உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர், துல் கஃதா மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்த பிறகு அல்லது துல்ஹஜ் மாதம் முதல் பிறை தென்பட்டதிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக்கூடாது.
“நீங்கள் உழ்ஹிய்யா கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் உழ்ஹிய்யா கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
{அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)}
{நூல்: முஸ்லிம்- 5234}
10 நாட்களுக்கு இடையில் உழ்ஹிய்யா கொடுப்பதாக ஒருவர் நிய்யத் வைத்தால் அப்போதிலிருந்து கொடுக்கும் வரை நகம், முடி இவற்றை வெட்டக்கூடாது.
இதற்கு முன் அவர் வெட்டி இருந்தால் அவர் மீது குற்றமில்லை அவரும் உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம்.
ஊரில் உழ்ஹிய்யா கொடுப்பவர் ஹஜ்ஜிலே பங்கெடுப்பவராக இருந்தால் இந்த பத்து நாட்களில் முடிகளையோ, நகங்களையோ வெட்டக்கூடாது என்ற சட்டத்திலிருந்து விதிவிலக்கு பெறுகிறார்.
காரணம் ஹஜ் அல்லது உம்ராவிற்காக இஹ்ராமில் பிரவேசிப்பவர் அதற்கு முன்பாக நகங்களையும் மறைவிடத்தில் உள்ள முடிகளையும் அகற்றுவது சுன்னத்தாக்கப்பட்டுள்ளது.
ஹஜ்ஜுத் தமத்துவை நிறைவேற்றும் ஒருவர் உம்ராவை நிறைவேற்றியவுடன் தலைமுடி முழுவதையும் முழுமையாக கத்தரித்தாலே இஹ்ராமிலிருந்து வெளியேற முடியும்.
தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம் என்ற இந்த சட்டம் உழ்ஹிய்யா கொடுக்கும் நபருக்கு மட்டும் உரித்தானது.
இச்சட்டம் அவருடைய குடும்பத்தார்களையோ, உறவினர்களையோ, ஒருவரின் உழ்ஹிய்யாவை கொடுப்பதற்கு பொறுப்பேற்றவரையோ உள்ளடக்காது.
உழ்ஹிய்யா கொடுக்கும் ஒருவர் தனது நகத்தையோ, முடியையோ எடுத்தால் அவர் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடவேண்டும். மீண்டும் அவர் இவ்வாறு செய்யக் கூடாது. இதற்கு எந்தப் பரிகாரமும் இல்லை. அவர் தனது உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதில் தடையேதுமில்லை.
உழ்ஹிய்யா கொடுக்கும் ஒருவர் மறதியாலோ, நகங்களை, முடிகளை எடுக்க கூடாது என்ற சட்டத்தை தெரியாமலோ, அல்லது தானாக முடி கொட்டி விட்டாலோ அவர் மீது குற்றமில்லை. அவரும் தனது உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம்.
கையின் நகம் உடைந்து தொங்கிக் கொண்டு வலியை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அல்லது அறுவைசிகிட்ச்சை செய்வதற்காகவோ காயத்தை குணப்ப டுத்துவதற்காகவோ நகம், முடியை வெட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்ற நிர்பந்த நிலையில் நகத்தை முடியை வெட்டுவது அனுமதிக்கப்பட்டதே! இவரும் உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம்.
தொகுப்பு: யாஸிர் ஃபிர்தௌசி
அல்ஜுபைல் தஃவா நிலையம்,
சவூதி அரேபியா.