உறவுமுறைத் திருமணங்களும் மரபணுப் பாதிப்புகளும்: இஸ்லாம் ஏன் இதனைத் தடை செய்யவில்லை?

மருத்துவக் கல்லூரியின் நவீன ஆய்வகங்களுக்கும், ஆன்மீகத் தேடலுக்கும் இடையே ஒரு மாணவர் ஊசலாடிக்கொண்டிருக்கிறார். மரபணுவியல் (Genetics) பாடத்தைக் கற்கும் அவருக்கு, நெருங்கிய உறவினர்களுக்குள் நடக்கும் திருமணங்கள் மரபணுப் பாதிப்புகளை (Autosomal Recessive Disorders) உருவாக்கும் என்ற அறிவியல் உண்மை ஒரு பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. "இஸ்லாம் ஏன் இத்தகைய பாதிப்புகள் சாத்தியமான ஒரு வாசலைத் திறந்து வைத்துள்ளது? இது அறிவியலுக்கு முரணானதல்லவா?" என்ற கேள்வி அவரது மன அமைதியை மெல்ல மெல்லச் சிதைக்கிறது.

இந்தத் தடுமாற்றம் அந்த மாணவருக்கு மட்டுமல்ல, நவீன அறிவியல் யுகத்தில் வாழும் பலருக்கும் ஏற்படக்கூடியதே. ஒரு நம்பிக்கையாளரின் ஈமான் என்பது, தெளிவற்ற சந்தேகங்களை தெளிவான மற்றும் உறுதியான அடிப்படைகளை நோக்கித் திருப்புவதில்தான் அடங்கியுள்ளது. இஸ்லாமியச் சட்டவியலையும், மருத்துவத் தரவுகளையும் ஒருசேர ஆராயும்போது, இந்த விவகாரத்தில் உள்ள ஆழமான சட்டவாக்க ஞானத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

- புள்ளிவிவரத் தரவுகளின் பகுப்பாய்வு: ஆபத்து உண்மையில் எந்தளவுக்குக் காணப்படுகிறது?

உறவுமுறைத் திருமணங்கள் குறித்த விவாதங்களில் உணர்ச்சிகளை விடவும், தொற்றுநோயியல் தரவுகளின் (Epidemiological data) துல்லியமான பகுப்பாய்வே முக்கியமானது. "Genetics in Medicine" என்ற புகழ்பெற்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையின்படி, முதல்முறை உறவினர்களுக்கு (First Cousins) இடையே நடக்கும் திருமணங்களில் மரபணு நோய்கள் ஏற்படுவதற்கான கூடுதல் வாய்ப்பு என்பது 1.7% முதல் 2.8% வரை மட்டுமே. அதாவது, பொதுவான மக்கள்தொகையில் இருக்கும் இயல்பான இடர்ப்பாட்டை விட இது வெறும் 3 சதவீதத்திற்கும் குறைவான அதிகரிப்பு மட்டுமேயாகும்.

இதனை நேர்மறையான கோணத்தில் பார்த்தால், உறவுமுறைத் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளில் 97% சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் எவ்விதமான மரபணுப் பாதிப்புகளுமின்றி, முற்றிலும் ஆரோக்கியமாகவே பிறக்கிறார்கள். மிகச் சிறிய அளவிலான ஒரு புள்ளிவிவர அதிகரிப்பைச் சுட்டிக்காட்டி, ஒரு மாபெரும் சமூக நடைமுறையைத் தடை செய்வது என்பது அறிவியல்பூர்வமான அணுகுமுறையல்ல.

- சட்டவாக்க ஞானமும் எல்லையற்ற கட்டுப்பாடுகளும்

சிறு ஆபத்துகள் இருக்கும் காரணத்திற்காக ஒரு காரியத்தைத் தடை செய்வது ஏன் சரியான சட்ட அணுகுமுறை அல்ல என்பதை நாம் தர்க்கரீதியாகப் பார்க்க வேண்டும். இதனை 'சட்டவாக்க ஞானம்' என்று நாம் அழைக்கிறோம்.

இங்கு ஒரு முக்கியமான தர்க்கக் கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்: "ஆபத்து இருக்கிறது என்பதற்காகத் தடை செய்வதென்றால், அந்த ஆபத்தின் எல்லை எது?" 2% இடர்ப்பாட்டிற்காக ஒரு திருமணத்தைத் தடை செய்ய வேண்டும் என்றால், 1% அல்லது 0.5% இடர்ப்பாடு உள்ள திருமணங்களையும் ஏன் தடை செய்யக்கூடாது? உண்மையில், எல்லாத் திருமணங்களிலும் ஏதோ ஒரு சிறிய சதவீதப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த தர்க்கத்தைப் பின்பற்றினால், நாம் திருமண முறையையே தடை செய்ய வேண்டியிருக்கும்.

மேலும் சில நடைமுறை உதாரணங்களைக் கவனியுங்கள்:

√ வயது முதிர்ந்த காலக் கர்ப்பம்: 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கருத்தரிக்கும்போது டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதற்காக அத்தகைய பெண்கள் கருத்தரிக்கக் கூடாது எனச் சட்டம் இயற்றுவது முறையல்ல.

✓ தொழில் மற்றும் பயணம்: மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்குத் தொற்றுநோய்கள் (Infections) பரவ வாய்ப்புள்ளது; வாகனங்களில் செல்லும்போது விபத்துகள் ஏற்படலாம். இந்தச் சிறு ஆபத்துகளுக்காக அந்தத் தொழில்களையோ அல்லது பயணங்களையோ நாம் தடை செய்வதில்லை.

இஸ்லாமியச் சட்டம் என்பது 'பெரும்பாலான நன்மைகளை' (Prevailing Benefit) அடிப்படையாகக் கொண்டது. ஒரு சிறிய இடர்ப்பாட்டிற்காக (Minimal Risk), ஒரு செயலில் உள்ள மகத்தான நன்மைகளைத் தடுப்பது மனித வாழ்வியலைச் சிதைத்துவிடும்.

- சமூக மற்றும் மனிதாபிமானப் பரிமாணங்கள்

இஸ்லாம் உறவுமுறைத் திருமணங்களை அனுமதிப்பதில் உள்ள சமூகப் பின்னணிகள் மகத்தானவை:

√ மனிதாபிமானப் பாதுகாப்பு: தந்தை இழந்த அநாதைப் பெண்கள் அல்லது விதவைகளை அவர்களின் நெருங்கிய உறவினர்கள் (உதாரணமாகப் பெரியப்பா அல்லது சித்தப்பா மகன்கள்) திருமணம் செய்துகொள்ளும்போது, அந்தப் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான அரணும், கண்ணியமான வாழ்வும் கிடைக்கிறது. இது வெறும் உணர்ச்சி சார்ந்த முடிவல்ல, ஒரு சமூகக் கட்டமைப்பு சீர்குலையாமல் தடுக்கும் வழியாகும்.

√ புவியியல் சூழல்: உலகின் பல பகுதிகளில் மலைவாழ் மக்கள், நாடோடிகள் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட சிறு சமூகங்கள் வாழ்கின்றனர். அத்தகைய சூழலில் அந்நியர்களைத் தேடிச் செல்வது நடைமுறையில் சாத்தியமற்றது. அவர்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள இந்த அனுமதி நடைமுறை சிக்கல்களை இல்லாமல் ஆக்குகிறது.

√ இயல்பான உணர்வுகள்: உறவினர்களுக்கு இடையே இயல்பாக ஏற்படும் ஈர்ப்பு மற்றும் பாசத்தை மதிக்காமல், அதைச் சட்ட ரீதியாகத் தடுப்பது மனித உணர்வுகளுக்கு எதிரான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும்.

-அனுமதி என்பது கட்டாயம் அல்ல

இங்கு நாம் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், இஸ்லாம் உறவுமுறைத் திருமணத்தை 'அனுமதித்துள்ளது': அதை 'கட்டாயமாக்கவில்லை'. அனுமதி என்பது ஊக்கப்படுத்துதல் என்று பொருளல்ல.

இஸ்லாமியப் பேரறிஞர்கள் மற்றும் முன்னோடிகள் சந்ததியினரின் ஆரோக்கியம் மற்றும் மரபணுப் பல்வகைமையின் (Genetic Diversity) முக்கியத்துவத்தை உணர்ந்தே இருந்தனர். 

இமாம் ஷாஃபி அவர்கள் குறிப்பிடும்போது, "ஒரு குடும்பத்தினர் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ளும்போது, அது சந்ததியினரின் அறிவாற்றலைப் பலவீனப்படுத்தக்கூடும்" என்று எச்சரித்துள்ளார்.

உமர் (ரழி) அவர்கள் ஸாயிப் குடும்பத்தாரைக் குறித்துக் கூறும்போது வழங்கிய வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது:

"உங்கள் சந்ததியினர் பலவீனமடையாமல் இருக்க, தூரத்து உறவுகளில் அல்லது அந்நியர்களிடம் திருமணம் செய்யுங்கள்."

ஆகவே, மார்க்கம் வழங்கிய அனுமதியைப் பேணிக்கொண்டே, அறிவியல்பூர்வமான விழிப்புணர்வுடன் வெளியூர்களில் திருமணம் செய்வதை இஸ்லாம் எப்போதும் திறந்தே வைத்துள்ளது.

- நவீன மருத்துவப் பரிசோதனைகளும் இஸ்லாமிய நெகிழ்வுத்தன்மையும்

இன்று நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் திருமணத்திற்கு முந்தைய மரபணுப் பரிசோதனைகள் (Genetic Counseling) சாத்தியமாகியுள்ளன. இஸ்லாம் 'காரண காரியங்களைக் கவனித்தல்' என்ற அடிப்படையில் இத்தகைய மருத்துவ ஆலோசனைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை எதிர்க்கவில்லை.

ஒரு குடும்பத்தில் மரபணு நோய்கள் இருப்பதாகத் தெரிந்தால், அந்தத் தகவலைக் கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் முடிவெடுப்பது இஸ்லாமிய நெறிமுறைக்கு உட்பட்டதே. தொழில்நுட்பம் மாறினாலும் இஸ்லாமியச் சட்டத்தின் அடிப்படை விதிகள் மாறாது; ஆனால் அந்தச் சட்டங்களைப் பின்பற்றும் மனிதர்கள் காலத்திற்குத் தேவையான அறிவியல் கருவிகளைப் பயன்படுத்திக் கொள்வதை மார்க்கம் தடுக்கவில்லை.

அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பவை அவ்வப்போது மாறும் தரவுகளின் தொகுப்பு. ஆனால், இறைவனின் சட்டங்கள் காலத்தையும் இடத்தையும் கடந்து மனித குலத்திற்கு வழிகாட்டுபவை. நமது இறைநம்பிக்கை என்பது ஒரு மேசையைப் போன்றது; அதன் கால்கள் உறுதியானதாக இல்லாவிட்டால், சிறு சிறு சந்தேகக் காற்றுகள் வீசும்போது கூட அது ஆட்டம் காணும்.

இந்த உலகம் ஒரு சோதனைக்களம். பிறப்பு, இறப்பு, நோய் மற்றும் ஆரோக்கியம் அனைத்தும் இறைவனின் நாட்டம் மற்றும் அவனது எல்லையற்ற ஞானத்திற்கு உட்பட்டே நிகழ்கின்றன. ஒரு குழந்தை பாதிப்புடன் பிறப்பது என்பது பெற்றோர்களுக்கான ஒரு சோதனையேயன்றி, அது மார்க்கச் சட்டத்தின் தோல்வியல்ல.

புள்ளிவிவரங்களும் தர்க்கங்களும் நமக்கு உணர்த்துவது ஒன்றே‌, இஸ்லாமியச் சட்டங்கள் மனிதர்களின் இயல்பையும், சமூகத் தேவைகளையும் கருத்தில் கொண்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இறுதியாக நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான்: "நம்மிடம் இருக்கும் அறிவியல் அறிவு, படைத்தவனின் ஞானத்தை அங்கீகரிக்க உதவுகிறதா? அல்லது நமது ஈமானின் அடித்தளத்தையே கேள்விக்குள்ளாக்குகிறதா?" சிந்தனையுள்ளவர்களுக்கு இதில் தெளிவான சான்றுகள் உள்ளன.

-டாக்டர் இயாத் அல்குனைபி-
أحدث أقدم