்களில் வடித்து மக்களுக்கு எழுச்சியூட்டி வந்த கவிஞருமாவார்கள். ஹம்னா பின்த் ஜஹ்ஸ் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபித்தோழியருமாவார்கள். அன்னையவர்களின் தந்தை வழிச் சிறிய தகப்பனாரான ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் இறைவழியில் உயர்துறந்த உயிர்த்தியாகிகளின் தலைவராவார். இன்னுமொரு சிறிய தந்தையான அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் தனது தானத்தின் மூலம் இஸ்லாமிய ஆரம்ப நாட்களில் இஸ்லாமிய வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியவரும் ஆவார்கள். ஸபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள், அன்னையவர்களின் தந்தை வழி மாமியுமாவார்கள்.

தான தர்மங்கள், தேவையுள்ளவர்களுக்கு இரங்குதல், தொழுகையில் தனிப்பட்ட அற்பணிப்புடன் தொழுதல் ஆகியவற்றில் தனிச்சிறப்புடன் விளங்கிய அன்னையவர்கள், முதன் முதலில் நபித்தோழரும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனுமான ஸைத் பின் ஹாரிதா (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள்.

இஸ்லாத்திற்கு முந்தைய வழக்கமான, வளர்ப்பு மகனை தனக்குப் பிறந்த மகனைப் போல உரிமை கொண்டாடும் வழக்கத்தை ஒழிப்பதற்காக, இறைவனது கட்டளையின் பேரில் ஸைத் பின் ஹாரிதா (ரலி) அவர்களால் மணவிலக்குச் செய்யப்பட்ட ஜைனப் (ரலி) அவர்களை, அதாவது தனது வளர்ப்பு மகனுக்கு முதலில் வாழ்க்கைப்பட்டு மணவிலக்குச் செய்யப்பட்டவரான ஜைனப் பின் ஜஹ்ல் (ரலி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மணமுடித்துக் கொண்டார்கள். அன்னையவர்களைத் திருமணமுடித்துக் கொண்டதன் பின் வழங்கப்பட்ட வலிமா (மண விருந்தின்) பொழுது தான், ஹிஜாப் குறித்த இறைவசனத்தை இறைவன் இறக்கியருளினான்.

அன்னையவர்கள் இயற்கையிலேயே இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகளில் அற்பணிப்புடன் செய்து வரக் கூடியவர்களாகத் திகழ்ந்தார்கள், அதன் காரணமாக அவர்களது அதிகமான நேரங்களை தொழுகையிலும், நோன்பு வைப்பதிலும் கழித்து வந்தார்கள். அன்னையவர்கள் இறந்ததன் பின்பு, அவர்கள் குடியிருந்த வீட்டை வலீத் பின் முகீரா அவர்கள் நாற்பது ஆயிரம் திர்ஹம்களுக்கு விலைக்கு வாங்கி, அதனை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலோடு இணைத்து விட்டார்கள். அன்னையவர்களைப் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கூறியதாவது, அன்னையவர்கள் இறையச்சம் அதிகமுள்ளவரும், விருந்தோம்பல் மிக்கவரும், இன்னும் நாணமிக்கவரும் ஆவார்கள் என்று கூறியுள்ளார்கள். அன்னையவர்கள் ஏழைக்கு இரங்கும் மனம் படைத்தவர்களாக இரந்த காரணத்தால், அன்னையவர்கள் இறந்த செய்தியைக் கேட்டு, மதீனாவில் இருந்த அத்தனை ஏழைகளும் கண்ணீர் வடித்தார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததன் பின்பு, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் முதன்முதலாக மரணமடைந்து, அதன் மூலம் இறைத்தூதர் (ஸல்) அவர்களை சொர்க்கச் சோலையில் முதன்முதலாகச் சந்திக்கும் பாக்கியம் பெற்றவராகவும் ஆனார்கள்.

அன்னையவர்கள் ஹிஜ்ரத்திற்கு 30 வருடங்களுக்கு முன்னர் பிறந்தார்கள். இவரது சகோதரரான அப்துல் பின் ஜஹ்ஸ் (ரலி) அவர்களின் அழைப்பின் பேரில், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அழகிய, புத்திக் கூர்மையுள்ள, இரக்க சுவாபமுள்ள என்று எண்ணற்ற பண்புகளை பெற்றவராக அன்னையவர்கள் திகழ்ந்தார்கள்.

இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் மக்காவை சுற்றிலும் ஒளி வீச ஆயத்தமான பொழுது, அதனால் வெகுண்டெழுந்த விட்டில் பூச்சிகள், முஸ்லிம்களின் மீது சொல்லொண்ணாக் கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்ட பொழுது, பலர் அவர்களது அந்தக் கொடுமைகளைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. சிலர் நெருப்புப் படுக்கையில் படுக்க வைக்கப்பட்டனர், சிலர் சுடுமணலில் கிடத்தப்பட்டு வெற்று மேனியுடன் தெருவெங்கும் இழுத்துச் செல்லப்பட்டனர். இன்னும் சிலரை வைக்கோல் கொண்டு சுற்றப்பட்டு அதில் நெருப்பை மூட்டி விட்டு, அதில் எழுகின்ற புகையை சுவாசிப்பதன் மூலம் அவர்களுக்கு மூச்சுத் திணறலை உண்டு பண்ணப்பட்டது. அல்லாஹ் ஒருவன் தான் என்று கூறிய காரணத்திற்கு தினம் தினம் விதவிதமான கொடுமைகளை முஸ்லிம்கள் மீது அரங்கேற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. அந்தக் குறைஷிகளின் முற்று முழு நோக்கமும், முஸ்லிம்கள் தங்கள் இறைநம்பிக்கையைக் கைவிட்டு விட்டு, தங்களது பழைய மார்க்கத்திற்குத் திரும்ப வேண்டும் என்பதே அவர்களது பிரதான நோக்கமாக இருந்தது. ஆரம்ப கால மக்கா வாழ்க்கை என்பது முஸ்லிம்களுக்கு சொல்லொண்ணா கொடுமைகள் நிறைந்ததாக இருந்தது. இந்தக் கொடுமைகளை எல்லாம் சகித்துக் கொண்டு பொறுமையாக இருக்கும்படியும், தைரியமாக இருந்து வரும்படியும் தனது தோழர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆறுதல் வழங்கினார்கள். இன்னும் இறுதியில் குறைஷியர்களின் கொடுமைகள் உச்ச நிலையை அடைந்த பொழுது, தனது தோழர்களை நாடு விட்டு நாடு துறந்து செல்லும்படிப் பணித்தார்கள். முதலில் அபீசீனியாவிற்கும் பின்பு மதீனாவிற்கும் செல்லும்படி அறிவுறுத்தினார்கள்.

அவ்வாறு நாடு துறந்து சென்றவர்களில் ஜஹ்ஸ் குடும்பத்தவர்களும் ஆவார்கள். ஜஹ்ஸ் குடும்பத்தினர் அப்துல்லா பின் ஜஹ்ஸ் (ரலி) அவர்களின் தலைமையில் ஹிஜ்ரத் செய்தனர். அவ்வாறு புறப்பட்டவர்களில் தனது நாவன்மையால் மிகச் சிறந்த பாடகர் என்று புகழ் பெற்ற குருடரான அஹ்மது பின் ஜஹ்ஸ் (ரலி) அவர்களும் ஆவார்கள்.

அவர் தனது பாடலில் குறைஷிகள் இழைத்த கொடுமைகள் பற்றியும், ஹிஜ்ரத் செய்வதன் காரணம் பற்றியும், இன்னும் முஸ்லிம்களின் துணிவு பற்றியும் தனது பாடலில் விவரித்துப் பாடினார். இன்றும் அந்தப் பாடல் அரபுக் கவிதை வரிசையில் மிகவும் இலக்கியத்தரமான பாடலாகப் போற்றப்படுகின்றது.

அவ்வாறு ஹிஜ்ரத் சென்ற குழுவில், முஹம்மது பின் அப்துல்லா பின் ஜஹ்ஸ் (ரலி), ஸைனப் பின்த் ஜஹ்ஸ் (ரலி), ஹம்னாஹ் பின்த் ஜஹ்ஸ் (ரலி) (இவர் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களின் மனைவியாவார்), மற்றும் உம்மு ஹபீபா பின் ஜஹ்ஸ் (ரலி) (இவர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் மனைவியாவார்) ஆகியோர்கள் இருந்தனர்.

ஜஹ்ஸ் குடும்பத்தவர்களில் அனைவரும் ஹிஜ்ரத் செய்து சென்ற பின் அவர்களின் வீடுகள் ஆள் அரமற்ற வீடுகளாக மாறின. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட குறைஷிகளின் தலைவராக இருந்த அபூசுஃப்யான் அவர்கள் அதனை ஆக்கிரமித்துக் கொண்டார். எந்த வீடு ஓரிறைவனைத் தொழுது பிரார்த்திக்கப் பயன்படுத்தப்பட்டு வந்ததோ, அந்த வீடு இப்பொழுது சிலை வணங்கியின் கைகளுக்கு மாறியிருந்தது.

மக்கா வெற்றியினை அடுத்து, தனது வீட்டை பல தெய்வ வணக்க வழிபாடு நடத்துபவரின் கைகளுக்கு மாறி விட்டதைக் குறித்து கவலைப்பட்ட அப்துல்லா பின் ஜஹ்ஸ் (ரலி) அவர்கள், இதனை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். தனது ஆருயிர்த் தோழரின் கவலை தோய்ந்த முகத்தை உற்று நோக்கிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ்வே..! இந்த வீட்டை விட மிகச் சிறந்த வீடு ஒன்றை அந்த சுவனச் சோலைகiளில் பெற்றுக் கொள்ள நீங்கள் ஆசைப்பட மாட்டீர்களா? என்று கேட்டார்கள்.

நிச்சயமாக..! யா.. ரசூலுல்லாஹ்..! அல்லாஹ்வின் தூதரவர்களே..! என்று பதிலுரைத்தார்கள் அப்துல்லா பின் ஜஹ்ஸ் (ரலி) அவர்கள். இந்த வீட்டைக் காட்டிலும் சுவனத்தின் வீடு மிகச் சிறந்தது என்று கூறினார்கள். பின்பு அவருக்கு ஆறுதல் வழங்குமுகமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், இதனை விடச் சிறந்த வீடொன்றை அந்த சுவனத்தில் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் என்று கூறினார்கள்.

இப்பொழுது மதீனாவின் வாழ்க்கை மிகவும் அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. மக்காவிலிருந்து சென்ற முஹாஜிர்களுக்கும், மதீனாவில் வாழ்ந்த அன்ஸார்களுக்கும் இடையே மிகச் சிறந்த சகோதரப் பாசம் உருவாகி, இஸ்லாமிய சகோதரத்துவ சங்கமமாக மதீனா திகழ்ந்தது. அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மக்களாக காணப்பட்டார்கள். அவர்களில் எவரும் அடிமையும் இல்லை, எஜமானரும் இல்லை. அவர்களில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும், ஆனால் அவர்கள் அனைவரும் இறையச்சமிக்கவர்களாகவும், நல்ல குணநலன்கள் மற்றும் ஒழுக்கமிக்கவர்களாகவுமே திகழ்ந்தார்கள்.

இந்த முன்மாதிரிமிக்க சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒருவரான, தனது மைத்துணியான ஸைனப் (ரலி) அவர்களுக்கு, தனது வளர்ப்பு மகனும் மற்றும் தன்னிடம் அடிமையாயிருந்து பின்னர் உரிமை விடப்பட்டவருமான ஸைத் பின் ஹாரிதா (ரலி) அவர்களுக்கு மண முடித்து வைக்க நிச்சயம் செய்யத் தீர்மானிக்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த முடிவைக் கேள்விப்பட்ட ஸைனப் (ரலி) அவர்கள் செய்வதறியாது திகைத்துப் போய் விடுகின்றார்கள். இன்னும் தான் ஒரு கண்ணியமான குடும்பத்திலிருந்து வந்த பெண், இன்னும் அடிமையாயிருந்து பின் உரிமை விடப்பட்ட ஒருவரைத் தன்னால் மணந்து கொள்ள இயலாது என்பதையும் தெரிவிக்கின்றார்கள். இருவரும் மண முடித்துக் கொண்டால், இருவரது வாழ்வும் அமைதியாகக் கழியுமா என்பதிலேயே அவருக்கு சந்தேகமும் ஏற்பட்டது. ஆனால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், இதனை நான் முடிவு செய்து விட்டேன், அதற்கு ஸைனபே நீங்கள் சம்மதித்துத் தான் ஆக வேண்டும் என்று கூறி விடுகின்றார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தனது சம்மதத்தைத் தெரிவிக்கு முன்பாகவே, அவர்களுக்கு இறைவனால் கீழ்க்கண்ட வசனம் இறக்கியருளப்படுகின்றது :

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸ_லுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33:36)

இருவருக்கும் அதன் பின்னால் திருமணம் முடித்து வைக்கப்படுகின்றது, இருவரும் வெவ்வேறு சூழ்நிலைப் பின்னணியில் வளர்ந்தவர்கள் என்பதால், அவர்களால் இணைந்து சந்தோஷமாக வாழ இயலாமல் இருந்தது. இன்னும் அவர்களது வாழ்வில் அமைதி என்பது இல்லாமலேயே இருந்தது.

இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் எழுந்த காரணத்தினால், அவர்களது உறவில் விரிசல்கள் அதிகமாக விழ ஆரம்பித்தன. இன்னும் ஒரு ஆண் தனது மனைவியிடம் என்னென்ன மரியாதைகளை எதிர்ப்பார்ப்பானோ, அத்தகைய மரியாதைகள் எதனையும் ஸைனப் (ரலி) அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள இயலவில்லை. மிகவும் மனம் நொந்த நிலையில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்ற ஸைத் பின் ஹாரிதா (ரலி) அவர்கள், இந்தத் திருமணத்தின் மூலமாக தான் மிகவும் வேதனையடைந்திருப்பதாகவும், என்னைப் போலவே ஸைனப் (ரலி) அவர்களும் இருப்பதாகவும் கூறுகின்றார்கள். இவருக்கான அறிவுரை அவரைப் படைத்த இறைவனிடமிருந்தே வந்தது, இறைவன் தனது தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹியின் மூலம் இவ்வாறு அறிவித்துக் கொடுத்தான்,

''அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்"" (33:37)

இன்னும் பல முயற்சிகள் செய்தும், இருவரது வாழ்வும் அமைதியாகக் கழிவதற்கும் பதிலாக, அமைதியிழந்த நிலையிலேயே கழிந்தது, இறுதியாக ஸைனப் (ரலி) அவர்களை, ஸைத் பின் ஹாரிதா (ரலி) அவர்கள் மணவிலக்குச் செய்து விட்டார்கள்.

அரபுக்களிடம் ஒரு பழக்கம் ஆரம்ப காலத்திலிருந்த நிலவி வந்தது, அதன்படி ஒருவர் தனது வளர்ப்பு மகனால் மணவிலக்குச் செய்யப்பட்ட அல்லது விதவையாகி விட்ட மனைவியைத் திருமணம் செய்ய முடியாது. அது தவறான செயலாகக் கருதப்பட்டது. இந்த அறியாமைக்காலத்து மூடப்பழக்கத்திற்கு முடிவு கட்ட நினைத்த இறைவன், ஒருநாள் ஸைனப் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் மணமுடிக்கப்படுவார்கள் என்ற செய்தியை ரகசியமாகத் தெரிவித்து வரும்படிப் பணிக்கின்றான். இந்த செய்தியைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள், இது அரபுக்களின் வாழ்க்கைப் போக்கிற்கு முற்றிலும் மாற்றமானதாயிற்றே என்று அவர் மிகவும் கவலைப்படுகின்றார்கள். இவ்வாறு தனக்கும் விவாக விலக்குப் பெற்ற ஸைனப் (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடக்குமென்றால் சொன்னால், அதுவே சமூகத்தில் குழப்பத்தையும், இன்னும் அவமானத்தையும் தேடித் தந்து விடுமே என்றும், அதன் பின்விளைவு முஸ்லிம்களுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி விடுமே என்று பயப்படுகின்றார்கள். ஆனால் இந்த முடிவு வல்லோனாம் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட முடிவு என்பதால், அதனைச் செயல்முறைப்படுத்தும்படி அவனிடமிருந்து கட்டளையும் இப்பொழுது வழங்கப்பட்டு விடுகின்றது,

(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; ''அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைதுதுக் கொள்ளும்"" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைதுதிருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (33:37)

ஸைனப் (ரலி) அவர்கள் தனது இத்தா என்ற காத்திருப்புக் காலத்தை முடித்த பின்னர், ஸைனப் (ரலி) அவர்களை தான் மணந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்து, ஸைத் பின் ஹாரிதா (ரலி) அவர்களிடம் அதற்கான தகவலை அனுப்பி விடுகின்றார்கள். ஸைத் பின் ஹாரிதா (ரலி) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களது வீட்டிற்குச் சென்ற பொழுது, ஸைனப் (ரலி) அவர்கள் மாவு அரைத்துக் கொண்டிருந்தார்கள். ஸைனப் (ரலி) அவர்களின் முதுகுப் புறத்தில் நின்று கொண்டிருந்த ஸைத் பின் ஹாரிதா (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் செய்தியைத் தாங்கிய கடிதத்தை ஒப்படைக்கின்றார்கள். அந்த செய்திக்கு உடனே பதில் கூறாத ஸைனப் (ரலி) அவர்கள், தனது இறைவனிடம் இதற்கான வழிகாட்டுதலைக் கோரி, அதன் பின்னர் அதற்கான பதிலைத் தெரிவிப்பதாகக் கூறி ஸைத் பின் ஹாரிதா (ரலி) அவர்களை அனுப்பி விடுகின்றார்கள்;.

அதன் பின் தனக்கு வழிகாட்டுமாறு, இறைவனிடம் முறையிடுகின்றார்கள். அவர் அதற்கான நாட்டத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையிலேயே, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து, திருவசனம் அருளப்படுகின்றது, அதில், இருவரது திருமணத்தையும் அதற்கான சம்பிரதாயங்களையும் இறைவன் தனது வானலோகத்திலேயே தானே நடத்தி விட்டதாக அறிவிக்கின்றான். இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்ட உத்தரவை அடுத்து, திருமணத்திற்காக செய்யப்படுகின்ற அறிவிப்புகள், உற்றார், நண்பர்களுக்குத் தெரிவித்தல் போன்ற எந்த சம்பிரதாயங்களும் இன்றி, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நேரடியாக ஸைனப் (ரலி) அவர்களது இல்லத்திற்குச் செல்கின்றார்கள், ஒரு வீட்டிற்குள் நுழையும் பொழுது கடைபிடிக்க வேண்டிய எந்த சம்பிரதாயங்களையும் கடைபிடிக்காமல், ஸைனப் (ரலி) அவர்களுக்குக் கூட இது பற்றித் தெரிவிக்காமல் ஸைனப் (ரலி) அவர்களது வீட்டில் நுழைகின்றார்கள். இது குறித்து சில முக்கியக் குறிப்புகள் இங்கு நோக்கத்தக்கவை :

திருமறைக் குர்ஆனின் கட்டளையே, இந்தத் திருமணத்திற்கான பொறுப்பாளராகவும், சாட்சியமாகவும் ஆக்கப்படுள்ளது

அந்த அறியாமைக்கால நடைமுறையின் வழி வந்த அடிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மகனுக்கு, இரத்த உறவில் பிறந்த மகனைப் போன்றே கருதப்பட்டு வந்த நிலை மாற்றப்படுகின்றது, இதன் மூலம் அன்றைய அறியாமைக்காலப் பழக்கத்தில் இருந்த தகப்பனார் தனது வளர்ப்பு மகனின் விதவை அல்லது மணவிலக்குச் செய்யப்பட்ட மனைவியை மணந்து கொள்ள இயலாது என்ற நடைமுறை தடை செய்யப்படுகின்றது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களில், தனது திருமணமானது தனது குடும்பத்தாரால் நிச்சயிக்கப்பட்டதல்ல, அது தன்னைப் படைத்த இறைவனால் நிச்சயிக்கப்பட்டு நடத்தி வைக்கப்பட்டது என்று பெருமைபட மற்ற அன்னையர்களிடம் கூறி, ஸைனப் (ரலி) அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்களாம்.

இந்த திருமணத்தைப் பற்றி நயவஞ்சர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கேலி செய்த பொழுது அதற்கு இறைவன் இவ்வாறு தனது திருமறையின் மூலமாகப் பதிலளிக்கின்றான் :

நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும். (இறை தூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்; ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன். (33:38-39)

இன்னும் இதனை விட விளக்கமாக இந்த நடைமுறையின் பின்னணியைப் பற்றி விளங்க வேண்டும் என்றால், அதனைத் தொடர்ந்து வருகின்ற கீழ்க்கண்ட வசனம் அதற்கான தெளிவான பதிலைத் தரக் கூடியதாக இருக்கின்றது.

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (33:40)

இதற்குப் பின்பாக இறைவன் தத்துப் பிள்ளைகளினுடைய நிலைகள் குறித்த இஸ்லாமிய சட்ட திட்;டங்கள் என்னவென்பதை இங்கே விவரிக்கின்றான்,

உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான். (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்;. (33:4-5)

மேலும், இந்த திருமணத்திற்குப் பின்பு இறைவன் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதன் அவசியம் சம்பந்தமான வசனத்தை இறக்கியருளியதோடு, இன்னும் இதற்குப் பின்பு வேறு எவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களைத் திருமணம் செய்வது மற்ற ஆண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்ற வசனத்தையும் இறக்கியருளினான். இந்த இரண்டு கட்டளைகளும் ஒரு அத்தியாயத்தில் தொடராக வழங்கப்பட்டுள்ளன. அவையாவன :

முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப் பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேசசுக்களில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை நபியுடைய மனiவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல. அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும். (33:53)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவார்கள், மதிப்பிலும், அந்தஸ்திலும் எனக்கு நிகரானவர் என்று ஸைனப் (ரலி) அவர்களைப் பற்றிக் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்வின் மிக நெருக்கத்தை விரும்பக் கூடியவர்களில் இவரைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததில்லை என்றும் கூறியிருக்கின்றார்கள். அல்லாஹ்வின் நெருக்கம் மற்றும் திருப்பொருத்தத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே இறைவனுக்கு உவப்பைத் தரக் கூடிய தான தர்மங்களில் தாரளப் போக்குடையவர்களாகவும், உறவினர்களிடையே உறவை நன்முறையில் பேணக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

மதீனாவில் கெட்ட பேச்சுக்கள் மக்களிடையே அதிகமாகி விட்டன என்று ஆயிஷா (ரலி) அவர்கள் தவறான முறையில் குற்றச்சாட்டை இறைத்தூதர் (ஸல்) அவர்களது முன்னிலையில் வைத்த பொழுது, அது பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களின் கருத்தைக் கேட்டார்கள். அப்பொழுது அன்னையவர்களின் மேன்மையான குணம் வெளிப்பட்டது, அதுவே பதிலாகவும் வெளிவந்தது. அன்னையவர்கள் கூறினார்கள், இதில் நான் எனது மூக்கை நுழைக்க விரும்பவில்லை, இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகளுக்குத் துணை போவதன் மூலம், எனது காதுகளையும், எனது கண்களையும், எனது நாவையும் அசுத்தப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. நிச்சயமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் நற்குணங்களையும், இறைவனுக்குப் பயந்த பண்பையும் தான் நான் கண்டிருக்கின்றேன் என்று கூறினார்கள். இன்னும் அவர்களிடம் ஒற்றுமை, நேர்மை மற்றும் கண்ணியம் போன்ற நற்பண்புகளுக்கான எடுத்துக்காட்டாகவே அவர்களைக் கண்டிருக்கின்றேன். இன்னும் அவர்களிடம் நல்லனவற்றைத் தவிர, அதுவன்றி வேறு எதனையும் நான் கண்டதில்லை என்றும் கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த சம்பவத்தைப் பற்றி இப்படிக் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் எனது சக்களத்தி என்ற முறையில் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, எனக்கெதிரான கருத்துக்களைப் புனைந்து கூறியிருக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அந்த இக்கட்டான நேரத்தில், எனது வாழ்வில் நான் மிகக் கடுமையான சோதனைக்குட்பட்டிருந்த அந்த நாளில், முழு உலகமே முற்றிலும் எனக்கெதிராக மாறி இருந்த அந்த நாளில், எனக்கு ஆறுதல் தரக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை நான் எனது வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது.

ஒருநாள் அன்னையவர்கள், ஸஃபிய்யா (ரலி) அவர்களைப் பார்த்து நீங்கள் ஒரு யூதப் பெண் தானே என்று கூறி விடுகின்றார்கள். இந்த வார்த்தை அன்னை ஸபிஃய்யா (ரலி) அவர்களை மிகவும் காயப்படுத்தி விட்டது. அன்றிலிருந்து இருவரும் பேசிக் கொள்வதையே நிறுத்திக் கொண்டார்கள். தான் தவறு செய்து விட்டதை உணர்ந்து கொண்ட அன்னை ஸைனப் (ரலி) அவர்கள், தான் அவர்களை அவமதித்து விட்டதாகவும் அதற்கு வருத்தப்படுவதாகவும் கூறினார்கள். இது விஷயமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் பேசி, தான் இந்த செயலுக்காக மிகவும் மன வருத்தப்படுவதாகவும், அதற்கு பாவப் பிராயச்சித்தம் தேடிக் கொண்டதாகவும் தனக்காக பரிந்து பேசும்படி ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஸைனப் (ரலி) அவர்கள் கூறினார்கள். ஏனென்றால், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நேரடியாக இது பற்றிப் பேசக் கூடிய துணிச்சல் பெற்றவராக ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டுமே இருந்தார்கள். எனவே, ஸைனப் (ரலி) அவர்களின் நிலையை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பதற்காக தகுந்த நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த ஆயிஷா (ரலி) அவர்கள், அதற்கான சந்தர்ப்பம் கிடைத்த பொழுது ஸைனப் (ரலி) அவர்களின் சங்கடத்தை விவரித்தார்கள். அதன் பின்பு ஸைனப்(ரலி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மன்னித்ததோடு, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கிடையே இருந்த அந்த கசப்புணர்வு மறைந்து, மீண்டும் சகஜ வாழ்வு திரும்பியது.

அன்னை ஸைனப் (ரலி) அவர்கள் மரணமடைந்து விட்ட பொழுது, அவர்களைக் குறித்து நினைவு கூர்ந்த ஆயிஷா (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், எனது மனைவிமார்களில் மிக நீண்ட கைகளை உடையவர் தான் என்னை(எனது மரணத்திற்குப் பின்) முதலில் சந்திக்கக் கூடியராக இருப்பார் என்று கூறினார்கள். மற்ற அன்னையர்களுடன் ஒப்பிடும் பொழுது, அன்னை ஸைனப் (ரலி) அவர்கள் இயற்கையாக குள்ளமாக இருந்ததோடு, குட்டையான கைகளையே கொண்டிருந்தார்கள். எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த முன்னறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு, அத்தனை அன்னையர்களும் தங்களது கைகளை மற்றவர்களது கைகளுடன் அளந்து பார்த்துக் கொண்டார்கள். ஆனால் மிக நீண்ட கை என்பது, பிறரது உதவிக்காக இரங்கும், தாராளப் போக்கு கொண்ட தான தர்மங்கள் வழங்கக் கூடியவர்கள் என்பதைத் தான் இங்கு உவமையாகக் குறிப்பிட்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பானது, அன்னை ஸைனப் (ரலி) அவர்கள் மரணமடைந்ததுடன் உண்மையானது. அதாவது, மற்ற அன்னையர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை அந்த சுவனச் சோலைகளில் சந்திக்க முன்பதாக அன்னை ஸைனப் (ரலி) அவர்கள் சந்திப்பார்கள் என்பதே அர்த்தமாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் மேலும் கூறுவதாவது,
ஸைனப் (ரலி) அவர்கள் தனது வேலைகளைத் தானே செய்து கொள்வார்கள், தான் பெற்றுக் கொண்டதை பிறருக்குக் கொடுத்து மகிழக் கூடிவர்களாக இருந்தார்கள். அவர்கள் இறையச்ச மிக்கவர்கள், நேர்மையானவர்கள் இன்னும் அவர்கள் சுயமாக தானே தனது வேலைகளைப் பிறரது உதவியின்றி செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களது அனைத்துச் செயல்பாடுகளும் இறைவனது திருப்தியை நோக்கமாகக் கொண்டதாகவே இருக்கும். சில சமயங்களில் அவர்கள் தனது கட்டுப்பாட்டை இழந்து கோபம் கொள்ளக் கூடியவர்களாக இருந்தாலும், உடனேயே தனது தவறான நிலையை உணர்ந்து, வருந்துவதோடு பாவ மன்னிப்புக் கோரக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். நேர்மையான இதயத்துக்குச் சொந்தக் காரராகவும், பரிசுத்த எண்ணங் கொண்டவராகவும் இருந்தார்களே தவிர, பிறருக்குத் துன்பம் விளைவிக்கவோ, பழிவாங்கும் நடவடிக்கைகளிலோ, கெட்ட எண்ணமோ கொள்ளாதவர்களாக இருந்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்குப் பின் தனது மனைவிமார்களது இல்லங்களுக்குச் சென்று அவர்களது உடல் நலம், தேவைகள் குறித்து விசாரித்து வரக் கூடியதை பழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு மனைவியின் இல்லத்திலும் சம அளவு நேரத்தைக் கழிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ஒருநாள் அன்னை ஸைனப் (ரலி) அவர்கள் தனது உறவினர் ஒருவரின் மூலமாக உயர்தரமான தேனை பெற்றுக் கொண்டார்கள். தேன் என்பது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் விருப்பமான உணவாகவும் இருந்தது. எனவே, அவ்வாறு ஸைனப் (ரலி) அவர்களின் வீட்டில் தேன் வழங்கப்படும் நாட்களில், அதன் சுவையையும், அதன் மணத்திற்காகவுமே சற்று அதிக நேரம் தங்கி விடக் கூடியவர்களாக இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களது வீட்டில் மட்டும் அதிக நேரத்தைச் செலவிடுவதன் காரணமாக, தங்களது நேரம் வந்தும் இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னிடம் வரவில்லையே என்று ஒவ்வொரு மனைவிமார்களும் அமைதியிழந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட மற்ற மனைவிமார்களில் ஆயிஷா (ரலி), சௌதா (ரலி) மற்றும் ஹஃப்ஸா (ரலி) ஆகியோர் ஒரு திட்டத்தைத் தயாரித்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் தங்கும் முறை தங்களுக்கு வரும் பொழுது, இவர்கள் அனைவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து ஒருவித நாற்றம் வருவதாகச் சொல்ல வேண்டும் என்று இவர்களுக்குள் முடிவாகியது. இவ்வாறாக அனைவரும் ஒரே செய்தியைத் திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதனை உண்மை என நம்பி, தான் அருந்திய தேன் தான் இப்படியான துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்று நம்ப ஆரம்பித்து விடுவார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னை எப்பொழுது தூய்மையான நிலையில் வைத்துக் கொள்ளவே விரும்புவார்கள் இன்னும் அதில் அதிகக் கவனம் செலுத்தக் கூடியவர்கள் என்பதால், தேன் அருந்துவதை விட்டு விடுவார்கள் என்று தான் இந்தத் திட்டத்தை அந்த மூன்று அன்னையர்களும் தயாரித்தனர். இவர்கள் போட்டி பொறாமையின் காரணமாக இப்படியொரு திட்டத்தைத் தயாரித்தார்கள் என்பதை விட, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தாங்கள் கொண்டிருக்கும் அன்பின் காரணமாக அவர்கள் தங்களுடைய நேரத்தில் தங்களுடன் இருக்க விரும்பியதன் காரணமாகவே இவ்வாறு செய்தார்கள். அன்னையர்களைப் பற்றி இறைவனே மிகவும் பெருமைப்படும்படியாக, கண்ணியமானவர்களாகக் குறிப்பிட்டுக் கூறியிருப்பதைப் பாருங்கள் :

நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல. (33:32)

அவர்கள் திட்டமிட்டமிட்டவாறே நடந்தது. தேனை விரும்பக் கூடிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்பொழுது, நான் இனிமேல் தேனே சாப்பிட மாட்டேன் என்று கூற ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் சாதாரண மனிதராக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்து இவ்வாறு கூறியிருப்பார்கள் என்று சொன்னால் அதனால் எந்தப் பிரச்னையும் எழப் போவதில்லை. ஆனால் இறைவனால் தடுக்கப்படாத ஒன்றை, இறைத்தூதராக இருப்பவர் எவ்வாறு தனக்குத் தடையாக்கிக் கொள்ள இயலும், அவ்வாறு தடையாக்கிக் கொள்வது அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் இது சட்டமாகி விடுமே. எனவே, அவர்கள் அவ்வாறு கூறியது சரியல்ல என்று இறைவன் தனது திருமறையின் வசனத்தின் மூலம் உணர்த்தினான் :

நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (66:01)

இந்த வசனம் இறக்கியருளிய பின்பு, இனிமேல் நான் தேன் சாப்பிடப் போவதில்லை என்று சத்தியமிட்டதை முறித்தார்கள், அல்லாஹ்வின் அறிவுறுத்தலை ஏற்று அதற்காக பிராயச்சித்தம் தேடிக் கொண்டார்கள்.

அன்னையவர்கள் தனது வீட்டினருகில், ஒரு சிறிய பள்ளிவாசலைக் கட்டிக் கொண்டு, அதில் இறைவணத்தில் அதிக ஈடுபடுவதில் ஈடுபட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூட சில சமயங்களில் அந்தப் பள்ளியில் தொழுதுள்ளார்கள். எந்த செய்கையையும் ஆரம்பிக்கு முன்னால் இறைவனது வழிகாட்டிலை நாடி தொழக் கூடியவர்களாகவும், தொழுகையின் மூலம் அதற்கான வழிமுறைகளைத் தேடிக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆலோசனை வழங்கினாலும் கூட, அதற்கான வழிகாட்டுதல்களை நாட்டத் தொழுகையின் மூலமாகப் பெற்றுக் கொள்ள, தொழுகையின் பக்கம் கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இத்தகைய நற்குணங்களுக்குச் சொந்தக்காரரான அன்னையவர்கள், உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தின் பொழுது, தனது 53 ம் வயதில் மரணமடைந்தார்கள். தனது இறுதிக் காலம் நெருங்கி வருவதையும், தன்னைப் படைத்தவனை விரைவில் சந்திக்க இருப்பதையும் உணர்ந்த அன்னையவர்கள், தனது கபன் துணியைத் தான் தெரிவு செய்து விட்டதாகக் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். தனக்காக கபன் துணி ஒன்றை உமர் (ரலி) அவர்கள் வழங்கினார்கள் என்று சொன்னால், ஒன்றைப் பயன்படுத்திக் கொண்டு மற்றதை தானம் வழங்கி விடுமாறு கூறி விட்டார்கள். இன்னும் அதிக வெட்க உணர்வு கொண்டவர்களாக அன்னையவர்கள் இருந்த காரணத்தால், அவர்கள் இறந்த பின்பு அவர்களது உடலை கபன் துணியினால் சுற்றப்பட்ட பின்பும், அவர்களது உடலுக்கு முன்பாக திரைச் சீலை தொங்க விடப்பட்டு, பிறரது கண்பார்வையிலிருந்து மறைக்கப்பட்டிருந்தது.

உமர் (ரலி) அவர்கள் முன்னின்று அன்னையவர்களுக்கு இறுதித் தொழுகை நடத்தினார்கள். அன்னையவர்களின் நெருங்கிய உறவினர்களான, உஸாமா பின் ஸைத் (ரலி), முஹம்மது பின் அப்துல்லா பின் ஜஹ்ஸ் (ரலி), அப்துல்லா பின் அபீ அஹ்மது பின் ஜஹ்ஸ் (ரலி) மற்றும் முஹம்மது பின் தல்ஹா பின் அப்துல்லா (ரலி) ஆகியோர் சேர்ந்து அன்னையவர்களை மண்ணறைக்குள் இறக்கி வைத்தனர். அன்னையவர்களது உடல் ஜன்னத்துல் பக்கீயில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).(89:27-30)
Previous Post Next Post