உஸாமா பின் ஜைத் (ரலி)

உஸாமா பின் ஜைத் (ரலி)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
''ஓ என்னுடைய தோழர்களே..! உங்கள் அனைவரைக் காட்டிலும் உஸாமா எனக்கு மிகவும் நெருக்கமானவர், அவரை நல்ல முறையில் நடத்துங்கள்"".

இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து பயணப்படுவதற்கு முன்னுள்ள ஏழு ஆண்டுகளில், குறைஷிகளின் கைகளில் அகப்பட்டு சொல்லொண்ணா இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும், சித்தரவதைகளுக்கும் மற்றும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகிக் கொண்டிந்தார்கள். குறைஷிகளிடமிருந்து வந்து கொண்டிருந்த துன்பங்களும், இடர்களும் முடிவில்லாமல் சென்று கொண்டிருந்தன. இந்த இக்கட்டான, எப்பொழுதும் துயரச் செய்திகளாகவே வந்து கொண்டிருந்த வேளையில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உள்ளத்தையும், வதனத்தையும் குளிரச் செய்கின்றதொரு செய்தியை நபித்தோழர் பெருமக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! உம்மு ஐமன் (ரலி) அவர்கள் ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்திருக்கின்றார்கள் என்ற அந்த நற்செய்தியைக் கேள்விப்பட்டவுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் வெளிச்சப் புள்ளிகள் பரவி நின்றன. தன்னுடைய வரவால் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் துன்ப முகத்தில், இன்ப ரேகைகளை விதைத்து விட்ட பெறும் பேறுக்குரியவர் யாரென்று உங்களால் யூகிக்க முடிகின்றதா?

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் பரவி இருந்த அந்த சந்தோஷ ரேகைளை பார்த்த நபித்தோழர்கள் யாரும் ஆச்சரியப்படாமல் இருந்ததில்லை. ஏனென்றால், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும், அந்த மகவை ஈன்றெடுத்த குடும்பத்தினருக்கும் இடையே சிறப்பான நெருக்கமானதொரு உறவு இருந்து வந்ததே காரணமாகும். உஸாமா (ரலி) அவர்களின் தாயார் ஆப்ரிக்காவிலிருந்து வந்தவராவார், அவரது இயற் பெயர் பரக்கத் என்பதாகும், ஆனால் பின்னாளில் அவர் உம்மு ஐமன் என்று சிறப்பித்துக் கூறக் கூடிய புகழ் பெற்ற நபித்தோழியாகத் திகழ்ந்தார். இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அடிமையாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தாயார், இறந்து போனதன் பின்பு, சிறுவனாக இருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்களைக் கவனித்து வளர்க்கும் பொறுப்பு இவர்களைச் சார்ந்திருந்தது. எனவே, உம்மு ஐமன் (ரலி) அவர்கள் என்னுடைய தாயைப் போன்றவர்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அடிக்கடி கூறுவதோடு, என்னுடைய குடும்ப அங்கத்தவர்களில் அவரும் ஒருவராவார் என்று கூறக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். இதுவே, புதிததாகப் பிறந்த அந்த அதிர்ஷ்டமுள்ள மகவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையே இருந்த தொடர்பாகும். இவரது தந்தையாரின் பெயர் ஜைத் பின் ஹாரிதா (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்டவராகத் திகழ்ந்தார்கள். அத்துடன், தனது வளர்ப்பு மகன் என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஜைத் பின் ஹாரிதா (ரலி) அவர்களை அறிவித்தார்கள். இன்னும் அன்னாரது வாழ்நாள் முழுவதும் மிகவும் நெருக்கமான நபித்தோழர்களின் வரிசையில் ஒருவராகவும், இறைத்தூதர் (ஸல்) அவர்களை நிழல் போல் தொடர்ந்து செல்லக் கூடிய பெருமை பெற்ற தோழராகவும் இவர் திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மட்டுமல்ல, அன்னாரது தோழர்கள் அனைவரும் உஸாமா பின் ஜைத் (ரலி) அவர்களின் பிறப்பால் மிகவும் சந்தோஷமடைந்திருந்தனர். அவர்களது சந்தோஷத்திற்கு அர்த்தமுமிருந்தது, அதாவது இறைத்தூதர் (ஸல்) அவர்களை எதுவொன்று சந்தோஷப்படுத்தியதோ, அது தங்களையும் சந்தோஷப்படுத்தக் கூடியதே என்று அந்த நபித்தோழர்கள் கருதி வாழ்ந்ததே காரணமாகும்.

குறைஷிகளின் தலைவர்களுள் ஒருவராக இருந்த ஹகம் பின் ஹஸ்ஸாம் அவர்கள், ஒருமுறை மிகவும் விலையுயர்ந்த ஆடை ஒன்றை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பரிசாக அளித்தார். இதனை 40 தினார்களுக்கு யமன் தேசத்திலிருந்து வாங்கி வந்தார், அதிலிருந்த தலைக்கு அணியும் கயிறானது, யமன் தேசத்து மன்னனுக்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருந்ததை, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காக அவர் வாங்கி வந்திருந்தார். இந்த பிரத்யேக கயிறை ஒரே ஒரு முறை மட்டுமே வெள்ளிக் கிழமையன்று அணிந்து விட்டு, அதனை உஸாமா (ரலி) அவர்களுக்குக் கொடுத்து விட்டார்கள். அதனை காலையிலும், மாலையிலும் சந்தோஷத்துடன் அணிந்து வந்த உஸாமா (ரலி) அவர்கள், முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரித் தோழர்களைச் சந்திக்கும் நேரங்களில் எல்லாம் அதனை அணிந்து செல்லக் கூடியவராகவும் இருந்தார்.

ஒருமுறை கலீஃபா உமர் (ரலி) அவர்கள், அரசின் கஜானாவிலிருந்து மக்களுக்கு உதவித் தொகைகைளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது உஸாமா (ரலி) அவர்களின் முறை வந்ததும், தனது மகனுக்குக் கொடுத்ததைக் காட்டிலும், ஒன்றரை மடங்கு அதிகமாகக் கொடுத்தார்கள். அரசின் கஜானாவிலிருந்து மக்களுக்கு உதவித் தொகையை வழங்கும் பொழுதெல்லாம், அதனைப் பெற்றுக் கொள்ளக் கூடிய தோழரின் அற்பணம், இஸ்லாத்திற்காக அவர் புரிந்த சேவைகள் ஆகிய அனைத்தையும் கவனத்தில் கொண்டு, அவர்களது தகுதிக்குத் தகுந்தவாறு உதவித் தொகையை வழங்கக் கூடியவர்களாக உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.

இப்பொழுது, உமர் (ரலி) அவர்களது மகன் அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள், தான் எந்த வகையில் உஸாமா (ரலி) வை விட தரத்தில் தாழ்ந்து விட்டோம். தலைமைக்குக் கட்டுப்படுவதிலும், கீழ்ப்படிவதிலும், இதுவரை இஸ்லாத்திற்காக கலந்து கொண்ட போர்களில் மற்றவர்களைப் போலவே தானும் உத்வேகத்துடன் கலந்து கொண்டதையும், அதில் தான் காட்டிய வீரத்தையும், அல்லாஹ்விற்காக தான் செய்த அற்பணிப்புகளையும் எண்ணிக் கொண்டு, உஸாமா (ரலி) அவர்களை விட தான் எந்த விதத்தில் தாழ்ந்து விட்டோம் என்று எண்ணிப் பார்க்கலானார்.

அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களின் சேவை, அற்பணிப்பு மனப்பான்மையுடன் எப்பொழுதும் முன்னணியில் நிற்கக் கூடியவராக இருந்தார். எனவே, உதவித் தொகையை நாம் குறைவாகப் பெற்றுக் கொண்டோமே என்பது பற்றி அவர் சிந்திக்கவில்லை, மாறாக, முன்னணயில் இருக்கும் நபித்தோழர்களில் ஒருவனாக என்னையும் இன்னும் கருதும் நிலை வரவில்லையே, அத்தகைய தகுதிக்கு நான் இன்னும் தேர்வாகவில்லையோ என்று தான் அவர்கள் மனம் வருந்தினார்களே தவிர, உதவித் தொகையைக் குறைவாகப் பெற்றுக் கொள்கின்றோமே என்பதற்காக அல்ல.

ஒருநாள், அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் தன்னைச் சமாளித்துக் கொண்டவராக, தன்னுடைய தந்தையை நோக்கி,

தந்தையே..! நான் ஜிஹாதுப் போரில் அதிகமாகப் பங்கெடுத்துக் கொண்டவன், இன்னும் மற்றவர்களைக் காட்டிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அதிகமாக எனது ஒத்துழைப்புகளை வழங்கியவன், இந்த நிலையில் என்னைக் காட்டிலும் உஸாமா (ரலி) அவர்களுக்கு அதிகமான உதவித் தொகையை நீங்கள் வழங்கியதன் காரணமென்ன? என்று வினவுகின்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் தனது மகனைப் பார்த்து,
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களை மிகவும் ஆழமாக நேசித்தார்கள், இன்னும் அவரது தந்தையும் அதிகமாக நேசித்தார்கள். இத்தகையவர்களுக்கு நான் ஏன் முன்னுரிமை கொடுக்கக் கூடாது? நான் அதிகமாகக் கொடுத்தேன் தான். அதன் மூலம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற வரையறைகளை பேணிக் கொண்டேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் யாருக்கு முன்னுரிமை வழங்கினார்களோ, அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதென்பது என்னுடைய கடமைகளில் ஒன்றாக இருக்கின்றது. தனது தந்தை மற்றும் குடும்பத்தைப் பற்றியும் கவலைப்படாமல், எப்பொழுதும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குச் சேவை செய்வதிலேயே சிறப்புக் கவனம் செலுத்தி வந்தவர், அவரது தந்தை என்பது உங்களுக்குத் தெரியாதா? அவர் தனது பெற்றோர்களைக் கூட காண விரும்பாது, எப்பொழுதும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தவர் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?

ஸைத் (ரலி) அவர்களுடைய தந்தை ஹாரிதா, தன்னுடைய மகனைத் திரும்ப அழைத்துச் செல்வதற்காக நீண்ட தூரம் கடுமையான பயணம் செய்து வந்தார். வந்தவர், தனது மகனைத் தன்னிடம் ஒப்படைக்குமாறும், தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களுக்கு விடுதலை செய்ததோடு, அவரது தந்தையுடன் செல்லுமாறும் கேட்டுக் கொண்டார்கள். தன்னுடைய மகனை இந்தளவு எளிதாகத் தான் திரும்பப் பெற்றுக் கொள்வோம் என்பதை நினைத்தே பார்த்திராத ஸைத் (ரலி) அவர்களுடைய தந்தை ஹாரிதா மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டார். அவர் தன்னுடைய மகனிடம் கூறினார், ஸைத்தே..! விரைந்து பயணத்திற்குத் தயாராகுங்கள், உங்களைக் காண உங்களது தாயார் மிகவும் ஆவலுடன் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் கூறினார். ஆனால், ஸைத் (ரலி) அவர்களோ, இறைத்தூதர் (ஸல்) அவர்களை விட்டு விட்டு தான் உங்களுடன் வர மாட்டேன் என்று உறுதியாகக் கூறி விடுகின்றார்கள்.

ஹாரிதா அவர்கள் தனது காதையே தன்னால் நம்ப முடியவில்லை, அவர் கேட்டார்..!

விடுதலையை விட, அடிமைத் தளையில் இருப்பதையே நீங்கள் விரும்புகின்றீர்களா? என்று தனது மகனைப் பார்த்துக் கேட்ட பொழுது, ஸைத் (ரலி) அவர்கள்,

தந்தையே..! இந்த அடிமைத் தனத்துக்காக நான் ஆயிரம் விடுதலையைக் கூட தியாகம் செய்யக் காத்திருக்கின்றேன், தயவு செய்து என்னை வற்புறுத்தாதீர்கள். நான் இந்த வீட்டில் வாழ்வதை மிகப் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன், என்று கூறினார்கள்.

இந்த உணர்ச்சிகரமான உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்,

ஹாரிதாவே..! ஸைத்தை என்னுடைய மகனாக அறிவிக்கின்றேன், இதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள், இனி இவர் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர், நான் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின், ஸைத் (ரலி) அவர்களை நபித்தோழர்கள் அனைவரும், ஸைத் பின் முஹம்மத் (ரலி) என்றே அழைக்கத் துவங்கினார்கள். இந்தப் பழக்கமானது, இறைவசனம் மூலமாகத் தடை செய்யப்பட்டது, வளர்ப்புத் தந்தையானவர் சொந்த தந்தையாக மாட்டார், தனது பெயருக்குப் பின்னால் வளர்ப்புத் தந்தையின் பெயரை இணைத்துக் கூறுவதை, அந்த வசனம் தடை செய்ததிலிருந்து, இந்தப் பழக்கம் கைவிடப்பட்டது.

உஸாமா (ரலி) ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்தவராக இருந்தமையால், அவரது தோலின் நிறம் கறுப்பாக இருந்தது. ஆனால், இத்தகைய நிற மற்றும் இன வேற்றுமைகளைக் காரணமாக வைத்து, மனிதர்கள் தங்களுக்குள் பாகுபாடு காட்டிக் கொள்வதை இஸ்லாம் மிகவும் வன்மையாக கண்டிப்பதோடு, அத்தகைய செயல்களை தடையும் செய்திருக்கின்றது. ஒருவரது கண்ணியத்தை அளப்பதற்குரிய கருவியாக எது இருக்கின்றது என்று சொன்னால், அவரது இறையச்சம், இறைநம்பிக்கை, நேர்மை போன்ற நற்குணங்களே தவிர, பிறப்பினாலோ அல்லது தேச அடையாளத்தினாலோ ஒருவருக்கு சிறப்பு வந்துவிடுவது கிடையாது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

''ஒரு மனிதர் அழுக்கடைந்த நிலையில், முழுவதும் தூசி படிந்த நிலையில் இருந்து கொண்டு, அந்த நேரத்தில் (தன்னுடைய இறைவனான) அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்தித்தாலும், அவரது பிரார்த்தனைக்கு பதிலளிக்கக் கூடியவனாக (அல்லாஹ்) இருக்கின்றான்"".

உஸாமா (ரலி) அவர்கள் என்ன நிறத்தில் இருந்தார் என்பதைப் பார்க்க வேண்டாம், அவரது நற்குணங்களையும், புத்திசாதுர்யத்தையும், உறுதியான தன்மையையும், அடக்கமான தன்மையையும், சுய மரியாதைக் குணத்தையும், இறையச்சத்தையும், ஜிஹாதில் கலந்து கொள்வதற்கான ஆர்வத்தையும், உபசரிக்கும் தன்மையையும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது வைத்திருக்கின்ற அளப்பரிய அன்பையும், இஸ்லாத்திற்காக எதையும் தியாகம் செய்வதற்குத் துணிந்து நிற்கும் அவரது மன உறுதியையும் தான் பார்க்க வேண்டும். இத்தகைய நற்குணங்கள் தான் உஸாமா (ரலி) அவர்களை மற்றவர்களைக் காட்டிலும் வேறுபிரித்துக் காண்பித்து நின்றது. இதன் காரணமாகத் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களினால், கீழ்க்கண்ட நற்சான்றுக்கு உரித்தானவர்களாகத் திகழ்ந்தார்கள் உஸாமா (ரலி) அவர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

''ஓ என்னுடைய தோழர்களே..! உங்கள் அனைவரைக் காட்டிலும் உஸாமா எனக்கு மிகவும் நெருக்கமானவர், அவரை நல்ல முறையில் நடத்துங்கள்"".

உஸாமா (ரலி) அவர்களுக்கு அப்பொழுது இருபதே வயது தான் நிரம்பியிருந்தது. வாலிபப் பருவம் அரும்பு விட்டு ததும்பக் கூடிய பருவமது. அவரது தோற்றம் கருணையைப் பொழிவதாக இருந்தது. பிரபலமான தலைசிறந்த நபித்தோழர்களாகிய அபுபக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி) இன்னும் இவர்களைப் போன்ற பலர் இவரைத் தளபதியாக ஏற்று அணிவகுக்க, மிகவும் பொறுப்பு வாய்ந்த இன்னும் ஆபத்து மிகுந்ததொரு பணிக்கு இளமை ததும்பும் இந்தத் தோழரை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அனுபவமில்லாத இன்னும் இப்பொழுது தான் வாலிபத்தைத் தொட்டிருக்கின்ற இவரைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கின்றதே என்று மூத்த நபித்தோழர்கள் நினைத்தார்கள்.

இன்னும், உஸாமா (ரலி) அவர்களது தலைமையில் படையணி புறப்படுவதற்கு முன்பாகவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணத்தைத் தழுவி விட்டார்கள், ஆனால் அவர்கள் இறப்பதற்கு முன்னால்.., எந்த நிலையிலும் உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் நான் நியமித்த படையை நிறுத்தக் கூடாது, அந்தப் படை எந்தப் பணிக்காக நியமிக்கப்பட்டதோ, அந்தப் பணிக்கு திட்டமிட்டபடி அதன் பயணம் தொடர வேண்டும், அது அடைய வேண்டிய இடத்தை அடைந்தே ஆக வேண்டும் என்று கூறி விட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன் கூறிச் சென்றபடி, உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் முதல் கலீஃபாவான அபுபக்கர் (ரலி) அவர்கள் படையை அனுப்பி வைத்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்த செய்தியை ரோம மன்னன் கேள்விப்பட்டான், அத்துடன் உஸாமா (ரலி) அவர்களது தலைமையில் படை ஒன்று புறப்பட்டு, தாக்குதவற்குத் தயாரான நிலையில் சிரியாவின் எல்லையில் அணி வகுத்து நிற்பதாகவும் அறிந்து கொள்கின்றான். மிகவும் ஆச்சரியப்பட்டுப் போன அந்த ரோம மன்னன், அவர்களது தூதர் முஹம்மது இறந்ததன் பின்பும் எந்த நடவடிக்கையையும் கைவிடாமல் தொடர்கின்றார்களே..! என்ன மனிதர்கள் இவர்கள்..! என்றான் ஆச்சரியத்தோடு..!

முஸ்லிம்களின் இந்த நடவடிக்கை, ரோமப்படைகளை மனதளவில் கோழைத்தனத்தை ஏற்படுத்தியதோடு, மன்னனும் இதே நிலைக்குத் தள்ளப்பட்டான். இனியொரு முறை சிரியாவின் வழியாக அரேபியாவைத் தாக்கும் எண்ணத்துடன் படையைத் திரட்ட முடியாத அளவுக்கு, முஸ்லிம்களின் மேன்மையும், அவர்களது தன்னம்பிக்கையும் அந்த ரோமப் படைகளை வெகுவாகப் பாதித்து விட்டது. உஸாமா (ரலி) அவர்களது தலைமையில் சென்ற படை இறைவனது மாபெரும் கருணையினால் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. ரோமப் படைகள் கடுமையான இழப்பைச் சந்தித்தன. அதேவேளையில் முஸ்லிம்களின் தரப்பில் ஒரு வீரர் கூட இழக்கப்படாத நிலையில் தாயகம் திரும்பினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்னாள், உஸாமா (ரலி) அவர்களை ஒரு படைக்குத் தலைமையேற்க வைத்து அனுப்பி வைத்தார்கள். அவர் எதிரியை எதிர்த்துக் களம் புகுந்ததோடு, வெற்றி பெற்று மதீனா திரும்பினார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்ததோடு, உஸாமா (ரலி) அவர்களைத் தனதருகில் அழைத்து அமர வைத்துக் கொண்டு,

உஸாமாவே..! போரின் பொழுது என்ன நடந்தது என்பதை இடைவிடாது எனக்குக் கூறுவீர்களாக..! என்றார்கள்.

எதிரிப் படையினர் தோற்று ஓடிக் கொண்டிருந்தார்கள், அவ்வாறு தோற்று ஓடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவரை நான் விரட்டிப் பிடித்தேன். என்னுடைய உடை வாளை அவரது பக்கம் திருப்பியவுடன், அந்த மனிதர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறி கலிமாவை முன் மொழிந்தார். ஆனால், நான் அவரைக் கொன்று விட்டேன்.

உஸாமா (ரலி) அவர்களின் இந்தப் போர் வர்ணனைகளைக் கேட்டுக் கொண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சந்தோஷப்படவில்லை, கூறினார்கள்...!

உஸாமாவே..! ''வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை"" என்று அவர் கூறி பின்புமா நீங்கள் அவரைக் கொன்றீர்கள்? அல்லாஹ்வை தனது இறைவனாக ஏற்றுக் கொண்ட மனிதர் ஒருவரைக் கொல்லும் அதிகம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது? நியாயத் தீர்ப்பு நாளில் இது பற்றி இறைவன் கேட்கக் கூடிய கேள்விக்கு நீங்கள் என்ன பதிலை வைத்திருக்கின்றீர்கள்?

ஓ..! என்ன காரியம் செய்து விட்டீர்கள் உஸாமாவே..! உண்மையிலேயே நான் மிகவும் வேதனைப்படுகின்றேன்..! என்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த வேதனை தரும் வார்த்தைகளை தனது மனக் கண் முன் நிறுத்தி, வேதனைப்பட்டார்கள். இன்னும், நான் இதற்கு முன் செய்திருக்கின்ற அத்தனை நன்மைகளும் பறிபோய் விட்டனவோ என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார்கள். இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் ஒரு முடிவுக்கு வந்தவர்களாக, 'இனிமேல் என் வாழ்நாளில் சத்தியத்திற்குச் சான்று பகன்ற எவர் மீதும் நான் எனது வாளைத் தூக்க மாட்டேன்" என்று சத்தியம் செய்து கொண்டார்கள். இந்தச் சம்பவம் அவரது வாழ்நாள் முழுவதும் அவரது ஞாபகப்பரப்பில் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. மறக்க முடியாத நினைவலைகளாய் ஆனது.

உஸாமா (ரலி) அவர்களால் கொலை செய்யப்பட்ட அந்த நபர், முஸ்லிம்களுக்குக் கடும் துன்பம் கொடுத்துக் கொண்டிருந்த காரணத்தால் தான் உஸாமா (ரலி) அவர்கள் இந்த முடிவினை எடுத்தார்கள். அந்த நபர், தனது வாள் முனையிலிருந்து தப்பித்து, மீண்டும் முஸ்லிம்களைத் தாக்குவதற்குண்டான சந்தர்ப்பம் கிடைக்கும் வரைக்கும், உயிர் வாழ்வதற்காகவே உஸாமா (ரலி) அவர்களின் வாளுக்குக் கீழாக இருக்கும் பொழுது சத்திய இஸ்லாத்திற்குச் சான்று பகரக் கூடிய கலிமாவை முன் மொழிந்திருக்கின்றார் என்று உஸாமா (ரலி) அவர்கள் நினைத்துக் கொண்டதே, இந்தச் சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்தது.

எனவே, தான் அன்றிலிருந்து உஸாமா (ரலி) அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள், இனி எந்தச் சந்தர்ப்பத்திலும், சத்தியத்திற்குச் சான்று பகர்ந்த மனிதர்களுக்கு எதிராக – ஒரு முஃமினுக்கு எதிராகத் தனது வாளைத் தூக்குவதில்லை என்ற முடிவினை தனது இதயப் பரப்பில் நீங்காத இடத்தில் புதைத்து வைத்திருந்தார்கள். மேலும், தனது வாழ்நாளில் ஏற்பட்ட அத்தனை சோதனையான தருணங்களிலும் கூட அதனை அடிக்கடி மீட்டிப் பார்ப்பவர்களாக இருந்தார்கள்.

அலி (ரலி) அவர்களுக்கும் அமிர் முஆவியா (ரலி) அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளின் காரணமாக ஏற்பட்ட கடுமையான சந்தர்ப்பங்களில், உஸாமா (ரலி) அவர்கள் இதில் தலையிடாமல் ஒதுங்கியே இருந்தார்கள். அலி (ரலி) அவர்களை மிகவும் அதிகமாக நேசிக்கக் கூடியவர்களாக இருப்பினும் கூட, அலி (ரலி) அவர்களுக்குச் சார்பாக களத்தில் இறங்க முன்வரவில்லை. காரணம், அலி (ரலி) அவர்களுக்கு எதிராக களத்தில் இருப்பவரும் ஒரு முஸ்லிம் என்பதே காரணமாகும். எனவே, உஸாமா (ரலி) அவர்கள் அலி (ரலி) அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி, அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்கள் :

அலி (ரலி) அவர்களே..!
''இரத்த வெறி கொண்ட சிங்கத்தின் கோரப்பற்களுக்கு இடையே மாட்டிக் கொண்டீர்கள் என்று சொன்னால், உங்களது படையுடன் இணைந்து கொண்டு, உங்களுடன் இணைந்து போர் செய்யத் தயாராக இருக்கின்றேன், ஆனால் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலைமையைப் பொறுத்தவரை, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். எந்த முஸ்லிமையும் எதிர்த்து எனது வாள் போரிடாது. 'வணங்கத்தக்க இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை" என்று சத்தியத்திற்குச் சான்று பகர்ந்த மனிதன் ஒருவனை நான் கொன்ற சம்பவத்தின் மூலம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடத்தை நான் இன்றும் மறக்கவில்லை"".

எனவே, மதினாவில் ஏற்பட்டிருந்த குழப்பமான இந்த காலகட்டத்தில், பலர் முஆவியா (ரலி) அவர்களுக்கு எதிராக உஸாமா (ரலி) அவர்களை இழுக்க முனைந்த பொழுதும், உஸாமா (ரலி) அவர்கள், அதற்கு இணங்க மறுத்தே விட்டார்கள். அவர்கள் கூறினார்கள் :

'வணங்கத்தக்க இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை" என்று சத்தியத்திற்குச் சான்று பகர்ந்த எந்த முஸ்லிமிற்கு எதிராகவும் நான் போராட மாட்டேன், இதுவே என்னுடைய இறுதி முடிவாகும்" என்று கூறி விட்டார்கள்.

ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள். ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர (வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது. (2:193)

இவருடைய தோழர் ஒருவர் மேற்கண்ட வசனத்தைக் குறிப்பிட்டு, முஆவியா (ரலி) அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய அழைத்த பொழுது,

இது இறைநிராகரிப்பாளர்களை எதிர்த்துப் போராடுவதற்காக இறக்கப்பட்ட வசனமாகும், மேலும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது மார்க்கத்தைப் பின்பற்றி, இஸ்லாம் அனைத்து மார்க்கங்களையும் மிகைக்கும் வரைக்கும் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்று தான் கட்டளையிடுகின்றதோ ஒழிய, முஸ்லிம்களை எதிர்த்துப் போராடுவதற்காக இறக்கியருளப்பட்ட வசனமல்ல இது என்று கூறி விட்டார்கள்.

உஹதுப் போருக்கு உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் தன்னுடைய வயதையொத்த சிறுவர்களுடன் கிளம்பினார்கள். அவர்களில் சிலரைப் போரில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள், ஆனால் உஸாமா (ரலி) அவர்களையும் அவர்களுடன் சென்ற சிலரையும் குறைந்த வயதின் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திருப்பி அனுப்பி விட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் நின்று போர் செய்யும் வாய்ப்பு பறிபோய் விட்டதே என்றும், போரில் கலந்து கொள்ள விடாமல் தன்னைத் திருப்பி அனுப்பி விட்டார்களே என்றும் உஸாமா (ரலி) அவர்கள் கண்ணீருடன் வீடு திரும்பினார்கள்.

அஹ்ஸாப் போரில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போது, எங்கே சிறுவன் என்று கூறி இப்பொழுதும் தன்னை திருப்பி அனுப்பி விடுவார்களோ என்று அச்சம் கொண்ட உஸாமா (ரலி) அவர்கள், தனது முன்பாதங்களை ஊண்றிக் கொண்டு, தன்னை உயரமாகக் காட்டிக் கொண்டு நடந்து வந்தார்கள். இதனைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டே, போரில் கலந்து கொள்ள அனுமதி தந்து விட்டார்கள். அப்பொழுது அவருக்கு பதினைந்து வயது தான் ஆகியிருந்தது.

ஹுனைன் யுத்தத்தில் முஸ்லிம்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு, தோல்வியடைந்து விடுவமோ என்ற நிலையில் இருந்த பொழுது, மரண பயத்தையும் பொருட்படுத்தாமல் உஸாமா, (ரலி), அப்பாஸ் (ரலி), அபூ சுஃப்யான் (ரலி) மற்றும் இன்னும் சில நபித்தோழர்கள் களத்தில் நின்று போராடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது கீழக்கண்ட செய்தியை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளுக்கு உரத்துச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

''நான் அல்லாஹ்வின் தூதராவேன், இது பொய்யல்ல,
நான் அப்துல் முத்தலிப் (சகோதரனின்) மகனாவேன்"".

முஅத்தா போரில் உஸாமா (ரலி) அவர்கள் தனது தந்தை ஸைத் பின் ஹாரிதா (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் நின்று போராடினார்கள். அப்பொழுது உஸாமா (ரலி) அவர்களுக்கு பதினெட்டு வயதே ஆகியிருந்தது. அந்தப் போரில் தனது தந்தை தனது கண்ணெதிரிலேயே வீர மரணம் அடைந்ததைப் பார்த்த அவர்கள், தனது வீரத்தையும், தைரியத்தையும் இழந்து விடவில்லை, மாறாக, ஜாஃபர் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் போரிட்டு, அவரும் வீர மரணம் அடையும் வரைக்கும் போராடினார்கள். பின் அப்துல்லா பின் ரவாஹா (ரலி) அவர்கள் அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களும் வெகுவிரைவிலேயே வீரமரணம் அடைந்து கொண்டார்கள். பின் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள், காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் கட்டளையை சிரமேற்கொண்டு உஸாமா (ரலி) அவர்கள் களத்தில் நின்று போராடினார்கள். ரோமர்களுடன் நடந்த அந்தப் போரில், பலத்த சேதங்களுக்கிடையில் எதிரிகளிடன் மாட்டிக் கொண்ட முஸ்லிம்களை, அவர்களது கிடுக்கிப்பிடித் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து நல்லமுறையில் படையை மீட்டிக் கொண்டு வந்தார்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள். இந்தப் போரில் இறந்த விட்ட தனது தந்தையை சிரியாவிலேயே நல்லடக்கம் செய்து விட்டு, மதீனாவிற்குத் திரும்பினார்கள் உஸாமா (ரலி) அவர்கள்.

ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் ரோமர்களுடன் போர் செய்வதற்காக ஒரு படையை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தயாரித்தார்கள். இந்தப் போருக்கான படையில் மிகப் பிரபலமான நபித்தோழர்களாகிய அபுபக்கர் (ரலி), உமர் (ரலி), ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) மற்றும் அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) போன்றவர்கள் கலந்து கொண்டிருக்க, அந்தப் படைக்கான தலைமைத் தளபதிப் பொறுப்புக்கு உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அப்பொழுது உஸாமா (ரலி) அவர்களுக்கு இருபது வயதே ஆகியிருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களால் தளபதிப் பொறுப்பு வழங்கப்பட்ட உஸாமா (ரலி) அவர்களின் படைக்கு, பலகா என்ற இடத்தை வெற்றி கொள்ளும் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தப் படை மதீனாவை விட்டும் கிளம்புதவற்கு முன்பே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சுகவீனமுற்றார்கள். இன்னும் அவர்களது உடல் நிலை மிகவும் மோசமானதன் காரணத்தால், அந்தப் படை மதீனாவை விட்டும் கிளம்பவில்லை. இதைப் பற்றி உஸாமா (ரலி) அவர்கள் கூறும் பொழுது,

''இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகவும் சுகவீனமடைந்து கொண்டிருந்தார்கள், அந்த நிலையில் நான் அவர்களைப் பார்க்கச் சென்றேன். நோயின் கடுமையின் காரணமாக அவர்கள் மிகவும் பலவீனமான நிலையில், அமைதியாக இருந்தார்கள். தனது கையை உயர்த்தி எனது தோளின் மீது வைத்தார்கள், எனக்காக அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்"".

இதன் பின்பு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள். அதன் பின்பு, அபுபக்கர் (ரலி) அவர்கள் புதிய கலீஃபா (ஆட்சியாளர்) வாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். நபித்தோழர்கள் அனைவரும் அபுபக்கர் (ரலி) அவர்களிடம் பைஅத் என்ற உறுதிப் பிரமாணத்தை எடுத்துக் கொண்டார்கள். ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களால் உஸாமா (ரலி) அவர்களை தளபதியா நியமதித்து அனுப்புவதற்காகத் தயார் செய்யப்பட்ட படை மதீனாவை விட்டும் கிளம்பட்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தார்கள். ஆனால், இந்தப் படை சற்று தாமதித்துச் செல்வது நல்லது என்று சில நபித்தோழர்கள் கருதினார்கள். அன்ஸார் தோழர்கள் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து, இது குறித்து அபுபக்கர் (ரலி) அவர்களிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டார்கள். இந்தப் படையை இப்பொழுது அனுப்ப வேண்டுமென்று சொன்னால், உஸாமா (ரலி) அவர்களுக்குப் பதிலாக வயதிலும், அனுபவத்திலும் மூத்த ஒருவரை பொறுப்பில் நியமித்து படையை அனுப்பி வைக்குமாறு, அபுபக்கர் (ரலி) அவர்களிடம் கூறுமாறு அவர்கள் அறிவுறுத்தினார்கள். உமர் (ரலி) அவர்களிடமிருந்து இந்த அறிவுரையைக் கேட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள் மிகவும் கோபமடைந்தவர்களாக,

''ஓ இப்னு கத்தாப்..! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்தப் படைக்குத் தளபதியாக உஸாமா (ரலி) அவர்களை நியமித்திருக்க, அவரை நீக்கி விட்டு அவரது இடத்தில் இன்னொருவரை நியமிக்கச் சொல்லும் உங்களது அறிவுரை, உண்மையிலேயே வேதனைக்குரியது. இறைவன் மீது சத்தியமாக, என்னால் அவரை நீக்கி விட்டு அவரது இடத்தில் இன்னொருவரை நியமிக்க முடியாது!"".

உமர் (ரலி) அவர்கள் திரும்பி வந்த பொழுது, நடந்தவற்றைப் பற்றி ஏனைய தோழர்கள் விசாரித்த பொழுது, உஸாமா (ரலி) அவர்களைத் தளபதியாக ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. மேலும், இது குறித்து நான் கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்களிடம் கேட்ட பொழுது, அவர்கள் மிகவும் கோபடைந்து விட்டார்கள் என்றும் அவர்களிடம் கூறினார்.

உஸாமா (ரலி) அவர்களின் தலைமயில் அமைக்கப்பட்ட அந்தப் படை இப்பொழுது மதீனாவை விட்டும் கிளம்பியது. அபுபக்கர் (ரலி) அவர்கள் அந்தப் படையுடன் சிறிது தூரம் நடந்து சென்று, படையினர் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதைப் பார்வையிட்டவர்களாகச் சென்றார்கள். அப்பொழுது உஸாமா (ரலி) அவர்கள் தனது குதிரையின் மீதேறிச் சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது :

ஓ..! கலிஃபா அவர்களே..! ஒன்று நீங்கள் இந்தக் குதிரையின் மீதேறி வாருங்கள் அல்லது நான் கீழிறங்கி உங்களுடன் நடந்து வருகின்றேன்"" என்றார்கள் உஸாமா (ரலி) அவர்கள்.

அப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
''நீங்கள் குதிரையிலிருந்தும் இறங்க வேண்டாம், இன்னும் நான் குதிரையின் மீதும் ஏற வேண்டாம். அல்லாஹ்வின் பாதையில் நடந்து சென்று அதன் மூலம் தூசியையும், அழுக்கையும் பெற்றுக் கொள்வதன் மூலம் அவனது திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொண்ட கண்ணியமிக்கவர்களுடன் நானும் ஒருவனாக இருக்க வேண்டாமா?"".

மதீனாவின் புறநகர்ப் பகுதியின் சற்று தூரம் வரைக்கும் படையுடன் சென்ற அபுபக்கர் (ரலி) அவர்கள் பின்பு, உஸாமா (ரலி) அவர்களுக்கும் ஏனைய தோழர்களுக்கும் பிரியா விடை கொடுத்தார்கள். அப்பொழுது,

''உஸமாவே..! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்குக் கூறிய அறிவுரைகளின்படி நடந்து கொள்ளுங்கள்"" என்று கேட்டுக் கொண்டார்கள். பின்பு, அவர்களது காதுக்கருகில் சென்ற அபுபக்கர் (ரலி) அவர்கள்,

உங்களுடன் உமர் (ரலி) அவர்களை அழைத்துச் செல்லாமல் அவரை இங்கு விட்டு விட்டுச் செல்வது மிகவும் நல்லதாக இருக்கும். புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் என்னுடன் அவர் இருப்பது மிகவும் அவசியமானதொன்றென நான் கருதுகின்றேன் என்றார்கள்.

இதற்குச் சம்மதித்த உஸாமா (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள் மதீனாவிலேயே இருந்து அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு உதவிகரமாக இருந்து கொள்ளட்டும் என்று கூறி, உமர் (ரலி) அவர்கள் மதீனாவிலேயே இருந்து கொள்ளட்டும் என்று உத்தரவிட்டார்கள்.

இப்பொழுது உஸாமா (ரலி) அவர்கள் மதீனாவை விட்டும் வெளியே வந்து விட்டதோடு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறிய அறிவுரைகளின்படி, அதில் எதனையும் விட்டு விடாது அதனை நிறைவேற்றி வெற்றி பெறுவதற்குண்டான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்கள். தங்களது முதல் நடவடிக்கையான சிரியாவைக் கைப்பற்றினார்கள். இதில் பலகா மற்றும் பாலஸ்தீனின் ஒரு பகுதி என்று முஸ்லிம்களின் வசம் வீழ்ந்தன. முஸ்லிம்களைப் பற்றிய பயம் ரோமர்களை ஆட் கொள்ள ஆரம்பித்தது. நெஞ்சங்கள் அச்சத்தால் நிரம்பி வழிய ஆரம்பித்தன. ரோமர்களை உஸாமா (ரலி) அவர்கள் தோல்வியுறச் செய்தார்கள்.

வெற்றி பெற்றதன் பின்னால், தனது தந்தையின் குதிரையின் மீதேறி மிகவும் பாதுகாப்பாக மதீனா வந்து சேர்ந்ததோடு, அதிகமான போர்ச் செல்வங்களையும் தன்னுடன் மதீனாவிற்கு எடுத்து வந்தார்கள். அன்றைய காலத்தில் நடந்த போர்களில் கிடைத்த போர்ச் செல்வங்களில் எல்லாவற்றையும் விட, உஸாமா (ரலி) அவர்கள் தளபதியாகக் கலந்து கொண்ட இந்தப் போரில் தான் அதிகமாக செல்வங்கள் பெறப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

இந்த வெற்றியின் பின்னால், முஸ்லிம்கள் அனைவரும் உஸாமா (ரலி) அவர்களின் திறமையைக் கண்டு கொண்டதோடு, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தேர்வு மிகச் சரியானதே என்றும், இந்தக் கண்ணியம் யாவும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கே உரித்தானது என்று எண்ணிக் கொண்டார்கள்.

உமர் (ரலி) தனது ஆட்சிக் காலத்தின் பொழுது உஸாமா (ரலி) அவர்களுக்கு அதிகமான உதவித் தொகைகளை வழங்கினார்கள். இதனைக் கண்ட உமர் (ரலி) அவர்களது மகன் அப்துல்லா பின் உமர் (ரலி) ஆட்சேபம் தெரிவித்தார்கள். உஸாமா (ரலி) அவர்கள் ஐந்தாயிரம் தினார்களை உதவித் தொகையாகப் பெற்றுக் கொள்ளும் அதேவேளையில், அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்கள் இரண்டாயிரம் தினார்களை உதவித் தொகையாகப் பெற்று வந்தார்கள். எனவே, தன்னை தனது தந்தை உஸாமாவை விட மிகவும் தரத்தில் தாழ்த்தி வைத்துள்ளார்களே என்று கருதினார்கள். இன்னும் நான் உஸாமாவைப் போலவே அதிகமான போர்களிலும் கலந்து கொண்டிருக்கின்றேனே..! பின் எனக்கு மட்டும் ஏன் குறைந்த தொகை என்று கேட்டார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், உனது தந்தையை விட உஸாமாவின் தந்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். இன்னும் உஸாமாவும் கூட உங்களை விட இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்.

தனது தந்தையிடம் கிடைத்த இந்தப் பதிலின் மூலமாக, அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்கள் அமைதியடைந்தார்கள். தனக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை திருப்தியுடன் பெற்றுக் கொண்டார்கள்.

எப்பொழுதெல்லாம் உமர் (ரலி) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களைச் சந்திக்கின்றார்களோ அப்பொழுதெல்லாம்,

''தலைவரே..! உங்களது வரவு நல்வரவாகுக..!""

என்று கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

உமர் (ரலி) அவர்களின் இந்தச் செயலைப் பார்த்த நபித்தோழர்கள் பலர் இதற்கான காரணத்தை வினவிய பொழுது, உங்களுக்குத் தெரியாதா என்ன? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு போருக்கு இவரைத் தலைமைத் தளபதியாக நியமித்திருக்க, நான் அவருக்குக் கீழ் சாதாரண சிப்பாயாகக் கலந்து கொண்டிருக்கின்றேன், என்று பதில் கூறினார்கள்.

இறைநம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா (ரலி) அவர்கள், பனூ மக்சூம் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி திருடிய சம்பவத்தின் பின்னால் நடந்தவை குறித்து இவ்வாறு கூறுகின்றார்கள். இந்தத் திருட்டு வழக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் வந்த பொழுது, இந்த வழக்கின் இறுதி முடிவு இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படி, கையை வெட்டுவதாகத் தான் இருக்கும் என்பதை அறிந்து கொண்ட பனூ மக்சூம் குலத்தவர்கள், இது தங்களுடைய குலத்திற்கு மிகுந்த அவமானத்தைத் தேடித் தரக் கூடியதாக இருக்குமே என்று கவலை கொள்ள ஆரம்பித்தார்கள். எனவே, இது குறித்து தங்களுக்குள் விவாதித்த பனூ மக்சூம் குலத்தவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகப் பிரியமான தோழரான உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களை அணுகி, தங்களுக்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பரிந்து பேசச் செய்து, அதன் மூலம் தண்டனையை ரத்து செய்து விடலாம் என்று முடிவு செய்து உஸாமா (ரலி) அவர்களை அணுகினார்கள்.

தங்களுக்கு நேரவிருக்கின்ற அவமானத்தைத் தவிர்க்கும் பொருட்டு, அச்சம் கலந்த பயத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களை அணுகி, அந்தப் பெண்ணுக்காக பரிந்து பேசத் துவங்கினார்கள். இதற்கு உஸாமா (ரலி) அவர்களும் துணையாக அமைந்தார்கள். இவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்பது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகத் தெளிவாக ஆகி விட்டதன் பின்னர், இவர்கள் இறைவனால் இறக்கியருளப்பட்ட தண்டனைச் சட்டத்தை அல்லவா மாற்றி அமைக்க வாதாடுகின்றார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, கோபம் கொண்டவர்களாக,

''உஸாமாவே..! அல்லாஹ்வினால் இறக்கியருளப்பட்ட இந்த தண்டனைச் சட்டத்தை மாற்றி அமைத்து விடலாம் என்பதை கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றை, எவ்வாறு பரிந்து பேசுவதற்காக வந்துள்ளீர்கள்? என்பது தெரியவில்லை. மேலும் கூறினார்கள், இத்தகைய செயல்கள் பனூ இஸ்ரவேலர்களிடம் காணப்பட்டன. உயர் குலத்தவர் ஒருவர் தவறு செய்தால், அதனை மறந்து விடுவார்கள். பொதுமக்களில் ஒருவர் அதனைச் செய்தால், தண்டனைச் சட்டங்கள் அவர் மீது பிரயோகிக்கப்படும். அதன் காரணமாகத் தான் அவர்கள் அழிவுக்கு உட்பட்டார்கள். இந்த வானங்களையும், பூமியையும் அதில் உள்ளவையும் எவனது கைவசத்தில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, என்னுடைய மகள் பாத்திமா (ரலி) அவர்கள் தவறு செய்திருப்பினம், அவளது கையை நான் வெட்டியே தீருவேன்"" என்றார்கள்.

இந்த சம்பவத்திற்குப் பின்னும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களை மிகவும் நேசித்தார்கள், இத்தகைய செயல்பாடுகள் அவர் மீது கொண்டிருந்த பாசத்தை குறைத்து விடவில்லை.

விலையுயர்ந்த பொருள்கள் ஏதாவதொன்றை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பரிசாகப் பெற்றார்கள் என்று சொன்னால், அதனை உஸாமா (ரலி) அவர்களுக்கு வழங்கக் கூடியவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். அவ்வாறே, ஸகம் இப்னு ஹஸ்ஸாம் என்பவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வழங்கிய கயிற்றை, தான் அணிந்து விட்டு, பின்பு அதனை உஸாமா (ரலி) அவர்களுக்கு பரிசாக வழங்கி விட்டார்கள்.

தஹியா கல்பீ என்பவர் விலையுயர்ந்த ஆடை ஒன்றை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பரிசாக வழங்கினார்கள். அதனையும் அவர்கள் உஸாமா (ரலி) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள், இந்த வகையில் உஸாமா (ரலி) அவர்கள் மிகவும் அதிர்ஷ்டக்காரராக விளங்கினார்கள். எவரொருவரை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்களோ, அவரை அல்லாஹ்வும் விரும்புகின்றான் என்ற சிறப்பு கௌரவத்தைக் காட்டிலும் ஒரு மனிதனுக்கு என்ன தான் வேண்டும்?

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்த பொழுது, உஸாமா (ரலி) அவர்களுக்கு பதினெட்டு அல்லது இருபது வயதுதான் ஆகியிருக்கும். விளையாட்டுப் பருவங்கள் கடந்து அறிவு முதிர்ச்சி பெற்ற வாலிபப் பருவத்தில் அதிகமான நேரங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்து கழிப்பதற்குண்டான சந்தர்ப்பம் கிடைக்காவிடினும், பல சந்தர்ப்பங்களில் மக்கள் பிரச்னைகளுக்கு இவருடைய கருத்தையும் கேட்பதுண்டு. உதாரணமாக,

பிளேக் நோய் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏதாவது கூறியிருக்கின்றார்களா என்பது பற்றி உங்களுக்கு ஞாபகமிருந்தால் சொல்லுங்களேன் என்று ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு உஸாமா (ரலி) அவர்கள்,

''பிளேக் என்பது தண்டனையாகும், இஸ்ராயிலின் மக்களில் ஒரு பிரிவினர் மீது இறைவன் இறக்கியருளிய வேதனையாகும் அது. எனவே, எந்தப் பகுதியாவது பிளேக் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்று கேள்விப்பட்டால், அங்கு செல்வதைத் தவிர்ந்து கொள்ளவும். இன்னும் அந்த இடத்தில் நீங்கள் ஏற்கனவே இருந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று சொன்னால், அதிலிருந்து தப்பிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டாம்"" என்று கூறினார்கள்.

ஒருமுறை தனது தோட்டத்தில் இருந்த ஒரு பேரீச்ச மரத்தை வெட்டி அதன் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் குருத்தை வெட்டிக் கொண்டிருந்தார்கள். இந்தச் செயலைப் பார்த்த உஸாமா (ரலி) அவர்களின் தோழர்கள் ஆச்சரியப்பட்டவர்களாக, விலையுயர்ந்த இந்த மரத்தை ஏன் இப்படி வெட்டிச் சாய்க்கின்றீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு, என்னுடைய பிரியத்திற்குரிய தாயார் அவர்கள் இந்தக் குறுத்தை சாப்பிட விரும்பிக் கேட்டு விட்ட பொழுது, அதனை நான் எவ்வாறு மறுக்க இயலும். எதுவொன்றை அவர்கள் கேட்டாலும், அது என்னுடைய சக்திக்கு உட்பட்ட நிலையில் இருக்கும் பொழுது, அதனை நிறைவேற்றாமல் நான் விடுவதில்லை என்று கூறினார்கள். இதனால் எந்த நஷ்டம் வந்தாலும் சரியே. அவர்கள் எனக்குச் செய்திருக்கும் உபகாரத்தோடு, இந்த பேரீச்ச மரத்தை ஒப்பிடும் பொழுது, இந்த பேரீச்ச மரம் ஒரு பொருட்டே அல்ல என்றும் கூறினார்கள்.

உஸாமா (ரலி) அவர்கள் என்ற ஆளுமையானது, இந்த உலகத்தையும் அதில் உள்ளவற்றையும் படைத்து பரிபாளித்து வரக் கூடியவனான அல்லாஹ்வினுடைய திருத்தூதர் (ஸல்) அவர்களால், நேசிக்கப்பட்டதொரு ஆளுமையாகும். சற்று முன் தான் வாலிப வாசலில் அடியெடுத்து வைத்திருந்த இந்த ஆளுமையை, ஒரு மிகப் பெரிய படைக்குத் தலைமைத் தளபதியாக நியமித்து அவரை வழியனுப்பி வைத்த கௌரவப்படுத்தினார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி, அவர்கள் மரணமான பின்பும் சரி, இறைத்தூதர் (ஸல்) அவர்களாலும், இன்னும் அவர்களது தோழர்களான கலீபாக்களாலும் கௌரவமாக நடத்தப்பட்டார்கள்.

இத்தகைய சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான உஸாமா (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் பொழுது, மதீனாவிற்கு அருகில் உள்ள ஜரஃப் என்ற இடத்தில் வைத்து, தனது அறுபதாவது வயதில் இறையடி சேர்ந்தார்கள்.

''நான் வந்து விட்டேன், உன்னுடைய அழைப்பை ஏற்று நிலையான சுவனத்தை நாடி..""

''நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக"".(89:28)
Previous Post Next Post