அத்தியாயம் 23 ஜனாஸாவின் சட்டங்கள்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 23

ஜனாஸாவின் சட்டங்கள்

அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

பகுதி 1

கடைசிக் காலத்தில் லா இலாஹ இல்லல்லாஹ் கூறுபவனின் நிலை.

''சொர்க்கத்தின் திறவுகோல் லாஇலாஹ இல்லல்லாஹ் (எனக் கூறுவது) தானே!'' என வஹ்ப் இப்னு முனப்பிஹ் என்பவரிடம் வினவப்பட்டது. அதற்கவர் ஆம்! ஆயினும் திறவுகோலுக்குப் பற்கள் இருக்க வேண்டுமல்லவா? எனவே, உன்னிடம் பற்களுள்ள திறவுகோல் இருந்தால்தான் அதன் மூலம் உனக்காக அ(ந்தச் சொர்க்கமான)து திறக்கப்படும்: இல்லையேல் அது உனக்குத் திறக்கப்படாது'' எனக் கூறினார்.

1237. ''என்னுடைய இரட்கனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு செய்தியை ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது என்னுடைய சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் மரணிக்கிறவர் சொர்க்கத்தில நுழைவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, நான் 'அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?' எனக் கேட்டேன். 'அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும்தான் என அவர்கள் கூறினார்கள்'' என அபூ தர்(ரலி) அறிவித்தார்.

1238. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

''அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக மரித்தவர் நிச்சயமாக நரகத்தில் நுழைந்துவிட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். '(அப்படியாயின்) அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறவர் நிச்சயமாகச் சொர்க்கத்தில் நுழைவார்'' என நான் கூறுகிறேன்.

பகுதி 2

ஜனாஸாவைப் பின்தொடர்தல் பற்றிய கட்டளை.

1239. பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் எங்களக்கு ஏழு விஷயங்களை(ச் செய்யும்படி) கட்டளையிட்டு ஏழு விஷயங்களை தடை செய்தார்கள். ஜனாஸாவை பின் தொடரும் படியும், நோயாளியை நலம் விசாரிக்கும் படியும், விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளும் படியும். அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், செய்த சத்தியத்தையும் பூரணமாக நிறைவேற்றும் படியும். ஸலாமுக்கு பதில் கூறும்படியும். தும்முபவருக்கு அவர் அல்ஹம்துலில்லாஹ்.. எல்லாப் புகழும் இறைவனுக்கே! என கூறினால் அருகிலிருப்பவர் யர்ஹமுகல்லாஹ்.. இறைவன் உங்களுக்கு கருணை காட்டுவானாக' என மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள். வௌ்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், ஆண்கள் தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் கலப்படமில்லாத பட்டையும், அலங்காரப் பட்டையும் எகிப்திய பட்டையும், தடித்த பட்டையும் அணிவதிலிருந்தும் எங்களை தடைசெய்தார்கள்.

1240. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 3

ஜனாஸா கஃபன் செய்யப்பட்டபின் அவ்விடத்திற்குச் செல்லல்.

1241. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.  

(நபி (ஸல்) அவர்களின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட) அபூ பக்ர்(ரலி) ஸுன்ஹ் என்னும் இடத்திலுள்ள தம் வீட்டிலிருந்து குதிரையில் மஸ்ஜிது(ன்னபவீ)க்கு வந்திறங்கி, யாரிடமும் பேசாமல் நேரடியாக என் அறைக்குள் நுழைந்தார். அங்கு நபி(ஸல்) அவர்களை அடையாளமிடப்பட்ட போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில் கண்டார். உடனே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த துணியை அகற்றிவிட்டு, அவர்களின் மேல் விழுந்து முத்தமிட்டுவிட்டு, அழுதார். பின்பு, 'இறைத்தூதர் அவர்களே! என்னுடைய தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணங்களை ஏற்படுத்தவில்லை. உங்களின் மீது விதிக்கப்பட்ட அந்த மரணத்தை தாங்கள் அடைந்து விட்டீர்கள்' என்று கூறினார்.

1242. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(நபி(ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரலி) வெளியில் வந்தார். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) மீண்டும் மறுக்கவே அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே, மக்கள் உமர்(ரலி) பக்கமிருந்து அபூ பக்ர்(ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூ பக்ர்(ரலி) 'உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். மேலும், அல்லாஹ் கூறினான்: முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்: அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்'' (திருக்குர்ஆன் 3:144) என்றார்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போன்றும் அபூ பக்ர்(ரலி) மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்ததைப் போன்றும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள்.

1243. நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா(ரலி) அறிவித்தார்.

''(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கஃபனிடப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), 'ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறினேன். உடனே, நபி(ஸல்) அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள்.

''இறைத்தூதர் அவர்களே! என்னுடைய தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?' என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர் மரணமடைந்துவிட்டார். எனவே, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே விரும்புகிறேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.''

1244. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

என்னுடைய தந்தை கொல்லப்பட்டுக் கிடந்தபோது நான் அவரின் முகத்தின மீதிருந்த துணியை அகற்றிவிட்டு அழுதேன். அப்போது (அங்கிருந்தவர்கள்) என்னைத் தடுத்தார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை. பிறகு என்னுடைய மாமி ஃபாத்திமா(ரலி)வும் அழ ஆரம்பித்துவிட்டார். அப்போது, 'நீங்கள் அழுதாலும் அழாவிட்டாலும் நீங்கள் அவரைத் தூக்கும் வரை வானவர்கள் அவருக்குத் தங்களின் இறக்கைகளால் தொடர்ந்து நிழல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.''.. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பகுதி 4

மரணமுற்றவரின் குடும்பத்தினருக்கு மரணச் செய்தியறிவித்தல்.

1245. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நஜ்ஜாஷி(மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.

1246. அனஸ்(ரலி) அறிவித்தார்.

''(மூத்தா போரில்) ஸைத்(ரலி) கொடியைப் பற்றியிருந்தார். அவர் கொல்லப்பட்டதும் அதை ஜஅஃபர்(ரலி) பற்றினார். அவர் கொல்லப்பட்டதும் அதை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) பற்றினார். பிறகு அவரும் கொல்லப்பட்டார்'' என்று நபி(ஸல்) கூறிக்கொண்டிருந்தபோது அவர்களின் இரண்டு கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. பிறகு, '(ஏற்கெனவே) நியமிக்கப்பட்டாதிருந்த காலித் இப்னு வலீத்(ரலி) அக்கொடியைப் பற்றினார். அவருக்கே வெற்றி கிடைத்துவிட்டது என்றும் கூறினார்கள்.

பகுதி 5

ஜனாஸாத் தொழுகையை(த் தலைவருக்கு) அறிவித்தல்.

''நீங்கள் (ஜனாஸாத் தொழுகிறபோது) எனக்குத் தகவல் அளித்திருக்கக் கூடாதா'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1247. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(நோயுற்றிருந்த) ஒருவரை நபி(ஸல்) அவர்கள் வழக்கமாக விசாரிப்பவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் இரவு அவர் இறந்துவிட்டார். அவரை மக்கள் இரவிலேயே அடக்கம் செய்துவிட்டனர். மறுநாள் காலையில் நபி(ஸல்) அவர்களுக்கு இச்செய்தியை மக்கள் தெரிவித்ததும் 'இதை அப்போதே எனக்கு நீங்கள் அறிவிக்காததன் காரணமென்ன?' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், 'கடுமையான இருள் சூழ்ந்த இரவு நேரமாக இருந்ததால் உங்களுக்குச் சிரமம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை'' என்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள், அவரின் கப்ருக்கு வந்து ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்.

பகுதி 6

தம் குழந்தை இறந்தும் பொறுமையுடன் இறை வெகுமதியை எதிர்பாப்பவரின் சிறப்பு.

அல்லாஹ் கூறினான்:

பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறும்! (திருக்குர்ஆன் 02:155)

1248. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒரு முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) மரணித்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.''

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

1249. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் (வந்து) 'எங்களுக்கும் ஒரு நாள் (உபதேசத்திற்காக) ஒதுக்குங்களேன் எனக் கேட்டார்கள். நபி(ஸல்) பெண்களுக்கு (ஒருநாள்) உபதேசம் செய்தார்கள். அதில் 'ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதால் அவர்கள் அப்பெண்ணை நரகத்திலிருந்து காக்கும் திரையாக ஆகிவிடுவார்கள்'' எனக் கூறியதும் ஒரு பெண் 'இரண்டு குழந்தைகள் இறந்தால்?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இரண்டு குழந்தை இறந்தாலும் தான்'' என்றார்கள்.

1250. மேற்கூறிய ஹதீஸில் அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் அறிவிப்பில், 'பருவமடையாத (குழந்தைகள்)'' என்ற வாசகம் அதிகப்படியாக உள்ளது.

1251. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒரு முஸ்லிமுடைய மூன்று குழந்தைகள் இறந்துவிட்டால் எல்லோருமே நரகைக் கடந்து சென்றாக வேண்டும் என்ற அடிப்படையில், அந்த நேரம் மட்டுமே தவிர அவர் நரகின் பக்கம் செல்லவே மாட்டார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(எல்லோருமே நரகத்தைக் கடந்து சென்றதாக வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.) 'அதனை (நரகினை)க் கடக்காமல் செல்பவர் உங்களில் யாரும் இல்லை'' என்ற (திருக்குர்ஆன் 19:71) இறைவசனத்தின் அடிப்படையில்தான் என்று புகாரி ஆகிய நான் கூறுகிறேன்.

பகுதி 7

கப்ருக்கருகில் இருக்கும் பெண்ணிடம் 'நீ பொறுமையாயிரு'' என ஆண் கூறுவது.

1252. அனஸ்(ரலி) அறிவித்தார்.

கப்ருக்கருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், 'அல்லாஹ்வைப் பயந்து கொள்! பொறுமையாயிரு!'' எனக் கூறினார்கள்.

பகுதி 8

இலந்தையிலை கலந்த நீரால் மய்யித்தைக் குளிப்பாட்டி உளுச் செய்வித்தல்.

ஸயீத் இப்னு ஸைத்(ரலி) உடைய மகன் மரணமடைந்ததும் இப்னு உமர்(ரலி) அவருக்கு நறுமணம் பூசி அவரைச் சுமந்து சென்றார். (இதன் காரணமாக உளு முறிந்து விடாததால்) உளுச் செய்யாமலேயே ஜனாஸாத் தொழுகை நடத்தினார்.

முஸ்லிம் உயிருடனிருக்கும் போதும் மரணித்துவிட்டாலும் அசுத்தமாவதில்லை என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

(மரணித்துவிட்ட முஸ்லிம்) அசுத்தம் என்றிருந்தால் நான் அந்த மய்யித்தைத் தொட்டிருக்க மாட்டேன் என ஸஅத்(ரலி) கூறினார். மேலும், இறைநம்பிக்கையாளர் அசுத்தமாவதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

1253. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் மரணித்துவிட்டபோது எங்களிடம் வந்து, 'அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான முறை குளிப்பாட்டுங்கள். இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தம் கீழாடையைத் தந்து, 'இதை அவரின் உடலில் சுற்றுங்கள்'' எனக் கூறினார்கள்.

பகுதி 9

ஒற்றைப் படையாகத் தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்டுவது விரும்பத்தக்கது.

1254. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள், 'அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கும் அதிகமான முறை குளிப்பாட்டுங்கள், கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்' எனக் கூறினார்கள். முடிந்ததும் நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். அப்போது அவர்கள் தங்களின் கீழாடையைத் தந்து, 'இதை அவரின் உடலில் சுற்றுங்கள்' எனக் கூறினார்கள்.

ஹஃப்ஸா(ரலி)வின் அறிவிப்பில், 'ஒற்றைப் படையாக (த் தண்ணீர் ஊற்றி)க் குறிப்பாட்டுங்கள் மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு முறை (தண்ணீர் ஊற்றுங்கள்) அவரின் வலப்புறத்திலிருந்தும் உளுச் செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் துவங்குங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் 'நாங்கள் அவர்களுக்கு தலைவாரி மூன்று சடைகள் பின்னினோம்'' என உம்மு அதிய்யா(ரலி) கூறினார் என்றும் உள்ளது என அய்யூப் குறிப்பிடுகிறார்.

பகுதி 10

(குளிப்பாட்டுதலை) மய்யித்தின் வலப்புறத்திலிருந்து ஆரம்பித்தல்.

1255. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் மகளைக் குளிப்பாட்டும்போது, 'அவரின் வலப்புறத்திலிருந்தும் உளுச் செய்யவேண்டிய பகுதியிலிருந்தும் ஆரம்பியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பகுதி 11

மய்யித்தைக் குளிப்பாட்டும்போது உளுச் செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்து ஆரம்பித்தல்.

1256. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது, 'மய்யித்தின் வலப்புறத்திலிருந்தும் அதன் உளுச் செய்யவேண்டிய பகுதிகளிலிருந்தும் ஆரம்பியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பகுதி 12

பெண் மய்யித், ஆணின் கீழாடையால் கஃபனிடப்படலாமா?

1257. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் மகள் மரணித்ததும் அவர்கள், 'அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமான முறை குளிப்பாட்டுங்கள். குளிப்பாட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்' எனக் கூறினார்கள். குளிப்பாட்டி முடித்து அவர்களுக்குத் தெரிவித்ததும் தம் இடுப்பிலிருந்து கீழாடையைக் களைந்து 'இதை அவரின் உடம்பில் சுற்றுங்கள்'' என்று கூறினார்கள்.

பகுதி 13

(மய்யித்தைக் குளிப்பாட்டும் போது) கடைசியில் கற்பூரத்தைப் பயன்படுத்துதல்.

1258. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் ஒரு மகள் மரணித்துவிட்டதும் நபி(ஸல்) அவர்கள் (எங்களிடம்) வந்து 'அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது தேவையென நீங்கள் கருதினால் அதற்கும் அதிகமான முறை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டுங்கள்ளு கடைசியில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்' எனக் கூறினார்கள். குளிப்பாட்டிய பின் நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்ததும் தம் கீழாடையைத் தந்து, 'இதை அவரின் உடம்பில் சுற்றுங்கள்'' என்று கூறினார்கள்.

1259. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

''அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமான முறை குளிப்பாட்டுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

'நாங்கள் அந்த மய்யித்தின் தலையில் மூன்று சடைகளை முடிந்தோம்' என உம்மு அதிய்யா(ரலி) கூறினார் என ஹஃப்ஸா(ரலி) குறிப்பிடுகிறார்கள்.

பகுதி 14

பெண் மய்யித் குளிப்பாட்டப்படும்போது சடைகளை அவிழ்த்துவிடல்.

குளிப்பாட்டப்படும்போது மய்யித்தின் சடை அவிழ்க்கப்படுவது தவறில்லை என இப்னு ஸீரீன் குறிப்பிட்டுள்ளார்.

1260. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் மகளின் மய்யித்திற்குத் தலை(முடி)யில் பெண்கள் மூன்று சடைகளைப் பின்னியிலிருந்தார்கள். பிறகு அவற்றைப் பிரித்துக் கழுவிவிட்டுப் பிறகு மீண்டும் மூன்று சடைகள் பின்னினார்கள்.

பகுதி 15

(பெண்) மய்யித்தின் உடம்பில் துணியைச் சுற்றுவது எப்படி?

''(கஃபனுடைய) ஐந்து துணிகளில் ஒன்றால் மேலாடைக்கு உள்ளே தொடைகளையும் இடுப்பையும் சுற்றிக் கட்டவேண்டும்'' என ஹஸன் கூறுகிறார்.

1261. இப்னு ஸீரின் அறிவித்தார்.

(நபி(ஸல்) அவர்களிடம்) உடன் படிக்கை செய்திருந்த அன்ஸாரிப் பெண்மணியான உம்மு அதிய்யா(ரலி) தம் மகனைத் தேடி பஸராவுக்குச் வந்தார். மகனைச் சந்திக்க முடியவில்லை. அப்போது அவர் எங்களிடம் சொன்னதாவது. 'நபி(ஸல்) அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள், 'மய்யித்தை மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமான முறை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டுங்கள். மேலும் கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்' எனக் கூறினார்கள். குளிப்பாட்டி முடித்ததும் தம் கீழாடையைத் தந்து. 'இதை அவரின் உடலில் சுற்றுங்கள்'' என்றும் கூறினார்கள்.

அதற்கதிமாக எதையும் கூறவில்லை.

''நபி(ஸல்) அவர்களின் புதல்விகளுள் இவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை'' என்று அய்யூப் கூறுகிறார்.

பெண் மய்யித்துக்கு இடுப்பில் துணியைக் கட்டத் தேவையில்லை. ஆயினும் சுற்ற வேண்டும் என்றே இப்னு ஸீரீன் கட்டளையிட்டு வந்தார்.

பகுதி 16

பெண் மய்யித்தின் முடி மூன்ற சடைகளாகப் பின்னப்படுதல்.

1262. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களின் மகளின் முடியை மூன்று சடைகளாகப் பின்னினோம்.

''மூன்று சடைகள் என்பது முன் நெற்றிப் பகுதியில் ஒன்றும் பிடரிப்பகுதியில் இரண்டுமாகும்'' என சுஃப்யான் குறிப்பிட்டுள்ளார்.

பகுதி 17

பெண் மய்யித்தின் முடி அதன் பின்புறம் தொங்க விடப்படுதல்.

1263. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் மகள்களில் ஒருவர் மரணமாகிவிட்டதும் நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, 'மய்யித்தை இலந்தை இலை கலந்த நீரால் மூன்ற அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமாக ஒற்றைப் படையாகக் குளிப்பாட்டுங்கள். கடைசியில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடிந்ததும் எனக்குத் தெரிவியுங்கள்' எனக் கூறினார்கள். குளிப்பாட்டி முடிந்து தெரிவித்ததும் தம் கீழாடையை (மய்யித்தில் சுற்றுவதற்கு)த் தந்தார்கள். மேலும், நாங்கள் மய்யித்தின் முடியை மூன்று சடைகளாகப் பின்னி அதை மய்யித்தின் முதுகுப்புறமாகப் போட்டு வைத்தோம்.

பகுதி 18

கஃபனுக்கு வெண்மையான ஆடையைப் பயன்படுத்துதல்.

1264. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் யமன் சேதத்தின் பருத்தியினாலான வெண்ணிறமுள்ள மூன்று துணிகளால் கஃபன் செய்யப்பட்டார்கள். அம்மூன்றில் சட்டையோ தலைப் பாகையோ இருக்கவில்லை.

பகுதி 19

இரண்டு ஆடைகளில் கஃபனிடுதல்

1265. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் தம் வாகனத்தின் மீதிருந்தார். திடீரென தன்னுடைய வாகனத்திலிருந்து அவர் கீழே விழுந்துவிட்டார். அது அவரின் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளால் கஃபனிடுங்கள் அவரின் உடலுக்கு நறுமணம் பூசவேண்டாம் அவரின் தலையை மறைக்கவும் வேண்டாம் ஏனெனில் (இஹ்ராம் அணிந்திருந்த) அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்'' எனக் கூறினார்.

பகுதி 20

மய்யித்திற்கு நறுமணமிடல்

1266. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தம் வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர், தன்னுடைய வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார் அது அவரின் கழுத்தை முறித்துவிட்டார். (அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளால் கஃபனிடுங்கள் அவரின் உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம் அவரின் தலையை மறைக்கவும் வேண்டாம்: ஏனெனில் (இஹ்ராம் அணிந்திருந்த) அவர் கியாமத் நாளில் தல்பியா (லப்பைக் அல்லஹும்ம லப்பைக்...) சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்'' எனக் கூறினார்கள்.

பகுதி 21

இஹ்ராம் அணிந்தவர் இறந்தால் அவரின் உடல் கஃபனிடப்படுவது எப்படி?

1267. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இஹ்ராம் அணிந்திருந்த ஒருவர் நபி(ஸல்) அவர்களுடன் (அரஃபாவில்) இருந்தபோது அவரின் ஒட்டகம் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. (எனவே, அவர் இறந்துவிட்டார்). அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளால் கஃபனிடுங்கள்ளு நறுமணம் பூச வேண்டாம். அவரின் தலையை மூடவும் வேண்டாம் ஏனெனில் அவரை அல்லாஹ் மறுமை நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்புவான்'' எனக் கூறினார்கள்.

1268. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இஹ்ராம் அணிந்திருந்த ஒருவர் அரஃபாவில் நபி(ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தபோது தன்னுடைய வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். அது அவரின் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. என அய்யூப் என்பவர் கூறுகிறார். வாகனம் அவரைக் கீழே வீழ்த்தியதால் அவரின் எலும்புகள் முறிந்துவிட்டன என அம்ர் கூறுகிறார். எனவே, அவர் இறந்துவிட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளில் கஃபனிடுங்கள் அவருக்கு நறுமணம் பூச வேண்டாம் அவரின் தலையை மறைக்கவும் வேண்டாம் ஏனெனில் அவர் மறுமை நாளில் தல்பியாக் கூறிக்கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்'' எனக் கூறினார்கள்.

பகுதி 22

தைக்கப்ட்ட அல்லது தைக்கப்படாத மேல் சட்டையால் கஃபனிடுதலும் மேல் சட்டையின்றிக் கஃபனிடப்பட்டவரின் நிலையும்.

1269. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான். அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும் மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்கவேண்டும்'' என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, '(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள் நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்'' என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களை இழுத்து, 'நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் '(ஜனாஸாத் தொழுவது, தொழமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்ததெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது' எனக் கூறிவிட்டு, 'நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை'' என்ற (திருக்குர்ஆன் 09:80) வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே 'அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்'' என்ற (திருக்குர்ஆன் 09:84) வசனம் அருளப்பட்டது.

1270. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு உபை கப்ரில் வைக்கப்பட்ட பின் அங்கு வந்த நபி(ஸல்) அவனுடைய உடலை வெளியிலெடுக்க செய்து அவன் உடலில் தம் எச்சிலை உமிழ்ந்துவிட்டுத் தம் சட்டையை அவனுக்கு அணிவித்தார்கள்.

பகுதி 23

மேல் சட்டையின்றிக் கஃபனிடுதல்

1271. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மூன்று வெண்ணிறப் பகுதி ஆடைகளால் கஃபனிடப்பட்டார்கள்: அவற்றில் சட்டையோ, தலைப்பாகையோ இருக்கவில்லை.

1272. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் உடல் மூன்று துணிகளில் கஃபனிடப்பட்டது: அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இருக்கவில்லை.

பகுதி 24

தலைப்பாகையின்றிக் கஃபனிடுதல்

1273. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் உடல் (யமன் நாட்டுப்) பருத்தியாலான வெண்மையான மூன்று ஆடைகளால் கஃபனிடப்பட்டது: அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இருக்கவில்லை.

பகுதி 25

(மய்யித்விட்டுச் சென்ற பொருளைப் பங்கிடுவதற்கு முன்) மொத்தச் சொத்திலிருந்து கஃபனுக்குச் செலவிடல்.

அதா, ஸுஹ்ரீ, அம்ர்ப்னு தீனார். கதாதா ஆகியோர் இக்கருத்துடையவர்கள். அதில் நறுமண ஏற்பாட்டிற்கும் மொத்தச் சொத்திலிருந்து செலவு செய்யலாம் என அம்ர்ப்னு தீனார் குறிப்பிடுகிறார். இப்ராஹீம் கூறும்போது முதலில் கஃபனுக்கும் பிறகு கடனைத் தீர்க்கவும் செலவிடவேண்டும்: பிறகு வஸிய்யத்தை நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கப்ரு தோண்டுவது மற்றும் குளிப்பாட்டுவதற்கான கூலியும் கஃபன் செலவில் சேர்ந்ததே என சுஃப்யான் கூறினார்.

1274. இப்ராஹீம் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார்.

ஒருநாள். அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் அவரின் உணவு கொண்டு வந்து வைக்கப்பட்டது. உடனே அவர், 'முஸ்அப் இப்னு உமைர்(ரலி) கொல்லப்பட்டபோது.. அவர் என்னைவிடச் சிறந்தவராக இருந்தார். அவருக்குக் கஃபனிடுவதற்கு ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. ஹம்ஸா(ரலி) அல்லது வேறொருவர் கொல்லப்பட்டபோது.. அவரும் என்னைவிடச் சிறந்தவரே... அவருக்குக் கஃபனிடுவதற்கும் ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. எனவே, நல்லவை(க்கான நற்கூலி)களெல்லாம் எனக்கு இவ்வுலக வாழ்விலேயே முன் கூட்டியே கொடுக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்!'' எனக் கூறிவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.

பகுதி 26

கஃபனிடுவதற்கு ஓர் ஆடை மட்டுமே இருந்தால்...?

1275. இப்ராஹீம் அறிவித்தார்.

நோன்பாளியாக இருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் (நோன்பை நிறைவு செய்வதற்காக) உணவு கொண்டு வரப்பட்டது. அப்போது அவர், 'என்னை விடச் சிறந்தவரான முஸ்அப் இப்னு உமைர்(ரலி) கொல்லப்பட்டபோது அவரின் உடல் ஒரு சால்வையால் கஃபனிடப்பட்டது. அப்போது அவரின் தலை மறைக்கப்பட்டால் அவரின் கால்கள் வெளியில் தெரிந்தன. கால்கள் மறைக்கப்பட்டால் தலை வெளியில் தெரிந்தது, மேலும், ஹம்ஸா(ரலி) அவர்களும் கொல்லப்பட்டபோது அவரும் என்னைவிடச் சிறந்தவர் தாம் (அவரின் நிலையும் அவ்வாறே இருந்தது) பிறகுதான் உலக வசதி வாய்ப்புக்கள் எங்களுக்கு விசாலமாக்கப்பட்டன. அல்லது உலகத்திலுள்ள அனைத்தும் எங்களுக்குக் கொடுக்கப்பட்டன. எனவே, எங்களின் நன்மைகளெல்லாம் (முற்கூட்டியே) உலகிலேயே கொடுக்கப்பட்டு விடுமோ என நான் அஞ்சுகிறேன்' எனக் கூறிவிட்டு உணவைத் தவிர்த்துவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்கள்.

பகுதி : 26

கஃபடினடுவதற்கு ஓர் ஆடை மட்டுமே இருந்தால்...?

1275 இப்ராஹீம் அறிவித்தார் :

நோன்பளியாக இருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் (நோன்பை நிறைவு செய்வதற்காக) உணவு கொண்டு வரப்பட்டது. அப்போது அவர், 'என்னை விடச் சிறந்தவரான முஸ்அப் இப்னு உமைர்(ரலி) கொல்லப்பட்டபோது அவரின் உடல் ஒரு சால்வையால் கஃபனிடப்பட்டது. அப்போது அவரின் தலைமறைக்கப்பட்டால் அவரின் கால்கள் வெளியில் தெரிந்தன: கால்கள் மறைக்கப்பட்டால் தலை வெளியில் தெரிந்தது. மேலும் ஹம்ஃர்(ரலி) அவர்களும் கொல்லப்பட்டபோது அவரும் என்னைவிடச் சிறந்தவர்தாம் -- (அவரின் நிலையும் அவ்வாறே இருந்தது) பிறகுதான் உலக வசதி வாய்ப்புக்கள் எங்களுக்கு விசாலமாக்கப்பட்டன. அல்லது உலகத்திலுள்ள அனைத்தும் எங்களுக்குக் கொடுக்கப்பட்டன. எனவே எங்களின் நன்மைகளெல்லாம் (முற்கூட்டியே) உலகிலேயே கொடுக்கப்பட்டு விடுமோ என நான் அஞ்சுகிறேன்' எனக் கூறிவிட்டு உணவைத் தவிர்த்துவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்கள்.

பகுதி : 27

போதிய துணியின்றிக் கஃபனிடப்படும்போது மய்யித்தின் தலைமட்டுமோ அல்லது கால்கள் மட்டுமோ தாம் மறைக்கப்பட முடியும் என்ற நிலையேற்பட்டால் தலையையே மறைக்கவேண்டும்.

1276 கப்பாப்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வுக்காகவே ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கான கூலி அல்லாஹ்விடமுள்ளது. எங்களில் சிலர் தம் கூலியை (இவ்வுலகத்தில்) உண்ணாமல் இறந்துள்ளனர். அவர்களில் முஸ்அப் இப்னு உமைர்(ரலி) ஒருவர். எங்களில் வேறு சிலர் (இவ்வுலகில்) பூத்துக் குலுங்கிச் செழித்து அனுபவித்ததும் உண்டு.

முஸ்அப் இப்னு உமைர்(ரலி) உஹதுப் போரில் கொல்லப்பட்டார். அவரின் முழு உடலைக் கஃபன் செய்வதற்கு ஒரேயொரு சால்வை மட்டுமே இருந்தது. அதன் மூலம் அவரின் தலையை மறைத்தால் கால்கள் வெளியில் தெரிந்தன: கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. அப்போது அவரின் தலையைத் துணியால் மறைத்துவிட்டு அவரின் கால்களை இத்கிர் என்ற புல்லைப் போட்டு மறைக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

பகுதி28

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் முன்கூட்டியே கஃபன் துணியைத் தயாராக வைத்தவரை நபி(ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.

1277 அபூ ஹாஸிம் அறிவித்தார்.

''ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் புர்தா -- குஞ்சங்கட்டப்பட்ட ஒரு சால்வையைக் கொண்டு வந்தார் என்று ஸஹ்ல்(ரலி) கூறிவிட்டு --''புர்தா என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டபோது (அங்கிருந்தோர்) 'ஆம்! புர்தா என்பது சால்வைதானே! என்றனர். ஸஹ்ல் 'ஆம்' எனக் கூறிவிட்டு மேலும், அப்பெண்மணி 'நான் என்னுடைய கையாலேயே இதை நெய்திருக்கிறேன். இதனை உங்களுக்கு அணிவிக்கவே நான் கொண்டு வந்தேன்'' என்றதும் அது தேவையாயிருந்ததால் நபி(ஸல்) அவர்கள் அதைப் பெற்றார்கள். பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்து எங்களிடம் வந்தபோது ஒருவர் 'இது எவ்வளவு அழகாக இருக்கிறது! எனக்கு இதை நீங்கள் அணிவித்து விடுங்கள்'' என்று கேட்டார். உடனே அங்கிருந்தோர் 'நீர் செய்வது முறையன்று நபி(ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால் அதை அணிந்திருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்காமலிருக்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அதை அவர்களிடன் கேட்டு விட்டீரே' எனக் கூறினார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அதை (சாதாரணமாக) அணிந்து கொள்வதற்ககாகக் கேட்கவில்லை: அது எனக்கு கஃபனாக ஆகி விடவேண்டும் என்றே கேட்டேன்'' என்றார். 'பின்பு அது அவருக்குக் கஃபனாகவே ஆகி விட்டது'' என்று ஸஹ்ல் கூறினார்.

பகுதி : 29

ஜனாஸாரவைப் பெண்கள் பின்தொடர்தல்.

1278 உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

ஜனாஸாவைப் பின் தொடந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் (நபி(ஸல்) அவர்களால்) தடுக்கப்பட்டிருந்தோம்: ஆனால் வன்மையாக நாங்கள் தடுக்கப்படவில்லை.

பகுதி :30

கணவர் அல்லாதவருக்காகப் பெண் துக்கம் கடைப்பிடித்தல்.

12279 முஹம்மத் இப்னு ஸீரீன் அறிவித்தார்.

தம் மகன் இறந்த மூன்றாம் நாள் உம்மு அதிய்யா(ரலி) மஞ்சள் நிறவாசனைப் பொருளைப் பூசினார். மேலும், 'கணவனைத் தவிர வேறு யாருக்காகவும் மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது என்று நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம்' என்றும் கூறினார்கள்.

1280 ஜைனப்(ரலி) அறிவித்தார்.

அபூ சுப்யான்(ரலி) அவர்களின் மரணச் செய்தி சிரியாவிலிருந்து வந்த மூன்றாம் நாள் (அவரின் மகள்) உம்மு ஹபீபா(ரலி) மஞ்சள் நிற வாசனை திரவியத்தை வரவழைத்து தம் கன்னங்களிலும் முழங்கைகளிலும் தடவினார்கள். மேலும், 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியுள்ள ஒரு பெண் தன்னுடைய கணவன் இறந்தாலே தவிர வேறு யார் இறந்தாலும் மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது கணவன் இறந்தால் மட்டும் நான்கு மாதமும் பத்து நாள்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் கேள்விப்பட்டிராவிட்டால் இ(ந்த வாசனைத் திரவியமான)து எனக்குத் தேவையற்றதுதான்'' எனக் கூறினார்.

1281. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியுள்ள பெண், தன்னுடைய கணவனைத் தவிர வேறு யாருடைய மரணத்திற்கும் மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது கணவன் இறந்தால் மட்டும் நான்கு மாதங்களும் பத்து நாள்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்.''

என உம்மு ஹபீபா(ரலி) அறிவித்தார்.

1282. ஜைனப் பின்து அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்.

நான், தம் சகோதரரை இழந்திருந்த ஜைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) இடம் சென்றேன். அவர் நறுமணம் பூசி, 'இது எனக்குத் தேவையில்லைதான் ஆயினும் 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பக்கூடிய பெண் தன்னுடைய கணவனைத் தவிர வேறு யாருடைய மரணத்திற்கும் மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் அனுசரிக்கக் கூடாது தன்னுடைய கணவன் இறந்துவிட்டால் நான்கு மாதங்களும் பத்து நாள்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் நின்றவாறு கூற கேட்டிருக்கிறேன்'' என்றார்.

பகுதி 31

கப்ரை ஸியாரத் செய்வது.

1283. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

கப்ருக்கருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, 'அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு!'' என்றார்கள். அதற்கு அப்பெண், என்னைவிட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்பட வில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் யாரென அறியாமல் கூறினாள். அ(வளிடம் உரையாடிய)வர் நபியெனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி(ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். அங்கே காவலாளிகள் எவருமில்லை. 'நான் உங்களை (யாரென) அறியவில்லை'' என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினாள். 'பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வதே)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பகுதி 32

''குடும்பத்தார் அழுவதால் மய்யித் வேதனை செய்யப்படும்'' என்ற நபியின் கூற்று.

ஒப்பாரி வைப்பதை வழக்கமாகக் கொண்ட ஒருவன் இறந்தால் அவனுக்குத்தான் இந்த நிலை.

ஏனெனில், அல்லாஹ் கூறினான்:

''உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' (திருக்குர்ஆன் 66:01)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளராவார். அவர் தம் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவார்!''

ஒப்பாரி வைக்கும் வழக்கமில்லாத ஒருவன் இறந்துவிட்டால் இந்த நிலை இல்லை. ஏனெனில், அவனுடைய நிலை 'ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார்'' என்ற (திருக்குர்ஆன் 06:164) இறை வசனத்தை மேற்கோள் காட்டி ஆயிஷா(ரலி) கூறியுள்ளதைப் போன்றதாகும்.

மேலும், அல்லாஹ் கூறினான்:

பளுவான (பாவச்) சுமையைச் சுமப்பவன். அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவளனை) அழைத்தாலும் அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்து கொள்ளப்படாது: (அல்குர்ஆன 35:18)

மேலும், ஒப்பாரி இன்றி அழ அனுமதியுண்டு.

''அநியாயமாக யார் கொல்லப்பட்டாலும் ஆதமின் முதல் மகனுக்கு அந்த இரத்தத்தில் (கொலையில்) ஒரு பங்குண்டு'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். கொலை செய்வதை ஆரம்பித்து வைத்தவன் அவனே என்பதே இதன் காரணம்.

1284. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

தம் மகன் மரணத் தருவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி(ஸல்) அவர்களின் மகள் (ஜைனப்(ரலி) நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி(ஸல்) அவர்கள், தம் மகளுக்கு ஸலாம் கூறி அனுப்பியதோடு, 'எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பாரும்!'' என்றும் கூறி அனுப்பினார்கள். அப்போது அவர்களின் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப்பினார். உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் ஸஅத் இப்னு உபாதா, முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅபு, ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோரும் மற்றும் பலரும் எழுந்தனர்.

(வீட்டுக்குச் சென்ற) நபி(ஸல்) அவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தையைக் காட்டினார்கள்.. இற்றுப்போன பழைய தோற் துருத்தி போல் குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன. 'இறைத்தூதர் அவர்களே! என்ன இது? (அழுகிறீர்கள்) என ஸஅத்(ரலி) கேட்டதற்கு நபி(ஸல்), 'இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்'' என்றார்கள்.

1285. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தம் மகள் (ஒருவரை அடக்கம் செய்யும்போது) நாங்கள் அங்கே இருந்தோம். தம் இரண்டு கண்களிலிருந்தும் நீர்வழிய கப்ருக்கருகே அமர்ந்திருந்த நபி(ஸல) அவர்கள், 'இன்றிரவு தம் மனைவியோடு கூடாதவர் யாரேனும் உங்களில் உண்டா?' என வினவினார்கள். 'நான் உள்ளேன்' என அபூ தல்ஹா(ரலி) கூறியவுடன் அவரை கப்ரில் இறங்குமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவரும் (நபியவர்களின் மகளுடைய) கப்ரில் இறங்கினார்.

1286, 1287 / 1288

அப்துல்லாஹ் இப்னு உபைதுல்லாஹ்(ரஹ்) அறிவித்தார்.

மக்காவில் உஸ்மான்(ரலி) அவர்களின் மகள் இறந்தபோது நாங்கள் (ஜனாஸாவில்) கலந்து கொள்வதற்காக அங்கு சென்றோம். அங்கு இப்னு உமர்(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் வந்திருந்தனர். நான் அவர்களிருவருக்கும் நடுவில் அல்லது ஒருவருக்கருகில் அமர்ந்தபோது மற்றொருவர் வந்து என்னருகில் அமர்ந்தார். அப்போது அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) உஸ்மான்(ரலி) உடைய மகன் அம்ர்(ரலி) அவர்களிடம் 'நீ (சப்தமிட்டு) அழுவர்களைத் தடை செய்ய வேண்டாமா? ஏனெனில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித்திற்கு வேதனை கொடுக்கப்படுகிறது' எனக் கூறினார்கள்'' என்றார். உடனே இப்னு அப்பாஸ்(ரலி) உமர்(ரலி) இதே போன்ற சில ஹதீஸ்களைக் கூறிக் கொண்டிருந்தார். நான் உமர்(ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து புறப்பட்டேன். நாங்கள் பைதா எனும் இடத்தை அடைந்தோம். அங்கு சமுரா என்னும் ஒரு(வகையான காட்டு) மரத்தின் நிழலில் ஒரு வாகனக் கூட்டம் நிற்பதைக் கண்டோம். 'நீ சென்று அவ்வாகனக் கூட்டம் யாதெனப் பார்த்துவா!'' என உமர்(ரலி) என்னை அனுப்பினார். நான் அங்கு சென்று பார்த்தபோது அங்கே ஸுஹைப்(ரலி) இருந்தார். அதை உமர்(ரலி) கூறினார். நான் ஸுஹைப் இடம் சென்று, 'அமீருல் மூமீனின் அவர்களைச் சந்திக்கப் புறப்படு' எனக் கூறினேன். பின்னர் சிறிது காலம் கழித்து உமர்(ரலி) அவர்களிடம் மரணக் காயமுற்றிருந்தபோது 'சகோதரனே! நண்பனே!' எனக் கூறி அழுதவராக ஸுஹைப்(ரலி) (வீட்டினுள்) நுழைந்தார். அப்போது உமர்(ரலி) 'ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்களல்லவா?' என்றார். உமர்(ரலி) இறந்தபோது (அவர்) இறப்பதற்கு முன் கூறிய செய்தியை ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'அல்லாஹ் உமருக்குக் கிருபை செய்வானாக! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குடும்பத்தினர் அழுவதன் காரணமாக மூமினை அல்லாஹ் வேதனை செய்வான்' எனக் கூறவில்லை: மாறாக 'குடும்பத்தினர் சப்தமாக அழுவதன் காரணத்தினால் காஃபிருக்கு வேதனை அதிகமாக்கப்படும்'' என்றே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்று கூறி, 'ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது'' (திருக்குர்ஆன் 6:164) என்ற குர்ஆனின் வசனமே உங்களுக்கு (சான்றுரைக்கப்) போதுமே'' என்றும் கூறினார்கள்.

இதைக்கூறி முடித்த பொழுது 'சிரிக்கச் செய்பவனும் அழவைப்பவனும் அவனே'' (திருக்குர்ஆன் 53:43) என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இப்னு அப்பாஸ்(ரலி) உடைய இச்சொல்லைச் செவியுற்ற அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) இதைப் பற்றி எந்த ஆட்சேபணையும் செய்யவில்லை'' என்று இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

1289. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

''இப்பெண் இறந்ததற்காக இவர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள் அவளோ கப்ரில் வேதனை செய்யப்படுகிறாள்'' என்று யூதப் பெண்ணொருத்தி இறந்ததற்காக அவளுடைய குடும்பத்தார் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தபோதுதான் நபி(ஸல்) கூறினார்கள். (இறைநம்பிக்கையாளர்களின் விஷயத்தில் கூறவில்லை.)

1290. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

உமர்(ரலி) மரணக் காயமுற்றிருந்தபோது 'சகோதரரே!' எனக் கூறியவராக ஸுஹைப்(ரலி) சப்தமிட்டு அழத் தொடங்கினார். அப்போது உமர்(ரலி) 'உயிருடனிருப்பவர்கள் அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?' எனக் கேட்டார்.

பகுதி 33

இறந்தவர்களுக்காக ஓப்பாரி வைத்து அழுவது வெறுக்கத் தக்கது.

''அபூ ஸலைமானின் (காலித் இப்னு வலீத்(ரலி)) அவர்களின் மரணத்திற்காக அழுது கொண்டிருக்கும் இப்பெண்களை இந்நிலையிலேயே (தடுக்காமல்)விட்டு விடுங்கள். அவர்கள் தம் தலையில் மண்ணை வாரிப் போட்டாலோ, சப்தமிட்டு அழுதாலோ அவர்களைத் தடுத்துவிடுங்கள்'' என உமர்(ரலி) கூறினார்.

1291. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும் மேலும் ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது.''

என முகீரா(ரலி) அறிவித்தார்.

1292. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஓப்பாரி வைக்கப்படுவதால் கப்ரிலிருக்கும் மய்யித் வேதனை செய்யப்படுகிறது.''

என உமர்(ரலி) அறிவித்தார்.

ஷுஉபாவின் அறிவிப்பில், உயிருள்ளவர்கள் (ஒப்பாரிவைத்து) அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது எனக் காணப்படுகிறது.

பகுதி 34

1293. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

உஹதுப் போர் தினத்தன்று உறுப்புக்கள் சிதைக்கப்பட்ட நிலையில் என் தந்தையின் உடல் கொண்டு வரப்பட்டு நபி(ஸல்) அவர்களின் முன்னிலையில் வைக்கப்பட்டது. அவ்வுடல் மீது ஒரு துணி போர்த்தப்பட்டிருந்தது. அப்போது நான் சென்று அந்தத் துணியை நீக்கி (என் தந்தையை)ப் பார்க்க நாடினேன். எனினும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்தனர். நான் மீண்டும் சென்று துணியை நீக்க முனைந்தேன். மீண்டும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்துவிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (ஜனாஸாவை தூக்கும்படி) கட்டளையிட்டார்கள். (ஜனாஸா) தூக்கப்பட்டபோது ஒரு பெண் சப்தமாக அழுவதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'யார் அந்தப் பெண்?' என வினவினார்கள். அம்ருடைய மகள் என்றோ அல்லது அம்ருடைய சகோதரி என்றோ (கூடியிருந்தோர்) கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'நீ ஏன் அழுகிறாய்? நீ அழுதாலும் அழாவிட்டாலும் ஜனாஸா உயர்த்தப்படும்வரை வானவர்கள் தங்களின் இறக்கைகளை விரித்து நிழல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்'' என்றார்கள்.

பகுதி 35

(துக்கத்தில்) ஆடையைக் கிழித்துக் கொள்பவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.

1294. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''(துன்பத்தில்) தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.''

என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 36

ஸஅத் இப்னு கவ்லா(ரலி)வுக்கு நபி(ஸல்) அவர்கள் இரங்கல் தெரிவித்தது.

1295. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

இறுதி ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! நான் மரணத் தருவாயை அடைந்து விட்டேன். நான் செல்வந்தன் என்னுடைய ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே, என்னுடைய பொருளில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்து விடட்டுமா?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேண்டாம்'' என்றார்கள். பின்னர் நான் 'பாதியைக் கொடுக்கட்டுமா?' எனக் கேட்டேன். அதற்கும் நபி(ஸல்) அவர்கள், 'வேண்டாம் மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்துவிடும். அதுவும் அதிகம்தான் ஏனெனில், உம்முடைய வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதைவிட பிறரிடம் தேவையற்றவர்களாகவிட்டுச் செல்வதே சிறந்தது. இறை உவப்பையே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கிற எந்த ஒரு செலவானாலும் சாரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படும். நீர் உம் மனைவியின் வாயில் இடுகிற உணவுக் கவளத்திற்கும் கூட உமக்கு நண்மையுண்டு'' என்று கூறினார்கள்.

நான் அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! (என்னுடைய தோழர்களெல்லாம் மதீனாவுக்குச் செல்வார்கள்) நான் மட்டும் இங்கு (மக்காவில்) பின் தங்கியவனாக ஆகிவிடுவேனே!' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீர் இங்கு இருந்தபோதிலும் நல்லறங்கள் செய்து கொண்டே இருந்தால் உம்முடைய அந்தஸ்தும் மேன்மையும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்' எனக் கூறிவிட்டு, 'உம்மை வைத்துச் சில கூட்டத்தினர் நன்மையடைவதற்காகவும் மற்ற சிலர் துன்பம் அடைவதற்காகவும் நீர் இங்கேயே தங்க வைக்கப்படலாம்'' என்று கூறிவிட்டு, 'யாஅல்லாஹ்! என்னுடைய தோழர்களின் ஹிஜ்ரத்தைப் பூரணமாக்குவாயாக! அவர்களைத் தங்கள் கால் சுவடுகளின் வழியே (முந்திய இணைவைக்கும் மார்க்கத்திற்கே) திரும்பிச் செல்லும்படி செய்துவிடாதே.'' எனப் பிரார்த்தித்தார்கள். நோயாளியாயிருந்த ஸஅத் இப்னு கவ்லா(ரலி) மக்காவிலேயே இறந்துவிட்டதற்காக 'பாவம் ஸஃது இப்னு கவ்லா (அவர் நினைத்து நடக்கவில்லை)'' என்று நபி(ஸல்) அவர்கள் இரங்கல் தெரிவித்தார்கள்.

பகுதி 37

துக்கத்தை அறிவிக்க மொட்டையடித்துக் கொள்வது தடுக்கப்பட்டுள்ளது.

1296. அபூ புர்தா இப்னு அபீ மூஸா அறிவித்தார்.

(என் தந்தை) அபூ மூஸா தம் கடுமையான மரண வேதனையால் மயக்கமடைந்துவிட்டார். அவரின் தலை அவரின் மனைவியின் மடியில் இருந்தது. (தம் மனைவியின் எந்தப் பேச்சுக்கும்) அவரால் பதில் சொல்ல முடியவில்லை. பின்பு மயக்கம் தெளிந்தபோது, 'நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் (துன்பத்தின் போது) அதிகச் சப்தமிட்டு அழும் பெண்ணைவிட்டும் மொட்டையடித்துக் கொள்ளும் பெண்ணைவிட்டும் ஆடைகளைக் கிழித்துக் கொள்ளும் பெண்ணைவிட்டும் தம்மை விலக்கினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மை விலக்கிக் கொண்டவரிடமிருந்து நானும் விலகிக் கொள்கிறேன்'' என்று கூறினார்.

பகுதி 38

(துன்பத்தில் கன்னத்தில்) அறைந்து கொள்பவன் நம்மைச் சார்ந்தவனல்லன்.

1297. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(''துன்பத்தின் காரணமாகக்) கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்'.

என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 39

துன்ப நேரத்தில் 'என்னுடைய கைசேதமே! என்பதும் அறியாமைக் காலத்துச் சொற்களைக் கூறுவதும் தடுக்கப்பட்டுள்ளது.

1298. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(''துன்பத்தின் போது) கன்னங்களில் அறைந்து கொள்பவனும் ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சேர்ந்தவனல்லன்.''

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

பகுதி 40

துன்பத்தின்போது கவலையான முகத்தோடு அமர்வது.

1299. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(மூத்தா போரில்) இப்னு ஹாரிஸா(ரலி) ஜஅஃபர்(ரலி) இப்னு ரவாஹா(ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது நபி(ஸல்) அவர்கள் கவலையான முகத்தோடு அமர்ந்திருந்தார்கள். நான் கதவின் இடைவெளி வழியாக நபி(ஸல்) அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ஜஅஃபர்(ரலி) வீட்டுப் பெண்கள் (ஒப்பாரி வைத்து) அழுவதாகக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி கட்டளையிட்டார்கள். அவர் சென்று மீண்டும் வந்து, 'அவர்கள் (என்னுடைய சொல்லிற்குக்) கட்டுப்படவில்லை'' என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் '(நீ சென்று) அவர்களைத் தடுத்து நிறுத்து' எனக் கட்டளையிட்டார்கள். மீண்டும் அவர் சென்று மூன்றாம் முறையாக வந்து 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எங்களை (அப்பெண்கள்) மிகைத்துவிட்டனர்'' என்றார்.

''அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப்போடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நான் நினைக்கிறேன். பின்னர் நான் அவரை நோக்கி, 'அல்லாஹ் உம்மை இழிவாக்குவானாக! நபி(ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டதையும் உம்மால் செய்ய முடியவில்லை இன்னும் அவர்களைத் தொந்தரவு செய்வதையும் நீர் நிறுத்தவில்லை'' எனக் கூறினேன்.

1300. அனஸ்(ரலி) அறிவித்தார்.

குர்ஆனை (மனனம் செய்து) அதை முறைப்படி ஓதத் தெரிந்ததிருந்த (எழுபது) நபர்கள் கொல்லப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் (தொடர்ந்து) குனூத் ஓதினார்கள். இந்தத் தருணத்தை விட வேறு எப்போதும் இவ்வளவு அதிகக் கவலை கொண்டவர்களாக அவர்களை நான் பார்த்ததில்லை.

பகுதி 41

சோதனையின்போது கவலையை வெளிப்படுத்தாமலிருப்பது.

யாகூப்(அலை) அவர்கள் 'என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன்'' (திருக்குர்ஆன்: 12:86) என்றார்கள்.

1301. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

அபூ தல்ஹா(ரலி)வின் மகன் நோயுற்றிருந்தார். ஒரு நாள் அபுதல்ஹா(ரலி) வெளியே சென்றிருந்தபோது குழந்தை இறந்துவிட்டது. இதைக் கண்ட அபூ தல்ஹா(ரலி)வின் மனைவி உடனே கொஞ்சம் உணவைத் தயார் செய்தார். பிறகு மய்யித்தை வீட்டின் ஒரு மூலையில் வைத்தார். வெளியே சென்றிருந்த அபூ தல்ஹா(ரலி) வீடு திரும்பிய உடன் மகன் எவ்வாறுள்ளான்? எனக் கேட்டார் அதற்கு அவரின் மனைவி 'அமைதியாகிவிட்டான், நிம்மதி (ஓய்வு) பெற்று விட்டிருப்பான் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு'' என பதிலளித்தார். அபூ தல்ஹா(ரலி) தம் மனைவி கூறியது உண்மைதான் என்றெண்ணி (நிம்மதியுடன்) தம் மனைவியோடு இரவைக் கழித்தார். பொழுது விடிந்து குளித்துவிட்டுத் (தொழுகைக்காக) வெளியே செல்ல நாடியபோது மகன் இறந்துவிட்டதை மனைவி கூறினார். அபூ தல்ஹா நபி(ஸல்) அவர்களோடு தொழுதுவிட்டுத் தம் வீட்டில் நடந்த சம்பவத்தை அவர்களிடம் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இந்த இரவு நடந்தவற்றில் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அபிவிருத்தி செய்யக்கூடும்'' என்றார்கள்.

சுஃப்யான் கூறுகிறார்.

அந்த இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் இருப்பதை பார்த்தேன். அவர்கள் அனைவரும் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர் என மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார்.

பகுதி 42

பொறுமை என்பது துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வதே)

இரண்டு பக்கச் சுமையும் அதன் நடுப்பகுதியில் எவ்வளவு அழகாக அமைந்துள்ளன. அதாவது பகரா அத்தியாயத்தில், 'அவர்களுக்குத் துன்பம் ஏற்படும்போது, நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம் என்று கூறுவார்கள்'' (என்ற ஒரு பக்கமும்) 'இத்தகையோரின் மீதே அவனுடைய நல்லாசியும் நற்கிருபையும் உண்டாகின்றன'' (என்ற நடுப்பகுதியும்) 'இன்னும் இவர்கள் தாம் நேர்வழியை அடைந்தவர்கள்'' (என்ற மறுபக்கம் கொண்ட வசனமும்) (திருக்குர்ஆன் 02:156-158) (எவ்வளவு அழகாக அமைந்துள்ளன) என உமர்(ரலி) கூறினார்.

மேலும் அல்லாஹ் கூறினான்:

''பொறுமையுடனும் தொழுகையுடனும் இறைவனிடம் உதவி தேடுங்கள். இது இறைவனை அஞ்சுபவர்களைத் தவிர மற்றவர்களுக்கு மிகப் பெரிய விஷயமாகும்'' (திருக்குர்ஆன் 02:45)

1302. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட உடன் (கைக் கொள்வதே)''

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 43

நபி(ஸல்) அவர்கள் (தம் மகன் இப்ராஹீம் இறந்தபோது), 'உன்னுடைய (பிரிவின்) காரணமாக நாங்கள் கவலைப்படுகிறோம்' எனக் கூறியது.

''கண்கள் அழுகின்றன: உள்ளம் வாடுகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) கூறினார்.

1302. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூ ஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவராவார். நபி(ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது கருணையாகும்'' என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு, 'கண்கள் நீரைச் சொரிகின்றன் உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக்கவலைப்படுகிறோம்'' என்றார்கள்.

பகுதி 44

நோயாளியின் அருகில் அழுவது.

1304. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஸஅத் இப்னு உபாதா(ரலி) நோயுற்றபோது நபி(ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஆகியோரோடு நோய் விசாரிக்கச் சென்றார்கள். வீட்டில் நுழைந்தபோது (ஸஅத் இப்னு உபாதாவின்) குடும்பத்தினர் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டதும், 'என்ன? இறந்துவிட்டாரா?' எனக் கேட்டார்கள். 'இல்லை இறைத்தூதர் அவர்களே!' என்றனர். நபி(ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத் தொடங்கினர். பின் நபி(ஸல்) அவர்கள், '(மக்களே!) நீங்கள் (செவி சாய்த்துக்) கேட்க மாட்டீர்களா? நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்லை - பின்பு, தம் நாவின் பால் சைகை செய்து எனினும் இதன் காரணமாகத்தான் தண்டனையோ அருளோ வழங்குகிறான். நிச்சயமாகக் குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மய்யித் வேதனை செய்யப்படுகிறது'' என்று கூறினார்கள்.

ஒப்பாரி வைப்பவர்களை உமர்(ரலி) கண்டால் கம்பினால் அடிப்பார், கல்லெறிவார். இன்னும் மண்வாரி வீசவும் செய்வார்.

பகுதி 45

ஒப்பாரி வைப்பது, (சப்தமிட்டு) அழுவது ஆகியவற்றைத் தடுப்பதும் அதைக் கண்டிப்பதும்.

1305. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(மூத்தா போரில்) ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி), ஜஅஃபர் இப்னு அபூ தாலிப்(ரலி) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது நபி(ஸல்) அவர்கள் கவலை கொண்ட முகத்தோடு அமர்ந்திருந்தார்கள். நான் கதவின் இடைவெளி வழியாக நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! ஜஅஃபர்(ரலி) வீட்டுப் பெண்கள் (ஒப்பாரி வைத்து) அழுகிறார்கள்'' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள். அவர் சென்று திரும்பி வந்து. 'நான் தடுத்தேன். அவர்கள் என்னுடைய சொல்லிற்குக் கட்டுப்படவில்லை'' என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் '(நீ சென்று) அவர்களைத் தடுத்து நிறுத்து'' என இரண்டாவது முறையாகக் கட்டளையிட்டார்கள். மீண்டும் அவர் சென்று வந்து 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்னை (அப்பெண்கள்) மிஞ்சிவிட்டனர்'' என்றார். 'அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப் போடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நான் நினைக்கிறேன். பின்னர் அவரை நோக்கி அல்லாஹ் உம்மை இழிவாக்குவானாக! நபி(ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டதையும் உம்மால் செய்ய முடியவில்லை: இன்னும் அவர்களைத் தொந்தரவு செய்வதையும் நிறுத்தவில்லை எனக் கூறினேன்.

1306. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

ஒப்பாரி வைக்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். எனினும் இந்த ஒப்பந்ததை எங்களில் ஐந்து பெண்களைத் தவிர வேறு யாரும் நிறைவேற்றவில்லை. அப்பெண்கள் உம்மு ஸுலைம்(ரலி) உம்முல் அலா(ரலி), முஆத்(ரலி) அவர்களின் மனைவியான அபூ சப்ராவின் மகள் இன்னும் இரண்டு பெண்கள் அல்லது அபூ ஸப்ராவின் மகள் முஆத்(ரலி) உடைய மனைவி. இன்னும் ஒரு பெண், (இதை அறிவிப்பாளர்களில் ஒருவர் சந்தேகமாகக் கூறுகிறார்.)

பகுதி 46

ஜனாஸாவிற்காக எழுந்து நிற்பது.

1307. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஜனாஸாவைக் கண்டால் அது உங்களைக் கடந்து செல்லும் வரை எழுந்து நில்லுங்கள்.

ஹுமைதின் அறிவிப்பில் 'உங்களைக் கடக்கும்வரை'' அல்லது (பூமியில்) வைக்கப்படும வரை (நில்லுங்கள்)'' என்பது அதிகமாக உள்ளது.

பகுதி 47

ஜனாஸாவுக்காக எழுந்தவர் அமர்வது எப்போது?

1308. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''உங்களிலொருவர் ஜனாஸாவைக் கண்டும் அதனுடன் நடந்து செல்லப் போவதில்லை என்றால் அவர் அதைக் கடந்து செல்லும் வரை அல்லது அது அவரைக் கடந்து செல்லும் வரை அல்லது அது அவருக்கு முன்னால் (பூமியில்) வைக்கப்படும் வரை எழுந்து நிற்கட்டும்.''

என ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) அறிவித்தார்.

1309. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''நீங்கள் ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள் அதைப் பின்தொடர்ந்து செல்பவர் (அது பூமியில்) வைக்கப்படும் வரை உட்கார வேண்டாம்''

என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பகுதி 48

ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்பவர் ஜனாஸா, சுமந்து செல்பவரின் தோளிலிருந்து (பூமியில்) வைக்கப்படும் வரை உட்காரக் கூடாது. அதற்குமுன் உட்கார்ந்துவிட்டால் நிற்கும்படி கட்டளையிடவேண்டும்.

1310. கைஸான் அறிவித்தார்.

நாங்கள் ஒரு ஜனாஸாவில் பங்கேற்றோம். அப்போது அபூ ஹுரைரா(ரலி) மர்வானுடைய கையைப் பிடித்தார். ஜனாஸா (தரையில்) வைக்கப்படுவதற்கு முன் இருவரும் அமர்ந்துவிட்டார்கள். அங்கு வந்திருந்த அபூ ஸயீத்(ரலி) மர்வானின் கையைப் பிடித்து 'எழுந்திரு! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்கள் (உட்காருவதைத்) தடுத்துள்ளார்கள் என்பதை இம்மனிதர் (அபூ ஹுரைரா) நன்கு அறிந்திருந்தும் இவ்வாறு செய்தி)ருக்கிறார்' எனக் கூறினார். உடனே 'அபூ ஸயீத்(ரலி) உண்மையுரைத்தார்'' என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.

பகுதி 49

யூதரின் ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது.

1311. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். பின்பு நாங்கள் 'இறைத்தூதர் அவர்களே! இது ஒரு யூதனின் ஜனாஸா'' என்றோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்'' எனக் கூறினார்கள்.

1312. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா அறிவித்தார்.

ஸஹ்ல் இப்னு ஹுனைஃபு(ரலி), கைஸ் இப்னு ஸஅத்(ரலி) ஆகியோர் காதிஸியாவில் ஓரிடத்தில் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. உடனே அவர்கள் இருவரும் எழுந்தார்கள். அப்போது அவர்களிடம் 'இது இந்நாட்டில் அபயம் பெற்ற (காபிரின்) ஜனாஸாவல்லவா?' எனக்கேட்கப்பட்டது. அதற்கு அவ்விருவரும், 'நபி(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா சென்றபோது எழுந்து நின்றார்கள் அப்போது அவர்களிடம் அது யூதரின் ஜனாஸா எனக் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர் மனிதரில்லையா?' எனப் பதிலளித்தார்கள் என்றார்கள்.

1313. இப்னு அபீ லைலா அறிவித்தார்.

நான் கைஸ்(ரலி) உடனும் ஸஹ்ல்(ரலி) உடனும் இருந்தேன். அவர்கள் கூறினார்கள். 'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அப்போது இது போன்ற சம்பவம் நிகழ்ந்தது என்று கூறும் மற்றோர் அறிவிப்பும் வந்துள்ளது.

அபூ மஸ்வூத்(ரலி)யும் கைஸ்(ரலி)யும் ஜனாஸாவிற்காக எழுந்து நின்றார்கள் என்றும் இப்னு அபீ லைலா அறிவித்தார்.

பகுதி 50

ஜனாஸாவைச் சுமந்து செல்வது பெண்களுக்கில்லை ஆண்களுக்கு மட்டுமே.

1314. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.''

என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

பகுதி 51

ஜனாஸாவை(ச் சுமந்து செல்வதை) விரைவுபடுத்தல்.

'நீங்கள் ஜனாஸாவைக் கொண்டு செல்வதாயிருந்தால் அதன் முன்புறம், பின்புறம், வலப்புறம், இடப்புறம் என எல்லாப் பக்கமும் நடந்து செல்லுங்கள்' என அனஸ்(ரலி) கூறினார். அத்துடன் ஜனாஸாவுக்குச் சமீபமாகவும் நடக்க வேண்டும் என்று மற்றவர்கள் கூறுகிறார்கள்.

1315. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஜனாஸாவைச் (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள் அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்.''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 52

சுமந்து செல்லப்படும்போதே என்னை விரைந்து செல்லுங்கள் என்று (நல்ல) மய்யித் கூறுவது.

1316. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறே கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.''

என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பகுதி 53

ஜனாஸாத் தொழும்போது இமாமுக்குப் பின் மக்கள் இரண்டு மூன்று அணிகளாக நிற்பது.

1317. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நஜ்ஜாஷி (மன்னரு)க்கு ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அல்லது மூன்றாவது அணியில் நின்றிருந்தேன்.

பகுதி 54

ஜனாஸாத் தொழும்போது அணிவகுத்தல்.

1318. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நஜ்ஜாஷியின் மரணச் செய்தியைத் தம் தோழர்களுக்கு அறிவித்துவிட்டு, பிறகு சற்று முன்னால் நகர்ந்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றதும் (நபி(ஸல்) அவர்கள் நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்.)

1319. ஷைபானீ அறிவித்தார்.

'நபி(ஸல்) அவர்கள் தனித்திருந்த ஒரு கப்ரின் பக்கம் வந்து தோழர்களை அணிவகுக்கச் செய்து நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள் என்று நபி(ஸல்) அவர்களை நேரில் பார்த்த ஒருவர் என்னிடம் கூறினார்' என ஷஅபீ கூறினார். நான் அம்ரின் தந்தை (ஷஅபி)யே! உமக்குக் கூறிய அவர் யார்? எனக் கேட்பதும் 'இப்னு அப்பாஸ்(ரலி) தாம்' என்று பதில் கூறினார்.

1320. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

''இன்றைய தினம் அபிஸீனியாவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் மரணித்துவிட்டார். எனவே வாருங்கள் அவருக்காக ஜனாஸாத் தொழுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்து நின்றதும் நபி(ஸல்) அவர்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அணியில் நின்றிருந்தேன்.

பகுதி 55

ஜனாஸாத் தொழும்போது பெரியவர்களுடன் சிறுவர்களும் அணிவகுத்தல்.

1321. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இரவில் அடக்கம் செய்யப்பட்டவரின் கப்ரைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள், 'இது அடக்கம் செய்யப்பட்டது எப்போது?' எனக் கேட்டார்கள். தோழர்கள் 'நேற்றிரவு தான்' என்றதும். 'எனக்கும் சொல்லியனுப்பியிருக்கக் கூடாதா' எனக் கேட்டார்கள். அதற்கு அம்மக்கள், 'அதை நாங்கள் இருள் சூழ்ந்த இரவில் அடக்கினோம். எனவேதான், உங்களை விழிக்கச் செய்ய விரும்பவில்லை' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழத் தயாராக எழுந்து நின்றார்கள். நான் உட்பட அனைவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்ததும் அவர்கள் ஜனாஸாத் தொழுதார்கள்.

பகுதி 56

ஜனாஸாத் தொழுகை மார்க்கமாக்கப்படுதல்.

''ஜனாஸாத் தொழுதவர்கள்... என்றும்'' 'உங்கள் தோழருக்கு நீங்கள் ஜனாஸாத் தொழுங்கள்'' என்றும் 'நஜ்ஜாஷிக்கு நீங்கள் தொழுகை நடத்துங்கள்'' என்றும் (நபி(ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் அதைத் தொழுகை என்றே கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் இதனைத் தொழுகை என்று கூறினாலும்) இதில் ருகூவோ ஸுஜுதோ கிடையாது பேசுவதும் கூடாது. ஆனால், தக்பீர் கூறுவதும் ஸலாம் கொடுப்பதும் உண்டு.

இப்னு உமர்(ரலி) தூய்மையின்றி ஜனாஸாத் தொழுவதில்லை மேலும் அவர் சூரியன் உதிக்கும் போதும் அஸ்தமிக்கும் போதும் (ஜனாஸாத்) தொழுவதில்லை (தக்பீரின் போது) கைகளை உயர்த்துபவராக இருந்தார்.

நான் மக்களை (பல ஸஹாபாக்கள் மற்றும் தாபியீன்களைப்) பார்த்திருக்கிறேன். அவர்கள், கடமையான தொழுகையில் இமாமத் செய்வதற்குத் தகுதியானவதையே ஜனாஸாத் தொழுகைக்கும் இமாமத் செய்யத் தகுதியானவராகக் கருதுகிறார்கள். மேலும் பெருநாள் மற்றும் ஜனாஸாத் தொழுகைகளில் யாருக்கேனும் உளு முறிந்துவிட்டால் அவர் தண்ணீரைத் தேடி (உளுச் செய்து)க் கொள்ள வேண்டும்: தயம்மும் செய்யலாகாது. மக்கள் ஜனாஸாத் தொழுது கொண்டிருக்கும்போது (இடையில்) ஒருவர் அங்கு வந்தால் தக்பீர் கூறி அவரும் ஜமாஅத்தில் இணைந்துவிடவேண்டியதுதான் என்றும் அவர்கள் கருதுகிறார்கள் என ஹஸன் (பஸாபி) கூறுகிறார்.

இரவானாலும் பகலானாலும் பயணத்திலிருந்தாலும் ஊரிலிருந்தாலும் ஜனாஸத் தொழுகையில் நான்கு தக்பீர்கள் சொல்லப்பட வேண்டும் என இப்னுல் முஸய்யப் கூறுகிறார்.

முதல் தக்பீர் (ஜனாஸாத்) தொழுகையை ஆரம்பிப்பதற்குரியதாகும். ஜனாஸாத் தொழுகையில் அணிவகுப்பும் இமாமும் உண்டு. மேலும் '(நபியே!) அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரும் இறந்தால் அவர்களுக்காக நீர் ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்'' என அல்லாஹ் கூறியுள்ளான் (இந்த வசனமே ஜனாஸாத் தொழுகை மார்க்கத்தில் உள்ளது என்பதற்கான ஆதாரமாகும்) என அனஸ்(ரலி) கூறினார்.

1322. ஷைபானி அறிவித்தார்.

''தனித்திருந்த கப்ரைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள் அதில் எங்களுக்கு இமாமாக நின்று (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்துத் தொழுதோம் என்று நபி(ஸல்) அவர்களுடன் சென்ற ஒருவர் எனக்கு அறிவித்தார்'' என ஷஅபீ கூறினார். நாங்கள் 'அம்ரின் தந்தை(யாகிய ஷஅபீ)யே! உங்களுக்கு அதை அறிவித்தவர் யார்?' எனக் கேட்டதும் 'இப்னு அப்பாஸ்(ரலி) தாம்'' என்றார் அவர்.

பகுதி 57

ஜனாஸாவைப் பின்தொடர்தலின் சிறப்பு.

நீ (ஜனாஸாத்) தொழுதுவிட்டால் உன் மீதுள்ள கடமையை நீ நிறைவேற்றியவனாவாய் என ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்.

ஜனாஸாத் தொழுததும் (அடக்கும் முன் திரும்புவதற்காக மய்யித்தின் உறவினர்களிடம்) அனுமதி பெற வேண்டும். என்று நாம் அறிந்ததில்லை. ஆனாலும், ஜனாஸாத் தொழுதுவிட்டு (அடக்கப் பணியில் ஈடுபடாமல்) திரும்பி விடுகிறவருககு ஒரு கீராத் நன்மை மட்டுமே உண்டு என்று ஹுமைத் இப்னு ஹிலால் கூறுகிறார்.

1323 / 1324 நாஃபிஉ அறிவித்தார்.

ஜனாஸாவைப் பின்தொடர்கிறவருக்கு ஒரு கிராத் நன்மையுண்டு என அபூ ஹுரைரா(ரலி) கூறினார் என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கூறப்பட்டதும் 'அபூ ஹுரைரா(ரலி) மிகைப்படுத்துகிறார்' என்றார்.

ஆயிஷார(ரலி) அபூ ஹுரைரா(ரலி)வின் கூற்றை உண்மைப்படுத்தியதுடன், 'நானும் நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு கூறக் கேட்டிருக்கிறேன்' என்றும் கூறினார். இதைக் கேட்ட இப்னு உமர்(ரலி) 'அப்படியாயின் நாம் அதிகமான கீராத்களைப் பாழ்படுத்தி விட்டோமே' என்றார்.

பகுதி 58

அடக்கம் செய்யப்படும் வரை காத்திருத்தல்.

1325. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

''ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இரண்டு கீராத்கள் என்றால் என்ன?' என வினவப்பட்டது. அதற்கவர்கள், 'இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)'' என்றார்கள்.

பகுதி 59

ஜனாஸாத் தொழுகையில் பெரியவர்களுடன் சிறுவர்களும் பங்கேற்றல்.

1326. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு கப்ருக்கருகில் வந்தார்கள். அப்போது இ(ந்த)மய்யித்)து நேற்றிரவுதான் அடக்கம் செய்யப்பட்டது என்று தோழர்கள் கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (ஜனாஸாத்) தொழுதார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் அணியாக நின்று (தொழுதோம்.)

பகுதி 60

ஜனாஸாத் தொழுகை மஸ்ஜிதிலும் (பெருநாள் தொழுகை தொழும்) முஸல்லா எனும் திடலிலும் தொழுதல்.

1327. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(அபிசீனிய மன்னர்) நஜ்ஜாஷி இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை அறிவித்த நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் சகோதரருக்காக நீங்கள் பாவமன்னிப்பு தேடுங்கள்'' என்று கூறினார்கள்.

1328. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்களை முஸல்லா எனும் திடலில் அணிவகுக்கச் செய்து (நஜாஷி மன்னருக்காக) நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.

1329. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

தம் சமூகத்தில் விபச்சாரம் செய்த ஆண் பெண் இருவரை யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டபடி அவ்விருவரும் பள்ளிவாசலில் ஜனாசாத் தொழுகை தொழுமிடத்திற்கருகில் கொண்டு செல்லப்பட்டுக் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள்.

பகுதி 61

கப்ருகளின் மீது பள்ளிவாயில் கட்டுவது விரும்பத்தக்கதன்று.

ஹஸன் இப்னு ஹஸன் மரணமானதும் அவரின் மனைவி அவரின் கப்ரின் மீது கூடாரமடித்து அதில் ஒரு வருட காலமாகத் தங்கியிருந்தார். பின்பு அது அகற்றப்பட்டது. அப்போது ஒருவர் '(இவ்வாறு செய்வதன் மூலமாக) இழந்துவிட்டதை அவர்கள் பெற்றனரோ?' எனச் சப்தமாகக் கேட்டதற்கு இன்னொருவர் 'இல்லை! மாறக நம்பிக்கையிழந்துவிட்டதால் திரும்பிவிட்டனர்' எனப் பதில் கூறினார்.

1330. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்'' என்று கூறினார்கள்.

இந்தப் பயம் மட்டும் இல்லையாயின் நபி(ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.

பகுதி 62

பிரசவத் தொடக்கின்போது இறந்துவிட்ட பெண்ணுக்கு ஜனாஸாத் தொழல்.

1331. ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.

பிரசவத் தொடக்குடனேயே இறந்துவிட்ட பெண்ணிற்கு நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுதபோது மையித்தின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள். அப்போது நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன்.

பகுதி 63

ஜனாஸாத் தொழும்போது இமாம் ஆண், பெண் மய்யித்தின் எந்தப் பகுதிக்கு நேராக நிற்க வேண்டும்?

1332. ஸமுரா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று பிரசவத் தொடக்கில் இறந்த பெண்ணிற்கு ஜனாஸாத் தொழுகை தொழுதிருக்கிறேன். அப்போது அவர்கள் மய்யித்தின் நடுப்பகுதிக்கு நேராக நின்றிருந்தார்கள்.

பகுதி 64

ஜனாஸாத் தொழுகையில் நான்கு தக்பீர்கள்.

அனஸ்(ரலி) ஜனாஸாத் தொழுகை நடத்தும்போது மூன்று தக்பீர்கள் கூறிவிட்டுப் பிறகு (மறதியாக) ஸலாம் கூறிவிட்டார். அவருக்கு இது உணர்த்தப்பட்டதும் உடனே கிப்லாவை முன்னோக்கி, நான்காவது தக்பீரும் கூறிவிட்டுப் பின்பு ஸலாம் கூறினார் என ஹுமைத் கூறுகிறார்.

1333. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நஜ்ஜாஷி மரணித்ததும் அன்றே அச்செய்தியை நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவித்துவிட்டு முஸல்லா எனும் திடலில் அனைவரையும் ஒன்று கூட்டி அணிவகுக்கச் செய்து, நான்கு தக்பீர் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.

1334. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் அஸ்ஹமா என்னும் நஜ்ஜாஷீ (மன்னரு)க்கு நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.

பகுதி 65

ஜனாஸாத் தொழுகையில் ஃபாத்திஹா சூரா ஓதுதல்.

குழந்தைக்கு ஜனாஸாத் தொழும்போது அதில் ஃபாத்திஹா சூரா ஓதுவதுடன், 'இறைவா இக்குழந்தையை (நன்மைக்கான) சேமிப்பாகவும் முன் வைப்பாகவும் கூலியாகவும் ஆக்குவாயாக!' என்றும் கூற வேண்டும் என்று ஹஸன் (பஸரீ) கூறுகிறார்.

1335. தல்ஹா அறிவித்தார்.

நான் இப்னு அப்பாஸ்(ரலி) பின்னால் நின்று ஜனாஸாத் தொழுதேன். அப்போது அவர் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார். பிறகு 'நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்)' என்றார்.

பகுதி 66

மய்யித் அடக்கம் செய்யப்பட்ட பின் கப்ருக்கு அருகில் ஜனாஸாத் தொழுதல்.

1336. ஷைபானீ அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் தனித்திருந்த ஒரு கப்ரின் பக்கம் வந்து தோழர்களுக்கு இமாமாக நின்று ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்: (தோழர்கள்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதார்கள் என்ற நபி(ஸல்) அவர்களுடனிருந்த ஒருவர் எனக்குக் கூறினார்'' என ஷஅபீ குறிப்பிட்டார். அப்போது நான் 'அம்ரின் தந்தை (யான ஷஅபீ )யே! உமக்கு இதை அறிவித்தவர் யார்?' எனக் கேட்டேன். அதற்கவர் 'இப்னு அப்பாஸ்(ரலி) தாம்'' என்றார்.

1337. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த கரு நிறமுடைய ஓர் ஆணோ பெண்ணோ இறந்துவிட்டார். அவர் இறந்துவிட்ட செய்தி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு நாள் திடீரென்று அவர் பற்றி நினைவு வந்ததும் நபி(ஸல்) அவர்கள், 'அவர் என்ன ஆனார்?' எனக் கேட்டார்கள். அதற்கு (தோழர்கள்) 'இறைத்தூதர் அவர்களே! அவர் மரணித்துவிட்டார்!'' என்றதும் 'எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?' எனக் கேட்டனர். தோழர்கள், அவரைப் பற்றி அந்தஸ்துக் குறைவாகக் கருதி, 'அவர் இன்னின்னவாறெல்லாம் இருந்தார்' எனக் கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் 'அவரின் கப்ரை எனக்குக் காட்டுங்கள்'' என்று கூறி, கப்ருக்குக் வந்து (ஜனாஸாத்) தொழுதார்கள்.

பகுதி 67

உயிருள்ளோரின் செருப்போசையை மய்யித் செவியுறல்.

1338. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான்.''

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 68

புனித பூமியிலோ அது போன்ற இடங்களிலோ அடக்கம் செய்யப்படுவதை விரும்புதல்.

1339. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் மூஸா(ரலி) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்தபோது மூஸா(அலை) அவர்கள் அவரின் கண் பிதுங்கும் அளவுக்கு அடித்துவிட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய், 'இறைவா! மரணிக்க விரும்பாத ஓர் அடியானிடம் நீ என்னை அனுப்பிவிட்டாய்' என்றார். பிறகு அல்லாஹ் அவரின் கண்ணைச் சரிப்படுத்திவிட்டு, 'நீர் மீண்டும் அவரிடம் சென்று, அவரை ஒரு மாட்டின் முதுகில் கையை வைக்கச் சொல்லி, அவரின் கை எத்தனை ரோமங்களை அடக்கிக் கொள்கிறதோ அத்தனை ஆண்டுகள் அவர் உயிர் வாழலாம் என்பதையும் கூறும்'' என அனுப்பி வைத்தான். (அவ்வாறே அவர் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கூறியபோது,) மூஸா(அலை) 'இறைவா! அதற்குப் பிறகு?' எனக் கேட்டதும் அல்லாஹ், 'பிறகு மரணம் தான்' என்றான். உடனே மூஸா(அலை) அவர்கள் 'அப்படியானால் இப்பொழுதே (தயார்)' எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும்) பூனிதத்தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள (புனிதத் தலத்திற்கு மிக அருகிலுள்ள) இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டினார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறும்போது, 'நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஸா(அலை) அவர்களின் கப்ரைக் காட்டியிருப்பேன்'' எனக் குறிப்பிட்டார்கள்.

பகுதி 69

இரவில் அடக்கம் செய்தல்.

அபூ பக்ர்(ரலி) இரவில்தான் அடக்கம் செய்யப்பட்டார்.

1340. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இரவில் அடக்கம் செய்யப்பட்ட ஒருவருக்காக நபி(ஸல்) அவர்கள் (ஜனாஸாத் தொழ நாடி) தோழர்களுடன் நின்றார்கள். முதலில் 'இ(ந்தகப்ருக்குரிய)வர் யார்?' எனக் கேட்டார்கள். 'இவர் இன்னார் நேற்றிரவுதான் அடக்கம் செய்யப்பட்டார்'' என (தோழர்கள்) கூறியதும் அவருக்காகத் தொழுதார்கள்.

பகுதி 70

கப்ரின் மீது பள்ளிவாசல் நிறுவுதல்.

1341. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவர்களின் மனைவியரில் ஒருவர் அபிஸீனியாவில் தாம் பார்த்த மாரியா எனப்படும் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிஸீனியா சென்றிருந்த உம்மு ஸலமா(ரலி) உம்மு ஹபீபா(ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களையும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபி(ஸல்) அவர்கள், 'அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால் அவரின் கப்ரின் மீது பள்ளிவாயில் எழுப்பி அதில் அவரின் உருவப்படங்களை வரைந்து வைப்பார்கள் அல்லாஹ்விடம் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே!'' என்று கூறினார்கள்.

பகுதி 71

பெண் மய்யித்தை அடக்குவதற்கு ஓர்ஆண் கப்ரில் இறங்குதல்.

1342. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களின் மகளின் அடக்கத்தில் கலந்து கொண்டோம். அப்போது கப்ருக்கருகில் உட்கார்ந்திருந்த நபி(ஸல்) அவர்களின் கண்கள் கண்ணிர் வடித்துக் கொண்டிருந்ததை பார்த்தேன். (''கடந்த) இரவு தம் மனைவியுடன் கூடாதவர் எவரேனும் உங்களில் உள்ளனரா?' என்று நபி(ஸல்) வினவினார்கள். அபூ தல்ஹா(ரலி), 'நான் உள்ளேன்' என்றதும் 'இந்தக் கப்ரில் இறங்குவீராக!'' என்றார்கள். உடனே அவர் கப்ரில் இறங்கி அடக்கம் செய்தார்.

'இதில் 'லம் யுகாரிஃப்' என்பதன் பொருள் பாவம் செய்யாதவர் என்பதுதான் என கருதுகிறேன்' என ஃபுலைஹ் என்பவர் கூறுவதாக இப்னுல் முபாரக் குறிப்பிடுகிறார்.

லம் யுகாரிஃப் என்பதன் பொருள் குர்ஆனில் (திருக்குர்ஆன் 06:113) லியக்தாரிஃபூ எனப் பயன்படுத்தப்பட்டிருப்பதன் அடிப்படையில் பாவத்தைச் சம்பாதிக்காதவன் என்பதேயாகும் என அபூ அப்தில்லாஹ்(புகாரி) குறிப்பிடுகிறேன்.

பகுதி 72

ஷஹீத்களுக்கு ஜனாஸா தொழுகை.

1343. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களில் இரண்டிரண்டு நபர்களை ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, 'இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?' எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரின் உடலைக் கப்ரின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு, 'இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாகுவேன்' எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்தோடே அடக்குமாறு ஏவினார்கள். இவர்கள் குளிப்பாட்டப்படவோ இவர்களுக்கு தொழுகை நடத்தப்படவோ இல்லை.

1344. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.

ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் உஹதுக்குச் சென்று, (போரில் கொல்லப்பட்டவர்களுக்காக ஜனாஸாவை முன்னால் வைத்துத் தொழுவது போன்று) தொழுகை நடத்தினார்கள். பிறகு மிம்பருக்கு வந்து, 'நிச்சயமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் கூறுவேன். மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள் அல்லது பூமியின் திறவுகோல்கள்... கொடுக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ்வின் மீது ஆணையாக! என(து மரணத்து)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பார்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் பயப்படவில்லை. ஆனால், (உலகத்திற்காக) நீங்கள் ஒருவரோடொருவர் மோதிக் கொள்வீர்களோ என்றே பயப்படுகிறேன்!'' என்று கூறினார்கள்.

பகுதி 73

இருவரை அல்லது மூவரை ஒரே கப்ரில் அடக்கம் செய்தல்

1345. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போரில் (ஷஹீதானவர்களில்) இரண்டிரண்டு நபர்களை சேர்த்து (ஒரே கப்ரில்) அடக்கம் செய்தார்கள்.

பகுதி 74

ஷஹீத்களைக் குளிப்பாட்ட வேண்டியதில்லை.

1346. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

''இவர்களை உஹதுப் போரில் மரணித்தவர்களை இரத்தத்துடனேயே அடக்குங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' மேலும் நபி(ஸல்) அவர்கள் அவர்களைக் குளிப்பாட்டவில்லை.

பகுதி 75

கப்ரின் உட்குழியில் முதலில் வைக்கப்படுவர்.

1347. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, 'இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?' எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டதும் அந்த ஒருவரின் உடலைக் கப்ரின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு. 'இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாகுவேன்' எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்துடனேயே அடக்குமாறு கட்டளையிட்டார்கள். இவர்கள் குறிப்பாட்டப்படவில்லை இவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவுமில்லை.

1348. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

''உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களைக் கண்டு இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அவரின் உடலை அவருடனிருந்தவருக்கு முன்பாக கப்ரில் வைத்தார்கள். இவ்விதம் என் தந்தையும் சிறிய தந்தையும் ஒரே துணியில் கஃபனிடப்பட்டார்கள்.

பகுதி 76

கப்ரில் இத்கிர் போன்ற புற்களைப் போடுதல்.

1349. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''அல்லாஹ் மக்காவைப் புனிதமாக்கியுள்ளான். எனக்கு முன்புள்ள யாருக்கும் (இங்கு போர் புரிதல்) அனுமதிக்கப்படவில்லை எனக்குப் பின்பும் யாருக்கும் அனுமதிக்கப்பட மாட்டாது. எனக்கு மட்டும் பகலில் சற்று நேரம் (மக்கா வெற்றிக்காக) அனுமதிக்கப்பட்டது. எனவே, இனி மக்காவிலுள்ள புற்கள் களையப்படக் கூடாது, மரங்கள் வெட்டப்படக் கூடாது, வேட்டைப் பிராணிகள் விரட்டியடிக்கப்படக் கூடாது, அறிவிப்புச் செய்பவர்களைத் தவிர வேறு யாரும் இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருட்களைப் பொறுக்கக் கூடாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது (என் தந்தை) அப்பாஸ்(ரலி) இத்கிர் என்ற புல்லைத் தவிரவா? அது நம்முடைய கப்ருகளுக்கும் பொற் கொல்லர்களுக்கும் தேவைப்படுகிறதே' என்றதும் நபி(ஸல்) அவர்கள், 'இத்கிர் என்ற புல்லைத் தவிர'' என்றனர்.

அபூ ஹுரைரா(ரலி), 'நம்முடைய கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் (இத்கிர் புல்லைப்) பயன்படுத்தலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என கூறினார். ஸஃபிய்யா(ரலி) அவர்களும் இதைப் போன்றே அறிவித்தார்.

இப்னு அப்பாஸ்(ரலி), 'நம்முடைய உலோகத் தொழிலாளர்களுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்தலாம்' என்று கூறினார்கள் என தாவூஸ் அறிவித்தார்.

பகுதி 77

ஏதேனும் காரணத்திற்காக மய்யித் கப்ரிலிருந்தோ உட்குழியிலிருந்தோ வெளியில் எடுக்கப்படலாமா?

1350. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

(முனாஃபிக்குகளின் தலைவனான) அப்துல்லாஹ் இப்னு உபை கப்ருக்குள் வைக்கப்பட்ட பிறகு அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள் அ(ந்த மய்யித்)தை வெளியிலெடுக்குமாறு கூறினார்கள். வெளியிலெடுக்கப்பட்டதும் அதைத் தம் மடியில் வைத்து, அதன் மீது தம் உமிழ் நீரை உமிழ்ந்து, தம் மேலாடையையும் அதற்கு அணிவித்தார்கள். (இதற்குக் காரணம் என்னவோ?) அல்லாஹ்வே அறிந்தவன்! நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடை ஒன்றை அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு அணிவித்திருந்தார்கள். 'அப்போது நபி(ஸல்) அவர்களிடம் இரண்டு மேலாடைகள் இருந்தன'' என அபூ ஹாரூனும் சுஃப்யானும் கூறுகின்றனர்.

மேலும், அப்துல்லாஹ் இப்னு உபையின் மகன் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! உங்கள் மேனியைத் தழுவியுள்ள இவ்வாடையை என்னுடைய தந்தைக்கு அணிவியுங்களேன்'' என்று கோரி இருந்தார்.

''அப்துல்லாஹ் இப்னு உபைக்கு நபி(ஸல்) அவர்கள் தங்களின் மேலாடையை அணிவித்தது. அவர் (பத்ருப்போரின்போது கைதான அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு) உதவியதற்கான பிரதி உபகாரமாகத்தான்'' எனப்பலரும் கருதுகிறார்கள் என சுஃப்யான் கூறுகிறார்.

1351. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

உஹதுப் போர் நடக்கவிருந்தபோது என்னுடைய தந்தை அன்றிரவு என்னை அழைத்து, 'நபி(ஸல்) அவர்களின் சகாக்களில் (நாளை போரில்) முதலில் நானே கொல்லப்படுவேன் எனக் கருதுகிறேன். மேலும் எனக்குப் பின் நான்விட்டுச் செல்பவர்களில் நபி(ஸல்) அவர்களைத் தவிர மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராகக் கருதவில்லை. என் மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உன்னுடைய சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்'' என்றார். மறுநாள் (போரில்) அவர்தான் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொருவரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் அவரை கப்ரில் விட்டுவைப்பதை என்னுடைய மனம் விரும்பவில்லை. எனவே, (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரின் உடலை நான் கப்ரிலிருந்து வெளியிலெடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர் போன்று அவரின் காதைத் தவிர உடம்பு அப்படியே இருந்தது.

1352. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

என்னுடைய தந்தையுடன் இன்னொருவர் அடக்கம் செய்யப்பட்டார். ஆயினும் என்னுடைய மனம் அதை விரும்பவில்லை. எனவே அவரின் உடலை வெளியிலெடுத்து அதைத் தனி கப்ரில் அடக்கம் செய்தேன்.

பகுதி 78

உட்குழியுடன் உள்ள கப்ரும் உட்குழியில்லாக் கப்ரும்.

1353. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு நபர்களாக ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, 'இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?' எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரின் உடலைக் கப்ரின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு 'இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்' எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்துடனேயே அவர்களை அடக்குமாறு கட்டளையிட்டார்கள்: அவர்களை நபி(ஸல்) அவர்கள் குளிப்பாட்டவில்லை.

பகுதி 79

இஸ்லாத்தை ஏற்ற சிறுவன் இறந்துவிட்டால் அவனுக்கு ஜனாஸாத் தொழுகை உண்டா? பருவமடையாத சிறுவனிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லலாமா?

ஹஸன் பஸரீ, ஷுரைஹ், இப்ராஹீம், கதாதா (ரஹ் ... அலைஹீம்) ஆகியோர் பெற்றோர்களில் ஒருவர் முஸ்லிமாம்விட்டால் அவர்களின் குழந்தைகள் அந்த முஸ்லிமுக்கே சொந்தம்' எனக் கூறுகின்றனர்.

இப்னு அப்பாஸ்(ரலி) பலவீனமானவர்களில் ஒருவரான தம் தாயாருடன் இணைந்தார். வேற்று மார்க்கத்தைச் சேர்ந்த தம் தந்தையுடனிருக்கவில்லை. மேலும், அவர் 'இஸ்லாமே உயர்ந்தது: அது ஒருபோதும் தாழ்ந்துவிடாது'' என்று கூறினார்.

1354 / 1355 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இப்னு ஸய்யாதை நபி(ஸல்) அவர்கள் ஒரு குழுவுடன் பார்க்கச் சென்றபோது அவர்களுடன் உமர்(ரலி)யும் இருந்தார். பருவ வயதை நெருங்கிவிட்ட இப்னு ஸய்யாத் பனூ மகாலாவின் மேட்டுப் பகுதியில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். நபி(ஸல்) அவர்கள் (அவனைக்) கையால் தட்டுகிறவரை, (அவன் நபி(ஸல்) தன்னை நெருங்கியதை) உணரவில்லை. பிறகு நபி(ஸல்) அவர்கள் அவனிடம் 'நானே இறைத்தூதர் என நீ சாட்சி கூறுகிறாயா?' எனக் கேட்டார்கள். இப்னு ஸய்யாத் நபி(ஸல்) அவர்களை நோட்டமிட்டுவிட்டு, 'நீங்கள் எழுதப் படிக்கத் தெரியாவதவர்களின் நபி என நான் சாட்சி கூறுகிறேன்'' என்று கூறினான். பிறகு இப்னு ஸய்யாத் நபி(ஸல்) அவர்களிடம் 'நான் இறைத்தூதர் என நீர் சாட்சி கூறுகிறீரா?' எனக் கேட்டான். நபி(ஸல்) அவாக்ள் அவனை அப்படியேவிட்டுவிட்டு, 'நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் ஏற்றுள்ளேன்' எனக் கூறினார்கள். பிறகு '(உன் நிலை பற்றி) நீ என்ன நினைக்கிறாய்?' எனக் கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், 'என்னிடம் மெய்யான செய்திகளும் (சில சமயம்) பொய்யான செய்திகளும் உதிக்கின்றன'' என்றான். நபி(ஸல்) அவர்கள் 'உனக்கு இப்பிரச்சினையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது'' என்று கூறிவிட்டு. 'நான் ஒன்றை மனதில் நினைக்கிறேன் (அது யாது)?' எனக் கேட்டார்கள். (அப்போது நபி(ஸல்) அவர்கள் துகான் (44) அத்தியாயத்தின் 10வது வசனத்தை மனத்திற்குள் நினைத்தார்கள்) அதற்கு இப்னு ஸய்யாத், 'அது துக் (புகை வெற்றிடம்)'' என்றான். (அதாவது துகான், என்பதை 'துக்' என அரை குறையாகச் சொன்னான்) உடனே நபி(ஸல்) அவர்கள் 'தூர விலகிப் போ! நீ உன்னுடைய எல்லையைத் தாண்டிவிட முடியாது'' என்றார்கள். அப்போது உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இவனை நான் கொலை செய்து விடட்டுமா?' எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள், 'இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உமக்குக் கொடுக்கப்படவில்லை, இவன் அவனாக இல்லையெனில் இவனைக் கொல்வதில் உமக்கு எந்தப் பலனும் இல்லை' எனக் கூறினார்கள்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்களும் உபையுப்னு கஅபு(ரலி)யும் இப்னு ஸய்யாத் இருக்கும் தோட்டத்திற்குச் சென்றனர். நபி(ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்துவிடும் முன் ஒளிந்திருந்து அவனிடமிருந்து எதையேனும் செவியேற்க வேண்டும் என விரும்பினார்கள். அங்கு இப்னு ஸய்யாத் ஒரு பூம்பட்டு (வெல்வெட்டு)ப் போர்வையைப் போர்த்தி ஏதோ ஒரு விதமாக முணுமுணுப்பதை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள்.

அப்போது இப்னு ஸய்யாதின் தாயார் நபி(ஸல்) அவர்கள் ஈச்சை மரங்களிடையே ஒளிந்து ஒளிந்து வருவதைப் பார்த்து வீட்டார். உடனே இப்னு ஸய்யாதிடம் 'ஸாஃபியே! ...இது அவனுடைய பெயர் ... இதோ முஹம்மது(வந்துவிட்டார்)'' என்று கூறியதும் இப்னு ஸய்யாத் குதித்தெழுந்தான். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அந்தப் பெண் அவனை(ப் பேச) விட்டிருந்தால் அவன் (தன்னுடைய நிலையை) வெளிப்படுத்தியிருப்பான்'' எனக் கூறினார்கள்.

1356. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே, அவனை நோய் விசாரிக்க நபி(ஸல்) அவர்கள் அவனிடம் வந்து, அவனுடைய தலை மாட்டில் அமர்ந்து, 'இஸ்லாதை ஏற்றுக் கொள்!' என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், 'அபுல் காஸிம் (நபி(ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு'' என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றான். உடனே நபி(ஸல்) அவர்கள், 'இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே சகல புகழும்'' எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.

1357. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நான் சிறுவனாகவும், என் தாயார் பெண்ணாகவும் இருந்ததால் நானும் என் தாயாரும் சமுதாயத்தின் பலவீனமான பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தோம்.

1358. இப்னு ஷிஹாப் அறிவித்தார்.

இறந்துவிட்ட எல்லாக் குழந்தைகளுக்கும் ஜனாஸாத் தொழுகை நடத்தப்படும். அது விபச்சாரிக்குப் பிறந்ததாக இருந்தாலும் சரியே! ஏனெனில் அது இயற்கையாகவே இஸ்லாத்திலேயே பிறக்கிறது.

குழந்தையின் பெற்றோர் முஸ்லிம்களாக இருந்து அல்லது குறிப்பாகத் தந்தை மட்டும் முஸ்லிமாகவும் தாய் வேற்று மதத்தவளாகவும் இருந்து அவர்களின் குழந்தை பிறக்கும்போது சப்தமிட்டு, பிறகு இறந்தால் அதற்கு ஜனாஸாத் தொழுகை நடத்தப்படும் சப்தமிடவில்லையாயின் அதற்குத் தொழுகையில்லைள ஏனெனில் அது விழுகட்டியாகும்.

''ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கே சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பிறகு அபூ ஹுரைரா(ரலி) 'எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும், அல்லாஹ்வின் படைத்தலின் மாற்றம் இல்லை அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்'' என்ற (திருக்குர்ஆன் 30:30) வசனத்தையும் ஓதிக்காட்டினார்.

1359. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவதுபோல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பிறகு அபூ ஹுரைரா(ரலி), எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும் அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை அதுவே நிலையான மார்க்கமாகும் என்ற (திருக்குர்ஆன் 30:30) வசனத்தை ஓதிக்காட்டினார்.

பகுதி 80

இணைவைப்பவன் மரணத் தருவாயில் லாஇலாஹ இல்லல்லாஹ் கூறுதல்.

1360. முஸய்யப்(ரலி) அறிவித்தார்.

அபூ தாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ தாலிபிடம், 'என்னுடைய பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகத்தைச் சொல்லிவிடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சி கூறுவேன்' எனக் கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும், 'அபூ தாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகிறீரா?' எனக் கேட்டனர். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூ தாலிப் கடைசியாக, 'நான் அப்துல் முத்தலிப் மார்க்கத்திலேயே (மரணிக்கிறேன்)' என்று கூறியதோடு லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறவும் மறுத்துவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவேன்'' என்று கூறியதும், 'இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் தகுதியானதன்று'' (திருக்குர்ஆன் 9:113) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.

பகுதி 81

மண்ணறையில் ஈரமான பேரீச்ச மட்டையை வைப்பது.

புரைதா அல் அஸ்லமீ(ரலி) தம் மண்ணறையில் இரண்டு பேரீச்ச மட்டைகளை வைக்குமாறு வஸிய்யத் செய்துள்ளார்.

அப்துர் ரஹ்மானுடைய கப்ரின் மீது கூடாரம் அமைக்கப்பட்டிருந்தைப் பார்த்த இப்னு உமர்(ரலி) (ஒரு சிறுவனிடம்), 'சிறுவரே! இதை அகற்றிவிடும்! அவருககு அவரின் நற்காரியங்கள் தாம் நிழல் கொடுக்கும்'' எனக் கூறினார்.

''நாங்கள் உஸ்மான்(ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் இளைஞர்களாக இருந்தோம். அப்போது, உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) உடைய கப்ரைக் குதித்துத் தாண்டுகிறவரே எங்களில் அதிக தூரம் குதித்துத் தாண்டுபவராயிருந்தார்'' என்று காரிஜா இப்னு ஸைத் கூறுகிறார்.

காரிஜா என்னுடைய கையைப் பிடித்து என்னை ஒரு கப்ரின் மீது உட்கார வைத்துவிட்டு 'கப்ரின் மீது அசுத்தம் செய்பவராக அமர்வதுதான் வெறுக்கத்தக்கது'' என தம் சிறிய தந்தை யஸீத் இப்னு ஸாபித் கூறினார்கள் எனச் சொன்னார் என உஸ்மான் இப்னு ஹகீம் கூறுகிறார்.

இப்னு உமர்(ரலி) கப்ருகளின் மீது உட்காருபவராக இருந்தார் என நாஃபிஃவு கூறுகிறார்.

1361. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இருவருடைய கப்ருகளைத் கடந்து நபி(ஸல்) அவர்கள் சென்றபோது, 'இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைக்காதவர், இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்' எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரண்டு கப்ருகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?' என்று கேட்டதும், 'இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பகுதி 82

கப்ருக்கருகில் ஒருவர் உபதேசம் செய்வதும் அவரைச் சுற்றி மக்கள் அமர்ந்திருப்பதும்.

1362. அலீ(ரலி) அறிவித்தார்.

நாங்கள் பகீவுல் கர்கத் (என்னும் பொது) மையவாடியில் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து உட்கார்ந்ததும் நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்து கொண்டோம். அவர்களிடம் ஒரு சிறிய கைத்தடி இருந்தது. நபி(ஸல்) அவர்கள் தலைகுனிந்தவர்களாகத் தம் கைத்தடியால் தரையைக் கீறிக் கொண்டு, 'உங்களில் யாரும் அல்லது எந்த ஆத்மாவும் அதன் இருப்பிடம் சொர்க்கமா அல்லது நரகமா என்பது பற்றித் தீர்மானிக்கப்படாமலில்லை. அது தீய கதியுடையதா, நற்பேறுடையதா என்பதும் நிர்ணயிக்கப்படாமலில்லை' எனக் கூறினார்கள். உடனே ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! அப்படியாயின் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதை நம்பி (நற்) செயல்களில் ஈடுபடுவதை நாம்விட்டுவிடலாமா? ஏனெனில் நம்மில் யார் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாக நல்லவர்களின் செயல்களில் ஈடுபடுவார்கள், யார் தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாகத் தீயவர்களின் செயல்களில் ஈடுபடுபவர்கள் தாமே?' என்றதும், நபி(ஸல்) அவர்கள், 'நம்மில் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளவர்களுக்கு நற்செயல்கள் செய்வது எளிதாக்கப்படும், தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளவர்களுக்குத் தீய காரியங்கள் எளிதாக்கப்படும்'' என்று கூறிவிட்டு, 'தர்மம் கொடுத்து, பயபக்தியுடன் நடந்து, நல்லவற்றை உண்மையாக்குகிறவர்...'' என்ற (திருக்குர்ஆன் 92:5,6) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

பகுதி 83

தற்கொலை செய்தவர்..

1363. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''வேண்டுமென்றே பொய்யான விஷயத்தில் சத்தியம் செய்யும்போது (நான் சொல்வது பொய்யென்றால்) இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தில் உள்ளவனாவேன் என்று கூறியவர், தான் கூறியது போல் (வேறு மார்க்கத்தில்) ஆவார். மேலும், இரும்பு ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவர் ஆதே ஆயுதத்தால் நரகில் வேதனை செய்யப்படுவார்.''

என ஸாபித் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அறிவித்தார்.

1364. ஹஸன் அறிவித்தார்.

ஜுன்துப்(ரலி) இந்த (பஸராவின்) பள்ளிவாசலில் வைத்து எங்களிடம் (ஒரு ஹதீஸைக்) கூறினார். அதை நாங்கள் மறக்கவில்லை. மேலும் ஜுன்துப்(ரலி), நபி(ஸல்) அவர்களின் விஷயத்தில் பொய்யைக் கூறியிருப்பார் என்று நாங்கள் அஞ்சவுமில்லை. அவர் கூறினார். 'ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ்? என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான் எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் எனக் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

1365. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''தன்னுடைய கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்து கொள்கிறவர் நரகிலும் தன்னுடைய கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பார். தம்மைத்தாமே (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கிறவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார்.''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 84

நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்துவதும் இணைவைப்போருக்குப் பாவமன்னிப்புத் தேடுவதும் வெறுக்கப்பட்டவையே.

இக்கருத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

1366. உமர்(ரலி) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி ஸலூல் மரணித்ததும் அவனுக்கு (ஜனாஸாத்) தொழுகை நடத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தத் தாயரானபோது நான் அவர்களிடம் சென்று, இறைத்தூதர் அவர்களே! அப்துல்லாஹ் இப்னு உபைக்காக ஜனாஸாத் தொழப் போகிறீர்களா? அவன் இன்னின்ன நாள்களில் இன்னின்னவற்றைப் பேசியுள்ளான் என, அவன் பேசியவற்றை நபி(ஸல்) அவர்களுக்கு எடுத்துக் கூறினேன். நபி(ஸல்) அவர்கள் புன்கைத்தார்கள். நான் மேலும் அதிகமாக வலியுறுத்தியதும் அவர்கள், 'எனக்கு(த் தொழுகை நடத்துதல், தொழுகை நடத்தாமலிருத்தல் ஆகிய இரண்டில் எதையும் செயல்படுத்த) அனுமதியுள்ளது. எழுபது முறைகளுக்கும் அதிகமாக நான் பாவமன்னிப்புத் தேடினால் அவனுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பதாக நான் அறிந்தால் அவ்வாறே நான் அதிகமாகப் பாவமன்னிப்புத் தேடுவேன்' என்று கூறினார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் அவனுக்காக ஜனாஸாத் தொழுகை நடத்திவிட்டுத் திரும்பிச் சென்று சற்று நேரமாகுவதற்குள் பராஅத் (9-வது) அத்தியாயத்தின் இடரு வசனங்களான 'அவர்களில் எவரேனும் இறந்தால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்'' என்ற இறை வசனங்கள் (திருக்குர்ஆன் 09:84, 85) இறங்கிவிட்டன.

பிறகுதான் அன்றையதினம் நபி(ஸல்) அவர்களின் விஷயத்தில் எனக்கு ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி நான் ஆச்சரியப்பட்டேன். ஏனெனில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்தாமே இது பற்றியெல்லாம் அறிந்திருக்க முடியும்!

பகுதி 85

இறந்தவரைப் பற்றி மக்கள் புகழ்ந்துரைத்தல்.

1367. அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது'' என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது?' எனக் கூறினார்கள். உமர்(ரலி) 'எது உறுதியாகிவிட்டது?' எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள் எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்'' எனக் கூறினார்கள்.

1368. அபுல் அஸ்வத் அறிவித்தார்.

நான் மதீனாவில் (கொள்ளை) நோய் பரவியிருந்தபோது மதீனாவுக்கு வந்து உமர்(ரலி) உடன் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. மக்கள் அவரின் நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்ததும் உமர்(ரலி), 'உறுதியாகிவிட்டது' என்றார். பிறகு இன்னொரு ஜனாஸா கடந்து சென்றது. அப்போதும் மக்கள் அவரின் நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்து பேசினர். உடனே உமர்(ரலி), 'உறுதியாகிவிட்டது' என்றார். பிறகு மூன்றாவது ஜனாஸா கடந்து சென்றது. மக்கள் அவரின் தீய பண்புகளைக் கூறி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் உமர்(ரலி), 'உறுதியாகிவிட்டது' எனக் கூறினார். நான் 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எது உறுதியாகிவிட்டது?' எனக் கேட்டதும். 'எந்த முஸ்லிமுக்காவது அவர் நல்லவர் என நான்கு பேர் சாட்சி கூறினால் அவரை அல்லாஹ் சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் 'மூவர் சாட்சியாயிருந்தால்..?' என்று கேட்டோம். அதற்கவர்கள் 'மூன்று பேர் சாட்சி கூறினாலும் தான்'' என்றனர். மீண்டும் 'இருவர் சாட்சியாக இருந்தால்...'' என நாங்கள் கேட்தற்கு இரண்டு பேர் சாட்சி கூறினாலும் தான்'' என்றார்கள். பிறகு நாங்கள் ஒரு நபர் பற்றிக் கேட்கவில்லை. எனவே, நபி(ஸல்) அவர்கள் கூறியதன் அடிப்படையிலேயே நான் இவ்வாறு கூறினேன்'' என்று உமர்(ரலி) கூறினார்.

பகுதி 86

மண்ணறை வேதனை...

அல்லாஹ் கூறினான்:

அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும்போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், வானவர்கள் தம் கைகளை நீட்டியவாறு (அவர்களிடம்) 'உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்: இன்றைய தினம் நீங்கள் இழிவு தரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள்'' என்று கூறுவார்கள். (திருக்குர்ஆன் 6:93)

அல்லாஹ் கூறினான்:

நாம் அவர்களை இருமுறை வேதனை செய்வோம். பின்னர் அவர்கள் கடுமையான வேதனையின் பால் தள்ளப்படுவார்கள்'' (திருக்குர்ஆன் 9:101)

அல்லாஹ் கூறினான்:

மேலும் வேதனையின் கேடு ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்தது. காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு வரப்படுவார்கள்: மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள் (என்று கூறப்படும்). (திருக்குர்ஆன் 40:45, 46)

1369. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

கப்ரில் ஒரு இறைநம்பிக்கையாளர் எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் (இரண்டு வானவர்களைக்) கொண்டு வரப்படும் (கேள்வி கேட்கப்படும்) பிறகு (அவர்களிடம்) அந்த இறைநம்பிக்கையாளர், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனுடைய தூதராவார்கள்'' என சாட்சி கூறுவார். இதையே அல்லாஹ் 'நம்பிக்கை கொள்கிறவர்களை இவ்வுலக சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான்'' (திருக்குர்ஆன் 14:27) எனக் குறிப்பிடுகிறான்.

என பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

இந்த வசனம் மண்ணறை வேதனை சம்பந்தமாகவே அருளப்பட்டது என ஷுஅபாவின் அறிவிப்பில் காணப்படுகிறது.

1370. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(பத்ருப் போரில் கொல்லப்பட்ட எதிரிகளின் உடல்கள் ஒரு பாழுங் கிணற்றில் போடப்பட்டிருந்தன. அந்தக்) கிணற்றில் கிடந்தவர்களைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள், 'உங்களுடைய இறைவன் உண்மையாகவே வாக்களித்தவற்றை நீங்கள் அடைந்து கொண்டீர்களா?' எனக் கேட்டார்கள். 'இறந்துவிட்டவர்களை அழைக்கிறீர்களே?' என அவர்களிடம் கேட்கப்பட்டதும், 'அவர்களை விட நீங்கள் அதிகம் செவியேற்பவர்களல்லர் ஆயினும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள்'' எனக் கூறினார்கள்.

1371. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (இறந்தவர்களின் விஷயத்தில்), 'நான் சொல்லிக் கொண்டிருந்தது உண்மைதான் என்பதை இப்போது அவர்கள் அறிகிறார்கள்'' என்றே கூறினார்கள். (செவியுறுகிறார்கள் என்று கூறவில்லை ஏனெனில்) 'நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது'' (திருக்குர்ஆன் 27:80) என அல்லாஹ் கூறினான்.

1372. மஸ்ரூக் அறிவித்தார்.

ஒரு யூதப் பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து மண்ணறை வேதனை பற்றிக் கூறிவிட்டு, 'அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையைவிட்டும் பாதுகாப்பாளனாக' என்றும் கூறினாள். பிறகு மண்ணறை வேதனை பற்றி ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'ஆம் மண்ணறை வேதனை உள்ளது'' எனக் கூறினார்கள்.

மேலும், ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் தாம் தொழுகிற தொழுகைகளில் மண்ணறை வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடாமல் இருந்தேயில்லை'.

1373. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் உரையாற்றும்போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள்.

1374. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, 'இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என்று முஹம்மத்(ஸல்) குறித்துக் கேட்பர். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறுவான். அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்...'' அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்'' என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இதன் அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்...

அவன் நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் 'இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என அவனிடம் கேட்கப்படும்போது 'எனக்கொன்றும் தெரியாது மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' எனக் கூறுவான். உடனே 'நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை'' என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்.''

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பகுதி 87

மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுதல்.

1375. அபூ அய்யூப்(ரலி) அறிவித்தார்.

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறையும்போது வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு, 'யூதர்கள் அவர்களின் கப்ருகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்'' எனக் கூறினார்கள்.

1376. மூஸா இப்னு உக்பா அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மண்ணறை வேதனையைவிட்டுப் பாதுகாப்புத் தேடியதைத் தாம் செவியுற்றதாக காலித் இப்னு ஸயீத்(ரலி) உடைய மகள் கூறுகிறார்.

1377. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே! நிச்சயமாக நான் மண்ணறை வேதனை, நரக வேதனை, வாழ்வின் சோதனை, மரணத்தின் சோதனை, மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' எனப் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.

பகுதி 88

புறம் பேசுவதாலும் சிறு நீரின் காரணத்தாலும் ஏற்படும் மண்ணறை வேதனை.

1378. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இரண்டு கப்ருகளைக் கடந்து நபி(ஸல்) அவர்கள் சென்றபோது, 'இவ்விரு வரும் வேதனை செய்யப்படுகிறார்கள்: ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் கோள் சொல்லித் திரிந்தவர் மற்றொருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைத்துக் கொள்ளாதவர்' எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு மட்டையை இரண்டாகப் பிளந்து இரண்டு கப்ருகளிலும் ஒவ்வொன்றாக நட்டார்கள் 'இவ்விரண்டின் ஈரம் காய்ந்த வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்'' எனக் கூறினார்கள்.

பகுதி 89

மய்யித்திற்கு அதன் தங்குமிடம் (சொர்க்கம், நரகம்) காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும்.

1379. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்.) மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிற வரை இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும்.''

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 90

ஜனாஸா சுமந்து செல்லப்படும்போது மய்யித் கூறுவது:

1380. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் என்னை விரைந்து செல்லுங்கள் என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும் அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.

அதை அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

பகுதி 91

முஸ்லிம்களின் குழந்தைகள் இறந்துவிட்டால்...?

''ஒருவருக்கு பருவமெய்தாத மூன்று குழந்தைகள் இறந்துவிட்டால் அவை அவருக்கு நரகத்தைவிட்டுப் பாதுகாக்கும் திரையாகும் அல்லது அவர் சொர்க்கத்தில் நுழையக் காரணமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1381. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''முஸ்லிமான ஒருவருக்கு பருவமடையாத மூன்று குழந்தைகள் மரணித்துவிட்டால் அவர் அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.''

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

1382. பராஉ(ரலி) அறிவித்தார்.

(நபி(ஸல்) அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்தபோது நபி(ஸல்) அவர்கள், 'இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு'' எனக் கூறினார்கள்.

பகுதி 92

இணைவைப்போரின் குழந்தைகள் இறந்துவிட்டால்...

1383. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது? என்பது) பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள் 'அவர்களைப் படைத்த அல்லாஹ், அவர்கள் (உயிருடனிருந்திருந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை நன்கறிந்தவன்'' எனக் கூறினார்கள்.

1384. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது என்பது) பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள், 'இவர்கள் (உயிருடன் இருந்திருந்தால்) என்ன செய்திருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன்'' எனக் கூறினார்கள்.

1385. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவே ஆக்கிவிடுகின்றனர்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 93

1386. ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி, 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். எவரேனும் கனவு கண்டு அதைக் கூறினால், 'அல்லாஹ் நாடியது நடக்கும்' எனக் கூறுவார்கள்.

இவ்வாறே ஒரு நாள், 'உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம். அவர்கள், 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன் அதில் இருவர் என்னிடம் வந்து என்னுடைய கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவரின் பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகி விட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் இது என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' என்றனர். அப்படியே நடந்தபோது அங்கு ஒருவர் மல்லாந்து படுத்திருந்தார். அவரின் தலை மாட்டிலே பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர், அதைக் கொண்டு அவரின் தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும்போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது. மீண்டும் வந்து உடைத்தார். உடனே 'இவர் யார்?' என கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்'' என்றனர். எனவே நடந்தோம். அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தன. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. நெருப்பின் உஷ்ணம் அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியிலுள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும், பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான் 'இவர்கள் யார்?' எனக் கேட்டேன் அதற்கும் அவர்கள் 'நடங்கள்' எனக் கூறி விடவே மேலும் நடந்து ஓர் இரத்த ஆற்றின் பக்கம் வந்தோம். அந்த ஆற்றின் நடுப்பகுதியில் ஒருவர் நின்றிருந்தார். அவருக்கு முன்பாகக் கற்கள் கிடந்தன. ஆற்றின் ஓரத்தில் இன்னொருவர் நின்றிருந்தார். அந்த மனிதர் ஆற்றைவிட்டு வெளியேற முயலும்போது இவர் அவரின் வாயில் கல்லை எறிந்தார். அக்கல் பட்டதும் கரையேற முயன்றவர் முன்னிருந்த இடத்திற்குத் தள்ளப்பட்டார். இவ்வாறே அவர் வெளியேற முயலும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லால் அடிக்க, அவர் மீண்டும் பழைய இடத்திற்கே சென்றார். அப்போது நான் 'என்ன இது?' எனக் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' எனக் கூறிவிடவே நடந்து ஒரு பசுமையான பூங்காவுக்கு வந்தோம். அதில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதன் அடியில் ஒரு வயோதிகரும் சில சிறுவர்களும் இருந்தனர். அந்த மரத்திற்கு அருகில் ஒருவர் இருந்தார். அவருக்கு முன்னால் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அதை அவர் மூட்டிக் கொண்டிருந்தார். பிறகு அவ்விருவரும் என்னை அம்மரத்தில் ஏற்றிக் கொண்டு போய் அங்கு ஒரு வீட்டில் பிரவேசிக்கச் செய்தார்கள். நான் இதுவரை அப்படி ஓர் அழகான வீட்டைப் பார்த்ததேயில்லை. அதில் சில ஆண்களும் வயோதிகர்களும் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரும் இருந்தனர். பிறகு அவ்விருவரும் அங்கிருந்து என்னை அழைத்து மரத்தில் ஏற்றி இன்னொரு மாளிகையில் பிரவேசிக்கச் செய்தனர். அது மிகவும் அழகானதும் சிறப்பானதுமாக இருந்தது. அதில் வயோதிகர்களும் இளைஞர்களும் இருந்தனர். பிறகு நான் இருவரிடமும் 'இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பித்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றி விவரங்களைச் சொல்லுங்கள்!' எனக் கேட்டேன். அதற்கு இருவரும் 'ஆம்! முதலில் தாடை சிதைக்கப்பட்ட வரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியயாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீரே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார். பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள். (இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் வட்டி வாங்கித் தின்றவர்கள். மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த பெரியவர் இப்ராஹீம்(அலை) அவர்கள் அவரைச் சுற்றியிருந்த சிறுவர்கள் (முஸ்லிம்) மக்களின் குழந்தைகள். நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தவர் நரகக் காவலாளியான மாலிக்(அலை). நீர் நுழைந்த முதல் மாளிகை சராசாரி இறைநம்பிக்கையாளர்களின் இருப்பிடம். அடுத்த மாளிகையோ உயிர்த்தியாகிகளின் இருப்பிடம். நான் ஜிப்ரீல். இவர் மீக்காயில்'' என்று கூறிவிட்டு. 'இப்போது உம்முடைய தலையை உயர்த்தும்'' என்றனர். நான் என்னுடைய தலையை உயர்த்தியதும் எனக்கு மேற்புறம் மேகம் போல் இருந்தது. அப்போது இருவரும் 'இதுவே (மறுமையில்) உம்முடைய இருப்பிடம்'' என்றதும் நான் 'என்னுடைய இருப்பிடத்தில் என்னை நுழைய விடுங்களேன்'' என்றேன். அதற்கு இருவரும் 'உம்முடைய வாழ்நாள் இன்னம் மிச்சமிருக்கிறது அதை நீர் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே, அதனை நீர் பூர்த்தி செய்ததும் நீர் உம்முடைய இருப்பிடம் வருவீர்'' என்றனர்'' என்று கூறினார்கள்.

பகுதி 94

திங்கட்கிழமை மரண மெய்தல்:

1387. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்றபோது 'நபி(ஸல்) அவர்களை எத்தனைத் துணிகளில் கஃபன் செய்தீர்கள்?' என்று அவர் கேட்டார். 'வெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் கஃபன் செய்தோம். அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இல்லை என்றேன்.'' அபூ பக்ர்(ரலி) என்னிடம், 'நபி(ஸல்) அவர்கள் எந்தக் கிழமையில் மரணமடைந்தார்கள்?' எனக் கேட்டார். நான் 'திங்கட்கிழமை'' என்றேன். 'இன்று என்ன கிழமை?' என்று கேட்டதும் நான் 'திங்கட்கிழமை'' என்றேன். அதற்கவர் 'இன்றிரவுக்குள் (என்னுடைய மரணம்) நிகழும் என எண்ணுகிறேன்'' என்று கூறிவிட்டுத் தாம் நோயுற்றிருந்தபோது அணிந்திருந்த ஆடையைப் பார்த்தார். அதில் குங்குமப்பூவின் கறை படிந்திருந்தது. 'இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரண்டு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் கஃபனிடுங்கள்' எனக் கூறினார். நான் 'இது பழையதாயிற்றே!'' என்றேன். அதற்கவர் 'மய்யித்தைவிட உயிருடனிருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதியுடையவர் மேலும், அது (இறந்த) உடலிலிருந்து வழியும் சீழுக்கே போகும்'' என்றார். பிறகு அன்று மாலை வரை மரணிக்கவில்லை. செவ்வாய் இரவில்தான் மரணித்தார். (அன்று) காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்.

பகுதி 95

திடீர் மரணம் அடைதல்.

1388. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என்னுடைய தாய் திடீரென்று மரணித்துவிட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல (தர்ம) காரியம் செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம்'' என்றனர்.

பகுதி 96

நபி(ஸல்), அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) ஆகியோரின் கப்ருகள்.

1389. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மரண நோயுற்றிருந்தபோது, என்னிடம் தங்கும் நாள் தாமதப்படுவதாக எண்ணி, 'இன்று நான் எங்கிருக்கிறேன்? நாளை நான் எங்கே இருப்பேன்'' என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். என் வீட்டில் தங்கும் நாளிலேயே அவர்களின் உயிரை என்னுடைய நெஞ்சுக்கும் தோளுக்குமிடையே அல்லாஹ் கைப்பற்றினான். என்னுடைய வீட்டிலேயே அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

1390. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மரண நோயுற்றிருந்தபோது, 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களது மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டார்கள்' எனக் கூறினார்கள். இந்த பயம் மட்டும் இல்லாதிருந்தால் நபி(ஸல்) அவர்களின் கப்ரும் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும். எனினும் நபி(ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் பயந்தே உள்ளார்கள் அல்லது அவர்களின் கப்ரும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடும் என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

நபி(ஸல்) அவர்களின் கப்ரு ஒட்டகத்தின் திமில் போன்று உயரமாக இருந்ததைத் தாம் பார்த்ததாக சுஃப்யான் அத் தம்மார் அறிவித்தார்.

வலீத் இப்னு அப்தில் மலிக்கின் (ஆட்சிக்) காலத்தின்போது நபி(ஸல்) அடக்கம் செய்யப்பட்ட அறையின் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. அதைப் புனர் நிர்மாணம் செய்வதில் மக்கள் ஈடுபட்டபோது ஒரு பாதம் வெளியில் தெரிந்தது. உடனே மக்கள் பதறிப் போய் அது நபி(ஸல்) அவர்களின் பாதமாக இருக்குமோ என நினைத்தனர். இது பற்றித் தெரிந்தவர் யாருமில்லாதிருந்தபோது நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது நபி(ஸல்) அவர்களின் பாதமே இல்லை மாறாக, இது உமர்(ரலி) அவர்களின் பாதகமாகும் என்றேன்'' என உர்வா கூறுகிறார்.

1391. உர்வா அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) தம் மரணத் தருவாயில் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களிடம் 'என்னை நபி(ஸல்) அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோருடன் (அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்) அடக்கம் செய்ய வேண்டாம் மாறாக, என்னை நபி(ஸல்) அவர்களின் மற்ற மனைவியருடன் அவர்களின் அடக்கத் தலங்கள் அமைந்துள்ள 'பகீஃ' என்னும் இடத்திலேயே அடக்கிவிடுங்கள். ஏனெனில் (மற்ற மனைவியரை விடச்) சிறப்பாக நான் புகழப்பட விரும்பவில்லை'' எனக் கூறினார்.

1392. அம்ர்ப்ன மைமூன் அல்அவ்தீ அறிவித்தார்.

நான் உமர் இப்னுல் கத்தாப்(ரலி) அவர்களை (மரணத் தருவாயில்) பார்த்தேன். தம் மகனை நோக்கி, அவர், 'அப்துல்லாஹ்வே! இறைநம்பிக்கையாளர்களின் தாயார் ஆயிஷா(ரலி) அவர்களிடம் போய் உமர் ஸலாம் கூயிதாகச் சொல்லிவிட்டு, என்னுடைய தோழர்களான நபி(ஸல்) அபூ பக்ர்(ரலி) ஆகிய இருவருடன் நானும் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதற்கு அவர்களிடம் அனுமதி கேள்' எனக் கூறினார். அவ்வாறே கேட்கப்பட்டதும். ஆயிஷா(ரலி) நான் அந்த இடத்தை எனக்கென நாடியிருந்தேன். இருந்தாலும் இன்று நான் அவருக்காக அதைவிட்டுக் கொடுக்கிறேன்'' என்றார். இப்னு உமர்(ரலி) திரும்பி வந்தபோது உமர்(ரலி) 'என்ன பதில் கிடைத்தது?' எனக் கேட்டார். இப்னு உமர்(ரலி) 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கு அவர் அனுமதியளித்துவிட்டார்' எனக் கூறினார். உடனே உமர்(ரலி) 'நான் உறங்கவிருக்கும் அந்த இடத்தைத் தவிர வேறெதுவும் எனக்கு மிக முக்கியமானதாக இல்லை. நான் (என்னுடைய உயிர்) கைப்பற்றப்பட்டவுடன் என்னைச் சுமந்து சென்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் (மீண்டும்) என்னுடைய ஸலாமைக் கூறி, 'உமர் அனுமதி கேட்கிறார்' எனக் கூறுங்கள். எனக்கு அனுமதியளித்தால் என்னை அங்கு அடக்கம் செய்யுங்கள் இல்லையெனில் என்னை முஸ்லிம்களின் பொது மையவாடியில் அடக்கி விடுங்கள். நபி(ஸல்) தாம் அவர்கள் மரணிக்கும் வரை எவரெவர் விஷயத்தில் திருப்தி கொண்டிருந்தார்களோ அவர்களைத் தவிர வேறு யாரும் ஆட்சிப் பொறுப்பிற்குத் தகுதியுடையவர்களாக எனக்குத் தெரியவில்லை. எனவே, எனக்குப் பிறகு இவர்களில் யாரை கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கிறீர்களோ அவர் தாம் கலீஃபா! அவர் சொல்வதைக் கேட்டு அவருக்குக் கட்டுப்படுங்கள்' எனக் கூறிவிட்டு, உஸ்மான்(ரலி), அலீ(ரலி), தல்ஹா(ரலி) ஸுபைர்(ரலி) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டார். அப்போது அன்ஸார்களில் ஓர் இளைஞர் வந்து 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ்வின் நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள்! உங்களுக்கு இஸ்லாத்தில் இருந்த அந்தஸ்து என்ன என்பதைத் தாங்கள் அறிவீர்கள். பிறகு நீங்கள் தலைவராகி நீதி, நேர்மையை நிலைநாட்டினீர்கள். இதற்கெல்லாம் மேலாக ஷஹாதத்... வீரமரணமும் கிடைத்திருக்கிறது'' என்றார். உமர்(ரலி) 'என்னுடைய சகோதராரின் மகனே! என்னுடைய விருப்பமெல்லாம் இந்த ஆட்சிப் பொறுப்பு எனக்கு நன்மையைத் தேடித் தராவிட்டாலும் எனக்குத் தீமையை தந்துவிடாமலிருந்தால் அதுவே போதும் என்பதே' எனக் கூறிவிட்டு, 'எனக்குப் பின்னால் தலைவராக வருபவருக்கு நான் கூறிக்கொள்வது யாதெனில், அவர் துவக்கத்தில் ஹிஜ்ரத் செய்த முஹாஜிர்களின் விஷயத்தில் நல்லபடி நடந்து கொள்ளவேண்டும் அவர்களின் உரிமைகளை அறிந்து அவர்களின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் பேணிக் காக்க வேண்டும். அதுபோன்றே அன்ஸார்களிடமும் நல்லவிதமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் (மதீனாவில்) இருப்பிடத்தையும் நம்பிக்கையையும் தக்க வைத்தவர்கள். அவர்களில் நல்லவர்களின் நற்செயலை ஏற்று மதிப்பளித்து தவறிழைக்கக் கூடியவர்களை மன்னித்துவிடவேண்டும். மேலும், அல்லாஹ்வினதும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் பொறுப்பிலுள்ள (முஸ்லிம்களில்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றவேண்டும். அவர்களைப் பாதுகாக்கப் போர் புரியவேண்டும். மேலும், அவர்களின் சக்திக்குமேல் அவர்களைச் சிரமப் படுத்தக் கூடாது'' என்று கூறினார்.

பகுதி 97

இறந்தோரை ஏசக் கூடாது.

1393. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்.''

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பகுதி 98

இறந்தவர்களில் மோசமானவர்களைப் பற்றிக் கூறுதல்.

1394. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அபூ லஹப் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அவன் நபி(ஸல்) அவர்களைப் பார்த்து, 'இனி எல்லா நாள்களிலும் உமக்கு நாசம் உண்டாகட்டும்' எனக் கூறினான். எனவே, 'அபூ லஹபின் இரண்டு கரங்களும் நாசமாகட்டும்ள அவனும் நாசமாகட்டும்'' என்ற (111வது) அத்தியாயம் இறங்கியது.
Previous Post Next Post