பேராசிரியர் : அஹ்மத் அஸ்ரப் (ஹபீதஹுல்லாஹ்) அவர்களின் ஆடியோ பதிவில் இருந்து எழுத்து வடிவில் மாற்றப்பட்டது.
முன்னுரை மற்றும் லூடோவின் வரலாறு:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களே, பல சகோதரர்கள் லூடோ விளையாடுவது சம்பந்தமான மார்க்கச் சட்டத்தை கேட்டிருந்தார்கள். குறிப்பாக, சில வலைத்தளங்களில் லூடோ விளையாடுவது ஹராம் என்று சிலர் கூறுவதனால், இதனுடைய உண்மையான நிலவரம் என்னவென்று சில சகோதரர்கள் கேட்டிருந்தார்கள். அதற்கிணங்க, நான் இந்தக் குரல் ஒளியைப் பதிவு செய்கின்றேன்.
முதலாவதாக, இந்த லூடோ எவ்வாறு மனித சமூகத்தில் தோன்றியது என்று நாங்கள் பார்க்கும் பொழுது, சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் ஈராக் நாட்டில் தோன்றியதாக கூறப்படுகிறது. அங்கே செய்யப்பட்ட ஆராய்ச்சியின் காரணமாக, மனித எலும்பினால் செய்யப்பட்ட லூடோ துண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். அதற்கு பின்பு ரோமர்கள், பாரசீகர்கள் இந்த லூடோ விளையாட்டை விளையாடி வந்திருக்கிறார்கள் என்பதும் வரலாற்று ரீதியாக தெரிய வருகிறது.
இந்த லூடோ விளையாடும் விளையாட்டு அல்லது கேம், அரபிகள் மத்தியிலே இருக்கவில்லை. இஸ்லாத்திற்கு முன்பு இப்படி ஒரு விளையாட்டு இருப்பதாக அரபிகளுக்கு தெரியவில்லை.
இதை முதன்முதலாக அபூ கைஸ் இப்னு அப்துல் மனாஃப் என்பவர் இஸ்லாத்திற்கு முன்பு இந்த விளையாட்டை மக்காவுக்குள் அறிமுகம் செய்கிறார்.
இஸ்லாத்திற்கு முன்பு மக்காவிலே இந்த லூடோ விளையாடுகின்ற முறை இருந்தது என்றால், அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிந்திருப்பார்கள்.
அறிஞர்களின் நிலைப்பாடுகளும் ஹதீஸ் ஆய்வும்:
இமாம் மாலிக் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் நிலைப்பாடு மற்றும் பலவீனமான ஹதீஸ் (1):
இமாம் மாலிக் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் இந்த லூடோ விளையாடுவதை ஹராம் என்று சொல்லியிருக்கிறார். இதற்காக அவர்கள் தங்களுடைய அல்-முவத்தா என்ற நூலிலே ஒரு ஹதீஸைப் பதிவு செய்கிறார்கள்.
அந்த ஹதீஸ்: "யார் இந்த லூடோவை விளையாடுகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் மாறு செய்துவிட்டார்".
இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்துதான் இமாம் மாலிக் அவர்கள் லூடோ விளையாடுவது ஹராம் என்ற பொதுவான ஒரு சட்டத்தைக் கொடுக்கிறார்.
ஆய்வு முடிவு:
இந்த ஹதீஸ் சஹீஹானது அல்ல. இதிலே சயீத் இப்னு அபீ ஹிந்த் என்பவர் அபூ மூஸா அல்-அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்திலே ஹதீஸைப் பெறவில்லை, சந்திக்கவில்லை என்று இமாம் அபூ ஹாத்திம் போன்ற அறிஞர்கள் சொல்கிறார்கள். எனவே, இந்த ஹதீஸ் ஒரு பலவீனமான ஹதீஸ்.
இமாம் ஷாஃபிஈ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் நிலைப்பாடு:
இமாம் ஷாஃபிஈ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள், இமாம் மாலிக் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மாணவர். அவர்கள் தங்களுடைய கிதாபுகளிலே சொல்கிறார்கள்:
"நான் லூடோ விளையாடுவதை வெறுக்கின்றேன் ('அக்ரஹு')".
ஆனால், என்ன ஹதீஸ் என்று அவர்கள் இங்கே சொல்லவில்லை.
ஆனால், இமாமுல் ஹரமைன் தன்னுடைய நாயா என்ற கிதாபிலே,அக்ரஹு என்பதற்கு ஹராம் என்று கொடுக்க வேண்டும் என்ற கருத்தைக் கொடுத்து, பின்பு வந்தவர்களும் ஷாஃபிஈ இமாம் அவர்களின் நிலைப்பாடு ஹராம் என்பதுதான் என்ற நிலைப்பாட்டிலே இருக்கிறார்கள்.
*ஸஹீஹ் முஸ்லிமில் உள்ள இரண்டாவது ஹதீஸ் (பன்றி இறைச்சி உவமை):*
பிற்காலத்திலே வந்தவர்கள் இந்த லூடோ விளையாடுவது ஹராம் என்பதற்கு ஸஹீஹ் முஸ்லிமில் பதியப்பட்ட ஒரு ஹதீஸை ஆதாரமாக முன் வைத்திருக்கிறார்.
ஹதீஸ்: புரைதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"யார் நர்தஷீர் (Ludo) விளையாடுகிறாரோ, அவர் பன்றியின் இறைச்சியிலும், அதனுடைய இரத்தத்திலும் தனது கையைத் தோய்த்தவரைப் போல் ஆகிவிடுகிறார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னதாக இந்த ஹதீதை இமாம் முஸ்லிம் அவர்கள் பதிந்திருக்கிறார்கள்.
ஆய்வு முடிவு (இமாம் புகாரி நிபந்தனை):
இந்த ஹதீஸைப் பொறுத்தவரையிலே, இமாம் முஸ்லிம் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் ஹதீஸ்களை விதிக்கும்போது ஒரு முரண்பாடான நிபந்தனையை இணைத்து வைத்திருக்கிறார்.
இமாம் முஸ்லிம் அவர்களுடைய போக்கு என்னவென்றால்:
ஒரே காலகட்டத்திலே இரண்டு அறிவிப்பாளர்கள் இருந்து, ஒருவர் மற்றவரைச் சந்தித்ததாக ஊர்ஜிதமாகாவிட்டாலும், சந்திப்பதற்கு இடம்பாடு இருந்தால் அதைச் சந்தித்ததாகவே எடுத்துக் கொள்வார்கள்.
இமாம் புகாரி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) போன்ற ஹதீஸ் அறிஞர்களின் நிலைப்பாடு என்னவென்றால், குறைந்தது ஒரு தரமாவது அவர்கள் சந்தித்திருக்க வேண்டும்.
இந்த ஹதீஸிலே, சுலைமான் இப்னு புரைதா அவர்கள் தனது தந்தையிடத்திலே ஹதீஸை எடுக்கவில்லை என்று இமாம் புகாரி அவர்கள் கூறியிருக்கிறார்.
எனவே, இந்த அடிப்படையிலே இந்த ஹதீஸிலே ஒரு இடைவெளி ஒன்று ஏற்பட்டிருக்கின்றது.
அதனாலே இந்த ஹதீது இமாம் புகாரி போன்ற அறிஞர்களுடைய நிபந்தனையின் பிரகாரம் பலகீனமாகி விடுகிறது.
ஒரு வாதத்திற்காக இந்த ஹதீஸைச் 'சஹீஹ்' என்று வைத்துக்கொண்டால் கூட, அது சூதாக விளையாடுபவரைத் தான் குறிக்கும். வெறும் பொழுதுபோக்கிற்காக விளையாடுபவரைப் பன்றி இறைச்சி சாப்பிட்டவர் அளவிற்குப் பாவமாகச் சித்தரிப்பது பொருந்தாது. எனவே, 'ழயீஃப்' (பலவீனமான) ஹதீஸ் என்பதனால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
*சஹாபாக்கள் மற்றும் அறிஞர்களின் இறுதி முடிவு:*
*சஹாபாக்களின் நிலைப்பாடு:*
உஸ்மான் இப்னு அஃப்பான் ரழியல்லாஹு அன்ஹு, இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா போன்ற சஹாபாக்கள், லூடோ விளையாடுவதை சூதாட்டமாக விளையாடுவதைத்தான் வெறுத்திருக்கிறார்கள்.
சஹாபி ஸஃது ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இது குறித்துக் கேட்கப்பட்டபோது, "சூதாக இல்லாவிட்டால் பரவாயில்லை" என்று சொன்னார்கள். இமாம் ஜுஹ்ரீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) போன்ற ஹதீஸ் அறிஞர்களும், சூதாட்டம் இல்லாமல் விளையாட முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
மார்க்கச் சட்டத்தின் சுருக்கம்:
இறுதிச் சுருக்கம்:
லூடோ விளையாட்டைப் பற்றி சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், இரண்டு நிபந்தனைக்கு உட்பட்டு விளையாட முடியும்.
1. சூதாட்டத்திற்குப் பாவிக்கக் கூடாது.
2. மார்க்கக் கடமையை விடுவதற்குக் காரணமாக இருக்கக் கூடாது.
(உதாரணமாக: தொழுகையை விடும் அளவுக்கு விளையாடக்கூடாது).
இந்த இரண்டு நிபந்தனைகள் ஃபுட்பால், கேரம் போர்டு, செஸ், அல்லது இணையதள விளையாட்டுகள் உட்பட எல்லா விளையாட்டுகளுக்கும் பொருந்தும்.
காணொளி இணைப்பு: