அல்குர்ஆனின் ஆயத்துகள் - நபிகளாரின் பொன்மொழிகள் - ஸலஃபுகள் மற்றும் உலமாக்களின் கூற்றுகள்
அல்குர்ஆனின் ஆயத்துகள்
சஹாபாக்களை சரியான முறையில் பின்பற்றியவர்களின் சிறப்பு:
وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ذٰلِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ
முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும் (இஸ்லாத்தை ஏற்க) முதலாவதாக முந்திக் கொண்டவர்களும், அவர்களை சரியான முறையில் பின்பற்றினார்களே அவர்களும், அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்டான். அவர்களும் (அல்லாஹ்வாகிய) அவனை பொருந்திக்கொண்டனர். அன்றியும், சுவனபதிகளை அவர்களுக்கென அவன் தயாராக்கி வைத்திருக்கின்றான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் அவற்றிலேயே நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள். அதுதான் மகத்தான வெற்றியாகும். [அத்தவ்பா 9:100]
ஸபீலுல் முஃமினீன் (முஃமின்களின் பாதையை) குறித்தான விளக்கம்:
وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَـنَّمَ وَسَآءَتْ مَصِيْرًا
இன்னும், நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னர் எவர், (நம்முடைய) இத்தூதருக்கு மாறு செய்து முஃமின்களின் வழியல்லாத (வேறுவழியான)தைப் பின்பற்றுகிறாரோ, அவரை நாம் அவர் திரும்பிய (தவறான) வழியிலேயே திருப்பிவிடுவோம். (பின்னர்) அவரை நரகத்தில் புகுத்திவிடுவோம். அது சென்றடையுமிடத்தில் மிகக் கெட்டது. [அந்நிஸா 4:115]
அல்இமாம் அல்அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த ஆயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முஃமின்கள் என்பது சஹாபாக்களையே குறிக்கின்றது என விளக்கமளித்துள்ளார்கள்.
(فتاوى عبر الهاتف والسيارة - شريط : 227)
முஹாஜிர்களின் சிறப்பு:
لِلْفُقَرَآءِ الْمُهٰجِرِيْنَ الَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ وَاَمْوَالِهِمْ يَبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا وَّيَنْصُرُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ اُولٰٓٮِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ
தங்கள் வீடுகளையும், தங்கள் பொருட்களையும் விட்டு (அக்கிரமமாக மக்காவிலிருந்து) வெளியேற்றப்பட்டார்களே அத்தகைய ஏழை முஹாஜிர்களுக்கும் (அப்பொருளில் பங்குண்டு). அவர்கள் அல்லாஹ்விடமிருந்து பேரருளையும், (அவனுடய) பொருத்தத்தையும் தேடுகின்றனர். இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உதவி செய்கின்றனர். அவர்கள் தாம் (“ஸாதிகூன் என்னும்) உண்மையாளர்கள். [அல்ஹஷ்ர் 59:8]
அன்ஸார்களின் சிறப்பு:
وَالَّذِيْنَ تَبَوَّؤُ الدَّارَ وَالْاِيْمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّوْنَ مَنْ هَاجَرَ اِلَيْهِمْ وَلَا يَجِدُوْنَ فِىْ صُدُوْرِهِمْ حَاجَةً مِّمَّاۤ اُوْتُوْا وَيُـؤْثِرُوْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُّوْقَ شُحَّ نَـفْسِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
இன்னும் (முஹாஜிர்களாகிய) அவர்களுக்கு முன்பே (மதீனாவில்) வீட்டையும் (அல்லாஹ்வின் மீது) விசுவாசம்கொள்வதையும் (கலப்பற்றதாக்கிக்) கொண்டிருந்தார்களே அத்தகைய (அன்ஸார்களான)வர்கள், தம்பால் ஹிஜ்ரத்துச் செய்து வந்தோரை நேசிப்பார்கள். மேலும், (ஹிஜ்ரத்துச் செய்து வந்த) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதைப் பற்றி தங்கள் நெஞ்சங்களில் காழ்ப்புணர்ச்சியைப் பெறமாட்டார்கள். மேலும், தங்களுக்கு (கடும்) தேவையிருந்த போதிலும், தங்களைவிட (முஹாஜிர்களான அவர்களை)த் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். இன்னும் எவர் தன் உலோபத்தனத்திலிருந்து காக்கப்பட்டாரோ, அத்தகையோர் தாம் வெற்றி பெற்றவர்கள். [அல்ஹஷ்ர் 59:9]
நபிகளாரின் பொன்மொழிகள்
ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் என்பவர்கள் யார்?
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
خير الناس قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم
“மக்களிலேயே சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினர் (சஹாபாக்கள்) ஆவர். பின்னர் அவர்களை அடுத்து வருபவர்கள் (தாபி'ஊன்கள்), பின்னர் அவர்களை அடுத்து வருபவர்கள் (தாபி'உத் தாபி'யீன்கள்) ஆவர்”.
அல்பு’காரி 2652
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் رضي الله عنه
ஸலஃபுஸ் ஸாலிஹீன்களுடைய சிறப்பு:
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
يَأْتِي زَمَانٌ يَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيُقَالُ فِيكُمْ مَنْ صَحِبَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَيُقَالُ نَعَمْ. فَيُفْتَحُ عَلَيْهِ، ثُمَّ يَأْتِي زَمَانٌ فَيُقَالُ فِيكُمْ مَنْ صَحِبَ أَصْحَابَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيُقَالُ نَعَمْ. فَيُفْتَحُ، ثُمَّ يَأْتِي زَمَانٌ فَيُقَالُ فِيكُمْ مَنْ صَحِبَ صَاحِبَ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيُقَالُ نَعَمْ. فَيُفْتَحُ
ஒரு காலம் வரும், அப்போது மக்களிலிருந்து ஒரு குழுவினர் அறப்போர் புரியச் செல்வர். (அச்சமயம்), ‘‘நபி ﷺ அவர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்கள் (சஹாபாக்கள்) உங்களிடையே இருக்கிறார்களா?” என்று கேட்கப்படும். அதற்கு, ‘‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப்படும். அதன் காரணமாக அவர்(களுக்)கு வெற்றியளிக்கப்படும்.
பிறகொரு காலம் வரும். (அப்போதும் அறப்போர் புரிய ஒரு குழுவினர் செல்வார்கள்). (அச்சமயம்), ‘‘நபி ﷺ அவர்களின் தோழர்களுடன் தோழமை கொண்டவர்கள் (தாபி'ஊன்கள்) உங்களிடையே இருக்கிறார்களா?” என்று கேட்கப்படும். அதற்கு, ‘‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப்படும். அதன் காரணமாக (அவர்களுக்கு) வெற்றியளிக்கப்படும்.
பிறகு மற்றொரு காலம் வரும், (அப்போதும் ஒரு குழுவினர் அறப்போருக்காகச் செல்வார்கள்).(அச்சமயம்), ‘‘நபித்தோழர்களின் தோழருடன் தோழமை கொண்டவர்கள் (தாபி'உத் தாபி'யீன்கள்) உங்களிடையே இருக்கிறார்களா?” என்று கேட்கப்படும். அதற்கு, ‘‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப்படும். அதன் காரணமாக (அவர்களுக்கும்) வெற்றியளிக்கப்படும்.
அல்பு'காரி 2897
சஹாபாக்களுடைய அந்தஸ்து:
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
لا تَسُبُّوا أصْحابِي؛ فلوْ أنَّ أحَدَكُمْ أنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا، ما بَلَغَ مُدَّ أحَدِهِمْ ولا نَصِيفَهُ
என் தோழர்களைத் திட்டாதீர்கள். உங்களில் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தை (தர்மமாக) செலவு செய்தாலும், (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரு கையளவு அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரது அந்தத் தர்மம்) எட்ட முடியாது.
அல்பு'காரி: 3673
அறிவிப்பாளர்: அபூ ஸயீத் அல்'குத்ரீ رضي الله عنه
சஹாபாக்கள் இந்த உம்மத்திற்கு பாதுகாப்பாக இருந்தவர்கள்:
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ ، فَإِذَا ذَهَبَتِ النُّجُومُ أَتَى السَّمَاءَ مَا تُوعَدُ، وَأَنَا أَمَنَةٌ لِأَصْحَابِي، فَإِذَا ذَهَبْتُ أَتَى أَصْحَابِي مَا يُوعَدُونَ ، وَأَصْحَابِي أَمَنَةٌ لِأُمَّتِي ، فَإِذَا ذَهَبَ أَصْحَابِي أَتَى أُمَّتِي مَا يُوعَدُونَ
"நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் சென்றுவிட்டால் வானத்திற்கு அதற்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பு ஆவேன். நான் சென்றுவிட்டால் என் தோழர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். என் தோழர்கள் என் உம்மத்திற்குப் பாதுகாப்பு ஆவார்கள். என் தோழர்கள் சென்றுவிட்டால் என் உம்மத்திற்கு அதற்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும்".
முஸ்லிம் 4602
இந்த ஹதீஸானது அபூ புர்தாவின் தந்தையின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது
அல்லாஹ்வின் தூதர் ﷺ இந்த உம்மத்தை ஒரு தெளிவான பாதையின் மீது விட்டுச் சென்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا لاَ يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلاَّ هَالِكٌ
நிச்சயமாக நான் உங்களை ஒரு பய்'தா (வெள்ளையான, தெளிவான பாதையின்) மீது விட்டுச் சென்றுள்ளேன். அதன் இரவானது, அதனுடைய பகலைப் போன்றதாகும் (அந்த அளவிற்கு அது மிக தெளிவானதாகும்). எனக்குப் பிறகு, அழிந்து போகக்கூடியவரையே அன்றி வேறெவரும் அதிலிருந்து வழிதவற மாட்டார்.
இப்னு மாஜா 44
அறிவிப்பாளர்: அல்இர்பாத் பின் சாரியஹ் رضي الله عنه
கருத்து வேறுபாடுகளும், குழப்பங்களும் தோன்றும் போது என்ன செய்ய வேண்டும்?
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
إِنَّهُ مَنْ يَعِشَ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيْرًا فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الخُلَفَاءِ الرَّاشِدِيْنَ الْمَهْدِييْنَ مِنْ بَعْدِي تَمَسَّكُوْا بِهَا وَعَضُوْا عَلَيْهَا بِالنَّوَاجِذِ
"நிச்சயமாக எனக்கு பின்பு உங்களில் வாழ்பவர் அநேக கருத்து முரண்பாடுகளைக் காண்பார். எனவே, என்னுடைய ஸுன்னத்தையும், அல்குலஃபாஉர்ராஷீதீன் அல்மஹ்தீயீன் (நேர்வழிப்பெற்ற நான்கு கஃலீபாக்களுடைய) ஸுன்னத்தையும் பற்றிப் பிடிப்பது உங்கள் மீது கடமையாக இருக்கின்றது. அதனை உங்களுடைய கடவாய்ப் பற்களால் பற்றிப் பிடியுங்கள்".
அபூதாவூத் 4607
அறிவிப்பாளர்: அல்இர்பாத் பின் சாரியாஹ் رضي الله عنه
இந்த உம்மத்திலிருந்து ஒரு கூட்டம் சத்தியத்தின் மீது இருந்து கொண்டே இருக்கும்:
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
لا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى الْحَقِّ لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ كَذَلِكَ
“என்னுடைய உம்மத்திலிருந்து ஒரு கூட்டம் சத்தியத்தின் மீது வெளிப்படையாக / வெற்றிபெற்றதாக இருந்து கொண்டே இருக்கும். அவர்களைக் கைவிடுபவர்களால் அவர்களுக்கு தீங்கிழைக்க முடியாது, அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை அவர்கள் அதன் மீதே இருப்பார்கள்.”
முஸ்லிம் 1920
அறிவிப்பாளர்: 'தவ்பான் رضي الله عنه
பாதுகாப்பு பெற்ற அந்த ஒரு கூட்டம் எது?
افْتَرَقَتِ الْيَهُودُ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً فَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ وَسَبْعُوْ نَ فِي النَّارِ وَافْتَرَقَتِ النَّصَارَى عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً فَإِحْدَى وَسَبْعُوْنَ فِي النَّارِ وَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَتَفْتَرِقَنَّ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ فِرْقَةً وَاحِدَةٌ فِي الْجَنَّةِ وَثِنْتَانِ وَسَبْعُوْنَ فِي النَّارِ قِيْلَ يَا رَسُولَ اللَّهِ مَنْ هُمْ؟ قَالَ الْجَمَاعَةُ
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
யூதர்கள் எழுபத்தொரு கூட்டங்களாகப் பிரிந்தனர். (அவற்றுள்) ஒன்று சொர்க்கத்திலும், எழுபது நரகத்திலும் இருக்கும். கிறிஸ்தவர்கள் எழுபத்திரண்டு கூட்டங்களாகப் பிரிந்தனர். (அவற்றுள்) எழுபத்தொன்று நரகத்திலும், ஒன்று சொர்க்கத்திலும் இருக்கும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ, அவன் மீது சத்தியமாக! நிச்சயமாக என்னுடைய உம்மத்தானது எழுபத்து மூன்று கூட்டங்களாகப் பிரியும். (அவற்றுள்) ஒரு கூட்டம் சொர்க்கத்திலும், எழுபத்திரண்டு நரகத்திலும் இருக்கும். "அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்?" என்று கேட்கப்பட்டது. (அதற்கு) அவர்கள் ﷺ, "அல்-ஜமாஆ" என்று பதிலளித்தார்கள்.
قَالُوا: مَن هِيَ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ : مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي
(மற்றொரு அறிவிப்பில்) "அல்லாஹ்வின் தூதரே! அது எந்தக் கூட்டம்?" என்று (நபித்தோழர்கள்) கேட்டார்கள். (அதற்கு) "நானும் எனது தோழர்களும் எதன்மீதுள்ளோமோ அதுவாகும்" என்று கூறியதாக வந்துள்ளது.
இப்னு மாஜா: 3241, அத்திர்மிதி: 2641
ஸலஃபுகள் மற்றும் உலமாக்களின் கூற்றுகள்
எவரொருவர் பின்பற்றக் கூடியவராக இருக்கின்றாரோ, அவர் இறந்தவரைப் பின்பற்றட்டும்
இப்னு மஸ்வூத் ர'தியல்லாஹு அன்ஹு கூறினார்கள்:
எவரொருவர் பின்பற்றக் கூடியவராக இருக்கின்றாரோ, அவர் இறந்தவரைப் பின்பற்றட்டும். ஏனெனில், நிச்சயமாக உயிருடன் இருக்கக்கூடியவர் ஃபித்னாவில் இருந்து பாதுகாக்கப்பட்டவராக இருக்கமாட்டார் (எப்போது வேண்டுமானாலும் அவர் ஃபித்னாவிற்கு ஆளாகலாம்). (எனவே, பின்பற்றப்பட வேண்டிய)வர்கள் முஹம்மத் ﷺ அவர்களுடைய தோழர்கள் ஆவர். அவர்கள் இந்த உம்மத்திலேயே சிறந்தவர்களாக, உள்ளத்தால் மிகவும் நல்லவர்களாக, கல்வியில் மிகவும் ஆழமானவர்களாக, (அவசியமில்லாத) சிரமத்தை எடுத்துக்கொள்வதில் மிகவும் குறைவானவர்களாகவும் இருந்தனர்.
தனது நபியின் தோழமைக்கும், தனது மார்க்கத்தை நிலை நாட்டவும் அல்லாஹ் அவர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டான். ஆகவே, அவர்களுக்கு இருக்கின்ற சிறப்பை அறிந்து கொள்ளுங்கள். அவர்களின் அடிச்சுவட்டின் மீது அவர்களைப் பின்பற்றிச் செல்லுங்கள். அவர்களின் நல்லொழுக்கங்கள் மற்றும் வரலாற்றிலிருந்து உங்களால் இயன்றவற்றைப் பற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில், நிச்சயமாக அவர்கள் நேரான வழியின் மீது இருந்தனர்.
அல்மிஷ்காத் 193
உள்ளங்களிலேயே மிகச் சிறந்ததாக அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடைய உள்ளத்தையும், மேலும் அன்னாரது தோழர்களுடைய உள்ளத்தையும் அல்லாஹ் கண்டு கொண்டு அவர்களைத் தேர்ந்தெடுத்தான்
இப்னு மஸ்வூத் ர'தியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் (தனது) அடியார்களின் உள்ளங்களை நோக்கினான். (அவற்றில்) முஹம்மத் ﷺ அவர்களின் உள்ளத்தை அடியார்களின் உள்ளங்களிலேயே மிகச் சிறந்ததாகக் கண்டு, அவரை தனக்காக தேர்ந்தெடுத்துக் கொண்டான். மேலும் தனது தூதுத்துவத்தைக் கொண்டு அவரை அனுப்பினான்.
முஹம்மத் ﷺ அவர்களின் உள்ளத்திற்கு பின்பு, (அல்லாஹ் தனது) அடியார்களின் உள்ளத்தை நோக்கினான். (அப்போது) அவர்களின் தோழர்களின் உள்ளத்தை அடியார்களின் உள்ளங்களிலேயே மிகச் சிறந்ததாகக் கண்டான். எனவே, அவர்களைத் தனது நபியின் அமைச்சர்களாக (ஆலோசகர்களாக) ஆக்கினான்; அவனது மார்க்கத்திற்காக அவர்கள் போர் செய்வார்கள்.
எதனை முஸ்லிம்கள் (ஸஹாபாக்கள்) நன்மையாக கண்டனரோ, அது அல்லாஹ்விடத்திலும் நன்மையாகும். மேலும், எதனை அவர்கள் தீமையாக கண்டனரோ, அது அல்லாஹ்விடத்திலும் தீமையாகும்.
முஸ்னத் அஹ்மத் 3600
"உண்மையாளர்களுடன் இருங்கள்" என்ற ஆயத்திற்கு ஸலஃபுகள் சிலர் அளித்த விளக்கம்:
"(விசுவாசங்கொண்டோரே!) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், மேலும் (சொல்லாலும், செயலாலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்" (அல்குர்ஆன் : 9:119) என்ற அல்லாஹ்வின் கூற்றைக் குறித்து (விளக்கம் அளிக்கையில்),
நாஃபி’ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: (அதாவது), “நபி ﷺ அவர்களுடனும், அவர்களது தோழர்களுடனும் இருங்கள்”.
'தஹ்ஹாக் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: “அபூபக்ர், உமர் மற்றும் அவர்கள் இருவரது தோழர்களுடன் இருங்கள்”. அல்லாஹ் அவர்கள் மீது ரஹ்மத் செய்வானாக.
தஃப்ஸீர் - அத்'தபரீ
ஸலஃபுகளிருந்து ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் (இதற்கு விளக்கம் அளிக்கையில்) கூறியதாவது: “அவர்கள் முஹம்மத் ﷺ அவர்களின் தோழர்கள் ஆவர். மேலும், அவர்களே உண்மையாளர்களின் தலைவர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை”.
தஃப்ஸீர் - இப்னுல் கைய்யிம்
அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமா'அஹ்வுடைய மத்ஹபானது, ஸஹாபாக்களுடைய மத்ஹபாகும்:
அல்இமாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமா'அஹ்வுடைய மத்ஹபானது, அபூ ஹனீஃபா, மாலிக், ஷாஃபியீ மற்றும் அஹ்மது ஆகியோரை அல்லாஹ் படைப்பதற்கு முன்பே அறியப்பட்ட பழமையான ஒரு மத்ஹப் ஆகும். ஏனெனில், நிச்சயமாக அது ஸஹாபாக்களின் மத்ஹப் ஆகும். அதனை அவர்கள் தங்களினது நபியிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். யார் அதற்கு முரண்படுவாரோ, அவர் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமா'அத்தினரிடத்தில் ஒரு பித்அத்வாதி ஆவார். ஏனெனில், திட்டமாக அவர்கள் (அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினர்) சஹாபாக்களின் இஜ்மா' என்பது மார்க்க ஆதாரமாகும் என்பதில் ஏகோபித்த முடிவில் உள்ளனர். மேலும், அவர்களுக்கு பின்னால் வந்தவர்களுடைய இஜ்மா'வின் விடயத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.
மின்ஹாஜுஸ் ஸுன்னாஹ் (2/601)
இந்த உம்மத்தின் முதற்பகுதியினை எது சீராக்கியதோ, அதுவே அதன் இறுதிப்பகுதியினை சீராக்கும்
அல்இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
இந்த உம்மத்தின் முதற்பகுதியினை எது சீராக்கியதோ, அதுவன்றி வேறெதுவும் அதன் இறுதிப்பகுதியினை சீராக்காது.
இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: மாலிக் கூறியது என்னே ஒரு அழகான (கூற்று)!
இக்தி'தாஉஸ் ஸிராதில் முஸ்தகீம், பக்கம்:367
(மற்றொரு அறிவிப்பில்), "இந்த உம்மத்தின் இறுதிப்பகுதி சீராகாது, அதன் முதற்பகுதி எதைக்கொண்டு சீரானாதோ அதைக்கொண்டே தவிர. மேலும் அந்நாளில் (நபி ﷺ அவர்களும், சஹாபாக்களும் வாழ்ந்த காலத்தில்) எது மார்க்கமாக இல்லையோ, அது இன்றைய தினமும் மார்க்கமாக ஆகாது", என்று வந்துள்ளது.
மஜ்மூ'உல் ஃபதாவா 1/353
சஹாபாக்களிடம் இருந்து வந்ததே கல்வியாகும்:
பகீய்யாஹ் பின் அல்வலீத் அவர்கள் கூறினார்கள்:
என்னிடத்தில் அல்அவ்ஸாயீ அவர்கள் கூறினார்கள்: “பகீய்யாவே! உனது நபியின் தோழர்களில் எந்த ஒருவரையும் நல்லவற்றைக் கொண்டேயே தவிர நீ குறிப்பிடாதே. பகீய்யாவே! கல்வியானது முஹம்மத் ﷺ அவர்களின் தோழர்களிடமிருந்து வந்ததே ஆகும். மேலும், எது அவர்களிடமிருந்து வரவில்லையோ அது கல்வியாகாது”.
ஸியர் 'அஃலாமிந்நுபலா, 7/120
ஸஹாபாக்கள் எதன் மீது இருந்தார்களோ, அதனைப் பற்றிப் பிடிப்பது ஸுன்னாஹ்வுடைய அடிப்படைகளில் இருந்து உள்ளதாகும்:
அல்இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
எங்களிடத்திலே ஸுன்னாஹ்வுடைய அடிப்படைகளானது, அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடைய தோழர்கள் எதன் மீது இருந்தார்களோ அதனைப் பற்றிப் பிடிப்பதும், அவர்களைப் பின்பற்றுவதும், பித்'அத்களை கைவிட்டு விடுவதும் - ஒவ்வொரு பித்'அத்தும் வழிகேடாகும் - மேலும், மார்க்கத்தில் தர்க்கங்கள் செய்வதை கைவிட்டு விடுவதுமாகும்.
உஸூலுஸ் ஸுன்னாஹ், பக்கம்: 2
ஸஹாபாக்களுடைய வழியைப் புறக்கணிப்பவர் வழிகேடராவார்:
இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
எவரொருவர் ஸஹாபாக்களை முன்மாதிரியாகக் கொள்ளாமல், மேலும் அவர்களுடைய வழியல்லாததைப் பின்தொடர்ந்து, அல்குர்ஆன் வஸ்ஸுன்னாஹ்வில் இருந்து எடுத்துக் கொள்வேன் என்று நினைக்கின்றாரோ, அவர் பித்'அத் மற்றும் வழிகேட்டைச் சேர்ந்த மக்களிலிருந்து உள்ளவராவார்.
முஃக்தஸர் அல்ஃபதாவா அல்மிஸ்ரிய்யாஹ், 1/556
ஸுன்னாஹ் நூஹ் நபியின் கப்பலைப் போன்றது:
அல்இமாம் மாலிக் பின் அனஸ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
ஸுன்னாஹ்வானது நூஹ் நபியின் கப்பலைப் (போன்றதாகும்). எவர் அதில் ஏறிக்கொள்வாரோ, அவர் பாதுகாப்புப் பெறுவார். மேலும் எவர் அதில் (ஏறுவதிலிருந்து பின்வாங்குவாரோ, அவர் மூழ்கி விடுவார்.
ஃதம்முல் கலாம், 4/124
மத்ஹபுஸ் ஸலஃபானது சத்தியமே தவிர (வேறொன்றும்) இல்லை:
ஷைஃகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
மத்ஹபுஸ் ஸலஃபை வெளிப்படுத்தி, (தன்னை) அதனுடன் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடியவர் மீது எவ்வித குறையும் (பழியும்) இல்லை. மாறாக, அதனை (அவரிடமிருந்து) ஏற்றுக் கொள்வதென்பது ஏகோபித்த கருத்தின்படி கடமையாக இருக்கின்றது. ஏனெனில், திட்டமாக மத்ஹபுஸ் ஸலஃபானது சத்தியமே தவிர (வேறொன்றும்) இல்லை.
மஜ்மூஉல் ஃபதாவா (4/149)
ஸலஃபுஸ் ஸாலிஹீன்களுக்கு எது போதுமானதாக இருந்ததோ, அது உனக்கும் போதுமானதாக இருக்கும்:
அல்இமாம் அல்அவ்ஸாயீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
ஸுன்னாஹ்வின் மீது நீ பொறுமையாக இருப்பாயாக! அந்த மக்கள் (ஸலஃபுகள்) எங்கே நின்று கொண்டார்களோ, அங்கே நீயும் நின்று கொள், அவர்கள் கூறியதைக் கொண்டு நீ பேசு, மேலும் அவர்கள் விலகிக் கொண்டதிலிருந்து நீயும் விலகிக் கொள். உன்னுடைய ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் பாதையில் நீ பயணிப்பாயாக. ஏனெனில், நிச்சயமாக அவர்களுக்கு எது போதுமானதாக இருந்ததோ, அது உனக்கும் போதுமானதாக இருக்கும்.
அல்ஹில்யா 3/22
முதல் தலைமுறையினர் பின்வரும் தலைமுறையினருக்கு எதனையும் விட்டுவிடவில்லை:
ஹுதைஃபா ர'தியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் தோழர்கள் வழிபடாத எந்த ஒரு இபாதத்தைக் கொண்டும் நீங்கள் (அல்லாஹ்விற்கு) இபாதத் செய்யாதீர்கள். முதல் (தலைமுறையினர்) பின் (வரும் தலைமுறையினருக்கு) எந்த பேச்சையும் விட்டுவிடவில்லை (புதிதாக எதனையும் ஆரம்பிப்பதற்கு எவ்வித அவசியமுமில்லை). எனவே, (அல்குர்ஆனை) ஓதக்கூடியவர்களே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களுக்கு முன் சென்றவர்களின் பாதையை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.
அஸ்ஸுன்னாஹ் லிப்னி நஸ்ர் 89
மனிதர்களின் புத்தி மற்றும் அவர்களின் சுயக் கருத்துகளின் மீது மார்க்கம் விடப்படவில்லை:
அல்இமாம் அல்அஸ்பஹானீ அவர்கள் கூறினார்கள்:
“இம்மார்க்கமானது அல்லாஹ்வின் புறத்திலிருந்தே வந்தது. மனிதர்களின் புத்தி மற்றும் அவர்களின் சுயக் கருத்துகளின் மீது விடப்படவில்லை. நிச்சயமாக ரஸூல் ﷺ அவர்கள் தனது உம்மத்திற்கு ஸுன்னாஹ்வை விளக்கி விட்டார்கள். மேலும், அதனை தனது தோழர்களுக்கு தெளிவுபடுத்தி விட்டார்கள். எனவே, யார் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் தோழர்களுடன் மார்க்கத்தின் (விடயங்களிலிருந்து) எவற்றிலேனும் முரண்படுவாரோ அவர் திட்டமாக வழிதவறி விட்டார்”.
அல்ஹுஜ்ஜாஹ் ஃபி பயானில் மஹஜ்ஜாஹ் 2/437,440
கல்வியை ஸலஃபுகளுடைய அறிவிப்பின் மீது அமைப்பவர்களின் சிறப்பு:
ஷைஃகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
“கல்வியில் - (அதன்) அடிப்படைகள் மற்றும் கிளைப்பிரிவுகளில் - எவர் (தனது) பேச்சை குர்ஆன், ஸுன்னாஹ் மற்றும் முன்சென்றவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் மீது கட்டமைப்பாரோ, அவர் திட்டமாக நுபுவ்வதின் (தூதுத்துவத்தின்) பாதையை அடைந்து கொண்டார்”.
மஜ்மூ'உல் ஃபதாவா, 1/362
மனிதர்களின் அபிப்பிராயங்களைக் குறித்து எச்சரிக்கையாக இருந்து கொள்:
அல்இமாம் அல்அவ்ஸாயீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
ஸலஃபுகளின் அறிவிப்புகளைப் பற்றிப்பிடித்துக் கொள், மக்கள் உன்னை (ஏற்றுக் கொள்ளாமல்) நிராகரித்த போதிலும் சரியே. மேலும் (குர்ஆன், ஸுன்னாஹ்விற்கு முரணான) மனிதர்களின் அபிப்பிராயங்களைக் குறித்து எச்சரிக்கையாக இருந்து கொள்! அவர்கள் உனக்கு அதனை வார்த்தைகளால் அழகுபடுத்திக் காண்பித்தாலும் சரியே.
அஷ்ஷரீஆ லில்ஆஜுர்ரி 124
பாக்கியமிக்கவர் யார்?
இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
“பாக்கியம் மிக்கவர் என்பவர் எதன் மீது ஸலஃபுகள் இருந்தார்களோ அதனைப் பற்றிப்பிடித்து, மேலும் பின் வந்தவர்கள் எதனை புதிதாக உருவாக்கினார்களோ அதனை விட்டும் விலகியிருப்பவர் ஆவார்”.
ஃபத்ஹுல் பாரீ, 13/ 213
-மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.