ஒவ்வொரு நோயிற்கும் மருந்து இருக்கிறது என்கிறது இஸ்லாம்.
நீங்கள் மருத்துவம் செய்து கொள்ளுங்கள் என்று மருந்துகளை தேடுவதற்கு ஆர்வமூட்டுகிறது இஸ்லாம்.
தேன், கருஞ்சீரகம், தல்பீனஹ் போன்ற சில உணவுகளை மருந்துகளாகவும் அறிமுகம் செய்திருக்கிறது.
அல்லாஹ் மருந்துகளை நோய்களைக் குணப்படுத்தும் ஸbபபுகளாக (காரணங்களாக) வைத்திருக்கிறான். ஆனாலும் குணப்படுத்துபவன் அல்லாஹ் மாத்திரமே.
றுக்யஹ் என்பது நோயிற்கு நிவாரணம் பெறும் நோக்கத்தில் குர்ஆன் வசனங்கள் மற்றும் பிரார்த்தனைக்குரிய ஷிர்கில்லாத வார்த்தைகள் மூலமாக ஓதிப் பார்க்கும் முறையாகும்.
அல்லாஹ் மருந்துகளை நோய்களைக் குணப்படுத்தும் ஸbபபுகளாக (காரணங்களாக) வைத்திருப்பதைப் போல றுக்யஹ்வையும் நோய்களைக் குணப்படுத்துவதற்குரிய ஸbபபாக (காரணமாக) வைத்திருக்கின்றான்.
மருந்தும் றுக்யஹ்வும் இரு வகையான உடல், உள நோய்கள் அனைத்துக்கும் நிவாரணிகளாகும்.
உடல் நோய்களுக்கு மருந்து செய்வதைப் போல றுக்யஹ் மூலமும் சிகிச்சை அளிப்பது அவசியம். உதாரணமாக: தேள் கொட்டுதல், காய்ச்சல், தலைவலி, உடல் காயங்கள் ஏற்படுகின்ற போது மேற்படி இருமுறைகளிலும் சிகிச்சை அளிக்கலாம்.
உள நோய்களுக்கு றுக்யஹ் ஓதி, சிகிச்சை அளிப்பது போன்று மருந்து மூலமும் சிகிச்சை அளிப்பது அவசியம். பைத்தியம் மற்றும் பல்வேறுபட்ட மன நோய்களுக்கும் மேற்படி இருமுறைகளிலும் சிகிச்சை அளிக்கலாம்.
நபி ﷺ அவர்கள், உடல் நோயான தேள் கொட்டியதற்கு றுக்யஹ் ஓதுவதற்கு ஆர்வமூட்டியிருப்பதைப் போல, உள்ளத்துடன் சம்பந்தப்பட்ட மனக்கவலையைப் போக்குவதற்காக தல்பீனஹ் எனும் உணவை மருந்தாக உட்கொள்ள ஆர்வமூட்டியிருக்கிறார்கள்.
கண் திருஷ்டி, சூனியம் ஆகியவற்றின் உடல், உளப் பாதிப்புக்களுக்கு றுக்யஹ் பயனளிப்பதைப் போன்று மருத்துவமும் பயனளிக்கும். உதாரணமாக ஒருவர் கண் திருஷ்டியின் காரணமாக விபத்துக்குள்ளாகி காயமடைந்தால் மருந்து, றுக்யஹ் ஆகிய இரண்டும் அவசியமாகும். அதேபோன்றுதான் ஒருவர் கண் திருஷ்டி அல்லது சூனியம் காரணமாக மனப் பாதிப்புக்கு உள்ளானால் மருந்து, றுக்யஹ் ஆகிய இரண்டும் அவசியமாகும்.
ஷைதான் மனிதனில் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்த முடியும். இவ்வாறு மனப் பாதிப்புக்குட்பட்ட மனிதன் ஷைதானின் தூண்டுதலால் தன்மீது உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புள்ளது.
மனப் பாதிப்புக்களுக்கு உடற்கூற்றுக் காரணிகள் இருப்பதை போன்று சில வேளைகளில் ஷைதான்களின் தாக்கமும் காரணியாக இருக்கும்.
ஷைதானின் தாக்கத்தினால் ஏற்படும் மனப் பாதிப்புக்கு றுக்யஹ் மிகவும் அவசியமாகும். சில வேளைகளில் இத்தகைய தாக்கத்தினால் விளைந்த உடல், உளப் பாதிப்புகளை சரி செய்ய மருத்துவமும் தேவைப்படலாம்.
ஒருவருக்கு ஏற்படும் மன பாதிப்பானது கண் திருஷ்டி, சூனியம் போன்ற ஷைதானின் தாக்கங்களினால் விளைந்த மன பாதிப்பா அல்லது உடற்கூற்றுக் காரணிகளால் விளைந்த மனப் பாதிப்பா என்பதை சில அனுபவம் வாய்ந்தவர்களால் கண்டறிந்து கொள்ள முடியும்.
சில வேளைகளில் மருத்துவம் மாத்திரம் பயனளிக்காத போது அது ஷைதானிய தாக்கமென்தை ஊகிக்கலாம்.
ஒருவருக்கு ஏற்பட்டுள்ள மனப் பாதிப்பு மேற்படி இருவகையான மனப் பாதிப்புகளில் எந்தவகை என்று பிரித்தறிய முடிந்தாலும் முடியாவிட்டாலும் இருவகைகளுக்கும் மருத்துவமும் றுக்யஹ்வும் பயனளிக்கலாம்.
ஷைதானின் தாக்கத்தினால் விளையும் மனப் பாதிப்புக்கு மருத்துவம் செய்யத் தேவையில்லை என்பதும், உடற்கூற்றுக் காரணிகளால் விளையும் மனப்பாதிப்புக்கு றுக்யஹ் செய்யத் தேவையில்லை என்பதும் பிழையான நிலைப்பாடுகளாகும்.
உண்மையில் பல நேரங்களில் ஷைதானின் தாக்கங்களையும் மனநோய்களையும் பிரித்தறிவது கடினமாகவே இருக்கும். இதன் காரணமாக றுக்யஹ் மற்றும் மருத்துவம் ஆகிய இரு முறைகளிலும் சிகிச்சை அளிப்பது முக்கியமாகும்.
அனைத்து நோய்களுக்கும் றுக்யஹ் பலனளிக்கும். சில நோய்களுக்கு அதிக பயனைத் தரும். அந்த வகையில் ஒரு ஹதீஸின் விளக்கத்தின் அடிப்படையில், கண் திருஷ்டி போன்ற ஷைதானுடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் பாம்புக் கடி, தேள் கொட்டுதல் போன்ற நச்சுத்தன்மைகளுடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு றுக்யஹ் அதிக பயனைத் தரும்.
அனைத்து நோய்களுக்கும் றுக்யஹ் பயனளித்தாலும் சில வேளைகளில் முழுமையாகக் குணமடைய மருத்துவமும் செய்ய வேண்டிய தேவை ஏற்படும். அதனால் இஸ்லாம் இரண்டையும் செய்வதற்கு ஆர்வமூட்டியுள்ளது.
ஷைதானின் தாக்கத்தினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சில வேளைகளில் மருத்துவம் தேவைப்படாமல் இருக்கலாம். வேறு சில வேளைகளில் றுக்யஹ் மூலமாக ஷைதானின் தாக்கம் இல்லாமல் போனாலும், அது விட்டுச்சென்ற உடல், உளக் காயங்களை ஆற்றுவதற்கு மருத்துவம் தேவைப்படலாம்.
ஒரு நோயாளி தனக்குத் தானே றுக்யஹ் செய்து கொள்ள முடியும்.
நோயாளிக்காக அவரை நோய் விசாரிப்பவரோ அல்லது நோயாளியின் குடும்பத்தவர், உறவினர்களோ றுக்யஹ் ஓதுவது வரவேற்கத்தக்கது.
நோயாளி மற்றவர்களிடம் தனக்காக றுக்யஹ் செய்யுமாறு வேண்டிக் கொள்ளாமல் இருப்பது சிறந்தது. ஏனெனில் நபி ﷺ அவர்கள், சில பண்புகளைக் குறிப்பிட்டு அப்பண்புகளைக் கொண்டுள்ளவர்கள் கேள்வி காணக்கின்றி சுவனம் செல்வார்கள் என்று கூறினார்கள். அவற்றுள் ஒன்றாக "மற்றவர்களிடம் தமக்காக றுக்யஹ் செய்யுமாறு கேட்காதவர்கள்" என்றும் குறிப்பிட்டார்கள். எனினும் அவ்வாறு வேண்டுவது பாவமல்ல.
றுக்யஹ் செய்வதில் அனுபவமுள்ளவருக்கு 'றாகீ' என்று கூறப்படும்.
றாகீயிடம்தான் றுக்யஹ் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
குர்ஆன் ஸுன்னஹ்வுக்கு முரண்படாத ஷிர்கில் இருந்து தூரமாக இருக்கக்கூடிய, ஏகத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொண்ட றாகீகளிடம் றுக்யஹ் செய்வது தவறில்லை.
றாகீகள் நோயாளிகளைக் காயப்படுத்துவதோ, மஹ்றமல்லாத பெண் நோயாளியுடன் தனிமையில் இருந்து ஓதிப் பார்ப்பதோ, பெண் நோயாளிகளைத் தொடுவதோ கூடாது.
தங்களிடம் வரும் நோயாளிகளை, அவர்களிலும் அதிகமாகப் பெண்களை ஏமாற்றும் றாகீகள், ஷிர்கான விடயங்களைப் பரிந்துரைக்கும் றாகீகள், மந்தரவாதிகள், சூனியக்காரர்கள் போன்றவர்களும் சமூகத்தில் காணப்படுகின்றனர். இத்தகையவர்களிடம் செல்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.
தமக்கு மறைவான அறிவு இருப்பதாக வாதிடுகின்றவர்களிடம் ஓதிப் பார்ப்பதை இஸ்லாம் தடுத்துள்ளது. அப்படியான ஒருவரிடம் சென்று மறைவான விடயங்களைப் பற்றி விசாரிப்பவரின் 40 நாட்களின் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவர் சொல்வதை உண்மைப்படுத்தியவர் குஃப்ரைச் செய்த பெரும் குற்றத்துக்குரியவராவார்.
உடற்கூற்றுக் காரணிகளால் விளையும் சில மன நோய்களைக் கண்டறியத் தெரியாத சில றாகீகள் அவை முழுமையான ஷைதானின் தாக்கங்கள் என்று மாத்திரம் கருதி அவற்றுக்கு மருத்துவம் பயனளிக்காது என்று பரிந்துரைப்பது வேதனையானதாகும். இதனால் றுக்யஹ்வுடன் சேர்த்து மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டியவர்கள் சிகிச்சை வழங்கப்படாமல் பாதிக்கப்படுகின்றனர்.
ஷைதானின் தாக்கங்களைக் கண்டறியத் தெரியாத சில வைத்தியர்கள், அவை முழுமையான உடற்கூற்றுக் காரணிகளால் விளைந்த மன நோய்கள் என்று மாத்திரம் கருதி அவற்றுக்கு ஆன்மீகம் (றுக்யஹ்) பயனளிக்காது என்று வாதிடுவது வேதனையானதாகும். இதனால் மருத்துவத்துடன் சேர்த்து றுக்யஹ் வழங்கப்பட வேண்டியவர்கள் றுக்யஹ் வழங்கப்படாமல் பாதிக்கப்படுகின்றனர்.
றுக்யஹ்வின் அவசியத்தையோ மருத்துவத்தின் அவசியத்தையோ ஏற்றுக் கொள்ளாவிட்டால் பாதிக்கப்படப் போவது நோயாளிகளேயாவர்.
-ஸுன்னா அகாடமி