ஆசிரியர் : ஷேக் டாக்டர் ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் அல் ஃபவ்ஸான்.
தமிழாக்கம் : S. கமாலுத்தீன் மதனி.
வெளியீடு : அறிவு ஆராய்ச்சி மற்றும் மார்க்கத்தீர்ப்பளிக்கும் தலைமையகம், ரியாத்.
உள்ளடக்கம்:
முன்னுரை
பிரிவு - 1 பொதுவான சட்டங்கள்..
இஸ்லாத்திற்கு முன்பு பெண்கள் நிலை.
இஸ்லாத்தில் பெண்கள் நிலை.
இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்.
பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.
பிரிவு - 2
பெண்களின் உடல் அலங்காரம்.
பெண்ணின் தலைமுடி அலங்காரம்.
பெண்கள் முடிக்கு சாயமடித்தல்.
பிரிவு - 3 மாதவிடாய் பிரசவம் பற்றியது..
மாதவிடாய்.
மாதவிடாய்க்கான வயது.
மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள்.
மஞ்சள் கலங்கல் நிற இரத்தம்.
மாதவிடாய் முடிவை அறிவது.
உதிரப்போக்கு.
உதிரப்போக்குள்ள பெண் கடைபிடிக்க வேண்டியவை.
பிரசவ இரத்தம்.
பிரசவ உதிரப்போக்குடைய பெண்களுக்கான சட்டங்கள்.
மாதவிடாய் நிற்க மருந்து உண்ணுதல்.
கருக்கலைப்பு.
பிரிவு - 4
1. பெண்களின் ஆடைபற்றிய சட்டங்கள்.
2. இஸ்லாமியப் பெண்களின் ஆடை.
3. பர்தாவின் பலன்கள்.
பிரிவு - 5
பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச்சட்டங்கள்.
முழுமையாக பர்தா அணிதல்.
வெளியில் செல்லும்போது நறுமணம் பூசுதல்.
ஆபரணங்கள் அணிந்து வெளியே செல்லுதல்.
பெருநாள் தொழுகைக்கு பெண்கள் செல்லுதல்.
பிரிவு - 6
பெண்கள் சம்பந்தப்பட்ட ஜனாஸாவின் சட்டங்கள்.
ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்லுதல்.
பெண்கள் கப்ரு ஜியாரத் செய்தல்.
ஒப்பாரிவைத்தல்.
பிரிவு - 7
நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள்..
பெண்கள் நோன்பை விடுவதற்கான காரணங்கள்.
யார் மீது நோன்பு கடமை.
கர்பமும் பாலூட்டலும்.
எச்சரிக்கை.
பிரிவு - 8
பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம்..
பெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள்.
பெண்களின் இஹ்ராம்.
பெண்கள் தல்பிய்யா சொல்லுதல்.
பெண்கள் தவாஃப் செய்தல்.
ஹஜ்ஜின் போது மாதவிடாய்ப் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை.
எச்சரிக்கை.
பிரிவு - 9
கணவன், மனைவி சம்பந்தப்பட்ட சட்டங்கள்..
திருமணத்தில் பெண்ணின் கருத்தை ஏற்றல்.
பெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியம்.
திருமணத்தை விளம்பரப்படுத்துதல்.
கணவன், மனைவியை வெறுத்தல்.
மனைவி, கணவனை வெறுத்தல்.
திருமண ஒப்பந்தம் நடந்தபின்.
இத்தாவின் வகைகள்.
இத்தாவிலிருக்கும் பெண்கள் மீது விலக்கப்பட்டவை.
இத்தா காலத்தில் திருமண ஒப்பந்தம்.
நறுமணம் உபயோகித்தல்.
உடல் அலங்காரம்.
ஆடையில் அலங்காரம்.
ஆபரணங்கள் அணிதல்.
பிரிவு - 10
பெண்ணின் கண்ணியத்தையும், கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள்..
கற்பைக் காத்தல்.
அன்னிய ஆணுடன் தனிமையில் இருத்தல்.
கைலாகு செய்தல்.
முடிவுரை.
முன்னுரை:
அகிலங்களைப்படைத்து வளர்த்து இரட்சிக்கின்ற அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அவன்தான் ஒவ்வொன்றுக்கும் ஒரு நிர்ணயத்தை ஏற்படுத்தி அதற்கு வழிகாட்டினான். மேலும் அவன் தான் இந்திரியத்திலிருந்து ஆண், பெண் ஜோடிகளையும் படைத்தான். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்று நான் சான்று பகர்கிறேன். ஆரம்பத்திலும் இறுதியிலும் அவனுக்கே புகழனைத்தும். முஹம்மத்(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள் என்றும் நான் சான்று பகர்கிறேன். அவர்கள் (மிஃராஜ் இரவு அன்று) வானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அல்லாஹ்வின் மகத்தான அத்தாட் சிகளை அங்கு கண்டார்கள்; அவர்கள் மீதும், சிறப்பு மற்றும் புகழுக்குரிய அவர்களின் குடும்பத்தார் மீதும், அவர்களுடைய தோழர்களின் மீதும் அல்லாஹ் சாந்தியும், சமாதானத்தையும் பொழிவானாக!
ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் மிக முக்கியமான இடம் இருக்கிறது. பெண்கள் தொடர்பான சட்டங்கள் இஸ்லாத்தில் அதிகமாக உள்ளன. பெண்களுக்கென நபி(ஸல்) அவர்கள் பல அறிவுரை களைக் கூறியுள்ளார்கள். 'அரஃபா' பெருவெளியில் நபி(ஸல்) அவர்கள் ஆற்றிய உரையில் பெண்களுக்கென சில உபதேசங்களைச் செய்துள்ளார்கள். இவை அனைத்தும் எல்லாக் காலங்களிலும் பெண்களுக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தைத் தெரிவிக் கின்றன.
தற்காலத்தில் பெண்களின் கற்பு சூறையாடப்படுகிறது; அவர்களின் கண்ணியம் பறிக்கப்படுகிறது அவர்களின் அந்தஸ்துகள் மறுக்கப்படுகின்றன. இப்படிப் பட்ட காலச்சூழலில் இஸ்லாம் கூறும் பெண்களுக்குரிய உரிமைகள் கடமைகள் ஆகியவற்றை அவர்களுக்கு அவ்வப்போது நினைவூட்டுவது அவசியமாகிறது. எனவே அவர்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்துக்களைச் சுட்டிக் காட்டி, வெற்றிக்கான வழியை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
பெண்கள் சம்பந்தப்பட்ட சில சட்டங்களை உள்ளடக்கியுள்ள இந்நூல் நாம் மேற் குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுகிற வகையில் அமையும் என நான் நம்புகிறேன். சமுதாயத்திற்கு இது ஒரு சிறிய பங்களிப்பு என்றாலும் இது ஒரு குறைவான முயற்சி. அல்லாஹ் இதைப் பயனுள்ளதாக ஆக்கியருள்வானாக! இவ்வகையில் நான் மேற்கொண்டுள்ள முயற்சி ஆரம்பக்கட்டமாகும். இதைவிடவும் விரிவான சிறப்பான முயற்சிகள் தொடர நான் ஆசைப்படுகிறேன்.
நான் இந்நூலில் பின்வரும் விஷயங்களை விளக்கியுள்ளேன்.
முதல் பிரிவு : பொதுவான சட்டங்கள்
இரண்டாம் பிரிவு : பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது
மூன்றாவது பிரிவு : மாதவிடாய், உதிரப்போக்கு, பிரசவம் சம்பந்தப்பட்டது
நான்காவது பிரிவு : ஆடைகள் மற்றும் பர்தா சம்பந்தப்பட்டது.
ஐந்தாவது பிரிவு : பெண்களின் தொழுகை முறைகளை பற்றியது
ஆறாவது பிரிவு : பெண்களுக்குரிய ஜனாஸாவின் சட்டங்கள் குறித்து.
ஏழாவது பிரிவு : நோன்பில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்கள் பற்றியது.
எட்டாவது பிரிவு : ஹஜ் உம்ராவில் பெண்களுக்குரிய சட்டங்கள் பற்றியது.
ஒன்பதாவது பிரிவு : கணவன் மனைவி சம்பந்தமானது.
பத்தாவது பிரிவு : பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் சட்டங்கள் பற்றியது.
பிரிவு 1 - பொதுவான சட்டங்கள்
இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை
1400 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த அரபியர்களும் பிற இனமக்களும் அறியாமையில் வீழ்ந்திருந்தனர். இஸ்லாத்திற்கு முன்புள்ள காலம் என இதனையே நான் குறிப்பிடுகிறேன். மனிதர்களை நேர்வழிப்படுத்தக்கூடிய இறைத்தூதர்கள் இல்லாதிருந்து, எல்லா வழிகளும் அழிந்து போய்விட்ட காலம். அப்போது அல்லாஹ் அவர்களின் பால் திரும்பிப்பார்த்தான்.
''வேதம் அருளப்பட்டவர்களில் சிலரைத் தவிர அரபியர்கள் மற்றும் அரபியர் அல்லாதவர்கள் உள்ளிட்டு அனைவரின் மீதும் இறைவன் கோபப்பட்டான்.'' (அல் ஹதீஸ்)
இக்காலக் கட்டத்தில் பெண்ணினம் தன் உணர்வுகள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்தது. குறிப்பாக அரபிய இனப் பெண்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளாகி இருந்தார்கள். காரணம், தங்களுக்குப் பெண் குழந்தைகள் பிறப்பதை வெறுப்பவர்களாய் இருந்தனர். அவர்களில் சிலர் தங்களின் பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்து வந்தனர். வேறு சிலர் (தங்களின் பெண்களையே) இழிவாகவும் கேவலமாகவும் உயிர் வாழ அவர்களை விட்டு வந்தனர்.
இது குறித்து அல்லாஹ் கூறுகின்றான்: ''அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது என நற்செய்தி கூறப்பட்டால், அவனுடைய முகம் கருத்து விடுகிறது. அவன் கோபமடைந்துவிடுகிறான். எதனைக் கொண்டு அவன் நற்செய்தி கூறப்பட்டானோ (அதைத் தீயதெனக் கருதி) அக்கெடுதிக்காகத் தம் சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான். இழிவோடு அதை உயிர் வாழவைப்பதா, அல்லது (உயிரோடு) அதை மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்). அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டது?'' (அல்குர்ஆன் 16:58,59)
மேலும், அல்லாஹ் கூறுகிறான்: ''உயிருடன் புதைக்கப்பட்டவள் (பெண்குழந்தை), 'எந்தக் குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள்' என வினவப்படும் போது.'' (அல்குர்ஆன் 81:8,9)
சிசுவதை என்பது பிறந்த பெண்குழந்தையை உயிரோடு பூமிக்குள் புதைத்து கொலை செய்வதாகும். அப்படியே ஒரு பெண் தன் குழந்தைப் பருவத்தைக் கடந்து வாழ ஆரம்பித்தாலும், அவள் மிகவும் இழிவான முறையில்தான் வாழமுடியும். அவளுடைய உறவினர்கள் எவ்வளவு தான் சொத்துக்களை விட்டுச் சென்றாலும் அதில் அவளுக்கு வாரிசுரிமை இருக்கவில்லை. அவள் எவ்வளவுதான் வறுமையில் வாடினாலும், தேவையுடைய வளாக இருந்தாலும் சரியே. அன்றைய மக்கள் ஆண்களுக்கு மட்டுமே வாரிசுரிமை வழங்கிவந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும். ஆனால் இறந்துபோன கணவன் விட்டுச் சென்ற அனந்தரச் சொத்துக்களில் ஒன்றாகப் பெண்ணும் கருதப்பட்டாள். அதிகமான பெண்கள் ஒரே கணவனின் கீழ் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். காரணம் அன்றைய ஆண்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை யுடைய பெண்களை மட்டும் மனைவியாக வைத்துக் கொள்வதில்லை, மேலும், பெண்களுக்கு எதிராக இளைக்கப்படும் கொடுமைகளை யாரும் கண்டு கொள்ளா மலேயே இருந்து வந்தனர்.
இஸ்லாத்தில் பெண்களின் நிலை
இஸ்லாமிய மார்க்கம் அவர்களிடத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது, பெண்களுக்கு இளைக்கப்பட்டு வந்த கொடுமைகள் அனைத்தும் முற்றாக ஒழிக்கப் பட்டன. பெண்ணும் மனித இனத்தின் ஓர் அங்கம்தான் என்ற நிலையை இஸ்லாம் அவளுக்கு மீட்டிக் கொடுத்தது.
''மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்.'' (அல்குர்ஆன் 49:13)
மனித இனம் என்ற அடிப்படையில் பெண் ஆணுக்குச் சமமானவள். அவள் புரியும் நன்மை தீமைக்குரிய கூலியைப் பெறுவதிலும் ஆணுக்குச் சமமாகவே இருக்கிறாள் என இஸ்லாம் கூறுகிறது.
''இறைநம்பிக்கையுள்ள ஆணோ, பெண்ணோ யார் நற்செயலைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) தூயமுறையிலான வாழ்க்கையை வாழச் செய்வோம். இன்னும், (மறுமையில்) அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் இருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.'' (அல்குர்ஆன் 16:97)
''நயவஞ்சகத்தன்மையுள்ள ஆண்களையும், நயவஞ் சகத்தன்மையுள்ள பெண்களையும், இணை வைக்கின்ற ஆண்களையும், இணைவைக்கின்ற பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வதற்காக.'' (அல்குர்ஆன் 33:73)
இறந்துபோன கணவன் விட்டுச் செல்லும் அனந்தரச் சொத்துக்களில் பெண்ணும் ஒன்று எனக் கருதப்பட்டு வந்ததை அல்லாஹ் தடை செய்துவிட்டான்.
''இறைநம்பிக்கையாளர்களே! பெண்களை (அவர் களின் மனம் பொருந்திவராத நிலையில்) நீங்கள் பலவந்தப் படுத்தி அனந்தரமாக்கிக் கொள்வது உங்க ளுக்குக் கூடாது.'' (அல்குர்ஆன் 4:19)
ஒரு பெண் சுயமாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவதை இஸ்லாம் அனுமதித்துள்ளது. சொத்துரிமையில் அவளைப் பங்குதாரராக இஸ்லாம் ஆக்கியுள்ளது; அவளை வாரிசுப் பொருளாகக் கருதவில்லை. தன் உறவினர் விட்டுச்செல்லும் சொத்திலும் அவளுக்கு உரிமைகளை வழங்கியுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: ''பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச்சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பாகம் உண்டு, அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவி னரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகம் உண்டு, அது குறைவாக இருந்தாலும் சரி அதிகமாக இருந் தாலும் சரி, இது (இறைவனால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.'' (அல்குர்ஆன் 4:7)
(சொத்துப்பங்கீட்டில்) ''உங்கள் மக்களில் இரண்டு பெண்களுக்குக்கிடைக்கும் பங்கு ஓர் ஆணுக்குக் கிடைக்கும் என அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான், பெண்கள் மட்டுமே இருந்து, அவர்கள் இரண்டிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு அவர் (இறந்துபோனவர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும், ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்.'' (அல்குர்ஆன் 4:11)
ஒரு பெண் தாயாக, மகளாக, சகோதரியாக, மனைவியாக இருக்கும் நிலையில் வாரிசாகி, சொத்தில் பங்கு பெறக்கூடியவள் என இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது.
திருமணத்தைப் பொறுத்தவரை ஓர் ஆண் அதிகப்பட்சமாக ஒரே நேரத்தில் நான்கு பெண்களை மணந்து கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், மனைவியரிடையில் நீதத்தை நிலைநாட்ட வேண்டும் என்பது அடிப்படையான நிபந்தனையாகும். மனைவியரிடத்தில் நல்லவிதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.
''நீங்கள் (உங்கள் மனைவியராகிய) அப்பெண் களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள்.'' (அல்குர்ஆன் 4:19)
பெண்ணுக்கு மஹர் என்ற ஜீவனாம்சத்தை (மணக் கொடையை)க் கொடுத்த பின்னரே திருமணம் செய்ய வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான். மணமகன் வாக்களித்த ஜீவனாம்சத்தை மணப்பெண் தானாக முன் வந்து விட்டுக் கொடுத்தால் அன்றி, அதை முழுமையாகவே அவளுக்கு வழங்கி விடவேண்டும் என்பதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்.
''நீங்கள் (மணம் செய்யும்) பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனம் விரும்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால். அதைத் தாராளமாக மகிழ்வு டன் புசியுங்கள். (அதாவது அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.)'' (அல்குர்ஆன் 4:4)
ஒரு பெண், தன் கணவன் வீட்டில் பொறுப்புள்ளவளாக, ஆலோசனைகளை வழங்குபவளாக, தீயவற்றிலிருந்து வீட்டாரை விலக்கக் கூடியவளாக, தன் குழந்தைகளை வழிநடத்திச் செல்லும் குடும்பத்தலைவியாக இருக்கவேண்டும் என இஸ்லாம் பணிக்கிறது.
''ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்புடையவளாவாள். அந்தப் பொறுப்பில் உள்ளவர்களைப் பற்றி (மறுமையில்) அவள் விசாரிக்கப்படுவாள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.''
கணவன் தன் மனைவிக்குத் தேவையான வாழ்க்கை வசதிகள் வழங்குவதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.
இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்.
இன்று இஸ்லாத்தின் எதிரிகளும் அவர்களோடு சேர்ந்தவர்களும் பெண்ணின் சிறப்பைப் போக்கி அவளுடைய உரிமைகளைப் பறிக்க விரும்புகின்றனர்.
இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள சிறப்பு, கண்ணியம், பாதுகாப்பு முதலியவற்றை இறை மறுப்பாளர்களும் நயவஞ்சகர்களும் விரும்புவதில்லை; அவர்கள் பெண்ணினம் மதிக்கப்படுவதை வெறுக்கின்றனர். அவர்களின் இதயங்களை பகைமை எனும் நோய் பிடித்துக் கொண்டுள்ளது. தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொண்ட தன் பின் மிருகத்தனமான இச்சையுள்ளவர்களையும் பலவீன முஸ்லிம்களையும் வேட்டையாடுவதற்கான ஒரு வேட்டைக் கருவியாகவும் இதனால் அவர்கள் பெண்களை ஒரு அழகுபொருளாகவும், தங்கள் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் கருவிகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அடிமைகளை விடவும் கேவலமாக நடத்து பவர்களும் உள்ளனர்.
''தங்கள் (மனோ)இச்சைகளைப் பின் பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலுமாய்ச் சாய்ந்து விட வேண்டும் என விரும்புகிறார்கள்.'' (அல்குர்ஆன் 4:27)
இதயத்தில் இச்சை எனும் நோயுள்ள சில முஸ்லிம்கள்கூட, பெண்களின் அழகு மற்றும் அங்கங்களை ரசிப்பதற்கே வழிவகுக்கின்றனர். பெண்களை ஒரு கண்காட்சிப் பொருளாகவே இவர்கள் மதிக்கின்றனர். இது ஷைத்தானின் தூண்டுதல் என்பதை மறந்து செயல்படுகின்றனர். தங்களின் கண்களுக்கு முன்பாக பெண்கள் எப்போதும் மேனி திறந்தவர்களாக இருக்கவேண்டும் அந்த அழகை ரசிக்கவேண்டும் என விரும்புகின்றனர். பெண்களுக்கு உரிமைவாங்கித் தரப்போவதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள், ஆண்களைப் போன்று பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டும். அவர்களுக்குச் சமமாக வேலைகளில் பங்கெடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் ஆண்களுக்கு பணி விடை, உதவி செய்கின்ற பணிப்பெண்களாக இருக்க வேண்டும். விமானங்களில் இவர்கள் பணிப்பெண்களாக நியமிக்கப்பட வேண்டும். கல்விச்சாலைகளில் இவர்கள் ஆண்களுடன் ஒன்றிணைந்து படிக்கும் மாணவிகளாகவும், ஆசிரியைகளாகவும் இருக்க வேண்டும். நாடகங்களில் நடிகைகளாக இருக்கவேண்டும். இன்னிசைக் கச்சேரிகளில் பங்கு கொண்டு பாடவேண்டும். செய்தி வாசிக்கிறோம் என்ற பெயரில் தொலைக் காட்சி போன்ற ஊடகங்களில் வலம்வந்து ஆண்களை மகிழ்விக்க வேண்டும் என்றெல்லாம் விரும்புகின்றனர். மஞ்சள் பத்திரிக்கைகள் பெண்களின் நிர்வாணப் படங்களை வெளியிட்டு விற்பனையை அதிகரித்து செல்வங்கள் சேகரித்து வருகின்றனர். வியாபாரிகளில் சிலர் தங்களின் வணிகஸ்தலங்களிலும் தொழில் நிறுவனங்களிலும் மக்களைக் கவர்வதற்காகவும், விற்பனையை அதிகரித்துக் கொள்வதற்காகவும் பெண்களின் ஆபாசப்படங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஜவுளிக் கடைகளில் 'ஷோகேஸ்' பொம்மைகளைக்கூட அழகான பெண்களின் தோற்றத்தில்தான் அமைத்துள்ளனர்.
பெண்ணுரிமை என்ற பெயரில் மேற்கண்டவாறு இழைக்கப்படும் தீமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டதால் இவற்றையெல்லாம் பார்க்கின்ற பெண்கள் ''நாம் இதற்காகத்தான் படைக்கப்பட்டுள்ளோம் போலும்; நாம் இப்படித்தான் வாழவேண்டும் போலும்'' என பெண்கள் எண்ணிக் கொண்டனர்; அவர்களின் மனநிலை இதை சரிகாணும் அளவிற்கு மாற்றப்பட்டுவிட்டது. இதன் காரணத்தினால் அப்பெண்களின் கணவன்மார்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காகவும், தங்கள் வீட்டுக்காரியங்களை கவனிப்பதற்காகவும் அன்னியப் பெண்களை வேலைக்காக அமர்த்துகின்றனர். இதனால் மிகப்பெரிய குழப்பங்களும், தீமைகளும் ஏற்படுகின்றன.
பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.
1. பணிக்குச் செல்லும் ஒரு பெண், தான் மேற்கொள்ளும் அப்பணியை செய்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தாலோ, அவளுக்கு அப்பணியைச் செய்து கொடுப்பதற்கு ஆண்கள் யாரும் இல்லாதிருந்தாலோ அல்லது அப்பெண்ணின் பணி சமுதாயத்திற்கு இன்றியமையாத ஒன்றாக இருந்தாலோ வெளியில் செல்லலாம்.
2. தன் வீட்டில் தான் செய்ய வேண்டிய கடமைகளை முடித்துவிட்ட பின்னரே பெண்கள் வெளிவேலையில் ஈடுபட வேண்டும்.
3. பெண்களுக்கிடையில்தான் அவள் தன் வெளி வேலைகளை அமைத்துக் கொள்ளவேண்டும். பெண்களுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தல், மருத்துவம் செய்தல், பெண்களுக்காக மட்டும் நர்ஸாக பணியாற்றுதல் போன்ற பணிகளை ஆண்களுடன் இரண்டறக் கலந்துவிடாது செய்து கொள்ளவேண்டும்.
4. மார்க்கக் கல்வியைக் கற்பது அவள் மீது கட்டாயக் கடமையாக உள்ளது. இதை அவள் வெளியில் சென்று கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால், அது
பெண்கள் வட்டத்தில் அமைந்ததாக இருக்கவேண்டும். பள்ளிவாசல் போன்ற இடங்களில் நடைபெறும் மார்க்க விளக்கக் கூட்டங்களில் பங்கு கொள்வதில் தவறில்லை. ஆனால் அவள் தன் அழகு அலங்காரங்களை மறைத்தாக வேண்டும். ஆண்களை விட்டும் ஒதுங்கியவளாக இருக்கவேண்டும். இஸ்லாத்தின் ஆரம்பகால பெண்களைப் போன்று பள்ளிவாசலுக்குச் சென்று நல்லமல்கள் புரியவேண்டும். இஸ்லாமியக் கல்வியைக் கற்கவேண்டும்.
பிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது
பெண்ணின் உடல் அலங்காரம்
பெண்களின் இயற்கையான பண்புகளோடு தொடர்புள்ளவற்றையே அவளிடமிருந்து எதிர்பார்க்கவேண்டும். நகம் வெட்டுவதும் அதை வழக்கமாக தொடர்ந்து செய்து வருவதும் நபிவழியாக இருக்கிறது. இவை ஹதீஸில் வந்துள்ள மனிதன் இயல்பாகவே செய்யக்கூடிய விஷயங்களாக உள்ளன. நகத்தைக் களைவதால் சுத்தம் ஏற்படுகிறது. அழகு கிடைக்கிறது. அது நீண்டதாக வளர்ந்திருப்பதில் அவலட்சனம் இருக்கின்றது. நகத்தைக் களையாமல் விட்டு விடுவதால் மிகப்பெரிய (தொல்லைகள்) ஏற்படுகின்றன. கோரப் பிராணிகளுக்கு ஒப்பாக (விரல்கள்) ஆகிவிடுகிறது. அதற்கு கீழாக அழுக்கு சேர்ந்து விடுகிறது. அதில் தண்ணீர் சென்றடைவதைத் தடுக்கிறது, நபிவழியை மறந்து, இறைமறுப்பாளர்களைப் பின்பற்றி நகத்தை நீளமாக வளர்க்கும் ஒரு வித சோதனைக்கு சில பெண்கள் ஆளாம்யுள்ளனர்.
அக்குள்முடி, மர்மஸ்தான முடியைக் களைவதும் பெண்களுக்கும் சுன்னத்தாக உள்ளது. அதில் அழகும் இருக்கிறது. வாரம் ஒரு முறை களைய வேண்டும். முடியாவிட்டால் நாற்பது நாட்களுக்கு ஒரு முறையாவது களைதல் சிறந்ததாகும்.
பெண்ணின் தலைமுடி அலங்காரம்
அ. முஸ்லிம் பெண் தன் தலைமுடியை நீளமாக விட வேண்டும். காரணமின்றி தலையை மொட்டையடிப்பது விலக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் மார்க்க தீர்ப்பு வழங்கும் அறிஞர்களில் ஒருவரான ஷேக் முஹம்மத் பின் இப்ராஹீம் ஆலுஷேக் அவர்கள் கூறுகிறார்கள்.
''பெண்கள் தங்கள் தலைமுடியை மழித்தல் கூடாது.''
''பெண் தன் தலைமுடியை மழிப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்'' என அலீ(ரழி), உஸ்மான், இக்ரிமா போன்ற நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர். (நூற்கள்: நஸயீ, பஸ்ஸார் மற்றும் இப்னுஜரீர்)
நபி(ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளதாக ஹதீஸில் ஒரு விஷயம் வருமானால் அது விலக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் குறிக்கும். அதற்கு மாற்றமமான இன்னொரு விஷயம் வந்தாலே தவிர.
முல்லா அலிகாரி அவர்கள் 'மிஷ்காத்' என்ற நூலின் விரிவுரையான தன்னுடைய 'மிர்காத்' என்ற நூலில் கூறுகிறார். ''பெண் தன் தலைமுடியை மளிப்பது கூடாது என்பது எதற்காகவென்றால் பெண்கள் கூந்தலை விடுவது தோற்றத்திலும் அழகிலும் ஆண்கள் தாடி விடுவதற்கு ஒப்பானதாகும்.'' (ஷேக் முஹம்மதுபின் இப்ராஹீம் பத்வா தொகுப்பு 2அ ப49)
ஒரு பெண் தன் தலைமுடியை நீளமாக விடுவது சிரமமானதாகவோ, அதைப் பராமரிப்பதற்கானச் செலவை மேற்கொள்வது அவளுக்கு முடியாமலோ இருக்குமானால் தேவையான அளவு அலங்காரத்தை நோக்கமாகக் கொள்ளாது. தலைமுடியை குறைத்துக் கொள்வதில் தவறில்லை. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் அவர்களின் சில மனைவிமார்கள், அலங்காரத்தை விட்டுவிட வேண்டும் என்பதற்காகவும், நீண்ட முடி வளர்க்கும் தேவையற்று இருந்ததாலும் தங்கள் தலைமுடியை குறைத்துக் கொண்டார்கள்.
அதேநேரத்தில் இறைமறுப்பாளர்கள் மற்றும் தீயவர்களுக்கு ஒப்பாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலோ, ஆண்களுக்கு ஒப்பாக தோற்றமளிக்கவேண்டும் என்ற எண்ணத்திலோ ஒரு பெண் தன் தலைமுடியைக் குறைப்பாளானால் அது தடை செய்யப்பட்டதாகும். பொதுவாகவே இதைத் தடை செய்வதற்குண்டான ஆதாரங்கள் உள்ளன. அதே நேரத்தில் அலங்காரத்திற்காக அவ்வாறு செய்வாளானால் நாம் அறிந்தவரை அது அனுமதிக்கப்படாததாகும்.
முஹம்மத் அமீன் சின்கீதீ 'அள்வாஉல் பயான்' எனும் குர்ஆன் விளக்கவுரை நூலில் குறிப்பிடுகிறார்.
''தற்போது அதிமான நாடுகளில் பழக்கத்தில் காணப்படுகின்ற பெண்கள் தங்கள் தலைமுடியை முழுமையாக வெட்டிக் கொள்வது என்பது இஸ்லாமிய பெண்களும் இஸ்லாத்திற்கு முற்காலத்திலுள்ள அரபியப் பெண்களும் செய்துவந்த பழக்கத்திற்கு நேர் மாற்றமான கலாச்சாரமாகும். இது மார்க்கத்திலும் பண்பாட்டிலும் பரந்து விட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.''
நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் தங்கள் தலை முடியைக் குறைத்து குட்டையாக ஆக்கிக் கொள்வார்கள். என ஹதீஸில் வந்ததன் விளக்கம் என்னவென்றால், நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் அவர்களின் மனைவிமார்கள் அவர்களுக்காக தங்களை அலங்கரித்துக் கொள்வார்கள். அவர்களின் தலை முடிதான் மிகவும் அழகானதாகும்.
நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அவர்களின் மனைவிமார்களுக்கென தனிச்சட்டங்கள் உள்ளன. இந்த சட்டங்களில் பூமியில் உள்ள எந்த ஒரு பெண்ணும் கூட்டாக முடியாது. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் அவர்களின் மனைவிமார்களை வேறு யாரும் திருமணம் செய்ய முடியாது. ஆசையில்லாத அளவிற்கு அவர்கள் திருமணத்திலிருந்து நிராசையாகிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்ற காரணத்தினால் அப்பெண்களின் மரணம் வரை இத்தாவில் இருக்கின்ற பெண்களைப் போன்றிருக்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: ''அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு உகந்ததல்ல, மேலும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒரு போதும் கூடாது.
நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் பாவமான காரியமாகும்.'' (அல்குர்ஆன் 33:53)
ஆண்களிலிருந்து முழுமையாகவே அவர்கள் நிராசையாகிவிட்டதால் மற்ற பெண்களுக்கு அனுமதிக்கப்படாத சில விஷயங்கள் இவர்களுக்கு சலுகை வழங்கப்படுவதற்கு காரணமாக இருக்கலாம். அல்வாஉல் பயான் (5அ ப598 - 601)
பெண்கள் தன் தலை முடியைப் பாதுகாக்க வேண்டும், அதை கண்காணிக்கவேண்டும் அதை கோர்வையாகப் பிண்ணிப்போடவேண்டும். முடியை தலைக்கு மேலோ அல்லது தலைக்குப் பின் பக்கமோ கொண்டை போன்று குவித்து வைப்பது கூடாது.
மேலும், இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தம் ஃபத்வா தொகுப்பில் கூறுகிறார்கள். சில மோசமான பெண்கள் தங்கள் தலைமுடியை ஒன்றாகச் சேர்த்து ஒரே கூந்தலாக்கி தங்கள் இரண்டு புஜத்திற்கிடையில் தொங்கவிடுகின்றனர். (பக்கம் 22அ ப பக்கம் 145)
சவூதி அரேபியாவின் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் அறிஞர்களில் ஒருவரான ஷேக் முஹம்மத் பின் இப்றாஹீம் அவர்கள் கூறுகிறார்கள்: இக்காலத்தில் சில முஸ்லிம் பெண்கள் தங்கள் தலை முடியை ஒரு ஓரத்திலிருந்து சீவி முடியை ஒன்று சேர்த்து தலைக்குப் பின் பக்கமாக விடுவதும் அல்லது தலைக்கு மேலே சேர்த்துவைப்பதும் ஃபிரஞ்ச் கலாச்சாரமாகும், இவ்வாறு செய்வது கூடாது. அவ்வாறு செய்வது இறை மறுப்பாளர்களுக்கு ஒப்பானதாகும்.
''என் சமுதாயத்தில் இரண்டு கூட்டத்தினர் நரக வாசிகளாக இருக்கின்றனர். அவர்களை நான் பார்த்ததில்லை (அதாவது அவர்கள் நான் வாழும் காலத்தைச் சார்ந்தவர்கள் அல்லர்). ஒரு சாரார் மாட்டு வாலைப் போன்ற சாட்டையை தங்களின் கையில் வைத்துக் கொண்டு மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் ஆடை அணிந்திருந்தும் நிர்வாணமானவர்களாகக் காட்சியளிக்கும் பெண்கள்; அவர்கள் ஆடிஆடி நடப்பார்கள் பிறரையும் அவர்கள் பால் சாய வைப்பார்கள். அவர்களின் தலை சாய்ந்த ஒட்டகத்தின் திமில் போல் இருக்கும் அவர்கள் சுவர்க்கம் செல்லவும் மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சுவர்க்கத்தின் நறுமணம் நீண்ட தூரத் திலிருந்து வீசும்.' என்று நபி(ஸல்) அவர்கள் கூறும் றார்கள்'' என அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம்)
ஆடிஆடி நடப்பார்கள் என்பதன் பொருள், தவறான விபச்சாரிகள் தங்கள் தலையை சீவிக் கொள்வது போன்று இவர்கள் தங்கள் தலையைச் சீவிக் கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல் மற்றபெண்களுக்கும் அவ்வாறு சீவிவிடுவார்கள். இவ்வாறு செய்வது ஃபிரஞ்ச்காரர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றக் கூடியவர்களின் கலாச்சாரமாகும்.
முஸ்லிம் பெண்கள் தங்கள் தலைமுடியை மொட்டை அடிப்பது எவ்வாறு கூடாதோ அவ்வாறே காரணமின்றி தலைமுடியைக் குறைத்துக் கொள்வதும் கூடாது. 'விக்' மற்றும் 'சவுரி' போன்ற ஒட்டு முடிகள் வைத்துக் கொள்வதும் கூடாது.
''பிறருக்கு தன் முடியுடன் வேறு முடியைச் சேர்த்து வைப்பவள், தன் முடியுடன் வேறு முடியை சேர்க்கும் படி கேட்பவளையும் நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.'' (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
இவ்வாறு செய்வதனால் ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. 'டோப்பா' மற்றும் 'விக்' இந்த வகையைச் சார்ந்ததுதான்.
''முஆவியா(ரழி) ஒரு முறை மதீனாவிற்கு வந்தபோது மக்களுக்கு பிரசங்கம் செய்தார்கள். அப்போது முடிக் கற்றை ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு, 'உங்கள் பெண்களுக்கு என்ன நேர்ந்தது? இதுபோன்ற முடிகளை எல்லாம் அவர்கள் தங்கள் தலையில் இணைக்கின்றனர்.' 'எந்த ஒரு பெண்ணாவது தன் தலைமுடியுடன் வேறு முடியைச் சேர்த்து வைப்பாளானால் அது ஏமாற்றம், மோசடி செய்யக்கூடியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்'' எனக் கூறினார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஆ. ஒரு முஸ்லிம் பெண் தன் புருவ முடிகள் முழுவதுமாகவோ, கொஞ்சமாகவோ களைவது தடை செய்யப்பட்டுள்ளது. கத்தியால் மளிப்பதோ, கத்திரியால் வெட்டுவதோ கூடாது.
''புருவ முடியை முழுவதுமாகவோ, கொஞ்சமாகவோ நீக்கக்கூடியவளையும், தனக்கு நீக்கிவிடும் படி கேட்பவளையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.''
இவ்வாறு செய்வது அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் ஏற்படுத்துவதாகும். மனிதர்களிடத்தில் இவ்வாறு மாற்றங்களைத் தான் செய்யப்போவதாக ஷைத்தான் அல்லாஹ்விடம் சபதம் எடுத்துள்ளான். அதையே இன்று அவன் செயல்படுத்தியும் வருகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: ''இன்னும் அல்லாஹ்வுடைய படைப்புகளின் கோலங்களை மாற்றும்படி (மனிதர்களை) ஏவுவேன் என்றும் ஷைத்தான் கூறினான்.'' (அல்குர்ஆன் 4:119)
''பச்சைக் குத்திக்கொள்ளக்கூடியவளையும், பிறருக்கு பச்சைக் குத்துபவளையும், புருவமுடியை எடுப்பவளையும், பிறருக்கு எடுத்து விடுபவளையும், அழகிற்காக பற்களுக்கிடையில் இடைவெளி ஏற்படுத்தி அல்லாஹ் வின் படைப்பில் மாற்றம் ஏற்படுத்துபவளையும் அல்லாஹ் சபிக்கின்றான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் கூறிவிட்டு, 'இறைத் தூதர் சபித்தவர்களை நானும் சபிக்கக்கூடாதா? இது அல்லாஹ்வின் வேதத்திலும் உள்ளதே' என்றும் அவர்கள் கூறிவிட்டு, 'இறைத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கிறாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும் எதை விட்டும் அவர் உங்களைத் தடுத்தாரோ அதைவிட்டும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்'' (அல்குர்ஆன் 59:7) என்ற குர்ஆன் வசனத்தையும் ஓதினார்கள். (நூல்: திர்மிதி)
இறைவனின் சாபத்தை உண்டாக்கும் பெரும் பாவங்களில் ஒன்றான இவ்விஷயத்தில் அதிகமான பெண்கள் இன்று சிக்கியுள்ளனர். புருவமுடியை நீக்குவது அன்றாட முக்கிய வேலைகளில் ஒன்றாகி விட்டது. ஒரு பெண்ணை இவ்வாறு செய்து கொள்ளுமாறு அவளுடைய கணவன் தூண்டினாலும் அவள் அவனுக்குக் கட்டுப்படக்கூடாது. ஏனெனில் பாவமான காரியங்களில் கட்டுப்படுதல் மார்க்கமாக இல்லை.
இ. அழகுக்காக ஒரு பெண் தன் பற்களைத் தீட்டி அவற்றிற்கு இடையில் இடைவெளி ஏற்படுத்துவதும் தடுக்கப்பட்டதாகும். அதே நேரத்தில் பற்களுக்கிடையில் இயற்கையாகவே குறை இருக்குமானால் அதைப் போக்கிக் கொள்வதற்காக ஒழுங்குபடுத்திக் கொள்வதும், பற்களில் வேறு ஏதேனும் புளு அரித்திருந்தால் அவற்றைச் சீர்செய்து கொள்வதும் தவறாகாது. இது, பற்களில் காணப்படும் குறைகளைப் போக்குவதற்காக பல் மருத்துவ நிபுணர்கள் செய்யும் சிகிச்சையாகும்.
ஈ. பெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
'தன் உடம்பில் பச்சைக் குத்திக்கொள்ளக் கூடியவளையும், பச்சை குத்தும்படி கேட்பவளையும் நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.
பச்சைக்குத்துவது என்பது ஊசி போன்ற பொருளால் கை அல்லது முகம் போன்ற உறுப்பில் குறை ஏற்படுத்தி அந்த இடத்தில் சுர்மா, மை போன்றவற்றை வைத்து அடையாளமிடுவது, இது விலக்கப்பட்டதும், பெரும்பாவங்களில் ஒன்றுமாகும். இதை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள் என்றால் அது பெரும் பாவமாகத்தான் இருக்கவேண்டும்.
பெண்கள் முடிக்கு சாயமடிப்பது, நகை அணிவது பற்றிய சட்டம்
1. பெண்கள் முடிக்கு சாயமடிப்பதும், நகை ஆபரணம், அணிவதும், திருமணமான பெண்கள் கைகளிலும் கால்களிலும் மைலாஞ்சி இடுவதும் அனுமதிக்கப் பட்டதாகும். இது குறித்து பிரபலமான ஹதீஸ்கள் உள்ளன. என இமாம் நவவீ தம் மஜ்மூவு என்ற நூலில் அத்தியாயம் 1 பக்கம் 324ல் குறிப்பிடுகிறார்கள்.
ஒரு பெண் ஆயிஷா(ரழி) அவர்களிடத்தில் வந்து மைலாஞ்சி இடுவதைப் பற்றிக்கேட்டாள். அதில் எந்த தவறுமில்லை, ஆனால் நான் அதை விரும்பவில்லை, காரணம் என் அன்பிற்குரிய நபி(ஸல்) அவர்கள் அதன் வாடையை வெறுப்பவர்களாக இருந்தார்கள். (நூல்: நஸயீ)
மேலும், ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார், ''ஒரு பெண் திரைக்கு அப்பால் நின்று கொண்டு தன் கையில் ஒரு கடிதத்தை வைத்து நபி(ஸல்) அவர்களிடத்தில் நீட்டினாள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தன் கையை மூடிக் கொண்டு அது ஆணுடைய கையா அல்லது பெண்ணின் கையா என்பது எனக்குத் தெரியாது, என்றார்கள், அது பெண்ணுடைய கைதான் என ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள். அப்போது 'நான் பெண்ணாக இருந்திருந்தால் உன்னுடைய நகங்களை மைலாஞ்சியால் சாயமிட்டிருப்பேன்' என அந்தப் பெண்ணிடம் கூறினார்கள். (ஆதாரம்: அபூதாவூத், நஸயீ)
ஆனால் தண்ணீர் செல்லமுடியாத அளவிற்கு தடையாக இருக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது கூடாது.
2. பெண்கள் நரைத்த தலைமுடியை கருப்பு அல்லாத நிறங்களைக் கொண்டு சாயமிடுவது அனுமதிக்கப் பட்டுள்ளது. கருப்புசாயமிடுவதை பொதுவாக நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
இமாம் நவவீ குறிப்பிடுகிறார்கள்: ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தன் முடிக்கு கருப்பு சாயமிடுவது தடை செய்யப் பட்டுள்ளது. இதில் ஆண் பெண் என்று பாகுபாடு கிடையாது. (ரியாலுஸ்ஸாலிஹீன், மஜ்மூவு)
ஒரு பெண் தன் கருத்த தலைமுடியை வேறு நிறமாக மாற்றுவதற்கு சாயத்தைப் பயன்படுத்துவதும் கூடாது, அதற்கு எந்தத் தேவையும் இல்லை, காரணம் முடியைப் பொறுத்தவரையில் கருப்பாக இருப்பது தான் அழகு, கருப்பாக இருக்கும் முடியை வேறு நிறமாக மாற்றுவது நிராகரிப்பாளர்களுக்கு ஒப்பானதாகும்.
3. பெண் தங்கம் வெள்ளிபோன்ற ஆபரணங்களால் தன்னை அலங்கரித்துக் கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. இது அறிஞர்களின் ஏதோபித்த முடிவாகும். ஆனால் அன்னிய ஆடவர்களுக்கு தன் அலங்காரத்தை வெளிப்படுத்துவது கூடாது, மறைக்கவேண்டும். குறிப்பாக வீட்டின் வெயியே செல்லும்போதும், ஆண்களின் பார்வை படும் போதும் அதை மறைத்துக் கொள்ளவேண்டும், காரணம் அது தவறுகள் நடக்கக் காரணமாகிறது. ஆடைகளில் அடியில் உள்ள காலின் நகைகளின் சப்தத்தையே ஆண்கள் கேட்கும் அளவிற்கு வெளிப்படுத்துவது கூடாது என்று இருக்கும்போது, வெளிப்படையாக அணியும் ஆபரணங்களையும் (வெளியாக்குவது) கூடாது தான்.
அல்லாஹ் கூறுகிறான்: பெண்கள் தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து ஏதேனும் வெளிப்படுமாறு தங்களின் கால்களை (தரையில்) தட்டிதட்டி நடக்கவேண்டாம்.'' (அல்குர்ஆன் 24:31)
பிரிவு 3 - மாதவிடாய், தொடர் உதிரப்போக்கு, பிரசவம் பற்றியது
மாதவிடாய்
பெண்களின் கற்பப்பையின் அடியிலிருந்து நோய் ஏதும் இல்லாத நிலையில் குறிப்பிட்ட நாட்களுக்கு வெளியாகும் இரத்தம் மாதவிடாய் எனப்படும். பெண்களுக்கு இறைவன் இயற்கையாகவே ஏற்படுத்தியுள்ளது தான் மாதவிடாயாகும். பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் கற்பத்திலுள்ள குழந்தைக்கு அதை உணவாக இறைவன் ஆக்கியிருக்கிறான். குழந்தை பிறந்த பின்பு அது பாலாக மாறிவிடுகிறது. ஒரு பெண் கற்பமாகவோ பாலூட்டக்கூடியவளாகவோ இல்லாதபோது அது குறிப்பிட்ட நேரத்தில் வெளியே வந்துவிடுகிறது. பெண்கள் தங்கள் உடல் பழக்கத்தை வைத்து அந்த நாள் எது என்பதை அறிந்து கொள்வார்கள்.
மாதவிடாய்க்கான வயது
பொதுவாக ஒன்பது வயதிலிருந்து ஐம்பது வயது வரை மாதவிடாய் வெளியாகும் வயதாகக் கணிக்கப் படுகிறது.
''மேலும் உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களின் இத்தாவை கணக்கிடுவது
பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் அப்பெண்களுக்கும் மாத விடாயே ஏற்படாத பெண்களுக்கும் இத்தா(வின் தவணை) மூன்று மாதங்களாகும்.'' (அல்குர்ஆன்: 65:4)
இந்த வசனத்தில் நிராசையாகிவிட்டவர்கள் என்பது ஐம்பது வயதைத் தாண்டியவர்கள் ஆவர். மாதவிடாய் ஆகாதவர்கள் ஒன்பது வயதிற்குக் கீழ் உள்ளவர்களைக் குறிக்கும் என தீர்மானித்துக் கொள்ளலாம்.
மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள்
1. பெண்கள் மாதவிடாயாக இருக்கும்போது அவளுடன் உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ்கூறுகிறான்: ''(நபியே!) அவர்கள் உம்மிடம் மாதவிடாய் பற்றியும் கேட்கிறார்கள். அது ஒரு தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் விலகியிருங்கள், அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள் அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள், என்று நீர் கூறும்! நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீள்பவர்களை நேசிக்கிறான்; தூய்மை யானவர்களையும் நேசிக்கிறான்.'' (அல்குர்ஆன் 2:222)
மாதவிடாய் இரத்தம் வெளியாகி முடிந்து குளிக்கும் வரை இந்தத்தடை நீடிக்கும். காரணம் அல்லாஹ்வுடைய சொல்லாகும்.
'' (மாதவிடாய்) பெண்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள், அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அப்படி அவர்களிடம் செல்லுங்கள்.
மனைவி மாதவிடாயாக இருக்கும் நிலையில் கணவன் உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டாலும் மர்ம உறுப்புக்கள் சேராதவிதத்தில் மனைவியிடம் இன்பம் அனுபவிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.
''பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் உடலுறவைத் தவிர (விரும்பிய) மற்றதை செய்து கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
2. ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழுவது, நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் அவள் இந்த வணக்கங்களைச் செய்தாலும் அது அங்கீகரிக்கப்படாது.
''ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்கவில்லையா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஒரு பெண் மாதவிடாய்க் காலத்தில் விடுபட்டுப் போன தொழுகைகளை அக்காலம் முடிந்தபின் தொழ வேண்டியதில்லை, விடுபட்ட நோன்புகளை மட்டும் நோற்க வேண்டும்.
''நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் விடுபட்ட நோன்பை நோற்றுக் கொள்ளுமாறு நாங்கள் ஏவப்பட்டோம். விடுபட்ட தொழுகையை நிறைவேற்றுமாறு நாங்கள் ஏவப்படவில்லை'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம்)
நோன்பிற்கும் தொழுகைக்கும் இடையில் வேறு படுத்தப்பட்டிருப்பதற்குக் காரணம் உண்டு. தொழுகை நாள் ஒன்றிற்கு ஐவேளைகள் நிறைவேற்றியாக வேண்டிய ஒரு கடமையாகும். தகுந்த காரணங்களுக்காக விடுபட்ட தொழுகையை களா செய்ய வேண்டியது கடமையல்ல, ஆனால் நோன்பு அவ்வாறு அல்ல.
மாதவிடாய் பெண் குர்ஆனை திரையின்றி தொடுவது தடுக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: ''பரிசுத்தமானவர்களைத் தவிர அதை யாரும் தொடமாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 56:79)
''நபி(ஸல்) அவர்கள் அம்ர் இப்னு ஹஸ்கி என்பவருக்கும் எழுதிய கடிதத்தில் தூய்மையானவர்களைத் தவிர யாரும் முஸ்ஹஃபைத் தொடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.'' (நூல்: நஸயீ)
இது பிரபலமான, சரியான ஹதீஸாகும். துய்மையானவர்களைத் தவிர மற்றவர்கள் முஸ்ஹஃபைத் தொடக் கூடாது என்பதே நான்கு இமாம்களின் கருத்தாகும்.
3. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண் குர்ஆனைத் தொடாத நிலையில் அதை ஓதிக்கொள்ளலாம் என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மறந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படும் அத்தியாவசியமான நிலையில் வேண்டுமானால் குர்ஆனை ஓதலாம்.
4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒரு பெண் மக்காவிலுள்ள கஅபாவை வலம் வருவதும் தடுக்கப் பட்டுள்ளது.
ஆயிஷா(ரழி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட போது ''ஹாஜிகள் செய்யவேண்டிய எல்லா கிரியை களையும் நீ செய்து கொள்! ஆனால் 'தவாஃப்' மட்டும் செய்யாதே! சுத்தமான பின்பே அதைச் செய்துகொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.'' (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
5. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் ஒரு பெண் பள்ளி வாசலில் தங்குவதும் கூடாது.
''மாதவிடாய்ப் பெண்ணிற்கும், குளிப்பு கடமையானவர்களுக்கும் பள்ளிவாசலில் தங்குவதை நான் அனுமதிக்கவில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: அபூதாவூத், இப்னுமாஜா)
''நிச்சயமாக பள்ளிவாசல் மாதவிடாய் பெண்ணிற்கும், குளிப்பு கடமையானவருக்கும் ஆகுமானதல்ல, என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேற்கண்ட நபிமொழியில் இடம் பெறுபவர்கள் பள்ளிவாசலில் தங்காது அவசியத்தேவைக்காக அதைக் கடந்து செல்வது மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு ஆயிஷா(ரழி) அவர்களிடம் தொழுவதற்கான பாயை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார்கள், அப்போது நான் மாதவிடாய்க் காரியாக இருக்கிறேனே என அவர்கள் கூறியதற்கு 'மாதவிடாய் உன்னுடைய கையில் இல்லையே!'' என்று நபி(ஸல்) அவர்கள் (தெளிவுபடக்) கூறினார்கள். (நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ மற்றும் நஸயீ)
அனுமதிக்கப்பட்ட திக்ருகள், துஆக்களை மாத விடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒருபெண் ஓதிக் கொள்வதில் தவறில்லை. காலை மாலையில் வழக்கமாக ஓதக்கூடியவற்றை ஒதிவருவதும், தூங்கும்போதும், தூக்கத்திலிருந்து எழுந்ததும் துஆக்கள் ஓதுவதிலும், தஃப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ் போன்ற நூல்களைப் படிப்பதிலும் தவறில்லை.
மஞ்சள், கலங்கல் நிற இரத்தம்
மஞ்சள் நிறச்சீழ் போன்ற இரத்தமோ, கலங்கலான, ஊத்தைத் தண்ணீர் நிறத்தைப் போன்ற இரத்தமோ மாதவிடாய்க் காலத்தில் வெளியாகுமானால் அது மாதவிடாய் இரத்தமாகவே கருதப்படும். மாதவிடாய்க்கான சட்டம்தான் அதற்கும் பொருந்தும். மாதவிடாய் அல்லாத நாட்களில் அது வெளியாகுமானால், மாதவிடாய் இரத்தமாக அது கருதப்படாது. அவள் தூய்மையானவளாகவே கருதப்படுவாள்.
''நாங்கள் மாதவிடாயிலிருந்து தூய்மையான பிறகு வெளியாகும் மஞ்சள் அல்லது கலங்கல் நிற இரத்தத்தை (மாதவிடாய் என) ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என உம்மு அதிய்யா(ரழி) கூறினார்.'' (நூற்கள்: புகாரி, அபூதாவூத்)
இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் இந்த ஹதீஸ் நபி(ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் ஹதீஸின் சட்டமாகும் என்று ஹதீஸ் கலை அறிஞர்களிடம் கருதப்படுகிறது.
மாதவிடாய்க் காலத்தில் மேற்குறிப்பிட்ட இரண்டு விதமான இரத்தமும் வெளியானால் அதுவும் மாதவிடாயாகவே கருதப்படும்.
மாதவிடாய் முடிவை ஒருபெண் அறிவது?
1. இரத்தம் நின்றுவிடுவதன் மூலம் அதை அவள் அறிந்து கொள்வாள், இதற்கு இரண்டு அடையாளங்கள் உள்ளன. ஒன்று மாதவிடாய் இரத்தம் நின்றபின் தொடரும் தண்ணீர் போன்ற வெள்ளை நிற திரவப்பொருள். சிலசமயம் பெண்களின் உடற்கூறைப் பொறுத்து வெவ்வேறு நிறங்களிலும் வெளியாகும்.
2. மர்ம உறுப்பு, திரவங்கள் ஏதும் இன்றி காய்ந்த நிலையில் காணப்படுவது. அதாவது இரத்தம் வெளியாகும் இடத்தில் பஞ்சு அல்லது துணியை வைத்துவிட்டு வெளியே எடுக்கும்போது அதில் எவ்வித இரத்த முமில்லாமல் காய்ந்த நிலையில் காணப்படுவது.
4. மாதவிடாய் நின்றுவிட்ட பெண் என்ன செய்யவேண்டும்.
மாதவிடாய் நின்றதும் குளிப்பது கடமையாகும். மாதவிடாய் நின்றதற்கான குளியலை நிறைவேற்றுவதாக நினைத்து (நிய்யத் வைத்து)க் கொள்ளவேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரழி) அவர்களிடம் ''மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு! அது நின்றதும் குளித்துவிட்டு தொழுது கொள்!'' என்று கூறினார்கள். (நூல்: புகாரி)
குளிக்கும்போது அசுத்தத்திலிருந்து தூய்மையாகப் போவதாக மனதில் நினைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் பிஸ்மில்லாஹ் சொல்லி தன் உடல் முழுவதும் தண்ணீர் ஊற்ற வேண்டும். தலைமுடியின் அடிப்பாகங்களை நனையும்படிச் செய்யவேண்டும். தலைமுடி அடர்த்தியாக இருந்து, சடை பின்னப்பட்டிருக்குமானால் அதை அவிழ்க்கவேண்டும் என்ற அவசியமில்லை. அந்த நிலையில் தண்ணீரை தலையில் ஊற்றினாலே போதுமானது. இலந்த இலை, மற்றும் உடலை சுத்தம் செய்கிற பொருட்களை உபயோகிப்பது சிறந்தது. குளித்த பின் பஞ்சில் நறுமணத்தை எடுத்து இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு செய்வதை நபி(ஸல்) அவர்கள் அஸ்மா(ரழி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
முக்கிய விஷயம்
மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண், அல்லது பிரசவமான பெண் சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்னர் சுத்தமாகி விடுவாளானால் அந்த நாளின் லுஹர், அஸர், தொழுகைகளைத் தொழுவது அவள் மீது கடமையாகும். ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பு சுத்தமாகிவிடும் பெண் அந்த இரவின் மக்ரிப், இஷா தொழுகைகளைத் தொழுவது அவள் மீது கடமையாகும். இதுபோன்ற காரணங்கள் ஏற்படும்போது இரண்டாவது தொழுகையின் நேரம் முதல் தொழுகையின் நேரமாக உள்ளது.
இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பில் 22அ ப434 ல் கூறுகிறார்கள்.
மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண் பகலின் கடைசிப் பகுதியில் தூய்மையாகி விடுவாளானால் அன்றைய லுஹர், அஸர் தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும். இரவின் கடைசியில் தூய்மையாகி விடுவாளானால், மக்ரிப் மற்றும் இஷாத் தொழுகைகளை சேர்த்துத் தொழவேண்டும். என மாலிக் ஷாஃபியீ, அஹ்மத் போன்ற பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், அபூஹுரைரா, இப்னு அப்பாஸ்(ரழி) போன்ற நபித்தோழர்களும் இவ்வாறே கூறியுள்ளனர்.
'லுஹர்' தொழுகைக்கான நேரம் எஞ்சியிருக்கும் நிலையில் பகலின் கடைசிப் பகுதியில் தூய்மையாகும் பெண், 'அஸர்' தொழுகைக்கு முன்பாக 'லுஹர்' தொழவேண்டும். 'மக்ரிபு'டைய நேரம் எஞ்சி இருக்கும் நிலையில் தூய்மையாகும் பெண் 'இஷா'விற்கு முன் 'மக்ரிப்' தொழவேண்டும்.
தொழுகைக்கான நேரம் வந்த பிறகு அதை நிறைவேற்றுவதற்கு முன்பாக ஒரு பெண் மாதவிடாய்க் காரியாக ஆகிவிட்டால், அல்லது அவளுக்கு பிரசவத்தீட்டு ஏற்பட்டுவிட்டால் அவள் அத்தொழுகையை (தூய்மையானதும்) திரும்பத் தொழவேண்டியதில்லை.
ஆதாரத்தின் அடிப்படையில் இமாம் அபூஹனீஃபா மற்றும் இமாம் மாலிக் அவர்கள் கூறும் கருத்து என்னவென்றால், அந்த பெண் மீது அந்தத் தொழுகையை நிறைவேற்றுவது கடமையில்லை. திரும்ப தொழ வேண்டு மென்பதற்கும் புதிய கட்டளை வேண்டும். ஆனால் இங்கு எந்த கட்டளையும் இல்லை, காரணம் அந்தப்பெண் அந்தத் தொழுகையை அனுமதிக்கப்பட்ட நேரத்தில்தான் பிற்படுத்தினாலே தவிர நேரம் கடந்தும் தொழாமல் இருக்கவில்லை.
தூங்கிவிட்டவன் அல்லது மறந்து விட்டவன் அத்தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பது (களா) திரும்பத் தொழவேண்டும் என்ற அடிப்படையில் அல்ல. தூக்கத்திலிருந்து எழும்போது அல்லது அந்தத் தொழுகையைப் பற்றிய நினைவு வரும்போதுதான் அதன் நேரம் அவனுக்கு (உண்டாகின்றது) வருகிறது என்பதை அறிய வேண்டும்.
உதிரப்போக்கு
மாதவிடாய் நாட்கள் அல்லாத மற்ற நாட்களில் பெண்களுக்கு வெளியாகும் உதிரப்போக்கை சாதாரணமான இரத்தம் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். மாதவிடாய் இரத்தமும், இந்த இரத்தமும் ஒன்றுபோல் காணப்படுவதால் இரண்டயையும் பிரித்து அறியும் விஷயத்தில் சில சிரமங்கள் உள்ளன.
உதிரப்போக்கு தொடர்ச்சியாக இருந்தால் மாதவிடாய் இரத்தம் எது, சாதாரணமான இரத்தம் எது, எந்த இரத்தம் வருவதால் தொழுகையை விட வேண்டும் என்பதையெல்லாம் தெரிவது கடமையாகும். பெண்களுக்கு உதிரப்போக்கு மூன்று நிலைகளில் உள்ளது.
1. ஒரு பெண்ணுக்கு தொடர் உதிரப்போக்கு ஏற்படுவதற்கு முன்பு ஏற்கனவே மாதத்தின் ஆரம்பத்திலோ, நடுவிலோ அல்லது கடைசியிலோ, ஐந்து, எட்டு, அல்லது குறிப்பிட்ட சில நாட்கள் மாதவிடாய் ஏற்படும் வழக்கமுள்ளவளாக இருப்பாள். இந்நாட்கள் தான் அவளுடைய மாதவிடாய் நாட்கள் என்பதை அறிந்து கொள்வாள். அந்நாட்களில் அவள் தொழுகை மற்றும் நோன்பை விட்டுவிட வேண்டும். குறிப்பிட்ட நாட்கள் முடிந்ததும் அவள் குளித்துத் தூய்மையாகி தொழுகையைத் தொடரவேண்டும். அதற்குமேல் தொடரும் உதிரப்போக்கை சாதாரணமான இரத்தம் எனக் கருதவேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹபீபா(ரழி) அவர்களி டம், ''உன்னுடைய மாதவிடாய் நாட்களின் அளவு நீ தொழாமல் இருந்துகொள்! அதன் பின்னர் குளித்துத் தூய்மையாகி தொழுகையைத் தொடர்ந்து கொள்!'' என்று கூறினார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
2. ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மாதவிடாய் இத்தனை நாட்கள்தான் என்பது திட்டவட்டமாகத் தெரியாது இருக்கும்போது, இரத்தத்தின் நிறம், வாடை ஆகியவற்றை வைத்து உதிரப்போக்கு எது என்பதை தெரிந்து கொள்ளலாம். அது கருப்பு நிறமாகவோ, நாற்றமுடையதாகவோ இருக்குமானால் மாதவிடாய் இரத்தம் என கணிக்கப்படும். மாதவிடாய் இரத்ததைப் பொறுத்த வரையில் அது சிகப்பு நிறமாகவும் இருக்கும். இதை வைத்து ஒரு பெண் தனக்கு ஏற்பட்டுள்ளது மாதவிடாய் இரத்தம்தான் என்பதை அறிந்துகொண்டு அந்நாட்களில் தொழுகை, நோன்பை விட்டு விட வேண்டும். அவள் எதை மாதவிடாய் இரத்தம் எனத் தீர்மானிக்கிறாளோ அந்நாள் முடிந்ததும் குளித்துவிட்டு தொழுகை மற்றும் நோன்பை கடைபிடிக்க வேண்டும்.
இதற்கு ஆதாரம் பாத்திமா பின்த் அபீஹுபைஷ் அவர்களிடத்தில் நபி(ஸல்) கூறிய ஹதீஸாகும்.
மாதவிடாய் அறியப்படும் விதத்தில் கறுப்பு நிறமுடையதாக இருந்தால் தொழுகையை விட்டுவிடு, வேறு நிறத்தில் இருந்தால் நீ உளு செய்து தொழுது கொள். (அபூதாவூது, நஸயீ)
3. மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே மாதவிடாய் ஏற்படும் என்ற வழக்கம் இல்லாத ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் மற்றும் உதிரப்போக்கை பிரித்தறிய முடியாத நிலை ஏற்படுமானால், ஒரு மாதத்தில் அதிகப்படியாக மாதவிடாய் ஏற்படும் நாட்களாக ஆறு அல்லது ஏழு நாட்களை மட்டும் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும். அதுதான் அதிகமான பெண் களின் மாதவிடாய் நாட்களாகும்.
ஹம்னா பின்த் ஜஹ்ஷ்(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் ''அது ஷைத்தானால் ஏற்படும் தீட்டாகும். நீ ஆறு அல்லது ஏழு நாட்களை மாதவிடாய் நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்! பின்னர் குளித்துக் கொள்! மாதத்தில் 24 அல்லது 23 நாட்கள் தொழுகை நோன்பு ஆகியவற்றை நிறைவேற்றிக்கொள்! அது உனக்கு போதுமானதாகும். இவ்வாறே மற்ற பெண்களைப் போன்று நீ மாதவிடாய் நாட்களைக் கணக்கிட்டுக் கொள் என்று கூறினார்கள். (நூற்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மதி, இப்னுமாஜா, அஹ்மது)
சுருங்கக் கூறினால், மாதவிடாய் இத்தனை நாட்கள்தான் என பழக்கப்பட்டவள் அந்நாட்களை மட்டுமே மாதவிடாய் நாட்களாக எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டு இரத்ததையும் வேறுபடுத்தி அறியக்கூடியவள் அதன்படியே செயல்படவேண்டும். இந்த இரண்டு நிலையிலும் இல்லாத ஒருவள், ஆறு அல்லது ஏழு நாட்களை மாதவிடாய் நாட்கள் என எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் தொடர் உதிரப்போக்குள்ள பெண்ணின் விஷயத்தில் வந்துள்ள மேற்கண்ட மூன்று நபிமொழிகளையும் பின்பற்றியவளாகக் கருதப்படுவாள்.
ஷைகுல்இஸ்லாம் இமாம் இப்னுதைமிய்யா கூறுகிறார். உதிரப்போக்குள்ள பெண்களுக்காக கூறப்பட்ட விஷயங்கள் ஆறு:
1. வழக்கம்: வழக்கமாகக் கடைபிடித்து வரும் ஒன்று உறுதியானதாகும். இங்கு மாதவிடாய்தான் அடிப்படையே தவிர மற்றவை அல்ல.
2. பிரித்தறிதல்: கருப்பான கட்டியான துர்நாற்றமுள்ள இரத்தம் மாதவிடாயாக இருக்க அதிக வாய்ப்புண்டு. ஏனெனில் சிகப்பு நிற மாதவிடாய் இரத்தத்தை பிரித்தறிய முடியும்.
3. அதிகமான பெண்களின் வழக்கத்தை கவனித்தல்: ஒரு தனிநபர் பொதுவாக அதிக மக்களின் வழக்கத்தைக் கடைபிடிப்பதுதான் அடிப்படை.
இந்த மூன்று அடிப்படைகளுக்கும் ஹதீஸ் ஆதாரம் உள்ளது என்று கூறிவிட்டு மற்ற அடையாளங்களைக் குறிப்பிடுகிறார்.
''இது விஷயத்தில் ஹதீஸில் வந்துள்ள அடையாளங்களை வைத்து கவனிப்பதுதான் சரியானதாகும், மற்றவற்றை விட்டுவிட வேண்டியதுதான் என 'நிஹாயா'' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதிரப்போக்குடைய பெண் அவள் சுத்தமானவள் என்ற முடிவின் படி அவள் கடைபிடிக்க வேண்டியவை.
1. முன்பு குறிப்பிட்ட விளக்கத்தின் பிரகாரம் மாதவிடாய் முடிந்ததும் குளிப்பது அவள்மீது கடமையாகும்.
2. ஒவ்வொரு தொழுகையின் போதும் இரத்தம் வெளியாகி அசுத்தமாக உள்ள இடத்தை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். இரத்தம் வரும் துவாரத்தை பஞ்சு போன்ற பொருளால் அடைத்து அது விழுந்து விடாதபடி கட்டி வைக்கவேண்டும். பின்னர் தொழுகை யின் நேரம் வந்ததும் உளூ செய்து தொழவேண்டும்.
உதிரப்போக்குடைய பெண் விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள், ''இப்படிப்பட்ட பெண் அவள் மாதவிடாய் என்று தீர்மானித்த நாட்களில் தொழுகையை விட்டுவிடுவாள். பின்னர் குளித்து ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து கொள்ளவேண்டும்'' என்று கூறினார்கள். (நூற்கள்: அபூதாவூத், இப்னுமாஜா)
உதிரப்போக்குடைய பெண்ணிடம், ''பஞ்சை அந்த இடத்தில் வைத்துக் கட்டிக்கொள்!'' என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதற்கென்றே தற்போது மருத்துவ முறையில் செய்யப்பட்ட பாதுகாப்பான பஞ்சுகள் (Pads) கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிரசவ இரத்தம்
பிரசவ இரத்தம் என்பது பிரசவத்தின் போதும், பிரசவம் முடிந்த பின்பும் கற்பப்பையிலிருந்து வெளியாகும் இரத்தமாகும். இந்த இரத்தம் கற்பக் காலத்தில் கற்பப்பையில் தேங்கியிருந்த இரத்தமாகும். பிரசவம் ஆம்விட்டால் இந்த இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகும்.
பிரசவத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக வெளியாகும் பிரசவத்தின் அடையாள இரத்தமும் பிரசவ இரத்தமாகவே கருதப்படும். இது அதிகமாகவும் பிரசவம் நிகழும் போது தான் வெளியாகும்.
மனித தோற்றம் பெற்று குழந்தை வெளியாவது பிரசவம் எனப்படும். மனித தோற்றம் பெறுவதற்கு குறைந்தது 81 நாட்களோ, அதிகப்படியாக மூன்று மாதங்களோ ஆகும். இதற்கு முன்பாக (81 நாட்கள்) ஏதும் வெளியானால் அதோடு இரத்தம் வந்தால் அந்த இரத்தத்தை உதிரப்போக்கு இரத்தமாகவே கருத வேண்டும். இது கெட்ட இரத்தம், இதற்காக தொழுகை, நோன்பைவிட வேண்டியதில்லை, சாதாரனமான உதிரப் போக்குடைய பெண்ணின் சட்டம்தான் இவளுக்கும் பொருந்தும்.
பிரசவத்திற்குப் பின்னர் வெளிப்படும் இரத்தம் அதிகப்படியாக நாற்பது நாட்கள் வரை நீடிக்கும்.
''நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பிரசவத்தினால் உதிரப்போக்கு ஏற்படும் பெண்கள் நாற்பது நாட்கள் தொழாமல் இருந்துவிடுவார்கள்'' என உம்முஸலமா(ரழி) அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதீ)
நாற்பது நாட்களுக்கு முன் இரத்தம் நின்று தூய்மையாகிவிட்ட பெண் குளித்துத் தொழுகையைத் தொடர வேண்டும். பிரசவ இரத்தத்தின் குறைந்த நாட்கள் எத்தனை என்பதற்கு வரம்பு ஏதும் இல்லை.
நாற்பது நாட்கள் கழிந்த பின்பும் இரத்தம் நிற்காதிருந்தால் அந்நாட்கள் அவளுடைய மாதவிடாய் நாட் களாக இருக்குமானால் அந்த இரத்தத்தை மாதவிடாய் இரத்தமாகக் கருதவேண்டும். மாதவிடாய் நாட்களாக இல்லாமலிருப்பின் அதை சாதாரணமான உதிரப்போக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். நாற்பது நாட்கள் கழிந்த பின்னர் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்கக்கூடாது.
பிரசவ உதிரப்போக்குடைய பெண்களுக்கான சட்டங்கள்
பிரசவ இரத்தம் வெளிப்படும் பெண்களுக்கு மாதவிடாய்ப் பெண்களுக்குள்ள சட்டங்கள்தான்.
1. பிரசவ இரத்தம் வெளியாகும்போது அவளுடன் அவளுடைய கணவன் உடலுறவு கொள்வது கூடாது. உடலுறவைத் தவிர மற்ற இன்பங்களை அனுபவிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.
2. பிரசவ இரத்தம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் பெண் தொழுவது, நோன்பு நோற்பது, கஅபாவை வலம் வருவது கூடாது.
3. பிரசவ இரத்தின்போது விடுபட்டுப்போன நோன்புகளை மற்றநாட்களில் நோற்கவேண்டும். பிரசவ இரத்தம் வெளியாகும் பெண்கள் குர்ஆனை தொடுவதும் அதை ஓதுவதும் கூடாது, குர்ஆன் மறந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டாலே ஒழிய
4. மாதவிடாய் இரத்தம் நின்ற பெண் குளிப்பது எவ்வாறு கடமையோ அவ்வாறே பிரசவ இரத்தம் நின்றதும் குளிப்பது பெண்கள் மீது கடமையாகும்.
இதற்கான ஆதாரங்கள்:
1. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பிரசவமான பெண் நாற்பது நாட்களுக்கு தொழாமலிருந்து விடுவாள் என உம்முஸலமா(ரழி)அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மது, அபூதாவூது, நஸயி, இப்னுமாஜா, திர்மிதி)
இமாமுல்மஜ்த் இப்னு தைமிய்யா முன்தகா எனும் தம் நூலில் 1அ ப184 வது பக்கத்தில் குறிப்பிடுகிறார்.
இந்த ஹதீஸின் பொருள் பிரசவ உதிரப்போக்கு ஏற்பட்டிருக்கும் பெண் நாற்பது நாட்கள் தொழாமல் இருக்குமாறு கட்டளையிடப்பட்டிருக்கிறாள். நபி(ஸல்) அவர்களின் மனைவி அறிவிக்கும் செய்தி முரண்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காக மாதவிடாய், பிரசவ உதிரப்போக்கு விஷயத்தில் ஒரு காலத்திலுள்ள பெண்களின் பழக்கம் ஒன்றுபட்டிருக்க முடியாது என்றே கூறவேண்டும்.
''நபி(ஸல்) அவர்களுடைய மனைவியரில் ஒருவர் பிரசவத்தின்போது நாற்பது நாட்கள் (காத்து) இருப்பார்கள். அந்நாட்களின் விடுபட்டுப்போன தொழுகையைத் தொழுது கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் அப்பெண்களுக்குக் கட்டளையிடமாட்டார்கள்'' என உம்மு ஸலமா(ரழி) அறிவிக்கிறார். (நூல்: அபூ தாவூத்)
குறிப்பு: ஒருபெண்ணிற்கு பிரசவ உதிரப்போக்கு நாற்பது நாட்களுக்கு முன்பே நின்றுவிடுமானால் அவள் குளித்துவிட்டு தொழுகை மற்றும் நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றிய பின் நாற்பது நாட்கள் முடிவதற்குள் திரும்பவும் உதிரப் போக்கு ஏற்படுமானால் அது பிரசவத்தினால் ஏற்படும் உதிரப்போக்காகவே கருதப்படும். உதிரப்போக்கு நின்றிருந்த நாட்களில் தொழுத தொழுகை மற்றும் நோன்பு போன்றவை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவே கருதப்படும். செய்து முடித்து விட்ட அக்கடமைகளை மீண்டும் செய்ய வேண்டிய தில்லை.
பார்க்க: ஷேக் முஹம்மத் இப்னு இப்ராஹீமின் ஃபத்வாத் தொகுப்பு 2அ ப102.
ஷேக் அப்துல்லாஹ் இப்னு பாஸ் அவர்களின் பத்வாத் தொகுப்பான அஸ்ஸாது என்ற நூலின் விளக்கவுரை பக்கம்: 1அ ப405
பெண்களுக்கான இயற்கை உதிரப்போக்கு பக்கம்: 55,56
ஃபதாவா ஸஅதிய்யா பக்கம்: 137
ஷேக் அப்துர் ரஹ்மான் பின் சஅதி கூறுகிறார்கள்: மேற்கூறப்பட்ட விஷயங்களிலிருந்து பின்வரும் அடிப்படைகள் புலனாகின்றன, பிரசவத் தீட்டிற்கான காரணம் பிள்ளை பேறு ஆகும். தொடர் உதிரப்போக்கு என்பது நோயினால் ஏற்படுவதாகும். மாதவிடாய் இரத்தம்தான் ஒரு பெண்ணிற்கு அடிப்படையாக வரும் இரத்தம், அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
(நூல்: இர்ஷாத் உலுல் அப்ஸார் வல்அல்பாப்1 பக்கம்:24)
மாதவிடாய் நிற்க மருந்து உண்ணுதல்
ஒருபெண் தன்னுடைய ஆரோக்கியம் பாதிப்பிற்குள்ளாகமல் இருக்கும் வரை அவள் மருந்து உண்ணுவதில் தவறு இல்லை. மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் மாதவிடாய் இரத்தம் நின்றிருக்கும் நாட்களில் தொழுகை மற்றும் நோன்பு போன்ற வணக்கங்களை அவள் நிறைவு செய்யவேண்டும். சுத்தமான மற்ற பெண்களுக்கான சட்டம்தான் இவளுக்கும் பொருந்தும்.
கருக்கலைப்பு
இஸ்லாமிய பெண்மணியே! உன்னுடைய கருவறையில் அல்லாஹ் படைத்ததை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு உனக்கு உள்ளது அதை நீ மறைப்பது கூடாது.
''அல்லாஹ்வையும், இறுதிநாளையும் அந்தப் பெண்கள் நம்புவார்களாயின் தங்கள் கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது.'' (அல்குர்ஆன் 2:228)
எந்த நிலையிலும் கருக்கலைப்புச் செய்வதற்கு சூழ்ச்சி செய்யாதே! கர்ப்பமான நிலையில் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது உனக்கு கடினமானதாக இருக்குமானால் அல்லது கருவுக்கு கேடு ஏற்படுமானால் அம்மாதத்தில் நோன்பை விடுவதற்கு அல்லாஹ் உனக்கு சலுகை வழங்கியுள்ளான். இக்காலத்தில் பரவியுள்ள கருக்கலைப்பு மற்றும் அறுவைச் சிகிச்சைகள் தடுக்கப்பட்டதாகும். கருவறையில் உள்ளதற்கு உயிர் ஊதப் பட்டப்பின்னர் கருக்கலைப்பால் கருவான அக்குழந்ததை இறந்துவிடுமானால் நியாயமான காரணமின்றி உயிரைக் கொலைசெய்த குற்றத்திற்கு அப்பெண் ஆளாகி விடுகின்றாள். இதன் மூலம் குற்றவியல் சட்டத்தில் என்ன தண்டனை உள்ளதோ அதைப் பெற்றுக் கொள்வதற்கு அவள் தகுதியாகிவிடுகிறாள். இதன் பரிகாரமாக இறை நம்பிக்கையுள்ள ஓர் அடிமையை அவள் உரிமை விட வேண்டும். அதற்கு சக்தி பெற வில்லையெனில் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். என இமாம்கள் சிலர் கூறியுள்ளனர். இச்செயல் உயிருடன் புதைப்பதற்குச் சமம் என அறிஞர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.
கருவறையில் உள்ள குழந்தை இறந்துவிட்டது என்று தெரியாத வரை அதைக் கலைப்பது கூடாது என ஷேக் முஹம்மத் இப்ராஹீம் தம் ஃபத்வாத் தொகுப்பில் 11அ ப151 ல் குறிப்பிட்டுள்ளார்.
சவூதியில் உள்ள மார்க்க அறிஞர்களின் சபை 20.06.1407 ஹிஜ்ரியில் வெளியிட்டுள்ள தன் தீர்மானம் 140ல் பின்வருமாறு கூறியுள்ளது.
1. இஸ்லாம் கூறக்கூடிய மிக நெருக்கடியான எந்தவிதமான காரணமும் இல்லாதபோது கருக்கலைப்புச் செய்வது கூடாது.
2. முதல் ஆரம்ப நாற்பது நாட்களில் குழந்தை வளர்ப்பு சிரமம் என்பதற்காகவோ அல்லது அவர்களை வளர்ப்பதும் அவர்களுக்கு கல்விபோதிப்பதும் முடியாது என்ற பயத்தின் காரணத்திற்காகவோ, அல்லது அவர்களின் எதிர்காலத்தைப் பயந்தோ அல்லது தங்களிடமுள்ள குழந்தைகள் போதும் என்று கருதியோ கருக்கலைப்பு செய்வதுகூடாது.
3. கருவறையில் உள்ளது சதைக்கட்டியாக இருக்கும் நிலையில் அது கருவில் இருப்பதால் தாயின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடும் என உறுதியான மருத்துவ சான்று இல்லாதவரை கருக்கலைப்பு செய்வது கூடாது. எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு கடைசியாகத்தான் இந்த முடிவிற்கு வரவேண்டும்.
4. கற்பத்தின் மூன்றாவது நிலையான நான்கு மாதகாலம் பூர்த்தியான பின்பு ஏதோ காரணங்களினால் குழந்தை தாயின் கற்பத்தில் இருப்பது தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திவிடும் என்று மருத்துவர்குழு உறுதிசெய்யாத வரை கருவைக் கலைப்பது கூடாது. கற்பத்திலுள்ள குழந்தையைக் காப்பாற்றுவதற்குண்டான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டபிறகே இந்த முடிவிற்கு வரவேண்டும். இந்த நிபந்தனைகளோடு கருவைக் கலைப்பதற்கு காரணம், இரண்டு விதமான தீங்குகளில் பெரியதீங்கை தடுத்து நிறுத்துவது கடமை என்ற அடிப்படையிலும், இரண்டு நலன்களில் சிறந்ததை தேர்வு செய்யவேண்டும் என்ற அடிப்படையிலும்தான் இது அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் உறுதியோடும் இறையச்சத்துடனும் செயல்படுமாறு இச்சபை கேட்டுக்கொள்கிறது.
''பெண்களுக்கான இயற்கை இரத்தம் என்ற பெயரில் உள்ள நூலில் ஷேக் முஹம்மத் இப்னு உஸைமீன் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: ''கருவறையில் உள்ளதை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உயிர் ஊதப்பட்ட பின்னர் கருக்கலைப்புச் செய்வது சந்தேகமின்றி தடை செய்யப்பட்டதாகும். நியாயமின்றி ஓர் உயிரைக் கொலை செய்ததாகக் கருதப்படும். குர்ஆன், ஹதீஸ் அடிப்படை யில் தடைசெய்யப்பட்டுள்ள உயிரை கொலைசெய்வது விலக்கப்பட்டதாகும். மேற்கூறப்பட்டதில் பக்கம் - 60
'அஹ்காமுன்னிஸா' என்ற நூலில் பக்கம் 108 ல் இப்னு ஜவ்ஸி குறிப்பிடுகிறார்: திருமணம் செய்வதன் நோக்கமே மகப்பேறுக்காகத்தான். எல்லா நீரிலிருந்தும் குழந்தை ஏற்பட்டுவிடாது. குழந்தை உருவாக்கப்பட்டு விட்டால் நோக்கம் நிறைவேறிவிடும். அதைக் கலைப்பது அடிப்படை நோக்கத்திற்கு மாற்றம் செய்வதாகும். கருவறையில் உயிர் ஊதப்படுவதற்கு முன்னால் கற்பத்தின் ஆரம்ப காலத்தில் கருக்கலைப்பு செய்வது பெரிய பாவமாகும். உயிர் ஊதப்பட்ட பின்னர் செய்யப்படும் கருக்கலைப்பை விட குறைந்த குற்றம்தான் இதற்கு. உயிர் ஊதப்பட்டதை கலைப்பது இறைநம்பிக்கையாளன் ஒருவனைக் கொலை செய்த குற்றத்திற்கு சமமானதாகும்.
''உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை, மறுமையில் வினவப்படும் எக்குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது என்று.'' (அல்குர்ஆன் 81:8,9)
இஸ்லாமியப் பெண்ணே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! எந்த நோக்கத்திற்காகவும் இந்த அக்கிரமத்தைச் செய்யத் துணியாதே வழிகெடுக்கும் விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதே! மார்க்கத்திற்கும், அறிவிற்கும் பொருந்தாத தவறான பழக்க வழக்கங்களைக் கண்டு ஏமாந்து விடாதே!
பிரிவு 4 - பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள்
இஸ்லாமியப் பெண்களின் ஆடை
1. இஸ்லாமிய ஆடையைப் பொறுத்தவரை திருமணம் செய்வது தடையில்லாத அன்னிய ஆண்களின் பார்வையை விட்டும் மறைக்கும் விதத்தில் உடம்பு முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்கவேண்டும். ஒரு பெண் தனக்கு திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டவர்கள் முன் இரண்டு கைகள், முகம், கால் (பாதம் வரை) ஆகியவற்றைத்தவிர மற்ற உறுப்புக்களை திறந்துவைப்பது கூடாது.
2. ஆடை உடம்பை நன்றாக மறைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். உடலின் நிறம் வெளிப்படும் விதத்தில் மெல்லிய ஆடையாக இருக்கக்கூடாது.
3. உடலின் அங்க அவயங்கள் வெளிப்படும் விதத்தில் இறுக்கமான ஆடையாகவும் இருக்கக்கூடாது.
''என்னுடைய சமுதாயத்தில் இரண்டு பிரிவினர் நரகத்திற்கு செல்வர். அவர்களை நான் பார்த்ததில்லை. ஒருசாரார் தங்களின் கைகளில் (அதிகாரம் எனும்) மாட்டு வால் போன்ற சாட்டையை வைத்துக்கொண்டு மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் அரைகுறை ஆடை அணிந்த நிர்வாணமான பெண்கள். அவர்கள் ஆடிஆடி நடப்பார்கள். பிறரையும் அவர்களின்பால் சாய வைப்பார்கள். அவர்களின் தலை ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்றிருக்கும். இவர்கள் சுவர்க்கத்தில் நுழையவும் மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். அதன் நறுமணம் இவ்வளவு தூரத்திற்கு வீசும்'' என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
ஹதீஸில் வந்துள்ள நிர்வாண ஆடை என்பது பெண் தன் உடம்பு முழுவதும் மறைக்காத ஆடையை அணியும்போது அவள் நிர்வாணமானவளாகவே கருதப்படுவாள். உடம்பு தெரியும் அளவிற்கு மெல்லிய ஆடையை அணிவது அல்லது உடற்கட்டு தெரியும் விதத்தில் இறுக்கமான ஆடையை அணிவது, இடுப்பு, கை தோள்புஜம் போன்றவற்றின் உடற்கட்டு வெளியில் காணப்படும் விதத்தில் ஆடைகள் அமைவதைத்தான் இந்தஹதீஸ் குறிப்பிடுகிறது.
பெண்களின் ஆடை என்பது அவளுடைய மேனி முழுவதும் மறைக்கக் கூடியதாகவும், உடலின் உட்பகுதியையும், உடலின் கனமான பகுதியை வெளிப்படுத்தாததுமாகவும், விசாலமான ஆடையாக இருக்கவேண்டும். (ஃபத்வா தொ.22அ ப146)
4. ஆண்களோடு ஒப்பிடக்கூடிய ஆடைகளை பெண்கள் அணிவதும் கூடாது. ''ஆண்களுக்கு ஒப்பாக தன்னை ஆக்கிக்கொள்ளக்கூடிய பெண்களையும், ஆண்களைப் போன்று தன் தலைமுடியை சீவிக்கொள்ளும் பெண்களையும் நபி(ஸல்)அவர்கள் சபித்துள்ளார்கள். ஆண்களுக்கு ஒப்பாகுவது என்பது ஒவ்வொரு சமூகத்திற்கு ஏற்ப ஆடையின் வகையிலும் அதை அணியும் விதத்திலும் ஆண்களுக்கென சொந்தமான ஆடையைப் பெண்கள் அணிவதாகும்.
ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னுதைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பு 22அ ப148ல் கூறுகிறார்: ஆண்களுக்குத் தகுதியான ஆடையையும், பெண்களுக்கத் தகுதியான ஆடையையும் வைத்துத்தான் ஆண், பெண் ஆடைகளைப் பிரித்துக் காட்டமுடியும். ஆண்களும் பெண்களும் அவரவருக்குக் கட்டளையிடப்பட்ட ஆடையை அணிவதுதான் அவர்களுக்குப் பொருத்தமானதாகும். பெண்கள் தங்கள் மேனியை வெளியே காட்டாமல் மறைத்து பர்தா அணிந்து வெளியில் செல்வதுதான் பெண்களுக்கு இடப்பட்ட கட்டளையாகும். எனவே தான் பெண்கள் சப்தத்தை உயர்த்தி பாங்கு, தல்பியா சொல்வது அவர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. ஹஜ்ஜின் போது ஸஃபா, மர்வா மலைக்குன்றுகளில் ஏறுவதும், ஆண்களைப்போன்று இரண்டு துண்டு துணிகளை மட்டும் அணிந்திருப்பதும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட வில்லை. ஹஜ்ஜின்போது ஆண்கள் தலையை திறந்திருப்பதும், வழக்கமான ஆடையை அணியாமலிருப்பதும் அவர்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. சட்டை, பேண்ட், பைஜாமா, தொப்பி, காலுறை போன்றவற்றை அணிவது கூடாது. அதே நேரத்தில் பெண்கள் அவர்களின் வழக்கமான ஆடையில் எதையும் அணிவது தடை செய்யப்படவில்லை. காரணம் அவள் தன் உடல் முழுவதையும் மறைத்து பர்தா அணியுமாறு கட்டளையிடப் பட்டிருக்கிறாள். அதற்கு மாற்றம் செய்வது அவளுக்கு அனுமதிக்கப்படாது.
ஆனால், அவள் தன் முகத்தை திரையால் மறைப்பதும் உறுப்புகளுக்கென தயார் செய்யப்பட்டுள்ள காலுறைகளை அணிவதும் அவளுக்கு அவசியமில்லை. என்று கூறிவிட்டு அவள் அன்னிய ஆண்களை விட்டும் தன் முகத்தை முகமூடி அல்லாததைக் கொண்டு மறைத்துக் கொள்ளலாம். ஆண்களிலிருந்து பெண்களும், பெண்களிலிருந்து ஆண்களும் பிரித்தறியக்கூடிய விதத்தில் ஆடை இருக்க வேண்டும் என்பது தெளிவாகிவிட்டால் பெண்கள் தங்கள் உடம்பை முழுவதுமாக மறைத்து பர்தா அணியவேண்டும் என்ற உண்மை புரிந்துவிடும்.
ஓர் ஆடையைப் பொறுத்தவரை அதை அதிகமாகவும் ஆண்கள்தான் அணிந்து கொள்கிறார்கள் என்றிருந்தால் அந்த ஆடையை பெண்கள் அணிவது கூடாது. ஒரு ஆடையில் உடலை மறைப்பது குறைந்து விடுவதும், ஆணுடன் ஒப்பிடுவதும் சேர்ந்து விடுமானால் இரண்டு விதத்திலும் அவ்வாடை தடை செய்யப்படுகிறது.
5. பெண்கள் வெளியில் செல்லும்போது அணிகின்ற ஆடைகள் பார்வையைக் கவரக்கூடிய அலங்காரங் களைக் கொண்டதாக இருக்கக்கூடாது. ஏனெனில் அதன் மூலம் அவள் தன் அலங்காரத்தை வெளிப்படுத்திச்செல்லும் பெண்களின் பட்டியலில் இடம் பெற நேரிடும்.
பர்தாவின் பலன்கள்
ஒரு பெண் பிற ஆடவர்களின் பார்வையிலிருந்து தன் உடலை மறைத்துக் கொள்ளும் விதமாக அணியும் ஆடை பர்தா எனப்படும்.
அல்லாஹ் கூறுகிறான்: தானாக வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் அப்பெண்கள் தங்கள் அழகை வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் தங்கள் முன்றானைகளில் அவர்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: ''(இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தன் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தம் பெண்கள், அல்லது தம் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்), அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் (இச்சையோடு பெண்களை விரும்ப முடியாத (அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப்பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அழகலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்.'' (அல்குர்ஆன்: 24:31)
''அப்பெண்களிடம் ஏதாவது ஒருபொருளை நீங்கள் கேட்பதாக இருந்தால் திரைக்கு அப்பால் இருந்தே அவர்களிடம் கேளுங்கள்.'' (அல்குர்ஆன்: 33:53)
இந்த வசனத்தில் திரைக்குப் பின்னால் எனச் சொல்வது ஒரு சுவர் அல்லது வாசல் அல்லது ஆடை போன்றவற்றை திரையாக்கி தன் உடலை மறைப்பதைக் குறிக்கும்.
மேற்கண்ட வசனத்தில் நபி(ஸல்)அவர்களின் மனைவியருக்காகச் சொல்லப்பட்டாலும் இந்தச் சட்டம் எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவானதாகும்.
ஏனெனில் அதற்கான ஆடை அணிவதற்குண்டான காரணத்தை அல்லாஹ் சொல்லும் போது,
''அதுவே உங்களின் இதயங்களுக்கும், அவர்களின் இதயங்களுக்கும் தூய்மையானதாகும்.'' (அல்குர்ஆன்:33:53) என்று குறிப்பிடுகிறான்.
இன்னும், அல்லாஹ் கூறுகிறான்: ''நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், இறைநம்பிக்கையாளர்களின் மனைவியர்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும்!'' (அல்குர்ஆன்: 33:59)
ஷேகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பின் 22அ ப110 ல் சொல்கிறார்கள்.
மேற்கண்ட வசனத்தில் 'ஜில்பாப்' என அல்லாஹ் குறிப்பிடுவது ஒரு பெண் தன் தலை மற்றும் முழு உடலை யும் மறைத்துக் கொள்ளும் விதத்தில் அணியும் ஆடை என இப்னுமஸ்வூத்(ரழி) போன்றவர்கள் கூறியுள்ளார்கள்.
அவள் தன் கண்களைத் தவிர முழு உடலையும் மறைத்துக் கொள்ளும் விதத்திலான ஆடையை அணிவது என அபூஉபைதா போன்றோர் கூறுகின்றனர்.
ஒரு பெண் பிற ஆடவர்களிடமிருந்து தன் முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்கான நபிவழி ஆதாரங்களில் ஒன்று பின் வரும் ஹதீஸாகும்.
''நாங்கள் நபி(ஸல்)அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும்போது வாகனக் கூட்டம் ஒன்று எங்களைக் கடந்து செல்லும். எங்களுக்கு நேரே அவர்கள் வரும்போது எங்களில் உள்ள பெண்கள் தங்கள் தலை யில் தொங்கிக் கொண்டிருக்கும் துணியால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். வாகனக் கூட்டம் எங்களைக் கடந்து சென்றதும் எங்கள் முகத்தைத் திறந்து கொள் வோம்'' என ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)
பெண்கள் பிற ஆண்களிடமிருந்து தங்கள் முகத்தை மறைத்துக் (கொள்ள வேண்டும்) கொள்வது கட்டாயம் என்பதற்கு குர்ஆனிலும், நபிவழியிலும் ஆதாரங்கள் உள்ளன.
இஸ்லாமியப் பெண்ணே! உனக்கு நான் சில புத்தகங்களைக் குறிப்பிடுகின்றேன். அவற்றைப் படித்துப்பார்!
1. தொழுகையில் பெண்களின் திரையும், ஆடையும் (இப்னு தைமிய்யா)
2. பர்தா அணிவதன் சட்டங்கள். (ஷேக் இப்னு பாஸ்)
3. அரைகுறை ஆடையால் கெட்டுப்போனவர்கள் மீது உருவப்பட்டவாள். (ஹமூத் இப்னு அப்துல்லாஹ் துவைஜிரி)
4. பர்தா (முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன்)
இந்தப் புத்தகங்களில் போதுமான அளவு விளக்கங்கள் உள்ளன.
பெண்கள் தங்கள் முகத்தை திறந்து செல்ல அனுமதி வழங்கிய அறிஞர்கள் குழப்பமான நிலைகளில் இருந்து பாதுகாப்பு இருந்தால்தான் இந்த அனுமதி என்பதை இஸ்லாமியப் பெண்ணாகிய நீ புரிந்து கொள்ள வேண்டும். பெண்ணிற்கு குறிப்பாக இந்த காலத்தில் பாதுகாப்பில்லாத நிலையைத்தான் காண முடிகிறது. ஆண்களிடத்திலும் இஸ்லாமிய உணர்வு குறைந்துவிட்டது. வெட்கம் குறைந்துவிட்டது. தவறுகளின் பால் அழைக்கக் கூடியவர்கள் அதிகரித்துவிட்டனர். பெண்கள் தங்கள் முகங்களை பல்வேறு அலங்காரங்களைக் கொண்டும் அலங்கரிக்கிறார்கள். இது தவறுக்குத் துணை போகின்றது.
எனவே இஸ்லாமியப் பெண்ணே! இது போன்ற காரியங்களிலிருந்து விலகிக்கொள்! குற்றங்களிலிருந்து உன்னைக் காக்கக்கூடிய பர்தாவை நீ அணிந்துகொள்! தவறானவற்றில் விழுந்துவிடக்கூடிய இப்படிப்பட்டப் பெண்களுக்கு தற்காலத்திலோ, ஆரம்பகாலத்திலோ உள்ள எந்த இஸ்லாமிய அறிஞர்களும் தன் முகத்தை பிற ஆடவர்களுக்குக் காட்ட அனுமதித்ததில்லை. பர்தா விஷயத்தில் இஸ்லாமியப் பெண்களில் நயவஞ்சகத் தன்மையோடு நடந்துகொள்ளக் கூடியவர்களும் உண்டு. பர்தாவை கடைபிடிக்கின்றவர்களிடையில் இருக்கும் போது பர்தாவை அணிந்து கொள்கிறார்கள். பர்தாவை கடைபிடிக்காத மக்களிடையே செல்லும்போது அதை அகற்றிக் கொண்டு செல்கிறார்கள். இன்னும் சிலர் பொதுவான இடங்களில் பர்தா அணிவார்கள் கடைவீதிகளுக்குச் செல்லும்போது அல்லது மருத்துவமனைகளுக்குள் செல்லும்போது அல்லது நகைக்கடைகளுக்குச் செல்லும்போது அல்லது தையல்காரனிடம் செல்லும் போது தன் கணவன் முன் நிற்பதுபோன்று முகம், கைகளைத் திறந்து நிற்கின்றனர். இது ஆடை அணியும் விஷயத்தில் நயவஞ்சகத் தன்மையாகும். இப்படிச் செய்யக்கூடிய பெண்ணே நீ அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! வெளிநாடுகளிலிருந்து விமானத்தில் வரக்கூடிய பல பெண்கள் விமானத்திலிருந்து இறங்கும்போதுதான் பர்தா அணிகின்றனர். பர்தா ஒரு நாட்டுக் கலாச்சாரமாகக் கடைபிடிக்கப் படுகிறதே தவிர மார்க்கச் சட்டமாக அதை கடைபிடிப்பதில்லை.
இஸ்லாமியப் பெண்ணே! சமுதாயத்தில் நாய் போன்று அலைகின்ற, இதயத்தில் நோயைச் சுமந்துள்ளவர்களின் விஷப் பார்வையிலிருந்து உன்னைக் காப்பாற்றக் கூடியதாக பர்தா இருக்கிறது! தவறான எண்ணங்களிலிருந்து அது உன்னைப் பாதுகாக்கிறது. எனவே பர்தாவை நீ கடை பிடித்துக் கொள். பர்தாவை எதிர்த்து அல்லது அதன் மதிப்பைக் குறைத்து செய்யப்படும் தவறான பிரச்சாரத்தின் பக்கம் நீ திரும்பிப் பார்த்து விடாதே!
''தங்களின் கீழ்த்தரமான இச்செய்கைகளைப் பின் பற்றி நடப்பவர்களோ, நீங்கள் (பாவத்தின் பக்கம்) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டும் என விரும்புகின்றனர்.'' (அல்குர்ஆன்: 4:27)
பிரிவு 5 - பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச் சட்டங்கள்
இஸ்லாமியப் பெண்ணே! தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்று. தொழுகையின் சட்டதிட்டங்கள், அதன் நிபந்தனைகள் ஆகியவற்றை தெரிந்து அதை முழுமையாகச் செயல்படுத்திக் கொள்!.
மூமின்களின் தாய்மார்களுக்கு அல்லாஹ் கூறுகிறான்:
''நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னர் அஞ்ஞான காலத்தில் பெண்கள் திரிந்து கொண்டிருந்தது போல் நீங்கள் திரியாதீர்கள். தொழுகையை முறைப்படி உறுதி யுடன் கடைபிடித்துத் தொழுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப் படியுங்கள்.'' (அல்குர்ஆன்: 33:33)
இது பொதுவாக எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவான கட்டளையாகும். தொழுகை இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில் இரண்டாவது இடம் வகிக்கிறது. அது இஸ்லாத்தின் தூண். தொழுகையை விடுவது இஸ்லாத்தை விட்டே வெளியேற்றிவிடும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எவரிடம் தொழுகை இல்லையோ அவர் இஸ்லாத்தில் இல்லை. எவ்வித காரணமுமின்றி தொழுகையை அதனுடைய நேரத்தை விட்டும் பிற்படுத்துவது தொழுகையை வீணடிப்பதாகும்.
''ஆனால் இவர்களுக்குப்பின் (வழிகெட்ட) சந்ததியினர் இவர்களின் இடத்திற்கு வந்தார்கள் அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். மனோ இச்சைகளைப் பின்பற்றினார்கள். அவர்கள் மறுமையில் பெரும் கெடுதியை உண்டாக்கும் நரகத்தையே சந்திப்பார்கள். பாவமன்னிப்புக் கோரி பாவங்களிலிருந்து விலகி இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்களைத் தவிர, அத்தகையோர் சுவர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களுக்கு எதிலும் குறை ஏதும் செய்யப்படாது.'' (அல்குர்ஆன் 19:59,60)
குர்ஆன் விளக்கவுரையாளர்களில் ஒருசாரார் மேற் கண்ட வசனத்திற்கு கொடுத்துள்ள விளக்கத்தைப் பற்றி இமாம் இப்னுஹஜர் அவர்கள் குறிப்பிடும்போது தொழுகையை வீணாக்குவதென்பது அதனுடைய நேரத்தை சரியாகக் கடைபிடிக்காது இருப்பதாகும். ஒரு தொழு கைக்கான நேரம் கடந்தபின் அதைத் தொழுவதுமாகும். இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள 'கய்யு' என்பது நரகத் தில் உள்ள ஒரு ஓடையாகும் என்று குறிப்பிடுகின்றனர்.
தொழுகையில் பெண்களுக்கென சில சட்டங்கள் உள்ளன. அவை பின்வருமாறு.
1. பெண்களுக்கு ஆண்களைப்போன்று சப்தமிட்டு பாங்கு இகாமத் சொல்லவேண்டியதில்லை. காரணம் பாங்கிற்கு சப்தத்தை உயர்த்திச் சொல்ல வேண்டு மென்பது சட்டமாக்கப்பட்டுள்ளது.
2. பெண்ணின் முகத்தைத் தவிர இதர உறுப்புக்களை எல்லாம் தொழும்போது மறைத்தாக வேண்டும். முன் இரண்டு கரங்களையும் பாதத்தையும் மறைக்க வேண்டுமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இவை யாவும் பிற ஆண்கள் பார்க்காமல் இருக்கும் போதுதான். அவர்கள் பார்க்கும் நிலை ஏற்படும்போது உறுப்புக்கள் அனைத்தையும் அவசியம் மறைத்தாக வேண்டும். தொழுகைக்கு வெளியே மறைப்பது எவ்வாறு கடமையாக உள்ளதோ அவ்வாறே தொழுகை யிலும் தலை, கழுத்து, பாதம் ஆகிய எல்லாவற்றையும் மறைத் தாக வேண்டும்.
''பருவமான பெண்கள் தலை, பிடறியை மறைத்தால் தவிர அவர்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூற்கள்: ,அஹ்மது, அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா, திர்மதி)
ஒரு பெண் கீழங்கி அணியாமல் தலையையும், பிடறியையும் மறைக்கும் விதத்திலான ஆடையை அணிந்து தொழுவது கூடுமா என உம்மு ஸலமா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, 'அவர்களின் பாதத்தையும் மறைக்கும் விதத்தில் அந்த ஆடை இருக்குமானால் அதை அணிந்து தொழலாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)
தொழுகையில் பெண் தனது தலையையும் பிடறியையும் அவசியம் மறைத்தாக வேண்டும் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கமுடிகிறது.
உம்முஸலமா(ரழி) அவர்கள் அறிவித்த ஹதீஸிலிருந்து பாதம் உட்பட எல்லா உறுப்புக்களையும் மறைக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது.
பிற ஆண்கள் பார்க்காத விதத்தில் முகத்தை திறந்து வைத்துக் கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. அறிஞர் கள் இதை ஏகோபித்துக் கூறியுள்ளனர்.
ஷேகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வாத் தொகுப்பு 22அ ப113,114 ல் குறிப்பிடுகிறார்கள்.
''ஒரு பெண் தனியாகத் தொழும்போது தலையை மறைத்திருக்க வேண்டும். தொழுகை அல்லாத நேரங்களில் வீட்டிலிருக்கும் போது தலை திறந்து இருப்பது அவளுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். தொழுகையின் போது அலங்கரித்துக் கொள்வது அல்லாஹ்விற்குச் செய்யவேண்டிய கடமையாகும். இரவு நேரத்தில் ஒருவர் தனிமையில் இருந்தாலும் அவர் நிர்வாணமாக கஅபாவை வலம் வருவது கூடாது. தனிமையில் இருக்கும்போது நிர்வாணமாகத் தொழுவதும் கூடாது. தொழுகையில் உடலை மறைப்பதென்பது அடுத்தவர்களின் பார்வை யோடு தொடர்புடையது அல்ல.
முக்னி என்ற நூலில் 2அ ப328 ல் கூறப்பட்டுள்ளது.
''சுதந்திரமான ஒருபெண் தன் உடல் முழுவதையும் தொழுகையின்போது மறைத்துக் கொள்வது கடமை யாகும். அதில் ஏதாவது வெளிப்படுமாயின் தொழுகை கூடாது.'' இவ்வாறே மாலிக், ஷாஃபி, அவ்ஸாயீ போன்ற இமாம்களும் கூறியுள்ளனர்.
3. முக்னி என்ற நூலில் 2அ ப258 ல் கூறப்பட்டுள்ளது. ஒரு பெண் தொழும்போது ருகூஃ மற்றும் ஸுஜூத் நிலையில் தன் உடலைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அமரும் போது கால்களை மடக்கி வைத்து அமரவேண்டும். அல்லது இரண்டு கால்களையும் வலப்புறமாகக் கொண்டு வந்து இருக்கையைத் தரையில் வைத்து அமர வேண்டும். கால்களை முன்பக்கம் மடக்கி வைத்து அமரவும் கூடாது. வலது காலை நட்டி புட்டியை தரையில் வைத்து அமர்வது அல்லது வலதுகாலை நட்டி இடதுகாலின் மீது அமர்வதை விட இது அவளுக்கு மிக மறைவானதாகும்.
மஜ்மூவு என்ற நூலில் 3அ ப455 ல் நவவி அவர்கள் கூறுகின்றார்கள். இமாம் ஷாஃபியீ அவர்கள் முக்தஸர் என்ற நூலில் கூறும்போது தொழுகையின் செயல்களில் ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது. ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில் ஸுஜூதுச் செய்யும் போது தன் உடலைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். தன் வயிற்றை தொடையோடு சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும். இதுதான் அவளின் உடலை மறைப்பதற்கு அவளுக்குச் சிறந்த வழியாகும். இந்த விதம் தான் ருகூவு, மற்றும் ஏனைய நிலைகளிலும் அவளுக்கு மிகவும் சிறந்தது.
4. ஒரு பெண் பெண்களுக்கு இமாமாக நின்று தொழுதல்
இது விஷயத்தில் அறிஞர்களிடையில் கருத்து வேறுபாடு உள்ளது இவ்வாறு தொழுவதில் தவறில்லை என அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர். நபி(ஸல்) அவர்கள் உம்முவரகா என்ற பெண் தன் வீட்டாருக்கு இமாமத் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். (நூல்: அபூதாவூத்)
சிலர் இது அனுமதிக்கப்படாதது என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் வெறுக்கப்பட்டது என்கின்றனர். வேறுசிலர் உபரியான (நஃபிலான) தொழுகைகளை நடத்துவது கூடும்; கடமையான தொழுகைகளில் கூடாது என்று கூறுகின்றனர்.
பெண்களுக்கு ஒரு பெண் இமாமத் செய்யலாம் என்பதே சரியான கருத்தாகும்.
இதைத் நன்கு அறிந்து கொள்வதற்கு முக்னி நூலில் 2அ ப202 லும் மஜ்மூவு என்ற நூலில் 4அ ப84,85 லும் பார்க்க!
பிற ஆண்கள் இல்லாதபோது தொழுகையில் இமாமத் செய்யும் பெண் சப்தமிட்டு ஓதலாம்.
5. பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று ஆண்களுடன் ஜமாஅத்தாகத் தொழுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெண்கள் வீடுகளில் தொழுது கொள்வது அவர்களுக்குச் சிறந்ததாகும்.
''பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்வதை விட்டும் தடுக்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்:முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்)
''பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள். ஆனால் அவர்களின் வீடு அவர்களுக்குச் சிறந்ததாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)
ஒரு பெண் தன்னை மறைத்துக் கொள்வதற்கு வீட்டிலிருந்து தொழுவதுதான் அவளுக்குச் சிறந்ததாகும்.
ஒரு பெண் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது பின்வரும் ஒழுங்கு முறைகளைப் பேணிக்கொள்வது கடமையாகும்.
1. முழுமையாகப் பர்தா அணிந்திருக்க வேண்டும்.
''நபி(ஸல்) அவர்களோடு பெண்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டுத் திரும்பும்போது தங்களை முழுமையாக ஆடையால் மறைத்திருப்பார்கள். அப்போது அவர்கள் யார் என்பதை குறைந்த வெளிச்சத்தில் கண்டு பிடிக்க முடியாது.'' (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
2. வெளியில் செல்லும் போது நறுமணம் பூசிக் கொண்டு செல்வது கூடாது.
''அல்லாஹ்வின் பள்ளிவாசலுக்குச் செல்லும் பெண்களை தடுக்காதீர்கள் அவர்கள் வெளியில் செல்லும் போது நறுமணம் பூசாமல் செல்லட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)
''எந்தவொரு பெண் நறுமணத்தைப் பயன்படுத்துகிறாளோ அவள் நம்முடன் இஷா தொழுகைக்கு பள்ளி வாசலுக்கு வரவேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: முஸ்லிம், அபூதாவூத் மற்றும் நஸயீ)
''பள்ளிவாசலுக்கு வரக்கூடிய பெண்களில் யாரும் நறுமணம் பூசாது இருக்கட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களின் மனைவி ஜைனப் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)
இமாம் ஷவ்கானி நைலுல் அவ்தார் என்ற நூலில் 3அ ப140,141 ல் குறிப்பிடுகிறார்.
இந்த ஹதீஸின் மூலம் விளங்குவது என்னவென்றால் தவறான காரியங்களுக்கு இடம் அளிக்கின்ற விஷயங்கள் இடம் பெறாத போதுதான் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லலாம். தவற்றைத் தூண்டுகின்ற விதத்தில் உள்ளவற்றில் ஒன்றுதான் நறுமணம் பூசுவதும். பள்ளிவாசலுக்குச் செல்ல பெண்களுக்குக் கொடுத்த அனுமதி அவர்கள் நறு மணம் ஆபரணம் போன்ற தவறுகளின்பால் ஈர்க்கின்றவை இல்லாத போதுதான்.
3. வெளியில் செல்லும்போது...
ஆபரணங்கள் மற்றும் ஆடைகளால் அலங்கரித்து வெளியில் செல்வது கூடாது.
''நாம் இன்று பெண்களிடத்தில் பார்ப்பவற்றை நபி(ஸல்)அவர்கள் பார்த்திருப்பார்களானால் இஸ்ரவேலர்கள் தங்களின் பெண்களை பள்ளிவாசலுக்குச் செல்வதை விட்டும் தடுத்தது போன்று முஸ்லிம் பெண்களையும் தடுத்திருப்பார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
இந்த நபிமொழிக்கு விளக்கம் அளிக்கும்போது இமாம் ஷவ்கானி அவர்கள் கூறுகின்றார்கள். ஆடை அலங்காரம், நறுமணம், உடலை வெளியில் காட்டுதல் போன்ற செயல்களைத்தான் ஆயிஷா(ரழி) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் உடல் முழுவதும் மறைக்கின்ற ஆடைகளையும் கடினமான ஆடைகளையுமே அணிந்துதான் பெண்கள் வெளியில் செல்லக் கூடியவர்களாக இருந்தனர்.
இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் 'அஹ்கா முன்னிஸா' எனும் நூலில் பக்கம் 39 ல் குறிப்பிடுகிறார்கள்.
இயன்ற வரை பெண் வெளியில் செல்லாது இருக்க வேண்டும். அவள் தன்னைப் பாதுகாத்துக் கொண்டாலும் கூட அவளிடமிருந்து மற்ற ஆண்கள் பாதுகாப்புப் பெறவில்லை. வெளியில் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால் தன்னுடைய கணவனின் அனுமதி பெற்று அலங்காரம் இல்லாத நிலையில் செல்லவேண்டும். அதிகமாக ஆள் நடமாட்டம் இல்லாத பாதைகளிலேயே செல்லவேண்டும். அதிகமாக ஆட்கள் நடமாடும் பாதைகளிலும், கடைவீதிகளிலும் செல்வதைத் தவிர்ந்து கொள்ளவேண்டும். அவளுடைய சப்தத்தை மற்றவர்கள் கேட்பதிலிருந்து தன்னைப் பேணிக் கொள்ளவேண்டும். பாதையில் செல்லும்போது அதன் நடுவில் செல்லாது ஓரமாகச் செல்லவேண்டும்.
4. ஒரு பெண் தனியாக இருக்கும் நிலையில் பள்ளி வாசலில் ஜமாஅத்துடன் தொழும் நிலை ஏற்பட்டால் ஆண்களுக்குப்பின்னால் தனியாக வரிசையில நிற்க வேண்டும். நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழும்போது நானும் ஓர் அநாதையும் வரிசையில் நின்றோம் எங்களுக்குப் பின்னால் வயது முதிர்ந்த பெண் நின்றாள்'' என அனஸ்(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
''எங்களுடைய வீட்டில் நானும், ஓர் அநாதையும் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். எங்களுடைய தாயார் உம்முசுலைம் எங்களுக்குப் பின்னால் நின்றார்'' என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி)
''ஜமாஅத் தொழுகைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் வருவார்களானால் ஆண்களுக்குப்பின்னால் வரிசையாக நிற்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் வருசைப்படுத்தும் போது ஆண்களை முன் வரிசையிலும் அவர்களுக்குப் பின்னால் சிறுவர் களையும் அவர்களுக்குப் பின்னால் பெண்களையும் நிறுத்துவார்கள்'' (நூல்: அஹ்மத்)
''ஆண்களின் வரிசைகளில் சிறந்தது முதல் வரிசையா கும், அதில் சிறப்புக் குறைந்தது கடைசி வரிசையாகும். பெண்களின் வரிசையில் சிறந்தது கடைசி வரிசையாகும். அதில் சிறப்பு குறைந்தது முதல் வரிசையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்.
மேற்கண்ட இரண்டு நபிமொழிகளும் பின்வரும் விஷயங்களை அறிவிக்கின்றன. பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் வரிசையாக நிற்கவேண்டும். கடமையான தொழுகையானாலும் ரமளானில் தொழும் இரவுத் தொழுகையானாலும் தொழும்போது சிதறியவர்களாகத் தொழக் கூடாது.
5. ஜமாஅத்தாக தொழும்போது இமாம் எதையாவது மறந்துவிட்டால் பெண்கள் தங்கள் ஒரு கையின் மேல் மற்றொரு கையை தட்டி ஞாபகமூட்ட வேண்டும்.
''தொழுகையில் ஏதேனும் தவறு நிகழ்ந்துவிடுமாயின் ஆண்கள் 'தஸ்பீஹ்' சொல்லட்டும். பெண்கள் ஒரு கையின் மேல் இன்னொரு கையை அடிக்க வேண்டும், என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத்)
ஜமாஅத் தொழுகையில் ஏதாவது தவறு நிகழும் போது பெண்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியாகும். காரணம் பெண்களின் குரல் ஆண்களை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடியதாகும். எனவே கையில் அடிக்கும்படியும், பேசமால் இருக்கும் படியும் ஏவப்பட்டுள்ளாள்.
இமாம் ஸலாம் சொல்லி விடுவாரானால் பெண்கள் ஸலாம் கொடுத்துவிட்டு விரைவாக பள்ளியிலிருந்து வெளியே செல்ல வேண்டும்
ஆண்கள் அமர்ந்திருக்க வேண்டும் திரும்பிச் செல்லும் பெண்களுக்கும் இவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஏற்படாதிருக்க இவ்வாறு செய்ய வேண்டும். உம்மு ஸலமா(ரழி) அறிவிக்கிறார்.
கடமையான தொழுகைகளிலிருந்து பெண்கள் ஸலாம் கொடுத்துவிடுவார்களானால் அவர்கள் எழுந்து சென்றுவிடுவார்கள். நபி(ஸல்) அவர்களும் ஆண்களும் சிறிது நேரம் அமர்ந்திருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுந்த பின்னர் மற்றவர்களும் எழுந்து செல்வார்கள்.
இமாம் சுஹரி அவர்கள் அறிவிக்கிறார்கள். பெண்கள் திரும்பிச் செல்லவேண்டும் என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் அமர்வார்கள். (நூல்: அஷ்ஷரஹுல் கபீர் அல் முகனி பக்கம் 1அ ப422)
இமாம் ஷவ்கானி அவர்கள் நைலுல் அவ்தார் என்ற நூலில் 2அ ப326 ல் குறிப்பிடுகிறார்கள்.
தொழுகை நடத்தும் இமாம் தம் பின்னால் நின்று தொழுபவர்களை கவனத்தில் கொள்ளவேண்டும். தடுக்கப்பட்ட விஷயங்களுக்கு இழுத்துச் செல்கின்ற காரியங்களை விட்டும் தூரமாக இருக்கவேண்டும். வீடு ஒரு புறமிருக்க பாதைகளில் கூட அந்நியப் பெண்களும், ஆணும் கலந்திருப்பதை வெறுக்க வேண்டும் என்பதைத் தான் மேற்கண்ட நபிமொழி அறிவிக்கிறது.
இமாம் நவவி அவர்கள் மஜ்மூவு என்ற நூலில்3அ ப455ல் குறிப்பிடுகிறார்.
6. ஜமாஅத்தாகத் தொழும்போது பெண்கள் ஆண்களிலிருந்து பல விஷயங்களில் வேறுபடுகிறார்கள்.
1. ஜமாஅத் தொழுகை ஆண்களுக்கு கடமையானது போன்று பெண்களுக்குக் கடமையாக இல்லை.
2. பெண்களுக்கு, பெண் இமாமாக நின்று தொழும்போது வரிசையின் நடுவில் நிற்கவேண்டும்.
3. ஒரு பெண் தனியாக ஜமாஅத் தொழுகைக்கு வருவாளானால் தனியாக பின் வரிசையில் நிற்கவேண்டும். ஆண்கள் அவ்வாறு நிற்கக் கூடாது.
4. ஆண்களுக்குப் பின்னால் பெண்கள் பல வரிசைகளாக நின்று தொழும்போது கடைசி வரிசையே அவர்களுக்குச் சிறந்ததாகும்.
ஆண்களும் பெண்களும் கலந்திருப்பது கூடாது என்பதைத்தான் மேற்கண்ட விஷயங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
7. பெருநாள் தொழுகைக்கு பெண்கள் செல்லுதல்.
''ஹஜ்பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைக்காக மாதவிடாய்ப் பெண்களையும் கன்னிப் பெண்களையும் அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற ஏவும்படி நபி(ஸல்)அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாய்ப்பெண்கள் தொழாமல் இருக்க வேண்டும் நன்மையான காரியங்களிலும், முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கெடுக்க வேண்டும் என்று கூறினார்கள்'' என உம்மு அதிய்யா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
இமாம் ஷவ்கானி அவர்கள் கூறுகிறார்கள்.
கன்னி, என்றும் கன்னித்தன்மை அற்றவள் என்றும் வாலிபம் என்றும் வயோதிகம் என்றும் மாதவிடாய்காரி என்றும் பாகுபடுத்தாமல் எல்லா பெண்களும் பெருநாள் தொழுகைக்காக வெளியே செல்ல வேண்டும். என்பதைத் தான் இதுபோன்ற ஹதீஸ்கள் அறிவிக்கின்றன.
இத்தாவில் இருக்கின்ற பெண், அல்லது அவள் வெளியே வருவதினால் ஏதாவது குழப்பம் ஏற்படும் என்று கருதும் பெண், அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ள பெண் இதிலிருந்து விதிவிலக்கு பெறுகிறார். (நைலுல் அவ்தார் பக்கம் 3அ ப306)
இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தம் ஃபத்வா தொகுப்பில் 6அ ப458-459ல் குறிப்பிடுகிறார்கள்.
பெருநாளைத் தவிர மற்ற ஜும்ஆ, ஜமாஅத் தொழுகைகளில் கலந்து கொள்வதை விட வீட்டில் தொழுவதே பெண்களுக்குச் சிறந்ததாக இருக்கிறது.
பெருநாளைப் பொறுத்தவரை அவர்கள் வெளியே செல்லக் கட்டளையிடப்பட்டுள்ளனர். இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அவை,
1. பெருநாள் தொழுகை ஒரு ஆண்டில் இரண்டு முறைதான் நடக்கிறது. ஆனால் ஜும்ஆ தொழுகையும் ஜமாஅத் தொழுகையும் அவ்வாறல்ல.
2. ஜும்ஆ, ஜமாஅத் தொழுகைக்குப் பகரமாக தம் வீட்டில் லுஹர் தொழுது கொள்வதுதான் அவளுக்கு ஜும்ஆவாகும். பெருநாள் தொழுகையைப் பொறுத்த வரை அதற்குப் பகரமாக வேறு தொழுகை ஏதும் தொழ முடியாது.
3. பெருநாள் தொழுகைக்காக அல்லாஹ்வைத் தொழுது ஞாபகப்படுத்துவதற்காக எல்லோரும் மைதானத் திற்குச் செல்கின்றனர். சில விதத்தில் இது ஹஜ்ஜிற்கு ஒப்பான தாக உள்ளது. எனவே தான் பெரிய பெருநாள் ஹாஜி களுக்கு ஒத்தார்போல் ஹஜ்ஜுடைய காலத்தில் வருகிறது. ஹாஜிகளைப் பொறுத்தவரையில் அரபா மைதானத்தில நிற்கும் நாள்தான் அவர்களுக்குப் பெருநாளாகும்.
(உடல் பருமனில்லாத உடல் அமைப்பு வெளியில் தெரியாத) அழகில் குறைந்த பெண்கள்தான் பெருநாள் தொழுகைக்காக வெளியில் செல்ல வேண்டும் என இமாம் ஷாஃபியீ குறிப்பிடுகிறார்.
இமாம் நவவீ தம் மஜ்மூவு என்ற நூலில் 5அ ப13 ல் குறிப்பிடுகிறார்.
இமாம் ஷாஃபீயும், அவர்களின் தோழர்களும் கூறுகிறார்கள்: தன் உடற்கட்டு வெளியே தெரியாத பெண்கள் பெருநாள் தொழுகைக்காக வெளியில் செல்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. உடல்கட்டு வெளியே தெரியும் படியான பெண்கள் வெளியில் செல்வது வெறுக்கப்படுகிறது. அப்படியே அவர்கள் வெளியே செல்வதானால் இறுக்கமில்லாத ஆடையை அணிந்து செல்லவேண்டும. தங்களை வெளிப்படுத்திக் காட்டும் எந்த ஆடையையும் அணிவது கூடாது.
தண்ணீரால் சுத்தப்படுத்திக் கொள்வது நல்லது. நறுமணமுள்ள பொருட்களைப் பயன்படுத்துவது கூடாது. இவையெல்லாம் வயது முதிர்ந்த பெண்களுக்குத்தான், அதே நேரத்தில் இளம்பெண், அழகுள்ள பெண், ஆசையைத் தூண்டுகின்ற பெண் ஆகியோர் வெளியில் செல்வது வெறுக்கப்பட்டுள்ளது. காரணம் அப்பெண்கள் மீதோ, அப்பெண்களாலோ தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.
இது உம்முஅதிய்யா அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸிற்கு மாற்றமாக உள்ளதே என்று வினவப்பட்டால் இதற்கு பதில் ஆயிஷா(ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்ட ஹதீஸாகும்.
இக்காலத்தில் பெண்கள் புதுமையாக ஏற்படுத்தியுள்ள பழக்க வழக்கங்களை நபி(ஸல்) அவர்கள் பார்ப்பார் களானால் இஸ்ரவேலப் பெண்கள் தடுக்கப்பட்டது போன்று இவர்களும் தடுக்கப் பட்டிருப்பார்கள்.'' (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
காரணம் ஆரம்பகாலம் போல் அல்லாமல் இக்காலத்தில் தீமைக்குரிய காரணங்களும், குழப்பங்களும் அதிகரித்துவிட்டன. இக்காலத்தில் இவை மிகக் கடுமையாகவே உள்ளன.
இமாம் இப்னுல் ஜவ்ஸி 'அஹ்காமுன்னிஸா' என்ற நூலின் பக்கம் 38 ல் குறிப்பிடுகிறார்.
பெண்கள் வெளியில் செல்வது அனுமதிக்கப்பட்டதுதான். ஆனால் அவள் மீதோ, அவளினாலோ குழப்பங்கள் ஏற்படும் என்று அஞ்சப்படுமானால் வெளியில் செல்லாமலிருப்பதே சிறந்தது, காரணம் ஆரம்பகால பெண்கள் வாழ்ந்த சூழ்நிலை இக்காலத்து பெண்கள் வாழும் சூழ்நிலையைப் போன்றதல்ல, இவ்வாறே ஆண்களும் அன்று காணப்பட்டனர். ஆரம்ப கால மக்கள் மிகவும் பேணுதலுடையவர்களாக இருந்தனர்.
இஸ்லாமியப் பெண்ணே! மேலே கூறப்பட்டுள்ள இமாம்களின் கூற்றிலிருந்து, குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளுடனும். அல்லாஹ்விடம் நெருக்கத்தைத் தேட வேண்டும் என்ற எண்ணத்துடனும் முஸ்லிம்களுடன் (அழைப்புப் பணியிலும்), பிரார்த்தனையிலும் பங்கு பெறவேண்டுமென்ற எண்ணத்திலும் தான் பெருநாள் தொழுகைக்காக வெளியில் செல்லவேண்டும் என்பதை புரிந்து கொள்வாய், பெருநாளைக்கு வெளியில் செல்ல அனுமதி கிடைத்திருப்பது அலங்காரத்தை வெளிப் படுத்தவோ, குழப்பம் ஏற்படுத்தவோ அல்ல என்பதை நீ புரிந்து கொள்ளவேண்டும்.
பிரிவு 6 - பெண்கள் சம்பந்தப்பட்ட ஜனாஸாவின் சட்டங்கள்
ஒவ்வொருவர் மீதும் அல்லாஹ் மரணத்தை விதித்துவிட்டான். நிரந்தரமாக இருப்பது என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்.
''(மிக்கவல்லமையும்) கண்ணியமும் சங்கையும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.'' (அல்குர்ஆன் 55:27)
ஜனாஸாக்களில் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்துவது உயிரோடு உள்ளவர்கள் மீது கடமையாகும். அவற்றில் பெண்கள் சம்பந்தப்பட்டவைகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.
1. பெண்களின் ஜனாஸாவை பெண்களே குளிப்பாட்ட வேண்டும்.
ஆண்கள் பெண்கள் ஜனாஸாவை குளிப்பாட்டுவது கூடாது இறந்துபோன பெண்ணின் கணவன் மட்டும் தன் மனைவியை குளிப்பாட்ட அனுமதியுண்டு, ஆண் ஜனாஸாவை ஆண்களே குளிப்பாட்ட வேண்டும். இறந்து போன ஆணின் மனைவி மட்டும் தான் கணவனைக் குளிப்பாட்ட அனுமதியுண்டு.
அலி(ரழி) அவர்கள் தம் மனைவியான பாத்திமா (ரழி) அவர்கள் இறந்தபோது அவர்களின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்.
அபூபக்கர்(ரழி) அவர்கள் மரணமடைந்த போது அவர்களின் மனைவி அஸ்மா பின்த் உமைஸ்(ரழி) அவர்களின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்.
2. பெண் ஜனாஸா ஐந்து துணிகளில் கஃபன் செய்யப்படுவது சிறந்தது.
கீழங்கி, தலையில்போடும் துணி, சட்டை அதற்குமேல் இரண்டு துணியைக் கொண்டு ஜனாஸாவின் உடம்பு முழுவதும் மூடப்படும்.
''நபி(ஸல்) அவர்களின் மகள் உம்மு குல்ஸும்(ரழி) மரணமடைந்தபோது அவர்களின் ஜனாஸாவை குளிப் பாட்டியவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாவிற்கு அணிவிப்பதற்காக முதல் முதலாக எங்களிடம் தந்தது கீழங்கி, பின்னர் சட்டை பின்னர் தலையில் போடும் துண்டு, பின்னர் ஜனாஸாவை மூடுவதற்குண்டான துணி, பின்னர் அதே மாதிரி இன்னொரு துணியிலும் மூடப்பட்டார்கள்'' என லைலா அத்தகபிய்யா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)
இமாம் ஷவ்கானி 'நைலுல் அவ்தார், என்னும் நூலில் 4அ ப42ல் குறிப்பிடுகிறார். கீழங்கி, சட்டை, தலையில் போடும் துணி, முழுவதுமாக உடலை மறைக்கும் ஆடை ஆகியவை பெண்ணிற்கான கஃபன் துணி என சட்டமாக ஆக்கப்பட்டுள்ளது.
3. பெண் ஜனாஸாவின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்னால் போடவேண்டும்.
நபி(ஸல்) அவர்களின் மகளுடைய ஜனாஸாவை குளிப்பாட்டுவது பற்றி உம்முஅதிய்யா(ரழி) அறிவிக்கும் போது ''அவர்களின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்பக்கம்போட்டோம்'' என்று குறிப்பிடுகிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
4. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து பெண்கள் செல்லுதல்.
''ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது எங்களுக்கு தடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அது கண்டிப்பான முறையில் தடுக்கப்படவில்லை'' என உம்மு அதிய்யா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது மேற் கண்ட ஹதீஸில் கண்டிப்பான முறையில் தடையில்லா விட்டாலும், அது விலக்கப்பட்டது அல்ல எனக் கூற முடியாது. ஒரு வேளை அந்தத் தடை கண்டிப்பிற்குரியதாக இருக்காது என உம்மு அதிய்யா அவர்கள் கருதியிருக்கலாம். ஆதாரம் என்பது நபி(ஸல்) அவர்களின் சொல்லைக் கொண்டுதான் அமையவேண்டுமே தவிர ஒவ்வொருவரின் எண்ணமும் ஆதாரமாகாது என இப்னு தைமிய்யா அவர்கள் தம் ஃபத்வா தொகுப்பு 24அ ப355ல் குறிப்பிடுகிறார்கள்.
5. கப்ர் ஸியாரத் பெண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது.
''கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்'' என அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், திர்மிதி மற்றும் இப்னுமாஜா.)
ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா குறிப்பிடுகிறார். ''பெண்ணிற்கு இந்த வாசல் திறந்து விடப்படுமானால் அது அவளுடைய பலஹீனத்தின் காரணத்தினாலும், பயம், பொறுமையின்மை ஆகிய காரணத்தினாலும் ஒப்பாரி வைத்தல், பொறுமையிழத்தல் போன்ற பல தவறான காரியங்களின் பால் அவளை இழுத்துச் சென்றுவிடும். மேலும், இவளுடைய ஒப்பாரியினால் மையித்திற்கு வேதனை செய்யப்படும். மேலும், அவளின் சப்தம், கோலம் ஆகியவற்றினால் ஆண்களைக் குழப்பத்திற்கு (ஃபித்னாவிற்கு)ள்ளாக்கி விடுகிறாள்.
''பெண்களாகிய நீங்கள் உங்கள் ஒப்பாரியினால் உயிரோடு உள்ளவர்களை குழப்பத்திற்குள்ளாக்குகிறீர்கள். மையித்தை வேதனைப்படுத்துகிறீர்கள்.'' என ஹதீஸ் உள்ளது.
பெண்களுக்கு கப்ர் ஜியாரத்தை அனுமதிப்பதால், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சில விலக்கப்பட்ட செயல்கள் நிகழ்வதற்கு வழிவகுத்துவிடும் என்ற ஒர் அச்சமும் இருக்கிறது. அது விலக்கப்பட்ட காரியங்களின் பால் கொண்டு போய் சேர்க்காது இருப்பதற்கான அளவுகோல் என்ன என்பதை நிர்ணயம் செய்ய முடியாது. இந்த முறை கூடும், இந்த முறை கூடாது என வேறுபடுத்திக் காட்டவும் முடியாது.
ஒரு செயல் எதனால் தடுக்கப்பட்டது என்பதற்கு காரணம் மறைவாகவோ, பகிரங்கமாகவோ இருக்கும் போது, எந்தக் காரணத்தை சந்தேகிக்கப்படுகின்றதோ அதை வைத்து சட்டம் அமைக்கப்படும், எனவே விளைவுகளைத் தடுப்பதற்காக வேண்டி அது விலக்கப்பட்டதாகக் கருதப்படும்.
உதாரணமாக பெண்களின் அழகலங்காரங்களைப் பார்ப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவ்வாறு பார்ப்பது தவறிழைப்பதற்குக் காரணமாக அமைந்துவிடலாம். இவ்வாறே பிற பெண்களுடன் தனிமையில் இருப்பதும் தடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயல்களுக்கு எதிராக எந்த ஒரு பயனும் கப்ரை பெண்கள் சந்திக்கச் செல்வதில் இல்லை. கப்ருக்கு பெண்கள் சென்றால் மையித்திற்காகப் பிரார்த்திப்பார்கள் என்பதைத் தவிர வேறு எந்தப் பயனும் இல்லை. இதை அவள் தன் வீட்டில் இருந்து கொண்டே செய்யமுடியும். (ஃபத்வா தொகுப்பு 24அ ப356)
6. ஒப்பாரி வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஒப்பாரி வைப்பதும், ஆடைகளைக் கிழிப்பதும் கன்னத்தில் அடிப்பதும் முடியைப் பிடுங்குவதும் முகத்தைப் பறண்டுவதும், தகாத வார்த்தைகளைக் கூறுவதும் இதுபோன்ற அல்லாஹ் விதித்த விதியில் பதட்டத்தை ஏற்படுத்துகின்ற செயல்களைச் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது பொறுமை இழந்து நிற்பது பெரிய குற்றமாகும்.
''துன்பத்தின்போது கன்னத்தில் அடிப்பவனும் சட்டையை கிழிப்பவனும் அறியாமை காலத்து பிரார்த்தனையைச் செய்பவனும் நம்மைச் சார்ந்தவனல்ல'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், ''சோதனையின்போது சப்தத்தை உயர்துபவளை விட்டும் தலைமுடியை மளிப்பவளை விட்டும், ஆடையை கிழித்துக் கொள்பவளை விட்டும் நான் ஒதிங்கிக் கொண்டேன்'' என்றும் நபி(ஸல்) கூறினார்கள்.
''ஒப்பாரி வைப்பவளையும் ஒப்பாரியைக் கேட்டு மகிழ்பவளையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.'' (நூல்: முஸ்லிம்)
முஸ்லிம் சகோதரியே! சோதனையின்போது இதுபோன்ற தடுக்கப்பட்ட செயல்களை விட்டும் ஒதுங்கிக்கொள்! சோதனையின்போது பொறுமையைக் கடைபிடித்துக் கொள்! உனக்கு ஏற்படக்கூடிய சோதனை உன்னுடைய பாவத்திற்கு பரிகாரமாகவும் உன்னுடைய நன்மையை அதிகரிக்கக் கூடியதாகவும் அமைந்துவிடும்.
அல்லாஹ் கூறுகிறான்: ''நிச்சயமாக நாம் உங்களை அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம், (ஆனால்) பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நற்செய்தி கூறுவீராக!''
''அவர்களுக்கு துன்பம் ஏற்படும்போது நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீதுதான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், கிருபை யும் உண்டாகின்றன. இன்னும் இவர்களே நேர்வழியை அடைந் தவர்கள். (அல்குர்ஆன்: 2:155, 157)
அதேநேரத்தில் ஒப்பாரியும், அனுமதிக்கப்படாத செயல்களும், அல்லாஹ்வின் விதியின் மீது கோபப்படுவதும் இல்லாத அழுகை ஆகுமானதாகும். ஏனெனில் அப்படி அழுவது மரணித்தவரின் மீதுள்ள அன்பையும் உள்ளத்தில் மென்மையையும் காட்டுவதுடன் மனிதனால் தடுக்கமுடியாத ஒன்றாகவும் உள்ளது. எனவே அது ஆகுமானதாகிறது. சில வேளை அது அனுமதிக்கப் பட்டதாகவும் சில வேளை அது விரும்பத்தக்கதாகவும் ஆகிறது. அல்லாஹ் உதவப் போதுமானவன்.
பிரிவு 7 - நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள்
ரமளான் மாதம் நோன்பு நோற்பது ஒவ்வோர் ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமையாகும். நோன்பு இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். இது இஸ்லாத்தின் அடிப்படைகளில் உள்ளதாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: ''இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இறையச்சமுடையோர்களாக ஆகும் பொருட்டு. உங்களுக்கு முன்பு (இறைநம்பிக்கையாளர்களாக) இருந்தோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் (நோன்பு) கடமையாக்கப்பட்டுள்ளது.'' (அல்குர்ஆன் 2:183)
ஒரு பெண் தன் பருவ வயதை அடைந்து விட்டால் அவள் மீது நோன்பு கடமையாகிறது. சில பெண்கள் ஒன்பது வயதிலேயே பருவத்தை அடைந்து விடுகின்றனர். அப்போதிருந்தே அவள் மீது நோன்பு கடமையாகிறது. இதை சிலர் அறியாது இருக்கின்றனர். சில பெண்கள் நான் சிறியவள் தானே என்ற எண்ணத்தில் நோன்பை விட்டு விடுகின்றனர். அவளுடைய பெற்றோரும் அவளை நோன்பு நோற்குமாறு ஏவுவதில்லை. இவ்வாறு செய்வது இஸ்லாத்தின் மிக முக்கிய கடைமைகளில் ஒன்றை விட்டும் அலட்சியமாக இருப்பதாகும். இதுபோன்ற நிலை ஏற்படும்போது மாதவிடாய் ஆரம்பமான நாளிலிருந்து விடுபட்ட நோன்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். நீண்ட நாட்கள் கடந்துவிட்டாலும் கூட அவள் அதை செய்தே ஆகவேண்டும். நோன்பு களா செய்வதுடன், விடுபட்ட ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு ஏழைக்கு உணவு கொடுக்க வேண்டும்.
யார் மீது நோன்பு கடமை
ரமளான் மாதம் வந்துவிடுமானால் பருவமடைந்த, சீரிய சிந்தனையுள்ள, ஊரில் தங்கியிருக்கிற ஆண் - பெண் அனைவரின் மீதும் நோன்பு கடமையாகும். இந்த மாதத்தில் யாராவது நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால் அந்நாட்களில் நோன்பை விட்டுவிடலாம். ஆனால், அவற்றை மற்ற நாட்களில் நோற்றாக வேண்டும்.
''உங்களில் எவர் ரமளான் மாதத்தில் ஊரில் தங்கி இருக்கிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்.'' (அல்குர்ஆன் 2:185)
அல்லாஹ் கூறுகிறான்: ''(ரமளான் நாட்களில்) உங்களில் யாராவது நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் (ரமளான் அல்லாத) மற்ற நாட்களில் நோன்பு நோற்கவேண்டும்.'' (அல்குர்ஆன் 2:184)
ஒருவர் ரமளான் மாதத்தை அடைந்துவிட்ட நிலையில் அவர் வயது முதிர்ந்த நோன்பு நோற்க முடியாதவராக இருந்தால், அல்லது எப்போதுமே குணமாக முடியாத நிரந்தர நோயாளியாக இருந்தால் - ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. அவர் நோன்பை விட்டுவிட்டு ஒரு நாளைக்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவு கொடுப்பார். அந்தந்த பகுதியிலுள்ள உணவிலிருந்து ஒரு நபருக்கு தேவையான அளவு கொடுப்பார்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) கூறுகிறார்: நோய், குணமாகாது என்ற நிலையில் உள்ளவர்களுக்கும், வயோதிகர்களுக்குமே இந்த சட்டமாகும். அவர்கள் நோன்பை 'களா'ச் செய்யவேண்டியதில்லை. ஏனெனில் அவ்வாறு நோன்பு நோற்பது அவர்களால் முடியாத, கஷ்டமான செயலாகும் என அல்லாஹ் கூறியுள்ளான்.
ரமளானில் பெண்கள் நோன்பை விடுவதற்கென சில சலுகைகள் உள்ளன. சில காரணங்களால் ரமளானில் விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் அவர்கள் நோற்கவேண்டும்.
பெண்கள் நோன்பை விடுவதற்குரிய காரணங்கள்
1. மாதவிடாய் மற்றும் பிரசவ தீட்டு
மாதவிடாயின் போதும், பிரசவ உதிரப்போக்கின் போதும் நோன்பு நோற்பது அவர்களின் மீது தடுக்கப் பட்டுள்ளது. விடுபட்ட நோன்பை அவர்கள் வேறு நாட்களில் நோற்க வேண்டும்.
''மாதவிடாயின் போது விடுபட்ட நோன்பை திரும்ப நோற்கவேண்டும் என்றும், விடுபட்ட தொழுகையை திரும்பத் தொழவேண்டியதில்லை என்றும் நாங்கள் ஏவப்பட்டிருந்தோம்'' என ஆயிஷா(ரழி) கூறினார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஒரு பெண் ஆயிஷா(ரழி) அவர்களிடம் வந்து, ''மாதவிடாய்க் காரி நோன்பை 'களா'ச் செய்யவேண்டும் தொழுகையை 'களா'ச் செய்யவேண்டியதில்லை (என்று உள்ளதே) இது எதனால்? எனக் கேட்டதற்கு அவர், 'இது போன்ற செய்கைகளில் போதனைகளை நாம் அப்படியே பின்பற்ற வேண்டியதுதான் என்ற அடிப்படையிலேயே ஆயிஷா(ரழி) மேற்கண்ட ஹதீஸைக் கூறினார்.
இதனைப் பற்றி ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா ஃபத்வா தொகுப்பு 25அ ப251 ல் கூறும்போது,
''ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் இரத்தம் ஏற்படும் போது உடலிலுள்ள இரத்தம் வெளியேறுகிறது என்பது பொருளாகும். அவ்வாறு வெளியேறும்போது அவள் பலவீனமடைகிறாள். அந்நேரத்தில் அவளால் நோன்பை சரியான முறையில் நோற்க முடியாது. நோன்பு நோற்பதற்கு உடல் வலிமையும் அவசியமாகிறது. எனவேதான் மாதவிடாயின்போது விடுபட்ட நோன்பை மற்ற நாட்களில் நோற்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளாள்.
2. கற்பமும் பாலூட்டலும்
கற்பகாலத்திலும் பாலூட்டும் நாட்களிலும் நோன்பு நோற்பது அவளுக்கும் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கிறது. எனவே இந்த நேரங்களில் அவள் நோன்பை விட்டுவிடவேண்டும், குழந்தையை மட்டும் பாதிக்கும் என்ற காரணத்திற்காக நோன்பை விட்டுவிடுவாளானால், அவள் விட்டுவிட்ட நோன்பை நோற்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு என்ற அடிப்படையில் உணவு வழங்க வேண்டும். அவள் மீது தீங்கு ஏற்பட்டு விடும் என்பதற்காக நோன்பை விட்டிருந்தால்.திரும்ப நோன்பு நோற்றால் போதுமானது, காரணம் குர்ஆனில் 2:184 வது வசனத்தின் படி கற்பினியும், பாலூட்டுபவளும் அடங்கிவிடுவர்.
இமாம் இப்னு கதீர் தம் தப்ஸீரில் 1அ ப379 ல் குறிப்பிடுகிறார். கற்பிணி பெண்களும் பாலூட்டும் பெண்களும் தங்களுக்கோ, தங்கள் குழந்தைகளுக்கோ ஆபத்து ஏற்பட்டுவிடும் என பயந்தால் அவர்கள் நோன்பை விட்டுவிட அவர்களுக்கு அனுமதி உள்ளது.
இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தம் ஃபத்வா தொகுப்பு 25அ ப318 ல் கூறுகிறார்கள்.
கற்பிணிப்பெண் தன் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என பயந்தால் அந்நாட்களில் நோன்பை விட்டுவிட்டு வேறு நாட்களில் அதை நோற்பாள். விடுபட்ட நோன்பிற்காக ஒரு நாளைக்கு ஓர் ஏழைவீதம் உணவு வழங்கவேண்டும்.
எச்சரிக்கை
1. சாதாரணமாக தொடர் உதிரப்போக்குள்ள பெண் நோன்பு நோற்க வேண்டும். அவள் நோன்பை விடுவது அவளுக்கு அனுமதிக்கப்படவில்லை.
ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா கூறுகிறார். தொடர் உதிரப்போக்கு என்பது எல்லாக் காலத்திலும் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. நோன்பு கடமையாக்கப்படும் நேரம் என்பது அதில் இல்லை. எனவே, அதிலிருந்து அவள் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளமுடியாது. இது போன்று தான் வாந்தி, காயம் மற்றும் கட்டியிலிருந்து(பருவிலிருந்து) இரத்தம் கசிந்து விடுதல், தூக்கத்தில் விந்துவெளிப்படுதல் ஆகியவை போன்றவைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் விதத்தில் அவை குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுவதல்ல. எனவே மாதவிடாயைப் போன்று நோன்பு நோற்பதை தடுக்கக் கூடியதாக இவைகள் இல்லை.
2. மாதவிடாய்க் காரி, கற்பிணி, பாலூட்டுபவள் ஆகியோர் இக்காலங்களில் விட்டுவிட்ட ரமளான் நோன்பை அடுத்த ரமளானுக்குள் நோற்று விடவேண்டும், விரைவாக நோற்பது சிறந்தது.
சென்ற ரமளானில் கடமையான நோன்பை நோற்காமல் விட்டுவிட்ட பெண் அடுத்த ரமளான் வரும் முன்பாக அதை நோற்றுக் கொள்ள வேண்டும். காரணம் எதுவுமின்றி அடுத்த ரமளான் வரை நோற்காமல் விட்டுவிட்டால், நோன்பை நோற்பதோடு ஒரு நாளைக்கு ஓர் ஏழை வீதம் உணவும் கொடுக்கவேண்டும். காரணத் துடன் நோன்பை விட்டிருந்தால் களா செய்வது மட்டுமே கடமையாகும்.
நோய், பிரயாணம் காரணமாக நோன்பை விட்டவளுடைய சட்டமும் மேற்கூறப்பட்ட விளக்கத்துடன் மாதவிடாய்க்காக நோன்பை விட்டவளுடைய சட்டத்தை போன்றுதான்.
3. கணவன் ஊரில் தங்கி இருக்கும்போது கணவனின் அனுமதியின்றி உபரியான நோன்புகளை நோற்கக் கூடாது.
''கணவன் ஊரில் தங்கி இருக்கும்போது அவனுடைய மனைவி அவனுடைய அனுமதியின்றி நோன்பு நோற்பது கூடாது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
சில அறிவிப்புகளில், ''ரமளான் நோன்பைத் தவிர'' என இடம் பெற்றுள்ளது. (நூல்: அபூதாவூத்)
ஒரு பெண்ணுக்கு அவளுடைய கணவன் அனுமதித்தால் அல்லது கணவன் ஊரில் இல்லாமலிருந்தால் அவள் உபரியான நோன்புகளை நோற்றுக் கொள்ளலாம். அது அவளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நோன்பு, ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு, முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் நோன்பு, ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள், துல்ஹஜ் மாதம் பத்துநாட்கள், ஒரு நாள் அதற்கு முன்போ அல்லது அதற்கு பின்போ சேர்த்து அரஃபா நோன்பு போன்ற சுன்னத்தான நோன்புகளை நோற்கலாம். என்றாலும் ரமளான் மாதத்தில் அவளுக்கு விடுபட்டுப் போன நோன்பு இருக்கும் போது, அதை 'களா'ச் செய்யும் வரை உபரியான நோன்பு களை நோற்பது கூடாது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
4. மாதவிடாய்ப் பெண் ரமளானுடைய நடுப்பகலில் தூய்மையாகி விட்டால் அம்மாதத்தைக் கண்ணியப்படுத்தும் முகமாக அந்நாளின் மீதியுள்ள நேரத்தில் எதுவும் சாப்பிடாமல் இருந்துவிட்டு, அந்த நாளுக்குப் பகரமாக வேறு ஒருநாள் அவள் நோன்புநோற்க வேண்டும்.
பிரிவு 8 - பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம்
மக்காவில் இருக்கும் இறை இல்லமான கஅபாவிற்குச் சென்று ஆண்டுதோறும் ஹஜ் செய்வது இஸ்லாமிய சமுதாயத்தின் மீது கடமையாகும். ஹஜ் செய்வதற்கான தகுதிகள் யாரிடம் இருக்கிறதோ அந்த முஸ்லிம் தன் வாழ்நாளில் ஒரு தடவை ஹஜ் செய்வது கடமையாகும். ஒன்றிற்கு மேற்பட்ட முறை செய்யும் ஹஜ் உபரியானதாகக் கருதப்படும், ஹஜ் என்பது இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஹஜ் செய்யும் ஒரு பெண்ணிற்கு 'ஜிஹாத்' செய்த நன்மையை அல்லாஹ் கொடுக்கிறான்.
''இறைத்தூதர் அவர்களே! பெண்களின் மீது ஜிஹாத் கடமையா?' என ஆயிஷா(ரழி) அவர்கள் கேட்ட தற்கு, 'ஆம்! அவர்கள் மீது போர் இல்லாத ஜிஹாத் இருக்கிறது. அது ஹஜ்ஜும் உம்ராவும் ஆகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்:அஹ்மத், இப்னுமாஜா)
புகாரியின் மற்றோர் அறிவிப்பில் ஆயிஷா(ரழி) வாயிலாக, ''இறைத்தூதர் அவர்களே! செயல்களில் சிறந்ததாக ஜிஹாத் செய்வதை நாங்கள் கருதுகிறோம். எனவே, நாங்களும் ஜிஹாதில் பங்கு பெறவேண்டாமா?' என ஆயிஷா(ரழி) கேட்டதற்கு, ஜிஹாத்களில் சிறந்தது அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் ஆகும்' என்று கூறினார்கள்'' என இடம் பெற்றுள்ளது.
பெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள்:
1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெண் இருவருக்கும் பொதுவான சில விதிமுறைகள் உள்ளன. அவை,
1. முஸ்லிமாக இருக்கவேண்டும்.
2. பைத்தியமல்லாது சீரிய சிந்தனையுடன் இருக்க வேண்டும்.
3. சுதந்திரமான நிலையில் இருக்கவேண்டும்.
4. பருவ வயதை அடைந்திருக்கவேண்டும்.
5. மக்கா வரை சென்று திரும்பும் அளவிற்கு பொருளா தார (மற்றும் உடல் வலிமை) வசதியாக இருக்க வேண்டும்.
பெண்களைப் பொறுத்தவரை அவளுடன் துணையாகச் செல்லக்கூடிய திருமண உறவு தடை செய்யப்பட்ட ஆண் இருக்கவேண்டும். அதாவது கணவன், தந்தை மகன், சகோதரன் போன்றவர்கள், அல்லது பால்குடி சகோதரன், தாயின் கணவன் அல்லது கணவனின் மகன் போன்றவர்கள் உடன் இருக்கவேண்டும்.
''நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை பிரசங்கம் செய்யும் போது, திருமணம் முடிக்கத் தடுக்கப்பட்ட ஆண் அவளுடன் இருந்தேயன்றி எந்த ஓர் ஆணும் ஒரு பெண்ணுடன் தனித்திருக்கக் கூடாது. தனக்குத் திருமண உறவு தடுக்கப்பட்டுள்ள ஆண் துணையின்றி எந்த ஒரு பெண்ணும் தனிமையில் பயணம் செய்யக்கூடாது.' என்று கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத் தூதர் அவர்களே! என் மனைவி ஹஜ் செய்வதற்காகத் தனியாகச் சென்றிருக்கிறாள். நானோ இன்ன யுத்தத்தில் பங்கெடுப்பதற்காக உள்ளேன்.' எனக் கேட்டார். அதற்கு, 'நீ சென்று உன் மனைவியுடன் 'ஹஜ்' செய்துகொள்!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினாக்ள்'' என இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஒரு பெண், திருமணம் செய்வது தடுக்கப்பட்ட நபர் துணையின்றி மூன்று நாட்கள் பயணம் செய்யக்கூடாது. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரழி) அறிவிக்கிறார் (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
இவ்வாறே ஒரு பெண் தனிமையில் பயணம் செய்வதைத் தடை செய்கின்ற நபிமொழிகள் அதிகமாக உள்ளன. ஏனெனில் பெண்ணைப் பொறுத்தவரை பலவீனமானவள். பயணத்தின்போது பல சிரமங்கள் உள்ளன. இதை ஆண்கள் தாங்கிக் கொள்வர். பெண்ணைத் தீயவர்கள் பெரும்பாலும் ஓர் ஆசைப் பொருளாகவே கருதுகிறார்கள். இதனால் அவளுக்கு ஆபத்துகள் நேரக்கூடும். இந் நிலையில் அவர்களுக்குத் துணையாக ஆண்கள் தேவைப்படுகிறார்கள்.
ஹஜ்ஜிற்காகப் பெண்ணுடன் செல்பவர், திருமண உறவு தடுக்கப்பட்ட முஸ்லிமாக, பருவமடைந்தவராக, பைத்தியம் போன்றவையன்றி, அறிவுடையவராக இருக்கவேண்டும். ஏனெனில், இறைமறுப்பாளரிடம் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது. மேற்குறிப்பிட்ட தகுதிகளில் எவரும் துணை யாகக் கிடைக்காத பட்சத்தில் அவளுக்குப் பகரமாக ஹஜ் செய்வதற்கு ஒருவரை ஏற்பாடு செய்வது அவளுக்குக் கடமையாகும்.
2. உபரியான 'ஹஜ்ஜை மேற்கொள்வதாக இருந்தால் கணவனின் அனுமதியைப் பெறவேண்டும். கணவனுக்குச் செய்யவேண்டிய கடமைகளில் பாதிப்புகள் நிகழாதிருக்கவே இவ்வாறான சட்டம் உள்ளது.
''உபரியான ஹஜ்ஜை மேற்கொள்வதை விட்டும் மனைவியைத் தடுக்கின்ற உரிமை கணவனுக்கு இருக்கிறது'' என முக்னீ என்ற நூலில் 3அ ப240 ல் கூறப்பட்டுள்ளது.
அறிஞர் இப்னுல் முன்திர் குறிப்பிடுகிறார்.
''நான் அறிந்த மார்க்க அறிஞர்கள் எல்லோருமே உபரியான ஹஜ்ஜிற்காக ஒரு பெண் வெளியே செல்வதை தடுப்பதற்குரிய அதிகாரம் கணவனுக்கு உண்டு; கணவனுக்குள்ள உரிமைகளை நிறைவேற்றுவது மனைவியின் மீது கடைமையாகும். கடமை அல்லாத ஒன்றிற்காக கடமையை மீறலாகாது'' அடிமைக்கும் எஜமானனுக்கு மிடையிலும் இதே சட்டம் தான் எனக் கூறி யுள்ளனர்.
3. ஹஜ் மற்றும் உம்ராவை ஆண்களுக்குப் பகரமாக ஒரு பெண் நிறைவேற்றுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பில் 26அ ப13 ல் குறிப்பிடுகிறார்.
மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி ஒரு பெண் இன்னொரு பெண்ணிற்குப் பதிலாக ஹஜ்ஜை நிறைவேற்றலாம் எனக் கூறியுள்ளனர். அது அவளுடைய மகளாகவும் இருக்கலாம். மகள் அல்லாமலும் இருக்கலாம். இவ்வாறே ஓர் ஆணுக்குப் பதிலாக ஒரு பெண் ஹஜ் செய்வதும் கூடும். நான்கு இமாம்கள், மற்றும் அறிஞர்கள் அனைவரும் இவ்வாறே கூறியுள்ளனர்.
கத் அம் கோத்திரத்தைச் சேர்ந்த பெண் தன் தந்தைக்குப் பதிலாக ஹஜ் செல்வதற்கான அனுமதியை நபி(ஸல்) அவர்கள் அவளுக்கு அளித்தார்கள். அப்பெண் நபி(ஸல்) அவர்களிடத்தில் 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தையின் மீது ஹஜ் செய்வது கடமையாகியுள்ளது. அவரோ வயோதியராக இருக்கிறார் (நான் என்ன செய்வது) எனக் கோரினார், அப்போது அவருக்குப் பகரமாக ஹஜ் செய்வதற்கு அவளுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
பெண்ணுடைய இஹ்ராமை விடவும் ஆணுடைய இஹ்ராம் பூரணத்துவம் பெற்றதாக இருந்த போதிலும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4. ஒரு பெண் ஹஜ்ஜிற்குச் செல்லுகின்ற வழியில் அவளுக்கு மாதவிடாய் அல்லது பிரசவம் ஏற்பட்டுவிடுமானால் அதற்காக அவள் பின்வாங்க வேண்டிய அவசியமில்லை, இஹ்ராம் நிய்யத்து வைக்கும் வேளையில் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தூய்மை நிலையில் உள்ள பெண்களைப் போன்று இஹ்ராம் நிய்யத்து வைப்பாள். ஏனெனில் நிய்யத்திற்கு சுத்தமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை அவளுக்கு இல்லை.
முக்னீ என்ற நூலில் 3அ ப293, 294 ல் ''இஹ்ராம் நிய்யத்தின் போது ஆண்களுக்கு குளிப்பது எவ்வாறு சுன்னத்தோ அதைப் போன்றே பெண்களும் குளிப்பது சுன்னத்தாகும். மாதவிடாய் மற்றும் பிரசவம் பெண்களின் விஷயத்தில் அது மிகவும் ஏற்றமானது. இஹ்ராம் என்பது ஒரு வணக்கமாகும். எனவே மாதவிடாய் மற்றும் பிரசவப் பெண்களும் குளிப்பது அவசியம். இதற்குத் தெளிவான ஆதாரம் உள்ளது.'' எனக் கூறப்பட்டுள்ளது.
துல் ஹுலைதஃபா என்ற இடத்திற்கு நாங்கள் வந்தோம். அப்போது, அஸ்மா பின்த் உமைஸ் என்பவர் பிரசவமானார். அவர்கள் முஹம்மத் இப்னு அபீபக்கர் அவர்களைப் பெற்றெடுத்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களிடத்தில் ஒருவரை அனுப்பி, 'நான் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டுவருமாறு' வேண்டினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ குளித்துவிட்டு (மர்ம உறுப்பில்) ஒரு துணியை கட்டிக் கொண்டு இஹ்ராம் அணிந்துகொள்!' என்று கூறினார்கள்’ என ஜாபிர்(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
பிரசவமானவர்களும், மாதவிடாய்ப் பெண்களும் ஹஜ்ஜின்போது இஹ்ராம் அணிந்து தவாஃபைத் தவிர அதன் அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்கி என இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)
''ஆயிஷா(ரழி) அவர்கள் மாதவிடாயாகி இருந்த போது ஹஜ்ஜிற்கு இஹ்ராம் ஆடையை அணிவதற்காக குளிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.''
மாதவிடாய் மற்றும் பிரசவமான பெண்கள் இஹ்ராம் ஆடையை அணியும் போது குளிப்பது ஏற்றம். என்று கூறப்பட்டுள்ளதன் நோக்கம் தூய்மையாக இருக்கவேண்டும்; வெறுக்கத்தக்க வாடையின் மூலம் மக்கள் ஒன்று கூடும் இடத்தில் அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.
இஹ்ராம்ஆடை அணிந்த நிலையில் பெண்களுக்கு மாதவிடாய், பிரசவம் ஏற்பட்டுவிடுமானால் அதனால் இஹ்ராமிற்கு எந்தப் பாதிப்புமில்லை. அவர்கள் தங்கள் இஹ்ராமிலேயே இருக்கவேண்டும். இஹ்ராம் மூலம் தடுக்கப்பட்டவற்றிலிருந்து விலகி இருக்கவேண்டும். மாதவிடாய், பிரசவத் தீட்டிலிருந்து தூய்மையாகி குளிக்கும் வரை தவாஃப் செய்வது கூடாது. 'தமத்துவு' என்ற ஹஜ்ஜின் வகையை நிறைவேற்றுவதாக எண்ணி உம்ராவிற்கு இஹ்ராம்ஆடை அணிந்து அரஃபா நாள் வரும் வரை தூய்மையாகவில்லையானால் அவள் ஹஜ்ஜிற்காக இஹ்ராம் நிய்யத்து வைக்க வேண்டும். அந்த ஹஜ்ஜை உம்ராவுடன் சேர்த்து ஒரே இஹ்ராமில் ஹஜ் உம்ராவை செய்துவிடவேண்டும். அப்போது 'ம்ரான்' என்ற ஹஜ்ஜின் வகையைச் செய்தவர்களாக ஆம் விடுவார்கள்.
ஆயிஷா(ரழி) அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீஸ் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது .
''உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்த நிலையில் ஆயிஷா(ரழி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அந்நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி)அவர்களிடம் வந்தார்கள். அப்போது அவர் அழுது கொண்டிருந்தார். (அதைப் பார்த்து) ''நீ ஏன் அழுகிறாய், உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?'' என்று கேட்டார்கள். அதற்கு, 'ஆம்' என ஆயிஷா(ரழி) பதில ளித்தார். இது ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் விதித்த ஒன்றாகும். எனவே ஹாஜிகள் செய்கின்ற எல்லா கிரியைகளையும் நீ செய்துகொள்! 'தவாஃப்' மட்டும் செய்யாதே!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' என்பதை ஆயிஷா(ரழி) அவர்களே அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
மற்றோர் அறிவிப்பில், ''நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி)அவர்களிடம் வந்தபோது, அவர்கள் அழுது கொண்டிருப்பதைக் கண்டு, உனக்கு என்ன நேர்ந்தது?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு, 'எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது.' மக்கள் எல்லாம் இஹ்ராம் நிலையிலிருந்து விடுபட்டு விட்டார்கள். நானோ விடுபடவில்லை. கஅபாவை தவாஃப் செய்யவுமில்லை. மக்கள் அனைவரும் ஹஜ்ஜின் கடமையைச் செய்வதற்காக புறப்பட்டுச் செல்கிறார்கள்' எனக்கூறினார். இது அல்லாஹ் ஆதமுடைய பெண் மக்களின் மீது விதித்தது தான். எனவே நீ குளித்து விட்டு திரும்ப இஹ்ராம் ஆடை அணிந்துகொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே அவர்கள் செய்தார்கள். நிற்க வேண்டிய எல்லா இடங்களிலும் நின்றார்கள். சுத்தமான பின்பு கஅபாவை 'தவாஃப்' செய்து, ஸஃபா மர்வா மலைக்கிடையில் சயீ எனும் தொங்கோட்டம் ஓடினார்கள். அதன் பின்னர் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷாவிடம், நீ உன்னு டைய ஹஜ் மற்றும் உம்ராவை முடித்து இஹ்ராமிலிருந்து விடுவிக்கப்பட்டவளாகிவிட்டாய்! எனக் கூறினார்கள்.
'தஹ்தீபுஸ்ஸுனன்' என்ற நூலில் 2அ ப303ல் இப்னுல் கையிம் குறிப்பிடுகிறார்.
ஆயிஷா(ரழி) முதலில் உம்ராவிற்காக இஹ்ராம் நிய்யத்து வைத்தார்கள். பின்னர் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டபோது ஹஜ்ஜிற்கான எண்ணத்தை (நிய்யத்தை) வைத்துக் கொள்ளும் படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். இதன் மூலம் அவர்கள் 'கிரான்' என்ற ஹஜ் வகையைச் செய்தவர்களானார்கள். எனவே தான் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரழி) அவர்களிடத்தில் நீ கஅபாவை 'தவாஃப்' செய்து ஸஃபா மற்றும் மர்வா மலைக்கிடையில் ஓடினால் அது உன் ஹஜ்ஜிற்கும், உம்ராவிற்கும் போதுமானதாகும்கி என்று கூறினார்கள்.
5. இஹ்ராம் நிய்யத்து வைக்கும் போது பெண்கள் செய்யவேண்டியவை.
இஹ்ராம் நிய்யத்து வைத்த நிலையில் ஆண்கள் எதையெல்லாம் மேற்கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் பெண்களும் மேற்கொள்ள வேண்டும். குளித்தல், சுத்தம் செய்தல், முடியைக் களைதல், நகம் வெட்டுதல், கெட்ட வாடையைப் போக்குதல் போன்ற செயல்களைச் செய்யவேண்டும். ஏனெனில் இஹ்ராம் நிய்யத்து வைத்த பின்னர் இதுபோன்ற செயல்களைச் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இவை அவளுக்கு அவசியமில்லை என்றாலும் செய்துதான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. அது இஹ்ராம் சம்பந்தப்பட்ட செயல்களில் உள்ளவையும் அல்ல. இஹ்ராம் அணியும்போது அவள் தன் உடம்பில் அதிகம் வாடை வீசாத வாசனைப் பொருட்களைப் பூசிக் கொள்ளலாம்.
''நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜிற்குச் சென்றோம். இஹ்ராம் நிய்யத்து வைக்கும் வேளையில், எங்கள் நெற்றியில் கஸ்தூரி மணப்பொருளைத் தடவுவோம். எங்களில் ஒருத்திக்கு வியர்வை ஏற்பட்டால் அவளுடைய முகத்தில் கஸ்தூரி வடியும். அதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள், எங்களைத் தடுக்கவில்லை.'' என ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)
இமாம் ஷவ்கானி நைலுல் அவ்தார் 5அ ப12 ல் குறிப்பிடுகிறார்.
கஸ்தூரி வடிவதைப் பார்த்தும் நபி(ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தது அது அனுமதிக்கப்பட்டதைக் குறிக்கிறது. அது தவறாக இருக்குமானால் அதைப் பார்த்து விட்டு நபி(ஸல்) அவர்கள் வாய்மூடி இருக்க மாட்டார்கள்.
6. ''இஹ்ராம் அணிந்த நிலையில் பெண்கள் முகத்தை மறைத்திருப்பது கூடாது, இரண்டு கண்கள் மட்டும் தெரியும் விதத்திலுள்ள முகமுடியால் முகத்தை மூடுவதும் கூடாது. இதை நபி(ஸல்) தடை செய்துள்ளார்கள்.'' (நூல்: புகாரி)
கை உறைகளையும் அணியக் கூடாது. அன்னிய ஆண்கள் பார்க்கும் போது முகமுடி அல்லாத துணியால் முகத்தை மூடிக் கொள்ளலாம், கை உறை அல்லாத துணிகளால் முன்கையையும் மறைத்துக் கொள்ளலாம், காரணம் அன்னிய ஆடவர்களை விட்டும் முகம் கைகளை இஹ்ராமின் போதும் மற்ற நேரத்திலும் மறைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னுதைமிய்யா கூறுகிறார்.
''பெண் தன்னை மறைத்து வைத்துக் கொள்ளக் கூடியவளாவாள். எனவே அவள் அணிந்திருக்கிற ஆடையையே இஹ்ராமின்போதும் அணிந்து கொள்ளலாம். ஆனால் அவள் முகத்தை மறைப்பதையும், கை உறைகள் அணிவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஒரு பெண் தன் முகத்தைத் தொடாத விதத்தில் அதை மறைத்துக் கொள்வது அவளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. முகத்தைத் தொடும் விதத்தில் இருந்தாலும் அதுவும் அனுமதிக்கப்பட்டது தான் என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
தன் முகத்தை மூடும் துணி முகத்தில் படாமலிருப்பதற்காக குச்சிகள், கை போன்றவற்றால் மறைப்பது தேவையற்றதாகும். முகம் மற்றும் நகைக்கு இடையில் நபி(ஸல்) சமப்படுத்தித்தான் கூறியுள்ளார்கள். கையும் முகமும் ஆண்களின் உடம்பைப் போன்றதுதான், தலையைப் போன்றதல்ல.
நபி(ஸல்) அவர்களின் மனைவியர் இஹ்ராமின் போது முகத்தைத் தொடும்படியான திரையை (அன்னிய ஆண்கள் முன்னிலையில்) தொங்கவிட்டுள்ளார்கள்.
'பெண்ணின் இஹ்ராம் அவளுடைய முகத்தில் இருக்கிறது.' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எந்த அறிஞரும் அறிவிக்கவில்லை. இது சில முன்னோர்களின் கூற்றாகும்.
இப்னுல் கையிம் அவர்கள் தஹ்தீபுஸ் ஸுனன் என்ற நூலில் 2அ ப350 ல் கூறுகிறார்கள்.
பெண்கள் இஹ்ராம் அணிந்திருக்கும்போது தங்கள் முகத்தை அவசியம் திறந்து வைக்கவேண்டும் என்பதற்கு நபி(ஸல்) அவர்கள் பற்றி ஒரு எழுத்துக்கூட அறிவிக்கப்படவில்லை. துவாரமிடப்பட்ட முகத்திரையை அணி வதைத்தான் தடை செய்துள்ளார்கள்.
அஸ்மா(ரழி) இஹ்ராம் அணிந்திருந்தபோது தன் முகத்தை மறைத்திருந்ததாக ஹதீஸில் வந்துள்ளது. ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
''நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும் போது எங்களைக் கடந்து ஒரு வாகனக் கூட்டம் சென்றது. நாங்களோ இஹ்ராம் அணிந்திருந்தோம். அப்போது நாங்கள் எங்கள் முகத்தை தலையிலுள்ள துணியால் மறைத்துக் கொள்வோம். அக்கூட்டம் எங்களைக் கடந்து சென்றதும் முகத்தைத் திறந்து கொள்வோம்.'' (நூல்: அபூதாவூத்)
எனவே இஹ்ராம் அணிந்த இஸ்லாமியப் பெண்ணே நீ அறிந்துகொள்!
முகத்திற்க்கும், கைகளுக்கும் என்று சொந்தமாக தைக்கப்பட்ட துணிகளால் முகத்தை மறைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறே கை உறைகளை அணிவதும் தடுக்கப் பட்டுள்ளது. பிற ஆண்களின் பார்வையை விட்டும் உன் முகம் கைகளை மறைப்பது கடமையாகும். முகத்தைத் தொடாமலிருக்கும் துணியை அணிவதற்காக எதையாவது குச்சி அல்லது தலைப்பாகை போன்றவற்றை வைப்பதற்கும் எவ்வித ஆதாரமுமில்லை.
7. பெண்கள் இஹ்ராம் அணியும்போது சாதாரண பெண்கள் அணிகின்ற ஆடம்பரமில்லாத ஆடையில் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம். ஆண்களுக்கு ஒப்பான ஆடைகளையோ, உறுப்புக்களை வெளிப்படுத்திக் காட்டக்கூடிய இறுக்கமான ஆடைகளையோ ஒழுங்காக மறைக்காத விசாலமான ஆடைகளையோ, கால்கள் கைகள் வெளியே தெரியும் விதத்திலான குட்டையான ஆடைகளையோ அணியக் கூடாது. அது விசாலமானதாக, கட்டியானதாக இருத்தல் வேண்டும்.
இப்னுல் முன்திர் அவர்கள் கூறுகிறார்கள். ''பெண்களைப் பொறுத்தவரையில் இஹ்ராமின்போது சட்டை, மேல் அங்கி, பைஜாமா, தலையையும், மார்பையும் மறைக்கும் பர்தா, கால் உறை ஆகியவை அணிவது அனுமதிக்கப்பட்டதாகும் என அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளார்கள். (முக்னி 3அ ப328)
பச்சை நிறம் போன்ற குறிப்பிட்ட நிறமுள்ள ஆடையைத்தான் அணியவேண்டும் என்பதில்லை. சாதாரணமாக பெண்கள் அணிகின்ற சிகப்பு, பச்சை, கருப்பு போன்ற எந்த நிறமுள்ள ஆடையை வேண்டுமானாலும் பெண்கள் அணிந்து கொள்ளலாம். தேவைப்படும்போது ஆடைகளை மாற்றிக் கொள்வதும் அவளுக்கு அனுமதிக் கப்பட்டுள்ளது.
8. இஹ்ராம் நிய்யத்து வைத்த பின்னர் தனக்கு மட்டும் கேட்கும் விதத்தில் தல்பியா சொல்வது சுன்னத்தாகும்.
இப்னு அப்துல் பர்ரி கூறுகிறார்: பெண்கள் தங்கள் சப்தத்தை உயர்த்தி தல்பியா சொல்லாமல் இருப்பதுதான் அவர்களுக்குச் சுன்னத்தாக இருக்கிறது என்றும், மேலும் அவள் தனக்கு மட்டும் கேட்கும்படி அதைக் கூற வேண்டும் என்றும் அறிஞர்கள் ஏகோபித்துக் கூறுகின்றனர். ஏனெனில் பெண்கள் சப்தத்தை உயர்த்திக் கூறுவதால் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் சப்தமிட்டு ஆண்களைப் போன்று பாங்கு இகாமத் சொல்வது அவர்களுக்கு அனுமதிக்கப்பட வில்லை. தொழுகையில் இமாம் தவறு செய்யும் போது ஆண்களைப் போன்று தஸ்பீஹ் சொல்லாமல் கையின் மேல் தட்டவேண்டும் என்பது பெண்களுக்கு சுன்னத்தாக ஆக்கப்பட்டுள்ளது. (அல்முக்னி 2அ ப330,331)
9. பெண்கள் தவாஃப் செய்யும்போது, உடலை முழுமையாக மறைக்கவேண்டும்.
சப்தத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும். பார்வையைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும். ஆண்களுடன் நெரிசலில் ஈடுபடக்கூடாது. குறிப்பாக 'ஹஜருல் அஸ்வத், ருக்னுல்யமானி பக்கம் செல்லும்போது கவனம் தேவை. நெரிசலுடன் கஃபாவை நெருங்கி செய்வதை விட நெரிசல் இல்லாத தூரமான இடத்திலிருந்து தவாஃப் செய்வதுதான் பெண்களுக்குச் சிறந்ததாகும். ஏனெனில் நெரிசலில் ஈடுபவடுவது தடுக்கப்பட்டுள்ளது. அதனால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. கஅபாவிற்கு அருகில் செல்வதும், ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவதும் முடிந்தால் செல்வது தான் சுன்னத்தாக இருக்கிறது. ஒரு சுன்னத்தை நிறை வேற்றுவதற்காக தடுக்கப்பட்ட செயலைச் செய்யக் கூடாது. இப்படிப்பட்ட நிலையில் பெண்கள் விஷயத்தில் அது சுன்னத்தாகவே கருதப்படமாட்டாது. நெரிசலின் போது அந்த கல்லின் பக்கம் வரும் நேரத்தில் தன்கையால் சுட்டிக் காட்டினால் போதுமானது.
இமாம் நவவீ அவர்கள் மஜ்மூவு என்ற நூலில் 8அ ப37ல் கூறுகிறார்கள்.
தோழர்கள் கூறியுள்ளார்கள். பெண்கள் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது அவர்களுக்கு உகந்ததல்ல. இரவிலும் மற்ற நேரங்களில் மக்கள் அதிகமாக இல்லாத நேரத்திலும் தவாப் செய்யும் இடம் காலியாக இருந்தாலே தவிர அந்தக்கல்லைத் தொடுவதும் உகந்ததல்ல. இதனால் அந்தப் பெண்களுக்கும் மற்றவர்களுக்கும் தீங்கு ஏற்படுகிறது.
முக்னி என்ற நூலில் 3அ ப331 ல் கூறப்பட்டுள்ளது. பெண்கள் இரவு நேரத்தில் கஅபாவை தவாஃப் செய்வது அவர்களுக்கு சிறந்தது. ஏனெனில் அந்நேரத்தில்தான் அவர்கள் மறைவாகவும் நெரிசல் இல்லாமலும் தவாஃப் செய்யவும், ஹஜருல் அஸ்வதைத் தொடவும் முடியும்.
10. முக்னி என்ற நூலில் 3அ ப394 ல் கூறப்பட்டுள்ளது. பெண்களுடைய தவாஃபையும் ஸயீயையும் பொறுத்த வரையில் எல்லா சுற்றிலும் நடந்தே செல்லவேண்டும்.
இப்னுல் முன்திர் கூறுகிறார்: தவாஃப் செய்யும் போதும், ஸஃபா மர்வாவிற்கு இடையில் ஸயீ எனும் தொங்கோட்டம் ஓடும் போதும் ஆண்களைப் போன்று தங்கள் உடம்பைக் குலுக்கி வேகமாக நடக்க வேண்டும் என்பது கிடையாது என அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். தவாஃபின்போது புஜத்தைத் திறந்து வீரத்தை வெளிப்படுத்தி வேகமாகச் செல்லவேண்டும் என்பது ஆண்களுக்குத்தானே தவிர பெண்களுக்கு அல்ல. பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தங்கள் உடல் முழுவதையும் மறைக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
11. ஹஜ்ஜின்போது மாதவிடாய்ப் பெண்கள் கடை பிடிக்கவேண்டியவை.
மாதவிடாய்ப் பெண் ஹஜ்ஜின்போது இஹ்ராம் அணிதல், அரஃபா மைதானத்தில் நிற்குதல், முஸ்தலிபாவில் இரவு தங்குதல், ஜம்ரத்தில் கற்களை ஏறியுதல் போன்ற எல்லா காரியங்களையும் செய்யவேண்டும். தவாஃப் மட்டும் செய்யக்கூடாது. தூய்மையான பின்பு தவாஃப் செய்யவேண்டும்.
மாதவிடாயாக இருந்த ஆயிஷா(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் ''ஹாஜிகள் செய்கின்ற எல்லாவற்றையும் நீ செய்துகொள்! சுத்தமாகும் வரை கஅபாவை தவாஃப் மட்டும் செய்யாதே! என்று கூறினார்கள்.
முஸ்லிமின் ஓர் அறிவிப்பில் ''ஹாஜிகள் நிறை வேற்றுகின்ற எல்லாச் செயல்களையும் நீ செய்துகொள்! குளிக்கும் வரை தவாஃப் செய்யாதே!'' என்று கூறியதாக உள்ளது. (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஷவ்கானி நைலுல்அவ்தார் என்ற நூலில் 5அ ப49 ல் கூறுகிறார்.
மாதவிடாய்ப் பெண் இரத்தம் நின்ற பின்பு குளிக்கும் வரை தவாஃப் செய்யக்கூடாது என்பதை இந்த நபிமொழி அறிவிக்கிறது. தடை செய்யப்பட்டிருக்கிற காரணத்தினால் இத்தடையை யாராவது மீறி தவாஃப் செய்தால், அது வீணாம்விடும்.
ஸஃபா மர்வா மலைக் குன்றுகளுக்கு இடையில் ஸயீ எனும் தொங்கோட்டமும் ஓடக்கூடாது. ஏனெனில் கடமையான ஹஜ்ஜின் தவாஃப் செய்தப்பின்னரே ஸயீ செய்வது கடமையாகும். நபி(ஸல்) அவர்கள் தவாஃப் செய்தபின்னர்தான் ஸயீ செய்துள்ளார்கள்.
இமாம் நவவீ மஜ்மூவு என்ற நூலில் 8அ ப82 ல் கூறுகிறார்கள்.
ஒருவர் தவாஃப் செய்யும் முன்பாக ஸயீ செய்தால் அவரின் ஸயீ ஏற்றுக் கொள்ளப்படாது. இவ்வாறுதான் அறிஞர்கள் அனைவரும் கூறியுள்ளனர். இதில் கருத்து வேறுபாடு இல்லை என 'மாவர்தீ' என்பவர் கூறியுள்ளார். இவ்வாறே இமாம்களான மாலிக், அபூஹனீபா, அஹ்மத், ஆகியோரும் கூறியுள்ளனர்.
இப்னுல் முன்திர், அதாவு மற்றும் சில ஹதீஸ் கலை அறிஞர்களைத் தொட்டும் (தவாஃப் முன்பு ஸயீ செய்வது) கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் என்னவென்றால் 'நபி(ஸல்) அவர்கள் தவாஃப் செய்த பின்னரே ஸயீ செய்தார்கள். மேலும் ''என்னிடமிருந்துதான் உங்களின் ஹஜ் கிரியைகளை எடுத்துக் கொள்ளவேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
''நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்காகச் சென்றேன். சில மக்கள் அவர்களிடத்தில் வந்து 'இறைத்தூதர் அவர்களே! தவாஃப் செய்யும் முன்பே நாங்கள் ஸயீ செய்துவிட்டோம்' என்றனர். இன்னும் சிலர் 'நாங்கள் முற்படுத்தி விட்டோம்'; நாங்கள் பிற்படுத்தி விட்டோம் என பலவாறு கூறப்பட்ட போதெல்லாம், குற்றம் இல்லை. ஒரு முஸ்லிமின் மானத்தை அநியாயமாக பங்கப்படுத்தியவன்தான் நாசமாவான் பங்கம் ஏற்படும் விதத்தில் நடந்து கொள்ளும்போது மட்டுமே அவன் அநீதி இளைத்தவனாக ஆகிறான். அவன்தான் நாசமாம் குற்றமிளைத்தவன்.' என்று கூறினார்கள்'' என இப்னு ஷுரைக்(ரழி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)
இங்கே தவாஃபிற்கு முன்னர் ஸயீ செய்தேன் என்பதின் பொருள், மக்காவிற்குள் நுழைந்தவுடன் செய்யும் தவாஃபிற்குப் பின்னர் ஹஜ்ஜின் தவாஃபிற்கு முன் ஸயீ செய்தேன் என்பதாகும் என கத்தாபி தெரிவித் துள்ளார்.
முஹம்மத் அமீன் »ன்கீதி தம் திருக்குர்ஆன் விளக்க வுரையான ''அள்வாவுல் பயான்'' என்ற நூலில் 5அ ப252 ல் குறிப்பிடுகிறார்.
அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளதாவது தவாஃபிற்குப் பின்னரே அல்லாமல் ஸயீ செய்வது கூடாது. தவாஃப் செய்வதற்கு முன்னர் ஸயீ செய்தால் அது கூடாது. நான்கு இமாம்களும் மற்றவர்களும் இவ்வாறே கூறி யுள்ளனர். இது அனைவரின் ஏகோபித்த முடிவு என மாவர்தியும், மற்றவர்களும் கூறியுள்ளனர். பின்னர் முன்பு நாம் குறிப்பிட்ட இமாம் நவவியின் கருத்தை இங்கு குறிப்பிடுகிறார்.
இப்னு ஷீரைக்கின் ஹதீஸிற்குரிய பதிலையையும் குறிப்பிடுகிறார். பின்னர் குறிப்பிடுகிறார். ''நான் தவாபு செய்வதற்கு முன்பு'' என்று கூறியிருப்பதன் பொருள் ஹஜ்ஜுடைய கடமைகளில் ஒன்றான (தவாபுல் இபாளா) என்ற ஹஜ்ஜுடைய தவாபாகும். இது கடமையல்லாத தவாபுல் குதூமுக்குப் பின்னர் ஸயீ செய்தார் என்பதற்கு முரன்படாது.
முக்னி என்ற நூலில் 5அ ப240 ல் கூறப்பட்டுள்ளது.
ஸயீ என்பது தவாஃபை தொடர்ந்ததுதான். ஸயீ ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் அதற்கு முன்பு தவாஃப் செய்திருக்கவேண்டும். தவாஃபிற்கு முன்பு ஸயீ செய்தால் அது கூடாது. இதையே இமாம் மாலிக், இமாம் ஷாஃபியீ ஆகியோர் கூறியுள்ளனர். கூடும் என்பதாக அதாவு கூறியுள்ளார். மறந்து செய்தால் அது கூடிவிடும் என இமாம் அஹ்மத் குறிப்பிடுகிறார். வேண்டுமென்றே செய்தால் அது கூடாது என்றும் கூறியுள்ளார்கள்.
மறதியினாலோ, அறியாமையினாலோ முற்படுத்தியோ பிற்படுத்தியோ செய்துவிடும்போது என்ன செய்ய வேண்டும் எனக்கேட்கப்பட்ட கேள்விக்குத்தான்
நபி (ஸல்) அவர்கள் ''குற்றமில்லை'' என்று கூறினார்கள்.
மேலும், நபி(ஸல்) அவர்கள் தவாஃபிற்குப் பிறகு ஸயீ செய்துள்ளார்கள். உங்களின் ஹஜ் கிரியைகளை என்னிட மிருந்தே எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தவாஃபிற்கு முன்பு ஸயீ செய்வது கூடும் எனக் கூறுவோர் ஆதாரமாக எடுத்துக் கொள்ளும் ஹதீஸில் அதற்கு உண்டான எந்த சான்றும் இல்லை என்பதை மேற் கூறப்பட்ட செய்தியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
ஏனெனில் அந்த ஹதீஸ் இரண்டு விஷயங்களில் ஒன்றுக்குத் தான் ஆதாரமாக அமையும்.
1. ஹஜ்ஜுடைய தவாஃப் செய்வதற்கு முன்னர் ஒருவர் ஸயீ செய்தால், அவர் மக்காவில் நுழையும்போது செய்யும் தவாஃப் செய்து அத்துடன் ஸயீயும் செய்தால் அந்த ஸயீ தவாஃபிற்குப் பின்புள்ள ஸயீயாகவே கருதப்படும்.
2. அல்லது அறியாமையினாலோ மறதியினாலோ செய்துவிட்ட வராகக் கருதப்படுவார்.
இதில் கொஞ்சம் அதிகப்படியாகக் கூறியதன் காரணம், பொதுவாக தவாஃபிற்கு முன்னர் ஸயீ செய்வது கூடும் என வாதிடும் சிலர் தற்போது உருவாகியுள்ளனர்.
எச்சரிக்கை:
ஒரு பெண் தவாஃப் செய்து முடித்ததின் பின்னால் மாதவிடாய் ஏற்படுமானால் இந்த நிலையில் அவள் ஸயீ செய்யலாம். ஏனெனில் ஸயீ செய்வதற்கு தூய்மையாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.
முக்னி என்ற நூலில் 5அ ப246 ல் கூறப்படுகிறது. ஸஃபா, மர்வாவிற்கிடையில் ஸயீ செய்வதற்கு தூய்மை அவசிய மில்லை என்று அதிகமான அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர்களில் அதாவு, மாலிக், ஷாஃபியீ, அபூசவ்ர் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
இமாம் அஹ்மத் சொல்ல நான் கேட்டேன் என இமாம் அபூதாவூத் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
ஒரு பெண் கஅபாவை தவாஃப் செய்யும்போது, தவாஃப் முடிந்த பின் மாதவிடாய் ஏற்பட்டால் அவள் ஸஃபா மர்வாவிற்கிடையில் ஸயீ செய்யலாம். பின்னர் அவர் சூரியன் அஸ்தமிக்கும் முன்னரே பன்னிரண்டாவது நாள் மினாவிலிருந்து சென்று விடலாம்.
ஆயிஷா(ரழி), உம்முஸலமா(ரழி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். ஒரு பெண் கஅபாவை தவாஃப் செய்து இரண்டு ரக்அத்கள் தொழுது முடித்த பின்னர் மாதவிடாய் ஏற்பட்டுவிடுமானால் அவள் ஸஃபா, மர்வாவிற்கிடையில் ஸயீ செய்யலாம் என அஃத்ரம் அறிவிக்கிறார்.
12. பெண்கள் பலவீனமானவர்களுடன் சேர்ந்து சந்திரன் மறைந்த பின்னர் முஸ்தலிஃபாவிருந்து மினாவிற்குச் செல்லலாம். மினாவிற்குச் சென்றவுடன் ஜம்ராவில் கல் எறியலாம். நெருக்கடியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே இந்த அனுமதியாகும்.
முக்னி என்ற நூலில் 5அ ப286 ல் முவப்பக் என்பவர் குறிப்பிடுகிறார். பலவீனமானவர்களையும், பெண்களையும் முன்கூட்டியே அனுப்பிவிடலாம். அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஆயிஷா(ரழி) ஆகியோர் தங்கள் குடும்பத் திலுள்ள பலவீனமானவர்களை முஸ்தலிஃபாவிலிருந்து முன் கூட்டியே அனுப்புகிறவர்களாக இருந்தார்கள். இவ்வாறே அதாவு, ஹனஃபி, ஸவ்ரி, ஷாஃபியீ, அபூசவ்ர் ஆகியோர் கூறுகின்றனர். இதில் மாற்றுக் கருத்து இல்லை. இது அவர்களுக்கு இரக்கம் காட்டுவதாகவும் நெரிச லிருந்து தடுப்பதாகவும் அமைந்துள்ளது. நபி(ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றக் கூடியதாகவும் உள்ளது.
இமாம் ஷவ்கானி நைலுல் அவ்தார் என்ற நூலில் 5அ ப70ல் கூறுவதாவது ''யாருக்கு சலுகை இல்லையோ அவர் சூரிய உதயத்திற்குப் பின்புதான் கல் எறிய வேண்டும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. பெண்கள், பலவீனமா னவர்கள் போன்ற யாருக்கு சலுகை உள்ளதோ அவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவே கல் எறிவது கூடும்.
இமாம் நவவீ அல்மஜ்மூவு என்ற நூலில் 8அ ப125 ல் கூறுவதாவது: இமாம் ஷாஃபி அவர்களும், அவர்களின் தோழர்களும் கூறுகிறார்கள். ''பெண்கள், பலவீனமா னவர்கள் போன்றோர் முஸ்தலிஃபாவிலிருந்து நடு இரவிற்குப்பின் கல் எறிவதற்காக மினாவிற்குச் சென்று மக்கள் நெருக்கடி ஏற்படும் முன்னர் சூரிய உதயத்திற்கு முன் அதை முடிப்பது தான் அவர்களுக்கு நபிவழியாக உள்ளது.''
13. ஹஜ் உம்ராவை பெண்கள் செய்து முடிக்கும்போது தங்கள் தலை முடியை விரல்நுனி அளவிற்கு வெட்ட வேண்டும். பெண்கள் தலைமுடியை மழிப்பது கூடாது.
முக்னி என்ற நூலில் 5அ ப310 ல் கூறப்படுகிறது:
''பெண்கள் தலை முடியை வெட்டுவதே அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மொட்டை அடிப்பது அல்ல. அதில் எந்தக் கருத்துவேறுபாடும் இல்லை.'' இப்னுல் முன்திர் அவர்கள் கூறுகிறார்கள்: ''இதை மார்க்க அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். பெண்களைப் பொறுத்த வரை தலையை மொட்டை அடிப்பது, உடல் உறுப்பில் ஒன்றை வெட்டிக் கொள்வது போன்றதாகும்.''
''பெண்கள் மொட்டை அடிப்பது கூடாது. பெண்கள் முடியை குறைத்துக் கொள்ளவேண்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' என இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்.(நூல்: அபூதாவூத்)
பெண்கள் தங்கள் தலைமுடியை மொட்டை அடிப்பதை நபி(ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளதாக அலீ(ரழி) அறிவிக்கிறார். (நூல்: திர்மிதி)
ஒவ்வொரு பின்னலிருந்தும் விரல்நுனி அளவிற்கு பெண் தன் தலைமுடியை வெட்டிக் கொள்ளவேண்டும். இவ்வாறே இப்னு உமர், ஷாஃபியீ, இஸ்ஹாக், அபூதர் ஆகியோர் கூறியுள்ளனர் என இமாம் அஹ்மத் கூறுகிறார்.
பெண்கள் தங்கள் தலைமுடியின் எல்லாப் பகுதியிலிருந்தும் வெட்டுவது பற்றி இமாம் அஹ்மதிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஆம், அவள் தன் தலைமுடியை ஒன்று சேர்த்து முன்பக்கம் வைத்து அதன் நுனியிலிருந்து விரல் அளவிற்கு வெட்டவேண்டும்கி எனக்கூறுவதாக இமாம் அபூதாவூத் அறிவிக்கிறார்.
இமாம் நவவி மஜ்மூவு என்ற நூலில் 8அ ப150, 154 ல் கூறுகிறார்.
''பெண்கள் தங்கள் தலைமுடியை மொட்டை அடிக்குமாறு அவளுக்குக் கட்டளையிடக்கூடாது. அவள் தன் தலைமுடியை வெட்டிக்கொள்வது தான் அவள்மீது கடமையாகவுள்ளது.'' ஏனெனில் தலையை மழிப்பது அவள் விஷயத்தில் பித்அத் ஆகும்.
14. மாதவிடாய்ப் பெண் கடைசி ஜம்ராவிற்கு கல் எறிந்து தன் தலைமுடியை வெட்டி விடுவாளானால் அவள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடுகிறாள். இஹ்ராம் மூலம் அவளுக்குத் தடையாக இருந்த அனைத்தும் அவளுக்கு ஆகுமாகி விடுகிறது. ஆனால் கணவனுடன் உடலுறவு கொள்வது கூடாது. தவாஃப் செய்து முடிக்கும் வரை கணவனுடன் உடலுறவில் ஈடுபடக்கூடாது. மீறி அவள் கணவனுடன் உடலுறவு கொள்வாளானால் அதற்கு பரிகாரமாக ஓர் ஆடு அறுத்து ஏழைகளுக்கு கொடுக்கவேண்டும்.
15. ஹஜ்ஜுடைய தவாஃப் செய்து முடித்ததின் பின் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிடுமானால் அவள் விரும்பிய நேரத்தில் பயணம் செய்வது அவளுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இறுதித் தவாஃபை அவள் செய்ய வேண்டியதில்லை.
''சஃபிய்யா பின்த் ஹுயய்(ரழி) அவர்கள் கடமையான தவாஃபை செய்தபின் மாதவிடாய் ஆகிவிட்டார்கள். இதை அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறிய போது, நம்முடைய பயணத்தை விட்டும் அவள் நம்மை தடுத்துவிட்டாளா? என்று கேட்டார்கள். அதற்கு 'அவள் ஹஜ்ஜுடைய தவாஃபை செய்துவிட்டாள். அதன் பிறகுதான் அவள் மாதவிடாய் ஆனாள்' என்று கூறினேன். அதற்கு ''அப்படியானால் அவள் ஊருக்கு பயணம் செய்யலாம் என்று கூறினார்கள்'' என ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
''ஹஜ் செய்கின்றவர்களின் கடைசிச் செயல் கஅபாவை தவாஃப் செய்வதாக இருக்கவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் மாதவிடாய்ப் பெண்ணுக்கு சலுகை வழங்கினார்கள்கி என இப்னு அப்பாஸ்(ரழி) கூறுகிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
''மாதவிடாய்ப் பெண் கடமையான தவாஃபை செய்துவிட்டால் கஅபாவை இறுதி தவாஃப் செய்யும் முன்பாக ஊர் செல்வதற்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.'' (நூல்: அஹ்மத்)
இமாம் நவவீ மஜ்மூவு என்ற நூலில் 8அ ப281 ல் கூறுகிறார்: இப்னுல் முன்திர் கூறுகிறார். இவ்வாறு செய்யுமாறுதான் பொதுவாக அதிகமான அறிஞர்கள் கூறியுள்ளனர்.
முக்னி என்ற நூலில் 3அ ப461 ல் கூறப்படுகிறது. இது பொதுவாக எல்லா மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். பிரசவமான பெண்களுக்கும் மாதவிடாய்ப் பெண்களின் சட்டம்தான்.
16. மதீனாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியில் தொழுவதற்காக அங்கு சென்று சந்திப்பது பெண்களுக்கு நபிவழியாக ஆக்கப்பட்டுள்ளது. அங்கு அமர்ந்து அல்லாஹ்விடம் பிரார்த்தனைச் செய்வதும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நபி(ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வது அவர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வதை விட்டும் தடை செய்யப்பட்டுள்ளனர்.
ஃபத்வா தொகுப்பு என்ற நூலில் 3அ ப239 ல் சவூதி அரேபியாவின் முஃப்தியான ஷேக் முஹம்மத் இப்னு இப்ராஹீம் ஆலு ஷேக் கூறுகிறார்.
இரண்டு காரணங்களுக்காக பெண்கள் நபி(ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளனர்.
ஒன்று பொதுவான ஆதாரங்கள்: தடை செய்யப்பட்டது பொதுவாக இருக்குமானால் தக்க சான்றுகள் இல்லாமல் விதிவிலக்கு வழங்குவது கூடாது. அடுத்தது கப்ர் ஜியாரத் விஷயத்திலும் விலக்கப்பட்ட காரணம் நபி(ஸல்) அவர்களின் கப்ர் விஷயத்திலும் உள்ளது.
ஷேக் அப்துல் அஜீஸ் இப்னு பாஸ் தம் ஹஜ் உம்ரா வழிகாட்டி என்ற நூலில் கூறுகிறார்.
நபி(ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வது என்பது ஆண்களுக்கு மட்டும்தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. பெண்களைப் பொறுத்த வரையில் எந்த கப்ரையும் ஜியாரத் செய்வது கூடாது.
ஏனெனில்
''கப்ர் ஜியாரத் செய்யும் பெண்களையும் மற்றும் அதற்கு விளக்கேற்றுபவர்களையும் அதை பள்ளிவாசலாக ஆக்கக் கூடியவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.''
மஸ்ஜிதுந் நபவியில் தொழும் எண்ணத்தில் மதீனா விற்குச் செல்வது அந்த பள்ளியிலிருந்து அல்லாஹ்விடம் துஆ கேட்பது ஏனைய பள்ளிகளில் செய்யும் அமல்களில் ஈடுபடுவது போன்றவை அனைத்து பள்ளிவாசல்களிலும் அனுமதிக்கப்பட்டதாகும். இது எல்லோருக்கும் அனுமதிக்கப்பட்டதாகும்.
பிரிவு 9 - குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
அல்லாஹ் கூறுகிறான்:
''இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும் கிருபையையும் உண்டாக்கி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.'' (அல்குர்ஆன் 30:21)
மேலும், அல்லாஹ் கூறுகிறான்: ''இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) நற்குணமுள்ள உங்கள்ஆண், பெண் அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் செல்வந்தர்களாக ஆக்கி வைப்பான். மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.'' (அல்குர்ஆன் 24:32)
இமாம் இப்னு கஸீர் கூறுகிறார்: ''இவ்வசனம் திருமணம் செய்துவைப்பதைக் கடமையாக்குகிறது. சக்திபெற்ற ஒவ்வொருவரும் திருமணம் செய்வது கடமையாகும் என்று சில மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.'' அதற்கு பின்வரும் நபிமொழியை ஆதாரமாகக்காட்டுகின்றனர்.
''இளைஞர் சமுதாயமே! உங்களில் சக்திபெற்றவர் திருமணம் செய்து கொள்ளுங்கள்! அது பார்வையைத் தாழ்த்தக் கூடியதாகவும், கற்பை பாதுகாக்கக் கூடியதாகவும் உள்ளது. அதற்குச் சக்திபெறாதவர் நோன்பு நோற்கட்டும். அது அவருக்கு கேடயமாக உள்ளது.' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னுமஸ்வூத்(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
திருமணம் வறுமையைப் போக்கக் காரணமாக இருக்கிறது என்றும் இறைவன் கூறுகிறான்.
''அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களை செல்வந்தர்களாக்கி வைப்பான்.'' (அல்குர்ஆன் 24:32)
அபூபக்கர்(ரழி) கூறியதாகக் கூறப்படுகிறது: ''திருமண விஷயத்தில் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அவனுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள்! அவன் வாக்குறுதி அளித்த பிரகாரம் வறுமையைப் போக்குவான்.''
அல்லாஹ் கூறுகிறான் அவர்கள் ஏழைகளாக இருந்தால் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் செல்வந்தர்களாக்கி வைப்பான். அல்குர்ஆன் (24:32)
''திருமணத்தின் மூலம் செல்வத்தை எதிர்பாருங்கள்! அல்லாஹ் கூறுகிறான். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளால் அவர்களை செல்வந்தர்களாக ஆக்குவான்'' என இப்னு மஸ்வூத்(ரழி) கூறுகிறார். (தஃப்ஸீர் இப்னுகஸீர் 5அ ப94,95)
இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பு 32அ ப90 ல் குறிப்பிடுகிறார்.
இறைநம்பிக்கையாளர்கள் திருமணம் செய்வதையும், விவாகரத்துச் செய்வதையும், விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணை அவள் வேறு ஒரு கணவனை திருமணம் செய்து அவன் விவாகரத்து சொன்ன பின் அவளை திருமணம் செய்யலாம். விவாகரத்துச் செய்யப்பட்ட பெண் வேறு ஒருவரை திருமணம் செய்வதையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். கிருஸ்தவர்கள் திருமணத்தை சிலர் மீது தடை செய்துள்ளனர். யாருக்கு திருமணத்தை அனுமதித்திருக்கின்றார்களோ அவர் விவாகரத்துச் செய்வதை அனுமதிக்கவில்லை. யூதர்கள் அனுமதித்தாலும் விவாகரத்துச் சொல்லப்பட்ட பெண்ணை திரும்பவும் பழைய கணவர் மணம் முடிப்பதை அனுமதிக்கவில்லை. கிருஸ்தவர்களிடத்தில் விவாகரத்து என்பது கிடையாது. யூதர்களிடத்தில் விவாகரத்து செய்யப்படுவாள். ஆனால் அல்லாஹ் இந்த இரண்டையுமே அனுமதித்துள்ளான்.
'அல்ஹத்யுன் நபவிய்யு' என்ற நூலில் 3அ ப149 ல் இப்னுல் கையிம் கூறுகிறார்கள்.
திருமணத்தின் நோக்கங்களில் முக்கியமானதான உடலுறவு கொள்வதைப் பற்றி விளக்கும்போது, உடலுறவு என்பது மூன்று விஷயங்களுக்காக உள்ளது.
1. சந்ததிகளைப் பாதுகாப்பது. மனிதவர்க்கம் நிலைத்திருக்க வேண்டும், எத்தனை மனிதர்கள் வெளியாக வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டமோ, அதுவரைத் தொடரும்.
2. மனித உடலில் தேங்கி நின்று இடையூறு கொடுக்கும் இந்திரியத்தை வெளியாக்குவது.
3. ஆசையை நிறைவேற்றி இன்பம் அடைவது. அல்லாஹ் கொடுத்த சுகபாக்கியத்தை அனுபவிப்பது.
திருமணத்தால் பலவிதமான நன்மைகள் உள்ளன. அவை: விபச்சாரத்திலிருந்து பாதுகாக்கிறது. தடுக்கப்பட்டுள்ளதை பார்ப்பதை விட்டும் தடுக்கிறது. இனப்பெருக்கமும், குடும்பப் பாதுகாப்பும் ஏற்படுகிறது. கணவன் மனைவியரிடையில் ஒத்துழைப்பு நிலவுகிறது இஸ்லாமிய சமூகத்தின் அடிக்கல்லாக இருக்கின்ற நல்ல குடும்பத்தை உருவாக்குவதில் கணவன் மனைவியின் ஒத்துழைப்பு அவசியமாகும்.
கணவன் தன் மனைவியின் அனைத்துப் பொறுப்புக்களையும் ஏற்று அவளைப் பாதுகாக்கின்ற நிலையும், மனைவி வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்கின்ற நிலையும், வாழ்க்கையில் ஒரு பெண் தன் உண்மையான கடமையை நிறைவேற்றுகின்ற நிலையும் உருவாகிறது.
பெண் இனத்தின் எதிரிகளும் சமூகவிரோதிகளும் வாதாடுவது போன்று வீட்டுக்கு வெளியே பெண்கள் ஆண்களுக்குச் சமமாக பணியாற்றவேண்டும் என்று கூறி பெண்களை தங்கள் வீட்டை விட்டும் வெளியேற்றி விட்டார்களே அதைப்போன்று அல்ல. இவர்கள் பெண்களை வீட்டை விட்டும் வெளியேற்றியது மட்டு மல்லாமல் அவள் செய்யவேண்டிய சரியான கடமையை விட்டும் அவளைத் தனிமைப்படுத்தி விட்டனர். மற்றவர்கள் செய்யவேண்டிய வேலையை அவளிடம் ஒப்படைத்து விட்டனர். இதனால் குடும்ப ஒழுங்குமுறை கெட்டுப் போய்விட்டது. கணவன் மனைவியரிடையே பிளவு ஏற்பட்டுவிட்டது. வெறுப்புடன் கணவனோடு வாழ வேண்டிய நிலை உருவாகிறது.
ஷேக் முஹம்மத் அமீன் ஷன்கீதீ தம் 'அள்வாவுல் பயான்' என்ற தஃப்ஸீரில் 3அ ப422 ல் குறிப்பிடுகிறார்.
அல்லாஹ் என்னையும் உன்னையும் அவன் விரும்பி நேசிக்கின்றவற்றில் செலுத்துவானாக! அறிந்து கொள்!
ஆணையும் பெண்ணையும் எல்லாச் சட்டங்களிலும் சமம் எனக்கூறுவது அல்லாஹ்வின் செய்திக்கும் அறிவுக்கும் பொருந்தாத ஒன்றாகும். இது இறைமறுப்பாளர்களின் தவறான சிந்தனையாகும். படைத்த இறைவனின் சட்டத்திற்கு மாற்றமானதாகும். மனித சமுதாய ஒழுங்குமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் குழப்பமான பல விஷயங்கள் உள்ளன. அகக்கண்கள் குருடானவர்களைத் தவிர மற்றவர்கள் இத்தீங்குகளை நன்கு புரிந்து கொள்வர்.
பெண்களுக்கென சில தனித்தன்மைகளைக் கொண்டு அவர்கள் மனித சமுதாயத்தை உருவாக்குவதில் பலவகையில் பங்கு வம்க்கின்றார்கள். பெண்களுக்கென உள்ள கற்பம் தரித்தல், பிரசவித்தல், பாலூட்டுதல், குழந்தை வளர்த்தல், வீட்டுப் பணிவிடை செய்தல், மேலும் வீட்டுவேலைகளான சமையல், மாவு குளைத்தல், வீடு சுத்தம் செய்தல் இது போன்ற பணிகளை மனித சமுதாயத் திற்கு தன் வீட்டிற்குள் திரைமறைவில் பாதுகாப்பாகவும், பத்தினி தனத்துடனும் இருந்து தன் கன்னியம் மரியாதை தன் உயர்வு இவற்றைப் பாதுகாத்து செய்வதினால், ஆண்கள் செய்யும் பணிகளிலிருந்து குறைந்தது எனக்கூற முடியாது.
இறைமறுப்பாளர்களும் அவர்களைப் பின்பற்றுகின்ற அறிவீனர்களும், ஆண்கள் செய்வது போன்ற பணிகளை வீட்டின் வெளியே பெண்களும் செய்வதற்கு அவர்களுக்கு உரிமையுள்ளது எனக் கருதுகின்றனர். ஆனால் ஒரு பெண் தான் கற்பமுற்றிருக்கும் போதும், குழந்தைக்கு பால் கொடுக்கும்போதும், பிரசவத்தீட்டின் போதும் கடினமான எந்த வேலையும் செய்யமுடியாது. இதை நேரடியாகப் பார்த்து வருகின்றோம். ஓர் ஆணும் அவருடைய மனைவியும் வெளியே வேலைக்குச் செல்வார்களானால் வீட்டில் குழந்தைகளுக்கு பால் கொடுத்து அவர்களைப் பாதுகாத்தல், வேலையிலிருந்து வரும் கணவருக்கு உணவு கொடுத்தல் போன்ற பணிகள் பாழாகி விடும். கூலிக்கு ஒருவரை வேலைக்கு நியமிப்பாளானால் அந்த வீட்டில் பெண் வெளியே செல்வதால் எந்த இழப்பை அவன் சந்தித்தாளோ அதே இழைப்பைத் தான் அவள் தன் வீட்டில் இப்போதும் சந்திக்க வேண்டியது ஏற்படுகிறது. இதிலிருந்து திட்டவட்டமாக விளங்கிக் கொள்ளலாம். ஒரு பெண் வெளியே வேலைக்குச் செல்வதால் அவளிடம் மென்மையான குணம் போய் விடுகிறது மார்க்கத்திற்கும் இழப்பு ஏற்படுகிறது.
இஸ்லாமிய பெண்ணே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! மயக்குகின்ற விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து விடாதே! இதுபோன்ற விளம்பரங்களால் ஏமாற்ற மடைந்த பெண்களின் நிலை, அவர்கள் கெட்டுப்போனதற்கும், தோல்வியைக் கண்டதற்கும் மிகச் சிறந்த ஆதாரமாக இருக்கிறது. இஸ்லாமியப் பெண்ணே! உனக்கு திருமண வயது வந்ததும் விரைவாக திருமணம் செய்து கொள்! படிப்பைத் தொடரவேண்டும், வேலையில் சேரவேண்டும் என்ற காரணங்களையெல்லாம் கூறி திருமணத்தைப் பிற்படுத்தாதே! வெற்றிகரமான திருமணம் உனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நிம்மதியைத் தருகிறது. அனைத்து படிப்புகளுக்கும், உத்தியோகங்களுக்கும் பகரமாக திருமணம் அமைந்துள்ளது. திருமணத்திற்கு பகரமாக எதுவும் அமையாது.
இஸ்லாமியப் பெண்ணே! உன்னுடைய வீட்டு வேலைகளை முறையாகக் கவனித்ததுக் கொள்! உன்னுடைய குழந்தைகளை ஒழுங்காக வளர்த்துக் கொள்! இது தான் உன்னுடைய வாழ்க்கையில் லாபகரமான அடிப்படை வேலையாகும். அதற்குப் பகரமாக வேறு எதையும் ஆக்கிக் கொள்ளாதே! ஏனெனில் இதற்குப் பகரமாக எதுவும் ஆகமுடியாது. ஒரு நல்ல கணவனைத் தேர்ந் தெடுத்து திருமணம் செய்யத் தவறிவிடாதே!
''யாரிடத்தில் மார்க்கப் பற்றும் நல்ல குணமும் இருக்கக் காண்கிறீர்களோ அப்படிப்பட்ட ஆண் வந்தால் அவனுக்கு திருமணம் செய்து வையுங்கள். அப்படி செய்யவில்லையானால் பூமியில் குழப்பமும் சோதனைகளும் ஏற்பட்டு விடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ)
திருமணத்தில் பெண்ணின் கருத்தை ஏற்றல்
திருமணம் முடிக்கப்பட வேண்டிய பெண்கள் மூன்று வகையாக இருக்கின்றனர். ஒன்று, அவள் சிறிய வயதுடையவளாக இருக்க வேண்டும். அல்லது பருவமடைந்த கன்னிப் பெண்ணாக இருக்கவேண்டும். அல்லது விதவைப் பெண்ணாக இருக்கவேண்டும். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிச்சட்டம் உள்ளது.
1. பருவமடையாத சிறிய கன்னிப்பெண்ணைப் பொறுத்த வரை அவளின் அனுமதியின்றி அவளின் தந்தை அவளைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அவளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பது கிடையாது.
''அபூபக்கர்(ரழி) தன் மகள் ஆறு வயதாக இருந்த போது நபி(ஸல்) அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அவர்கள் தம்முடைய ஒன்பதாவது வயதில் இல்லறத்தில் ஈடுபட்டார்கள்.'' (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
இமாம் ஷவ்கானி அவர்கள் தன் நைலுல் அவ்தார் 6அ ப128, 129 ல் குறிப்பிடுகிறார்கள்.
தந்தை தன் மகளை அவள் பருவமடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொடுப்பது கூடும் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக உள்ளது. வயது அதிகமானவருக்கு வயது குறைந்த பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கும் இந்த ஹதீஸில் ஆதாரம் உள்ளது.
முக்னி என்ற நூல் 6அ ப487 ல் கூறப்படுகிறது. இப்னுல் முன்திர் கூறுகிறார்கள்.
நாம் தெரிந்த மார்க்க அறிஞர்கள் எல்லாம் ஏகோபித்துக் கூறுவது என்னவென்றால் பொருத்தமான மாப்பிள்ளைக்கு ஒரு தகப்பன் வயது குறைந்த தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பது அனுமதிக்கப்பட்டது தான்.
தன் மகள் ஆயிஷா(ரழி), ஆறு வயதாக இருந்த போது அபூபக்கர்(ரழி) அவர்கள் நபிகள் நாயகத்திற்கு திருமணம் செய்து வைத்தார்கள், என்ற செய்தி வயது அதிகமான ஆண்களுக்கு வயது குறைந்த பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கக் கூடாது என்பவர்களுக்கு மிகப்பெரிய மறுப்பாக உள்ளது. தங்கள் அறியாமையின் காரணத்தினால் தான் இதை அவர்கள் வெறுத்து மறுக்கவேண்டும். அல்லது வேறு ஏதாவது உள்நோக்கம் இருக்கவேண்டும்.
2. வயது வந்த கன்னிப்பெண் அவளுடைய அனுமதியோடு தான் திருமணம் செய்யப்படவேண்டும், அவள் அமைதியாக இருப்பதுதான் அவளுடைய அனுமதி, கன்னிப் பெண்ணின் அனுமதியின்றி அவள் திருமணம் செய்து வைக்கப்படக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, இறைத்தூதர் அவர்களே! அவளுடைய அனுமதியை எப்படிப் பெறுவது? என நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு 'அவள் வாய் மூடி இருப்பதுதான் அவளுடைய அனுமதி.' என்று கூறினார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
அவளைத் திருமணம் செய்து கொடுப்பது அவளுடைய தந்தையாக இருந்தாலும் சரிதான் அவளுடைய அனுமதி அவசியம் தேவை என்று அறிஞர்களின் சரியான கூற்று தெரிவிக்கிறது.
இப்னுல் கையிம் அவர்கள் 'அல்ஹதிய்யு' என்ற நூலில் 5அ ப96 குறிப்பிடுகிறார்கள். ''இதுவே சென்றுபோன நல்லோருடைய ஏகோபித்த முடிவாகும். இவ்வாறே இமாம் அபூஹனீபா இமாம் அஹ்மத் ஆகியோரும் குறிப்பிடுகின்றனர், அல்லாஹ்விற்காக இதே கருத்தை நாம் ஏற்றுக் கொள்வோம். அதைத் தவிர வேறு கருத்தை ஏற்க மாட்டோம், அதுவே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கட்டளைக்கு ஏற்றதாக உள்ளது.''
3. கன்னித் தன்மையை இழந்தவளின் அனுமதியின்றி அவளைத் திருமணம் செய்து வைப்பது கூடாது. அவளுடைய அனுமதியை வாயினால் சொல்லிக் காட்டவேண்டும். கன்னிப் பெண்ணைப் போன்று மவுனமாக இருப்பது போதுமாகாது.
முக்னி என்ற நூலில் 6அ ப493 ல் சொல்லப்படுகிறது
கன்னிப் பெண்ணைப் பொறுத்தவரை அவள் வாயினால் சப்தமிட்டு பதில் கொடுத்தால்தான் அவள் திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்துவது நாவாக இருக்குகிறது. அனுமதி வேண்டும் என்று எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் நாவினால் மொழியவேண்டும் என்பதும் கவனிக்கப்படும்.
'மஜ்மூவு ஃபதாவா' என்ற நூலில் 32அ ப39,40 ல் ஷேகுல் இஸ்லாம் இப்னுதைமிய்யா அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பெண்ணின் அனுமதியின்றி அவளை யாரும் திருமணம் செய்து கொடுக்கக் கூடாது. இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். ஒரு பெண் திருமணத்தை வெறுத்தால் சிறிய பெண் நீங்களாக அவளை நிர்பந்தப்படுத்தக்கூடாது. சிறிய பெண்களைப் பொறுத்த வரையில் அவளுடைய தந்தை அவளைத் திருமணம் செய்து வைப்பார். அவளிடமிருந்து அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை. தந்தையாக இருந்தாலும் மற்றவர்களாக இருந்தாலும் கன்னித் தன்மையை இழந்த பெண்ணைத் திருமணம் செய்து வைப்பதற்கு ஏகோபித்த கருத்துப்படி அவளுடைய அனுமதி அவசியமாகும்.
இதுபோன்றே பருவமடைந்த கன்னிப்பெண்ணை யும் அவளுடைய அனுமதியுடன்தான் தந்தை, பாட்டன் அல்லாதவர்கள் மணம் முடித்து வைக்கவேண்டும். தந்தையோ, பாட்டனோ மணம் முடித்து வைப்பார்களானால் அவளிடம் அனுமதி கேட்கவேண்டும். அனுமதி கேட்பது கட்டாயமா இல்லையா என்பதில் கருத்துவேறுபாடு உள்ளது. சரியான கருத்து என்னவென்றால் அனுமதி கேட்பது கட்டாயமானதாகும்.
பெண்களின் அதிகாரியாக இருப்பவர் பெண்ணைத் திருமணம் செய்துவைப்பதில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளவேண்டும். பெண்ணை மணம் முடிப்பவன் பொருத்தமானவனா? என்பதையும் கவனிக்கவேண்டும். காரணம் பெண்ணுடைய நலனுக்காகவே மணம் முடிக்கப்படுகிறதே தவிர அவனுடைய நலனுக்காக அல்ல,
பெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும்
ஒரு பெண்ணிற்கு பொருத்தமான கணவனைத் தேர்வு செய்கின்ற அதிகாரத்தை அவளுக்குக் கொடுப்பது என்பது அவள் விரும்புகின்ற யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். அதனால் அவளுடைய சொந்தக்காரர்களுக்கும் குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டாலும் சரிதான் என்ற பொதுவான அனுமதி அவளுக்கு இல்லை. ஆனால் அவளை கண்காணித்து அவளுக்கு அவளுடைய அதிகாரி வழிகாட்டும் விதத்தில் அவளுடைய தேர்வு இருக்கவேண்டும். அவர்தான் அவளுடைய திருமண ஒப்பந்ததை நடத்திவைக்கவேண்டும். அவள் தானாக நடத்திக் கொள்ள முடியாது. அப்படியே அவள் தானாக நடத்திக் கொண்டால் அத்திருமணம் செல்லாது.
''எந்தப்பெண், அதிகாரி இன்றி தன் திருமணத்தை நடத்திக் கொள்கிறாளோ அத்திருமணம் செல்லாது! செல்லாது!! செல்லாது!!!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார். (நூல்: திர்மிதி)
மேலும்' ஒரு ஹதீஸ், ''அதிகாரியின்றி எந்த திருமணமும் செல்லுபடியாவதில்லை.' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' (நூற்கள்: நஸயீ, அபூதாவூத்)
அதிகாரி இல்லாமல் திருமணம் செய்வது கூடாது, என்பதை இரண்டு ஹதீஸ்களும் அறிவிக்கின்றன. கூடாது என்று ஹதீஸில் வந்திருப்பதன் பொருள். திருமணம் செல்லுபடியாகாது என்பதாகும்.
இமாம் திர்மிதி கூறுகிறார்: இதன் அடிப்படையில் தான் உமர், அலீ, இப்னு அப்பாஸ், அபூஹுரைரா (ரழி) போன்ற நபித்தோழர்களிலுள்ள அறிஞர்கள் செயல்பட்டுள்ளனர். இவ்வாறே தாபியீன்களில் உள்ள அறிஞர்களும் ''அதிகாரியின்றி திருமணம் இல்லை'' என்று கூறினார்கள். இதுவே இமாம் ஷாஃபியீ, இமாம் அஹ்மதின் கருத்துமாகும். (முக்னி 6:449)
திருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல்
திருமணத்தைப் பகிரங்கப்படுத்த பெண்கள் முரசு அடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கிடையில் மட்டுமே செய்யவேண்டும். மியூசிக் இருக்கக்கூடாது. இச்சையைத் தூண்டுகின்ற சப்தங்களோ அதற்குரிய கருவிகளோ பயன்படுத்தக்கூடாது. ஆண்கள் கேட்காத அளவில் பெண்கள் கவிபாடுவதில் தவறில்லை.
''திருமணத்தில் அனுமதிக்கப்பட்டதற்கும் அனுமதிக்கப்படாததற்கும் இடையில் பிரித்துக் காட்டுவது முரசு அடிப்பதும் சப்தம் எழுப்புவதும்தான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத்)
இமாம் ஷவ்கானி அவர்கள் நைலுல் அவ்தார் 6அ ப200 என்ற நூலில் குறிப்பிடுகிறார்: திருமணத்தின் போது 'தஃப்' என்ற முரசு அடிப்பதும், உங்களிடத்தில் வந்தோம், உங்களிடத்தில் வந்தோம், என்பது போன்ற சிறிது பாடல்களை சப்தம் உயர்த்தி கூறுவதற்கும் இதில் ஆதாரம் உள்ளது. தவறுகளை தூண்டுகின்ற பாடல்களோ, கெட்டவைகளையும், அழகையும், மதுபானங்களையும் வர்ணிக்கின்ற வர்ணனைகள் அடங்கிய பாடல்கள் கூடாது. சாதாரண நேரத்தில் இவை தடுக்கப்பட்டது போன்று திருமணத்திலும் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறே மற்ற எல்லா தடுக்கப்பட்ட கேளிக்கைகளும் கூடாது.
முஸ்லிம் பெண்ணே! திருமணத்தின் போது நகைகள், ஆடைகள் வாங்குவதில் வீண் விரயம் செய்யாதே. இது அல்லா தடுத்துள்ள வீண் விரயமாகும். வீண் விரயம் செய்யக்கூடியவர்களை நேசிப்பதில்லை என்று கூறுகிறான்.
''நீங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள், நிச்சயமாக அவன் வீண் விரயம் செய்பவர்களை நேசிக்கமாட்டான்.'' (அல்குர்ஆன் 6:141)
நடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு.
பெண் தனது கணவனுக்கு கட்டுப்படுவதன் அவசியமும், அவனுக்கு மாறு செய்வதின் விலக்கலும்
முஸ்லிம் பெண்ணே நல்ல விஷயங்களில் உன்னுடைய கணவனுக்கு நீ கட்டுப்பட்டு நடப்பது உன்மீது கடமையாகும். அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ''ஒரு பெண் ஐங்காலத் தொழுகையை நிறைவேற்றி, ரமளான் மாதம் நோன்பு நோற்று, தன் கற்பை பாதுகாத்து, தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பாளானால், அவள் விரும்பிய சுவர்க்கத்தின் எந்த வாசல் வழியாக வேண்டுமானாலும் நுழைவாள்.'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு ஹிப்பான்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:
தன்னுடைய கணவன் ஊரில் தன்முன் இருக்க அவனது அனுமதியின்றி ஒரு பெண் நோன்பு நோர்ப்பது கூடாது, அவனுடைய அனுமதியின்றி தன் வீட்டில் யாரையும் அவள் அனுமதிப்பதும் கூடாது''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
''கணவன் தன் மனைவியை படுக்கைக்கு அழைக்கும் போது அவள் செல்லவில்லையானால், அதற்காக அவன் அவள் மீது கோபமான நிலையில் இரவைக் கழிப்பானாயின் காலை வரை வானவர்கள் அவளைச் சபித்துக் கொண்டிருப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
மற்றோர் அறிவிப்பில் ''என் உயிர் எவனுடைய கையில் உள்ளதோ அவன் மீது ஆணையாக ஒரு கணவன் தன்மனைவியை படுக்கைக்கு அழைக்கும்போது மனைவி அதை மறுத்தால், அதனால் அவள் மீது அவன் திருப்தியாகும் வரை வானத்தில் உள்ள அல்லாஹ் கோபமடைகிறான்.''
மனைவி கணவனுக்கு செய்யவேண்டிய கடமை என்னவென்றால், அவனுடைய வீட்டை கவனிக்க வேண்டும். அவனுடைய அனுமதியின்றி வெளியில் செல்லக்கூடாது.
''மனைவி தன் கணவனின் வீட்டை கண்காணிக்கக் கூடியவளாக இருக்கிறாள். தனக்கு கீழே உள்ளவர்களைப் பற்றி அவள் (மறுமையில்) விசாரிக்கப்படுவாள்' என்று நபி(ஸல் அவர்கள் கூறினார்கள்.'' (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
மேலும், அவள் வீட்டுவேலைகளைக் கவனிக்க வேண்டும். வேலைக்காரியை வைப்பதற்கான தேவையை கணவனுக்கு ஏற்படுத்தாது இருக்கவேண்டும். இதனால் அவனுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஷேகுல் இஸ்லாம் இமாம் இப்னுதைமிய்யா ஃபத்வா தொகுப்பில் 32அ ப260 ல் கூறுகிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: ''நல்லொழுக்கமுடைய பெண்கள் (தங்கள் கணவன்மாரிடம்) விசுவாசமாகவும் பணிந்தும் நடப்பார்கள். தங்கள் கணவன் இல்லாத சமயத்தில் பாதுகாக்கப்பட வேண்டியவற்றை அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கொண்டு பாதுகாத்துக் கொள்வார்கள்.'' (அல்குர்ஆன் 4:34)
மனைவி கணவனுக்கு பணிவிடை செய்வது, பயணத்தின்போது உடன் செல்வது உள்ளிட்ட அனைத்திலும் அவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவள் மீது கடமையாகும் என்பதைத்தான் இந்த வசனம் குறிப்பிடுகிறது. நபி (ஸல்) அவர்களின் வழிமுறையும் இதையே அறிவிக்கிறது.
அல்ஹத்யு என்ற நூல் 5அ ப188 ல் இமாம் இப்னுல் கையிம் கூறுகிறார்கள். கணவனுக்கு மனைவி பணிவிடை செய்வது கடமை என்று கூறுபவர்கள் தங்களுக்கு ஆதாரமாக அல்லாஹ் எந்த சமுதாயத்தவர்களிடம் சம்பாசனை செய்தானோ அந்த சமுதாயத்திடத்தில் இப்படித்தான் அறியப்பட்டிருந்தது, என்பதைக் காட்டுகின்றனர். பெண்கள் ஆடம்பரமாக இருப்பதும், கணவன் அவளுக்கு வேலை செய்து கொடுப்பதும், வீடு கூட்டுவது, மாவு அரைப்பது துணி துவைப்பது விரிப்பு விரிப்பது, வீட்டின் இதரப்பணிகளைச் செய்வது விரும்பத்தக்கதல்ல.
அல்லாஹ் கூறுகிறான்: கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று முறைப்படி அவர்கள் மீது பெண்களுக்கும் உரிமையுண்டு.'' (அல்குர்ஆன் 2:228)
''ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்கள். ''
''(ஆண், பெண் இருபாலரில்) அல்லாஹ் சிலரை சிலரை விட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான்.'' (அல்குர்ஆன் 4:34)
மனைவி கணவனுக்கு பணிவிடைச் செய்யவில்லையானால் அவன் பணிவிடைச் செய்யக்கூடியவனாக ஆகிவிடுவான். இதுதான் கணவனுக்கு அவள் மீதுள்ள அதிகாரமாகும்.
மனைவிக்கு செலவு, ஆடை, வசிக்கும் இடம் ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுப்பதை கணவனின் மீது அல்லாஹ் கடமையாக்கி இருக்கிறான் என்றால் அது அவன் அவளிடமிருந்து இன்பம் அனுபவிப்பதற்காகவும் அவனுக்கு பணிவிடை செய்கிறாள் என்பதற்காகவும், பொதுவாக கணவன் மனைவியரிடையே வழக்கத்தில் உள்ள ஒன்றிற்காகவும்தான்.
நிபந்தனையற்ற பொதுவான திருமண ஒப்பந்தங்களை பொறுத்தவரையில் நடைமுறையில் என்ன இருக்கிறதோ அந்த சட்டம் தான் அமுல்படுத்தப்படும். திருமணத்தைப் பொறுத்தவரையில் மனைவி கணவனுக்கு பணிவிடை செய்வது, வீட்டின் உள்ளே உள்ள நலன்களைக் கவனிப்பது. இது தான் நடைமுறையில் உள்ளதாகும். இவ்விஷயத்தில் கண்ணியமானவள், தாழ்ந்தவள் என்றோ பணக்காரி, ஏழை என்றோ வேறுபடுத்துவது கூடாது. உலகப் பெண்களில் சிறந்தவரான ஃபாத்திமா(ரழி) அவர்கள் தம் கணவனுக்கு பணி விடை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது, தாம் பணிவிடை செய்வதைப் பற்றி முறையிட்டார். அதை நபி(ஸல்) அவர்கள் குறையாகக் கருதவில்லை.
ஒரு கணவன் தன்னை விரும்பாத நிலையில் அவள் அவனுடன் வாழ நினைக்கும் போது அவள் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: ''தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ ஒரு பெண் பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொள்வது அவ்விருவர் மீதும் குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது. (அல்குர்ஆன் 4:128)
''தன் கணவன் தன்னைவிட்டும் ஓடிவிடுவான் என்றோ, தன்னை புறக்கணிக்கிறான் என்றோ மனைவி அஞ்சுவாளானால், இந்நிலையில் மனைவி தன் உரிமைகளில் செலவு, ஆடை, இரவுநேரத்தில் தங்குதல் போன்ற சில விஷயங்களை விட்டுக் கொடுக்கலாம், இதை கணவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். கணவனுக்காக அவள் இதைச் செய்வதில் எந்த குற்றமும் இல்லை, கணவன் இதை ஏற்றுக் கொள்வதிலும் குற்றமில்லை என இப்னு கஸீர் விளக்கம் அளிக்கிறார்
அல்லாஹ் கூறுகிறான்: ''கணவன் மனைவியான இருவரும் தங்களுக்குள் சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொள்வது அவ்விருவர் மீதும் குற்றமில்லை. (அல்குர்ஆன் 4:128)
அதாவது இருவருக்கும் இடையே சேர்த்து வைப்பது சிறந்ததாகும்.
நபி(ஸல்) அவர்களின் மனைவி சவ்தா(ரழி) அவர்கள் வயதானபோது அவளைப் பிரிந்து வாழ நபி(ஸல்) அவர்கள் விரும்பினார்கள். அப்போது 'தன்னை வைத்துக் கொள்ளுமாறும் தன்னுடைய நாளை ஆயிஷா(ரழி) அவர்களுக்கு கொடுத்துவிட சம்மதிப்பதாகவும் கூறி, நபி(ஸல்) அவர்களோடு சமாதானமாம்க் கொண்டார்கள். இதை நபி(ஸல்) அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். (இப்னுகஸீர் 2அ ப406)
மனைவி கணவனுக்கு கோபமூட்டுபவளாக இருந்து கணவனோடு அவள் வாழ விரும்பாத நிலையில் அவள் என்ன செய்ய வேண்டும்?
''எந்த ஒரு பெண் தன் கணவனிடத்தில் தக்க காரணமின்றி விவாகரத்து கேட்கிறாளோ அவள் மீது சுவர்க்கத்தின் வாடை தடை செய்யப்பட்டுள்ளது'' என ஸவ்பான் (ரழி) அறிவிக்கிறார். (நூல்:அபூதாவூத், திர்மதி)
காரணம் அல்லாஹ்விடத்தில் மிகவும் கோபத்தோடு அனுமதிக்கப்பட்ட ஒன்று(தான்) விவாகரத்து சொல்லுதலாகும். அவசியத் தேவை ஏற்படும்போதுதான் அதைப் பயன்படுத்த வேண்டும். அவசியமின்றி விவாகரத்துச் செய்வது வெறுக்கப்பட்டது. அதனால் பல தீமைகள் ஏற்படுகின்றன. கணவனுடன் வாழ முடியாது என்ற அளவிற்கு அவன் மீதுள்ள கடமையை நிறைவேற்றத் தவறும்போதுதான் மனைவி கணவனிடமிருந்து தலாக் கைத் தேட வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: ''முறைப்படி கணவன் மனைவியாகச் சேர்ந்துவாழலாம். அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்.'' (அல்குர்ஆன்: 2:229)
''தங்கள் மனைவியருடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்துகொண்டு விலகியிருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது. எனவே அதற்குள் அவர்கள் மீண்டும் சேர்ந்து கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். ஆனால் அவர்கள் விவாகவிலக்கு செய்து கொள்ள உறுதி கொண்டார்களானால் நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.'' (அல்குர்ஆன்: 2:226,227)
திருமண ஒப்பந்தம் முறிந்த பின் மனைவி செய்யவேண்டியவை
கணவன் மனைவி இடையில் பிரிவு ஏற்படுவது இரண்டு வகையில் உள்ளது. ஒன்று உயிரோடு இருக்கும் போது ஏற்படுவது. இரண்டு மரணத்திற்குப் பின் ஏற்படுவது. இந்த இரண்டு நிலையிலும் மனைவியின் மீது இத்தா கடமையாகிறது. குறிப்பிட்ட சில நாட்கள் காத்திருப்பது தான் 'இத்தா' என்பதாகும். இத்தா இருப்பதன் நோக்கம் அவளுடைய திருமண உறவு முடிந்து விட்டதனால் அவள் பாதுகாக்கப்பட வேண்டியவளாக இருக்கிறாள். மேலும் கற்பம் தரித்திருக்கிறாளா என்பதை அறிவதற்காகவும்தான் இந்த இத்தா. இந்த காலத்திற்கு முன் யாராவது அவளிடம் உடலுறவு கொண்டு விடுவாளானால், அதன் மூலம் பிறக்கும் குழந்தை யாருடையது என்பதைத் திட்டவட்டமாக அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிடும். முந்தைய திருமண ஒப்பந்தத்தை மதிப்பதாகவும் அமையும். மேலும், பிரிந்து போன கணவனை கண்ணியப்படுத்துவதாகவும் உள்ளது. அவனை பிரிந்த துயரத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது.
இத்தாவின் வகைகள்
இத்தா நான்கு வகைகளாக உள்ளது.
1. கற்பிணியின் 'இத்தா' இது குழந்தை பிரசவத்துடன் முடிவடைகிறது. உயிரோடு இருக்கும்போது வாழ்க்கையில் பிரிவு ஏற்பட்டாலோ, கணவன் இறந்த பெண்ணாக இருந்தாலோ இந்த இத்தா நிகழ்கிறது.
''கற்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய இத்தாவின் தவணை அவர்கள் பிரசவமாகும் வரையிலாகும்.'' (அல்குர்ஆன் 65:4)
2. மாதவிடாய் வந்து கொண்டிருக்கும் பெண் தலாக் சொல்லப்பட்டால் அவளுடைய 'இத்தா' மூன்று மாதவிடாய்களாகும்.
''தலாக்' கூறப்பட்ட பெண்கள் தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும் வரை பொறுத்(து காத்)திருக்க வேண்டும்.'' (அல்குர்ஆன் 2:228)
3. மாதவிடாய் இல்லாத பெண்களின் இத்தா இரண்டு வகையாக உள்ளது. ஒன்று, மாதவிடாய் ஏற்படாத சிறிய பெண். இரண்டு, மாதவிடாய் நின்றுபோன வயது முதிர்ந்த பெண். இந்த இரண்டு வகைப் பெண்களின் நிலை குறித்தும் அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்.
''மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாத பெண்களுக்கும் இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும்.'' (அல்குர்ஆன் 65:4)
4. கணவன் இறந்துபோன பெண்ணுடைய இத்தாவைப் பற்றி குர்ஆன் கூறும்போது.
''உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித் தால் அம்மனைவியர் நான்குமாதம் பத்துநாள் பொறுத்(து காத்)திருக்க வேண்டும்.'' (அல்குர்ஆன் 2:234)
உடலுறவு கொள்ளப்பட்ட பெண், சிறிய பெண், பெரிய பெண் எல்லோருக்கும் இது பொருந்தும். கற்பினி பெண்ணிற்கு மட்டும் இது பொருந்தாது. ஏனெனில், அவள் பின்வரும் இறை வசனத்தின் மூலம் விதிவிலக்கைப் பெறுகிறாள்.
''கற்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய இத்தா வின் தவணை அவர்கள் பிரசவமாகும் வரையிலாகும்.'' (அல்குர்ஆன் 65:4) (அல்ஹதியுந் நபவீ 5அ ப594, 595)
இத்தாவிலிருக்கும் பெண்கள் மீது விலக்கப்பட்டவை
1. ஒரு முறையோ இரண்டு முறையோ 'தலாக்' சொல்லப்பட்ட பெண் இத்தாவில் இருக்கும்போது வெளிப்படையாகவோ, சைக்கினையாகவும் அவளைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் மற்றவர் பெண் பேசுவது தடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அவள் இத்தா காலத்தில் இருக்கும் வரை கணவன், மனைவி என்ற சட்டத்தின் அடிப்படையிலேயே இருக்கிறார்கள். எனவே அவளிடம் வேறு நபர் திருமணப்பேச்சுக்கள் பேசக்கூடாது. இத்தாகாலம் முடியும் வரை அவள் தன்னுடைய கணவனின் பாதுகாப்பில்தான் இருக்கிறாள் என்பதையும் கவனிக்க!
2. மூன்று தடவை 'தலாக்' சொல்லப்பட்ட பெண்ணிடம் இத்தாவின்போது சைக்கினையாகவோ, பகிரங்கமாகவோ, பெண் பேசுவது கூடாது.
''இத்தா இருக்கும் பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) சைக்கினையாக எடுத்துரைப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை.'' (அல்குர்ஆன்: 2:235)
வெளிப்படையாக பெண் பேசுவது என்பது அவளைத் திருமணம் செய்யும் விருப்பத்தைத் தெரிவிப்பது நான் உன்னைத் திருமணம் செய்ய விரும்புகின்றேன். என்று கூறுவது. ஏனெனில், அவள் தன்னுடைய இத்தா காலம் முடிவதற்கு முன்னரே திருமண ஆசையின் காரணமாக 'இத்தா' காலம் முடிந்து விட்டதாகக் கூறக்கூடும்.
அதே நேரத்தில் சைக்கினையாகச் சொல்வது என்பது அவ்வாறல்ல. ஏனெனில், அவளைத் திருமணம் செய்வது தெளிவுபடுத்தப்படவில்லை. அதனால் எவ்விதப் பிரச்சி னையும் ஏற்படப் போவதில்லை. மேலும் குர்ஆன் வசனத் திலிருந்து இவ்வாறே விளங்க முடிகிறது.
சைக்கிணையாகப் பெண் பேசுவது என்பது, உன்னை போன்றவர்களில் நான் ஆசை வைத்துள்ளேன் என்று கூறுவது, முழுமையாக தலாக் சொல்லப்பட்டவரிடம், சைக்கிணையாக இவ்வாறு சொல்லும் போது அவளும் அவ்வாறு பதில் சொல்வதில் தவறில்லை. அப்படியே யாரேனும் வெளிப்படையாகத் திருமண விருப்பம் தெரிவிக்கும்போது அவள் பதில் சொல்லக் கூடாது. ஒரு முறையோ இரண்டு முறையோ தலாக் சொல்லப்பட்டவள் தன்னைப் பெண் பேசுகிறவனுக்கு வெளிப்படையாகவோ, சைக்கிணையாகவோ பதில் சொல்லக்கூடாது.
'இத்தா' காலத்தில் திருமண ஒப்பந்தம் செய்யக் கூடாது
அல்லாஹ் கூறுகிறான்: ''மேலும் 'இத்தா'வின் கெடுமுடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்.'' (அல்குர்ஆன் 2:235)
இமாம் இப்னுகஸீர் தம் தப்ஸீரில் 1அ ப509 ல் கூறுகிறார்கள்.
இத்தாகாலம் முடியும் வரை திருமண ஒப்பந்தம் செய்யாதீர்கள். இத்தா காலத்தில் திருமண ஒப்பந்தம் செய்தால் அது செல்லாதும் என அறிஞர்கள் அனைவரும் கூறியுள்ளார்கள்.
இரண்டு விஷயங்கள் தெளிவு படுத்தப்பட்டுள்ளன
1. திருமணமான பின்னர் உடலுறவு கொள்வதற்கு முன்பாக ஒருவர் விவாகரத்து செய்து விடுவாரானால் இந்த நிலையில் உள்ள பெண்ணுக்கு 'இத்தா' கிடையாது.
அல்லாஹ் கூறுகிறான்:
இறை நம்பிக்கையாளர்களே! இறை நம்பிக்கையுடைய பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னரே விவாகரத்துச் செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக்கூடிய தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை (அல்குர்ஆன் 33:49)
இமாம் இப்னு கஸீர் தம் தப்ஸீர் 5அ ப479 ல் குறிப்பிடுகிறார். இது மார்க்க அறிஞர்களிடையே ஏகோபித்த முடிவாகும். அதாவது ஒரு பெண் திருமணமாகி அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்பாக கணவன் விவாகரத்து செய்துவிட்டால் அவள் 'இத்தா' அனுஷ்டிக்க வேண்டிய அவசியமில்லை. உடனேயே அவள் விரும்பிய வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
2. ஒரு பெண் திருமணமாகி உடலுறவு கொள்வதற்கு முன்பாக கணவன் விவாகரத்துச் செய்துவிட்டால், அதே நேரத்தில் மஹர் தொகை குறிப்பிடப்பட்டிருக்குமானால் அதில் நேர்பகுதி பெண்ணுக்குக் கொடுக்கப் பட வேண்டும். மஹர் தொகை குறிப்பிடப்படாத போது அவளுக்குரிய உடை, உணவு போன்ற தேவையானவற்றை முடிந்த அளவு கணவன் அவளுக்குக் கொடுக்கவேண்டும்.
திருமணமாகி உடலுறவு கொண்ட பின்னர் விவாகரத்துச் சொல்வானானால் பெண்ணிற்குரிய முழு மஹரையும் கொடுத்துவிடவேண்டும்.
பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுக்கான மஹரை நிர்ணயம் செய்வதற்கு முன்பு 'தலாக்' சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. என்றாலும் அவர்களுக்கு பயனுள்ள பொருட்களைக் கொடுத்து உதவுங்கள். அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்கு தக்க அளவும், ஏழை அவனுக்கு தக்க அளவும் கொடுத்து நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும். இது நல்லோர் மீது கடமையாகும்.
''ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன்பு மஹர் நிச்சயித்த பின்னர் நீங்கள் 'தலாக்' சொல்வீர்களானால் நீங்கள் குறிப்பிட்டிருந்த மஹர் தொகையில் பாதி (அவர்களுக்கு) உண்டு.'' (அல்குர்ஆன் 2:236, 237)
அதாவது கணவன்மார்களே! நீங்கள் திருமணம் செய்த பெண்ணை உடலுறவு கொள்வதற்கும், மஹ்ரை நிச்சயிப்பதற்கும் முன் விவாகரத்து சொல்வதில் குற்றமில்லை. அதே நேரத்தில் இதனால் அவளுக்கு மன உளைச்சல் ஏற்படுமானால் அதற்குப் பரிகாரமாக அவளுக்கு கணவனின் நிலமையை அனுசரித்து உதவி செய்யவேண்டும். வசதியுள்ளவன் அதிகமாகவும், வசதி யற்றவன் குறைவாகவும் கொடுக்கவேண்டும்.
மஹர் தொகையை நிச்சயித்தவன் பாதி மஹரை கொடுக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.
இமாம் இப்னுகஸீர் தம் தப்ஸீரில் 1அ ப512 ல் கூறுகிறார்.
இந்நிலையில் அதாவது மஹர் தொகையை நிச்சயித்து உடல் உறவு கொள்வதற்கு முன்னர் தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு பாதி மஹர் கொடுக்க வேண்டும் என்பதை மார்க்க அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர்.
3. கணவன் இறந்துபோன பெண் மீது ஐந்து விஷயங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
1. நறுமணம் உபயோகித்தல்:
கணவன் இறந்த பெண் இத்தாவில் இருக்கும்போது எந்தவிதமான நறுமணத்தையும் உடலிலோ, ஆடையிலோ உபயோகிக்கலாகாது. இவ்வாறே வாசனைப் பொருட் களையும் பயன்படுத்துவது கூடாது.
''கணவன் இறந்து இத்தாவில் இருக்கும்போது வாசனைப் பொருட்களைத் தொடக்கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
2. உடல் அலங்காரம்:
உடலில் மைலாஞ்சி போன்ற சாயம் இடுதல், அலங்காரம் செய்யும் நோக்கத்தில் சுருமா இடுதல், தோல் அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்துதல் கூடாது. அத்தியாவசிய தேவைக்காக அலங்கார நோக்கமின்றி மருத்துவ சிகிச்சை என்ற முறையில் சுருமா இடுவது கூடும். அவள் இரவில் சுருமா இட்டுவிட்டு பகலில் துடைத்துவிட வேண்டும். சுருமா அல்லாத அலங்காரமில்லாத மற்ற பொருள்களைக் கொண்டு கண்ணிற்கு மருந்திடுவதும் குற்றமில்லை.
3. ஆடையில் அலங்காரம்:
கணவன் இறந்து இத்தாவில் இருக்கும் பெண் ஆடை அலங்காரம் செய்வதும் கூடாது அலங்காரமில்லாத ஆடையை அவள் அணியவேண்டும். சாதாரண பழக்கத்தில் உள்ளது போல் அவள் ஒரு குறிப்பிட்ட நிறமுள்ள ஆடையைத்தான் அணிய வேண்டும் என்பது கிடையாது.
4. ஆபரணங்கள் அணிதல்:
மோதிரம் உள்பட ஆபரணங்கள் அணிதல் கூடாது.
5. அவள் எந்த வீட்டில் இருக்கும் போது கணவன் இறந்தானோ அந்த வீட்டை விட்டு மார்க்க அடிப்படையான எவ்வித காரணமுமின்றி வேறு வீட்டில் இரவு தங்கக்கூடாது. மார்க்க அடிப்படையிலான எவ்வித காரணமுமின்றி, தன் வீட்டை விட்டு வேறு வீட்டிற்குச் செல்லக்கூடாது நோய் விசாரிப்பதற்காகவும் செல்லக்கூடாது. தோழிகளையோ உறவினரையோ சந்திப்பதற்கும் வெளியே செல்லக் கூடாது. அவசரத் தேவைக்காக வேண்டி பகல் நேரம் வெளியே செல்வதில் தவறில்லை. இந்த ஐந்து விஷயங்களைத் தவிர அல்லாஹ் அனுமதித்துள்ள வேறு எந்த விஷயங்களை விட்டும் அவளைத் தடுக்கக்கூடாது.
இமாம் இப்னுல் கையிம் அவர்கள் அல்ஹதந் நபவி என்ற நூலில் 5அ ப507 ல் குறிப்பிடுகிறார்கள்.
நகம் வெட்டுதல், அக்குள் முடிகளைதல், நீக்குதல் சுன்னத்தாக்கப்பட்ட முடிகளை நீக்குதல், இலந்தை இலை போட்டுக் குளித்தல், தலை முடி கோருதல் போன்ற செய்லகளைச் செய்வதை விட்டும் இத்தாவில் இருக்கும் பெண்களைத் தடுப்பது கூடாது.
இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பு 34அ ப27, 28 ல் குறிப்பிடுகிறார்.
இத்தாவில் இருக்கின்ற பெண் அல்லாஹ் அனுமதித்த பழங்கள், இறைச்சி போன்ற எல்லாப் பொருட்களையும் உண்ணுவது அவளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட எல்லா பாணங்களையும் அவள் அருந்தலாம். நூல்நூற்றல், தையல், போன்ற பெண்கள் செய்கின்ற அனுமதிக்கப்பட்ட எந்த வேலையைச் செய்வதும் அவள் மீது தடை இல்லை. இத்தா அல்லாத காலத்தில் அவளுக்கு என்ன அனுமதிக்கப்பட்டுள்ளதோ அது 'இத்தா' காலத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவள் தேவைப்படும்போது ஆண்களுடன் திரைக்குப் பின்னால் பேசுவது போன்றவை அவளுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இதுதான் நபி(ஸல்) அவர்களுடைய வழி முறையாகும். இப்படித்தான் ஸஹாபிய பெண்மணிகள் அவர்களுடைய கணவன் மார்கள் இறந்துபோனப் பின்னர் வாழ்ந்துள்ளார்கள்.
சில பாமர மக்கள் கூறுவது போன்று அவள் சந்திரனை விட்டும் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் வீட்டு மாடியில் ஏறக் கூடாது, ஆண்களுடன் திரைமறைவிற்குப் பின்னால் கூட பேசக் கூடாது. திருமணம் செய்வது தடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் முன்பும் முகத்தை மறைக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.
பிரிவு 10 - பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள்
1. ஆணைப் போன்றே பெண்ணும் தன் பார்வையைத் தாழ்த்தி கற்ப்பைப் பாதுகாக்குமாறு கட்டளையிடப் பட்டிருக்கிறாள்.
''இறைநம்பிக்கையுள்ள ஆண்களுக்கு நீர் கூறும், அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிப்பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.''
''அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ளட்டும் என்று இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீர் கூறும்!'' (அல்குர்ஆன் 24:30, 31)
ஷேக் முஹம்மத் அல்அமின் ஷன்கீதீ தம் அள்வாவுல் பயான் என்ற தப்ஸீரில் குறிப்பிடுகிறார்.
தன்னுடைய பார்வையைத் தாழ்த்தி, கற்ப்பைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இறைநம்பிக்கையுள்ள ஆண்களுக்கும், இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். கற்பபைப் பாதுகாப்பது என்பதில் விபச்சாரம், ஆண் ஓரினச் சேர்க்கை (ஹோமோ செக்ஸ்), பெண் ஓரினச் சேர்க்கை (லெஸ்பியன்), மனிதர்களிடத்தில் அருவெறுப்பாக நடப்பது, மர்மஸ்தலத்தை அவர்களிடத்தில் காட்டுவது ஆகியவை அடங்கும். இந்த வசனத்திற்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடிய ஆணுக்கும், பெண்ணுக்கும் பாவமன்னிப்பையும், மகத்தான கூலியையும் கொடுப்பதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான். இதோடு அல் அஹ்ஸாப் என்ற அத்தியாயத்தில் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடும் பண்புகளையும் மனித இனம் செயல்படுத்துமாயின் மகத்தான நற்கூலி உண்டு.
''நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும் பெண்களும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் இறை வழிபாடுள்ள ஆண்களும், பெண்களும் உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும் பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்விடம் உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும் நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும் தங்கள் வெட்கத்தலங்களை காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வை அதிகம் தியானம் செய்யும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் தயார் படுத்தியிருக்கிறான்.'' (அல்குர்ஆன் 33:35)
அள்வாவுல் பயான் 6அ ப186,187
முக்னி என்ற நூலில் 8அ ப198 ல் குறிப்பிடப்படுகிறது. ''இரண்டு பெண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவார்களானால் இருவரும் விபச்சாரிகளாவர். சபிக்கப்பட்டவர்களாவர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டால் இருவரும் விபச்சாரிகளாவர். இருவரும் எச்சரிக்கை செய்யப்படவேண்டியவர்கள் ஏனெனில், அச்செயல் தண்டனை வரையறுக்கப்படாத விபச்சார மாகும்.''
இஸ்லாமியப் பெண் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக குமரிப் பெண்கள் இதுபோன்ற தீய செயல்களை விட்டும் எச்சரிக்கையோடும், பாதுகாப்போடும் இருப்பது அவசியம்.
பார்வையைத் தாழ்த்திக் கொள்வது பற்றி இப்னுல் கையிம் அல்ஜவாபுல் காபி என்ற நூலில் 129,130-ம் பக்கத்தில் குறிப்பிடுகிறார்.
பார்வைதான் இச்சையின் வழிகாட்டியாகவும், அதன் தூதாகவும் இருக்கிறது. பார்வையைப் பாதுகாப்பதுதான் கற்பைப் பாதுகாப்பதற்கு அடிப்படையாகும். யார் பார்வையைத் திறந்து விடுகிறாரோ அவர் தன்னை நாசத்தில் ஆழ்த்திவிடுகிறார்.
''அலீயே ஒரு பார்வையைத் தொடர்ந்து இன்னொரு முறை பார்க்காதே! உனக்கு முதல் பார்வை மட்டும் தான். (குற்றமற்றதாக இருக்கும்)'' என்று நபி(ஸல்) அவர்கள் தம் மருமகன் அலீ(ரழி) அவர்களிடம் கூறினார்கள்.
அதாவது திடீரென விழும் பார்வையினால் குற்றமில்லை, மேலும் அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படுகிறது. பார்வை என்பது இப்லீஸின் அம்புகளில் விஷ மூட்டப்பட்ட அம்பாகும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
மனிதனை வந்து சேருகின்ற எல்லாவிதமான பொதுவான சம்பவங்களும் பார்வையினால் தான்.
பார்வை உணர்வைத் தூண்டுகிறது. உணர்வு சிந்தனையைத் தூண்டுகிறது. சிந்தனை ஆசையைத் தூண்டுகிறது. ஆசை நாட்டத்தைத் தூண்டுகிறது. பின்னர் அது வலுவாகி உறுதியான எண்ணமாகி செயல் அளவில் நிகழக் கூடியதாக மாறி விடுகிறது. எனவே, பார்வையைத் தாழ்த்திக் கொள்வதின் மீது பெறுமை செய்வது, பார்ப்பதினால் ஏற்படும் தீய விளைவுகளின் மீது பொறுமை செய்வதை விட இலேசானதாகும் என்று சொல்லப்படுகிறது.
இஸ்லாமியப் பெண்ணே! அன்னிய ஆண்களைப் பார்ப்பதை விட்டும் உன் பார்வையைத் தாழ்த்திக் கொள்! தொலைக் காட்சியிலும், பத்திரிக்கைகளிலும் காட்டப்படும் மோசமான படங்களைப் பார்க்காதே! மோசமான முடிவை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்! பார்வைகள் பல மனிதர்களை கைசேதத்தில் தள்ளியுள்ளது. ஏனெனில் பெரிய தீ சிறிய தீப்பொறியிலிருந்து ஏற்படுகிறது.
2. கற்பைக் காத்துக் கொள்வதில் ஒன்று இசையுடனான பாடல்களை வெறுப்பதாகும்.
இகாததுல்லஹ்பான் என்ற நூலின் 1அ ப248 ல் இப்னுல் கையிம் குறிப்படுகிறார். அறிவும் புத்தியும் குறைந்தவர்களை தன்வசம் இழுப்பதில் ஷைத்தானின் சூழ்ச்சியில் நின்றும் உள்ளதுதான் கைதட்டுதலும், சீட்டி அடித்தலுமாகும். குர்ஆனை விட்டும் திசை திருப்பும் இசைக் கருவிகள் மூலம் இசைக்கப்படும் பாடல்கள் இவை பாவத்தின் மீதும் தவறின் மீதும் படிய வைத்து விடுகிறது. இவை ஷைத்தானின் வாக்குகளாகவும் அல்லாஹ்வை விட்டும் தடுக்கக் கூடியதாகவும் உள்ளன. அவை ஓரினச் சேர்க்கை மற்றும் விபச்சாரத்திற்குரிய மந்திரமாகவும் உள்ளன. இதன் மூலம் கெட்ட காதலன் தன் காதலியிடம் தன் தேவையைப் பூர்த்தி செய்யும் நிலை ஏற்படுகிறது.
அதே நேரத்தில் இசை கருவிகளுடன் பாடல்களை பெண்களிடமிருந்தும், முடி முளைக்காத இளைஞர்களிடமிருந்தும் செவியுறுவது மிகப்பெரிய தவறானதாகவும் விலக்கப்பட்டதாகவும் இருக்கிறது. மார்க்கத்தைக் கெடுப்பதாகவும் உள்ளது. மார்க்கத்தின் மீது பற்றுள்ளவன் இசைக்கருவிகளைக் கேட்பதை விட்டும் தம் குடும்பத்தை தடுத்து நிறுத்தட்டும். அதற்குக் காரணமானவற்றை விட்டும் தடுக்கவேண்டும். சந்தேகத்திற்குரிய காரியங்களை விட்டும் அவர்களைத் தடுப்பது மார்க்கத்தின் மீது ரோஷம் கொண்ட ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்..
ஒரு பெண்ணைத் தன் வசப்படுத்துவது ஆண் மீது சிரமமாகும்போது அந்தப் பெண்ணுக்கு இசைப்பாடல்களை கேட்கச் செய்ய முயற்சிப்பான். அப்போது அவளுடைய மனம் இளகும். ஏனெனில் பெண்களைப் பொறுத்தவரை இராகங்களுக்கு விரைவாக வசப்பட்டு விடுவார்கள். ராகம் இசையோடு இருக்கும்போது அவளுடைய உணர்வுகள் இரண்டு விதத்தில் அதிகரிக்கிறது. ஒன்று இசை சப்தத்தின் மூலமும், மற்றொன்று அதில் நிறைந்திருக்கும் பொருள் மூலமும், இதோடு கூட ஆடலும் பாடலும் சேரும்போது இன்னும் அதிகமான விபரீதங்கள் ஏற்படுகின்றன. பாடல் மூலம் ஒரு பெண் கற்பம் தரிப்பதாக இருந்தால் இதுபோன்ற பாடல்களால் கற்பம் தரித்துவிடுவாள் அந்த அளவிற்கு மோசமாக இன்றைய பாடல்கள் உள்ளன. அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். எத்தனையோ சுதந்திரமான பெண்கள் பாடல்களால் விபச்சாரிகளாக மாறியுள்ளார்கள்.
இஸ்லாமியப் பெண்ணே! நீ அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! மிகவும் விபரீதமான இந்த கெட்ட குண நோயிலிருந்து எச்சரிக்கையாக இருந்து கொள்! இது பல விதத்தில் முஸ்லிகளுக்கிடையில் பரப்பி விடப்பட்டுள்ளது. இஸ்லாத்தைப் பற்றிய அறிவு ஞானம் இல்லாத எத்தனையோ இளம் பெண்கள் அந்த பாடல்களை அது தயாரிக்கப்படும் இடங்களிலிருந்தே பெற்று அதை ஒருவருக்கொருவர் அன்பளிப்பும் செய்கின்றனர்.
3. கற்பைப் பாதுகாக்கும் காரணங்களில் ஒன்று பெண்கள் திருமணம் செய்வது தடை செய்யப்படாத ஆண்களுடன் பயணம் செய்வதைத் தடுப்பது. அவளைக் கெட்டவர்களின் தவறான எண்ணங்களை விட்டும் பாதுகாக்கும்.
திருமணம் தடை செய்யப்பட்டவர்கள் அல்லாது மற்றவர்களுடன் பயணம் செய்வதைத் தடைசெய்து சரியான ஹதீஸ்கள் வந்துள்ளன.
''ஒரு பெண் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டவர்களுடனின்றி மூன்று நாட்கள் பயணம் செய்வது கூடாது' என்று நபி(ஸல் அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
''தன்னுடன் கணவனோ, திருமண உறவு தடை செய்யப்பட்டவனோ இல்லாமல் இரண்டு நாள் பயணத்தை ஒரு பெண் மேற்கொள்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.'' (நூற்கள்:புகாரி, முஸ்லிம்)
''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிற ஒருபெண் தனக்குத் திருமணம் தடை செய்யப்பட்டவரின் துணையின்றி ஓர் இரவு ஒரு பகல் பயணம் செய்வது கூடாது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஹதீஸ்களில் ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் என்று வந்திருப்பதன் பொருள் அந்த காலத்தில் உள்ள பயணத்திற்கான வாகனங்களை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்டதாகும். பயணம் என்று சொல்லப்படுகின்ற எதுவாக இருந்தாலும் அது தடை செய்யப்பட்டது தான் என மார்க்க அறிஞர்கள் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
இமாம் நவவீ ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பின் விளக்கவுரையில் 9அ ப103 ல் குறிப்பிடுகிறார்.
பயணம் என்று சொல்லக்கூடியது எதுவாக இருந்தாலும் அதில் ஒருபெண் தன் கணவனுடைய துணை அல்லது திருமண உறவு தடை செய்யப்பட்ட நபரின் துணையின்றி பயணம் செய்வது கூடாது என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. காரணம் முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பில் இது தொடர்பான ஒரு ஹதீஸ் பொதுவாகவே உள்ளது. திருமணம் செய்வது தடுக்கப்பட்ட நபருடனேயே அன்றி ஒரு பெண் பிரயாணம் செய்ய மாட்டாள் என ஹதீஸில் வந்துள்ளது. அதையே இறுதியான அறிவிப்பாகக் கொள்ளவேண்டும்.
(அல்லாஹ் மிக அறிந்தவன்.)
கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக பெண்கள் கூட்டத்துடன் பிரயாணம் செய்யலாம் என சிலர் கூறியுள்ளனர். ஆனால் இது நபிவழிக்கு மாற்றமானதாகும்.
இமாம் கத்தாபி மஆலிமுஸ்ªனன் என்ற நூலில் 2அ ப276ல் இவ்வாறு குறிப்பிடுகிறார். திருமண உறவு தடைசெய்யப்பட்ட ஆணுடைய துணையின்றி பெண் பயணம் செல்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். எனவே நபி(ஸல்) அவர்கள் நிபந்தனையாக்கியது தவிர ஒரு பெண்ணுக்கு ஹஜ்ஜுக்காக பயனம் செய்வதை அனுமதிப்பது நபி வழிக்கு மாற்றமானதாகும்.
திருமணம் செய்வதற்கான அனுமதியுள்ள ஆண்களுடன் பயணம் செய்வது பாவமானதாகும். அந்த நேரத்தில் அவள் மீது ஹஜ் கடமையாகாது. பாவத்தின் பால் கொண்டு சேர்க்கும் வழியாக அது ஆகிவிடும்.
பெண்கள் மற்றவர்களுடன் பயணம் செய்வதை பொதுவாகவே சில அறிஞர்கள் அனுமதிக்கவில்லை கடமையான ஹஜ் பிரயாணத்திற்கு மட்டும்தான் இந்த அனுமதி என்பதைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.
இமாம் நவவீ அவர்கள் மஜ்மூவு என்ற நூலில் 8அ ப249 குறிப்பிடுகிறார்கள்.
கடமையல்லாத பயணம், வியாபாரம் தொடர்பான பயணம் சந்திப்பிற்காக மேற்கொள்ளும் பயணம் போன்றவற்றில் திருமண உறவு தடை செய்யப்பட்டுள்ள நபர்களுடன்தான் ஒரு பெண் பயணம் செல்ல வேண்டும்.
பெண்கள் எந்த பயணத்திலும் யாருடனும் செல்லலாம் என இக்காலத்தில் சொல்லக் கூடியவர்களின் கூற்றை மார்க்க அறிஞர்களில் எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
பெண்களைப் பொறுத்தவரை விமானத்தில் தனிமையில் பயணம் செய்யும்போது அவளைத் திருமண உறவு தடைசெய்யப்பட்ட ஒருவர் விமானத்தில் அவளை ஏற்றிவிடுகிறார்; மற்றொருவர் விமானத்தைவிட்டு இறங்கும்போது வரவேற்கிறார்; விமானத்திலோ அதிகமான ஆண்களும் பெண்களும் இருப்பதால் அது பாதுகாப்பானதாக அமையும் என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால் அவர்களின் இந்தக் கருத்து சரியில்லை. ஏனெனில் விமானம்தான் மற்ற வாகனங்களை விட அதிக ஆபத்தானதாக உள்ளது. அதில் பயணிகள் ஆண் - பெண் என்ற எவ்வித வித்தியாசமும் இன்றி இரண்டறக் கலந்திருக்கிறார்கள். சிலவேளை அன்னிய ஆண்களின் அருகாமையில் உட்காரவேண்டிய நிலையும் ஏற்பட்டு விடுகிறது. சில சமயங்களில் விமானத்தை வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடுகின்றனர். அப்போது அவளை வரவேற்க அங்கு யாரும் இல்லாது போய் விடுகிறார்கள். இதுபோன்ற சூழலில் அவள் ஆபத்துகளைச் சந்திக்கின்றாள். எதுவும் தெரியாத யாரும் இல்லாத அந்நாட்டில் அவளால் என்ன செய்ய முடியும் என்பதை இவர்கள் சற்று யோசிக்கத் தவறிவிட்டார்கள்.
4. கற்பிற்கு ஆபத்து ஏற்படும் காரணங்களில் ஒன்று அன்னிய ஆணும் அன்னிய பெண்ணும் தனிமையில் இருப்பதாகும்.
''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பும் ஒருவர் அவளிடம் திருமணம் தடைசெய்யப்பட்ட நபர் இல்லாத நிலையில் எந்தப் பெண்ணுடனும் தனிமையில் இருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் ஓர் ஆணுடன் தக்க துணையின்றி தனிமையில் இருக்கவேண்டாம். ஏனெனில் அங்கு மூன்றாவது நபராக ஷைத்தான் புகுந்துவிடுவான்.' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' (நூல்: அஹ்மத்)
''எந்த ஓர் ஆணும் எந்த ஒரு அன்னியப் பெண்ணுடனும் தனிமையில் இருக்கவேண்டாம். ஏனெனில் ஷைத்தான் மூன்றாவது நபராக வந்து விடுகின்றான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஆமிர் இப்னு ரபீஆ(ரழி) அறிவிக்கிறார். (நூல்: அஹ்மத்)
இமாம் ஷவ்கானி நைலுல் அவ்தார் 61அ ப20 என்ற நூலில் குறிப்பிடுகிறார். அன்னியப் பெண்ணுடன் தனி மையில் இருப்பது தடுக்கப்பட்டுள்ளது என அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். தடுக்கப்படுவதற்குக் காரணம் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தனிமையில் இருக்கும்போது ஷைத்தான் மூன்றாமவனாக இருக்கிறான் என்ற ஹதீஸாகும். ஷைத்தான் வந்துவிட்டால் அவன் பாவத்திலே அவ்விருவரையும் வீழ்த்தி விடுகிறாள். ஆனால் திருமணம் செய்ய தடைசெய்யப்பட்ட ஆணுடன் இருக்கும்போது அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பது அணு மதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இங்கு பாவம் நடப்பதற்குண்டான சாத்தியம் மிகமிகக்குறைவாக உள்ளது.
சில பெண்களும், அவர்களுடைய பொறுப்புதாரிகளும் அன்னிய ஆணும் அன்னிய பெண்ணும் பலவகைகளில் தனிமையில் இருப்பதைப் பற்றி பொருட்படுத்தாது இருக்கின்றனர்.
ஒரு பெண் தன் கணவனின் ஆண் உறவினருடன் இருப்பது. அவர் முன் முகத்தைத் திறந்து நிற்பது இது எல்லா நிலையையும் விட மிக ஆபத்தானது.
''அன்னியப் பெண்கள் தனியாக இருக்கும் இடத்திற்குள் நுழையாதீர்கள்.' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, அன்சாரித் தோழர்களில் ஒருவர், 'கணவனின் சகோதரனும் செல்லக்கூடாதா?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், வெறுப்பாக அதை மரணத்துடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்கள்''
இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) பத்ஹுல்பாரி என்ற நூலின் 9அ ப331 ல் குறிப்பிடுகிறார்.
இமாம் நவவீ கூறுகிறார். கணவனின் உறவினர்கள் என்பது அவனுடைய தந்தை, அவனுடைய தந்தையின் உடன் பிறந்தோர், சகோதரர்கள் சகோதரரின் மகன், தந்தையின் உடன் பிறந்தோரின் மகன் போன்றவர்களாவார்கள்.
என்றாலும் மேலுள்ள ஹதீஸில் கணவனின் தந்தை கணவனின் மகன்கள் சேரமாட்டார்கள். ஏனெனில், இவர்களைத் திருமணம் செய்வது அவளுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இவர்கள் அவளுடன் தனிமையில் இருப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தில் சகோதரன் தன் சகோதரன் மனைவியுடன் தனிமையில் இருப்பதை பார்க்க முடிகிறது. இதை இலேசாகவும் நினைக்கின்றனர். இது மிகப்பெரிய தவறாகும். இதுதான் மரணத்திற்கு ஒப்பானது, இது தடுக்கப்பட வேண்டியதாகும்.
இமாம் ஷவ்கானி நைனுல் அவ்தார் 9அ ப331 ல் குறிப்பிடுகிறார். கணவனின் உறவினர்(சகோதரருடன்) ஒருபெண் தனிமையில் இருப்பதை மரணத்திற்கு ஒப்பிட்டு நபி(ஸல்) அவர்கள் கூறியதன் நோக்கம் அதனால் ஏற்படுகின்ற விபரீதத்தின் அச்சத்தின் காரணத்தினால் தான். மரணத்தினால் ஏற்படுகின்ற விபரீதத்தின் அச்சம் மற்றவைகளினால் ஏற்படுகின்ற அச்சத்தை விட எவ்வாறு அதிகமானதாக உள்ளதோ அதைப் போன்றே இதுவும் இருக்கிறது.
இஸ்லாமியப் பெண்ணே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! இந்த விஷயத்தில் பொடுபோக்காக இருக்காதே! மக்கள் பொடுபோக்காக இருந்தாலும் சரியே நீ அப்படி இருக்காதே! ஏனெனில் ஷரீஅத்தின் சட்டம்தான் கவனிக்கப்பட வேண்டுமே தவிர மக்களின் பழக்க வழக்கங்கள் அல்ல.
2. திருமண உறவு விலக்கப்படாத ஆண் டிரைவர்களுடன் பெண்கள் தனியாகப் பயணம் செய்கின்றனர். இதில் சில பெண்களும், அவர்களின் பொறுப்பாளர்களும் மெத்தனமாக இருக்கின்றனர். இவ்வாறு ஆணுடன் தனிமையில் இருப்பது தடுக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஷேக் முஹம்மத் இப்னு இப்ராஹீம் ஆலு ஷேக் சவூதி அரோபியாவில் மார்க்க தீர்ப்பு வழங்குபவராக இருந்தவர். மார்க்க தீர்ப்பு தொகுப்பு 10அ ப52 ல் குறிப்பிடுகிறார். ''எவ்வித சந்தேகமுமின்றி, ஒரு பெண் அன்னிய ஆணுடன் தனிமையில் பயணம் செய்வது பகிரங்கமாக வெறுக்கப்பட்டுள்ளது. இதனால் பலவிதமான குழப்பங்கள் உள்ளன. இதை யாரும் இலேசாகக் கருதிவி டமுடியாது. இதில் எவ்வளவுதான் பத்தினிப் பெண்ணாக இருந்தாலும் கண்ணியமான பெண்ணாக இருந்தாலும் சரிதான்.''
இப்படி செல்வதை தனது பெண்ணுக்கு அனுமதிப்பவன் மார்க்கப்பற்றும் தன் பெண்கள் விஷயத்தில் ரோஷம் குறைந்தவனாகவும் இருப்பான்.
''ஓர் ஆண் ஒரு அன்னிய பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு பெண் ஓர் ஆணுடன் வாகனத்தில் தனிமையில் பயணம் செய்வது வீட்டில் தனிமையில் இருப்பதை விட மிக மோசமானதாகும். ஏனெனில் வாகனத்தின் மூலம் அவளை ஊருக்கு உள்ளேயோ, ஊருக்கு வெளியேயோ, அவள் விரும்பியோ, விரும்பாத நிலையிலோ எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். இதன் மூலம் பயங்கரமான குழப்பங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பெண்ணுடன் துணைக்குச் செல்லுகின்றவர்கள் பெரிய வயதுடையவர்களாக இருக்கவேண்டும். சிறிய குழந்தைகள் மட்டும் இருப்பது போதாது. குழந்தையை உடன் எடுத்துச் சென்றால், அதைத் தனிமையாகக் கருத முடியாது என சில பெண்கள் நினைக்கின்றனர். இது தவறாகும்.
இமாம் நவவி தம்முடைய மஜ்மூவு 9அ ப109 ல் குறிப்பிடுகிறார்.
ஓர் ஆண் அன்னியப் பெண்ணுடன் தனிமையில் மூன்றாவது நபர் இல்லாது தனித்திருப்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி தவறாகும். இவ்வாறே அவளுடன் வெட்கத்தலங்களைப் பற்றி நன்கு அறியாத சிறிய குழந்தைகள் இருப்பதால் அவள் தனிமையில் இருக்கவில்லை என்று வாதிட முடியாது.
3. சில பெண்கள் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுகிறோம் என்ற பெயரில் தனிமையில் மருத்துவரிடம் செல்லும் விஷயத்திலும் பொடுபோக்காக இருக்கிறார்கள். இது பெரும் தவறாகும். இது ஆபத்தையும் விளைவிக்கும். இறையச்சமுள்ள யாராலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
முஹம்மத் இப்னு இப்ராஹீம் அவர்கள் ஃபத்வா தொகுப்பு 10அ ப13 ல் குறிப்பிடுகிறார்கள்.
எப்படி இருந்தாலும், ஒருபெண் அன்னிய ஆண்களுடன் தனிமையில் இருப்பது மார்க்க அடிப்படையில் தடுக்கப்பட்டுள்ளது. அது சிகிச்சை செய்யும் மருத்துவருடனாக இருந்தாலும் சரியே. ஏனெனில்,
''ஒருபெண் ஓர் ஆணுடன் தனிமையில் இருக்கும்போது மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அவளுடன் அவளுடைய கணவன் அல்லது வேறு யாராவது ஒருவர் இருக்கவேண்டும். இல்லையென்றால் சொந்தத்தில் உள்ள குடும்பப் பெண்கள் அவளுடன் இருக்கவேண்டும். அதுவும் இல்லையென்றால் ஆபத்தான நிலையில் குறைந்தது ஒரு நர்ஸாவது அவளுடன் இருந்தாகவேண்டும்.
அவ்வாறே நெருங்கிய நண்பர்களாயினும், பணியாளாயினும் ஒரு மருத்துவர் அன்னியப் பெண்ணுடன் தனித்திருப்பதும் கூடாது. கண்பார்வையற்ற ஆசிரியர் மாணவியுடன் தனிமையில் இருப்பதும், விமானப் பணிப் பெண் அன்னிய ஆணுடன் தனிமையில் இருப்பதும் கூடாது. நவநாகரீகம் என்ற பெயரில் இறைமறுப்பாளர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாலும், மார்க்க விஷயங்களைப் பொருட்படுத்தாமலும் இலேசாகக் கருதுகின்றனர்.
''லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்''
தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணுடன் ஓர் ஆண் தனிமையில் இருப்பதோ, அவ்வாறே ஒருபெண் தன் வீட்டில் பணிபுரியும் ஆணுடனும் தனிமையாக இருப்பதோ கூடாது. வீட்டுப் பணியாளர்களால், பலர் பெரும் சோதனைக்குள்ளாகிறார்கள். இதுவும் பெரும் பாதிப்பை உண்டாக்குவதாகும். பெண்கள் கட்டுப்பாடின்றி தங்கள் வீட்டிற்கு வெளியில் வேலைக்குச் செல்வதால் இவ்வாறான நிலைகள் ஏற்படுகின்றன. இறைநம்பிக்கையுள்ள ஆண்களும், பெண்களும் இன்றைய காலச் சூழலில் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். அவசியம் மற்றும் அவசரமான வேலைகளுக்கு மட்டும் வெளியில் செல்ல வேண்டும். தீய பண்புகளைத் தூர்வாற வேண்டும்.
கைலாகுச் செய்தல் (முஸாஃபஹா)
ஒருபெண் அன்னிய ஆண்களுடன் கைலாகு (முஸாஃபஹா) செய்தல் தடுக்கப்பட்டுள்ளது.
ஷேக் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் அவர்கள் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ள மார்க்கத்தீர்ப்புகள் தொகுப்பு 1அ ப185 ல் குறிப்பிடுகிறார்கள்.
ஒருபெண் பிறஆண்களுடன் கைலாகு செய்வது பொதுவாகக் கூடாது. அவர்கள் குமரிப் பெண்களாகவோ, வயோதியர்களாகவோ இருப்பினும் சரியே. கைலாகு செய்பவர் இளைஞராகவோ, வயோதியராகவோ இருப்பினும் சரியே. ஏனெனில் இதனால் இருசாராரும் உணர்ச்சிகளால் உந்தப்படும் அபாயம் இருக்கிறது.
''நான் பெண்களிடத்தில் கை கொடுக்க மாட்டேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
''நபி(ஸல்) அவர்கள் அன்னியப் பெண்களின் கரத்தைத் தொட்டதில்லை. வாய் மூலமாகத்தான் அவர்களிடம் பைஅத் எனும் உறுதிமொழி வாங்குவார்கள்'' என ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார்.
கைலாகுச் செய்யும் போது கை உறை அணிந்திருந்தாலும், அணியாமலிருந்தாலும் இது கூடாது. குழப்பத்தின் வாயில்களை அடைப்பதற்காக சட்டங்கள் இவ்வாறு கடைபிடிக்கப்படுகின்றன.
ஷேக் முஹம்மத் அமீன் ன்கீதி தம் அள்வாவுல் பயான் என்ற தப்ஸீரில் 6அ ப602,603 ல் குறிப்பிடுகிறார். அறிந்து கொள்! ஓர் ஆண் அன்னியப் பெண்ணுடன் கைலாகுச் செய்வது கூடாது. ஓர் ஆண் அன்னியப் பெண்ணுடன் உடலுடன் உடல் உரசுவதும் கூடாது.
இதற்கான ஆதாரங்கள் பல:
1. ''நான் பெண்களுடன் கைலாகுச் செய்யமாட்டேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: ''அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.'' (அல்குர்ஆன் 33:21)
நபி(ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி பெண்களுடன் கைகுலுக்காதிருப்பது ஆண்கள் மீது கடமையாகும்.
இந்த ஹதீஸ்பற்றிய விளக்கத்தை 'ஹஜ்' அத்தியாயத்தில் தெளிவாக விளக்கியுள்ளோம். ஹஜ்ஜின்போது இஹ்ராம் அணியும் நேரத்திலும் மற்ற நேரங்களிலும் சாயமிடப்பட்ட ஆடைகளை ஆண்கள் பொதுவாகவே அணிவது கூடாது எனச் சட்டம் கூறும் போது இதைக் கூறியுள்ளோம்.
'அஹ்ஸாப்' அத்தியாயத்தில் பர்தாவைப் பற்றி வந்துள்ள வசனமும், நபி(ஸல்) அவர்கள் பிற பெண்களிடம் உறுதி மொழி பெறும்போதும், கை குலுக்கமாட்டார்கள் என வந்திருப்பதும் ஆண்கள் பெண்களுக்கு கைகொடுக்கக் கூடாது என்பதற்கு தெளிவான ஆதாரங்களாகும். மேலும் பெண்ணின் உடம்பில் எந்தப் பாகத்தையும் தொடக்கூடாது. ஏனெனில் தொடுதல் என்பதன் இறுதி நிலைதான் கைகொடுத்தல் எனப்படுகிறது.
கை கொடுப்பது முக்கிய நேரமான உடன்படிக்கையின் போதே நபி(ஸல்) அவர்கள் பெண்களிடம் கை கொடுக்கவில்லை என்றால் எந்த நேரத்திலும் அது கூடாது என்பதற்கு இது ஆதாரமாகும். நபி(ஸல்) அவர்களுக்கு மாறு செய்யும் துணிச்சல் யாருக்கும் இல்லை. ஏனெனில் அவர்கள் தம் உம்மத்தினருக்குச் சொல் செயல் மற்றும் அங்கீகாரம் மூலம் சட்டம் கொடுத்த வல்லுனர்.
2. நாம் முன்னர் கூறியது போன்று ஒருபெண் தன்னை முழுவதுமாக மறைக்கப்பட வேண்டியவளாக இருக்கிறாள். எனவே அவள் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டியது அவள் மீது கடமையாகிறது. பார்வையைத் தாழ்த்துமாறு கட்டளையிடப்பட்டதன் நோக்கம் மனித குலம் தவறுகளில் விழாமலிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சந்தேகமின்றி உடலும் உடலும் உரசுவது உணர்வுகளைத் தூண்ட வலுவானதாக அமைகிறது. கண்ணால் பார்ப்பதால் ஏற்படும் தீங்கை விட இது மிகப் பெரிய தீங்காகும். இதை நடுநிலையான எல்லோரும் நன்கு அறிவர்.
3. கை கொடுப்பது அன்னியப் பெண்களுடன் இன்பம் அனுபவிப்பதற்குக் காரணமாகிறது. குறிப்பாக இறையச்சம் குறைந்து, நம்பிக்கை இழந்து, பேணுதலற்றுப்போன இக்காலத்தில் தவறுகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கணவன்மார்களில் சிலர் மனைவியின் சகோதரியின் வாயில் வாய் வைத்து முத்தமிட்டு ஸலாம் கொடுக்கும் பழக்க முடையவர்களாக இருக்கின்றனர். இதை ஸலாம் சொல்லும் முத்தம் என்று கூறுகின்றனர். இது அறிஞர்களின் ஏகோபித்தக் கருத்துப்படி தடுக்கப்பட்டதாகும். அவளுக்கு ஸலாம் சொல்லுதல் என்றால் அவளுக்கு முத்தமிடுதல் என்று பொருள் கொள்கின்றனர்.
சந்தேகத்திற்கு இடமின்றி உண்மை எதுவென்றால், இதுபோன்ற எல்லாத் தவறுகளை விட்டும் அதற்குக் காரணமாக இருப்பவைகளை விட்டும் தூரமாக இருப்பதுதான்.
முடிவுரை
இறைநம்பிக்கையுள்ள ஆண்களே! இறைநம்பிக்கையுள்ள பெண்களே! பின்வரும் அல்லாஹ்வின் உபதே சத்தை உங்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன்.
''நபியே! இறைநம்பிக்கையுள்ள ஆண்களுக்கு நீர் கூறும்! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளட்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
இன்னும், இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு நீர் கூறும்! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளட்டும். தங்கள் அலங்காரத்தை, அதிலிருந்து சாதாரணமாக வெளியில் தெரியக்கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டா திருக்கட்டும். இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும். மேலும், (இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தங்கள் கணவர்கள் அல்லது தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரரிகளின் புதல்வர்கள் அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் கீழ் உள்ள அடிமைகள் அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் பெண்களை விரும்பமுடியாத அளவு வயதானவர்கள் அல்லது பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள், ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்குத் தங்களுடைய அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும் தாங்கள் மறைத்து வைக்கும் அலங்காரங்களிலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை பூமியில் தட்டி நடக்கவேண்டாம். மேலும், இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் பாவமன்னிப்புக்கோரி நீங்கள் வெற்றிபெறுவதற்காக நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.'' (அல்குர்ஆன் 24:30,31)
எல்லாப்புகழும், அகிலங்களைப் படைத்து வளர்த்து இரட்சிக்கின்ற அல்லாஹ்வுக்கே! நம் நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்களின் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக!