சங்கைமிக்க அல் குர்ஆனிலும் இறைத் தூதரின் தெளிவான பொன் மொழிகளிலும் விபரிக்கப்பட்டுள்ள உயர்வான அல்லாஹ், மற்றும் அவனது அழகிய பெயர்கள், உயரிய அவனது பண்புகளோடு இறைத்தூதர்களின் வழியில் காலம் காலமாக அடிப்படைக் கொள்கையாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த அகீதா கோட்பாட்டை சிதைக்கின்ற கோட்பாடே அனைத்தும் அவனே கோட்பாடாகும்.
"உண்மையாக வணங்கி வழிபடத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை" என்ற பொருளில் அமைந்துள்ள தூய துதிச் சொல்லான கலிமாவானது உள்ளத்தால் நம்பி நாவினால் மொழியப்படும் அழகிய வார்த்தையாகவும் உலகில் அதி சிறந்த வார்த்தையாகவும் படைப்பாளனையும் படைப்புக்களையும் பிரித்து நோக்கும் அடிப்படை நம்பிக்கை கோட்பாட்டை உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றது.
அத்வைதிகள் அதனை தலைகீழாக மாற்றியது மாத்திமின்றி, ஆதம் நபி முதல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரை வந்த நபிமார்களும் உலக முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ளாத அல்லாஹ் தவிர இல்லை; அவனே அனைத்தும்; அனைத்தும், அவனது வெளிப்பாடே போன்ற முத்திய நாத்திக கோட்பாடாகவே
وحدة الوجود
என்ற வழிகேட்டுக் கோட்பாடு விளங்குகின்றது.
அத்வைதம், சூஃபிய ஞானம் போன்ற பெயரில் கீர்த்தியும் மகத்துவமும் நிறைந்த படைப்புகளுக்கு ஒப்பிட முடியாத அல்லாஹ்வை குரங்காக, பன்றியாக, நாயாக, கருப்பு வெள்ளை மனிதனாக, பிற மத கடவுளர்களாக நீண்ட மனிதனாக, குட்டை மனிதனாக எதுவாகவும் அவனை முடிவு செய்யலாம் எனப் போதிக்கப்படும் "எல்லாம் அவனே" வழிகேட்டுக் கோட்பாட்டைச் சரி காண்பது, போதிப்பது வழிகெட்ட ஓரிருவரின் கருத்தாக இருந்தாலும் அதில் உள்ள தெளிவான முரண்பாடுகள் பற்றி நாம் அறிந்திருப்பது காலத்தின் கட்டாயமாகும்.
அல்லாஹ் பற்றிய வஹ்ததுல் உஜூதிகளின் முக்கிய சில நம்பிக்கைகள் ?
எல்லாமாகவும் வெளியாகி இருப்பவன் அவன்தான்.
வானமாக, பூமியாக, கடலாக, குளமாக, சமுத்திரமாக அனைத்துமாக மட்டுமின்றி,
தேரை, தவளை, எறும்புகள் போன்ற படைப்புகள் உட்பட எதுவாகவும் அவனைக் கற்பனை செய்யலாம்.
அனைத்தும் அவனது வெளிப்பாடுகளே.
نعوذ بالله منها.
மேற்படி வழிகேட்டை நியாயப்படுத்த பின்வரும் ஹதீஸ் குத்ஸி தலைகீழாக விளக்கப்பட்டு பலியாக்கப்பட்டுள்ளது என்பதுதான் ஆச்சரியமான உண்மை.
حديث أنا عند ظن عبدي بي
எனது அடியான் என்னை நினைக்கும் இடத்தில் நான் இருப்பேன் என்ற ஹதீஸே அந்த ஹதீஸாகும். (புகாரி, முஸ்லிம்).
அல்லாஹ்வை அவனது படைப்புகளில் ஒன்றாக கூறப்படும் பொய்யை நியாயப்படுத்த புகாரியில் இடம் பெறாத
وليظن بي ما شاء
"என்னை அவன் விரும்பியவாறு எண்ணிக் கொள்ளவும்" என்ற அறிவிப்பை புகாரியில் இடம் பெற்றதாகக் கூறி வேறு பொய்யுரைப்பர் இந்த மேதைகள்.
அல்லாஹ்வை தரக்குறைவாகப் பேசி அவன் மீது அப்பட்டமான பொய்யுரைப்போருக்கு ஹதீஸில் விளையாடுவதை சொல்லிக் கொடுக்க வா வேண்டும்.
விளக்கம்
----
மேற்படி ஹதீஸில் எனது அடியான் நினைப்பது போல நான் என்னை மாற்றிக் கொள்வேன் என்றோ, அல்லது மாற்றுவேன் என்றோ, வெளிப்பாடாக மாறுவேன் என்றோ எந்த விதமான சொற் பிரயோகமும் அதில் இடம் பெறாமல் இருக்க மேற்படி பொருள் தருவது அரபு நடை, போக்கு அதன் பொருள் பற்றிய அறியாமையும் வடி கட்டிய முட்டாள்தனமுமாகும்.
ஏனெனில் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ் அனைத்தும் என்றோ, அனைத்துமாக அவன் என்றோ எங்கும் போதிக்கவில்லை. நபித்தோழர்களும் அவ்வாறு போதிக்கவில்லை. அவ்வாறில்லாத போது அது வழிகெட்ட விளக்கமாகவே கொள்ளப்படும்.
அத்துடன் எனது இரட்சகன் என்னோடு இருக்கின்றான் என்பது ஒரு அடியானோடு அல்லாஹ் பக்க பலமாக இருக்கின்றான் என்பதை விளக்கவே அவ்வாறான சொற்பிரயோகங்கள் இடம் பெறுவதுண்டு.
அப்படி நோக்குகின்ற போது எனது அடியான் தான் செய்த நற்கருமங்களுக்காக என்னை மன்னிப்பவனாக, கருணை காட்டுபவனாக நினைத்தால் அவனது எண்ணத்திற்கு அமைவாக நான் நடந்து கொள்வேன், எனவே அவன் செய்த நன்மைக்காக என்னை அவன் அன்புகாட்டுபவனாகவோ, தீமைக்காக தண்டிப்பவனாகவோ எண்ணிக் கொள்ளட்டும்
என்ற பொருளைத் தவிர வேறு எந்த பொருளும் கிடையாது என்பதே இதன் விளக்கமாகும் .
இதுவே அல்லாஹ்வின் தூய்மையைக் காக்கும் விளக்கமாகும்.
அதனை விடுத்து மகத்துவமிக்க அல்லாஹ்வை அவனது தகுதிக்கு அமைவாக கண்ணியப்படுத்துவதையும் புறம் தள்ளி விட்டு,
யா சுப்ஹானல்லாஹ்!!! அன்பாளனாகிய, உயர்வான அல்லாஹ்வை
உயரமான மனிதனாக நெட்டையானவனாக, குட்டையானவனாக, கருப்பு மனிதனாக, மழிக்காத மீசை வைத்த ஆணாக, எதுவாக நினைத்தாலும் அவனும் அல்லாஹ்தான் என தாராளமாகக் கூறலாம் என அகிலத்தை ஆட்சி செய்யும் இரட்சகனைப் பற்றி ஒருவன் உழறினால் அவனை எந்த வைத்தியசாலையில் சேர்ப்பது என சிந்திக்க வேண்டும்?
நாம் தொழுகையில் தினம் தினம் ஓடுகின்ற
الحمد لله رب العالمين.
அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே புகழ்யாவும் சொந்தமானது என்ற வாசகத்தில் இடம் பெறும் "ஆலம்" عالم என்ற சொல்லுக்கு
كل من سوى الله عالم
அல்லாஹ் தவிர்ந்த அனைத்தும் -ஆலம்- உலகம் என குர்ஆனிய அறிஞர்கள் விளக்கம் கூறுவார்கள்.
இதன் மூலம் அல்லாஹ் தனது படைப்புகளில் இருந்து வேறானவன் என்பது புலனாகும்.
அல்லாஹ் படைத்த மனிதனே மற்ற மனிதனோடு ஒப்பாகவில்லை எனும் போது அவனை அவனது படைப்புகளோடு ஒப்பற்ற அந்த அல்லாஹ்வை எப்படி ஒப்பாக்க முடியும் என சிந்திக்க வேண்டும்.
وقال في «السير» «٩/ ٢٧»:
قال نعيم بن حماد: مَن شَبَّهَ اللهُ بِخَلْقِهِ، فَقَدْ كَفَرَ،
அல்லாஹ்வை யார் அவனது படைப்புகளுக்கு ஒப்பாக்கினானோ நிச்சயமாக அவன் நிராகரித்து விட்டான் என; இமாம் புகாரியின் ஆசிரியரான ஹம்மாத் பின் ஸைத் ரஹி அவர்கள் குறிப்பிட்டடுள்ளதாக இமாம் தஹபி ரஹி அவர்கள் தனது ஸயரில் பதிவு செய்துள்ளார்கள்.
இறைத் தூதரின் வழி வந்த மாமேதைகள், இமாம்கள் ஏற்றுக் கொண்ட கலிமாவின் பொருளான "உண்மையாக வணங்கி வழிபடத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை" என்ற ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளைப் புறம் தள்ளி விட்டு, அல்லாஹ் அன்றி இல்லை என்ற தனது இறுதி நேரத்தில் தவ்பாச் செய்த இமாம் ராஸி மற்றும் சில
அத்வைதிகளின் வழிகெட்ட கருத்தை முன்னிலைப்படுத்தி தூய திருக் கலிமாவின் பொருளை சிதைத்து தமது வழிகேட்டை நிறுவ சில குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரமாக்கி, அவற்றின் பொருள்களையும் திரிவுபடுத்தி, இந்திய மதங்கள் சிலவற்றின் சிந்தனையில் உள்ள கோட்பாட்டை பிற்காலத்தில்
முத்திய நாத்தீக சிந்தனை கொண்டோரால் இஸ்லாமிய சிந்தனையாக தோற்றுவிக்கப்பட்டதே அத்வைத கோட்பாடு என்பது தெளிவு.
والله أعلم .
அரபியில் إله க்கு அத்வைதிகளால் தரப்படும் பொருள் சரியானதா ?
---------
“இலாஹ் إله” என்ற அரபு வார்த்தை أله "அலிஹ" என்ற இறந்த காலச் வினைச் சொல்லில் இருந்து பிறந்த ஒரு பொதுப் பெயர்ச் சொல்லாகும். அது அரபி மொழி இலக்கணத்தில் இமாம், கிதாப் போன்ற பெயர் சொல் அமைப்பை ஒத்ததாகும்.
அதற்கு பணிந்து நடத்தல், மகத்துவமாகவும் கண்ணியமாகவும் அல்லாஹ்வை அல்லது பிற தெய்வங்களை நம்பிக்கையின் அடிப்படையில் தெய்வமாக, இரட்சகனாக எடுத்துக் கொள்ளுதல் போன்ற கருத்துக்கள் தருகின்றனர் அரபு அகராதி அறிஞர்கள்.
(லிஸானுல் அரப்).
வானவர்கள், மனித ஜின்கள், இதர சிருஷ்டிகள் என்பவற்றால் உண்மையாக வணங்கி வழிபடப்படும் அர்ஷின் இரட்சகனாகிய தனித்த அல்லாஹ்வை வணங்கப்படத் தகுதியான ஒரே இரட்சகனாக வணங்குவதற்கும் இலாஹ்- معبود வணங்கப்படுவன் என்றும் பொருள் கொள்ளப்பட்டும். இஸ்லாமிய வழக்கில் இதுவே சரியான பொருளாகும்.
இலாஹ் إله என்ற சொல்லின் பன்மைச் சொல்லாக آلهة என்று கூறப்படும்.
இதற்கு அன்பு, மரியாதை தந்து வணங்கப்படும் படைப்புக் கடவுள்களைக் குறிக்கவும் குர்ஆனிலும் ஹதீஸிலும் உபயோகிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடியும்.
ஒரு முஸ்லிம் உண்மையாக வணங்கி வழிபடத் தகுதியானவன் அல்லாஹ் என்று புரிவதைப் போலவே அல்லாஹ் தனது படைப்புகளில் கலப்பதில்லை, அவனது படைப்புக்கள் அல்லாஹ்வாக காட்சி தருவதுமில்லை எரப புரிவதே தூதுத்துவத்தின் பிரதான இலக்காகும்
இது பற்றிய தெளிவு திருமறையிலும் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல் அவர்கள் தனது நம்பிக்கை, போதனை, நடத்தை அனைத்திலும் விளக்கி இருக்கிறார்கள்.
அல்லாஹ்வைக் குறிக்கும் இலாஹ் சொற்பிரயோகம்:
அரபிக் கவிஞர்கள் தமது கவிதைகளிலும், மக்கள் தமது பேச்சிலும் உண்மையாக வணங்கி வழபடத் தகுதியான அல்லாஹ்வைக் குறிக்க "இலாஹ்" என்ற வார்த்தையை உபயோகித்திருப்பதையும் அறிய முடிகின்றது. மக்காவில் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டு வேதனை செய்யப்பட்ட நபித்தோழர் குபைப் (ரழி) அவர்கள்த தனது இறுதி நேர கவிதை வரிகளில் இலாஹ் என்ற வார்த்தையை அல்லாஹ் என்பதைக் குறிக்கப் பாவித்திருப்பதன் மூலம் இதனை உறுதி செய்து கொள்ள முடியும்.
وَلَسْتُ أُبَالِى حِينَ أُقْتَلُ مُسْلِمـــاً عَلَى أَيِّ جَنْبٍ كَانَ في اللهِ مَصْرَعِي
முஸ்லிம் இருக்கும் நிலையில் நான் கொல்லப்படுவது பற்றி எதையும் பொருட்படுத்தவதில்லை.
அல்லாஹ்வின் விஷயத்தில் எனது கொலை எப்படியாக நடந்தேறினாலும் சரியே!
وَذَلِكَ في ذاتِ الإِلَهِ وَإِن يَشـــأ يُبارِك عَلى أَوصالِ شِلوٍ مُــمَزَّعِ
இது (உண்மையான) அல்லாஹ்வுக்காக த்தான் (நடக்கின்றது). அவன் நாடினால் சிதைக்கப்பட்ட உறுப்புக்களிலும் பேரருள் செய்வான்.
மேற்படி கவிதையில் "இலாஹ்" إله என்ற
சொல் வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ் என்பதைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடியும்.
அவ்வாறே "இலாஹ்" إله என்ற சொல் மொழி மற்றும் பொதுப் பொருள் வழக்கில் மேற் சொன்ன கருத்துக்களோடு, பின்வரும் பொருளிலும் இடம் பெற்றுள்ளது. (1)
أن معناه (الذي يستحق أن يكون معبودا) وليس فقط (المعبود)
فقد قال ابن منظور في لسان العرب (ج 13 / ص 467):
வணங்கப்பட என்று மட்டும் இல்லாமல் வணங்கப்படத் தகுதியானவனாக இருப்பதையும் குறிக்கும். – என இமாம் இப்னு மன்ளூர் என்பவரை மேற்கோள் காட்டி விளக்கப்பட்டிருக்கின்றது.
தன்னை உயர்ந்த கடவுளாக நம்பி வந்த பிர்அவ்னின் பொய்க் கடவுள் கொள்கையை தனது சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களோடு எதிர்த்த போது
அவர்களிடம் பிர்அவ்ன்
قَالَ فَمَنْ رَبُّكُمَا يَا مُوسَىٰ 49 قَالَ رَبُّنَا الَّذِي أَعْطَىٰ كُلَّ شَيْءٍ خَلْقَهُ ثُمَّ هَدَىٰ 50 (( طه ) "
மூஸாவே உங்கள் இருவரினதும் (ரப்) பராமரிப்பாளன் யார் எனக் கேட்டான். அதற்கு அவர்: ஒவ்வொரு படைப்புக்களுக்கும் (தகுதியான தோற்றத்தை ) வழங்கி, நேர்வழிகாட்டியவனே எங்கள் இரட்சகன் எனக் கூறினார்கள். ( தாஹா-49-50)
இங்கு அல்லாஹ்வை வேறுபடுத்தியும், வணங்கப்படத்தகுதியானவனாகவும் நம்பிக்கை கொண்டதன் காரணமாகவே ஃபிர்அவ்ன் பிர்அவ்ன் மூஸா நபியை பின்வருமாறு எச்சரிக்கை செய்தான்.
"قَالَ لَئِنِ ٱتَّخَذْتَ إِلَٰهًا غَيْرِى لَأَجْعَلَنَّكَ مِنَ ٱلْمَسْجُونِينَ
(الشعراء - 29)"
(மூஸாவே!) என்னை அன்றி நீர் தெய்வமாக (அல்லாஹ்வை) எடுப்பீரானால் நிச்சயமாக நான் உன்னை சிறைபிடிப்பேன் எனக் கூறினான். ( அஷ்ஷுஅரா-29)
இங்கு இடம் பெறும் இலாஹ் என்ற சொல் மூஸா நபி (அலை) அவர்கள் வணங்கி வழிபடும் தனித்தவனாகிய அல்லாஹ்வைக் குறிக்காமல் அல்லாஹ்வை புறம் தள்ளி பலாத்காரமாக வணங்கப்படும் ஃபிர்அவ்ன் என்பதாகும்.
அல்லாஹ் அல்லாது வணங்கப்படும் நரகவாதியான ஃபிர்அவ்ன் என்ற கொடிய காஃபிரைக் குறிக்கும் என்பதை தப்ஸீர் துறை அறிஞர்களின் முடிவாக இருக்கும் போது படைப்புக்கள் எப்படி அல்லாஹ்வாக மாற முடியும் என சிந்திக்க வேண்டும்.
"أى : قال فرعون لموسى بثورة وغضب : لئن اتخذت إلها غيرى يا موسى ليكون معبودا لك من دونى ، لأجعلنك واحدا من جملة المسجونين فى سجنى"
ஈஸா மஸீஹ் (அலை) அவர்கள் தொடர்பான மறுமைநாளில் இடம் பெறும் பின்வரும் உரையாடலும் அதே போன்று தான்.
அது பற்றிய தெளிவை இங்கு நோக்க உள்ளோம்.
وَاِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِىْ وَاُمِّىَ اِلٰهَيْنِ مِنْ دُوْنِ اللّٰهِؕ قَالَ سُبْحٰنَكَ مَا يَكُوْنُ لِىْۤ اَنْ اَقُوْلَ مَا لَـيْسَ لِىْ بِحَقٍّؕؔ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗؕ تَعْلَمُ مَا فِىْ نَفْسِىْ وَلَاۤ اَعْلَمُ مَا فِىْ نَفْسِكَؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ.
இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் (மறுமையில்) விசாரிக்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்ல வேண்டியதில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன்மனதில் இருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார். ( அல்மாயிதா :116).
தொடர்ந்தும் கூறுகின்ற போது
مَا قُلْتُ لَهُمْ اِلَّا مَاۤ اَمَرْتَنِىْ بِهٖۤ اَنِ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْۚ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيْدًا مَّا دُمْتُ فِيْهِمْۚ فَلَمَّا تَوَفَّيْتَنِىْ كُنْتَ اَنْتَ الرَّقِيْبَ عَلَيْهِمْؕ وَاَنْتَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ
.“நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இரட்சகனும், உங்களுடைய இரட்சகனுமாகிய அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களுக்கு கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்);" (5:117) என்றும் கூறுவார்.
மேற்படி போதனையை மீறி உயிரோடோ, மரணித்த பின்போ அடியார்களை வணங்கப்படும் தெய்வமாக எடுப்பதால் எடுத்தவர்களே குற்றவாளிகள் என மறுமையில் தீர்ப்பளித்து தண்டிக்கப்படுவர் என்பதை பின் வரும் வசனம் குறிப்பிடுகின்றது.
اِنْ تُعَذِّبْهُمْ فَاِنَّهُمْ عِبَادُكَۚ وَاِنْ تَغْفِرْ لَهُمْ فَاِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் அவர்கள் (நீ தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்).(5:118).
தெளிவு:
---
மறுமை நாளில் நடைபெறப் போகும் மேற்படி உரையாடலில் ஈஸா நபி அலை அவர்கள் கூறும் பதிலில் அல்லாஹ் வேறு அடியான் வேறு என்ற
தெளிவு உள்ளது.
அதில் அல்லாஹ்வை அன்றி, உலகில் வணங்கப்படும் தெய்வங்கள் (கடவுள்கள்)
சடப் பொருளாகவோ, பகுத்தறிவுள்ளதாகவோ எதுவானாலும் அவை "கடவுள்" என்ற பெயரில் மனிதர்களால் வணங்கப்பட்டாலும், அவை உண்மையாக வணங்கி வழபடத் தகுதியான, அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கு எந்த வகையிலும் சமமானவை அல்ல; அவை அல்லாஹ்வும் கிடையாது என்பது இடம் பெற்றுள்ளது .
பின்வரும் வசனத்தை நன்றாக கவனிக்கவும்.
---
"إِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ حَصَبُ جَهَنَّمَ أَنتُمْ لَهَا وَٰرِدُونَ
(الأنبياء - 98)"
நிச்சயமாக நீங்களும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குபவைகளும் ( தெய்வங்களும்) நரகின் எரி கொள்ளிகளே! நீங்கள் அங்கு வந்து சேரக் கூடியவர்களே. ( அல்-அன்பியா-98).
மேற்படி வசனத்தைக் காட்டி அல்லாஹ் அல்லாது வணங்கப்படும் நபிமார்கள், நல்லடியார்களை நரகவாதிகள் என்று பொருள் கொள்ளவதா என்றால் இல்லை. யாரெல்லாம் தம்மை வணங்குமாறு பணித்தார்களோ அவர்களையே இது குறிக்கும்.
அதனால்தான் இறைத் தூதர் ஈஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ் மறுமையில் விசாரணை நடத்தி அவர்களை அந்த சந்தேகத்தில் இருந்து நிரபராதியாக்கி பின்னர், அவர்களை வணங்கியோரை நரகில் போடுவான் என குர்ஆன் எச்சரிக்கை செய்துள்ளது.
மேற்படி வசனத்தை விளக்கும் இமாம் தன்தாவி ரஹி அவர்கள்;
ولا يدخل فى هذه الآية ما عبده هؤلاءالمشركون من الأنبياء والصالحين كعيسى والعزيز والملائكة ، فإن عبادتهم لهم كانت عن جهل وضلال منهم ، فإن هؤلاء الأخيار ما أمروهم بذلك ، وإنما أمروهم بعبادة الله - تعالى - وحده
(الوسيط لطنطاوي رحمه الله)
மேற்படி வசனத்தில் இணைவைப்போர் வணங்கி வந்த
ஈஸா, உஸைர் (அலை) போன்ற நபிமார்கள், வானவர்கள் மற்று நல்லடியார்களை இந்த வசனம் குறிக்காது.
அவர்களை வணங்கியோர் மடமையாகவும், வழிகேடாகவுமே அவர்களை வணங்கினர். அந்த நல்லடியார்களோ அல்லாஹ்வை மாத்திரம் இணைவைக்காது வணங்குமாறு இவர்களுக்கு கட்டளையிட்டனர். ((ஷேக் தன்தாவி ரஹி - தஃப்ஸீர் அல்வஸீத்).
அல்லாஹ் மாத்திரமே வணங்கி வழபடத் தகுதியானவன் என்ற உயரிய கருத்தை சிதைக்கும் வகையில் செயல்பட்ட நபி நூஹ் (அலை) அவர்களின் சமுதாயம் முதல் இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வரை வந்த சமூகங்கள் இறை மறுப்பார்கள், இணைவைப்பாளர்கள் என அடையாளப்பகுத்தப்பட்டதில் இந்த அடிப்படையும் உள்ளடங்கும்.
والله أعلم.
எல்லாம் அவனே கோட்பாட்டை புதைகுளிக்குத் தள்ளும் #இறைத் தூதர் மூஸா (அலை) தொடர்பான உரையாடலும் #நமது நபியின் மிஃராஜ் பயணமும்.
----
இறைத் தூதர் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ் விதித்த நேரத்தில் தூர் ஸீனா மலை சென்று அல்லாஹ்வுடன் பேசிய வேளை அல்லாஹ்வை நேரில் பார்க்க வேண்டும் என்ற அபரிமிதபான தனது ஆர்வத்தை அல்லாஹ்விடம் வெளிப்படுத்திய போது அல்லாஹ்
لن تراني
என்னை உன்னால் காண முடியாது எனக் கூறினான்.
இந்நிகழ்வின் மூலம் இவ்வுலகில் அல்லாஹ்வை காண முடியாது என்பது உறுதியாகுவதை அந்த சரித்திரம் நமக்கு மறுமை வரை சான்றாக அமைகின்றது.
இனி சரித்திரத்திற்குள் செல்வோம்.
وَلَمَّا جَآءَ مُوْسٰى لِمِيْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ ۙ قَالَ رَبِّ اَرِنِىْۤ اَنْظُرْ اِلَيْكَ ؕ قَالَ لَنْ تَرٰٮنِىْ وَلٰـكِنِ انْظُرْ اِلَى الْجَـبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰٮنِىْ ۚ فَلَمَّا تَجَلّٰى رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰى صَعِقًا ۚ فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَيْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِيْنَ
.(நாம் குறிப்பிட்ட) நமது எல்லைக்கு மூஸா வந்த போது, அவருடைய இரட்சகன் அவருடன் ( திரைமறைவில்) பேசினான்; (அப்போது மூஸா) “என் இறைவனே! நான் உன்னை (நேரடியாக)ப் பார்க்க எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தனது இடத்திலேயே நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். பின்னும், அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அது அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டது, அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார் "( அல்அஃராஃப்- 143)
மூஸாவே உன்னால் என்னை பார்க்க முடியாது என அல்லாஹ் கூறிய பின் இறுதியாக அவரின் ஆர்வத்தை நிறைவேற்ற அல்லாஹ்வின் பிரகாசத்தை தாக்கு பிடிக்கும் சக்தியை தூர் சீனாய் மலையால் சுமக்க முடியாது சுக்கு நூறினாகியது.
மூஸா நபியும் மூச்சை ஆகி பின் விழித்தெழுந்து, தனது கேள்வி பிழை என்பதை உணர்ந்து அதற்காக தவ்பாவும் செய்தார் என குர்ஆன் குறிப்பிடுவதை ஆழமாக சிந்திக்கும் ஒரு முஃமின் அல்லாஹ்வை இந்த உலகில் காணலாம், அவன்தான் அனைத்தும் எனக் கூறுவானால் அவனது சிந்தனை சரியானதுதானா என சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ்வைப் பார்க்கின்ற வாய்ப்பை
கலீமுல்லாஹ் كليم الله என்ற சிறப்பு பெயர் பெற்ற இறைத் தூதர் மூஸா அவர்கள் மாத்திரம் இழக்கவில்லை. மாறாக இறுதித்தூதர் ( ஸல்) அவர்களும் அந்த பாக்கியத்தை இழந்தார்கள். அதற்கான காரணத்தையும் பின்வருமாறு கூறினார்கள்.
عَنْ أبِي ذَرٍّ، قالَ: سَألْتُ رَسُولَ اللهِ ﷺ، هَلْ رَأيْتَ رَبَّكَ؟ قالَ: «نُورٌ أنّى أراهُ»، (أخرجه مسلم في صحيحه)
அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
மிஃராஜ் சென்ற இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம்
“நீங்கள் உங்கள் இரட்சகனைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அவன் பேரொளியாவன். “(அவனைச் சுற்றிலும் இருப்பது) ஒளியாகும்! நான் அவனை எப்படிப் பார்க்க முடியும்?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 291)
மற்றொரு ஹதீஸில்
قامَ فِينا رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ بخَمْسِ كَلِماتٍ، فقالَ: إنَّ اللَّهَ عزَّ وجلَّ لا يَنامُ، ولا يَنْبَغِي له أنْ يَنامَ، يَخْفِضُ القِسْطَ ويَرْفَعُهُ، يُرْفَعُ إلَيْهِ عَمَلُ اللَّيْلِ قَبْلَ عَمَلِ النَّهارِ، وعَمَلُ النَّهارِ قَبْلَ عَمَلِ اللَّيْلِ، حِجابُهُ النُّورُ، لو كَشَفَهُ لأَحْرَقَتْ سُبُحاتُ وجْهِهِ ما انْتَهَى إلَيْهِ بَصَرُهُ مِن خَلْقِهِ. ( أخرجه مسلم- الراوي : أبو موسى الأشعري)
அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் முன் நின்று ஐந்து விஷயங்களைச்
சொன்னார்கள். (அவை:)
1) கண்ணியமும் மாண்பும் மிக்க அல்லாஹ் உறங்க மாட்டான்; உறங்குவது அவனுக்குத் தகாது.
2) அவன் (அமல்களின்) தராசைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான்.
3) (மனிதன்) இரவில் புரிந்த செயல், பகலில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே உயர்த்தப்படுகிறது.
4) (மனிதன்) பகலில் புரிந்த செயல், இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே உயர்த்தப்படுகிறது.
5) அவனது பேரொ ளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். அத்திரையை அவன் விலக்கிவிட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்துவிடும்.
(நூல் முஸ்லிம்).
அதாவது அல்லாஹ் தன்னை பிரகாசத்தின் மூலம் திரையிட்டுள்ளான். அது இம்மையில் நீக்கப்படமாட்டாது எனக் கூறி தானும் அல்லாஹ்வை மிஃராஜில் பார்க்க வில்லை எனக் கூறி இருக்க அனைத்தும் எப்படி அல்லாஹ்வாக முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ்வை இம்மையில் கண்களால் பார்க்க முடியாது என பின்வரும் வசனம் உறுதி செய்கின்றது.
"لا تُدْرِكُهُ الأبْصارُ﴾أنعام/ 103"
பார்வைகள் அவனை அடைந்து கொள்ள முடியாது ( அன்ஆம் -103) .
இது பற்றி விளக்கும் அறிஞர்கள்
أي لا تحيط به، أو لا تراه، أو لا تدركه في الدنيا وتدركه في الآخرة، ( تفسير العز بن عبد السلام ١/٤٥٣ — ابن عبد السلام (ت ٦٦٠)
அல்லாஹ்வை இவ்வுலகில் காண முடியாது எனக் குறிப்பிட்டுள்ளனர். ( தஃப்ஸீர் இஸ்ஸு பின் அப்திஸ்ஸலாம்)
الرؤية
அல்லாஹ்வை பார்த்தல் என்ற தலைப்பில் எழுதிய இமாம்களே நமது இமாம்கள் மறுமையில் பார்த்தல் என்பதையும் இவ்வுலகில் அது அசாத்தியமானது என்றுமே எழுதி உள்ளனர்.
நபித்தோழர்கள், நல்வழி நடந்த இமாம்கள் வழி வந்த சுன்னத் ஜமாத் வழி நடக்கும் நமது கொள்கையும் அதுவாகும்.
والله أعلم.
எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி