அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி)


என்னருமைச் சகோதரர்களே!

இறைத் தூதர் (ஸல்) அவர்களால், சுவனத்தை அனந்தரங் கொள்ளக் கூடியவர்கள் என்று நன்மராயங் கூறப்பட்ட நபித்தோழர்கள் பத்துப் பேரில் அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களும் ஒருவராவார்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்தக் காலப் பிரிவு முஸ்லிம்கள் எங்கினும் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உட்பட்டுக் கொண்டிருக்கும் காலப்பிரிவாக இருந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ஈராக் மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான போர் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், அபூ உபைதா (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறானது, நம் அனைவருக்கும் இன்னும் தலைமைப் பதவியை விரும்பும் அனைவருக்கும் மிகச் சிறந்த பாடமாக இருந்து கொண்டிருக்கின்றது.

இஸ்லாத்தின் உன்னதத்திற்காகப் பாடுபட வேண்டிய சமுதாயமும் அதன் தலைவர்களும் தங்களது சுய லாபங்களுக்காக எதிரியிடம் கூட தன் சகோதரனைக் காட்டிக் கொடுக்கும் துரோகச் செயலைச் செய்து கொண்டிருக்கக் கூடிய இழி நிலையையும், தன் சொந்த சகோதரனை அடிப்பதற்கு - சிலுவை யுத்தக் காரர்களுக்கு இடம் கொடுத்து முஸ்லிம்களின் உயிர்களின் மீது தங்களது அரியணைகளை தக்க வைத்துக் கொண்டிருக்கக் கூடிய முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு மத்தியில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பயிற்சிப் பாசறையில் வாழ்ந்த அந்த புண்ணிய ஆத்மாக்கள் எந்தளவு மார்க்கத்திற்காக தங்களது சுய லாபங்களைத் துச்சமாக மதித்து நடந்தார்கள் என்பதை இந்த வரலாற்றின் மூலம் நாம் படிப்பினை பெற்றுக் கொள்ள முடிகின்றது. அவர்கள் தளபதிகளாக ஆட்சியாளர்களாக இருந்தாலும், கொடுக்கப்பட்ட பதவிக்கு நாம் மறுமையில் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்று அவர்கள் மறுமையைப் பயந்து வாழ்ந்தார்கள். தங்களிடம் செல்வம் குவிந்திருந்த போதிலும் எளிய வாழ்வையே மேற்கொண்டார்கள். தலைமைப் பதவியிலிருந்து தங்களை கீழிறக்கி, சாதாரண சேவகனாக மாற்றிய போதும் புரட்சிக் கொடி பிடிக்காமல் சமுதாயத்தை இரண்டு பிளவாகப் பிளந்து போடாமல், சேவகம் செய்யவும் அவர்கள் தயாரானார்கள் என்ற வரலாற்றைப் பார்க்கும் பொழுது, எதிரிகளுக்கு இடம் கொடுத்த முஸ்லிம்களை நொந்து கொள்வதா? அல்லது முஸ்லிம்களின் இயலாமையைப் புரிந்து கொண்டு முஸ்லிம்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தும் எதிரிகளை நொந்து கொள்வதா? என்ற கேள்வியை நமக்குள் கேட்டுக் கொண்டு, நமது இழிநிலைகளை நினைத்து மிகவும் சிந்திக்க வேண்டியவர்களாகவும், அந்த இழிநிலையை போக்குதவற்கு ஈகோ போன்றவற்றை தூக்கி எறிந்து, இஸ்லாத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடக் கூடியவர்களாக நம்மை மாற்றிக் கொள்வதற்கும், நாம் நம்மை பக்குவப்படுத்திக் கொள்ளக் கூடிய அவசரம் ஒன்று இருக்கின்றது என்பதை உணர்ந்தவர்களாக நம்மை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

நம் முன் அழகிய முன் மாதிரியை விட்டுச் சென்ற அந்த உத்தம தோழர்களின் வழி நடக்க முயற்சிப்போம். நமக்குள் உள்ள பிளவுகள் பிரிவினைகளை மறப்போம், மன்னிப்போம். இயக்கக் கொடிகள் உயர வேண்டும் என்பதை விட, இஸ்லாத்தை உயர்த்துவது ஒன்றையே நம் நோக்கமாகக் கொள்வோம்.

அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) - இவரது இயற் பெயர் ஆமிர் பின் அப்துல்லா பின் அல் ஜர்ராஹ் என்று இருந்தாலும், அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் என்ற சிறப்புப் பெயர் கொண்டே அழைக்கப்பட்டார். குறைஷிகளிலேயே மிகவும் மென்மையான, நன்னடத்தையுள்ள, நல்ல பழக்கவழக்கங்கள் உள்ள மனிதர்களில் அபூபக்கர் (ரலி) மற்றும் உதுமான் (ரலி) அவர்களுடன் ஒப்பிடும் அளவுக்கு மிகச் சிறந்த மனிதராகத் திகழ்ந்தார்கள்.

இவர் தனது நண்பர்களுக்கிடையில் மிகவும் மென்மையானவராகவும், போரின் பொழுது மிகவும் கடின சித்தம் கொண்டவராகவும் திகழ்ந்தார். உஹதுப் போரிலே கலந்து கொண்டிருந்த பொழுது, எதிரிகளின் தாக்குதலின் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய தாடையில் அவர்கள் அணிந்திருந்த தலைக்கவசத்தின் பகுதிகள் குத்திச் செறுகி இரத்தம் வழிந்து கொண்டிருந்த பொழுது, அவற்றை தன் பற்களினால் கடித்து இழுத்து இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோவினையிலிருந்து பாதுகாத்ததன் காரணமாக இவர், தனது இரண்டு பற்களையும் இழந்தார்.

அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), அர்கம் பின் அபீ அர்கம் (ரலி), உத்மான் பின் மதூன் (ரலி) ஆகியோர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களில், அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு இல்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருக்கின்றார் என்றும் வாக்குறுதி அளித்து, இஸ்லாத்தில் இணைந்த சிறப்புக்குரியவர்கள்.

சந்தேகமில்லாமல் இஸ்லாம் என்னும் கோட்டையை அந்த அரபு மண்ணிலே கட்டப்படுவதற்குத் தூண் போல நின்றவர்கள் இவர்கள்.

அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மற்ற இறைத் தோழர்கள் எவ்வாறு கஷ்டங்களையும் துன்பங்களையம் அனுபவித்தார்களோ, அதனைப் போலவே இவரும் குறைஷிகள் தந்த துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்வதில் உறுதியுடன் இருந்தார்கள்.

உஹதுப் போரிலே எதிரிகளின் நடுவே சென்று அவர்களைத் துவம்சம் செய்து ஓட ஓட விரட்டி தனது வீரத்தைக் காட்டிய பெருமகன் இவர். உஹதுப் போர் நடந்து கொண்டிருக்கின்றது. எதிரிகளின் நடுவே அபூ உபைதா (ரலி) நின்று போரிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு மனிதர் இவரிடம் வம்புக்கென்று போர் புரிய வருகின்றார். இவரும் அந்த மனிதரைத் தவிர்த்து மற்ற பக்கம் கவனம் செலுத்தும் பொழுதெல்லாம், இவரை அவமதிக்கும் நோக்கிலேயே இவர் முன் வந்து வம்புக்கிழுக்கின்றார். இவரும் மீண்டும் மீண்டும் அந்த மனிதரைத் தவிர்க்கவே முயற்சிக்கின்றார். இறுதியில் அவருடன் மோதியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில், அந்த எதிரியின் தலையில் தனது வாளைப் பாய்ச்சி அவரது தலையை இரு கூராக்கி, நிலத்திலே வெற்றுடலாக வீழ்த்துகின்றார். அபூ உபைதா (ரலி) அவர்களை இந்தளவு சினம் கொள்ளச் செய்த அந்த மனிதர் யாரென்று கருதுகின்றீர்கள்?! உங்களால் யூகிக்க முடிகின்றதா? அபூ உபைதா (ரலி) அவர்களின் வாளுக்கு இரையான அந்த மனிதர் வேறு யாருமல்ல, அபூ உபைதா (ரலி) அவர்களின் தந்தையார் தான் அந்த மனிதராவார்.

அபூ உபைதா (ரலி) அவர்கள் இதன் மூலம் சொந்தபந்த உறவுகளா? அல்லது இறைவனின் மார்க்கமா? என்ற இக்கட்டான நிலை தன் முன் வந்து நின்ற பொழுது, இறைமார்க்கத்திற்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தாரே ஒழிய, மாறாக, தனது சொந்த பந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதன் மூலம் அவர் தான் ஏற்றுக் கொண்ட மார்க்கத்தில் தனக்கிருந்த உறுதியை வெளிப்படுத்தினார். இறைவனின் மீதுள்ள அன்பானது மற்ற எல்லாவற்றையும் மிஞ்சியது. இறைவனின் மீதுள்ள அன்பிற்கு முன்னால் மலையே வந்தாலும் சரி அல்லது ஆறே குறுக்கிட்டாலும் சரியே, அவற்றை எல்லாம் தன் கால் தூசிக்கு சமமாக்கி, இறைவனது அன்பைப் பெறுவதொன்றே தங்களது நோக்கமாகக் கருதி வாழ்ந்த அந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களின் வரிசையில் அபூ உபைதா (ரலி) அவர்களும் ஒருவராகத் திகழ்ந்தார். இதன் மூலம் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்கள். எதிரிகளின் தூக்கத்தில் கூட அவர்களை அச்சுறுத்தினார்கள்.

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே! (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான். மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க. நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள். (58:22)

ஒரு முஸ்லிம் இறைவனிடத்திலிருந்து விரும்பக் கூடிய மிகப் பெரிய வெகுமதி என்னவென்றால், தன்னைப் படைத்தவனைச் சந்திக்கின்ற அந்த நாளிலே வெற்றி பெற்ற கூட்டத்தினருடன் சொர்க்கச் சோலையிலே உலா வருவதொன்று தானே! அத்தகைய சொர்க்கச் சோலைகளிலே உலா வரக் கூடிய கூட்டத்தினரில் ஒருவராக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவாயினாலேயே அருள் வாக்குப் பெற்றவர், அதாவது இந்த உலகத்திலேயே சொர்க்கத்திற்கு நன்மாரயங் கூறப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவராவார், நமது இந்த மதிப்பிற்குரிய அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்கள்.

ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்ட பொழுது, மிகப் பிரபலமான படைத்தளபதிகளுள் ஒருவராக அங்கே அபூ உபைதா (ரலி) அவர்களும் இருந்தார்கள். கைபரை வெற்றி கொண்ட பின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது படைகளை உமர் பின் ஆஸ் (ரலி) அவர்களது தலைமையில் சலாசில் என்ற இடத்திற்கு அனுப்பினார்கள். எதிரிப் படையணிகளை மதிப்பீடு செய்த உமர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் மேலும் அதிகப்படியான படையினரை அனுப்பி வைக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நமது அபூ உபைதா (ரலி) அவர்களது தலைமையில் மிகச் சிறப்புப் பெற்ற தோழர்களான அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) போன்றோர்களையும் அனுப்பி வைத்தார்கள். இதன் மூலம் அபூ உபைதா (ரலி) அவர்கள் எத்தகைய உயர் தலைமைப் பண்புகளைப் பெற்றிருந்தார்கள் என்பதை விளங்க முடியும்.

இத்துணை தலைமைப்பதவிக்குத் தகுதியானவராக இருந்தும், இன்றைக்கு நம் சமுதாயத்தில் காணப்படும் போட்டி பொறாமைகளைப் போன்றதொரு இழி குணங்களுக்கு உட்பட்டு, ஷைத்தானின் சூழ்ச்சி வலையில் விழாமல் தங்களைக் காத்துக் கொண்ட அவர்களது நற்பண்புகளுக்கு இந்த சலாசில் போர் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அபூ உபைதா (ரலி) அவர்கள் தனது படையணியுடன் சலாசிலை அடைந்தவுடன், அங்கே மொத்தப் படைகளுக்கும் யார் தலைமை தாங்குவது என்றதொரு பிரச்னை எழுந்தது. இப்பொழுதுள்ள தலைவர்களாக இருந்தால், தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டு சமுதாயத்தை இரண்டாகப் பிளந்திருப்பார்கள். ஆனால் அபூ உபைதா (ரலி) அவர்களோ, தன்னுடைய தலைமைப் பதவியை விட்டு இறங்கி, தானே முன் வந்து உமர் பின் ஆஸ் (ரலி) தலைமையில் போரில் கலந்து கொள்ளச் சம்மதித்தார்கள். இதன் மூலம் மிகச் சிறந்ததொரு முன்னுதாரணமிக்க தோழராக அபூ உபைதா (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டின் பொழுது, செங்கடலை ஒட்டிய பகுதியில் சென்று கொண்டிருந்த குறைஷிகளின் வணிகக் கூட்டத்தை எதிர் கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட 300 பேர் கொண்ட படையணிக்கு, அபூ உபைதா (ரலி) அவர்களைத் தளபதியாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

அந்த படையணிக்குத் தேவையான உணவாக சிறிதளவே பேரீத்தம் பழங்கள் இருந்தன. அந்தப் பழங்களை ரேஷன் அடிப்படையில் தன் தோழர்களுக்கு அபூ உபைதா (ரலி) அவர்கள் பங்கிட்டுக் கொடுத்து வந்தார்கள். ஒரு சமயத்தில் ஒரு வேளைக்கு ஒரு நபருக்கு ஒரு பேரீத்தம் பழம் வீதம் கொடுக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டார்கள். அதனை அடுத்து அந்தப் படையணி கை வசம் வைத்திருந்த அனைத்து பேரீத்தம் பழங்களும் தீர்ந்து போனதன் பின், அங்கு கிடைத்த இலை தலைகளைத் தின்று கொண்டு, தங்களது வாழ்க்கையை நகர்த்திய அந்தப் படையணிகள், எந்தவித முக்கலையும் முனகலையும் வெளிப்படுத்தாமல், தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியின் மீது மிகவும் கவனமாக இருந்து, தாங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்பை நிறைவேற்றினார்கள். அப்பொழுது, இவர்களது இந்தத் தியாகத்தைக் கௌரவிக்கும் பொருட்டு, இறைவன் இவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த கடலின் ஓரம் ஒரு மீனை ஒதுங்கச் செய்தான். அந்த மீனைப் பிடித்து, மொத்த படையணியினரும் தங்களது பசியைப் போக்கிக் கொண்டார்கள். இவர்களது இந்தப் பண்புகள், தவக்கல்த்து அலல்லாஹ் - அதாவது இறைவனையே முற்றிலும் சார்ந்திருந்து, அவனிடமே தங்களது அனைத்து அலுவல்களின் நன்மை தீமைகளை ஒப்படைத்து விடக் கூடிய பண்பைப் பறைசாற்றுவதாக இருந்தது, இதன் மூலம் அவர்களது ஈமானின் - இறைநம்பிக்கையின் உறுதியை வெளிப்படுத்திக் காட்டியது. இன்னும் தன் மீது பொறுப்பைச் சுமத்தி நேர்மையோடும், வாய்மையோடும் காரியமாற்றும் முஸ்லிம்களை இறைவன் என்றுமே கைவிட மாட்டான் என்பதையும் இந்தச் சம்பவம் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு ஏமன் தேசத்திலிருந்து வந்த ஒரு குழுவொன்று இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்து விட்டு, ஜிஸ்யா என்னும் பாதுகாப்பு வரியைச் செலுத்தச் சம்மதம் தெரிவித்து விட்ட பின், தங்களுக்கு இறைமார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பதற்காக ஒருவரை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை வைத்தார்கள். எனவே, அந்த மக்களுடன் நம்பிக்கையான ஒருவரைத் தேர்வு செய்து அனுப்பி வைக்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தீர்மானித்த பொழுது, இன்னும் அபுபக்கர் (ரலி), உமர் (ரலி) போன்றோர்களெல்லாம் இருந்து கொண்டிருந்த அந்த அவையில், இன்னும் தன்னைத் தேர்வு செய்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைக்க மாட்டார்களா என உமர் (ரலி) போன்றோர்களெல்லாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கண்படும் படியாக தங்களது கழுத்துக்களை உயர்த்தி உயர்த்தி தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ உபைதா (ரலி) அவர்களைத் தேர்வு செய்து அந்தக் கூட்டத்தினருடன் அனுப்பி வைத்தார்கள். அந்தளவுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நன்னம்பிக்கையைப் பெற்றுக் கொண்ட நபித்தோழராக அபூ உபைதா (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் மிகப் பிரபலமான போர்களான பத்ர், உஹத், கந்தக், பனூ குரைளா மற்றும் சலாசல், திமிஸ்க், ஃபஹல், ஹமஸ், யர்முக் ஆகிய போர்களிலும் பங்கெடுத்துக் கொண்ட மாவீரராகவும் அபூ உபைதா (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். இன்னும் ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களில் ஒருவராகவும், ஹஜ்ஜத்துல் விதா-வின் பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜில் கலந்து கொண்ட நபித்தோழர்களில் ஒருவராகவும் இருந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்ததன் பின்பு, நபித்தோழர்களின் மத்தியில் மிகப் பெரியதொரு குழப்பமான சூழ்நிலை நிலவியது. இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பிரிந்து அவரது தோழர்கள் கண்ணீர் வடித்தபடி, நிம்மதியிழந்து தவித்துக் கொண்டிருந்த நேரம். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடுத்து தங்களை வழிநடத்திச் செல்லக் கூடிய தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதிலும் அவர்களுக்கிடையே குழப்பங்கள் நிலவி வந்தன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் எழுந்த கொந்தளிப்பைத் தணிப்பதற்கு வழி தெரியாமல் மக்கள் திண்டாடிக் கொண்டிருந்த பொழுது, அபூ உபைதா (ரலி) அவர்கள் சமயோசிதமாக சில வேளைகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். அன்சாரிகளையும், முஹாஜிர்களையும் நோக்கி, முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றதொரு முன்மாதிரிமிக்க தலைப்பில் உணர்ச்சிப்பூர்வமானதொரு உரையை நிகழ்த்தி, எழுந்த கொந்தளிப்பை அடக்குவதற்கு முயற்சி செய்தார்கள்.

அப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்கள் எழுந்து, மக்கள் தாங்கள் விரும்பிய தலைமையைத் தேர்வு செய்யலாம் என்று அறிவித்து விட்டு, உமர் (ரலி) அவர்களை நோக்கி, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உமர் (ரலி) அவர்களின் வருகையால் இஸ்லாம் பொழிவுற்றது, அவரது மூலமாக அல்லாஹ் இஸ்லாத்தை மேலோங்கச் செய்தான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இன்னும் உங்கள் முன் நின்று கொண்டிருக்கும் அபூ உபைதா (ரலி) அவர்களைப் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறும் பொழுது, ஒவ்வொரு சமுதாயத்திற்கு ஒரு நன்னம்பிக்கையாளர் உண்டு. என்னுடைய சமுதாயத்தின் நன்னம்பிக்கையாளராக அபூ உபைதா (ரலி) அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இப்பொழுது உங்கள் முன் மிகச் சிறந்த நாயகத் தோழர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் நீங்கள் விரும்பியவரை உங்களது தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறி முடித்ததும், சமயோசிதமாகச் செயல்பட்ட அபூ உபைதா (ரலி) அவர்கள், மற்றும் உமர் (ரலி) அவர்கள் தாங்களே முன் வந்து அபுபக்கர் (ரலி) அவர்களின் திருக்கரங்களில் பைஅத் என்ற உடன்படிக்கை செய்து, அபுபக்கர் (ரலி) அவர்களைத் தங்களை வழி நடத்திச் செல்லும் தலைவராகத் தேர்ந்தெடுத்த பொழுது, அதனைப் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை நபித்தோழர்களும் ஒவ்வொருவராக வந்து அபுபக்கர் (ரலி) அவர்களைத் தங்களது தலைவராக ஏற்றுக் கொண்டதற்கான பைஅத் - உறுதி மொழியை வழங்கினார்கள்.

இதன் மூலம் நபித்தோழர்களுக்கிடையில் நிலவி வந்த மிகப் பெரும் குழப்பம் தீர்க்கப்பட்டது. ஒவ்வொருவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இந்த உம்மத்தின் மிகப் பெரிய இக்கட்டான சூழ்நிலையைச் சமாளித்த பெருமை அபூ உபைதா (ரலி) அவர்களையே சாரும்.

அபூ உபைதா (ரலி) அவர்கள் மிகப் பெரிய போர்ப் படைத்தளபதியாக மட்டும் இருக்கவில்லை, மாறாக, மிகச் சிறந்த அரசுத் தூதராகவும், ஆலோசகராகவும், குழப்பான சூழ்நிலைகளில் மிகச் சிறந்த தீர்வை எட்டக் கூடியவராகவும் திகழ்ந்தார்கள். இந்த மிகச் சிறந்த நற்குணங்கள் தான் அவருக்கு அமீனுல் உம்மா (சமுதாயத்தின் நன்னம்பிக்கையாளர்) என்ற கௌரவப் பெயரை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலமாக ஈட்டித் தந்தது.

இன்னும் அவர் உயிருடன் இருந்தால், அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு அடுத்த கலீஃபாவாக அபூ உபைதா (ரலி) அவர்களையே நான் தேர்ந்தெடுப்பேன் என்று உமர் (ரலி) கூறினார்கள் என்பதிலிருந்து, எவ்வளவு மிகச் சிறந்த தகைமைப் பண்புகளை அபூ உபைதா (ரலி) அவர்கள் பெற்றிருந்தார்கள் என்பது விளங்கும்.

அபூ உபைதா (ரலி) அவர்கள் படைத்தளபதியாக இருக்க, சிரியாவின் ஹமாஸ் பகுதியை அவரது படை வெற்றி கொண்டதன் பின்பு, அந்தப் பகுதிக்கு உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்களை மேற்பார்வையாளாராக நியமித்து விட்டு, தனது படையை அங்கிருந்து நகர்த்திக் கொண்டு, செல்லும் வழியில் உள்ள சிறு சிறு குழுக்களை வெற்றி கொண்டதன் பின், லஸாக்கியா என்ற நகரை அடைந்து அந்த நகரின் கோட்டையை முற்றுகையிடுகின்றார்கள்.

இந்த முற்றுகைப் போரும் அதன் பின் நடந்த சம்பவங்களும் இன்றும் இராணுவ திட்டமிடல் வரலாற்றில் மிகச் சிறந்த உத்தியாகப் போற்றப்படுகின்றன. அந்த நகரின் கோட்டையை முற்றுகை இட்ட அபூ உபைதா (ரலி) அவர்களது ராணுவம், அந்தக் கோட்டையைச் சுற்றிலும் பதுங்கு குழிகளை வெட்டி வைக்கின்றது. அதன் பின் தனது படைகளை வாபஸ் பெற்றுக் கொண்டு, அந்த நகரின் ஒதுக்குப் புறத்திற்குத் தனது படையை நகர்த்திக் கொண்டு செல்கின்றார். தங்களது கோட்டை முற்றுகை கைவிடப்பட்டது பற்றி அறிந்து கொண்ட அவர்கள், கோட்டையின் கதவுகளைத் திறந்து தங்களது வழக்கமான அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள். மீண்டும் இரவானதும் தங்களது கோட்டைக் கதவுகளை மூடி விடுகின்றனர்.

இரவின் இருளைப் பயன்படுத்திக் கொண்ட அபூ உபைதா (ரலி) அவர்களது படையினர், தாங்கள் ஏற்கனவே வெட்டி வைத்திருந்த பதுங்கு குழிகளில் சென்று தங்களை மறைத்துக் கொள்கின்றனர். மீண்டும் காலைப் பொழுது புலர்ந்த பின் அந்த கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டதும், குழிகளில் பதுங்கி இருந்த அபூ உபைதா (ரலி) அவர்களது படையினர் கோட்டைக்கு உள் சென்று கோட்டையை மிக எளிதாகக் கைப்பற்றி விடுகின்றனர். இத்தைகய போர் யுக்தியை முதன் முதலாக இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியவர், நமது அபூ உபைதா (ரலி) அவர்களாகத் தான் இருக்க முடியும்.

யர்முக் என்றொரு ஆறு, இந்த ஆறு ஜோர்டான் நதியை அடைந்து இன்னும் முப்பது மைல்கள் வளைவாக ஓடி யர்முக் என்ற இடத்தை அடைந்து பின்பும் அது தனது பயணத்தைத் தொடர்கின்றது. அங்கிருந்த மிகப் பெரிய சமவெளிப் பகுதிகளிலும் பாய்ந்தோடுகின்றது. இந்த சமவெளிப்பகுதி தான் யர்முக் என்றழைக்கப்படுகின்றது. இந்த இடத்தில் அபுபக்கர் (ரலி) அவர்களது காலத்தில் மிகப் புகழ் வாய்ந்ததொரு போர் நடந்தது.

இந்தப் போரில் 2 லட்சம் படைவீரர்களைக் கொண்ட ரோமப் படை, வெறும் 40 ஆயிரம் படைவீரர்களைக் கொண்ட இஸ்லாமியப் படையினருடன் மோதியது. ஈராக்கிலிருந்து மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டு யர்முக் என்ற அந்த இடத்தை காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் அடைந்த பொழுது, முஸ்லிம்கள் பல தலைமைகளின் கீழ் சிதறி சிறு சிறு குழுக்களாக நின்று கொண்டு போர் செய்து கொண்டிருக்கின்ற தர்மசங்கடமான சூழ்நிலையைக் கவனிக்கின்றார்கள். கவலையடைகின்றார்கள். முஸ்லிம் படைகள் அபூ உபைதா (ரலி), யஸீத் பின் அபீ சுஃப்யான் (ரலி), சர்ஜீல் பின் மஸானா (ரலி), இன்னும் நான்காவதாக அம்ர் பின் ஆஸ் (ரலி) ஆகிய தலைவர்களைக் கொண்ட சிறு சிறு படைகளாக நின்று போர் செய்து கொண்டிருப்பதைக் காண்கின்றார்கள்.

இவர்கள் அனைவரும் முதலில் ஒருங்கிணைத்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், மிகவும் கவலைதோய்ந்தவர்களாக ஒரு மிகச் சிறந்த உரை ஒன்றை நிகழ்த்துகின்றார்கள். இந்த உரை இன்றைய காலகட்டத்திலும் நம் அனைவருக்கும் பொருந்தக் கூடிய உரையாக இருந்து கொண்டிருக்கின்றது.

நமது எதிரிகள் மிகச் சிறந்த தயாரிப்புகளுடனும், இன்னும் நம்மை விட பன்மடங்கு படையினருடன் அதிக எண்ணிக்கையிலும் நம் முன் நின்று கொண்டிருக்கின்றார்கள். நம்மை அழித்தொழிப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருப்பதையும் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் இப்படி சிறு சிறு குழுக்களாக இருந்து கொண்டிருப்பது உங்களை எதிர்க்கும் எதிரிகளுக்கு மிகச் சாதகமான அம்சமாகப் போய் விடும், அவர்கள் நம்மை எளிதில் வீழ்த்தி விடுவார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் படைவீரர்கள், இன்னும் காலித் பின் வலீத் (ரலி) அவர்களது ஆலோசனைப்படி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைமையின் கீழ் போரிடுவது என்றும் முடிவாகியது. இப்பொழுது, முஸ்லிம் படைவீரர்கள் ஒற்றுமையாக ஓரணியாக ஒரு தலைமையின் கீழ் நின்று போரிடத் தீர்மானித்து, எதிரிப் படையினரை ஊடறுத்துச் சென்று வெற்றியை நோக்கிப் போரிடுகின்றார்கள். முதல் நாள் போர் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் போராடுவது என்று தீர்மானமாகியது, இன்னும் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தனக்குள்ள அனுபவத்தின் மூலமாக, முஸ்லிம் படையணியினருக்கு பயிற்சி அளித்து போருக்குத் தயார்படுத்துகின்றார்கள்.

இரண்டு அணிகளுக்கும் இடையே மிகக் கடுமையாகப் போர் நடைபெறுகின்றது. முதல் நாளிலேயே ரோமர்களது படை ஒரு லட்சம் போர் வீரர்களை இழக்கின்றது. வாட்களின் இரைச்சலும், அடிபட்டவர்களின் ஓலங்களும் திரும்பும் திசை எல்லாம் ஒலித்துக் கொண்டிருந்தது. முஸ்லிம்கள் ரோமப் படைகளை ஊடறுத்துச் சென்று காலீத் பின் வலீத் (ரலி) தலைமையில் மிகவும் சுறுசுறுப்பாக போர் புரிந்து கொண்டிருந்த பொழுது, தலைநகர் மதீனாவிலிருந்து வந்த தூதர் ஒருவர் ஒரு கடிதத்தைக் கொண்டு வருகின்றார். மதீனாவிலிருந்து வந்த அந்தத் தூதர் தான் கொண்டு வந்த கடிதத்தை அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களிடம் ஒப்படைக்கின்றார். கடிதத்தை வாங்கிய அபூ உபைதா (ரலி) அவர்கள், அதனை யாரிடமும் கூறாமல் தனது சட்டைப் பையில் வைத்துக் கொள்கின்றார்.

இப்பொழுது முஸ்லிம்கள் ரோமர்களை வெற்றி கொண்டு விட்டனர், அந்தக் காட்சியை படைத்தளபதியாக இருந்த காலித் பின் வலீத் (ரலி) பார்த்துக் கொண்டிருந்த அந்த சமயத்தில் மிகவும் மரியாதையுடன் மதீனாவிலிருந்து வந்த தபாலை அவரிடம் அபூ உபைதா (ரலி) அவர்கள் ஒப்படைக்கின்றார்கள். கடிதத்தை படித்து முடித்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், அந்தக் கடிதத்தில் அபுபக்கர் (ரலி) அவர்கள் இறந்து விட்ட செய்தியை அறிந்து மிகவும் கடுமையான சோகத்திலாழ்ந்து விடுகின்றார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மேலும் அந்தக் கடிதத்தில் அபுபக்கர் (ரலி) அவர்களை அடுத்து, உமர் (ரலி) அவர்களை மக்கள் தங்களது அடுத்த கலீபாவாகத் தேர்ந்தெடுத்திருப்பது குறித்து மிகவும் சந்தோஷமடைந்தார்கள். இன்னும் ஒரு அதிர்ச்சியான செய்தியும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது, படைத்தளபதிப் பொறுப்பில் இருந்து காலித் பின் வலீத் (ரலி) அவர்களை நீக்கி விட்டு, அந்த இடத்தில் அபூ உபைதா (ரலி) அவர்களை மீண்டும் நியமனம் செய்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தைப் படித்த மாத்திரத்திலேயே உடனே தனது பொறுப்பை அபூ உபைதா (ரலி) அவர்களுக்கு மாற்றிக் கொடுத்து விட்டு, அபூ உபைதா (ரலி) அவர்களது தலைமையின் கீழ் போர் புரியத் தயாராகி விட்டார்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள்.

இன்னும், அபூ உபைதா (ரலி) அவர்களே! அல்லாஹ் உங்கள் மீது அருட்கொடைகளைச் சொறியட்டும். கடிதம் வந்தவுடனேயே ஏன் நீங்கள் என்னிடம் தெரிவிக்கவில்லை?

அமீனுல் உம்மா அபூ உபைதா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
படைக்களத்தில் நாங்கள் உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இன்னும் நீங்கள் ரோமப் படைகளுக்கு நடுவே முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில் உங்களைத் தடுக்கவும் விரும்பவில்லை. நாம் இந்த உலகத்தின் அதிகாரத்தை வேண்டி நிற்பவர்களல்ல, மாறாக, இந்த உலகத்தில் கடமையாற்ற வந்தவர்கள். அல்லாஹ்வினுடைய திருப்பொருத்தத்தை நாடி கடமையாற்றக் கூடிய நாம் அனைவரும் சகோதரர்களே! என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிலைக் கூறினார்கள்.

மிகக் கடினமான சூழ்நிலைகளின் போது தனக்குக் கிடைக்கப் பெற்ற, வலியக் கிடைத்த அதிகாரத்தின் மீது கவனம் செலுத்தாமல், அமைதியாகவும் பொறுப்பாகவும் இருந்து கடமையாற்றிய இவர்களின் பண்பு.., மீண்டும் அவர்களை, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய அமீனுல் உம்மத் என்ற பட்டத்திற்குத் தகுதி வாய்ந்தவராகவும், அதனை நிரூபிப்பது போல் இருந்தது. அவர் தலைமைப் பதவியை அங்கு விரும்பவில்லை. மாறாக, இஸ்லாத்தின் மறுமலர்ச்சி ஒன்றே தங்களது ஒரே நோக்கமாகக் கொண்டு பணியாற்றிய அந்த உத்தமத் தோழர்களின் பண்புகள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த நன்மக்களிடம் விதைத்து விட்டுச் சென்று நற்பண்புகளின் தாக்கங்கள் தான் அதன் காரணம் என்பதை சொல்லாமல், அவர்கள்  செயல்கள் நிருபணம் செய்து கொண்டிருந்தன. இன்னும் தன்னிடமிருந்த பதவி பறிக்கப்பட்ட பின்பும் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் எந்தவித மறுப்புமின்றி தன்னுடைய பதவியை மாற்றிக் கொடுத்ததும் இத்தைகய சிறப்புப் பண்புக்குரியவர்களின் பட்டியலில் அவர்களையும் சேர்த்தது. இன்னும் நாகரீகம் என்றால் என்ன? என்று கேட்டுக் கொண்டிருந்த அரபுக் குலங்களில், எத்தகைய சிறப்புத் தகைமையை அந்த மக்கள் மத்தியில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கின்றார்கள் என்பதையும் அவர்களது செயல்பாடுகள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

டமாஸ்கஸ் நகரம் வெற்றி கொள்ளப்பட்ட பின்பு தளபதி அபூ உபைதா (ரலி) அவர்கள், கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு மடல் எழுதி அனுப்புகின்றார்கள், அந்த மடலில் உமர் (ரலி) அவர்களே, டமாஸ்கஸ் நகர மக்கள் தங்களது வருகைக்காகக் காத்திருக்கின்றார்கள், உங்களிடம் தான் தங்களது நகரின் சாவியை ஒப்படைப்போம் என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருக்கின்றார்கள். எனவே, உடன் டமாஸ்கஸ் வரவும் என்ற செய்தியை அனுப்புகின்றார்கள்.

அபூ உபைதா (ரலி) அவர்களின் மடல் கிடைத்தவுடன், உமர் (ரலி) அவர்கள் சிரியாவிற்குப் பயணமாகின்றார்கள். தன்னை வரவேற்கக் காத்திருந்தவர்களிடம் எங்கே எனது சகோதரன் என்று உமர் (ரலி) கேட்கின்றார்கள். யார் உங்களது சகோதரன் என்று மக்கள் ஆச்சரியத்தோடு வினவ, அபூ உபைதா (ரலி) அவர்கள் தான் என்று பதில் கூறவும், அவர் அண்மித்து வந்து கொண்டிருப்பதை மக்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். உமர் (ரலி) அவர்கள் அபூ உபைதா (ரலி) அவர்களைக் கட்டித் தழுவி, பின் இருவரும் அபூ உபைதா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் செல்கின்றார்கள்.

அபூ உபைதா (ரலி) அவர்களின் ஆடம்பரமில்லாத அந்த எளிய குடிசையைச் சுற்றி தன்னுடைய பார்வையைச் செலுத்திய உமர் (ரலி) அவர்கள், அங்கு வாளும், அம்பும், வில்லையும் தவிர வேறொன்றையும், இந்த உலக வாழ்வின் எந்த அலங்காரத்தையும் அங்கு அவரால் காண முடியவில்லை. ஆச்சரியமடைந்த உமர் (ரலி) அவர்கள், அபூ உபைதா (ரலி) அவர்களே! நீங்கள் ஒரு மிகப் பெரிய பொறுப்புக்குரியவராக நியமிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், உங்களுக்காக நீங்கள் எதனையும் செய்து கொள்ளவில்லையே! என்று வினவுகின்றார்.

இப்பொழுது நீங்கள் இங்கு எதனைப் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்களோ, இதுவே என்னுடைய இந்த வாழ்க்கைக்குப் போதுமானதாகும் என்று அபூ உபைதா (ரலி) அவர்கள் பதில் கூறவும், இதைத் தான் நான் உங்களிடம் எதிர்பார்த்தேன், இந்த அடிப்படைத் தகுதிகளுடனும், உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புக்களுக்கு நன்னம்பிக்கைக்கு உரியவராகவும் என்றைக்கும் நீங்கள் நிலைத்து, உண்மையாளராக இருங்கள் என்று வாழ்த்தினார்கள்.

அபூ உபைதா (ரலி) அவர்களின் கீழ் இருந்த முஸ்லிம்களின் படைகள், சிரியா மற்றும் அதன் சுற்றுப் புறங்களைக் கைப்பற்றி இஸ்லாமிய ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டிருந்த உச்சக்கட்ட வேளையில், சிரியா முழுவதும் ஒருவித பிளேக் நோய் பரவியது. இத்தகைய கொடுமையான நோயை இதற்கு முன் அந்த மக்கள் அனுபவித்ததே கிடையாது. இன்னும் அந்த நோய்க்கு அதிகமான மக்கள்  இரையாகிக் கொண்டிருந்தார்கள். இதனைக் கேள்விப்பட்ட கலீபா உமர் (ரலி) அவர்கள், அபூ உபைதா (ரலி) அவர்களை மதீனாவிற்கு வரும்படி ஒரு கடிதத்துடன் ஒரு தூதரை சிரியாவுக்கு அனுப்பி வைத்து, உங்களுடன் நான் ஒரு முக்கியமான விசயமாகக் கலந்துரையாட வேண்டியதிருக்கின்றது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடுகின்றார்கள்.

இன்னும் இந்தக் கடிதத்தை இரவில் பெற்றுக் கொண்டால், அதிகாலை பொழுது புலர்வதற்கு முன் அங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்றும், இன்னும் காலையில் பெற்றுக் கொண்டால் மாலையில் சூரியன் மறைவதற்குள் அந்த இடத்தை விட்டு, எந்தவித தாமதமுமின்றிக் கிளம்பி விட வேண்டும் என்றும் கலீபா உமர் (ரலி) அவர்கள் கட்டளை பிறப்பித்திருந்தார்கள்.

தனக்கு வந்த கடிதத்தை வாசித்துப் பார்த்த அபூ உபைதா (ரலி) அவர்கள், தன்னிடம் எந்த விசயம் குறித்து உமர் (ரலி) அவர்கள் பேசவிருக்கின்றார்கள் என்பது குறித்து உணர்ந்தவர்களாக, அந்த கடிதத்தையே சோகமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்களோ அந்தக் கடிதத்தின் மூலம் மீண்டும் இந்த உலகத்தில் பிறக்க இயலாத ஒரு மனிதரை உயிருடன் பாதுகாக்க முனைந்தார்கள்.

உமர் (ரலி) அவர்களே! நீங்கள் என்ன விசயமாக என்னிடம் கலந்துரையாட விரும்புகின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் முஸ்லிம்களின் படையணியில் இருந்து கொண்டிருக்கின்றேன், இன்னும் அவர்கள் இப்பொழுது  மிக இக்கட்டான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கும் பொழுது, என்னைத் தனித்துப் பிரித்து அவர்களை கையறுநிலையில் விட்டு விட்டு வர நான் சம்மதிக்க மாட்டேன். இன்னும் அவர்களது முடிவும், என்னுடைய முடிவும் இறைவனுடைய கைகளில் இருக்கின்றது. உமர் (ரலி) அவர்களே! என்னருமை கலீஃபா அவர்களே! உங்களது கட்டளைக்கு மறுப்புத் தெரிவிக்க நேர்ந்து விட்டதே! என்பது குறித்து நான் மிகவும் வருத்தமடைகின்றேன் என்று உமர்(ரலி) அவர்களுக்கு பதில் அனுப்பி விடுகின்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் அந்தக் கடிதத்தை வாசித்துக் கொண்டிருக்கையில், அவரது கணகள் குளமாகி, கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. கடிதத்தைப் பார்த்து விட்டு உமர் (ரலி) அவர்கள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைக் கண்ட சுற்றியிருந்த தோழர்கள், உமர் அவர்களே! ஏதேனும் துக்ககரமான செய்தியா? நமது படைகளுக்கு எதுவும் நேர்ந்து விட்டதா?, உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிய அந்த செய்தியை எங்களுக்குச் சொல்லுங்களேன் என்றார்கள். முஸ்லிம் படை வீரர்களின் தளபதி, அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்கள் மரணத்தின் விளிம்பில் இருக்கின்றார் என்று பதிலுரைத்தார்கள்.

ஆம்! மரணம் அவருக்கு மிக அருகாமையில் தான் இருந்து கொண்டிருந்தது.

உமர் (ரலி) அவர்கள் ஊகித்தபடியே நடந்தது. சில நாட்கள் கழித்து அபூ உபைதா (ரலி) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள் என்ற செய்தியும் மதீனாவை வந்தடைந்தது.

அபூ உபைதா (ரலி) தன்னுடைய கடைசி நிமிடங்களின் பொழுது தன்னுடைய தோழர்களை அழைத்துக் கூறினார் :

என்னருமைத் தோழர்களே! உங்களுக்கு நான் சில அறிவுரைகளை விட்டுச் செல்கின்றேன். அதனைப் பின்பற்றும் காலமெல்லாம் பாதுகாப்பையும் இன்னும் அமைதியையும் பெற்றுக் கொள்வீர்கள். அவையாவன:

தொழுகை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுங்கள்
ரமளான் மாதத்தில் நோன்பிருங்கள்
(குர்பானி) அறுத்துப் பலியிடுதலையும் இன்னும் தான தர்மங்களையும் செய்து கொள்ளுங்கள்
ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள்
உம்ராவையும் செய்யுங்கள்
உங்களுக்குள் நன்மையை ஏவிக் கொள்ளுங்கள்
உங்களது ஆட்சியாளர்களின் நலத்திற்கும் இன்னும் உங்கள் மீது நீதமாக நடந்து கொள்ளவும் விரும்புங்கள்.
உங்களது ஆட்சியாளர்களை நீங்கள் ஏமாற்றி விடாதீர்கள்
உங்களது கடமைகளை நிறைவேற்றும் பொழுது கவனமாக இருங்கள், அந்த கடமையை நிறைவேற்றுவதனின்னும் இந்த உலக ஆசாபாசங்கள் உங்களை மயக்கி விட வேண்டாம்.

நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பதையும் கேட்டுக் கொள்ளுங்கள்! ஒரு  மனிதனுக்கு ஆயிரம் வருடங்களாக அவனது ஆயுளை நீட்டித்துக் கொடுத்த போதிலும், என்றாவது ஒருநாள் அவன்.., நான் உங்கள் முன் கிடக்கின்றேனே இதைப் போல அவன் மரணத்தைச் சுவைத்தே ஆக வேண்டும். அந்த மரணத்தின் பிடியிலிருந்து யாரும் தப்பித்திட இயலாது.

உங்கள் மீது என்னுடைய ஸலாம் உண்டாகட்டும். அல்லாஹ்வினுடைய கருணையும் உங்கள் அனைவர் மீதும் உண்டாகட்டும்.

பின் அபூ உபைதா (ரலி) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் பக்கம் திரும்பி,

இந்த மக்களுக்கு தொழுகையை முன்னின்று நடத்துங்கள் (அதாவது, எனக்குப் பின் என்னுடைய பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள்) என்றார்கள்.

இன்னும் சில வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வந்து கொண்டிருக்கின்ற நிலையிலேயே அவரை மரணம்  தழுவிக் கொண்டது.

இன்னா லில்லாஹி  வ இன்னா இலைஹி ராஜிஊன்.

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் மக்கள் முன் நாவு தழு தழுக்க, உதடுகள் துடித்துக் கொண்டிருக்க ஒரு உரையை ஆற்றினார்கள் :

என்னருமை இஸ்லாமியச் சகோதரர்களே! இங்கு கூடியிருக்கின்ற நம் அனைவரையும் விட மிகச் சிறந்த இதயத்திற்குச் சொந்தக்காரரான ஒருவரை இழந்து விட்டு, இப்பொழுது நாம் மிகப் பெரிய துக்கத்தில் ஆழ்ந்து நின்று கொண்டிருக்கிறோம். கசடுகளிலிருந்தும் அழுக்குகளிலிருந்தும் விடுபட்ட தூய்மையான இதயத்தைப் பெற்றவராக அவர் வாழ்ந்தார். மறுமையை மிகவும் நேசித்தவர், இன்னும் நம் அனைவர் மீதும் நல்லதையே விரும்பியவர். இந்த உலக வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதே இறைத்தூதர் (ஸல்) அவர்களால், என்னுடைய உம்மத்தின் நன்னம்பிக்கையாளர் என்றும், வாழுகின்ற காலத்திலேயே சொர்க்கம் குறித்து நன்மாரயம் கூறப்பட்டவருமான ஒருவரை நாம் இழந்து துடித்துக் கொண்டிருக்கின்றோம். இன்னும் அவர் மிகச் சிறந்த அதிர்ஷ்சாலியும் கூட! சுவனத்தில் அவரது தகுதி மிக உயர்ந்த தகுதியாக நிலைபெற்றிருக்க நாம் பிரார்த்திப்போம்.

அல்லாஹ் தன்னுடைய கருணையை அவர் மீது பொழியட்டும்!
Previous Post Next Post