-அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி
அண்மைக்காலமாக சிலர் சந்தையில் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் எனக் கூறிக்கொண்டு பல மாதங்களுக்கான பொருட்களைக் கொள்வனவு செய்து சேமிக்க முயற்சிக்கின்றனர். சிலர் ஒரு படி மேலே சென்று மற்றவர்களும் இந்த முறையைக் கடைபிடிக்குமாறு புத்திமதி கூறி அதுவே மார்க்கக் கடமை என்பது போன்று சித்தரிக்க முனைவதைப் பார்த்து வருகின்றோம்.
நாம் விற்பனை செய்வதற்காக சேகரிக்கவில்லை என்பதனால் அது பதுக்கலில் உள்ளடங்காது என அதற்கு நியாயம் வேறு கூறுவதோடு யூஸுப் அலை அவர்கள் பஞ்சம் ஏற்படுவதற்கு அஞ்சி பொருட்களைக் களஞ்சியப்படுத்தியதையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர்.
உண்மையில் பல மாதங்களுக்குரிய உணவைச் சேகரித்து வைத்துக்கொள்வதை இஸ்லாம் தடைசெய்யவில்லை. நபியவர்கள் கூட தனது குடும்பத்துக்குரிய ஒரு வருட உணவை சேகரித்து வைத்துள்ளார்கள்.
ஆனால் தற்போதைய இலங்கைச் சூழலைப் பொருத்த வரை இந்த வாதம் தவறானதாகும். ஏனெனில் நபியவர்களும் யூஸுப் அலை அவர்களும் சேகரித்தது சாதாரண சூழ்நிலையில். ஆனால் அன்றாடம் தேவைப்படும் பொருட்களுக்கே பெரும் தட்டுப்பாடு நிலவும் நெருக்கடியான இலங்கைச் சூழலில் நாம் இவ்வாறு பல மாதங்களுக்குரிய பொருட்களைச் சேகரிக்க ஆரம்பித்தால் அதன் மூலம் பலரும் குறிப்பாக ஏழைகள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகுவர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
உள்ஹிய்யா மாமிசத்தை எவ்வளவு நாட்களுக்கு வேண்டுமானாலும் சேமித்து வைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியிருந்த போதும் நபி ஸல் அவர்கள் ஒரு முறை பஞ்சம் நிலவிய போது மூன்று நாட்களுக்கு அதிகமாக சேமிப்பதைத் தடைசெய்தார்கள். (புகாரி 5423)
ஆகவே சாதாரண சூழ்நிலையில் பல மாதங்களுக்குச் சேமித்து வைக்க முடியுமென்றாலும் அசாதாரண சூழ்நிலைகளில் அவ்வாறு செய்வதனால் பாதிப்பு ஏற்படுவதனால் அது தடுக்கப்பட்டதாகும். எனவே சாதாரண நிலமைகளின் போது அனுமதிக்கபட்டவற்றை அசாதாரண சூழ்நிலையிலும் நடைமுறைப்படுத்த முனைவது பெரும் தவறாகும்.
நபியவர்கள் ஒரு வருடத்திற்குரிய உணவை சேமித்ததாக இடம்பெறும் நபி மொழிக்கு விரிவுரை வழங்கிய இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் அவ்வாறு சேமிப்பதில் நிலவும் கருத்து வேற்றுமையைக் குறிப்பிட்டு விட்டு, இக்கருத்து வேற்றுமை நெருக்கடியற்ற சந்தர்ப்பத்தில்தான். ஆனால் நெருக்கடி நிலவினால் சேமிப்பது அறவே கூடாது எனக் குறிப்பிடுகின்றார்கள்.
கோவிட் 19 பரவலின் போது அமெரிக்க பத்வா நிறுவனத்திடம் ஊரடங்குச் சட்டத்தினால் கடைகள் மூடப்படும் என்ற அச்சத்தில் பொருட்களைச் அதிகமாகக் கொள்வனவு செய்து சேமிக்க முடியுமா? என பத்வா வினவப்பட்டது. அதற்க அவர்கள் பொருட்களுக்குத் தட்டுபாடு நிலவுமானால் அது கூடாது, அது தடைசெய்யப்பட்ட பதுக்கல் வகைகளில் ஒன்றாகும் என்பதையும் சட்டிக்காட்டியுள்ளனர். எனவே விலை கூட்டி விற்பதற்காக சேகரிப்பது மாத்திரமே பதுக்கலில் வரும் என்ற வாதமும் தவறாகும். மாறாக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து விதமான சேமிப்புக்களும் ஒரு வகை பதுக்கலே.
சவூதி அரேபியாவின் பத்வா நிறுவனமும் மக்களுக்கு தீங்கு ஏற்படும் வகையில் பொருட்களைச் சேகரிக்கக் கூடாது என்றே பத்வா வழங்கியுள்ளனர்.
அரசாங்கம் குறிப்பிட்ட அளவு பொருட்களுக்கு அதிகமாக கொள்வனவு செய்து சேமிப்பதைத் தடை செய்தால் அதற்குக் கட்டுப்பட வேண்டும். அவ்வாறு ஒரு சட்டம் இல்லாத போது நமது மனச்சாட்சிக்கு விரோதமில்லாதவாறு மற்றவர்களின் தேவைகளையும் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும்.
மேற்கூறிய பத்வாவின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.