மார்க்கக் கல்வியை தேடுவதின் சிறப்பு

- அஷ்ஷைஃக் ஸுலைய்மான் அர்-ருஹைய்லி ஹஃபிதஹுல்லாஹ் 

நபி ﷺ அவர்கள் ஒரு மகத்தான ஹதீஸில் கூறுகின்றார்கள், இதன் ஆரம்பத்திலும் இறுதியிலும் கல்வியின் சிறப்பை தெளிவுபடுத்தியுள்ளார்கள். 

يقول صلى الله عليه وسلم : "من سلك طريقا يلتمس فيه علما ، سهل الله له طريقا إلى الجنة, وإن الملائكة لتضع أجنحتها لطالب العلم رضا بما يصنع  وإن العالم ليستغفر له من في السماوات ومن في الأرض, حتى الحيتان في الماء, وفضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب, وإن العلماء ورثة الأنبياء ، وإن الأنبياء ما ورثوا دينارا ولا درهما . وإنما ورّثوا العلم ، فمن أخذه أخذ بحظ وافر" (رواه أبوداود والترمذي وابن ماجة وابن حبان.) 

"யார் (மார்க்கக்) கல்வியைத் தேடி ஒரு வழியில் செல்கின்றாரோ, சொர்க்கத்தை நோக்கிய ஒரு வழியை அவருக்கு அல்லாஹ் இலேசாக்குகிறான். நிச்சயமாக மலக்குமார்கள் கல்வியைத் தேடும் மாணவருக்கு, அவரின் செயலை பொருந்திக் கொண்டதன் காரணத்தினால் தங்களது இறக்கைகளைத் தாழ்த்துகிறார்கள். நிச்சயமாக, ஒரு மார்க்க அறிஞருக்காக வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள், மேலும் தண்ணீரில் உள்ள மீன்கள் கூட பாவமன்னிப்புத் தேடுகின்றனர். ஒரு வணக்கசாலியை விட ஒரு மார்க்க அறிஞருக்கு இருக்கும் சிறப்பானது, மற்ற நட்சத்திரங்களை விட சந்திரனுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும். நிச்சயமாக மார்க்க அறிஞர்கள், நபிமார்களின் வாரிசுகளாவர். மேலும் நபிமார்கள், தங்கக்காசுகளையோ வெள்ளிக்காசுகளையோ விட்டுச் செல்லவில்லை. அவர்கள் விட்டுச் சென்றதெல்லாம் மார்க்கக் கல்வியே ஆகும். எனவே, அதை (மார்க்கக் கல்வியை) எடுத்துக் கொண்டவர் பெரும் நற்பங்கை எடுத்துக் கொண்டவராவார்" என்று நபி ﷺ அவர்கள் கூறுகின்றார்கள்.

இதனை அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான் ஆகியோர் அறிவிக்கின்றனர். 

கல்வியைத் தேடும்பொழுதும், அதைப் பெறுகின்றபொழுதும் உள்ள சிறப்பை நபி ﷺ அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

"من سلك طريقا" 
யார் ஒரு வழியில் செல்கின்றாரோ...

யார் தனது வீட்டையும், குடும்பத்தாரையும், சௌகரியத்தையும் விட்டுவிட்டு ஒரு வழியில் செல்கின்றாரோ

عن ماذا يبحث؟ "يلتمس فيه علما"

அவர் எதை தேடுகின்றார்? அதிலே (அப்பாதையிலே) மார்க்கக் கல்வியைத் தேடுகின்றார்.

சகோதரர்களே! நிச்சயமாக கல்வியானது தேடப்பட வேண்டும் மேலும் அக்கல்வியானது (அதற்குரிய) காரணிகளை எடுப்பதைக் கொண்டு முயற்சிப்பதின் மூலமே அடைய முடியும் என்பதற்கு இதில் அடையாளம் இருக்கின்றது. 

"يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة "

கல்வியைத் தேடி (செல்கின்றாரோ), சொர்க்கத்தை நோக்கிய ஒரு வழியை அவருக்கு அல்லாஹ் இலேசாக்குகிறான்.

சொர்க்கத்தை நோக்கிய ஒரு வழியை அவருக்கு அல்லாஹ் இரு விடயங்களைக் கொண்டு இலேசாக்குகிறான், என்று அறிஞர் பெருமக்கள் கூறுகின்றார்கள்.

முதலாவது விடயம்: கல்வி என்பதே சொர்க்கத்தின் பாதைகளிலிருந்து உள்ளதாகும். எனவே யார் கல்வியைத் தேடி ஒரு வழியில் செல்கின்றாரோ, நிச்சயமாக அவர் சுவனத்திற்கு கொண்டு சேர்க்கின்ற சுவனப் பாதைகளில் ஒரு பாதையில் செல்கின்றார்.

இரண்டாவது விடயம்: யார் கல்வியைத் தேடி ஒரு வழியில் செல்கின்றாரோ, இபாதத்தை அவருக்கு அல்லாஹ் இலேசாக்குகிறான். இபாதத்தை அவருக்கு எளிதாக்கிவிடுகின்றான். எனவே அவர் இபாதத்தின் பாதையில் முந்தியவர்களிலிருந்து இருப்பார்.

இதன் காரணமாகவே, எங்களுடைய ஆசிரியர்களில் சிலர் கூறுவதாவது:

கல்வியை உளத்தூய்மையுடன் (தேடும் விடயத்தில்) உன்னுடைய நிலையை நீ அறிய விரும்பினால், இபாதத்துடைய விடயத்தில் உன்னுடைய நிலையை நீ கவனித்துப் பார்.

யார் கல்வி தேடுவதில் மனத்தூய்மை உடையவராக இருப்பாரோ, அவருக்கு அல்லாஹ் சுவனத்தின் பாதைகளை இலகுவாக்கி விடுகின்றான், மேலும் இபாதத்தானது சுவனத்தின் பாதைகளிலிருந்து உள்ளதாகும்.

"وإن الملائكة لتضع أجنحتها لطالب العلم رضا بما يصنع" 

"நிச்சயமாக மலக்குமார்கள் கல்வியைத் தேடும் மாணவருக்கு, அவரின் செயலை பொருந்திக் கொண்டதன் காரணத்தினால் தங்களது இறக்கைகளைத் தாழ்த்துகிறார்கள்" 

கீழ்ப்படிவதற்காக அல்லாஹ் படைத்திருக்கின்ற, அவன் அவர்களுக்கு ஏவியதில் ஒரு சிறிதும் மாறுசெய்யாது, தங்களுக்கிடப்பட்ட கட்டளைகளையே செய்து வருபவர்களான இத்தகைய மலக்குகள், (இறைவனுக்கு) கீழ்ப்படிந்து நடக்கும் விடயங்களிலிருந்துள்ள ஒரு கீழ்ப்படிதலான விடயத்தைத் தவிர வேறு எதையும் விரும்ப மாட்டார்கள். 

மலக்குமார்கள், கல்வியைத் தேடும் மாணவருக்கு, அவருடன் பணிவுடன் நடந்து கொள்ளும் விதமாக தங்களது இறக்கைகளைத் தாழ்த்துகிறார்கள். (அவர்கள் அவ்வாறு செய்வதற்கு காரணம்), அவர் ஞானமிக்கவர், புத்திசாலி, கண்ணியமிக்கவர், செல்வந்தர் என்பதற்காக அல்ல. (மாறாக) அவரின் செயலைக் கொண்டு அவர்கள் பொருந்திக் கொள்வதே (இதற்கு ஒரே காரணம்) ஆகும்.

ஏனெனில் அவர்களுக்கு (மலக்குமார்களுக்கு), அல்லாஹ்விடத்தில் கல்விக்கு இருக்கின்ற சிறப்பு பற்றி தெரியும். எனவே கல்வி தேடும் மாணவரின் செயலை கொண்டு பொருந்திக் கொண்டதன் காரணமாக,  
அவரிடம் பணிவு காட்டுகின்றனர். இந்த ஒவ்வொன்றும் கல்வியைத் தேடும் மாணவருக்கு (அவர் அதனைத்) தேடும் பொழுது உள்ள சிறப்பாகும். அவரோ (கல்வியைத்) தேடும் அவரது பாதையில் இருந்து கொண்டிருக்க  (இவ்வளவு சிறப்புகளையும் பெற்றுக் கொள்கின்றார்!).

அதுவே அவர் கல்வியை பெற்று விட்டார் என்றால், அது மற்றொரு சிறப்பும், அந்தஸ்தும், உயர்வுக்கு மேல் உயர்வும் ஆகும். 

"وإن العالم ليستغفر له من في السماوات ومن في الأرض" 

நிச்சயமாக, ஒரு மார்க்க அறிஞருக்காக வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் பாவமன்னிப்பு தேடுகின்றார்கள். 

வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் அந்த அறிஞருக்காக பாவமன்னிப்பு தேடுகின்றார்கள். மேலும் அல்லாஹ் அந்த அறிஞர் மீது ஸலவாத் சொல்கின்றான், (அதாவது) அந்த அறிஞரைப் பற்றி உயர்வுமிக்க மலக்குகளிடத்தில் நல்லவிதமாக குறிப்பிடுகின்றான்.

"حتى الحيتان في الماء" 

"தண்ணீரில் உள்ள மீன்கள் கூட"

 பூமியின் (மேற்பரப்பில் வாழும்) விலங்குகள் கூட, கடல்களில் உள்ள மீன்கள் கூட அந்த அறிஞருக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றன.

"وفضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب"

ஒரு வணக்கசாலியை விட ஒரு மார்க்க அறிஞருக்கு இருக்கும் சிறப்பானது, மற்ற நட்சத்திரங்களை விட சந்திரனுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்.

இந்த, (ஒன்றைவிட மற்றொன்றை) மேன்மைப்படுத்தும் விடயமானது, மக்கள் மற்ற நட்சத்திரங்களை விட சந்திரனை மேன்மைப்படுத்தும் வழக்கில் உள்ளது. மக்கள் சந்திரனை சிறந்த கோளாக  கருதுகின்றனர். அவ்வாறே ஒரு கல்வி இல்லாத வணக்கசாலியை விட ஒரு மார்க்க அறிஞருக்கு இருக்கும் சிறப்பானது, சந்திரனுக்கு மற்ற நட்சத்திரங்களை விட இருக்கும் சிறப்பினைப் போன்றதாகும். 

"وإن العلماء ورثة الأنبياء" 

நிச்சயமாக மார்க்க அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகள் ஆவார்கள். 

எனவே மார்க்க அறிஞர்கள் தான் மக்களிலேயே நபிமார்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.

ஆதமின் மகன் ஒருவன் மரணித்து விட்டால், அவனது வாரிசுகள் மட்டுமே அவனுடைய (சொத்துக்களை) வாரிசுரிமையாகப் பெற்றுக் கொள்வர். அவர்களில் (இறந்தவருக்கு) மிகவும் நெருக்கமானவர்கள் தூரத்து (சொந்தத்தில்) இருப்பவர்களை (அவர் விட்டுச்சென்ற பொருட்களில் இருந்து ஏதேனும் ஒன்றைப் பெற்றுக் கொள்வதை விட்டும்) தடுத்து விடுவர். 

ஆயினும் நபிமார்கள் இறந்துவிட்டால், அறிஞர் பெருமக்கள் அவர்களிடமிருந்து (மார்க்கக் கல்வியை) வாரிசுரிமையாகப் பெற்றுக் கொள்கின்றனர். எனவே மார்க்க அறிஞர்கள் (தான்) மக்களிலேயே நபிமார்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் ஆவர். ஹதீஸுடைய மக்களே (மார்க்க அறிஞர்களே) உண்மையில் நபியவர்களின் ﷺ மக்களாவர்.  இவர்கள் நபி ﷺ அவர்களோடு தோழமை கொள்ளாமல் இருப்பினும் சரியே. 

அவர்கள் தங்களின் கல்வியை நபிமார்களிடம் இருந்து எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் தான் உண்மையாகவும், சத்தியமாகவும் நபிமார்களுக்கு
நெருக்கமானவர்கள் ஆவர். 

"وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما" 

மேலும் நபிமார்கள், தங்கக்காசுகளையோ வெள்ளிக்காசுகளையோ விட்டுச் செல்லவில்லை. 

ஏனெனில் இவ்விடயங்கள் யாவும் மறைந்தும், அழிந்தும் போய்விடும்.  என்றென்றும் நிலைத்து விடுகின்றன உயர்வளிக்கின்ற கல்வியையே (நபிமார்களிடமிருந்து) வாரிசுரிமையாகப் பெற்றுக் கொள்கின்றனர். எனவே மார்க்கக் கல்வியிலிருந்து எவர் ஒரு பங்கை எடுத்துக் கொள்வாரோ, அவர் நிச்சயமாக நபித்துவத்தின் வாரிசுரிமையிலிருந்து பெரும் நற்பங்கை எடுத்துக் கொண்டவராவார்". 

இது மாபெரும் அருட்கொடையாகும்.


- மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வ அஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.
أحدث أقدم