Article by: Mujahid Ibnu Razeen
சூனியம் தொடர்பாக அல்குர்ஆனும், ஹதீதும் என்ன கூறுகின்றன என்பது பற்றி இப்பகுதியில் விரிவாகப்பார்ப்போம். அரபுமொழி அடிப்படையில் “ என்ன காரணத்தினால் ஏற்படுகின்றது என்பது பற்றி அறியமுடியாததும், அற்பமானதும், மிக இரகசியமானதுமான ஒரு விடயம்”என்று சூனியத்துக்கு விளக்கமளிக்கலாம். பேச்சிலே சூனியமிருக்கின்றது என்று நபியவர்கள் கூறியிருப்பதும் மேற்கூறியது போன்று மொழி அடிப்படையிலான சூனியத்தையே. இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட சூனியத்தை நபியவர்கள் இந்த ஹதீதில் குறிப்பிடவில்லை. ஒருவர் ஆக்ரோசமாகப் பேசும் போது அதைக்கேட்போரும் ஆக்ரோசப்படுகிறார்கள். ஒருவர் அமைதியாகப் பேசும் போது அதைக்கேட்போரும் அதே நிலையிலேயே செவிமடுக்கின்றனர். எனவே பேசுபவரின் உரையின் தன்மைக்கேட்ப அதைக்கேட்போரும் தமை அறியாமலேயே அவ்வுரைவசப்படுகிறார்கள். இதைத்தான் பேச்சிலே சூனியமுண்டு என்று நபியவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். “ஸலாத்” என்ற சொல்லுக்கு அரபு மொழியிலே பிராத்தித்தல் என்று அர்த்தமாகும். ஆனால் அல்குர்ஆனில் பல இடங்களில் வரும் ஸலாத் என்ற பதம் தொழுகையைத்தான் குறிக்கின்றது. இதைப்போலவே “ஸகாத்” என்ற சொல்லுக்கு அரபு மொழியிலே தூய்மை என்பது கருத்தாகும். ஆனால் அல்குர்ஆனில் இவ்வருத்தமில்லாது ஸகாத் கடமையைக் குறிக்கவே இச்சொல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. புரிந்து கொள்ள முடியாத, காரணமில்லாத விடயங்களுக்கு அரபியில் ஸிஹ்ர் என்று சொல்வர்.
மார்க்க அடிப்டையில் பார்க்கின்ற போது அல்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் சூனியம், அல்லது சூனியக்காரன் என்ற சொல்லைப்பயன்படுத்தியுள்ளான். சூனியத்தால் ஏதும் தாக்கங்கள் ஏற்படுமா? என்பதற்கு அப்பால் சூனியம் என்ற ஓன்று உண்டென்பதையே இது உணர்த்துகின்றது.
وَلَمَّا جَاءَهُمُ الْحَقُّ قَالُوا هَذَا سِحْرٌ وَإِنَّا بِهِ كَافِرُونَ الزخرف : 30
“அவர்களிடத்தில் உண்மை வந்த போது இது சூனியம் இதை நாம் நிராகரிக்கின்றோம் என்று இறை நிராகரிப்போர் கூறினார்கள்.(ஸுக்ரூப் : 30)
சூனியம் மனித குலத்துக்கே எதிரானதென்று ஏலவே நாம் விளங்கினோம். ஆகவேதான் காபிர்கள் இறைத்தூதர்களைப் பார்த்து நீங்கள் சூனியக்காரர்கள் நீங்கள் கூறுவது இறைசெய்தி கிடையாது நீங்கள் காட்டுவதெல்லாம் புரிந்துகொள்ள முடியாத சில அற்புதங்களைத்தான். ஆகவே நீங்கள் சொல்வதை நாங்கள் மறுக்கின்றோம் என்று கூறியதாக அல்லாஹ் மேலுள்ள வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتَابًا فِي قِرْطَاسٍ فَلَمَسُوهُ بِأَيْدِيهِمْ لَقَالَ الَّذِينَ كَفَرُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ الأنعام : 7
“காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப்பார்த்தாலும் இது வெளிப்படையான சூனியத்தைத் தவிர வேறு இல்லை என்று ஏக இறைவனை மறுப்போர் கூறியிருப்பார்கள். (அன்ஆம் : 08)
வானிலிருந்து நேரடியாகவே வேதம் இறக்கப்பட்டாலும் அதையும் இவர்கள் சூனியம் என்று கூறுவார்கள். இது செய்தானின் மிகப் பெரும் சூழ்ச்சியாகும். நபிமார்கள், அவர்களுக்கு எதிராகசூனியக்காரர்கள், அற்புதங்கள், அதற்கு எதிராக சூனியம், ஆகவே அற்புதங்களை ஏற்கமுடியாது போனதற்கு சூனியம் காரணமாகியது. அற்புதங்கள் காட்டியும் நபிமார்களை ஏற்க முடியாது போனது அவர்கள் சூனியக்காரர்களாகப் பார்க்கப்பட்டமையாகும். இது சைதானால் மனிதர்களுக்கு மத்தியில் பரப்பப்பட்ட சூழ்ச்சி என்று அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான். எனவே சூனியம் என்ற ஒன்று உன்டு என்பதற்கு இது போன்ற வசனங்கள் சான்றாகவுள்ளன. சூனியம் ஒரு மிகப்பெரும் வரலாற்றுச் செய்தி என்பதற்கு கீழே நாம் கூறவுள்ள சில செய்திகள் ஆதாரமாகவிருக்கும். இவைகள் மொழிரீதியான சூனியம் பற்றிய மொழி ரீதியான சில தகவலுக்காய்.
இரண்டாவதாக, சூனியத்தால் எந்தளவுக்கு மனிதர்களில் தாக்கம் செலுத்த முடியும் என்பதைப்பார்ப்பதற்கு முன்னர் சூனியத்தால் மனிதனுக்குக் பாதிப்பு ஏற்படுமா? அல்லது ஏற்படாதா? என்பது தொடர்பில் இஸ்லாம் என்ன கூறுகின்றது என்று தேடும் போது கீழ்வருகின்ற ஹதீதுகளை அவதானிக்க முடியும்
صحيح البخاري بابُ العَجْوَةِ 5445- حَدَّثَنَا جُمْعَةُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا مَرْوَانُ أَخْبَرَنَا هَاشِمُ بْنُ هَاشِمٍ أَخْبَرَنَا عَامِرُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ
عَجْوَةً لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ الْيَوْمِ سُمٌّ وَلَا سِحْرٌ
“தினமும் யார் ஒவ்வொரு நாள் காலையிலும் அஜ்வா வகை சேர்ந்த ஏழு பேரீத்தம் பழங்களை சாப்பிடுகின்றாரோ, அந்த நாளில் அவருக்கு நஞ்சோ, சூனியமோ பாதிப்பை ஏற்படுத்தாது.” ஆறிவிப்பவர் : ஆமிரிப்னு ஸஃத் (ரழி) ஆதாரம்: புஹாரி5445
சூனியத்துக்கும் ஒரு தாக்கமிருக்கிறது, நஞ்சுக்கும் ஒரு தாக்கமிருக்கிறது ஆனால் அஜ்வா என்ற பேரீத்தம் பழங்களை சாப்பிட்ட அந்த தினத்தில் அவற்றால் தாக்கம் செலுத்த முடியாது என்பதை இந்த ஹதீஸில் விளங்க முடிகின்றது. ஒருவர் இந்த அஜ்வா பேரீத்தம் பழங்களை சாப்பிட்டு விட்டு நஞ்சைக் குடித்தால் இவருக்கு நஞ்சு பாதிப்பை ஏற்படுத்துமா? ஏன்ற கேள்வியெழலாம். இதற்கான பதில் இந்த உரையின் கடைசிப்பகுதியான மருத்துவம் என்கின்ற பகுதியில் தெளிவுபடுத்துவேன். அந்த சந்தர்ப்பம் வரும் போது அதைப்பார்ப்போம்.
மூன்றாவதாக, சூனியம் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் அல்லாஹ் சூறதுல் பகராவில் 102ம் வசனத்தில் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்தை பதினொரு பகுதிகளாகப் பிரித்து நோக்கலாம். இப்பகுதிகளனைத்தையும் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவைக் கொண்டு இங்கு விளங்கப்படுத்தினால் சூனியம் பற்றி அல்லாஹ் கூறுவதைத் தெளிவாக விளங்கலாம். அவ்வசனங்களை ஒவ்வொன்றாக அவதானிப்போம்.
وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ 1–
“ஸுலைமானின் ஆட்சியில் செய்தான்கள் ஓதி வந்ததை இவர்கள் (யூதர்கள்) பின்பற்றினார்கள்.
இந்த வசனத்தின் அடுத்த பகுதியில் وَمَا كَفَرَ سُلَيْمَانُ ஸுலைமான் ஏக இறைவனை நிராகரிக்கவில்லை என்று அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ் ஏன் இப்படிக் கூறவேண்டும் இந்த வசனத்துக்கும் முன்னர் நாம் பார்த்த வசனத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை இங்கு கவனிப்போமானால், முதலில் ஸுலைமான் (அலை) அவர்களின் ஆட்சி எப்படியிருந்தது என்பதை அறிவது அவசியமாகின்றது. அல்லாஹ் அவரின் ஆட்சியைப் பற்றி அல்குர்ஆனில் கூறும் போது,
وَسَخَّرْنَا مَعَ دَاوُودَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ وَكُنَّا فَاعِلِينَ الأنبياء : 79 ، 80
“பறவைகளையும், மலைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். ஆவை (இறைவனைத்) துதித்தன. நாம் (எதையும்) செய்யக் கூடியவராவோம். (அல் அன்பியா: 79)
என்று ஸுலைமான் (அலை) அவர்களின் தந்தை தாவூத் (அலை) அவர்களுக்கு செய்த அருட்கொடைகளைக் கூறிக்காட்டுகின்றான். தொடர்ந்தும் அல்லாஹ் நபி ஸுலைமான் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளைப் பற்றிக் கூறும் போது,
وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا وَكُنَّا بِكُلِّ شَيْءٍ عَالِمِينَ الأنبياء : 81
“வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.(அல் அன்பியா: 81)
ஸுலைமான் (அலை) அவர்களை நபியென்று நம்பாதவன் அவர் காற்றில் பறந்து செல்வதைப் பார்த்து ‘இவரொரு சூனியக்காரர் அதனால்தான் இப்படி பறந்து போகின்றார்” என்று கூறுவான். மற்றொரு வசனத்தில்
وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّيْرِ وَأُوتِينَا مِنْ كُلِّ شَيْءٍ إِنَّ هَذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ النمل : 16
“தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார்.’மக்களே பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட்கொடையாகும். என்று அவர் கூறினார்.” (அந்நம்ல் : 16)
தொடர்ந்தும் அல்லாஹ் கூறும் போது,
وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنْسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ النمل : 17
“ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்ககாகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணிவகுக்கப்பட்டனர். “(அந்நம்ல் : 17)
حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ النمل : 18
“அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்தபோது ‘எறும்புகளே உங்கள் குடியிருப்புக்குள் நுழையுங்கள் ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக்கூடாது” என்று ஓர் எறும்பு கூறியது. (அந்நம்ல் : 18)
இது ஸுலைமான் நபியவர்களுக்குத் தெரிகிறது அவர் உடனே சிரித்தவராக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார். ஹுத் ஹுத் என்ற பறவை ஸுலைமான் நபியவர்களிடம் வந்து உங்களுக்குத் தெரியாத ஒரு செய்தியை நான் சொல்லப் போகிறேன் என்று ஸபா நாட்டு அரசியின் செய்தியைச் சொன்னதும், ‘பிரமுகர்களே அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்ததை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்? என்று ஸுலைமான் கேட்டார்.” (அந்நம்ல் : 38) “உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன், வலிமையுள்ளவன் என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது. (அந்நம்ல் : 39) தூரப் பிரதேசங்களிலிருந்து மிக அவசரமாகப் பொருட்களைச் சுமந்து வரும் ஆற்றல் ஜின்களுக்கு உண்டு என்பதை இவ்வசனத்திலிருந்து விளங்கலாம். இத்தகைய ஆற்றல் கொண்ட ஜின் வர்கத்தை அல்லாஹ் ஸுலைமான் நபியவர்களுக்கு மட்டுமே வசப்படுத்திக் கொடுத்தான். பலம்பொருந்திய இத்தகைய ஜின் வர்கத்தை அற்பமான மனிதனால் வசப்படுத்த முடியாது. قَالَ الَّذِي عِنْدَهُ عِلْمٌ مِنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَنْ يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ………. النمل : 40 ‘கண் மூடித்திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது கூறியது………” இவ்வாறு கூறியது மனிதர் ஒருவர்தான் என்று சிலர் சொல்கின்றனர். ஆனால் அதை ஏற்கமுடியாது. ஏனெனில் ஸுலைமான் (அலை) அவர்களை விட சிறந்த, இத்தகைய ஆற்றல் கொண்ட ஒருவர் அங்கு இருக்க முடியாது. ஆகவே அவ்வாறு கூறியது ஜின் ஒன்றுதான். فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا عِنْدَهُ قَالَ هَذَا مِنْ فَضْلِ رَبِّي ……….النمل : 40 “தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் ‘நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?” என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை…….” என்றார். قَالَ نَكِّرُوا لَهَا عَرْشَهَا نَنْظُرْ أَتَهْتَدِي أَمْ تَكُونُ مِنَ الَّذِينَ لَا يَهْتَدُونَ النمل :41 ‘அவளது சிம்மாசனத்தை அடையாளம் தெரியாமல் மாற்றுங்கள் அவள் கண்டுபிடிக்கிறாளா? கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறாளா எனப்பார்ப்போம்” என்றார். (அந்நம்ல் : 41) فَلَمَّا جَاءَتْ قِيلَ أَهَكَذَا عَرْشُكِ قَالَتْ كَأَنَّهُ هُوَ وَأُوتِينَا الْعِلْمَ مِنْ قَبْلِهَا وَكُنَّا مُسْلِمِينَ النمل : 42 “அவள் வந்த போது ‘உனது சிம்மாசனம் இப்படித்தான் இருக்குமா?” என்று கேட்டகப்பட்டது. ‘அது போல்தான் இருக்கிறது” என்று அவள் கூறினாள். ‘இவளுக்கு முன்பே நாம் அறிவு வழங்கப்பட்டுள்ளோம். நாம் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம். (என்று ஸுலைமான் கூறினார்.) (அந்நம்ல் : 42) பின்னர் அல்லாஹ் ஸுலைமான் (அலை) அவர்களின் மாளிகையைப் பற்றிக் கூறும் போது, قِيلَ لَهَا ادْخُلِي الصَّرْحَ فَلَمَّا رَأَتْهُ حَسِبَتْهُ لُجَّةً وَكَشَفَتْ عَنْ سَاقَيْهَا قَالَ إِنَّهُ صَرْحٌ مُمَرَّدٌ مِنْ قَوَارِيرَ النمل : 44 ‘இம்மாளிகையில் நுழைவாயாக என்று அவளிடம் கூறப்பட்டது. அதை அவள் கண்ட போது தண்ணீர்த் தடாகம் என நினைத்து, தனது கீழாடையைக் கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகை என்று அவர் கூறினார். (அந்நம்ல் : 44)
இது போன்ற மிகப்பிரமாண்டமான ஆட்சியை உலக வரலாற்றில் வேறெவரும் பெற்றிருக்கவில்லை. பெறவும் முடியாது. மேலே நாம் பார்த்தவை அனைத்தும் சூறத்துந்நம்லில் வரும் வசனங்களாகும். சூறா ஸாதிலே அல்லாஹ் ஸுலைமான் நபியவர்களின் ஆட்சி வல்லமை பற்றிக் கூறும் போது,
قَالَ رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ ص : 35
‘என் இறைவா என்னை மன்னித்து விடு எனக்குப்பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு நீயே வள்ளல்” எனக் கூறினார். (ஸாத் : 35)
இது ஸுலைமான் நபியவர்கள் கேட்ட துஆவாகும் இதை எங்களுக்குக் கேட்டகலாகாது. அல்குர்ஆனை ஓதும் போது இதை ஓதலாம். துஆவாக கேட்க முடியாது. ஏனெனில் இது ஸுலைமான் நபியவர்களுக்கு மட்டுமே உரிய துஆவாகும். அல்லாஹ் அவரின் ஆட்சியைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றான்.
فَسَخَّرْنَا لَهُ الرِّيحَ تَجْرِي بِأَمْرِهِ رُخَاءً حَيْثُ أَصَابَ ،وَالشَّيَاطِينَ كُلَّ بَنَّاءٍ وَغَوَّاصٍ ،وَآخَرِينَ مُقَرَّنِينَ فِي الْأَصْفَادِ، هَذَا عَطَاؤُنَا فَامْنُنْ أَوْ أَمْسِكْ بِغَيْرِ حِسَابٍ ص : 36 – 39
“அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு அது பணிந்து சென்றது. ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும், விலங்கிட்ட சிலரையும் வசப்படுத்திக் கொடுத்தோம். இது நமது அருட்கொடை கணக்கின்றி மற்றவருக்குக் கொடுக்கலாம் அல்லது நீரே வைத்துக் கொள்ளலாம். (ஸாத் : 36-39)
இந்த ஷெய்தான்கள் என்ன வேலைகளையெல்லாம் அவருக்குச் செய்து கொடுத்தன என்பது பற்றி அல்லாஹ் கூறும் போது,
يَعْمَلُونَ لَهُ مَا يَشَاءُ مِنْ مَحَارِيبَ وَتَمَاثِيلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُورٍ رَاسِيَاتٍ اعْمَلُوا آلَ دَاوُودَ شُكْرًا وَقَلِيلٌ مِنْ عِبَادِيَ الشَّكُورُ سبأ : 13
“அவர் விரும்பிய மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும் அவருக்காக அவை செய்தன. ‘தாவூதின் குடும்பத்தாரே நன்றியுடன் செயற்படுங்கள் எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே எள்ளனர்.” என்று கூறுகின்றான். (ஸபஉ:13)
வரலாற்றை நாம் பார்ப்போமானால், தாவூத் (அலை) அவர்களின் பரம்பரையிலிருந்து வந்தவர்களே யூதர்களும், கிறிஸ்தவர்களும். இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இஸ்ஹாக் (அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரே அவர்களிருவருமாவர். இஸ்ஹாக் (அலை) அவர்கள் சிரியாவிலும், இஸ்மாயீல் (அலை) அவர்கள் மக்காவிலும் வாழ்ந்தார்கள். இஸ்ஹாக் (அலை) அவர்களின் மகன் யஃகூப் (அலை) அவர்கள், அவரின் மகன் யூஸுப் (அலை) அவர்கள், ஸகரிய்யா (அலை) அவர்கள், யஹ்யா (அலை) அவர்கள் என ஈஸா (அலை) அவர்கள் வரைக்கும் அனைவருமே நபிமார்களாகும். ஆனால் இஸ்மாயீல் (அலை) அவர்களோடு நபிப் பரம்பரை முடிந்து விட்டது. அதனால்தான் இறுதி நபியும் எங்களிலிருந்துதான் வருவார் என்று யூத, கிறிஸ்தவர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்கள் எண்ணியதற்கு மாற்றமா இஸ்மாயீல்(அலை) அவர்களின் பரம்பரையில் இறுதி நபி வந்ததால் பொறாமையின் காரணமாக அவரை நிராகரித்தார்கள். இதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான். يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ أَبْنَاءَهُمْ البقرة : 146 “தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவர்கள்” (பகறா :146)
இத்தகைய ஒர் ஆட்சியை நாம் நினைத்துப் பார்க்கின்ற போது, காற்றில் பறக்கவேண்டும், ஜின்களை வசப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்று நமக்கும் ஆசை வரலாம். காரூனிடமிருந்த செல்வத்ததைப் பார்த்து ‘காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போல எங்களுக்கும் இருக்கக் கூடாதா?” என அக்காலத்து மக்கள் ஆசைப்பட்டதைப் போல ஸுலைமான் (அலை) அவர்களின் ஆட்சிவல்லமையைப் பார்த்தும் ஆச்சரியப்பட்டார்கள். சூனியத்தல் தான் இவர் இந்நிலையை அடைந்தார் என்று ஈமான் கொள்ளாத மக்கள் நம்பினார்கள். இந்த ஆசையை மக்களிடம் கண்ட ஷெய்தான்கள், இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ‘சூனியத்தைப் படித்தால் இந்நிலையை நீங்கள் அடைவீர்கள்” என்று மக்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். இதைத்தான் அல்லாஹ் ‘ஸுலைமானின் ஆட்சியில் ஷெய்தான்கள் ஓதி வந்ததை இவர்கள் (யூதர்கள்) பின்பற்றினார்கள். ஸுலைமான் நிராகரிக்கவில்லை” என்று சூனியத்தால் இத்தகைய அருள் ஸ{லைமான் (அலை) அவர்களுக்கு கிடைக்கவில்லை, தான் செய்த அருளினாலேயே ஸுலைமான் (அலை) அவர்களுக்கு இத்தகைய சிறப்புக்கள் கிடைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான். இதுவே وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ என்ற வசனத்துக்குரிய விளக்கமாகும்.
2. وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ البقرة : 102 மக்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷெய்தான்களே நிரகரித்துவிட்டனர்.
சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததனால் ஷெய்தான்கள் காபிர்களானார்கள் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகின்றான். ஷெய்தான் மனிதனுக்கு இலகுவில் வழிப்படமாட்டான். அவனுக்கு ஒருவன் முழுமையாகக் கட்டுபட்ட பின்பே ஷெய்தான் ஒருவனுக்கு உதவி செய்வான். ஸுலைமான் நபியவர்கள் காலத்தில் மனிதர்கள் தன்னை வணங்கும் முறைகளை ஷெய்தான் சூனியத்தை மனிதர்களுக்குக் கற்பிப்பதன் மூலம் பரப்பினான். இன்றும் கூட சில நாடுகளில் சூனியக்காரர்கள் பிடிபட்ட போது அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களைக் காணும் போது ஆச்சரியமாகவுள்ளது. சவுதி அரேபிய அரசின் ஏவல், விளக்களுக்கான அமைப்பினால் சூனியக்காரர்களைப் பிடிப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வமைப்பினால் சூனியக்காரார்களிடமிருந்து வீடியோகிளிப்புக்கள் தடயப்பொருட்கள், குர்ஆன் வசனங்கள் தலை கீழாய் எழுதப்பட்ட ஆடைகள், ஷிர்க்கான வசனங்கள் எழுதப்பட்ட ஆடைகள், சிறுநீர், மலம் போன்ற நஜீஸ்களால் துடைக்கப்பட்ட குர்ஆன் பகுதிகள், ஈய உருக்குகள் போன்ற தடயப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படுகின்றது. வித்தை காட்டுவோருக்கு எதற்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும்? ஆகவே சூனியம் எனபது வித்தையல்ல. அது மனித குலத்துக்கு விரோதமான பாதகச் செயல் என்பதாலேயே இவ்வாறு சூனியக்காரர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படுகின்றது.
இலங்கையிலும் அல்குர்ஆனை வைத்து மருத்துவம் செய்கின்ற சிலரிடமும் ஏழு கடல் மண் என்று ஒரு மூட்டையளவிற்கு மண் அகப்பட்டிருக்கின்றன. தாயத்துக் கட்டுவதற்குக் கூட பத்தியம் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இலங்கையைப் பொருத்தமட்டில் தாம் சூனியம் செய்பவர்களாகக் கூறுபவர்களில் பெரும்பாலானோர் பொய்யர்களே. அரபு நாடுகளிலிருந்து இங்கு வந்து சூனியம் செய்து விட்டு போகின்றவர்களும் உள்ளனர்.இவர்களிடமிருந்து பெறப்படும் தடயங்களைப் பார்க்கும் போது நாடுகள் வேறுபட்டாலும் இவர்களிடம் காணப்படும் பொருட்கள் ஒன்றுபட்டதாக, ஒரேமாதிரியானதாகவுள்ளன. ஆகவே சூனியம் என்றொரு உண்மையான தீங்கு விளைவிக்குங் கலை உலகில் இருக்கின்றது என்பதை இத்தரவுகள் நிரூபிக்கினறன. சிறுவர்களின் கைகளில் சதுரக் கோட்டை வரைந்து குறி பார்த்தல், நட்சத்திரங்களை வைத்துக் குறிபார்த்தல் போன்ற அனைத்துமே ஷெய்தான்களின் துணையினால் நடைபெறுபவைகளே.
இக்கலைகளை மனிதர்கள் படிப்பதை ஷெய்தான் எதிர்பார்க்கின்றான். இவற்றைப்படித்து ஒட்டுமொத்தமாகவே ஒருவன் ஷெய்தானுக்கு வழிப்பட்டு விட்டால் அவனுடைய குடும்ப வாழ்வில் நிம்மதியிருக்காது. அவனுக்குக் குழந்தை பிறக்காது, வெறிபிடித்தவனாக அலைவான், ஷெய்தான் இவனை மென்மேலும் கேவலப்படுத்துவான். மனிதனுக்கு ஷெய்தான் சேவை செய்யவோ கட்டுப்படவோ மாட்டான். அற்பமான சில விடயங்களை ஒருவனுக்குக் கொடுத்து அதன் மூலம் அவனை அடிமைப்படுத்துவான்.
3- وَمَا أُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ البقرة : 102 “(ஜிப்ரீல், மீகாயீல் எனும்) இரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்பட வில்லை.” ‘ஷெய்தான்களே மறுத்தனர்”
என்று அல்லாஹ் இவ்வசனத்தின் இதற்கு முந்திய பகுதியில் கூறிவிட்டு மக்களிடையே வெளிப்பட்டு சூனியத்தைக் கற்றுக் கொடுத்த அந்த ஷெய்தான்கள் யார் என்பதைக் கூறும் போது ஹாரூத் மாரூத் என்பவர்கனைக் கூறுகின்றான் என்பதே அகீதாவுக்கும் மிக நெருக்கமான கருத்தாகின்றது. ஏனெனில் ஸுலைமான் (அலை) அவர்களை அம்மக்கள் சூனியக்காரன் என்று எண்ணினார்கள். ஜிப்ரீல், மீகாயீல் ஆகிய மலக்குமார்களுக்கும் இம்மக்கள் எதிரானவர்கள் என்பதால் இவ்விடயத்தில் இவ்விரு மலக்குமார்களையும் சம்பந்தப்படுத்தினார்கள். ஆகவேதான் சுலைமான் நபி சூனியத்தால் அந்த பலமிக்க ஆட்சியைப் பெறவுமில்லை. அவ்விரு மலக்குமார்களுக்கும் சூனியம் அருளப்படவில்லை; என்பதை அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்.
وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ البقرة : 102 .4
‘நாங்கள் படிப்பினையாக இருக்கின்றோம். எனவே (இதைக்கற்று இறைவனை) மறுத்து விடாதே என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை.”
ஷெய்தான் மனிதர்களை வழிகேடுக்கும் போது இது போன்ற நல்ல வார்த்தைகளைச் சொல்லியே வழிகெடுக்கின்றான் என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
وَقَالَ مَا نَهَاكُمَا رَبُّكُمَا عَنْ هَذِهِ الشَّجَرَةِ إِلَّا أَنْ تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ الْخَالِدِينَ ، وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ الأعراف : 20 ، 21
இருவரும் வானவர்களாக ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத்தடை செய்யவில்லை என்று கூறினான். ‘நான் உங்கள் .ருவருக்கும் நலம் நாடுபவனே” என்று அவர்களிடம் சத்தியம் செய்தான்.
5- فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ البقرة : 102
கனவனுக்கும்,மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக்கொண்டனர்.
கணவன் மனைவிக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவது மிக இலகுவானதாகும். இருவரிடமும் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டால் போதுமாகும். ஆனாலும் இதை மனிதனுக்கு ஷெய்தான் இலகுவாய் கற்றுக்கொடுக்கமாட்டான். குப்ர் செய்யவேண்டும், சூனியத்தை முழுமையாக நம்பவேண்டும், அதற்காகக் கேவலப்படவேண்டும் இவ்வனைத்தையும் மனிதன் செய்தாலேயே சூனியத்தை மனிதனுக்குக்கற்றுக்கொடுக்கின்றான். ஒரு முறை நபியவர்கள் தனது மனைவி ஸபிய்யா(ரழி) போகும் போது இரு நபித்தோழர்கள் அதைக்காண்கிறார்கள் அவர்களைக் கண்ட நபியவர்கள் ‘இருவரும் கொஞ்சம் நில்லுங்கள”; என்று கூறிவிட்டு திரும்பி வந்து ‘அது ஸபிய்யா தான்” என்று கூறினார்கள். இதைக்கேட்ட அந்நபித்தோழர்கள்’ நபியவர்களே நாங்கள் சந்தேகம் கொள்வோமா?” என்று கேட்டார்கள் அதற்கு நபியவர்கள்’ ஷெய்தான் மனிதனின் ரத்த நாலங்களிலெல்லாம் ஓடுகின்றான்” என்று கூறினார்கள். ஒரு வாதத்துக்காக நபிவர்கள் அந்த நபித்தோழர்களிடம் இவ்வாறு சென்று, இச்செய்தியை அந்நபித்தோழர்கள் மக்களிடையே பரப்பி, அது நபியவர்களின் மனைவிமாருக்குக் கேள்விப்பட்டிருப்பின் அங்கு குடும்ப வாழ்வு சிதைவுற வாய்ப்புண்டு. நபியவர்களைப் பொருத்தமட்டில் சிந்தனையோடு செயல்படுவார்கள். நமைப்போன்றவர்களுக்கு இவ்வாறான ஒன்று ஏற்பட்டால் விளைவு மிக மோசமாகிவிடலாம்.
ஆகவே கணவன், மனைவிக்கிடையில் சந்தேகம் ஏற்படவைப்பது ஷெய்தானுக்கு பெரிய வேளை கிடையாது. ஆனால் மனிதனுக்காக அதைச்செய்ய வேண்டுமென்றால் அவனுக்கு அம்மனிதன் வழிப்பட்டு, சூனியத்தைப்படித்து, அவனிடம் கேவலப்படவேண்டும். இதையே ஷெய்தான் மனிதனிடம் எதிர்பார்க்கின்றான்.
அல்லாஹ் அல்குர்ஆனில் “ஸிஹ்ருத்தக்யீல்” என்றொருவகை சூனியத்தைக் குறிப்பிடுகின்றான். கயிரைப் போட்டு பாம்பாகத் தோற்றமுறச் செய்ததையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான். ஏனெனில் மக்கள் மத்தியில் பகிரங்கமாக வெட்டவெளியில் ‘பிர்அவ்னுடைய கன்னியத்தைக்கொண்டு” என்று கூறி அந்த சூனியக்காரர்கள் அனைவரும் ஒரே முறையில் கையிற்றை மட்டுமே மூஸா நபியவர்களுக்கு முன்னால் போட்டார்கள் அவை உடனே பாம்புகளாகக் காட்சியளித்தன. இந்த சூனியத்தால் மூஸா நபியவர்களுக்கே பயமேற்பட்டது என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆகவே இங்கு மூஸா நபியவர்களுக்கு சூனியம் பாதித்திருக்கின்றது. நபிமார்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டால் அல்லாஹ் வஹி மூலம் உதவி செய்வான். எனையவர்கள் இவ்வாறு சூனியத்தால் பாதிக்கப்பட்டால் சில வேளை தப்பலாம் அல்லது மரணித்தும் போகலாம். ஆல்லாஹ் மூஸா நபியவர்களைப்பார்த்து‘மூஸாவே நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்களே வெற்றி பெறுவீர்கள் உங்களது வலது கையில் உள்ளதைப் போடுவீராக அவர்கள் செய்தவற்றை அது விழுங்கிவிடும்” என்று கூறுகிறான்.
சூனியக்காரர்களுக்கு கையிற்றைப் பாம்பாக மாற்ற முடியாது. ஆனால் பாம்பு போல காட்ட முடியும். இந்த சூனியம் ஒருவருக்கு வைக்கப்பட்டால் பாதையில் செல்லும் பெண்ணொருவரை மனைவியாகக்காண்பான் மனைவியை மனைவியாகக்காணமாட்டான். ஏனெனில் அவனுக்கு இந்த சூனியத்தால் மாற்றிக்காட்டப்பட்டுள்ளது. எல்லாம் தலைகீழாய் தோற்றமளிப்பதுவே இந்த சூனியத்தின் பாதிப்பாகும். இதையே அல்லாஹ் மிகப்பெரும் சூனியம் என்று கூறுகின்றான். நபிமார்கள் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் தஃவா செய்தும் அந்த மக்கள் நிராகரித்தமைக்கு இந்த சூனியமே காரணம் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஏனெனில் சூனியத்தாலும் இவ்வாறு செய்யலாம் என்று நபிமார்களைப்பார்த்து அம்மக்கள் நினைத்தனர். இவை அல்குர்ஆன் நமக்குக் கூறும் செய்திகளாகும். இந்த வகை சூனியம் பற்றி நபியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
صحيح البخاري – (17 449)
– 6994 حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُخْتَارٍ حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي فَإِنَّ الشَّيْطَانَ لَا يَتَخَيَّلُ بِي وَرُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنْ النُّبُوَّةِ
யார் என்னைக் கணவில் கண்டாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் செய்தானால் என்னைப் போன்று தோற்றமளிக்க முடியாது.
அறிவிப்பவர் : அனஸ் (ரழி)
ஆதாரம் : புஹாரி
செய்தானால் நபியவர்கள் போன்று தோற்றமளிக்க முடியாது ஆனாலும் மற்றவர்களைப் போன்று தோற்றமளிக்க அவனால் முடியும் என்பதை இங்கு கவனிக்கலாம். நபியவர்கள் “ஸிஹ்ருத்தக்யீ”லால் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்கு கீழ்வரும் செய்திகள் சான்றாகின்றன.
صحيح البخاري – (8 213)
– 3175 حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى حَدَّثَنَا هِشَامٌ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُحِرَ حَتَّى كَانَ يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ صَنَعَ شَيْئًا وَلَمْ يَصْنَعْهُ
நபியவர்கள் சூனியம் செய்யப்பட்டார்கள். எந்தளவுக்கெனில் நபியவர்கள் சில வேளைகளைச் செய்ததாக நினைத்தார்கள் ஆனால் அவர்கள் செய்யவில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி)
ஆதாரம் : புஹாரி
அடுத்து வரும் பகுதியில் இந்த ஹதீஸ் தொடர்பில் தனியாகவே ஆராய்வோம்.நபிமார்கள் பலவேறு அற்புதங்களைப் புரிந்து தாம் இறைத்தூதர்களே என்பதை நிரூபிக்க முனைந்த போதெல்லாம் மக்கள் அதனை ஏற்காமைக்குக் காரணம் சூனித்தாலும் இத்தகைய அற்புதங்களை நிகழ்த்தலாம் என்று அந்த மக்கள் எண்ணியமைதான். இதை அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு விளக்குகின்றான். ஈஸா நபியவர்களைப்பற்றிக் கூறும் போது,
تُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْد وَكَهْلًا المائدة : 110
தொட்டிலிலும், இளமைப்பருவத்திலும் நீர் மக்களிடம் பேசனீர்.
وَإِذْ تَخْلُقُ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ بِإِذْنِي فَتَنْفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًا بِإِذْنِي وَتُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ بِإِذْنِي وَإِذْ تُخْرِجُ الْمَوْتَى بِإِذْنِي وَإِذْ كَفَفْتُ بَنِي إِسْرَائِيلَ عَنْكَ إِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنَاتِ فَقَالَ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ المائدة : 110
“என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி பிறவிக்குருடையும், வெண்குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப்பார்ப்பீராக இறந்தவர்களை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப்பார்ப்பீராக இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர் அப்போது “இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை” என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர்; கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப்பார்ப்பீராக.” (அல்மாயிதா : 110) என்று கூறுகின்றான்.
மூஸா நபியவர்களைப்பற்றிக் கூறும் போது,
فَأَلْقَى عَصَاهُ فَإِذَا هِيَ ثُعْبَانٌ مُبِينٌ وَنَزَعَ يَدَهُ فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ قَالَ الْمَلَأُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ إِنَّ هَذَا لَسَاحِرٌ عَلِيمٌ الأعراف : 107 – 109
“அவர் அப்போது தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. ஆவர் தனது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது. “இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். ஏன்ன கட்டளையிடப் போகிறீர்கள்?” என்று பிர்அவ்னிடம் சமுதாயப்பிரமுகர்கள் கூறினர்”. (அல்அஃராப் : 107- 109)
பின்னர் அம்மக்கள் மூஸா நபியைத் தோற்கடிப்பதற்காக அனைத்து சூனியக்காரர்களையும் ஒன்று சேர்க்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். அவ்வாறே சூனியக்காரர்கள் ஒன்று சேர்ந்து கையிறுகளைப் போடவே அவை பாம்புகளாகத் தோன்றுகின்றன. மூஸா நபியவர்கள் தனது தடியைப் போட்டதும் அது அனைத்து பாம்புகளையும் விழுங்கி விடுகின்றது. இதைக்கண்ட சூனியக்காரர்கள் வியந்து மூஸா (அலை) அவர்களை நபியாக நம்பிவிடுகிறார்கள். அப்போது அவர்களைப் பார்த்து பிர்அவ்ன்,قَالَ آمَنْتُمْ لَهُ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ طه : 71 “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பிவிட்டீர்களா?” அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத்தந்த உங்களது குருவாவார்.”எனக் கூறுகின்றான். அதாவது முஃஜிஸாக்களைக்காட்டினால் அவை சூனிமென்றே மறுக்கப்பட்டன என்பதுவே நாம் இங்கே கவனிக்க வேண்டியதாகும்.
பிர்அவ்னை 5 விடயங்களைக் கொண்டு சோதித்ததாக கூறுகின்றான்.فَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ آيَاتٍ مُفَصَّلَاتٍ فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا مُجْرِمِينَ الأعراف : 133 ، 134 “எனவே அவர்களுக்கெதிராக வெள்ளப்பெருக்கு, வெட்டுக்கிளி, போன், தவளைகள், இரத்தம் ஆகிய தெளிவான சான்றுகளை அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் புரிந்த கூட்டமாகவே இருந்தனர்”(அல்அஃராப் : 133-134)
வேறோரிடத்தில் இது பற்றி அல்லாஹ் கூறும் போது,وَمَا نُرِيهِمْ مِنْ آيَةٍ إِلَّا هِيَ أَكْبَرُ مِنْ أُخْتِهَا وَأَخَذْنَاهُمْ بِالْعَذَابِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ وَقَالُوا يَا أَيُّهَ السَّاحِرُ ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ إِنَّنَا لَمُهْتَدُونَ فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الْعَذَابَ إِذَا هُمْ يَنْكُثُونَ الزخرف : 48 – 50 “எந்தச் சான்றை நாம் அவர்களுக்குக் காட்டினாலும் அதற்கு முன் சென்றதை விட அது பெரியதாகவே இருந்தது. அவர்கள் திருந்துவதற்காக அவர்களை வேதனையால் பிடித்தோம். “சூனியக்காரரே உமது இறைவன் உம்மிடம் அளித்த வாக்குறுதி பற்றி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக நாங்கள் நேர் வழி பெறுவோம்” என்று அவர்கள் கூறினர். அவர்களை விட்டும் வேதனையை நாம் நீக்கிய போது உடனே அவர்கள் மீறுகின்றனர்”. என்று கூறுகின்றான்.
ஷெய்தான் அல்லாஹ்விடம் வாக்களித்ததை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ الحجر : 39 – 41 “அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத்தவிர அனைவரையும் வழிகெடுப்பேன்”. (அல் ஹிஜ்; : 39-41) என்று செய்தான் கூறினான். لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمَ الأعراف : 16 “அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்துகொள்வேன்” (அல்அஃராப் : 17) وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ النساء : 119 “அவர்களை வழிகெடுப்பேன். (தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்;; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்.(அந்நிஸா : 119) என்று அவன் கூறினான்.
இவை அல்லாஹ்விடம் செய்தான் போட்ட சபதமாகும். மனிதர்களை இவ்வாறு மாற்றுவதற்கு செய்தான் பயன்படுத்திய ஆயுதமே இந்த சூனியமாகும். எந்தவொரு நபி வந்தாலும் அவரைப்பார்த்து சூனியக்காரன் என்று அம்மக்கள் சொன்னதும் இதனால்தான். இதை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.وَإِنْ يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُسْتَمِرٌّ القمر : 2 “அவர்கள் சான்றைக் கண்டால் “இது தொடர்ந்து நடக்கும் சூனியம்” எனக் கூறிப் புறக்கணிக்கின்றனர்.” (அல்கமர் : 02)
كَذَلِكَ مَا أَتَى الَّذِينَ مِنْ قَبْلِهِمْ مِنْ رَسُولٍ إِلَّا قَالُوا سَاحِرٌ أَوْ مَجْنُونٌ الذاريات : 52 இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ, சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை. (தாரியாத் : 52)
அல்லாஹ் நபியெனும் போது செய்தான் அவரை சூனியக்காரன் என்றான். அல்லாஹ் முஃஜிஸா எனும் போது செய்தான் அதனை சூனியம் என்றான். இதுதான் செய்தான் அல்லாஹ்வுடன் செய்த போராட்டமாகும்.
சூனியத்தால் ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி அல்லாஹ் பேசும் போது,وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ البقرة : 102″அல்லாஹ்வின் நாட்டமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. (பகரா : 102)அல்லாஹ் நாடினாலேயே சூனியத்தால் பாதிப்பையுண்டு பன்னலாம் என்பதை அல்லாஹ் இதனூடே சுட்டிக்காட்டுகின்றான். சாப்பிட்டால் பசி போகும் என்பது விதியாகும் ஆனாலும் அல்லாஹ் நாடினால்தான் அது நடைபெறும். தாகித்தால் தண்ணீர்அருந்த வேண்டுமென்பது உலக நியதி ஆயினும் அல்லாஹ் நாடினாலேயே அது சாத்தியமாகும். இதைப்பற்றி அல்லாஹ் கூறும் போது, إِنَّمَا النَّجْوَى مِنَ الشَّيْطَانِ لِيَحْزُنَ الَّذِينَ آمَنُوا وَلَيْسَ بِضَارِّهِمْ شَيْئًا إِلَّا بِإِذْنِ اللَّهِ المجادلة : 10 “இரகசியம் போசுதல் நம்பிக்கை கொண்டோரைக் கவலை கொள்ளச் செய்வதற்காக ஷெய்தானிடமிருந்து ஏற்படுவது. அல்லாஹ்வின் நாட்டமின்றிஅவர்களுக்கு சிறிதளவும் அவனால் தீங்கிழைக்க முடியாது.”
(அல்முஜாதாலா : 10)
உண்மையில் கூட்டாக சிலர் இருக்கும் போது ஒருவரை விட்டுவிட்டு மற்றையவர்கள் ரகசியமாய் பேசும் போது தனியான அந்நபருக்குக் கவலையேற்படுவது சாதாரமானதே ஆனாலும் அதுவும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறும் என்பதே இங்கே அவதானிக்க வேண்டியதாகும்.
மற்றுமோரிடத்தில் அல்லாஹ் கூறும் போது, وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تُؤْمِنَ إِلَّا بِإِذْنِ اللَّهِ يونس : 100அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் எந்தவொரு ஆத்மாவுக்கும் ஈமான்கொள்ள முடியாது. (யூனுஸ் : 100)
அல்லாஹ் நாடினால்தானே ஈமான் கொள்ள முடியும் ஆகவே இஸ்லாத்தைத் தேடிப்படிக்க வேண்டிய அவசியமில்லை நாம் குப்ரிலேயே இருந்திருவோம் என்று மேலுள்ள வசனத்திலிருந்து விளங்க முடியாது. மாறாக மார்க்கத்தைத் தேடிப் படிக்க வேண்டும். என்றாலும் அல்லாஹ் வின் நாட்டம் இதற்கும் அவசியமாகின்றது.
சுருக்கம்
நோய்கள் உண்டாவதற்கு உலகில் சில காரணங்களை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருப்பது போல சூனியமும் சில பாதிப்புக்களை ஏற்படுத்துவதற்கான காரணமாக அமைகின்றது. அதுவும் அல்லாஹ் நாடினாலேயே நடைபெறுகின்றது. அல்லாஹ் நாடாவிட்டால் எந்தப்பெரும் சூனியத்தாலும் தாக்கம் செலுத்த முடியாது. மேலே கூறப்பட்ட தரவுகளைப்படிக்கும் போது சூனியத்துக்கென தனியான வரலாறொன்று உண்டென்ற முடிவுக்கு வரலாம். மனிதர்களை வழிகெடுப்பதற்காக ஷெய்தான் இறுதியாகப் பயன்படுத்தும் மிகப்பெரும் சூனியக்காரனே தஜ்ஜாலாகும். தஜ்ஜால் பல அற்புதங்கயைப் புரிவான் அதற்கு ஷெய்தான் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவான். துங்கம் வெள்ளிகளெல்லாம் தஜ்ஜாலின் கைகளிலிருக்கும். இன்றைக்குள்ள தொழிநுட்பத்தால் மனிதனால் மழையைப் பொழிய வைக்க முடிகிறதெனில் ஷெய்தானுக்கு இதுவொன்றும் பெரிதல்ல. ஷெய்தானின் ஆற்றலைப்பற்றி அல்லாஹ் கூறும் போது அவர்கள் வானத்தின் எல்லை வரைசெல்வார்கள் என்று சொல்கிறான். செய்தான்களின் உதவியிருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டப்படியே இவையும் சாத்தியமாகின்றன. இந்த தஜ்ஜாலை அதிகமாக நம்புகின்றவர்களாக பெண்களே இருப்பார்கள். இதற்குப்பயந்து ஆண்களெல்லாம் தமது பொறுப்பிலிருக்கும் பெண்களைக் கட்டிவைப்பார்கள் என்று நபியவர்கள் கூறினார்கள். சூனியக்காரர்களுக்குப்பின்னால் கூடுதலாகச் செல்பவர்கள் பெண்கள்தான் என்பதை இன்றைக்கும் நாம் பார்க்கின்றோம். ஆகவே சாரம்சமாகக் கூறுவதானால் உலகில் ஏனைய நோய்களுக்கு சில காரணங்கள் இருப்பது போல சூனியமும் சில நோய்களுக்கு காரணமாகின்றது. ஆனால் இதற்கு சடரீதியில் மருத்துவம் கிடையாது. ஆண்மீகத்தின் மூலமே வைத்தியம் செய்யலாம். இதற்கும் ஒரு மருத்துவத்தை செய்தான் ஏற்படுத்தி விட்டான். சூனியத்தை சூனியத்தால் எடுப்பது என்பதே அதுவாகும். ஆனால் அல்குர்ஆன் மூலம் செய்யப்படும் மருத்துவமே இதற்கு உகந்ததும் சிறந்ததுமாகும்.