எழுதியவர்: அஷ்ஷெய்க் M. பஷீர் ஃபிர்தவ்ஸி
தமிழுலகில் தூய தவ்ஹீத் கொள்கையை பிரச்சாரம் செய்கிறோம் என்று கூறக்கூடிய சிலர் தங்களது பிரச்சாரத்தில் ஸலஃபு கொள்கையை வழிகேடு என்று விமர்சித்து பிரச்சாரம் செய்து வருவதை காண முடிகிறது.
இத்தகைய பிரச்சாரத்திற்கு அறியாமையும் பிடிவாதமும் தான் காரணமாக இருக்க முடியும்.
ஒன்று – அவர்களுக்கு ஸலஃப் என்றால் என்ன? இதன் மூலம் யாருடைய கொள்கையை நாடுகிறோம் என்ற அறிவில்லாமல் இவ்வாறு கூறுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.
அப்படியில்லாவிட்டால் அவர்கள் தங்களது வழிகேட்டில் பிடிவாதமாக இருப்பதனால் இவ்வாறு வாதிடுகிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஸலஃபு என்றால் யார் அவர்களின் கொள்கை என்ன?
ஸலஃபு என்பதன் பொருள்…
இமாம் இப்னு மன்ளூர்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். *அஸ்ஸலஃப், அஸ்ஸலீஃப், அஸ்ஸலஃபா என்றால், முன்சென்றவர்களின் கூட்டம் என்பதாகும்.
இஸ்லாமிய மரபில் ஸலஃப் என்றால், அல்லாஹ்வின் பொருத்தத்திற்குரிய ஸஹாபாக்கள், மற்றும் முதல் மூன்று நூற்றாண்டில் வாழ்ந்த நேர்வழியில் நடந்த நல்லோர்களுக்கும் தான், ஸலஃபு என்று சொல்லப்படும்.
மார்க்கத்தை ஸஹாபாக்கள் எப்படி புரிந்தார்களோ, அதே போன்று புரிவதுதான் உண்மையான ஸலஃபுக்கொள்கை ஆகும்.
இதன் அடிப்படையில்
அகீதா(கொள்கை), இபாதா(வணக்கம்), நடைமுறை, நற்பண்புகள் என அனைத்திலும் நாம் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றவேண்டும்.
அதாவது, இதன் மூலம் ஸஹாபாக்கள் புதிய ஒரு வழிமுறையை காட்டித்தந்தார்கள் என்பதல்ல!..
மாறாக, குர்ஆனையும், சுன்னாவையும் எப்படி விளங்கவேண்டும், அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனை விளக்கிச் சொன்னவர்கள் ஸஹாபாக்களாவர்.
எனவே, மார்க்கத்தை அவர்கள் புரிந்தது போன்றுதான் புரியவேண்டும். அதன் மூலமே ஒருவர் நேர்வழியை பெற முடியும். இன்னும், வழிகேட்டிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.
இவர்களின் சிறப்புகளைப் பற்றி அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் ஏராளமான செய்திகளை கூறியுள்ளார்கள்.
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக் கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே, அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் – 9:100)
அல்லாஹ் இவ்வசனத்தில் ஸஹாபாக்களின் சிறப்பையும் அந்தஸ்த்தையும் கூறிக்காட்டுகிறான்.
இந்த வசனத்தில் நபிதோழர்களின் கொள்கையையும் அவர்களின் அமல்களையும் யார் பின் தொடர்வார்களோ அவர்களை அல்லாஹ் புகழ்ந்து கூறுகிறான். மேலும் அல்லாஹ் அவர்களுக்கு சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ள இன்பங்களையும் தெளிவுபடுத்துகிறான்.
இதுவே நபிதோழர்களின் வழியை அல்லாஹ் பொருந்தி கொண்டான் என்பதற்கும், அதனை பின்பற்றுவது அவசியம் என்பதற்குமான சான்றாகும்.
(முஹ்தஸருல் ஹஸீஸ் ஃபிபயானி உஸுலி மன்ஹஜு அஸ்ஸலஃபு வ அஸ்ஹாபுல் ஹதீஸ் – 49)
இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இமாம் ஸஅதி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
முந்திக்கொண்டவர்கள் என்றால், இந்த உம்மத்தில் ஈமான், ஹிஜ்ரத், ஜிஹாத், அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டுவது அகியவற்றின் புறம் முந்திச் சென்றவர்களைக் குறிக்கிறது.
முஹாஜிர்கள் என்பவர்கள்:
எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப்பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ, அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள்தாம் உண்மையாளர்கள். (அல்குர்ஆன் – 59:8)
அன்ஸார்கள் என்பவர்கள்:
இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் – இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் – 59:9)
நற்செயல்களில் அவர்களை பின்பற்றியவர்கள் என்று அல்லாஹ் கூறுவது…
நம்பிக்கைகள், அமல்கள், சொற்கள் ஆகியவற்றில் முஹாஜிர்களையும் அன்ஸாரிகளையும் பின்பற்றியவர்களைத் தான்!…
இவர்கள்தாம் பழிச்சொல்லிலிருந்து தப்பித்தவர்கள். இறுதியில் அவர்களுக்குத்தான் பாராட்டுகளும் அல்லாஹ்விடத்தில் சிறந்த மதிப்பும் உள்ளது.
(தைஸீருல் கரீமிர்ரஹ்மான் ஃபி தஃப்ஸீரி கலாமில் மன்னான்)
மிகத் தெளிவாக இவ்வசனம் ஸஹாபாக்களின் வழியை பின்பற்றுபவர்களுக்குத் தான் அல்லாஹ்வின் பொருத்தம் என கூறுகிறது. இன்னும் நமது நம்பிக்கை, ஸஹாபாக்களின் நம்பிக்கையை போன்று இருக்க வேண்டுமென்றும், அல்லாஹ் கூறியுள்ளான்.
ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப் போன்று அவர்களும் ஈமான் கொண்டால், நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்; ஆனால், அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் – 2:137)
யூதர்களும் கிருஸ்தவர்களும் தாங்கள் தான் நேர்வழியில் இருப்பவர்கள் என்று கூறியதை இதற்கு முந்திய வசனத்தில் – அல்குர்ஆன் 2:135 ல் கூறிகாட்டிய அல்லாஹ், உண்மையாக அவர்கள் நேர்வழியை அடைய விரும்பினால் நபித்தோழர்கள் ஈமான்கொண்டதைப்போன்று நம்பிக்கை கொள்ள வேண்டுமென்று நிபந்தனையிடுகிறான். அப்படியானால் ஒருவரது ஈமான் சரியா தவறா என்பதை உரசிப்பார்ப்பதற்கான அளவுகோலாக ஸஹாபாக்களின் ஈமானையே சொல்லிக்காட்டுகிறான். இது அவர்களுக்கு மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருக்குமான வழிகாட்டுதலாகும். ஸஹாபாக்கள் ஈமான் கொண்டதைப் போன்று யார் ஈமான் கொள்ளவில்லையோ, அவர்கள் வழிகேட்டில் இருப்பவர்கள் ஆவார்கள்.
ஸஹாபாக்களின் காலத்தில் தோன்றிய வழிகெட்ட கூட்டங்கள் அனைத்தும் ஸஹாபாக்கள் விளங்கியது போன்று இந்த மார்க்கத்தை புரியாமல் போனதுதான் அவர்களின் வழிகேட்டிற்கு காரணமாக இருந்தது. இதற்கு உதாரணமாக
ஹவாரிஜ்களையும்,
ஷியாக்களையும்,
கத்ரியாக்களையும் சொல்லலாம்.
இர்பாளு பின் ஸாரியா அவர்கள் அறிவித்தார்கள்.
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஃபஜர் தொழுகையை தொழவைத்த பின்னர், எங்களை நோக்கி அமர்ந்து கண்கள் குளமாகும் அளவிற்கும், உள்ளங்கள் அஞ்சி நடு நடுங்கும் அளவிற்கும் உபதேசம் செய்தார்கள். அப்போது ஒருவர் அல்லாஹ்-வின் தூதரே விடைபெற்று செல்வோரின் உபதேசம் போன்றல்லவா தங்களது உபதேசமுள்ளது என்று கூறிவிட்டு, நீங்கள் எங்களுக்கு என்ன உபதேசம் செய்ய இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்-வை பயந்து கொள்ள வேண்டுமென்று நான் உங்களை உபதேசிக்கிறேன். இன்னும் தலைவருக்கு செவிசாய்க்க வேண்டும், அவருக்கு கட்டுப்படவேண்டும், அவர் ஒரு கருப்பின அடிமையாக இருந்தாலும் சரியே!.. நிச்சயமாக உங்களில் எனக்குப் பின் உயிர் வாழ்பவர்கள், எராளமான கருத்து வேறுபாடுகளை காண்பீர்கள் அப்போது நீங்கள் எனது சுன்னத்தையும் (வழிமுறை) நேர்வழி பெற்று நேர்வழி நடந்த எனது கலீஃபாக்களுடைய வழிமுறையையும் பின்பற்றுங்கள். அதனை உங்கள் கடவாய் பற்களால் பற்றி பிடித்து கொள்ளுங்கள். நிச்சயமாக புதிதாக உருவாகக் கூடிய நூதன விஷயங்ளைக் குறித்து நான் உங்களை எச்சரிக்கிறேன். நிச்சயமாக புதிதாக உருவாகக் கூடிய அனைத்து காரியமும் வழிகேடாகும் என்று கூறினார்கள். (நூல்: அபூதாவூத் – 4007, அஹ்மது)
இந்த நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இந்த உம்மத்தில் ஏற்படவிருக்கும் குழப்பங்களையும் கருத்து வேறுபாடுகளையும் குறித்து எச்சரித்துக் கூறிய பின்னர், அத்தகைய குழப்பத்தில் அகப்படாமல் இருப்பதற்கு, தூதரின் சுன்னாவை பற்றிப் பிடிக்குமாறு கூறினார்.
அதன் பின்னர், நேர்வழி பெற்று, நேர்வழி நடந்த எனது கலீஃபாக்களுடய வழிமுறையையும் பின்பற்றுங்கள் என்று கூறுகிறார்.
இந்நபிமொழியே ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டுமென்பதற்கு நேரடியான ஆதாரமாக உள்ளது.
இதனை மறுப்பதற்காக வழிகேடர்கள் தொடுக்கும் வாதம் என்னவெனில், நபித்தோழர்களுக்கு வஹீ வரவில்லை என்பதாகும்.
நபித்தோழர்களுக்கு வஹீ வருகிறது என்று ஸலஃப் வழிமுறையை சரிகாணும் அறிஞர்கள் யாரும் கூறவில்லை.
ஆனால், வஹீ தான் அவர்களுக்கு இந்த அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இவர்களது வாதத்தை போன்றுதான் அஹ்லுல் குர்ஆன் என்பவர்கள், குர்ஆன் மட்டும் போதும் சுன்னா தேவையில்லை என்பதற்கு எடுத்து வைக்கக்கூடிய வாதங்களும் ஆதாரங்களும் உள்ளன.
அதே பாணியில்தான் இவர்கள் ஸஹாபாக்களை புறக்கணிக்கிறார்கள். இதன் மூலம் தங்களது சுய கருத்தையும் மனோ இச்சையையும் மார்க்கமாக்க நினைக்கிறார்கள்.
இத்தகைய போக்கு யூதர்களின் வழிமுறையாகும்.
நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமைநாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. (அல்குர்ஆன் – 2:85)
குர்ஆனையும் சுன்னாவையும் புரிய வேண்டிய விதத்தில் சரியாக புரிந்து கொண்டால் இப்படி குழம்பத் தேவையில்லை. ஒன்றை எடுத்து மற்றொன்றை விடவும் தேவையில்லை. மாறாக, ஒவ்வொருவரும் தனது மனோஇச்சையின் அடிப்படையில் மார்க்கத்தை அணுகும் போதுதான் இது போன்ற நிலை உருவாகிறது.
ஸலஃபுகளின் வழியை வழிகேடு என்று கூறக்கூடியவர்கள் உண்மையில் இஸ்லாமிய மார்க்கத்தையே வழிகேடு என்று விமர்சிக்கிறார்கள்.
ஏனெனில், அல்லாஹ்வும் அவனது தூதரும் அவர்களை
நேர்வழியில் இருப்பவர்கள்,
மனிதர்களில் சிறந்தவர்கள்,
சொர்க்கவாசிகள் என்றும், அவர்களின் வழியை பின்பற்றாதவர்களை
நரகவாசிகள் என்றும் கூறியுள்ளார்கள்.
எவனொருவன் நேர்வழி இன்னதென்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். (அல்குர்ஆன் – 4:115)
ஸஹாபாக்களின் வழியைத்தான் இவ்வசனத்தில் அல்லாஹ் முஃமின்களின் வழி என்று கூறுகிறான். இந்த வசனம் அருளப்படும்போது அவர்களைத்தவிர வேறு யாரும் ஈமான் கொண்ட மக்களாக இருக்கவில்லை என்பதே அதற்கு போதுமான சான்றாக உள்ளது.
இன்னும் மார்க்க விஷயத்தில் ஸஹாபாக்களுக்கு பின்னர் வந்தவர்களில் யாரும் அவர்களுடைய நிலைப்பாட்டிற்கு மாற்றமான வழியை தேர்ந்தெடுப்பவர்கள் வழிகேடர்கள் ஆவார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
நபித்தோழர்களின் வழிமுறையை யார் வழிகேடு என்று கூறுவானோ அவன்தான் உண்மையான வழிகேடன் ஆவான்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பனூ இஸ்ரவேலர்கள் 72 கூட்டமாக பிரிந்தார்கள்.
எனது சமுதாயம் 73 கூட்டமாக பிரியும்.
(அதில்) ஒரு கூட்டத்தாரை தவிர!..
அனைவரும் நரகம் செல்வார்கள் என்று கூறினார்கள்.
அப்போது அந்த ஒரு கூட்டம் யார் அல்லாஹ்வின் தூதரே என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நானும் என்னுடைய தோழர்களும் இன்று எந்த வழிமுறையில் இருக்கக் கண்டீர்களோ, அந்த வழிமுறையை பின்பற்றுவோர்கள் என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ரு. நூல்: திர்மிதி – 2641)
நபித்தோழர்கள் இருந்த வழிமுறையை பின்பற்றுவோர்கள் தான் மறுமையில் வெற்றிபெற முடியும் என்று அல்லாஹ்வின் தூதரே கூறிய பின்னர், ஸலஃபுகளின் கொள்கை, வழிகேடு என்று கூறுபவர்கள் யாராக இருக்க முடியும் என்பதை நீங்களே சிந்தித்துப்பாருங்கள்.
இன்று தங்களது பிரச்சாரத்தில் மூச்சுக்கு முன்னூறு தடவை வழிகேட்ட ஸலஃபுக்கொள்கை என்று முழங்குபவர்கள் மிகத்தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஸலஃபுக் கொள்கை வழிகேடு என்று கூறுபவர்களால் தங்களது சுய கருத்துக்கள் அல்லாமல், குர்ஆன் சுன்னாவிலிருந்து அதற்கான ஆதாரத்தை காட்ட இயலாது என்பதையும் சிந்திப்பவர்களால் விளங்கிக் கொள்ள முடியும்.
மக்கள் அனைவரையும் விட ஸஹாபாக்களே சிறந்தவர்கள்! அவர்களின் அந்தஸ்தையும் தியாகத்தையும் சிறப்பையும் ஒருவராலும் அடைய முடியாது!..
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அவர்களுக்கு அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களுக்கு அடுத்து வருபவர்கள். பிறகு சில சமுதாயங்கள் வரும். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளும். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹுல் புஹாரி – 2652)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் என் தோழர்கள் செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட அந்த தர்மம் எட்ட முடியாது. என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். (ஸஹீஹுல் புஹாரி – 3673)
ஸஹாபாக்கள் விஷயத்தில் நல்ல முன்னோர்களின் நிலைப்பாடு..
இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் கூறினார்கள்.
நம்மிடம் சுன்னாவின் அடிப்படை என்பது… நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் எதன் மீது இருந்தார்களோ, அதனை பற்றிப்பிடிப்பது. இன்னும், அவர்களை முன்மாதிரியாக கொள்வதும், பித்அத்களை தவிர்ந்து கொள்வதும் ஆகும். பித்அத்-கள் அனைத்தும் வழிகேடே!.. (உஸூலுச் சுன்னா – 14)
உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் நமக்கு சுன்னாவை விட்டுச் சென்றுள்ளார்கள். அவர்களுக்குப் பின்னர் ஆட்சியாளர்களும் சுன்னாவை விட்டுச் சென்றுள்ளார்கள். அவைகளை பற்றிப்பிடிப்பதும், அல்லாஹ்வின் வேதத்தை உண்மைப்படுத்துவதும், அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுவதும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியாக இருப்பதும் அவசியமாகும்.
அதனை மாற்றுவதற்கோ அதில் திருத்தம் செய்வதற்கோ, அதற்கு மாற்றமானதை குறித்து சிந்திப்பதற்கோ யாருக்கும் உரிமையில்லை. அந்த சுனன்களை (வழிமுறைகளை) யார் பின்பற்றுவாரோ அவர் நேர்வழி அடைந்துவிட்டார். சுன்னாவின் மூலம் யார் வெற்றியை தேடுவாரோ அவர் வெற்றி பெறுவார்.
யார் அதற்கு மாறு செய்து முஃமீன்களின் வழியல்லாத வேறு வழியை பின்பற்றுவானோ அவனை அல்லாஹ், அவன் செல்லும் வழியில் செல்லவிட்டு இறுதியில் நரகில் கொண்டுபோய் சேர்ப்பான், சேருமிடங்களில் அதுவே மிகக்கெட்டதாகும். (தஃப்ஸீர் இப்னு அபீஹாதிம்.)
இங்கே உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) ஆட்சியாளர் என்று ஸஹாபக்களை பற்றியே கூறுகிறார். அவர்களின் வழிமுறையை சுன்னாவாகப் பார்த்துள்ளர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்த சமுதாயத்தில் சிறந்தவர்களாக இருந்த தாபியீன்கள், தப்உ தாபியீன்கள், இமாம்கள் என அனைவரும் ஸஹாபாக்களின் வழிமுறையை மார்க்கத்தின் அம்சமாக கருதினார்கள். அவர்கள் யாரும் ஸஹாபாக்களின் கூற்றை புறக்கணிக்கவில்லை.
இறுதியாக
ஸஹாபாக்களின் வழியை புறக்கணிப்பவர்கள் உண்மையில் குர்ஆனையும், சுன்னாவையும், ஸலஃபு ஸாலிஹீன்களின் வழியையும் புறக்கணிப்பவர்கள். எனவே, அவர்கள்தான் உண்மையான வழிகேடர்கள்f. அவர்களை விட்டும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் தவ்ஃபீக் செய்வனாக!