ஜனாஸா தொழுகை


எல்லாம் வல்ல ஏக வல்லோன் அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும். இறுதித் தூதர் முஹம்மத் நபி(ச) அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் என்றென்றும் உண்டாவதாக!

ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவனுக்குப் பிரார்த்தனை செய்யும் முகமாக ஏனைய முஸ்லிம்களால் தொழப்படும் தொழுகைக்கே ஜனாஸா தொழுகை என்று கூறப்படும். இந்தத் தொழுகை பர்ழு கிபாயாவாகும். சிலர் செய்தால் அடுத்தவர் மீதுள்ள பொறுப்பு நீங்கிவிடும். யாருமே செய்யாவிட்டால் அனைவருமே குற்றவாளி களாகும் நிலை ஏற்படும்.

‘இந்தத் தொழுகையைத் தொழுப வருக்கு ஒரு கீராத் – உஹது மலையளவு நன்மை கிடைப்பதாக’ நபியவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)

ஜனாஸாவுக்கு வரும் சில சகோதரர்கள் இந்தத் தொழுகையின் நன்மையையும் முக்கியத்துவத்தையம் உணராமல் தொழுகை நேரத்தில் பள்ளிக்கு வெளியே நின்று விடுகின்றனர். தொழுவதால் தொழுபவர் நிறைய நன்மையைப் பெறுகின்றார். தொழுகையில் அதிக முஸ்லிம்கள் கலந்து கொள்வதால் இறந்த வரும் நன்மையடைகின்றார்.

எனவே, இதனைக் கவனத்திற் கொண்டு இந்தத் தொழுகையில் அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும்.

தொழுகைக்கான ஒழுங்குகள்:
ஜனாஸா தொழுகையில் ருகூஃ, சுஜூத் என்பன இல்லாவிட்டாலும் அதற்கும் ‘அஸ்ஸலாஹ்’ – தொழுகை என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது. தொழுகைக்கு அவசியமான அல்லாஹ்வுக்காகத் தொழுகின் றேன் என்ற இஹ்லாஸான நிய்யத்து, அவ்ரத்தை மறைத்தல், சிறுதொடக்கு மற்றும் பெருந்தொடக்கிலிருந்து நீங்கியிருத்தல், கிப்லாவை முன்னோக்குதல் போன்ற அனைத்தும் ஜனாஸா தொழுகைக்கும் அத்தியாவசியமானதாகும்.

தொழும் முறை:
நாம் நமது சகோதரர்களுக்காகச் செய்யும் இத்தொழுகை பற்றி முறையாக அறிந்திருந்தல் அவசியமாகும். ஜனாஸா தொழுகை நான்கு தக்பீர்களைக் கொண்டது.

1. முதலாம் தக்பீருக்குப் பின்னர்:
முதல் தக்பீருக்குப் பின்னர் அஊது பிஸ்மியுடன் சூறதுல் பாத்திஹாவை ஓத வேண்டும்.

2. இரண்டாம் தக்பீருக்குப் பின்னர்:
இரண்டாம் தக்பீருக்குப் பின்னர் நபியவர்கள் மீது ஸலவாத்துக் கூற வேண்டும். தொழுகையின் இறுதி அத்தஹிய்யாத்தில் வழமையாக ஓதும் ஸலாதுல் இப்றாஹிமிய்யா எனும் பின்வரும் ஸலவாத்தை ஓதிக் கொள்ள வேண்டும்.

image002

‘இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்தைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய்.’ என பதிலளித்தார்கள்.’
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்)
நூல்: புகாரி-3370)

3. மூன்றாம் தக்பீருக்குப் பின்னர்:
மூன்றாம் தக்பீரில் ஜனாஸாவுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். நபி(ச) அவர்கள் இதற்காகப் பல துஆக்களைக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றைப் பாடமிட்டு ஓத வேண்டும். விரிவஞ்சி நாம் இங்கே ஒரேயொரு துஆவை மட்டும் தருகின்றோம்.

image004

‘யா அல்லாஹ்! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! அவருக்கு அருள் புரிவாயாக! நிவாரணம் அளிப்பாயாக! குற்றங்களை மன்னிப்பாயாக! அவரது தங்குமிடத்தை கணண்ணியப்படுத்துவாயாக! அவரின் நுழைவிடத்தை விரிவுபடுத்துவாயாக! அவரை தண்ணீராலும், பணிக்கட்டியினாலும், குளிர் நீரினாலும் கழுவுவாயாக! வெள்ளை ஆடையைக் கழுவுவது போல் அவரது பாவங்களை விட்டும் அவரை பரிசுத்தப்படுத்துவாயாக! அவரது வீட்டை விட சிறந்த வீட்டையையும், அவரது குடும்பத்தை விட சிறந்த குடும்பத்தையும் அவரது துணையை விட சிறந்த துணையையும் வழங்குவாயாக! அவரை சுவனத்தில் நுழைவிப்பாயாக! கப்ருடைய வேதனையை விட்டும் அல்லது நரகத்தையும் விட்டும் அவரைப் பர்துகாப்பாயாக!
(முஸ்லிம்)

இது போன்ற துஆக்களை முழுமையாக மனனமிடடு ஓதுவதுதான் முறையாகும். அதை விட்டு விட்டு அல்லாஹும்மஃபிர்லஹு வர்ஹம்ஹு என்றோ அல்லது அல்லாஹும்மஃபிர்லஹா வர்ஹம்ஹா என்றோ சொன்னால் மாத்திரம் போதுமானது என நிறுத்திக் கொள்ளக் கூடாது.

அத்துடன் இறந்தவரின் குடும்பத்தார் தான் தொழுவிக்க வேண்டும் என்று மக்கள் நினைப்பதால் மார்க்கம் புரியாத பலரும் இன்று ஜனாஸா தொழுகை நடத்துகின்றனர். அவர்களுக்கு துஆ முழுமையாகப் பாடம் இல்லாததால் பாடமிருப்பவர்களுக்குக் கூட துஆவை முழுமையாக ஓத இடமளிக்காமல் நான்காம் தக்பீர் கூறிவிடுகின்றனர். இது இறந்தவருக்குச் செய்யும் மாபெரும் அநியாயமாகும்.

எனவே, தொழுவிப்பவர் முழுமையாக துஆ ஓத இடமளிக்க வேண்டும். ஜனாஸா தொழுகையில் ஜனாஸாவுக்காகப் பிரார்த்தனை செய்வதுதான் முக்கிய அம்சம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

4. நான்காம் தக்பீருக்குப் பின்னர்:
நான்காம் தக்பீருக்குப் பின்னர் ஸலாம் கொடுக்கப்படும். நபி(ச) அவர்கள் ஜனாஸா தொழுகை முடிந்த பின்னர் மீண்டும் ஜனாஸாவுக்காக துஆ செய்ததில்லை. ஜனாஸாவை அடக்கம் செய்த பின்னர் இறந்த வருக்காக பாவமன்னிப்புக் கேட்கும்படியும், கப்ரின் கேள்விகளின் போது உறுதியை வழங்கும் படியும் அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்கள். இந்த அடிப்படையில் பாவமன்னிப்புக் கேட்பதுடன் கப்ரின் உறுதிப்பாட்டுக்காகவும் தனித்தனியாகப் பிரார்த்திக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் ஜனாஸா தொழுகையைத் தொழுது நாமும் நன்மை பெறுவதுடன் இறந்தவரும் அருள் பெற உளத்தூய்மையுடன் முயற்சிப்போமாக!
Previous Post Next Post