தொகுப்பு: அபூஅப்திர் ரஹ்மான் அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் அல்இர்யாணி
தமிழாக்கம்: அபூஹுனைப் ஹிஷாம் இப்னு தௌபீக்
அணிந்துரை:
الحمد لله، وأشهد أن لا إله إلا الله، وأن محمدا عبده، ورسوله صلى الله عليه وسلم، أما بعد:
எங்களது சகோதரரான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் அல்இர்யாணி அவர்களின் இத்தொகுப்பை வாசித்தேன். குறித்த தொகுப்பானது ஒன்றிணைக்கப்பட்ட ஆதாரங்களையும் அறிஞர் பெருமக்களின் பத்வாக்களையும் கொண்டதாகக் காணப்படுகின்றது. நபியவர்களின் நோய் நிவாரணம் தேடல் அமைப்பு தொடர்பில் தொகுக்கப்பட்டதாக இது காணப்படுகின்றது. நான் இத்தொகுப்பை மிகச் சுருக்கமான தொகுப்பாகக் காண்கிறேன். மேலும், இது தொடர்பில் பிரயோசனம் அளிக்கக்கூடியதாகவும் இதனைக் கருதுகின்றேன்.
எனவே, அல்லாஹ்விடத்தில் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அல்இர்யாணி அவர்களுக்கு பரகத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்கின்றோம். எங்களை விட்டும் இன்னும் அவரை விட்டும் வெளிப்படையான, மறைமுகமான அனைத்து பித்னாக்களையும் தடுக்குமாறும் விண்ணப்பிக்கின்றோம்.
எழுதியவர்: யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி
ஹிஜ்ரி 1435 ஷஃபான் மாதம் 18ஆவது தினம் இவ்வணிந்துரை வரையப்பட்டது.
முன்னுரை:
الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأن محمدا عبده ورسوله، أما بعد
சிறப்புக்குரிய சகோதரர்களில் சிலர் என்னிடத்தல் மார்க்க ரீதியில் ஓதிப்பார்த்தல் மற்றும் அதனுடைய ஒழுங்குகள் தொடர்பாக எழுதுமாறு வேண்டிக் கொண்டார்கள். எனவே, அவர்களுடைய வேண்டுதலுக்கு இணங்க இலகுவான இச்சுருக்க நூலை ஓதிப்பார்த்தல் தொடர்பாக நபியவர்களின் வழி என்ற அடிப்படையில் ஒன்றிணைத்துள்ளேன். மேலும், சில பிரயோசனங்களையும் விழிப்பை ஏற்படுத்தும் குறிப்புக்களையும் உபதேசங்களையும் மற்றும், வழிகாட்டல்களையும் இதனுடன் இணைத்துக் கொண்டுள்ளேன். இன்னும், இதற்கு "நபியவர்களின் ஓதிப்பார்த்தல் தொடர்பான வர்ணணை" என்று பெயர் சூட்டியுள்ளேன்.
எனவே, அல்லாஹ்விடத்தில் இதனைக் கொண்டும் இதனுடைய ஆசிரியரைக் கொண்டும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கு பிரயோசனம் அடையக் கேட்கின்றேன். மேலும், விரும்பக்கூடிய மற்றும் பொருந்திக் கொள்ளக்கூடியதின் பால் அனைவருக்கும் பொருத்தத்தைக் கேட்கின்றேன். யாவருக்கும் பூரண ஆரோக்கியத்தையும் கேட்கின்றேன். எல்லாப் புகழும் அகிலத்தாரின் இரட்சகனுக்கே உரித்தாகும்!
நோய்நிவாரணம் அளிப்பவன் அல்லாஹ்
1. நபியவர்கள் தன்னுடைய இரட்சகன் மீது பொறுப்புச் சாட்டுதலில் மிக்க மகத்துவம் வாய்ந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். இன்னும், தன்னுடைய அனைத்துக் காரியங்களையும் அவனிடத்தில் ஒப்படைக்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். தனக்கு ஏதாவது வலி உண்டாகும் போது: "நான் நோய்வாய்ப்பட்டால் அவனே என்னைக் குணப்படுத்துகிறான்" (அஷ்ஷுஅரா: 80) என்று கூறிய தன்னுடைய தந்தையான இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களாகவும் அவனிடத்தில் தாழ்மைப்பட்டவர்களாகவும் நோய்நிரவாரணத்தை அவனிடத்தில் தேடியவர்களாகவும் தன்னுடைய இரட்கனிடத்தில் மீளக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.
2. மேலும், நபியவர்கள் தன்னுடைய துஆவின் போதும் நோய்நிவாரணம் தேடலின் போதும்
اللهُمَّ اشْف، وَأنْتَ الشَّافِئ
என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.
பொருள்: இரட்சகனே! நோய்நிவாரணம் அளிப்பாயாக! மேலும், நீயே நோய்நிவாரணம் அளிக்கக்கூடியவனாக இருக்கின்றாய்!
அல்குர்ஆனைக் கொண்டு நோய்நிவாரணம் தேடல்
விசுவாசிகளான தனது அடியார்களுக்கு அல்லாஹுத்தஆலா நோய்நிரவாரணியாக ஆக்கியிருக்கக்கூடிய சங்கைமிக்க அல்குர்ஆனைக் கொண்டு நபியவர்கள் சிகிச்சை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "இன்னும், நாம் விசுவாசிகளுக்கு நல்லருளாகவும் அருமந்தாகவும் உள்ளவற்றையே அல்குர்ஆனில் (படிப்படியாக) இறக்கி வைத்தோம்." (அல்இஸ்ரா: 82)
மேலும் கூறுகின்றான்: "மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசம் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது.) மேலும், (அது) விசுவாசிகளுக்கு நேர்வழிகாட்டியாகவும் நல்லருளாகவும் உள்ளது." (யூனுஸ்: 57)
இன்னும் கூறுகின்றான்: "இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும் அருமருந்துமாகும் என்று கூறுவீராக!" (புஸ்ஸிலத்: 44)
பாதுகாவல் அத்தியாயங்களைக் கொண்டு நோய்நிவாரணம் தேடல்
1. "நபியவர்கள் நோய்வாய்ப்பட்டால் பாதுகாவல் அத்தியாயங்களைத் தனக்குத் தானே ஓதி ஊதி தனது கரங்களால் தடவிக்கொள்வார்கள்" என ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
2. நபியவர்கள் தனது குடும்பத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் பாதுகாவல் அத்தியாயங்களை ஓதி அவர் மீது தடிவிவிடுபவர்களாக இருந்தார்கள். "நபியவர்கள் மரணத்தைத் தழுவிய நோயில் இருந்த போது நான் பாதுகாவல் அத்தியாயங்களை அவர்கள் மீது ஓதி ஊதி அவர்களுடைய கரங்களைக் கொண்டே தடவச் செய்வேன். ஏனெனில், என்னுடைய கரத்தை விட அவர்களுடைய கரம் மிகமகத்தான அருள்பொருந்தியதாகக் காணப்பட்டது" என்று ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள். (முஸ்லிம்)
3. இரு பாதுகாவல் அத்தியாயங்களைக் கொண்டு ஓதிப்பார்த்து நோய்நிவாரணம் தேடுவதின் மீது நபியவர்கள் ஆர்வம் ஊட்டக்கூடியவர்களாக இருந்தார்கள். "நீங்கள் அவற்றைக் கொண்டு பாதுகாவல் தேடுங்கள்! நிச்சயமாக அவற்றைப் போன்ற ஒன்றைக் கொண்டேயன்றி வேறு எதனைக் கொண்டும் எவரும் பாதுகாவல் தேடியதில்லை" என நபியவர்கள் பகர்ந்ததாக உக்பத் இப்னு ஆமிர் அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத், ஸஹீஹ் அபீதாவுத்)
சூரதுல் பாதிஹாவைக் கொண்டு நோய்நிவாரணம் தேடல்
தேளால் கொட்டப்பட்ட அரேபியக் குக்கிராமங்களில் ஒரு பிரதேசத்து தலைவர் விடயத்தில் அபூஸஈத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்திலும் அவர்களுடன் இருந்தவர்களிடத்திலும் ஒரு கூட்டம் சமுகம் தந்தது.
"கூட்டத்தினரே! நிச்சயமாக எங்களுடைய தலைவர் தேளால் கொட்டப்பட்டுள்ளார். ஒவ்வொரு வழிமுறையைக் கொண்டும் அவருக்காக முயற்சி செய்தோம். ஆனாலும் பயனளிக்கவில்லை. (அவரைக் குணப்படுத்த) ஏதாவது ஒன்று உங்களில் எவரிடத்திலாவது உள்ளதா?" எனக் கேட்டார்கள். அப்போது அபூஸஈத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்குர்ஆனின் தோற்றுவாயான சூரதுல் பாதிஹாவை ஓதிப்பார்த்து சிகிச்சை செய்தார்கள். அவர் அதனை ஓதி, தனது எச்சிலை ஒன்று சேர்த்து உமிழ்ந்தார். அதனால் அப்பிரதேசத் தலைவர் நிவாரணம் பெற்றார். (அவிழ்க்கப்பட்ட ஒட்டகம் எவ்வாறு உட்சாகமாக எழும்புமோ) அவ்வாறு உட்சாகமாக (நோயின்) எவ்வித அறிகுறியுமின்றி எழுந்து நடக்கலானார்.
அவர்கள் இதனை அல்லாஹ்வின் தூதரிடத்தில் கூறியபோது நபியவர்கள் சிரித்தார்கள். மேலும் அபூஸஈத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி: "நிச்சயமாக அது நோய்நிவாரணி என்று உனக்கு அறிவித்தது எது என்று வினவினார்கள்." (புகாரி, முஸ்லிம்)
குறிப்பு: 01
இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "அல்ஜவாபுல் காபி" என்ற நூலில் கூறுகிறார்கள்: "இந்த நோய் விடயத்தில் இம்மருந்து தாக்கத்தை உண்டாக்கியது. மேலும், அதனை அடையாளம் தெரியாத அளவுக்கு அகற்றியது. அதுவே மிக இலகுவான மருந்தாகவும் மிகச் சுலபமானதாகவும் இது இருக்கின்றது. சூரதுல் பாதிஹாவைக் கொண்டு மருந்து செய்வதை அடியான் நல்லமுறையில் மேற்கொண்டால் நோய்நிரவாரணத்தில் ஆச்சரியமிக்க தக்கத்தை அதனில் கண்டு கொள்வான். ஒரு சில காலம் நான் மக்காவில் தங்கியிருந்தேன். அப்போது எனக்கு நோய்கள் உண்டாகின. எந்த ஒரு வைத்தியரையும் மருந்தையும் அங்கு நான் பெற்றுக்கொள்ளவில்லை. எனவே, சூரதுல் பாதிஹாவைக் கொண்டு எனக்கு நானே சிகிச்சை செய்து கொண்டேன். ஆச்சரியமிக்க தாக்கத்தை அதனில் கண்டு கொண்டேன். யாரெல்லாம் வலியை உணர்வதாக என்னிடத்தில் முறையிடுகிறார்களோ அவர்களுக்கு அதனை வர்ணித்துச் சொல்லக்கூடியவனாக நான் இருந்தேன். அவர்களில் அதிகமானவர்கள் விரைவாக நோய்நிவாரணம் அடைந்தவர்களாக இருந்தார்கள்."
குறிப்பு: 02
"அபூஸஈத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் தெளிவான அமைப்பில் சூரதுல் பாதிஹாவானது நோய்நிவாரணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, விஷஜந்துக்களால் தீண்டப்பட்டவர்கள் மற்றும் நோயாளிகள் போன்றோர் மீது அதனை ஓதிப்பார்ப்பது விருப்பத்தக்கதாகும்" என இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்.
இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "இந்த ஹதீஸில் இருந்து அல்லாஹ்வுடைய வேதத்தைக் கொண்டு ஓதிப்பார்த்தல் கூடும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அத்தோடு எமக்கு அறிவிக்கப்பட்ட துஆக்கள் மற்றும் திக்ருகள் ஆகியவற்றையும் இணைத்துக் கொள்ளலாம். மேலும், எமக்குத் தெரியப்படுத்தப்பட்டவைகளுக்கு முரணாகாத அறிவிக்கப்படாதவற்றையும் ஓதிக்கொள்ளலாம்."
மேலும் இமாம் குர்துபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: "சூரதுல் பாதிஹாவானது அல்குர்ஆனின் தோற்றுவாயாக இருப்பதும் அனைத்துவகையான அறிவுகளையும் தன்னகத்தே பொதிந்ததாக இருப்பதும் அல்லாஹ் மீது புகழ்ச்சியை உள்ளடக்கியதாக இருப்பதும் அவனை வணங்குவது கொண்டு உறுதிப்படுத்துவதாக இருப்பதும் அவனுக்காக வேண்டி மனத்தூய்மையைக் கடைபிடித்தல், அவனிடத்தில் நேர்வழியைக் கேட்டல், அவனுடைய அருட்கொடைகளைக் கொண்டு நிறைவேற்ற வேண்டியதை சரியாக நிறைவேற்ற முடியாமல் போதல் ஆகிய நிலை, ஏற்றுக் கொள்ளல் மீளுல் தொடர்பான விடயம் மற்றும் புறக்கணிப்பவர்களின் இறுதி முடிவு பற்றிய தெளிவு தொடர்பான சுட்டிக்காட்டுதல்கள் போன்றனவும் இவையல்லாத ஏனையவைகளைக் கொண்டும் தனித்துவமான அமைப்பில் இவ்வத்தியாயம் காணப்படுவதும் நிச்சயமாக இது ஓதிப்பார்ப்பதற்குரிய இடமாகும் என்பதை வேண்டி நிற்கிறது."
நபியவர்களுக்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஓதிப்பார்த்த விதம்
1. ஒரு நாள் தினம் நபியவர்கள் நோயின் சிரமத்தை உணர்ந்தார்கள். அப்போது அவர்களிடத்தில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சமுகம் தந்தார்கள். "முஹம்மதே! நீங்கள் வருத்தத்தை உணருகிறீர்களா?" எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "ஆம்" என பதிலளிக்க...
بِاسْمِ الله أَرْقِيْكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيْكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أوْ عَيْنِ حَاسِدٍ، الله يَشْفِيْكَ، بِاسم الله أرْقِيْكَ
என்று கூறி நோய்நிவாரணம் தேடினார்கள் என அபூஸஈத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
பொருள்: உங்களை நோவினைப்படுத்தும் ஒவ்வொரு வஸ்தில் இருந்தும் மற்றும் ஒவ்வோர் ஆத்மாவின் தீங்கில் இருந்தும் அல்லது பொறாமைக்காரனின் கண் திருஷ்டியில் இருந்தும் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு உங்களுக்கு நான் ஓதிப்பார்த்து நோய்நிவாரணம் தேடுகின்றேன். அல்லாஹ் உங்களைக் குணப்படுத்துவானாக! அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு உங்களுக்கு நான் ஓதிப்பார்த்து நோய்நிவாரணம் தேடுகின்றேன்.
2. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: "நபியவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்காக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஓதிப்பார்ப்பார்கள். (அவ்வாறு ஓதிப்பாக்கும் சந்தர்ப்பத்தில்)
بِاسْمِ الله، يُبْرِيْكَ، وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيْكَ، وَمِنْ شَرِّ حَاسِدٍ إذا حَسَدَ، وَشَرِّ كُلِّ ذِيْ عَيْنٍ
என்று கூறுவார்கள். (முஸ்லிம்)
பொருள்: அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு அவன் உங்களை குணப்படுத்துவானாக! மேலும், அனைத்து நோய்களில் இருந்தும் அவன் உங்களைக் குணப்படுத்துவானாக! இன்னும், பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போது உண்டாகும் தீங்கிலிருந்தும் கண்திருஷ்டியுடைய அனைவரினதும் தீங்கில் இருந்தும் பாதுகாப்பானாக!
நபியவர்கள் ஸஹாபாக்களுக்கு ஓதிப்பார்த்த விதங்கள்
1. நபியவர்கள் தன்னுடைய உறவினர்களில் சிலர் நோய்வாய்ப்பட்டால் தனது வலக்கரத்தால் தடவிவிடுபவர்களாகவும்
اللهُمَّ رَبَّ النَّاسِ ، اَذْهِبِ البَأْسَ ، اشْفِهِ وَأَنْتَ الشَّافِيْ ، لا شِفَاءَ إلا شِفَاؤُكَ ، شِفَاءً لا يُغَادِرُ سَقَمًا
என்று கூறிப் பாதுகாப்புத் தேடக்கூடியவர்களாகவும் இருந்தார்கள் என ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
பொருள்: அல்லாஹ்வே! மனிதர்களின் இரட்சகனே! நோயின் சிரமத்தைப் போக்குவாயாக! இவரைக் குணப்படுத்துவாயாக! நீயே குணப்படுத்துபவனாக உள்ளாய், உன்னுடைய குணப்படுத்துதலைத்தவிர நோயை முழுமையாக அகற்றும் வேறு ஒரு குணப்படுத்துதல் கிடையாது.
2. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: "நபியவர்கள் ஓதிப்பார்க்கக்கூடியவர்களாக இருந்தார்கள். (அவ்வாறு ஓதிப்பார்க்கும் போது:)
امْسَحِ البَأسَ رَبَّ النَّاسِ، بِيَدِكَ الشِّفَاءُ، لا كَاشِفَ لهُ إلا أنْتَ
என்று கூறுவார்கள்." (புகாரி)
பொருள்: மனிதர்களின் இரட்சகனே! நோயின் சிரமத்தைப் போக்குவாயாக! உன்னுடைய கரத்தில் நிவாரணம் உள்ளது. உன்னைத் தவிர அதனை அகற்றக்கூடியவன் வேறு யாரும் இல்லை.
3. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்;: "நபியவர்கள் ஒரு நோயாளியைத் தர்சிக்கச் சென்றால் அல்லது அவர்களிடத்தில் கொண்டு வரப்பட்டால்
أذْهَب البَأسَ رَبَّ النَّاسِ، اشْفِهِ أنْتَ الشَّافِيْ، لا شِفَاءَ إلا شِفَاؤُكَ، شِفَاءً لا يُغَادِرُ سَقَمًا
என்று கூறுவார்கள்.” (புகாரி, முஸ்லிம்)
4. முஹம்மத் இப்னு ஹாதிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: "என்தாயிற்கு ஒரு பானையை எடுத்து வைக்க உதவிசெய்தேன். அப்போது என்னுடைய கை சூட்டின் காரணமாக எரிந்தது. எனவே, நபியவர்களிடம் எனது தாய் என்னைக் கூட்டிக் கொண்டு சென்றாள். நபியவர்கள் கூறியது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அப்போது நான் சிறியவனாக இருந்தேன். எனவே, அது குறித்து என் தாயிடத்தில் வினவினேன். அதற்கு அவள்:
اذهب البأس رب الناس، واشف أنت الشافي ،لا شفاء إلا شفاؤك
என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள் என பதிலளித்தாள். (அஹ்மத்)
5. ஒரு நாள் தினம் ஸாபித் அல்புனானி என்பவர் நோயின் காரணத்தால் சிரமத்திற்கு உள்ளானார். எனவே, அவர் அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் பிரவேசித்து, அபூஹம்ஸாவே! நான் நோயால் அவதியுறுகிறேன் என்று கூறினார். அதற்கு அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களின் ஓதிப்பார்த்தலைக் கொண்டு நானும் உனக்கு ஓதிப்பார்க்கட்டுமா? என வினவினார்கள். அப்போது அவர் ஆம் என்று கூற...
اللهم رب الناس، مذهب البأس، اشف أنت الشافي، لا شافي إلا أنت، شفاء لا يغادر سقما
என்று கூறினார்கள். (புகாரி)
குறிப்பு: மேற்கூறப்பட்ட துஆக்கள் அனைத்தும் ஒரே அமைப்பில் இடம்பெற்றுள்ளமையால் ஆரம்ப விடுத்தம் மாத்திரம் அதன் பொருளைக் குறிப்பிட்டிருந்தோம். எனவே, குறித்த துஆவின் பொருளையும் உயிர்க்குறியீடுகளையும் பார்க்க நாடுபவர்கள் நாம் ஆரம்பமாக இந்த துஆவைக் குறிப்பிட்ட பதிவைப் பார்க்கவும்.
6. நபியவர்களிடத்தில் ஒருவர் தனக்குள்ள ஏதாவது ஒரு நோய் குறித்து முறையிட்டால் அல்லது ஒருவரிடத்தில் உள்ள கொப்புளம் அல்லது காயம் குறித்து முறையிட்டால் நபியவர்கள் இவ்வாறு தனது விரலைப் பயன்படுத்திக் கூறுவார்கள் - அதன் போது ஸுபியான் தனது சுட்டுவிரலை பூமியில் வைத்தார் - பிறகு நபியவர்கள் அதனை உயர்த்தி
بِسْمِ الله ، تُرْبَةُ أرْضِنَا ، بِرِيْقَةِ بَعْضِنَا ، يُشْفَى سَقِيْمُنَا ، بِإِذْنِ رَبِّنَا
என்று கூறுவார்கள். (புகாரி, முஸ்லிம்)
பொருள்: அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு, எங்களுடைய பூமியன் மண், எங்களின் சிலருடைய எச்சிலைக் கொண்டு, எங்களில் உள்ள நோயாளிக்கு எங்களின் இரட்சகனின் அனுமதியுடன் நிவாரணம் அளிக்கப்படும்.
இச்செய்தியின் கருத்தாவது, நபியவர்கள் தன்னுடைய எச்சிலைத் தனது சுட்டுவிரலில் எடுத்து அதனை மண்ணின் மீது வைப்பார்கள். அப்போது அதனுடன் மண்ணின் சில பகுதிகள் ஒட்டிக் கொள்ளும். பிறகு அதனைக் காயமுற்ற இடத்தில் வைத்து தடவிவிடுவார்கள். அவ்வாறு தடவிவிடும் போது இவ்வார்த்தைகளை மொழிவார்கள். (இமாம் நவவி)
மேலும் இமாம் குர்துபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: "எல்லா வகையான வலிகளுக்கும் ஓதிப்பார்க்க முடியும் என்பதற்கு இதனில் ஆதாரம் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், நிச்சயமாக இது விடயம் அவர்களுக்கு மத்தியில் அறிமுகமானதாகவும் பரவலான அம்சமாகவும் காணப்பட்டதைப் புரிந்து கொள்ளலாம்." (பத்ஹ்)
7. நபியவர்கள் ஒரு நோயாளியைப் பார்க்கச் சென்றால் அவருடைய தலைக்கு அருகாமையில் உட்காருவார்கள். பிறகு பின்வருமாறு ஏழு விடுத்தங்கள் கூறுவார்கள்.
أسْأَلُ اللهَ العَظِيْمَ ، رَبَّ العَرْشِ العَظِيْمِ ، أنْ يَشْفِيَكَ
இச்செய்தி இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய அல்அதபுல் முப்ரத் (பக்கம்: 189) எனும் நூலில் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும், அஸ்ஸஹீஹுல் முஸ்னத் (641) எனும் கிரந்தத்தில் ஹஸன் எனும் தரத்திலும், ஸஹீஹ் அல்அதபுல் முப்ரத் (416) எனும் நூலிலும் பதிவாகியுள்ளது.
பொருள்: உனக்கு நோய்நிவாரணம் அளிப்பதை மகத்துவம் மிக்க அர்ஷின் இரட்சகனும் மகத்துவமிக்க அல்லாஹ்வுமான அவனிடத்தில் கேட்கிறேன்.
8. ஸஃத் இப்னு அபீவக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்காவில் வைத்து கடுமையான நோயிற்கு உள்ளானார்கள். அப்போது நபியவர்கள் அவரைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தார்கள். அதன் போது நபியவர்கள் தனது கரத்தை அவருடைய நெற்றியில் வைத்து அவருடைய முகத்தையும் வயிற்றையும் தடவிவிட்டார்கள். பிறகு,
اللهُمَّ اشْفِ سَعْدًا
என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
பொருள்: அல்லாஹ்வே! ஸஃதைக் குணப்படுத்துவாயாக!
9. நபியவர்களின் வழிமுறையில் நின்றும் உள்ளது தான் அவர்கள் ஒரு நோயாளியை நோய்விசாரிக்கச் சென்றால் அவரைப் பார்த்து,
لا بَأسَ ، طَهُوْرٌ إنْ شَاءَ اللهُ
என்று கூறுவார்கள்.
இச்செய்தி புகாரி எனும் கிரந்தத்தில் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.
இந்த ஹதீஸின் விளக்கமாவது: நிச்சயமாக நோயாளியைப் பொருத்தளவில் அவருடைய பாவங்களுக்கு அவரின் நோய் பரிகாரமாக அமைந்துவிடுகின்றது. எனவே, அவருக்கு ஆரோக்கியம் கிடைத்தால் இரு விதமான நலவுகள் கைகூடிவிடுகின்றன. அவ்வாறில்லாவிடின் பாவங்களுக்குப் பரிகாரமாகும் நலவு மாத்திரம் கிடைக்கக்கூடியதாக இருக்கும். (பத்ஹ்)
பொருள்: உன் மீது சிரமமும் தீங்கும் அன்று, அல்லாஹ் நாடினால் அது உன்னைப் பாவங்களில் இருந்து சுத்தப்படுத்தக்கூடியதாக இருக்கும்.
10. உஸ்மான் இப்னு அபில்ஆஸ் அஸ்ஸகபி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடத்தில் தான் இஸ்லாத்தை ஏற்ற நாள் முதல் தனது உடலில் ஏதோ ஒரு வலியை உணர்வதாக முறையிட்டார்கள். அதற்கு நபியவர்கள் அவரை நோக்கி: "உன்னுடைய கையை உன் உடம்பில் நீர் வலியை உணரக்கூடிய இடத்தில் வைப்பீராக! பின்பு باسْمِ اللهِ என்று மூன்று விடுத்தங்களும்
أعُوْذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أجِدُ وَأُحَاذِرُ
என்று 7 விடுத்தங்களும் கூறுமாறு பணித்தார்கள்." (முஸ்லிம்)
பொருள்: அல்லாஹ் மற்றும் அவனது ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டு நான் அடையக்கூடிய இன்னும் ஆபத்தாக எதிர்கொள்ளக்கூடியவற்றின் தீங்கில் இருந்தும் பாதுகாவல் தேடுகின்றேன்.
குறிப்பு: மேற்கூறப்பட்ட துஆக்களில் சிலவற்றை காயங்கள் மற்றும் வலிகளுக்கான நிவாரணங்களாகக் குறிப்பிடாலம்.
ஓதிப்பார்த்தல் கொண்டு கண்ணூறுக்கு சிகிச்சை செய்தல்
1. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: "கண்ணூறுக்காக ஓதிப்பார்க்குமாறு எனக்கு ஏவக்கூடியவர்களாக அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இருந்தார்கள்." (புகாரி, முஸ்லிம்)
2. நபிவர்கள் அஸ்மா பின்து உமைஸ் ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்குக் கூறினார்கள்: "என்னுடைய சகோதரர் - ஜஃபர் - இன் பிள்ளைகளின் உடம்புகள் மெலிந்திருப்பதைக் காண்கிறேன்! அவர்களை வறுமை பீடித்துவிட்டதா?" என வினவினார்கள். அதற்கு அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்: "இல்லை. ஆனாலும், கண்ணூறு அவர்களை விரைந்து பீடித்துவிட்டது" என்றார்கள். அதற்கு நபியவர்கள்: "நீர் அவர்களுக்காக ஓதிப்பார்ப்பீராக!" எனப் பணித்தார்கள். (முஸ்லிம்)
3. நபியவர்கள் உம்;மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டில் முகத்தின் நிறம் மாற்றமடைந்த ஒரு பெண்ணைக் கண்டார்கள். அப்போது நபியவர்கள்: "அவளுக்காக ஓதிப்பாருங்கள்! நிச்சயமாக அவளை கண்ணூறு பீடித்துள்ளது" என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
4. நபியவர்கள் கூறினார்கள்: "இணைவைப்பு கலக்காத பட்சத்தில் ஓதிப்பார்ப்பதில் குற்றம் கிடையாது." (முஸ்லிம்)
அல்ஹாபிழ் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "பத்ஹுல் பாரி" எனும் நூலில் கூறும்போது: "மூன்று நிபந்தனைகள் ஒன்றிணையும் சந்தர்ப்பத்தில் ஓதிப்பார்ப்பது கூடும் என்ற விடயத்தில் உலமாக்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவை:
1. ஓதிப்பார்த்தலானது அல்லாஹ்வுடைய வார்த்தைகளைக் கொண்டு அல்லது அவனுடைய திருநாமங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
2. ஓதிப்பார்த்தலானது அரபு மொழியில் அல்லது மற்றவர்களால் கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமான ஒரு மொழியைத் தழுவியதாக இருக்க வேண்டும்.
3. நிச்சயமாக ஓதிப்பார்த்தலுக்குத் தன்னளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் அல்லாஹ்வைக் கொண்டு மத்திரமே அது தாக்கத்திற்குள்ளாகின்றது என்றும் நம்ப வேண்டும்" என்கிறார்கள்.
5. மேலும், இது விடயத்தில் மற்றொரு செய்தியாக நாம் முன்பு குறிப்பிட்ட ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் நபியவர்களுக்கு ஓதிப்பார்த்த கண்ணூறு துஆவைக் குறிப்பிடலாம்.
6. நபியவர்கள் ஹஸன், ஹுஸைன் ஆகிய இருவருக்குமாக பாதுகாப்புத் தேடக்கூடியவர்களாக இருந்தார்கள். அதன்போது அவர்களை நோக்கி: "நிச்சயமாக உங்கள் இருவரினதும் தந்தையான இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இதனைக் கொண்டு இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகிய இருவருக்கும் பாதுகாப்புத் தேடினார்கள்" என்று கூறிவிட்டு பின்வரும் பாதுகாவல் துஆவைக் குறிப்பிட்டார்கள்.
أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ ، وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
(இச்செய்தியை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள்.)
பொருள்: எல்லா ஷைத்தான்கள், விஷஜந்துக்கள் மற்றும் தீங்கை ஏற்படுத்தக்கூடிய அனைத்து வகையான கண்கள் ஆகியவற்றில் இருந்தும் அல்லாஹ்வின் பூரண வார்த்தைகளைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்.
கண்ணூறுக்குக் காரணமாக இருந்தவரைக் கழுவி எடுப்பதே கண்ணூறுக்குரிய சிகிச்சையாகும்.
1. ஒரு நாள் ஆமிர் இப்னு ரபீஆ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஹ்ல் இப்னு ஹுனைப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர் குளித்துக் கொண்டிருந்தார். அதனைக் கண்ணுற்ற ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: "இன்றைய தினத்தைப் போன்ற ஒரு தினத்தை நான் பார்த்ததில்லை. இந்தத் தோலைப் போன்று மறைத்து வைத்திருக்கும் ஓரு தோலை நான் பார்த்ததில்லை" என்று கூறி சற்று நேரம் அவ்விடத்தில் தரித்திருக்கவில்லை ஸஹ்ல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார்கள். பிறகு அவர் நபியவர்களிடத்தில் கொண்டுவரப்பட்டார். அப்போது நபியவர்களை நோக்கி: "நீங்கள் ஸஹ்லை மயக்கமுற்ற நிலையில் அடைந்திருக்கிறீர்கள்" என்று சொல்லப்பட்டது. அதற்கு நபியவர்கள்: "இவருக்குக் கண்ணூறு ஏற்பட்டிருக்கும் விடயத்தில் யாரையாவது குற்றம் சாட்டுகிறீர்களா?" என வினவினார்கள். அதற்கு அவர்கள்: "ஆமிர் இப்னு ரபீஆவை சந்தேகப்படுகிறோம்" என்றார்கள். அப்போது நபியவர்கள்: "உங்களில் ஒருவர் தனது சகோதரனை எதற்காகக் கொளை செய்ய வேண்டும்?! உங்களில் ஒருவர் தன்னுடைய சகோதரனிடத்தில் தன்னை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கக்கூடியதைக் கண்ணுற்றால் அவர் தனது சகோதரனுக்காக அபிவிருத்தியை நாடிப் பிரார்த்திக்கட்டும்!" என்று கூறினார்கள். பிறகு தண்ணீரைக் கொண்டு வருமாறு பணித்தார்கள். மேலும், ஆமிரை நோக்கி வுழூச் செய்யுமாறும் தனது முகம், முழங்கை உட்பட இரு கரங்கள், இரு முட்டுக்கால்கள், தனது வேட்டியின் உட்பாகம் ஆகியவற்றைக் கழுவுமாறு ஏவினார்கள். இன்னும், அதனை மயக்கமுற்ற அத்தோழர் மீது ஊற்றுமாறு பணித்தார்கள்.
இச்செய்தி இப்னு மாஜா: (3509) எனும் கிரந்தத்தில் அபூஉமாமா இப்னு ஸஹ்ல் இப்னி ஹுனைப் என்பவரைத் தொட்டு பதிவாகியுள்ளது. மேலும், ஸஹீஹ் இப்னி மாஜா: (2828) இலும் இதனைக் காணலாம்.
2. நபியவர்கள் கூறினார்கள்: "கண்ணூறு என்பது உண்மையானது. விதியை முந்திவிடக்கூடிய ஒன்று இருக்குமென்றால் கண்ணூறு அதனை முந்தியிருக்கும். எனவே, நீங்கள் (கண்ணூறுக்குரிய பரிகாரத்திற்காக) கழுவித்தருமாறு வேண்டப்பட்டால் கழுவிக் கொடுங்கள்."
இச்செய்தி முஸ்லிம் (2188) எனும் கிரந்தத்தில் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.
இதனுடைய விளக்கமாவது: நிச்சயமாக அனைத்து விடயங்களும் அல்லாஹுத்தஆலாவின் விதியின் ஏற்பாட்டைக் கொண்டு அமைந்துள்ளன. அவற்றில் எந்த ஒன்றும் அல்லாஹுத்தஆலா விதியாக ஏற்படுத்தியதைக் கொண்டே அன்றி நடைபெறாது. மேலும், அவனுடைய அறிவு அதனை முந்தியுள்ளது. அல்லாஹுத்தஆலாவின் விதியின் ஏற்பாடு அன்றி கண்ணூறின் தீங்குகள் மற்றும் அதுவல்லாத எந்த நலவோ, கெடுதியோ நிகழமாட்டாது. மேலும், இச்செய்தியில் இருந்து கண்ணூறுடைய விடயம் சரியானது என்றும் நிச்சயமாக அது தீங்குகளில் பலம் வாய்ந்தது என்றும் புரிந்து கொள்ளலாம். (இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ்)
துஆவைக் கொண்டு சிகிச்சை செய்தல்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "(நபியே!) அய்யூபையும் (நினைவு கூர்வீராக!) அவர், தன் இரட்சகனிடம்: நிச்சயமாகத் துன்பம் என்னைப் பீடித்துக் கொண்டது, நீயோ கிருபையாளர்களிலெல்லாம் மிகக் கிருபையாளன் என்று (பிரார்த்தனை செய்து) அழைத்தபோது, நாம் அவருக்குப் பதிலளித்து பின்னர், அவருக்கிருந்த துன்பத்தையும் நீக்கிவிட்டோம், அவருடைய குடும்பத்தையும், அவர்களுடன் அவர்களைப் போன்றவர்களையும் அவருக்கு நாம் கொடுத்தோம். இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் (நம்மை) வணங்குவோருக்கு நினைவூட்டுதலாகவும் இருக்கிறது." (அல்அன்பியா: 83, 84)
اللهُمَّ إنِّيْ أعُوْذُ بِكَ مِنَ البَرَصِ ، وَالجُنُوْنِ ، وَالجُذَامِ ، وَمِنْ سَيِّئِ الأسْقَامِ
(இந்த துஆ அபூதாவுத்: 1554 எனும் கிரந்தத்தில் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. மேலும், அஸ்ஸஹீஹுல் முஸ்னத்: 39 எனும் நூலில் ஸஹீஹ் எனும் தரத்திலும் ஸஹீஹ் அபீதாவுத்: 1375 எனும் கிரந்தத்திலும் பதிவாகியுள்ளது.)
பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னைக் கொண்டு வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் நோய்களின் தீங்கில் இருந்தும் பாதுகாவல் தேடுகின்றேன்.
துஆவைக் கொண்டு சூனியத்திற்குச் சிகிச்சை
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு "பனூஸுரைக்" குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பவன் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்துகொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் "ஒரு நாள்" அல்லது "ஓரிரவு" என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள். பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என்கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், "இந்த மனிதரின் நோய் என்ன?" என்று கேட்டார். அத்தோழர், "இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது" என்று சொல்ல, முதலாமவர் "இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?" என்று கேட்டார். தோழர், "லபீத் இப்னு அஃஸம் (எனும் யூதன்)" என்று பதிலளித்தார். அவர், "எதில் வைத்திருக்கிறான்?" என்று கேட்க, "சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும்" என்று பதிலளித்தார். அவர், "அது எங்கே இருக்கிறது?" என்று கேட்க, மற்றவர், "(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) "தர்வான்" எனும் கிணற்றில்" என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த இறைத்தூதர் அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, "ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப்போன்று உள்ளன" என்று கூறினார்கள். நான், "இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றிவிட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகும்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை நான் வெளியே எடுக்கவில்லை) "என்று கூறினார்கள். பிறகு அந்தக் கிணற்றைக் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப்பட்டது. - புகாரி (5763), முஸ்லிம் (2189)
மேற்குறித்த செய்தி தொடர்பாக இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "ஷர்ஹு முஸ்லிம்" எனும் நூலில் கூறும் போது: "வெறுக்கத்தக்க விடயங்கள் நிகழும் போது துஆச் செய்வதும் அதனை திரும்பத்திரும்ப மேற்கொள்வதும் விரும்பத்தக்கது என்பதற்கும் அல்லாஹுத்தஆலாவின் பால் மீளுதலுடைய அழகிய வர்ணணைக்கும் இது ஓர் ஆதாரமாகத் திகழுகின்றது" என்கிறார்கள்.
துஆவைக் கொண்டு மயக்கமுறுதலுக்கு பரிகாரம் தேடல்
அதா இப்னு அபீரபாஹ் அவர்கள் கூறினார்கள்: "என்னைப் பார்த்து இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ‘சுவனவாசிகளில் நின்றும் உள்ள ஒரு பெண்ணை உனக்கு நான் தெரியப்படுத்தட்டுமா?’ என வினவினார்கள். அதற்கு நான்: ‘ஆம்.’ என்று கூற ‘இந்த கருத்த நிறமுறைய பெண்ணைப் பார்த்துக் கொள்’ என்றார்கள். ஒரு முறை இப்பெண்மணி நபியவர்களிடத்தில் வந்து, ‘நிச்சயமாக நான் மயக்கமுறுகிறேன், மேலும், என்னுடைய ஆடை விலகுகின்றது. எனவே, எனக்காக அல்லாஹ்விடத்தில் துஆச் செய்யுங்கள்’ எனக் கேட்டுக் கொண்டாள். அதற்கு நபியவர்கள்: ‘நீ நாடினால் பொறுமையாக இருப்பாய்! அப்போது, உனக்கு சுவனம் உண்டாகும். மேலும், நீ நாடினால் உனக்காக வேண்டி அல்லாஹ்விடத்தில் நோய் நிவாரணம் தேடிப் பிரார்த்தனை செய்கின்றேன்’ என்றார்கள். அதற்கு இப்பெண்: ‘நான் பொறுமையாக இருந்து கொள்கின்றேன்’ என்று கூறுவிட்டு, ‘நிச்சயமாக நான் ஆடை விலகக்கூடியவளாக இருக்கின்றேன். எனவே, எனக்காக அல்லாஹ்விடத்தில் ஆடை விலகாமல் இருக்க துஆச் செய்யுங்கள்’ எனக் கேட்டுக் கொண்டாள். அப்போது நபியவர்கள் இவளுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். (புகாரி: 5652, முஸ்லிம்: 2576)
நிச்சயமாக நோய்களுக்கான சிகிச்சைகள் அனைத்தும் துஆவிலும், அல்லாஹ்வின் பால் மீளுவதிலும் தங்கியுள்ளது என்பதை மேற்கூறப்பட்ட ஹதீஸில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
அத்தோடு (இவ்வாறு நடந்து கொள்வது) மூலிகை வைத்தியத்தைக் கொண்டு நிவாரணம் பெறுவதில் இருந்தும் மிகவும் பயனளிக்ககூடியதும் வெற்றியளிக்கக்கூடியதுமாக இருக்கின்றது.
மேலும் நிச்சயமாக அதனுடைய தாக்கம், உடம்பினுடைய செயற்பாடு ஆகியன உடல்சார் மருந்து வகைகளின் தாக்கத்தில் இருந்து (வேறுபட்டு) மகத்துவம் வாய்ந்ததாகக் காணப்படும்.
என்றாலும், நிச்சயமாக வெற்றியளிக்கக்கூடியதானது இரு விடயங்களைக் கொண்டே உண்டாகின்றது.
அவற்றில் ஒன்று: நோயுற்றவரின் புறத்தில் இருந்து. இதுவே அவருடைய நாட்டத்தின் உண்மைத் தன்மையாகும்.
மற்றது: சிகிச்சை செய்பவரின் புறத்தில் இருந்து. இதுவே அவருடைய முற்படுத்தலின் பலமும், தக்வா மற்றும் பொறுப்புச்சாட்டுதல் ஆகியவற்றைக் கொண்டு அவருடைய உள்ளத்தின் பலமும் ஆகும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
மேலும் குறித்த செய்தியில் மயக்கமுறுபவரின் சிறப்பு இடம்பெற்றுள்ளது.
இன்னும், நிச்சயமாக உலக சோதனைகள் விடயத்தில் பொறுமையாகச் செயற்படுவது சுவனத்தை அனந்தரமாக்கும்.
அத்துடன் நிச்சயமாக கடுமையைக் கொண்டு எடுத்துக் கொள்வது யார் தன்னில் சக்தியை அறிகிறாரோ, மேலும் கடுமையைப் பேணுவது எவரில் பலவீனத்தை ஏற்படுத்தாதோ அவருக்கு இச்சலுகையைக் கொண்டு எடுத்து நடப்பது மிகச் சிறந்ததாகும்.
மேலும் இச்செய்தி நோய்நிவாரணம் மேற்கொள்வதை விட்டுவிடுவதும் கூடும் என்பதற்கு ஓர் ஆதாரமாகத் திகழுகின்றது. (பத்ஹ்)
இன்னும் இச்செய்தியில் நோய்நிவாரணத்தை நாடி நல்ல மனிதனிடத்தில் துஆச் செய்யுமாறு வேண்டுவதற்கும் அனுமதியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ்வுடைய அழகிய திருநாமங்களைக் கொண்டு பரிகாரம் தேடல்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்." (அல்அஃராப்: 180)
இத்திருக்குர்ஆன் வசனத்தை அடியொட்டி பின்வருமாறு பிரார்த்திப்பார்.
اللهُمَّ إنِّي أَسْأَلُكَ بِأَنَّكَ أنْتَ اللهُ الذِيْ لا إلهَ إلا أنْتَ، الرَّحْمَنُ، الرَّحِيم، المَلِك، القُدُّوس، السَّلام، المُؤمِن، المُهَيْمِن، العَزِيْز، الجَبَّار، المُتَكبِّر، الخَالِق، البَارِئ، المُصَوِّر، الخَلاق، القَاهِر، القَهَّار، الوَهَّاب، الرَزَّاق، الفَتَّاح، العَلِيْم، السَّمِيْع، البَصِيْر، الحَكِيْم، اللَطِيْف، الخَبِيْر، الحَليْم، العَظِيْم، العَفُوّ، الغَفُوْر، الغَفَّار، الشَاكِر، الشَّكُوْر، الكَبِيْر، الحَفِيْظ، الرَّقِيْب، الشَّهِيْد، الوَاسِع، الوَدُوْد، الحَقّ، المُبِيْن، القَوِيّ، المَتِيْن، المَوْلَى، الوَلِيّ، الحَمِيْد، المَجِيْد، الحَيّ، القَيُّوم، الوَاحِد، الأحَد، الصَّمَد، العَلِيّ، الأعْلَى، المُتَعَال، الكَرِيْم، الأكْرَم، ذُو الجَلال والإكْرَام، الإله، القَادِر، القَدِيْر، المُقْتَدِر، الأوَّل، الآخِر، الظَّاهِر، البَّاطِن، القَرِيْب، البَرّ، التَّوَّاب، الرَؤُوْف، المَلِيْك، مَالِكُ المُلْك، الغَنِيّ، الهَادِي، المُجِيْب، المُقِيْت، المُحِيْط، النَّصِيْر، المُصَوِّر، الوَكِيْل، الحَسِيْب، الكَفِيْل، المُسْتَعَان، الوَارِث، الرَّبّ، الجَمِيل، الحَكَم، الرَّفِيْق، السُّبُّوح، السَّيِّد، الشَّافِي، الطَّيِّب، الطَّبِيْب، القَابِض، البَاسِط، الرَّازِق، المُقَدِّم، المُؤَخِّر، المُعْطِي، المَنَّان، المُسَعِّر، الوِتْر، الحَيِيّ، السِّتِّيْر، الدَّيَّان، عَالِم الغَيْب وَالشَّهَادَة، عَلّام الغُيُوْب، غَافِر الذَّنْب، بَدِيْع السَّمَوَات والأرْض، فَاطِر السَّمَوَات والأرْض، نُوْر السَّمَوات والأرْض
முக்கிய குறிப்புக்கள்
• அல்லாமா இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "மஜ்மூஉல் பதாவா" (1/66-69) என்ற பத்வாத் தொகுப்பில் பின்வருமாறு கூறுகின்றார்கள்: "அறிந்து கொள்! நிச்சயமாக மருந்தானது நிவாரணத்திற்கு ஒரு காரணமாகும். மேலும், அல்லாஹுத்தஆலாவே அதற்குக் காரணமாகத் திகழ்கின்றான். எனவே, அல்லாஹ் காரணமாக ஆக்கிய ஒன்றைத் தவிர வேறு எதுவும் நோய் நிவாரணத்திற்குக் காரணமாக அமையாது.
அல்லாஹ் நோய் நிவாரணத்திற்குக் காரணங்களாக ஆக்கியவை இரு வகைப்படும்:
1. மார்க்க ரீதியான காரணங்கள். சங்கைமிக்க அல்குர்ஆன் மற்றும் துஆக்கள் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
நபியவர்கள் சூரதுல் பாதிஹா விடயத்தில் "நிச்சயமாக அது நோய்நிவாரணி என்று உனக்கு அறிவித்தது எது?" என்று வினவிய செய்தியையும் நபியவர்கள் நோயாளிகளுக்கு துஆவைக் கொண்டு ஓதிப்பார்க்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என்ற வழிமுறையும் இதற்குச் சான்றுகளாக அமைகின்றன. எனவே, இதன் காரணமாக அல்லாஹ் யாருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாடுகிறானோ அவருக்கு இதனைக் கொண்டு நிவாரணம் அளிப்பான்.
2. உணர்வு ரீதியான காரணங்கள்: இதற்கு தேன் போன்ற மார்க்க வழியில் அறிமுகமான சில மருந்துத் தன்மைவாய்ந்த பொருட்களை அல்லது, அனுபவவழியில் மக்கள் மத்தியில் பரீட்சயம் பெற்ற அதிகளவான மருந்து வகைகளை உதாரணங்களாகக் குறிப்பிடலாம்."
* சில சமயம் நோயாளி நிவாரணம் அளிக்கப்படமாட்டார். காரணம், அவருக்கு என்று நியமிக்கப்பட்ட வாழும் காலம் நிறைவுற்றிருக்கும். அதன் காரணமாக குறித்த நோயைக் கொண்டு அவருடைய மரணம் அவருக்கு விதியாக்கப்பட்டிருக்கும்." (மஜ்மூஉ பதாவா அல்லாமா இப்னு பாஸ்: 8/72)
சூனியத்திற்கான பரிகாரங்கள்
அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "மஜ்மூஉல் பதாவா" (8/144) என்ற தனது பத்வாத் தொகுப்பில் பின்வருமாறு சூனியத்திற்கான பரிகாரங்களை வகைப்படுத்தியுள்ளார்கள்.
1. சூனியக்காரன் செய்த சூனியத்தைத் தேடிப்பார்க்க வேண்டும். அவ்வாறு தேடிப்பார்க்கையில் உதாரணமாக, ஓர் இடத்தில் முடியில் அல்லது சீப்பில் அல்லது ஏதாவது ஒன்றில் சூனியம் செய்து வைத்திருப்பதாக அறியப்பட்டால். அல்லது ஒருவருடைய இடத்தில் அவன் செய்து வைத்துள்ளான் என்று அறிந்தால் சூனியம் செய்யப்பட்ட அப்பொருள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டு அகற்றப்பட வேண்டும். இப்படிச் செய்வதின் மூலம் அதில் செய்யப்பட்ட சூனியம் செல்லுபடியற்றதாக ஆகிவிடும். சூனியக்காரன் நாடியது நடக்காமல் போய்விடும்.
2. சூனியம் செய்யப்பட்ட இடத்தை அறிவிக்குமாறு அல்லது மற்றொரு சூனியத்தைப் பயன்படுத்தாது வேறுவழிகளில் சூனியத்தை அகற்றுமாறு சூனியக்காரனைக் கட்டாயப்படுத்த வேண்டும். அவ்வாறு ஒரு சூனியக்காரன், தான் செய்த சூனியத்தை அகற்றக்கூடியவன் என்று அறிமுகமாகி இருந்தால் அவனை நோக்கி ஒன்றில் நீ செய்ததை அகற்றிவிடு! அல்லது உன்னுடைய கழுத்து துண்டிக்கப்பட்டுவிடும் என்று கூறவேண்டும். பிறகு அவன் அதனை அகற்றினால் ஆட்சியாளர் அவனைக் கொலை செய்துவிடுவார். ஏனெனில், நிச்சயமாக சூனியக்காரனைப் பொருத்தளவில் அவன் சரியான கருத்தின் அடிப்படையில் தவ்பாவைக் கொண்டு வேண்டுதலின்றிக் கொலை செய்யப்படுவான்.
3. ஓதிப்பார்த்தலைக் கொண்டு சிகிச்சை செய்தல்.
சூனியத்தை நீக்குவதில் இதற்கு மகத்தானதொரு தாக்கம் உள்ளது. அந்த அடிப்படையில் சூனியம் செய்யப்பட்டவர் மீது அல்லது, ஒரு பாத்திரத்தினுள் ஆயதுல் குர்ஷியையும் சூராக்களான அல்அஃராப், யூனுஸ், தாஹா ஆகியவற்றில் இடம்பெறக்கூடிய சூனியத்தோடு தொடர்புடைய ஆயத்களையும் அதனுடன் சேர்த்து சூராக்களான அல்காபிரூன், அல்இஹ்லாஸ், அல்பலக், அந்நாஸ் ஆகியவற்றை ஓதி, அவருக்கான நோய்நிவாரணம் மற்றும் ஆரோக்கியத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய முடியும். அதிலும் குறிப்பாக, நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட நபியவர்களைத் தொட்டும் உறுதி செய்யப்பட்ட துஆக்களை ஓதிக் கொள்ளலாம். மேலும், அவற்றை ஓதும்போது முன்மூன்று விடுத்தங்கள் என தொடர்ந்தேர்ச்சியாக ஓத வேண்டும். இன்னும், சூரதுல் இஹ்லாஸ், இரு பாதுகாவல் சூராக்கள் போன்றவற்றையும் மும்மூன்று விடுத்தங்கள் ஓதிக் கொள்ளமுடியும்.
மேலும், இவ்வகை சிகிச்சையில் நின்றும் உள்ளதுதான் மேற்கூறப்பட்ட துஆக்களை ஓதும் போது அவற்றை தண்ணீரில் ஓதுவதும் பின்பு அதனில் இருந்து சூனியம் செய்யப்பட்டவருக்குக் குடிக்கக் கொடுப்பதுமாகும். மற்றும், குடித்து எஞ்சிய நீரைக் கொண்டு ஒருவிடுத்தம் அல்லது அதற்கு அதிகமான விடுத்தங்கள் தேவைக்கேற்றாற் போல் குளித்துக் கொள்ளலாம். நிச்சயமாக அச்சூனியம் அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு நீங்கிவிடும்.
4. பச்சை நிறமான இலந்தை இலைகள் ஏழை எடுத்து, நன்றாக இடித்து, அதனை நீரில் இட்டு முன்பு கூறப்பட்ட ஆயத்துக்கள், சூராக்கள் மற்றும் துஆக்கள் ஆகியவற்றை அதனில் ஓதி சூனியம் செய்யப்பட்டவருக்குக் குடிக்கக் கொடுப்பதோடு குளிக்க வைக்கவும் செய்தால் நன்கு பிரயோசனம் அளிக்கும். அதேபோன்று, தன் மனைவியை விட்டும் தடுக்கப்பட்ட நபருக்குச் செய்யும் சிகிச்சையில் இச்செயன்முறை மேற்கொள்ளப்பட்டால் நன்கு பயனளிக்கும்.
மேலும், சூனியம் செய்யப்பட்டவர்களுக்கும் தன்னுடைய மனைவியைவிட்டும் தடுக்கப்பட்டு அவளோடு உறவு கொள்ளாமல் இருப்பவருக்கும் சிகிச்சை அளிக்கும் சந்தர்ப்பத்தில் பச்சை நிற இலந்தை இலைகள் மற்றும் நீர் ஆகியவற்றில் ஓதப்படுபவையாவன:
1. சூரதுல் பாதிஹா
2. ஆயதுல் குர்ஷி
3. சூரதுல் அஃராபின் 106 ஆவது வசனம் முதல் 122 வரையான வசனங்கள்
4. சூரா யூனுஸின் 79 ஆவது வசனம் முதல் 82 வரையான வசனங்கள்
5. சூரா தாஹாவின் 65 ஆவது வசனம் முதல் 69 வரையான வசனங்கள்
6. சூரதுல் காபிரூன்
7. சூரதுல் இஹ்லாஸ், சூரதுல் பலக், சூரதுந் நாஸ் (மூன்று விடுத்தங்கள்)
8. ஏனைய நாம் முன்பு குறிப்பிட்ட துஆக்களை மும்மூன்று விடுத்தங்கள்
நேரடியாக சூனியம் செய்யப்பட்டவரின் மீது மேற்கூறப்பட்டதை ஓதி அவரின் தலையில் அல்லது நெஞ்சின் மீது ஊதுவது ஏற்கெனவே கூறப்பட்ட பிரகாரம் அல்லாஹ்வின் அனுமதியுடன் அவருக்கு நிவாரணம் கிடைக்கக் காரணங்களில் ஒன்றாக ஆகிவிடும்.
அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாத மூலிகைகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள் போன்ற வேறு வகையான மருந்துகள் பெறப்படுமாயின் அவை அல்லாஹ் ஹராமாக்கியவற்றைவிட்டும் நீங்கி ஈடேற்றம் பெற்றிருந்தால் அவற்றை உபயோகிப்பது தவறன்று." (நூருன் அலத் தர்ப் பத்வாத் தொகுப்பு)
அப்படியான பிரயோசனம் மிக்க மருந்து வகைகளில் உள்ளடங்குபவையாக:
1. கருஞ்சீரகம்: நபியவர்கள் கூறினார்கள்: "மரணத்தைத் தவிர எல்லா நோய்களுக்கும் நிவாரணம் கருஞ்சீரகத்தில் உள்ளது." மற்றோர் அறிவிப்பில்: "மரணத்தைத் தவிர எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதற்கு கருஞ்சீரகத்தில் மருந்து இல்லாமலில்லை." (புகாரி: 5688, முஸ்லிம்: 2210 இச்செய்தி அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.)
2. தேன்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு." (அந்நஹ்ல்: 68)
3. ஹிஜாமா - இரத்தம் குத்தி எடுத்தல்
4. தீயால் சுடுதல்: நபியவர்கள் கூறினார்கள்: "மூன்றில் நிவாரணம் உள்ளது: தேன் குடித்தல், இரத்தம் குத்தி எடுத்தல், தீயால் சுடுதல்" (புகாரி: 5680ல் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது."
5. ஸம்ஸம் நீர்: நபியவர்கள் கூறினார்கள்: "ஸம்ஸம் நீர் எதற்காகக் குடிக்கப்படுமோ அதற்காக அது இருக்கும்." (இச்செய்தி "அஹ்மத்" எனும் கிரந்தத்தில் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. மேலும், "அஸ்ஸஹீஹா" (883) எனும் தொகுப்பிலும் "அல்இர்வா" (1123) எனும் நூலிலும் இச்செய்தி பதிவாகியுள்ளது.)
இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "ஸாதுல் மஆத்" (4/356) எனும் நூலில் பின்வருமாறு கூறுகின்றார்கள்: "ஆச்சரியமான விடயங்களை ஸம்ஸம் நீரைக் கொண்டு நோய்நிவாரணம் தேடுவதில் இருந்து நானும் நானல்லாதவர்களும் அனுபவ ரீதியாக அடைந்து கொண்டோம். பல நோய்களில் இருந்து நான் நிவாரணம் பெற்றேன். அல்லாஹ்வுடைய அனுமதியைக் கொண்டு நான் நோயில் இருந்து விடுபட்டேன்."
6. ஸைதூன் எண்ணை: நபிவர்கள் கூறினார்கள்: "ஸைதூன் எண்ணையைப் பருகுங்கள்! அதனைப் பூசிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அது பரகத் பொருந்திய ஒரு மரத்தில் நின்றும் உள்ளதாகும்." (இச்செய்தி ஸஹாபாக்களில் ஒரு கூட்டத்தைக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. "அஸ்ஸஹீஹா" (379) எனும் கிரந்தத்திலும் இதனைக் காணலாம்.)
அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது "மஜ்மூஉல் பதாவா" (9/409) எனும் தொகுப்பில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: "பைத்தியக்காரன், சூனியம் செய்யப்பட்டவர், நோயாளி ஆகியோருக்கான சிகிச்சையின் போது ஸைத்தூன் எண்ணை மற்றும் நீரில் ஓதுவதி எடுப்பதில் குற்றம் கிடையாது. என்றாலும், நோயாளியின் மீது ஊதுவது கொண்டு ஓதிப்பார்ப்பது மிக ஏற்றமானதும் சிறந்ததும் பூர்த்திமிக்கதுமாகும்." மேலும் (1/52) கூறும்போது: "அதேபோன்று தண்ணீரில் ஓதிப்பார்ப்பதும் குற்றமன்று. அதாவது, தண்ணீரில் ஓதி அதனை நோயாளிக்குக் குடிக்கக் கொடுப்பது அல்லது அவர் மீது ஊற்றிவிடுவதாகும்."
7. மதீனாவைச் சேர்ந்த ஏழு ஈச்சம் பழங்களை காலை உணவாக எடுத்தல்: நபியவர்கள் கூறினார்கள்: "யார் அஜ்வா இனத்தைச் சேர்ந்த ஏழு ஈச்சம் பழங்களை ஒவ்வொரு நாளும் காலையில் உணவாக எடுக்கிறாரோ அன்றைய தினத்தில் எவ்வித விஷமோ சூனியமோ அவரைத் தாக்காது." (இச்செய்தி புகாரி: 5445, முஸ்லிம்: 2047 ஆகிய கிரந்தங்களில் ஸஃத் இப்னு அபீவக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.)
பிரிதோர் அறிவிப்பில்: "யார் மதீனாவின் எல்லைப் பிரதேசத்திற்குற்பட்ட பகுதியில் இருந்து ஏழு ஈச்சம் பழங்களை காலை உணவாக எடுத்துக் கொள்கிறாரோ மாலைப் பொழுதை அடையும் வரை அவருக்கு எந்தவித விஷமும் தீங்களிக்காது." (முஸ்லிம்) மேலும் நபியவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக அதிகாலையில் உட்கொள்ளும் உயர்ரக அஜ்வா ஈச்சம் பழத்தில் நோய் நிவாரணி அல்லது நச்சுத்தன்மையை அகற்றும் சக்தி உள்ளது." (இச்செய்தி ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் முஸ்லிம்: 2048 எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.)
இச்செய்திகள் தொடர்பாக இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்: "இந்த ஹதீஸ்களில் மதீனத்து ஈச்சம்பழத்தினதும் அதனில் விளையும் அஜ்வா இனத்து ஈச்சம்பழத்தினதும் சிறப்பு கூறப்பட்டுள்ளது. மேலும் அவ்வீச்சம் பழங்களில் ஏழை காலை உணவாக எடுத்து கொள்வதின் சிறப்பும் எனைய ஈச்சம் பழங்களை விடுத்து மதீனத்து அஜ்வா ஈச்சம் பழங்களை மாத்திரம் எடுத்துக் கொள்வதின் அவசியம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. மார்க்கம் பல விடயங்களில் ஏழு என்ற எண்ணை இனங்காட்டி இருப்பதின் எதார்த்தத்தை நாங்கள் அறியமாட்டோம். எனவே, அதனை ஈமான் கொள்வதும் அதனுடைய சிறப்பு, அதனில் உள்ள எதார்த்தம் ஆகியவற்றை நம்பிக்கை கொள்வதும் வாஜிப் ஆகும். இதுவிடயம் தொழுகைகளின் எண்ணிக்கைகளைப் போன்றதும் ஸகாத் விதியாகக்கூடிய அளவுகளைப் போன்றதுமான ஒன்றாகும். எனவே, இதுவே இந்த ஹதீஸ் விடயத்தில் சரியான நிலைப்பாடாகும்."
கவலை, துயரம், பெருந்துயரம் ஆகியவற்றிக்கான பரிகாரம்
1. பெரும் துயரம் ஏற்படும் போது நபியவர்கள் பின்வருமாறு துஆச் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்:
لا إله إلا الله العَظِيمُ الحَلِيمُ، لا إله إلا الله رَبُّ العَرْشِ العَظِيْمِ، لا إله إلا الله رَبُّ السَمَواتِ وربُّ الأرْضِ، وَرب العَرْشِ الكَرِيْمِ.
பொருள்: சகிப்புத் தன்மையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. மகத்துவம் மிக்க அர்ஷின் இரட்சகனான அல்லாஹ்வைத்தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகனும் கண்ணியத்திற்குரிய அர்ஷின் இரட்சகனுமான அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை.
இச்செய்தி இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் புகாரி (6346), முஸ்லிம் (2730) ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.
2. அஸ்மா பின்து உமைஸ் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் அவர்கள் என்னை நோக்கிப் பின்வருமாறு கூறினார்கள்: பெரும் துயரத்தின் போது நீ கூறுவதற்கென்று சில வார்த்தைகளை நான் உனக்குக் கற்றுத்தரட்டுமா? என வினவிவிட்டு இந்த துஆவைக் கற்றுத் தந்தார்கள்.
اللهُ اللهُ، رَبِّيْ، لا أُشْرِكُ بِهِ شَيْئًا
இச்செய்தி அபூதாவுத் (1525) எனும் கிரந்தத்தில் அஸ்மா பின்து உமைஸ் ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும், இப்னு ஹிப்பான் (764) எனும் கிரந்தத்தில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. அத்தோடு தபராணி (12/12788), அஸ்ஸஹீஹா (2755) ஆகிய கிரந்தங்களிலும், ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டு இமாம் நஸாயி அவர்களுடைய அமலுல் யவ்மி வல்லைலா (657) எனும் நூலிலும், அஸ்ஸஹீஹா (2070) எனும் தொகுப்பிலும் பதிவாகியுள்ளது.
3. நபியவர்கள் கூறினார்கள்: "துன்நூன் என்று அழைக்கப்படும் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீனின் வயிற்றில் இருக்கும் போது செய்ய பிரார்த்தனையான:
لا إلهَ إلا أنْتَ، سُبْحَانَكَ، إنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ
பொருள்: உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் (வேறு ஒருவனும்) இல்லை, நீ மிகப் பரிசுத்தமானவன், நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டேன்.
என்ற வார்த்தையை எந்த ஒரு விடயத்தில் ஒரு முஸ்லிம் கூறுகிறானோ அவனுக்கு அல்லாஹ் ஒருபோதும் பதிலளிக்காமல் இருப்பதில்லை.
இச்செய்தி ஸஃத் இப்னு அபீவக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அஹ்மத் (1/170), பஸ்ஸார் (3/363), திர்மிதி (3505) ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. மேலும் அஸ்ஸஹீஹுல் முஸ்னதில் (379) "ஸஹீஹ் லிகைரிஹீ" என்ற தரத்திலும் ஸஹீஹுத் திர்மிதி (2785) இலும் பதிவாகியுள்ளது.
4. நபியவர்கள் கூறினார்கள்: "துக்கம், துயரம் ஆகியன ஓர் அடியானுக்கு உண்டாகும் போது அவன் பின்வரும் வார்த்தைகளைக் கூறுவான் என்றால்...
اللهُمَّ إنِّيْ عَبْدُكَ، وابْنُ عَبْدِكَ، وَابن أمَتِكَ، نَاصِيَتِيْ بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدَلٌ فِيَّ قَضَاؤُكَ، أسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ: سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أوْ أنْزَلْتَهُ فِيْ كِتَابِكَ، أوْ عَلَّمْتَهُ أحَدًا مِنْ خَلْقِكَ، أو اسْتَأْثَرْتَ بِهِ فِيْ عِلْمِ الغَيْبِ عِنْدَكَ، أنْ تَجْعَلَ القُرْآنَ رَبِيْعَ قَلْبِيْ، وَنُوْرَ صَدْرِيْ، وَجَلَاءَ حُزْنِيْ، وَذَهَابَ هَمِّيْ.
அல்லாஹ் அவனுடைய கவலையைப் போக்கி அக்கவலையின் இடத்திற்கு ஒரு சந்தோசத்தை ஏற்படுத்துவான்.
அப்போது தோழர்கள்: அல்லாஹ்வின் தூதரே! இவ்வார்த்தைகளை நாங்கள் கற்றுக் கொள்வது அவசியமல்லாவா? எனக் கேட்க, உண்மைதான் எவர்களெல்லாம் இவற்றைச் செவியேற்கிறார்களோ அவர்கள் மீது இவற்றைக் கற்றுக் கொள்வது அவசியமாகும்” என்றார்கள்.
இச்செய்தி இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அஹ்மத் (4091) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. மேலும் அஸ்ஸஹீஹா (199) இலும் ஸஹீஹ் எனும் தரத்தில் இதனைக் காணலாம்.
பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னுடைய அடியானும் உன்னுடைய அடியானின் மகனும் உன்னுடைய அடிமைப்பெண்ணின் மகனும் ஆவேன். என்னுடைய முன்னெற்றி உரோமம் உன்னுடைய கரத்தில் உள்ளது. என்விடயத்தில் உன்னுடைய சட்டம் கடந்து செல்லக்கூடியது. என்விடயத்தில் உன்னுடை தீர்ப்பு நீதமானது. உனக்கிருக்கின்ற அனைத்துப் பெயர்களைக் கொண்டு உன்னிடத்தில் கேட்கின்றேன். அவை உனக்கு நீயே வைத்துக் கொண்ட பெயர்களாகவோ அல்லது உன்னுடைய வேதத்தில் நீ இறக்கி வைத்த பெயர்களாகவோ அல்லது உன்னுடைய படைப்பில் ஒருவருக்குக் கற்றுக் கொடுத்த பெயர்களாகவோ அல்லது உன்னிடத்தில் மறைவான அறிவாக நீ மறைத்து வைத்த பெயர்களாகவோ இருக்கலாம். நீ அல்குர்ஆனை என்னுடைய உள்ளத்திற்கு வசந்தமாகவும் என்னுடை நெஞ்சிக்கு ஒளியாகவும் என்னுடைய கவலையை அகற்றுவதாகவும் என்னுடை துயரத்தைப் போக்குவதாகவும் ஆக்குவாயாக!
5. நபியவர்கள் பின்வரக்கூடிய துஆவையும் துக்கம் துயரங்களின் போது ஓதியுள்ளார்கள்.
اللهُمَّ إنِّيْ أعُوْذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَالعَجْزِ والكَسَلِ، وَالبُخْلِ وَالجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ
இச்செய்தி அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி (6369), முஸ்லிம் (2706) ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.
பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நான் துக்கம் துயரத்திலிருந்தும், இயலாமை சோம்பேறித்தனத்திலிருந்தும், உலோபித்தனம் கோலைத்தனத்திலிருந்தும், கடன் பழுவில் இருந்தும், மனிதர்களின் மிகைப்பிலிருந்தும் உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்.
அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "உளநோய்களில் மருந்து மாத்திரைகளைக் கொண்டு சிகிச்சை செய்யப்பட்டு வைத்தியர்கள் பயன் பெறாத அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன. என்றாலும், ஓதிப்பார்த்தலைக் கொண்டு அவற்றினுடைய சிகிச்சையானது நிவாரணம் தரக்கூடியதாகவும் பிரயோசனம் அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். புத்தி மழுங்குதலுடன் தொடர்புபட்ட நோய்களுக்கும் அவ்வாறே செய்யப்பட வேண்டும். அதில் மார்க்க ரீதியான மருந்துகள் பயனளிக்கக்கூடியனவாக உள்ளன. சில சமயம் அவ்வாறான நோய்களில் மருந்து மாத்திரைகள் பிரயோசனம் அளிக்காத சந்தர்ப்பங்களும் உள்ளன." (இர்ஷாதாதுன் லித் தபீபில் முஸ்லிம் - பக்கம்: 4)
மனதில் ஊசலாட்டம் மற்றும் சந்தேகம் உண்டாவதைத் தடுப்பதற்கான பரிகாரங்கள்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "மேலும், (நபியே) ஷைத்தானிலிருந்து ஏதேனுமொரு ஊசலாட்டம் உம்மைத்தொட்டுவிடுமாயின் தாமதமின்றி அல்லஹ்விடத்தில் நீர் பாதுகாவல் தேடிக்கொள்வீராக! நிச்சயமாக அவனே, (யாவையும்) செவியேற்பவன், நன்கறிபவன்." (புஸ்ஸிலத்: 36)
இவ்வசனம் குறித்து இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும்போது: "சொல்லப்பட்டதில் மிக அழகானது, அல்லாஹ் எதனைக் கொண்டு எங்களை நெறிப்படுத்தினானோ அதுவும், அவன் தனது வார்த்தையைக் கொண்டு எங்களை ஏவியதுமாகும்” என்கிறார்கள்.
நபியவர்கள் கூறினார்கள்: “ஷைத்தான் உங்களில் ஒருவரிடத்தில் சமூகம்தந்து, இவ்வாறு இவ்வாறெல்லாம் படைத்தவன் யார்? என்று கேட்டுவிட்டு இறுதியில் உன்னுடைய இரட்சகனைப் படைத்தவன் யார்? என்று கேட்பான். எனவே, அந்த நிலையை அவர் அடைந்தால் அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாவல் தேடிக்கொள்ளட்டும். மேலும், அத்தோடு அதனை நிறைவுக்குக் கொண்டுவரட்டும்."
இச்செய்தி அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி (3276), முஸ்லிம் (134) ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.
பிறிதோர் அறிவிப்பில்: அவர்...
آمَنْتُ بِاللهِ، وَرُسُلِهِ
என்று கூறட்டும் என்று இடம்பெற்றுள்ளது. (முஸ்லிம்)
பொருள்: நான் அல்லாஹ்வைக் கொண்டும் அவனுடைய தூதர்களைக் கொண்டும் விசுவாசம் கொண்டுவிட்டேன்.
மற்றோர் அறிவிப்பில்: நீங்கள்...
اللهُ أحَد، اللهُ الصَّمَد، لمْ يَلِدْ وَلَمْ يُوْلَد، وَلَمْ يَكُنْ لَهُ كُفوًا أحَد
என்று கூறுங்கள். பின்பு அவர் தனது இடப்பக்கம் மூன்று விடுத்தங்கள் துப்பட்டும். மேலும், ஷைத்தானில் இருந்தும் பாதுகாவல் தேடிக்கொள்ளட்டும்.
இச்செய்தி அபூதாவுத் (4722) எனும் கிரந்தத்தில் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. மேலும் முஸ்லிம் (135) எனும் கிரந்தத்தையும் பார்க்க.
பொருள்: அல்லாஹ் ஒருவன், அவன் எவ்விதத் தேவையும் அற்றவன், அவன் பெறவும் இல்லை பெறப்படவும் இல்லை. அவருக்கு நிகராக எதுவும் இல்லை.
அஷ்ஷெய்க் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அஸ்ஸஹீஹா (118) எனும் தொகுப்பில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: "அல்லாஹ்வைப் படைத்தவன் யார்? என்ற வார்த்தையைக் கொண்டு ஷைத்தான் யாரிடத்தில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துகின்றானோ அவர் ஹதீஸ்களில் இடம்பெற்றிருக்கக்கூடியவற்றைக் கொண்டு அவனுக்குப் பதிலளித்து அவனுடன் தர்க்கம் புரிவதை விட்டும் விலகி நடப்பது வாஜிபாகும் என்பதை இந்த ஸஹீஹான ஹதீஸ்கள் அறிவிக்கின்றன.
மேலும், அதன் சுருக்கமாவது:
آمنت بالله ورسله، الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد
என்று கூறிவிட்டு தனது இடப்பக்கமாக மூன்று விடுத்தங்கள் உமிழ வேண்டும். மேலும் ஷைத்தானில் இருந்தும் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடவேண்டும். பின்பு ஊசலாட்டத்துடன் இலுபட்டுச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்படும் விதத்தில் நிச்சயமாக யார் அதனைச் செய்கிறாரோ மற்றும் அதில் மனத்தூய்மையாக நடந்து கொள்கிறாரோ நிச்சயமாக அவரைவிட்டும் அவ்ஊசலாட்டம் அகன்று செல்வது அவசியமாகிவிடுகிறது. ‘நிச்சயமாக அது அவனைவிட்டும் சென்றுவிடும்’ என்ற நபியவர்களின் வார்த்தைக்கு இணங்க ஷைத்தான் துகலாகிவிடுவான்."
நபியவர்களிடத்தில் உஸ்மான் இப்னு அபீல்ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சமூகம் வந்து: "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக ஷைத்தான் எனக்கும் எனது தொழுகை மற்றும் குர்ஆன் ஓதுதல் ஆகியவற்றிக்கும் மத்தியில் குறுக்;கிட்டு அவற்றில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றான்" என்றார்கள். அதற்கு நபியவர்கள்: "அவன் தான் ஹன்ஸப் என்று அழைக்கப்படும் ஷைத்தான் ஆவான். எனவே, நீ அவனுடைய குறுக்கீட்டை உணர்ந்தால் அவனில் இருந்தும் அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாவல் தேடிக் கொள்! மேலும், உன்னுடைய இடப்புறத்தில் மூன்று விடுத்தங்கள் உமிழ்ந்து கொள்!" என்று கட்டளையிட்டார்கள். குறித்த தோழுர் கூறுகிறார்: "நான் அவ்வாறு செய்தேன். அல்லாஹ் என்னை விட்டும் அவனைத் தூரமாக்கினான்." (முஸ்லிம்: 2203)
உபதேசங்களும் வழிகாட்டல்களும்.
1. தவ்ஹீதை நிலைநாட்டல், குர்ஆன் சுன்னாவைப் பற்றிப்பிடித்தல், தக்வா, மீளுதல், அல்லாஹ்வின் மார்க்கத்தில் நிலையாக நிற்றல் ஆகியவற்றைப் பேணிக்கொள்ளல், அவன் மீது பொறுப்புச் சாட்டுதலின் உண்மைநிலை, அவனிடத்தில் மீளுதலின் மகத்துவம் ஆகியவற்றைக் கடைபிடித்தல், ஜமாஅத்துடன் தொழுகையைப் பேணிவருதல், ஸதகாக்களைக் கொடுத்தல், நல்ல காரியங்களைச் செய்தல், உருவப்படங்கள், உருவச் சிலைகள், பாடல்கள், ஊதுகுழல்கள் மற்றும் ஏனைய மார்க்கம் வெறுக்கும் அனைத்தை விட்டும் தனது வீட்டைச் சுத்தப்படுத்தல் போன்றவிடயங்களில் ஒவ்வொரு முஸ்லிமும் மிகக் கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியமாகும்.
இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது "மஜ்மூஉல் பதாவா" (9/429, 21/176) எனும் தொகுப்பில் பின்வருமாறு கூறுகின்றார்கள்: "இசையைக் கொண்டு சிகிச்சை செய்வதைப் பொருத்தளவில் அதற்கு (மார்க்கத்தில்) எவ்வித அடிப்படையும் கிடையாது. மாறாக, அது மடையர்களின் செயலில் நின்றும் உள்ளதாகும். இசை ஒரு சிகிச்சையன்று, என்றாலும் அது ஒரு நோயாகும். மேலும், அது கேலிக்கைக்குரிய கருவிகளைச் சார்ந்தது. எனவே, அவைகள் அனைத்தும் உள்ளங்களுக்கு நோயாகவும் நற்பண்புகள் அற்றுப்போவதற்குக் காரணமாகவும் உள்ளன. மாறாக அல்குர்ஆன், பயனளிக்கும் உரைகள் மற்றும் ஹதீஸ்களைச் செவிமடுப்பது பிரயோசனம் அளிக்கும் சிகிச்சையாகவும் உள்ளங்களுக்கு ஆறுதலைத் தரக்கூடியதாகவும் இருக்கும். மாற்றமாக, இசை மற்றும் அதன் கருவிகளைக் கொண்டு சிகிச்சை செய்வது அவர்களை பிழையான ஒன்றின் மீது இயல்பாக்கிவிடும். மேலும், அவர்களின் நோயிக்கு மேல் இன்னும் நோயை அதிகரித்துவிடும். அத்தோடு குர்ஆன், சுன்னா, பிரயோசனம் மிக்க உபதேசங்கள் ஆகியவற்றைச் செவிமடுப்பதைக் குறைத்துவிடும். அல்லாஹ்வைக் கொண்டேயன்றி எதற்கும் எவ்வித சக்தியும் கிடையாது."
2. சூனியக்காரர்கள், வித்தை காட்டுபவர்கள், குறிபார்ப்பவர்கள் போன்றோரிடத்தில் போவதில் இருந்தும் கடும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். மேலும், அவர்களிடத்தில் வினவுவது அல்லது, அவர்கள் கூறக்கூடியவற்றைக் கொண்டு அவர்களை உண்மைப்படுத்துவது போன்ற செயல்கள் விடயத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நபியவர்கள் கூறினார்கள்: "யார் குறிபார்ப்பவரிடத்தில் சென்று (ஒரு விடயத்தைப் பற்றி) அவனிடத்தில் கேட்கிறாரோ அவருடைய நாட்பது இரவுகளின் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது." (இச்செய்தி நபியவர்களின் சில மனைவிகளைத் தொட்டும் முஸ்லிம்: 2230 எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.)
மேலும், நபியவர்கள் கூறினார்கள்: "யார் குறிபார்ப்பவன் அல்லது சாஸ்திரகாரனிடம் சென்று அவன் சொல்பவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கி அருளப்பட்டதை நிராகரித்துவிட்டார்." (இச்செய்தி அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அஹ்மத்: 2/408,429,476 எனும் கிரந்தத்தில் துணை அறிவிப்புக்களைக் கொண்டு ஹஸன் எனும் தரத்தில் பதிவாகியுள்ளது.
3. அத்கார்கள் மற்றும் நபியவர்கள் காட்டித்தந்த துஆக்களைக் கொண்டு தன்னை பாதுகாத்துக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.
இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "இந்த அத்கார்களையும் பாதுகாவல் துஆக்களையும் உண்மையாகவும் ஈமானுடனும் அல்லாஹ்வைக் கொண்டு உறுதியுடனும் அவன் மீது முழுமையான நம்பிக்கையுடனும் அவை அறிவிக்கக்கூடியவற்றின் பால் உள்ளம் விரிந்து கொடுக்கப்பட்ட நிலையிலும் ஓதிவருவது சூனியம் இன்னும் அதுவல்லாதவற்றின் தீங்குகளில் இருந்து பாதுகாக்கும் மிகப்பெரிய காரணங்களாகத் திகழும்.
மேலும், இந்த துஆக்களை அல்லாஹ்விடத்தில் தாழ்மைப்பட்டவர்களாக அதிகதிமாக ஓதுவதும் தீங்கை அகற்றுமாறும் கஷ்டத்தை நீக்குமாறும் அவனிடத்தில் கேட்பதும் சூனியம் நிகழ்ந்த பின் அதனை அகற்றுவதற்கு மிகப் பெரிய ஆயுதங்களாக விளங்குகின்றன." (மஜ்மூஉல் பதாவா: 3/278, 8/165, 26/167)
அதன் வரிசையில் பின்வரும் காலை மாலை துஆக்களைக் குறிப்பிடலாம்.
1. اللهُمَّ بِكَ أصْبَحْنَا، وَبِكَ أمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوْتُ، وَإِلَيْكَ النُّشُوْر
பொருள்: அல்லாஹ்வே! உன்னைக் கொண்டே நாங்கள் காலைப்பொழுதை அடைந்தோம். மேலும், உன்னைக் கொண்டே மாலைப் பொழுதை அடைந்தோம். இன்னும் உன்னைக் கொண்டே நாங்கள் உயிர்வாழ்கிறோம். மற்றும் உன்னைக் கொண்டே நாங்கள் மரணிக்க இருக்கிறோம். மேலும், உன்னிடத்தில்தான் மீளெழுப்பப்படுதல் இருக்கிறது.
மாலைப் பொழுதை அடைந்தால்,
اللهُمَّ بِكَ أمْسَيْنَا، وَبِكَ أصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوْتُ، وَإِلَيْكَ المَصِيْر
பொருள்: அல்லாஹ்வே! உன்னைக் கொண்டே நாங்கள் மாலைப் பொழுதை அடைந்தோம். மேலும், உன்னைக் கொண்டே நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். இன்னும் உன்னைக் கொண்டே நாங்கள் உயிர்வாழ்கிறோம். மற்றும் உன்னைக் கொண்டே நாங்கள் மரணிக்க இருக்கிறோம். மேலும், உன்னிடத்தில் தான் மீளப்படுதல் இருக்கிறது.
இந்த துஆக்கள் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அஹ்மத் (2/408, 429, 476) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. மேலும் துணைச்சான்று அறிவிப்புக்களை வைத்து இச்செய்தி ஹஸன் எனும் தரத்தைப் பெறுகின்றது.
2. أمْسَيْنَا وَأمْسَى المُلْكُ لله، وَالحَمْدُ لله، لا إلهَ إلا الله وَحْدَهُ لا شَرِيْكَ لهُ، لهُ المُلْكُ، وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، رَبِّ أسْأَلُكَ خَيْرَ مَا فِيْ هَذِهِ اللَيْلَةِ، وَخَيْرَ مَا بَعْدَهَا، وَأعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيْ هذِه الليلةِ، وَشَرِّ مَا بَعْدَهَا، رَبِّ أعُوْذُ بِكَ مِنْ الكَسَلِ، (وَالهَرَمِ)، وَسُوْءِ الِكَبِر، (وَفِتْنَةِ الدُّنْيَا)، رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ فِي النَّارِ، وَعَذَابِ فِي القَبْرِ.
பொருள்: நாங்கள் மாலைப் பொழுதை அடைந்தோம். மேலும், ஆட்சி அதிகாரம் அனைத்தும் மாலைப்பொழுதில் அல்லாஹ்வுக்குரியதாக ஆகிவிட்டது. இன்னும், புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறுயாரும் இல்லை. அவன் தனித்தவன் இணைதுணையற்றவன். அவனுக்கு ஆட்சி அதிகாரமும் புகழ் அனைத்தும் உரியன. இன்னும், அவனே அனைத்து வஸ்துக்கள் மீதும் ஆற்றல் படைத்தவன். என்னுடைய இரட்சகனே! இந்த இரவில் இருக்கும் நலவை உன்னிடத்தில் கேட்கிறேன். இதற்கு பின் இருக்கும் நலவையும் கேட்கிறேன். மேலும், இந்த இரவில் இருக்கும் தீங்கிலிருந்து உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன். இதற்குப் பின் இருக்கும் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன். என்னுடைய இரட்சகனே! சோம்பேறித்தனம், முதுமை, பெருமையின் தீங்கு, உலகத்தின் பித்னா ஆகியவற்றிலிருந்தும் உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன். அத்தோடு நரகத்தில் உள்ள வேதனை மற்றும் கப்ரில் உள்ள வேதனை ஆகியவற்றிலிருந்தும் உன்னைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்.
மேலும், காலைப் பொழுதை அடைந்தால் இவ்வாறு கூறுவார்.
أصْبَحْنَا وَأَصْبَحَ المُلْكُ لله ......
இந்த துஆ இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் முஸ்லிம் (2723) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. மேல்மிச்சமாக அறிவிக்கப்பட்டவையும் அவருக்குரிய அறிவிப்பாகும்
.
3. اللهُمَّ أنْتَ رَبَّيْ لا إلهَ إلا أنْتَ، خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عليَّ، وَأبُوْءُ لَكَ بِذَنْبِيْ، فَاغْفِرْلِيْ، فإنَّهُ لا يَغْفِرُ الذُّنُوْبَ إلا أنْتَ
என்ற துஆவையும் ஓதிக் கொள்ளலாம். இந்த துஆ ஷத்தாத் இப்னு அவ்ஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி (6306) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. இந்த துஆ குறித்து நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: "யார் இதனைப் பகல் பொழுதில் நம்பிக்கையுடன் ஓதுதி, மாலை வருவதற்குள் அன்றைய தினமே மரணிக்கின்றாரோ அவர் சுவர்க்க வாசிகளில் ஒருவராக ஆகிவிடுவார். மேலும், யார் இதன் மீது நம்பிக்கை கொண்டவராக இராப்பொழுதில் ஓதி காலை வருவதற்கு முன் மரணத்தைத் தழுவுகிறாரோ அவரும் சுவர்க்க வாசிகளில் ஒருவராக ஆகிவிடுவார்."
பொருள்: அல்லாஹ்வே! நீ என்னுடைய இரட்சகன்! உன்னைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவர் வேறு யாரும் இல்லை. நீ என்னைப் படைத்தாய். மேலும், நான் உன்னுடைய அடியாராக உள்ளேன். இன்னும், நான் உன்னுடைய உடன்படிக்கையின் மீதும் வாக்கின் மீதும் என்னுடைய சக்திக்குற்பட்டவிதத்தில் இருக்கின்றேன். நான் செய்தவற்றின் தீங்கிலிருந்து உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றேன். என் மீதுள்ள உன்னுடைய அருட்கொடையைக் கொண்டு உனக்காக நான் ஏற்றுக் கொள்கின்றேன். மேலும், என்னுடைய பாவத்தைக் கொண்டு உனக்காக நான் ஏற்றுக் கொள்கின்றேன். எனவே, என்னை நீ மன்னிப்பாயாக! நிச்சயமாக உன்னைத் தவிர பாவங்களை மன்னிக்கக்கூடியவன் வேறுயாரும் இல்லை.
4. اللهُمَّ فَاطِرَ السَّمَواتِ والأرْضِ، عَالِمَ الغَيْبِ وَالشَّهَادَةِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيْكَهُ، أَشْهَدُ أنْ لا إلهَ إلا أنْتَ، أعُوْذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِيْ، وَشَرِّ الشّيْطَانِ وَشِرْكِهِ
இந்த துஆ அபூதாவுத் (5067), திர்மிதி (3392) ஆகிய கிரந்தங்களில் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. மேலும், அஸ்ஸஹீஹுல் முஸ்னத் (1333) எனும் தொகுப்பில் ஸஹீஹ் எனும் தரத்திலும் ஸஹீஹுத் திர்மிதி (2701) இலும் பதிவாகியுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட துஆவில் இடம்பெறும் شِرْكِهِ என்ற வார்த்தைக்கு அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் அடிப்படையில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துவதும் அதன் பால் அழைப்பு விடுப்பதும் நாடப்படுகிறது. இதனை இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "அல்அத்கார்" எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள். மேலும், இவ்வார்த்தை இரு பத்ஹுகளைக் கொண்டு شَرَكِهِ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்களை குழப்பத்திற்குள்ளாக்க ஷைத்தான் தயார் செய்து வைத்திருக்கும் பொறி மற்றும் சதிவலை ஆகியன நாடப்படுகின்றன. (அவ்னுல் மஃபூத்)
பொருள்: அல்லாஹ்வே! வானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றை படைத்தவனே! மறைவான மற்றும் வெளிப்படையானவற்றை அறிந்தவனே! நீயே! அனைத்து வஸ்துக்களினதும் இரட்சகனும் சர்வல்லமையுடையவனுமாக இருக்கின்றாய்! உன்னைத்தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறுயாரும் இல்லை என்று நான் சாட்சி பகருகின்றேன். என்னுடைய ஆத்மாவின் தீங்கில் இருந்தும் உன்னைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன். மேலும், ஷைத்தானின் தீங்கு மற்றும் அவனின் இணைவைப்பில் இருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்.
5. بِسْمِ اللهِ، الذِيْ لا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأرْضِ، وَلا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيْعُ العَلِيْم
என்ற இந்த துஆவை மூன்று விடுத்தங்கள் ஓத வேண்டும்.
இந்த துஆ அபூதாவுத் (5088), திர்மிதி (3388) ஆகிய கிரந்தங்களில் உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. மேலும் அஸ்ஸஹீஹுல் முஸ்னத் (910) எனும் தொகுப்பில் ஹஸன் எனும் தரத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும், ஸஹீஹுத் திர்மித் (2698) எனும் கிரந்தத்தில்: "யார் இதனைக் கூறுகின்றாரோ அவரை அந்நாளில் அல்லது அந்த இரவில் எந்த ஒன்றும் தீண்டாது" என்று இடம்பெற்றுள்ளது.
பொருள்: பூமியிலோ வானத்திலோ எந்த ஒன்றும் எவனுடைய பெயரைக் கொண்டு தீங்கிழைக்காதோ அத்தகையவனின் பெயரைக் கொண்டு (பாதுகாவல் தேடுகின்றேன்.) மேலும் அவன் நன்கு செவியேற்பவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
6. اللهُمَّ إنِّيْ أسْأَلُكَ العَافِيَة فِي الدُّنْيَا وَالآخِرَة، اللهم إني أسْألك العَفْوَ والعَافِيَة فِي دِيْنِيْ وَدُنْيَايَ وَأهْلِيْ وَمَالِيْ، اللهم اسْتُرْ عَوْرَاتِيْ، وَآمِنْ رَوْعَاتِيْ، اللهم احْفَظْنِيْ مِنْ بَيْنَ يَدَيَّ وَمِنْ خَلْفِيْ، وَعَنْ يَمِيْنِي وعن شِمَالِيْ، ومن فَوْقِيْ، وَأعُوْذُ بِعَظَمَتِكَ أنْ أُغْتَالَ مِنْ تَحْتِيْ
இந்த துஆ அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் அபூதாவுத் (5074) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. மேலும் அஸ்ஸஹீஹுல் முஸ்னத் (765) எனும் தொகுப்பில் ஸஹீஹ் எனும் தரத்திலும் ஸஹீஹ் இப்னு மாஜா (3121) இலும் பதிவாகியுள்ளது.
பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடத்தில் உலகிலும் மறுவுலகிலும் பூரண ஆரோக்கியத்தைக் கேட்கிறேன். அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடத்தில் எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்க்கையிலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் பூரண ஆரோக்கியத்தையும் கேட்கிறேன். அல்லாஹ்வே! என்னுடைய குற்றம் குறைகளை மறைப்பாயாக! என்னுடைய திடுங்கங்களுக்குப் பாதுகாப்பளிப்பாயாக! அல்லாஹ்வே! எனக்கு முன்னாலும் பின்னாலும் வலதாலும் இடதாலும் மேலாலும் என்னைப் பாதுகாப்பாயாக! மேலும், உன்னுடைய மகத்துவத்தைக் கொண்டு எனக்குக் கீழ் இருந்து நான் கொலை செய்யப்படுவதைவிட்டும் பாதுகாவல் தேடுகின்றேன்.
7. لا إلهَ إلا الله، وَحْدَهُ لا شَرِيْكَ لَهُ، وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْر
என்ற துஆவை நூறு விடுத்தங்கள் கூற வேண்டும். இந்த துஆ புகாரி (6403), முஸ்லிம் (2691) ஆகிய கிரந்தங்களில் அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.
எனவே, யார் இதனைக் கூறுகின்றாரோ அவருக்குப் பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்கு நிகரான கூலி கிடைக்கும். மேலும், நூறு நன்மைகள் எழுதப்பட்டு நூறு தீமைகள் அழிக்கப்படும். மாலை வரை அன்றைய தினத்தில் ஷைத்தானில் இருந்து அவருக்குப் பாதுகாப்பு கிடைக்கும். இன்னும், இதனை அதிகதிகமாகச் செய்கின்ற ஒரு மனிதனைத் தவிர வேறு எவரும் இதனை விட மிகச் சிறந்த ஒன்றைக் கொண்டு வரமாட்டார்.
பொருள்: அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. அவன் தனித்தவன் இணைதுணையற்றவன் அவனுக்கே ஆட்சி அதிகாரமும் புகழும் உரியன. மேலும், அவனே அனைத்து வஸ்துக்கள் மீதும் ஆற்றல் படைத்தவன்.
8. سُبْحَانَ الله، وَبِحَمْدِهِ
இந்த துஆ முஸ்லிம் (2691) எனும் கிரந்தத்தில் அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. யார் இதனைக் காலையை அடையும் போதும் மாலையை அடையும் போதும் கூறுகின்றாரோ சொல்லப்பட்ட இது போன்ற வார்த்தையை அல்லது இதை அதிகமாகச் சொன்ன ஒருவரைத்தவிர வேறு எவரும் இதனை விடச் சிறந்த ஒன்றை மறுமை நாளில் கொண்டுவர மாட்டார். மேலும், புகாரி (3293), முஸ்லிம் (2691) ஆகிய கிரந்தங்களில் سبحان الله وبحمده என்ற வார்த்தையை ஒரு நாளில் நூறு விடுத்தங்கள் கூறுவது ஒருவரின் பாவங்களை அழித்துவிடும் என்றும் அவை கடல் நுறையளவு இருந்தாலும் சரியே! என்றும் இடம்பெற்றுள்ளது.
பொருள்: நான் அல்லாஹ்வைத் துதி செய்கின்றேன். மேலும் அவனுடைய புகழைக் கொண்டும் (துதிக்கின்றேன்.)
9.أصْبَحْنا عَلى فِطْرَة الإسْلام، وَعَلى كَلمَة الإخْلاص، وعلى دِيْن نَبِيِّنا مُحَمّد، وعلى مِلّة أبِيْنا إبْراهِيم حَنِيفا مُسْلما، ومَا كانَ مِنَ المُشْرِكين
இந்த துஆ அப்துர் ரஹ்மான் இப்னு அப்ஸா என்பவரைத் தொட்டும் அஹ்மத் (14821) எனும் கிரந்தத்தில் ஸஹீஹ் எனும் தரத்திலும், அஸ்ஸஹீஹா (2989)எனும் தொகுப்பிலும் பதிவாகியுள்ளது. இங்கு فِطْرة الإسلام என்று குறிப்பிடப்பட்டது அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்காக வேண்டி காட்டித்தந்த இஸ்லாம் எனும் வழிமுறையாகும். மேலும், الإسلام என்ற வார்த்தை فطرة என்ற வார்த்தையுடன் இணைக்கப்பட்டது தெளிவை நாடியே ஆகும். இன்னும், كَلِمة الإخلاص ஆனது குறித்த சொல்லை உடையவரின் இஹ்லாஸை அறிவிக்கக்கூடிய வார்த்தையாக இருக்கின்றது. மேலும், இஹ்லாஸ் உடையவர்களில் ஒருவராக கூறக்கூடியவர் இதனைக் கொண்டு ஆகிவிடுவார். அதுவே ஏகத்துவத்தின் வார்த்தையாகும். (இமாம் ஸின்தி)
பொருள்: நாங்கள் இஸ்லாத்தின் மீதும் இஹ்லாஸுடைய வார்த்தையின் மீதும் எங்கள் நபி முஹம்மத் அவர்கள் மீதும் முஸ்லிமாக இஸ்லாத்தின் வழி நின்று உறுதியாக இருந்தவரான எங்கள் தந்தை இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தின் மீதும் காலைப் பொழுதை அடைந்தோம். மேலும்,அவர் இணைவைப்பாளர்களில் ஒருவராக இருக்கவில்லை.
10.أعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَق
இந்த துஆவை மாலைப் பொழுதை அடையும் போது மூன்று விடுத்தங்கள் கூற வேண்டும்.
பொருள்: அல்லாஹ்வின் பூரணமான வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்தவற்றின் தீங்கில் இருந்தும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
இந்த துஆ முஸ்லிம் (2709)எனும் கிரந்தத்தில் முஅல்லகாவும் மாலிக் (1778),அஹ்மத் (2/290,374),அபூதாவுத் (3899) மற்றும் இப்னு மாஜா (3528) ஆகியோரின் கிரந்தங்களில் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் தொடரான அறிவிப்பாளர் வரிசையில் பதிவாகியுள்ளது. மேலும், ஸஹீஹ் இப்னு மாஜா (2836) எனும் தொகுப்பில் ஸஹீஹ் எனும் தரத்திலும் பதிவாகியுள்ளது.
அவ்வாறு அவர் அதனைக் கூறினால்: "அன்றைய இரவில் தேள் போன்ற விஷஜந்துக்கள் அவரைத் தீண்டாது."
11. இராப்பொழுதை அடைந்தால் சூரதுல் பகராவின் இறுதி இரு வசனங்களை ஓதுவார். அவ்வசனமாவது:
آمَن الرَّسُول بِما أنْزِل إلَيْه مِن رّبِّه والمُؤمنون كُلّ آمَن بِالله وَمَلائكته وَكُتبه وَرُسله لا نُفَرّق بَيْن أحَد مِن رسُله وَقَالوا سَمِعنَا وَأَطْعنا غُفرانك رَبنا وَإليك المَصِير لا يُكلّفُ الله نَفسا إلا وُسعهَا لهَا مَا كسَبت وعَليها مَا اكتَسَبت رَبّنا لا تُؤاخِذنا إنْ نَسِيْنا أو أخْطأنا رَبّنا ولا تَحْمل عَلينا إصْرا كمَا حَمَلته على الذين مِن قَبلنا رَبّنا وَلا تُحْمّلنا مَا لا طَاقة لنا بِه واعْف عَنا وَاغفِر لنا وارْحمنا أنْتَ موْلانا فَانصُرنا على القَوْم الكافرِين
இச்செய்தி புகாரி (5009), முஸ்லிம் (808) ஆகிய கிரந்தங்களில் அபூமஸ்ஊத் அல்அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. மேலும், இச்செய்தியில் இடம்பெற்றுள்ளதாவது: "யார் ஓர் இரவில் சூரதுல் பகராவின் இறுதிப்பகுதியில் இடம்பெறும் இவ்விரு வசனங்களையும் ஓதுகின்றாரோ, அவை அவருக்குப் போதுமானதாகும்." இதனை இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் விபரிக்கும் போது: "இவை எல்லாத் தீங்கிலிருந்தும் அவருக்குப் (பாதுகாப்பு வழங்கப்) போதுமானதாகும்" என்கிறார்கள்.
12. மேலும் சூரதுல் இஹ்லாஸ், இரு பாதுகாவல் சூராக்கள் ஆகியவற்றை ஓதிக்கொள்வார். இதனை அஹ்மத் (4/148,158) எனும் கிரந்தத்தில் உக்பத் இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியிருக்கக் காணலாம். மேலும், இதில் இடம்பெற்றுள்ள வாசகமானது: "எந்தவோர் இரவு உன்னைக் கடந்து சென்றாலும் இவைகளை நீ ஓதாமல் இருந்து விடாதே!" என்று இடம்பெற்றுள்ளது. இதனை தஹ்கீகுல் முஸ்னத் (17334) இல் ஹஸன் எனும் தரத்திலும் அஸ்ஸஹீஹா (891,2861) எனும் தொகுப்பிலும் காணலாம்.
தூங்கச் செல்லும் போது ஆயதுல் குர்ஷியை ஓதிக்கொள்ள வேண்டும். இதனை ஓதுவதற்கான ஆதாரத்தை புகாரி (2311) எனும் கிரந்தத்தில் முஅல்லக்காகவும் இமாம் நஸாயி அவர்களின் 'அமலுல் யவ்மி வல்லைலா' (959) எனும் கிரந்தத்தில் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் தொடர் அறிவிப்பாக ஸஹீஹ் எனும் தரத்திலும் அஸ்ஸஹீஹா (11/21) எனும் தொகுப்பிலும் காணலாம்.
அவ்வாறு நீங்கள் இதனைச் செய்வீர்களென்றால்: 'அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலர் உங்களோடு இருந்து கொண்டே இருப்பார். நீங்கள் காலைப் பொழுதை அடையும் வரை ஷைத்தான் உங்களை நெருங்கமாட்டான்.'
மேலும், மலசல கூடத்தினுள் நுழையும் போது:
اللهُمّ إنّي أعُوْذ بِكَ مِن الخُبث والخَبَائث
இச்செய்தி அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி (142), முஸ்லிம் (375) ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.
பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னைக் கொண்டு ஆண் பெண் ஷைத்தான்களில் இருந்தும் பாதுகாவல் தேடுகின்றேன்.
அவர் மலசலகூடத்தைவிட்டு வெளியேறும் போது:
غُفْرَانَكَ
என்று கூறுவார். இதனை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் அபூதாவுத் (30) எனும் கிரந்தத்திலும், ஸஹீஹ் அபீதாவுத் (23) எனும் தொகுப்பில் ஹஸன் எனும் தரத்திலும் காணலாம்.
பொருள்: உன்னித்தில் பாவமன்னிப்புக் கோருகின்றேன்.
அவருக்குக் கோபம் ஏற்பட்டால்:
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
என்று கூறுவார். இதனை புகாரி (6115) முஸ்லிம் (2610) ஆகிய கிரந்தங்களில் சுலைமான் இப்னு ஸுரத் என்பவரைத் தொட்டும் பதிவான ஹதீஸில் காணலாம்.
பொருள்: எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் தீங்குகளைவிட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன்.
அவர் தனது வீட்டினுள் பிரவேசிக்கும் போது அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவார். இதனை ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் முஸ்லிம் (2018) எனும் கிரந்தத்தில் பதிவான ஹதீஸில் காணலாம். நபியவர்கள் கூறினார்கள்: 'ஒருவர் தனது வீட்டில் நுழைய நாடி, நுழையும் போதும் உணவு பரிமாறும் போதும் அல்லாஹ்வை ஞாபகப்படுத்தினால் ஷைத்தான் தன் தோழர்களை அழைத்து) உங்களுக்கு இராத்தரிக்க இடமும் இராப்போசனமும் கிடையாது என்பான். அவ்வாறு அவன் நுழைய நாடி, நுழையும் போது அல்லாஹ்வை ஞாபகப்படுத்தவில்லை என்றால் ஷைத்தான் (தன் தோழர்களை விழித்து) நீங்கள் இராத்தரிக்கும் இடத்தைப் பெற்றுக் கொண்டுவிட்டீர்கள் என்று கூறுவான். மேலும், அவ்வாறு அவன் தனது உணவின் போதும் பிரவேசத்தின் போதும் அல்லாஹ்வை ஞாபகப்படுத்தவில்லை என்றால் நீங்கள் இராத்தரிக்கும் இடத்தையும் இராப்போசனத்தையும் அடைந்து கொண்டுவிட்டீர்கள் என்று கூறுவான்.'
பருகும் போது:
بِسْمِ الله
என்று கூறுவார். இந்நடைமுறையை ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் முஸ்லிம் (2017) எனும் கிரந்தத்தில் பதிவான செய்தியில் காணலாம்.
நபியவர்கள் கூறினார்கள்: '(ஒருவர் உணவு பரிமாறலின் போது) அல்லாஹ்வின் பெயரை ஞாபகப்படுத்தாத சந்தர்ப்பத்தில் நிச்சயமாக ஷைத்தான் அவ்வுணவைத் தனக்கு ஹலாலாக்கிக் கொள்கின்றான்.'
'அதாவது, மனிதன் அல்லாஹ்வின் பெயரை ஞாபகப்படுத்தாமல் தனது உணவை உண்ண ஆரம்பித்தால் நிச்சயமாக ஷைத்தானாகிய அவன் அதில் இருந்து தானும் உண்ண இலகுவாக்கிக் கொள்கின்றான். மாறாக, ஒருவர் அவ்வாறு ஆரம்பிக்காத போது அவனால் அதனைப் பரிமாற முடியாமல் போய்விடும்.' (இமாம் நவவி)
மேலும் அவர் சூரதுல் பகராவை அதிகமாக ஓதிக் கொள்வார்.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'சூரதுல் பகரா ஓதப்படக்கூடிய வீட்டைவிட்டும் ஷைத்தான் விரண்டோடுகிறான்.' (முஸ்லிம்: 780)
இன்னும், அபூஉமாமா அல்பாஹிலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'சூரதுல் பகராவை ஓதுங்கள்! நிச்சயமாக அதனை எடுத்துக் கொள்வது அபிவிருத்தியாகும், அதனை விட்டுவிடுவது கைசேதமாகும், சூனியக்காரர்கள் அதற்குச் சக்திபெறமாட்டார்கள்.' (முஸ்லிம்: 804)
மேலும், அவர் ஓர் இடத்தில் தங்க நாடினால்:
أعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
பொருள்: பூர்த்திமிக்க அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்தவற்றின் தீங்கில் இருந்தும் பாதுகாவல் தேடுகின்றேன்.
ஹவ்லா பின்து ஹகீம் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அவர் இதனைக் கூறினால், அந்த இடத்தில் இருந்து புறப்படும் வரை எந்த ஒன்றும் அவருக்குத் தீங்கிழைக்காது.' (முஸ்லிம்: 2708)
நோய் ஏற்பட்டிருக்கும் என்னுடைய சகோதரனே! நிவாரணம் விடயத்தில் நிராசை அடைந்துவிடாதே!
1. நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "அல்லாஹ் ஒரு நோயை இறக்கி வைத்தால் அதற்குரிய நிவாரணத்தையும் ஏற்படுத்தாமல் விட்டுவிடுவதில்லை." (புகாரி: 5678)
2. அல்லாஹ்வின் தூதரைத் தொட்டும் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஒவ்வொரு நோயிற்கும் மருந்துண்டு. எனவே, நோயை மருந்து அடைந்துவிடுமென்றால் அல்லாஹ்வுடைய அனுமதியுடன் அந்நோய் குணமாகிவிடும்." (முஸ்லிம்: 2204)
"நிவாரணமானது (உரிய நோயைச்) சென்றடைவது அல்லாஹ்வினுடைய அனுமதியில் தங்கியுள்ளது என்பது பற்றிய சுட்டிக்காட்டுதல் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் இடம்பெற்றுள்ளது. அதாவது, சில வேளைகளில் மருந்தானது கொடுக்கப்படும் விதம் அல்லது அளவு ஆகிய அடிப்படைகளில் எல்லை மீறிய நிலையில் நோயாளியைச் சென்றடையும். அதனால் மருந்தின் தாக்கம் வெளிப்படமாட்டாது. மாறாக, சிலவேளைகளில் மற்றொரு நோயைக்கூட ஏற்படுத்திவிடும். மேலும், இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் சில வகையான மருந்துகளை எல்லோரும் அறிந்து வைத்திருக்கமாட்டார்கள் என்பது பற்றிய சுட்டிக்காட்டுதல் இடம்பெற்றுள்ளது. மற்றும், ஹதீஸ்களில் நோய் நிவாரணத்திற்கான காரணங்களை உறுதி செய்தல் பற்றியும் கூறப்பட்டுள்ளது. அது அல்லாஹ்வுடைய அனுமதியுடனும் அவனுடைய நிர்ணயத்துடனும் நடக்கின்றது என்று நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவனின் மீது பொறுப்புச் சாட்டுதலை மேற்கொள்வதில் ஒருபோதும் முரண்பாட்டை ஏற்படுத்திவிட மாட்டாது. மேலும், அவை தன்னளவிலே ஈடேற்றத்தைக் கொடுக்காது. மாறாக, அல்லாஹுத்தஆலாவுடைய நிர்ணயத்துடன் நடைபெறுகின்றது. அல்லாஹ் நிர்ணயித்தால் மருந்து கூட நோயாக மாறிவிடலாம்.
இவ்விடயமே ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் 'அல்லாஹ்வின் நாட்டத்தைக் கொண்டு' என்ற வாசகத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, இவை அனைத்தினதும் அச்சாணி அல்லாஹ்வுடைய நிர்ணயமும் அவனுடைய நாட்டமுமாகும். எவ்வாறு பசி மற்றும் தாகத்தைத் தனிப்பதற்கு உணவு, குடிபானம் ஆகியவற்றை எடுப்பது முரணாக அமையாதே, அவ்வாறே நோய்நிவாரணம் தேடுதல் என்ற அம்சம் பொறுப்புச் சாட்டுதலுக்கு முரணாக அமைந்துவிட மாட்டாது. அதேபோன்று, மனிதனை அழிக்கக்கூடியவற்றைத் தவிர்ந்து கொள்ளல், ஆரோக்கியத்தை வேண்டி துஆச் செய்தல், தீங்கிழைக்கக்கூடியவற்றை தவிர்த்தல் போன்றனவும் எம்மீது கடமையாகும்." (பத்ஹுல் பாரி)
3. நபியவர்கள் கூறியதாக உஸாமா இப்னு ஷரீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "அல்லாஹ்வின் அடியார்களே! நீங்கள் மருந்தைக் கொண்டு நிவாரணத்தைத் தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் வயோதிபத்தைத்தவிர எந்த ஒரு நோயையும் அதனுடன் நிவாரணத்தைக் கொண்டேயன்றி ஏற்படுத்தவில்லை." (திர்மிதி: 2038, அபூதாவுத்: 3855, இப்னு மாஜா: 3436)
4. நபியவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "அல்லாஹ் எந்த ஒரு நோயையும் அதற்குரிய மருந்தைக் கொண்டேயன்றி இறக்கிவைக்கவில்லை. அதனைத் தெரிந்தவர்கள் தெரிந்திருப்பார்கள், தெரியாதவர்கள் தெரியாதிருப்பார்கள்." (அஹ்மத், இப்னுமாஜா: 3438, ஸஹீஹுல் ஜாமிஉ: 5558)
பிரயோசனம் மிக்க ஒரு தகவல்: இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "மஜ்மூஉல் பதாவா" (3/274) என்ற தொகுப்பில் கூறுகிறார்கள்: "உடன்பட்ட கருத்தின் அடிப்படையில் நோய்நிவாரணம் தேடுவது அனுமதிக்கத்தக்கதாகும். ஒரு முஸ்லிமுக்கு உள்ரங்க நோய்கள், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படவேண்டிய நோய்கள், மனநோய்கள் எனப் பல நோய்களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வைத்தியரிடத்தில் செல்ல அனுமதியுள்ளது. மார்க்க ரீதியில் அனுமதிக்கத்தக்க மருந்துகளில் இருந்து பொருத்தமானதைக் கொண்டு வைத்தியத் துறையில் அறிமுகமான அடிப்படையில் அவனுக்குச் சிகிச்சையும் செய்து கொள்ள முடியும். ஏனெனில், அது அனுமதிக்கத்தக்க வழமையான காரணங்களைக் கையாள்வதில் உள்ளடங்கக்கூடியது. மேலும், அது அல்லாஹ்வின் மீது பொறுப்புச்சாட்டுதலுக்கு முரணமாக அமையவும் மாட்டாது."
முற்றும்.
والحمد لله رب العالمين