முன்னுரை
நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தாகும். வணங்கப்படுதவற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இரட்சகன் இல்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்றும் நான் சான்று பகருகின்றேன்.
இத்தொகுப்பு மோதிரம் அணிவதுடன் சம்பந்தப்பட்ட சில சட்டங்கள் ஒன்று சேர்க்கப்பட்ட ஒரு தொகுப்பாகும். இதற்கு "இஸ்லாத்தின் பார்வையில் மோதிரம்” என்று பெயரிட்டுள்ளேன். முஸ்லிம்களில் பல ஆண்களும் பெண்களும் மோதிரம் அணியக்கூடியவர்களாக இருப்பதை நாம் காண்கிறோம். அதை அணியக்கூடிய பலருக்கும் அது குறித்த மார்க்க சட்டங்களை அறியாதிருப்பதின் காரணமாகவும் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்பதற்காகவும் மோதிரம் தொடர்பான சில சட்டதிட்டங்களை இத்தொகுப்பில் உள்ளடக்கியிருக்கின்றேன்.
அல்லாஹ் இதனை அவனது கூலி நாடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக ஆக்குவானாக! இன்னும், இதனை வாசிப்பவர்கள் அனைவருக்கும் இதன் மூலம் பிரயோசனமடையச் செய்வானாக!
இத்தொகுப்பில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன:
1. மோதிரம் என்ற சொல்லின் வரைவிலக்கணம்.
2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மோதிரம்.
3. மோதிரம் அணிவது குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடு.
4. மோதிரம் அணியப்பட வேண்டிய உறுப்பு.
5. மோதிரம் அணிவதற்கு அனுமதிக்கப்பட்ட விரல்கள்.
6. மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள்.
7. மோதிரத்தின் வகைகள்.
8. சந்தேகங்களும் தெளிவுகளும்
மோதிரம் என்ற சொல்லின் வரைவிலக்கணம்
மோதிரம் என்பதற்கு அரபியில் “ஹாதம்” என்ற சொல் உபயோகிக்கப்படுகின்றது. “ஹாதம்” என்றால் விரல்களில் அணியப்படக்கூடிய பெறுமதிமிக்க கல் பதிக்கப்பட்ட வட்டமான ஒரு பொருளாகும். (முஃஜம் அரபி)
விரல்களில் அணியப்படும் ஓர் ஆபரணம் என்றும் இதற்கு வரைவிலக்கணமாகக் கூறலாம். (அர்ராஇத்)
மோதிரத்தில் பெறுமதிமிக்க கல் பதியப்படாமல் இருந்தால் அதற்கு அரபியில் "பத்ஹா” என்று அழைக்கப்படுவதாக இமாம் இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியதாக அஷ்ஷெய்ஹ் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி ஹபிளஹுல்லாஹ் அவர்கள் தனது "அல்கன்ஸுஸ் ஸமீன்” என்ற பத்வா தொகுப்பில் கூறியிருக்கின்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மோதிரம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மோதிரம் எவ்வாறான அமைப்பில் இருந்தது, எந்த அமைப்பில் அதை அவர்கள் அணிந்திருந்தார்கள் என்பது பற்றிய ஸஹீஹான ஹதீஸ்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு நாம் குறிப்பிட்டுள்ளோம்.
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அணிந்திருந்தது வெள்ளி மோதிரமாகும். அதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று பதியப்பட்டிருந்தது.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்து கொண்டார்கள். அது (அவர்களின் வாழ்நாளில்) அவர்களது கையில் இருந்தது. பிறகு அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கையில் அது இருந்தது. பிறகு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கையில் அது இருந்தது. பிறகு உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கையில் இருந்தது. பின்பு அது உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து "அரீஸ்” என்ற கிணற்றில் விழுந்துவிட்டது. அதில் பொறிக்கப்பட்ட இலச்சினை 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்று இருந்தது. (புஹாரி, முஸ்லிம்)
2. மோதிரத்தில் பெறுமதிமிக்க கல் அமைந்த பகுதியை தனது உள்ளங்கை பக்கமாக அவர்கள் அமைத்துக் கொள்வார்கள்.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்து கொண்டார்கள். பிறகு அதை(க் கழற்றி) எறிந்தார்கள். பிறகு வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அதில் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” எனும் இலச்சினையை பொறித்தார்கள். மேலும், "எனது மோதிரத்தில் பொறிக்கப்பட்டிருப்பதைப் போன்று வேறு யாரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்” என்று கூறினார்கள். அதை அவர்கள் அணியும்போது அதன் பெறுமதிமிக்க கல் உள்ளங்கை பக்கமாக அமையும்படி அணிவார்கள். (முஸ்லிம்)
3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மோதிரம் வெண்மையுடையதாகக் காணப்பட்டது.
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரேபியர் அல்லாதவர்களுக்குக் கடிதம் எழுத விரும்பியபோது, "அரேபியர் அல்லாதவர்கள் முத்திரை இல்லாத கடிதம் எதையும் ஏற்கமாட்டார்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டது. எனவே, அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயார் செய்துகொண்டார்கள். அவர்களது கையில் அந்த மோதிரத்தின் வெண்மையை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. (புஹாரி, முஸ்லிம்)
4. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலக்கரத்தில் மோதிரத்தை அணிந்திருந்தார்கள். அதன் பெறுமதிமிக்க கல் அபீசீனீயா - எத்தியோப்பியா - நாட்டைச் சேர்ந்ததாக இருந்தது.
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வலக்கரத்தில் வெள்ளி மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார்கள். அதன் பெறுமதிமிக்க கல் அபீசீனியாவைச் சேர்ந்ததாக இருந்தது. அதன் பெறுமதிமிக்க கல் தமது உள்ளங்கைப் பக்கம் அமையும்படி அணிந்திருப்பார்கள். (முஸ்லிம்)
5. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இடது கையிலும் மோதிரத்தை அணிந்திருக்கிறார்கள். அதனை அவர்கள் தனது சுண்டு விரலிலேயே அணிந்திருந்தார்கள்.
ஸாபித் அல்புனானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த விரலில் மோதிரம் அணிந்திருந்தார்கள் என்று அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறித் தனது இடக்கையின் சுண்டு விரலை நோக்கி சைகை செய்தார்கள். (முஸ்லிம்)
6. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மோதிரத்தின் கல் பதிக்கும் இடமும் வெள்ளியிலானதாகவே இருந்தது.
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மோதிரம் வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதன் (கல் பதிக்கும்) இடமும் வெள்ளியில் ஆனதாகவே இருந்தது. (புஹாரீ)
இந்த ஹதீஸ்கள் யாவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மோதிரம் எந்த அமைப்பில் காணப்பட்டது, அதை எவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அணிந்திருந்தார்கள் என்பதை விளக்குகின்றன.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மோதிரத்தில் 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்ற வார்த்தை எந்த அமைப்பில் எழுதப்பட்டுள்ளது என்பது குறித்து இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மோதிரத்தில் கீழிருந்து மேல்நோக்கியே (முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்) எழுத்தப்பட்டிருந்தது என்று சில அறிஞர்கள் கூறிய கருத்தைப் பொறுத்தவரையில் அதாவது மூன்று வரிகளிலும் அல்லாஹ்வின் பெயர் உயரத்தில் இருந்ததாகவும் முஹம்மத் என்ற பெயர் கடைசியில் இருந்ததாகவும் சில அறிஞர்கள் கூறிய கருத்தைப் பொறுத்தவரையில் எந்த ஹதீஸ்களிலும் இதுபற்றிய தெளிவை நான் காணவில்லை. மாறாக, அல்இஸ்மாஈலீ என்பவரின் அறிவிப்பு இதன் வெளிரங்கமான கருத்துக்கு முரண்படுகின்றது. அந்த அறிவிப்பில் முஹம்மத் முதலாவது வரியில் இருந்ததாகவும் ரஸூல் இரண்டாவது வரியில் இருந்ததாகவும் அல்லாஹ் மூன்றாவது வரிசையில் இருந்ததாகவும் இடம்பெற்றிருக்கின்றது.” (பத்ஹுல் பாரீ: 10/341)
மோதிரம் அணிவது குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடு
மோதிரம் அணிவதன் சட்டம் என்னவென்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் மூன்று வகையான கருத்துக்கள் காணப்படுகின்றன.
முதல் கருத்து: மோதிரம் அணிவது சுன்னாவாகும். இக்கருத்தை இமாம் முனாவீ ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இப்னுல் அரபீ ரஹிமஹுல்லாஹ் அவர்களும் கூறியுள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மோதிரம் அணிந்ததாக வரக்கூடிய செய்திகளை இவர்கள் ஆதாரமாக முன்வைக்கின்றார்கள்.
இரண்டாவது கருத்து: சமூகத் தலைவர்கள் மோதிரம் அணிவது சுன்னாவாகும். அவரல்லாத ஏனையோர் மோதிரம் அணிவது ஆகுமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முத்திரையிடப்படாத கடிதங்கள் அரபியர்கள் அல்லாதவர்களிடம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதற்காகவே மோதிரம் அணிந்தார்கள். எனவே, தலைவர்கள் அணிவது சுன்னாவாகும். ஸஹாபாக்கள் அணிந்ததைப்போன்று ஏனையவர்கள் அணிந்து கொள்வது ஆகுமானதாகும் என்று இவர்கள் கூறுகின்றார்கள். இக்கருத்து அல்மவ்ஸூஅதுல் பிக்ஹிய்யா என்ற நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
மூன்றாவது கருத்து: மோதிரம் அணிவது சுன்னாவல்ல. மாறாக, அது ஆகுமான ஒரு விடயமாகும். இக்கருத்தை இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ், சஊதி பத்வாக் குழுவைச் சேர்ந்த அறிஞர்கள் சரிகண்டிருக்கின்றார்கள்.
சரியான கருத்து: மூன்றாவது கருத்தே மிகவும் சரியான கருத்தாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பத்தில் மோதிரம் அணியக்கூடியவர்களாக இருக்கவில்லை. முத்திரையிடப்படாத கடிதங்களை அரேபியர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதற்காக வேண்டியே அவர்கள் மோதிரத்தை அணிந்து கொண்டார்கள். பின்பு ஸஹாபாக்களும் அணிந்து கொண்டார்கள். மோதிரம் அணிவது சுன்னாவாக இருப்பின் அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பமாகவே அணிந்திருப்பார்கள். ஸஹாபாக்களுக்கும் அதை வலியுறுத்தியிருப்பார்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.
இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் மோதிரம் அணிவதன் சட்டம் குறித்து வினவப்பட்டபோது: 'அதில் குற்றம் இல்லை. என்றாலும் அதில் எச்சிறப்பும் இல்லை” என்று பதிலளித்தார்கள். (மஸாஇலு அபீதாவூத்: 262ம் பக்கம்)
சஊதி பத்வாக் குழுவைச் சேர்ந்த அறிஞர்கள் கூறுகின்றார்கள்:
'ஆண்கள் வெள்ளி மோதிரம் அணிவது தேவையின்போதோ தேவையல்லாதபோதோ கூடுமாகும்.” (பத்வா இலக்கம்: 4644)
குறிப்பு: மோதிரம் அணிவது ஆகும் என்பது நாம் விரும்பிய வகையில் விரும்பிய உறுப்புக்களுக்கு மோதிரம் அணிவது கூடும் என்பதைக் குறித்து நிற்காது. மாறாக, மோதிரம் அணிந்தவர் மார்க்கம் வழிகாட்டிய விதத்திலேயே அதை அணிந்து கொள்ள வேண்டும்.
மோதிரம் அணியப்பட வேண்டிய உறுப்பு
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது கையில்தான் மோதிரம் அணிந்ததாக அவர்களது மோதிரம் குறித்து வரக்கூடிய செய்திகளில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம். எனவே, மோதிரம் கையில் அணியப்பட வேண்டிய ஓர் ஆபரணமாகும்.
மோதிரத்தை வலக்கரத்திலும் இடக்கரத்திலும் அணிய முடியும். இது அனைத்து அறிஞர்களின் ஒன்றுபட்ட முடிவாகும். எந்த அறிஞரும் குறித்த ஒரு கரத்தை சுட்டிக்காட்டி இக்கரத்தில் மோதிரம் அணிவதுதான் அவசியமாகும் என்று கூறவில்லை.
ஆனால், எக்கரத்தில் அணிவது மிகவும் சிறப்புக்குரியது என்பதிலேயே அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இது விடயமாக அவர்களுக்கு மத்தியில் மூன்று விதமான கருத்துக்கள் காணப்படுகின்றன.
முதல் கருத்து: மோதிரத்தை இடது கரத்தில் அணிவது மிகச் சிறந்தது.
இக்கருத்தை ஹன்பலீ, மாலிகீ, ஹனபீ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள், இமாம்களான மாலிக், அஹ்மத், அபுல் வலீத் அல்பாஜீ, தாரகுத்னீ, இப்னு அபீ ராபிஃ ரஹிமஹுமுல்லாஹ் ஆகிய அறிஞர்கள் கூறியுள்ளனர்.
இவர்களுடைய ஆதாரங்கள்:
1. ஸாபித் அல்புனானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த விரலில் மோதிரம் அணிந்திருந்தார்கள்” என்று கூறி தனது இடக்கையின் சுண்டு விரலை நோக்கி சைகை செய்தார்கள். (முஸ்லிம்)
2. அபூபக்கர், உமர், உஸ்மான், அல்ஹஸன், அல்ஹுஸைன், இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோரும், அல்காஸிம், ஸாலிம் இன்னும் சில ஸலபுகளும் இடக்கரத்தில் மோதிரம் அணிந்ததாக இப்னு அபீஷைபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது அல்முஸன்னப் என்ற நூலில் பதிவு செய்திருக்கின்றார்கள்
3. அதிகமாக மோதிரங்கள் முத்திரையிடப்படுவற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. இடது கையில் அணிவதாலே பலமான முறையில் முத்திரையிடலாம்.
4. வலக்கரத்தில் மோதிரம் அணிவது ராபிழாக்களின் அடையாளச் சின்னமாகும். அவர்களுக்கு மாற்றம் செய்வது விரும்பத்தக்கது.
இரண்டாவது கருத்து: வலக்கரத்தில் மோதிரம் அணிவது மிகச் சிறந்தது.
இக்கருத்தை ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள், இமாம் நவவீ, இப்னு ஹஜர் அல்ஹைதமீ, இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ, அல்பானீ ரஹிமஹுமுல்லாஹ் ஆகியோர் சரிகண்டுள்ளனர்.
இவர்களுடைய ஆதாரங்கள்:
1. அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வலக்கரத்தில் வெள்ளி மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார்கள். அதில் பொறிக்கப்பட்ட கல் அபீசீனியாவைச் சார்ந்ததாக இருந்தது. அதன் கல் தமது உள்ளங்கைப் பக்கம் அமையும்படி அணிந்திருப்பார்கள். (முஸ்லிம்)
2. அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலது கரத்தில் மோதிரம் அணியக்கூடியவர்களாக இருந்தார்கள்.” (அஹ்மத்)
இமாம் புஹாரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “இது தொடர்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்ட செய்திகளில் இதுவே மிகச்சரியான செய்தியாகும்.”
இந்த ஹதீஸை அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் முஹ்தஸருஷ் ஷமாஇல் என்ற நூலில் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.
3. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செறுப்பு அணிவதிலும் தலை முடி சீவுவதிலும் சுத்தம் செய்வதிலும் தங்களின் எல்லா விடயங்களிலும் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்.” (புஹாரீ)
மோதிரம் அணிவது ஓர் அலங்காரமாகும். எனவே, அதை வலக்கரத்தில் அணிவது விரும்பத்தக்கதாகும் என்று இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து இந்த அறிஞர்கள் கூறியுள்ளனர்.
இக்கருத்தைக் கூறும் அறிஞர்கள் முதலாவது கருத்தைக் கூறிய அறிஞர்கள் முன்வைத்த ஆதாரங்களுக்குப் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள்.
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலக்கரத்தில் மோதிரம் அணிந்ததாக வரக்கூடிய செய்திகள் மிகவும் சரியானதாகவும் அதிகமானதாகவும் இருக்கின்றன. எனவே, இச்செய்திகளையே நாம் ஏனையவைகளைவிட முற்படுத்த வேண்டும்.
இப்னு ஹஜர் அல்ஹைதமீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: வலக்கரத்தில் அணிவதே மிகவும் சிறப்பானதாகும். ஏனெனில், இவ்விடயம் அதிகமான ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளன. (துஹ்பதுல் முஹ்தாஜ்)
2. வலக்கரத்தில் மோதிரம் அணிவது ராபிழாக்களின் அடையாளச் சின்னம் என்று அவர்கள் கூறிய கருத்துக்கு இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு மறுப்புத் தெரிவித்திருக்கின்றார்கள்: 'பெரும்பான்மையான நகரங்களில் அது அவர்களுடைய அடையாளச் சின்னமாகக் காணப்படவில்லை. அது அவர்களுக்குரிய அடையாளச் சின்னமாக இருந்தாலும் வலதில் அணிவதை விடமுடியாது. பித்அத்வாதிகளில் ஒரு கூட்டம் செய்கின்றார்கள் என்பதற்காக வேண்டி எவ்வாறு சுன்னாக்கள் விடப்பட முடியும்?; (அல்மஜ்மூஃ)
3. பெரும்பான்மையான ஸஹாபாக்கள் இடக்கரத்தில் மோதிரம் அணிந்ததாக அவர்கள் கூறினார்கள். ஆனால், ஏனைய ஸஹாபாக்கள் வலக்கரத்தில்தான் அணிந்ததாகப் பதிவாகியுள்ளது. அவர்களில் உள்ளவர்களே ஜஃபர் இப்னு முஹம்மத், இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோர்கள். இவர்களுடைய செய்திகள் யாவும் இப்னு அபீஷைபா ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய அல்முஸன்னப் என்ற நூலில் பதிவாகியுள்ளன.
இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அபூபக்கர், உமர், பெரும்பான்மையான ஸஹாபாக்கள் ரழியல்லாஹு அன்ஹும், மதீனாவைச் சேர்ந்த தாபிஈன்கள், இன்னும் ஏனையோர்கள் வலக்கரத்தில் அணிந்ததாகக் கூறியிருக்கின்றார்கள். (பத்ஹுல் பாரீ)
மூன்றாவது கருத்து: வலக்கரத்திலும் அணியலாம். இடக்கரத்திலும் அணியலாம். சிறப்பென்ற அடிப்படையில் எக்கரத்தையும் குறிப்பாக்க முடியாது. இக்கருத்தைக் கூறும் அறிஞர்கள் இரு வகையான செய்திகளையும் ஒன்று சேர்த்து இந்த முடிவை வழங்கியிருக்கின்றார்கள். இக்கருத்தை இப்னுல் கைய்யிம், இப்னு உஸைமீன், பின்பாஸ் ரஹிமஹுமுல்லாஹ் மற்றும் சஊதி பத்வாக் குழுவைச் சேர்ந்த அறிஞர்கள் ஆகியோர் கூறியிருக்கின்றனர்.
இமாம் அபூதாவூத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது சுனனில் 'வலக்கரத்திலும் இடக்கரத்திலும் மோதிரம் அணிதல்” என்று தலைப்பிட்டிருக்கின்றார்கள். பின்பு இரு வகையான ஆதாரங்களையும் இடம்பெறச் செய்திருக்கின்றார்கள்.
சரியான கருத்து: மூன்றாவது கருத்தாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவரது தோழர்களும் இரு கரங்களிலும் மோதிரம் அணிந்திருக்கின்றார்கள். இந்த இரு வகையான செய்திகளையும் ஒன்று சேர்த்து இரு கரங்களிலும் மோதிரம் அணியலாம் என்ற முடிவையே நாம் தீர்மானமாக எடுக்க முடிகிறது. குறித்த ஒரு கரத்தில் மோதிரம் அணிவது சிறப்பென்றிருந்தால் அதற்கு அவர்கள் எமக்கு வழிகாட்டியிருப்பார்கள். ஏனெனில், எக்காரியத்திலும் அவர்கள் மிகச் சிறந்ததையே மேற்கொண்டிருக்கின்றார்கள்.
கால் விரல்களில் மோதிரம் அணியலாமா?
இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்: “ஒரு பெண் அவள் நாடிய விரலில் மோதிரம் அணிந்து கொள்ளலாம், அது கால் விரல்களாக இருந்தாலும் சரியே! ஆண்களைப் பொறுத்தவரையில் சுட்டு விரல், நடு விரல் ஆகியவற்றில் மோதிரம் அணிவது வெறுக்கத்தக்கதாகும், அவர்கள் கால் விரல்களில் அணிவது கடுமையாக வெறுக்கப்பட்டதாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஷர்ஹு ஸஹீஹி முஸ்லிம்)
மோதிரம் அணியப்பட வேண்டிய விரல்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ்களின் மூலம் நாம் தெரிந்து கொண்டோம். எனவே, சுண்டு விரலில் மோதிரம் அணிவது அறிஞர்களின் ஏகோபித்த கருத்தின்படி சிறப்புக்குரியதாகும்.
இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “கரத்தின் சுண்டு விரலில் மோதிரம் அணிவது பற்றிய பாடம்” என்று ஷர்ஹு முஸ்லிம் என்ற நூலில் தலைப்பிட்டிருக்கின்றார்கள். இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் “சுண்டு விரலில் மோதிரம் அணிதல்” என்று தலைப்பிட்டுள்ளார்கள்.
மோதிரத்தைச் சுண்டு விரலில் அணிவதே சுன்னாவாகும் என்பதில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டிருக்கின்றார்கள். ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் அவளுக்கு அனைத்து விரல்களிலும் மோதிரம் அணிந்து கொள்ளலாம் என்று இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அஷ்ஷெய்ஹ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சுண்டு விரலில் மோதிரத்தை அணிவதே மிக ஏற்றமானது என்று கூறியிருக்கின்றார்கள். இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் சுண்டு விரலில் மோதிரத்தை அணிவது மிகவும் சிறப்பானது என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஷர்ஹுஸ் ஸாதில் மஆத்: 6/109)
எனவே, சுண்டு விரலில் மோதிரம் அணியப்படுவதே மிகச் சிறந்ததும் நபிவழியுமாகும்.
மோதிரம் அணியப்படுவற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடு விரலிலும் சுட்டு விரலிலும் மோதிரம் அணிவதைத் தடை செய்ததாக ஹதீஸ்களில் பதிவாகியுள்ளன.
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுட்டு விரலிலும் நடு விரலிலும் மோதிரம் அணிவதைத் தடை செய்தார்கள்." (முஸ்லிம்)
இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு சுட்டு விரலிலும், நடு விரலிலும் மோதிரம் அணியப்படக்கூடாது என்று அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். சில அறிஞர்கள் இவ்விரு விரல்களில் அணிவது வெறுக்கத்தக்கது என்றும் மேலும் சில அறிஞர்கள் ஹராம் என்றும் கூறியுள்ளார்கள்.
இமாம் நவவி, இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் ஆகிய அறிஞர்கள் இவ்விரு விரல்களிலும் மோதிரம் அணிவது வெறுக்கத்தக்கது என்று கூறியிருக்கின்றார்கள். இப்னு ஹஸ்ம் ரஹிமஹுல்லாஹ் மற்றும் அஷ்ஷெய்ஹ் யஹ்யா அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் ஆகியோர் ஹராம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். நடு விரலிலும் சுட்டு விரலிலும் மோதிரம் அணியப்படுவது ஹராம் என்பதே சரியான கருத்தாகும். ஏனென்றால், மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸில் இடம்பெற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தடை ஹராம் என்பதையே தெரிவிக்கின்றது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
பெண்களும் அவர்களது சுட்டு விரலிலும், நடு விரலிலும் மோதிரம் அணிவது தடை செய்யப்பட்டுள்ளதா?
பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அனைத்து விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்று இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறிய கருத்தை நாம் முன்பு குறிப்பிட்டோம். இக்கருத்தை நவீன கால அறிஞர்களில் இப்னு பாஸ், இப்னு உஸைமீன், யஹ்யா அல்ஹஜூரி ரஹிமஹுமுல்லாஹ் ஆகியோரும் சரிகண்டுள்ளார்கள்.
சுட்டு விரலிலும் நடு விரலிலும் மோதிரம் அணியத்தடை குறித்து வரக்கூடிய செய்தி ஆண்களுக்குரியதாகும் என்று அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அனைத்து விரல்களிலும் அலங்கரித்துக் கொள்ள முடியும் என்று இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த அறிஞர்கள் கூறிய கருத்துக்கு மாற்றமான ஒரு கருத்தை நாம் ஆதாரபூர்வமாகக் காணவில்லை. எனவே, இக்கருத்தை நாம் சரியெனக் கருதுகின்றோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.
ஆழி விரலில் மோதிரம் அணியலாமா?
ஆழி விரல் என்பது சுண்டு விரலை அடுத்து வரக்கூடிய விரலாகும். இதற்கு மோதிர விரல் என்றும் கூறப்படுகின்றது. ஏனென்றால், அதிகமானவர்கள் இவ்விரலிலேயே மோதிரத்தை அணிகின்றார்கள். ஆனாலும், இதற்கு மோதிர விரல் என்று கூறுவது எம்மைப் பொறுத்தளவில் நபிவழிக்கு நெருக்கமான ஒரு கருத்தல்ல என்றே கருதுகின்றோம். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களது சுண்டு விரலிலேயே மோதிரத்தை அணிந்ததாகப் பல செய்திகளில் நாம் அவதானித்தோம். மோதிர விரல் என்று கூறுவதாக இருந்தால் சுண்டு விரலையே மார்க்க அடிப்படையில் நாம் கூற வேண்டும். எனவே, ஆழி விரல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியே இந்த விடயத்தை நாம் உங்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு இவ்விரல்களில் மோதிரம் அணிவதைத் தடை செய்தார்கள்” என்று அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிவிட்டு அவர்களுடைய நடு விரலையும் அதற்கு அடுத்த விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (முஸ்லிம்)
இந்த ஹதீஸில் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சுட்டிக்காட்டிய நடு விரலுக்கு அடுத்த விரல் எதுவென்பதில் இரு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. சிலர் அது ஆழி விரல் என்றும் இன்னும் சிலர் அது சுட்டு விரல் என்றும் கூறியுள்ளனர். அது சுட்டு விரலேயாகும் என்று கூறக்கூடியவர்களுக்கு முன்பு குறிப்பிடப்பட்ட அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ் தெளிவான ஆதாரமாக அமைந்திருக்கின்றது. ஏனெனில், அதில் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நடு விரலையும் சுட்டு விரலையும் சுட்டிக்காட்டினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.
இமாம் குர்துபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “எவராவது ஆழி விரலில் மோதிரம் அணிந்தால் அது தடுக்கப்பட்டதாக ஆகிவிடாது. ஏனென்றால், அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களது ஹதீஸில் தடுக்கப்பட்ட விரல் நடு விரலும் பெருவிரலுக்குப் பக்கத்தால் அதை அடுத்து வரக்கூடிய அல்முஸப்பிஹா என்று அழைக்கப்படக்கூடிய சுட்டு விரலுமேயாகும்.” (அல்முப்ஹிம்:5/414)
அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சுண்டு விரலில் மோதிரம் அணியப்படுவது மிகச் சிறந்தது எனக்கூறிவிட்டு ஆழி விரலிலும் அணிந்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்கள். (ஷரஹுஸ் ஸாதில் மஆத்: 6/109)
சுண்டு விரலில் மோதிரம் அணிவதே நாம் முன்பு குறிப்பிட்டது போன்று மிகச் சிறந்ததும் நபிவழியுமாகும். ஆழிவிரலில் அணிந்து கொள்வதிலும் தவறில்லை.
பெருவிரலில் மோதிரம் அணியலாமா?
இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பெருவிரலில் மோதிரம் அணிவது கூடும் என்று கூறியிருக்கின்றார்கள். இதுவே சரியான கருத்தாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடு விரலிலும் சுட்டு விரலிலும் மாத்திரமே மோதிரம் அணிவதைத் தடை செய்தார்கள். பெருவிரலில் தடை செய்ததாக எச்செய்தியும் பதிவாகவில்லை. ஒரு விடயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தடை இடம்பெறாவிடின் அடிப்படையில் அந்த விடயம் கூடுமான ஒன்றாகும். சுண்டு விரலில் மோதிரத்தை அணிவதே நபிவழியாகும் என்பதை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றோம்.
மோதிரத்தின் வைககள்
மோதிரம் எவ்வகையான கனிப்பொருட்களால் செய்யப்படுகின்றது என்பதைப் பொறுத்து மோதிரங்கள் பல வகைகளாகப் பிரிகின்றன. ஒவ்வொரு வகைக்கும் மார்க்க சட்டங்கள் காணப்படுகின்றன. அவற்றை இங்கு பிரித்துக் கூறியிருக்கின்றோம்.
தங்க மோதிரம்
தங்க மோதிரம் அணிவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள். ஆரம்பத்தில் அதை அணிந்த அவர்கள் அதற்கான தடை ஏற்பட்ட பின்பு அதை ஒதுக்கிவிட்டு வெள்ளி மோதிரத்தை எடுத்துக்கொண்டார்கள்.
ஆண்கள் தங்க மோதிரம் அணிவது ஹராமாகும். பெண்கள் தங்க மோதிரம் அணிந்து கொள்ளலாம். இது அனைத்து அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும் என்பதை இப்னு அப்தில் பர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (நூல்: அல்இஸ்தித்கார்)
இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இது ஏகோபித்த கருத்து என்று கூறியுள்ளார்கள். (ஷர்ஹு முஸ்லிம்)
இப்னு ஹஸ்ம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்: தங்க மோதிரம் ஆண்கள் அணிவது கூடும் என்றும், இன்னும் சில அறிஞர்கள்: ஹராமானதல்ல மாறாக, வெறுக்கத்தக்கதாகும் என்றும் கூறியிருக்கின்றார்கள். இவ்விரண்டு கருத்துக்களும் பிழையான கருத்துக்களாகும் என்று இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கம் மற்றும் பட்டாடை குறித்துப் பின்வருமாறு கூறினார்கள்: "இந்த இரண்டும் எனது உம்மத்தினரில் ஆண்களுக்கு ஹராமாகும், பெண்களுக்கு ஹலாலாகும்”. (திர்மிதி) இச்செய்தியை அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 'அல்இர்வாஃ” என்ற நூலில் ஸஹீஹ் என்று கூறியிருக்கின்றார்கள்.
அஷ்ஷெய்ஹ் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "ஆண்கள் தங்கத்திலான மோதிரம் அணிவது ஹராமாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கம் மற்றும் பட்டாடை குறித்துப் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: தங்கமும் பட்டாடையும் எனது உம்மத்தில் பெண்களுக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளது, ஆண்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளது”. (அஹ்மத்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்க மோதிரத்தை கையில் அணிந்திருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். அவர்கள் அதனைக் கழற்றி எறிந்துவிட்டார்கள். பின்பு அவர்கள்: "உங்களில் ஒருவர் நெருப்புத் தனலின் பக்கம் சென்று அதைத் தனது கையில் வைக்க விரும்புவாரா?” எனக் கூறினார்கள். (முஸ்லிம்) எனவே, ஆண்கள் தங்க மோதிரம் அணிவது ஹராமாகும். (பிக்ஹுல் மல்பஸ் வஸ்ஸீனா வத்தர்பீஹ்)
வெள்ளி மோதிரம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மரணம் வரை வெள்ளி மோதிரத்தையே அணிந்திருந்தார்கள் என்பதை மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. இன்னும், அவர்கள் தங்க மோதிரத்தையே தடை செய்திருக்கின்றார்கள். எனவே, இது வெள்ளி மோதிரம் அணிந்து கொள்வதில் தவறில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.
சில அறிஞர்கள் பெண்கள் வெள்ளி மோதிரம் அணிவதால் அது ஆண்களுக்கு ஒப்பான செயலாக அமைந்துவிடும் என்பதால் பெண்கள் வெள்ளி மோதிரத்தை தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கின்றார்கள்.
இது ஒரு பிழையான கருத்தாகும். ஏனெனில், மோதிரம் என்பது ஆண்களும் பெண்களும் அணியக்கூடிய பொதுவான ஒரு ஆபரணமாகும். ஆண்களுக்கு தங்க மோதிரத்தை ஹராமாக்கிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களுக்கு வெள்ளி மோதிரத்தை ஹராமாக்கவில்லை.
ஆண்களும் பெண்களும் வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்வதில் எத்தவறுமில்லை என்று அஷ்ஷெய்ஹ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (மஜ்மூஉ பதாவா வமகாலாத் முதனவ்விஆ: 20ம் பாகம்)
இரும்பு மோதிரம்
இரும்பு மோதிரம் அணிவது குறித்து அறிஞர்களிடம் மூன்று வகையான கருத்துக்கள் காணப்படுகின்றன.
முதலாவது கருத்து: இரும்பு மோதிரம் அணிவது கூடும். இக்கருத்தை இமாம் நவவி, ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள், அஷ்ஷெய்ஹ் இப்னு பாஸ், இப்னு உஸைமீன், சஊதி பத்வாக் குழுவைச் சேர்ந்த அறிஞர்கள் ஆகியோர் கூறுகின்றனர்.
இவர்களுடைய ஆதாரம்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மனிதரைப் பார்த்து: 'இரும்பாலான மோதிரமாக இருந்தாலும் சரி நீ மஹர் கொடுத்து விடு!” என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
இரும்பு மோதிரம் ஹராம் என்றிருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்மனிதருக்கு அதை மஹராக எடுத்துக் கொள்ளுமாறு கூறியிருக்கமாட்டார்கள் என்று இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு இந்த அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இரண்டாவது கருத்து: இரும்பு மோதிரம் அணிவது ஹராமாகும்.
இக்கருத்தை ஹனபி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள், அஷ்ஷெய்ஹ் அல்பானி, அஷ்ஷெய்ஹ் ரபீ அல்மத்ஹலி ஆகியோர் கூறுகின்றனர்.
இவர்களுடைய ஆதாரம்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செம்பிலான மோதிரத்தை அணிந்த ஒரு மனிதரைப் பார்த்து "நான் உன்னிடம் சிலைகளுடைய வாடையை பெற்றுக்கொள்கின்றேன்” என்றார்கள். பின்பு அவர் இரும்பு மோதிரத்தை அணிந்து வந்தார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "நான் உன்னிடம் நரகத்தின் ஓர் ஆடையைக் காண்கிறேன்” என்று கூறினார்கள். பின்பு அவர் அதை எறிந்துவிட்டார். (திர்மிதி)
முதலாவது கருத்தைக் கூறக்கூடியவர்கள் இந்த ஹதீஸை பலவீனமானது என்று கூறியிருக்கின்றார்கள். மேலும் இப்னு ரஜப், இப்னு அப்தில்பர், இப்னு பாஸ் ரஹிமஹுமுல்லாஹ் ஆகியோரும் இந்த ஹதீஸை பலவீனமானது என்று கூறியுள்ளார்கள்.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் இப்னு முஃமல் என்பவர் இடம்பெறுகிறார். இவர் நம்பகத்தன்மையில் மோசமானவராகக் கருதப்படுகின்றார். இந்த ஹதீஸுக்கு பலமூட்டும் வகையில் வேறு ஹதீஸ்கள் உமர், புரைதா ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரைத் தொட்டும் பதிவாகியுள்ளன. அவைகளிலும் சில பலவீனங்கள் காணப்படுகின்றன. அனைத்து அறிவிப்புக்களையும் ஒன்று சேர்த்து சில அறிஞர்கள் இது சரியனா ஒரு செய்தியாகும் என்று கூறியுள்ளார்கள்.
அஷ்ஷெய்ஹ் அல்பானி, அஷ்ஷெய்ஹ் முக்பில், அஷ்ஷெய்ஹ் யஹ்யா அல்ஹஜூரி ஆகியோரிடத்தில் இந்த ஹதீஸ் ஸஹீஹாகும்.
மூன்றாவது கருத்து: இரும்பு மோதிரம் அணிவது வெறுக்கத்தக்கது.
மூன்றாவது சாரார் இரு வகையான ஆதாரங்களையும் ஒன்று சேர்த்து இந்த முடிவை வழங்கியுள்ளனர். இக்கருத்தை மாலிகி, ஹன்பலி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்களும், அஷ்ஷெய்ஹ் யஹ்யா அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் அவர்களும் கூறியிருக்கின்றார்கள்.
சரியான கருத்து: பேணுதல் என்ற அடிப்படையில் இரும்பு மோதிரத்தைத் தவிர்ந்து கொள்வது மிகச் சிறந்தது. இக்கருத்தையே அஷ்ஷெய்ஹ் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் கூறியிருக்கின்றார்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளி மோதிரத்தையே அணிந்திருக்கின்றார்கள். எனவே, இரும்பு மோதிரங்களைத் தவிர்த்து வெள்ளி மோதிரங்களை அணிந்து கொள்வது மிகவும் சிறப்பானது.
செம்பு மோதிரம்
சில அறிஞர்கள் செம்பிலான மோதிரத்தை அணிவது கூடாது என்று கூறியுள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செம்பிலான மோதிரத்தை அணிந்த ஒரு மனிதரைப் பார்த்து: "நான் உன்னிடம் சிலைகளுடைய வாடையைப் பெற்றுக்கொள்கின்றேன்” என்றார்கள். பின்பு அவர் இரும்பு மோதிரத்தை அணிந்து வந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "நான் உன்னிடம் நரகத்தின் ஓர் ஆடையைக் காண்கிறேன்” என்று கூறினார்கள். பின்பு அவர் அதை எறிந்துவிட்டார். (திர்மிதீ)
பேணுதல் என்ற அடிப்படையில் செம்பு மோதிரத்தைத் தவிர்ந்து கொள்வது மிகச் சிறந்தது. இதுவே அஷ்ஷெய்ஹ் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தெரிவு செய்த கருத்தாகும்.
நாம் முன்பு கூறியது போன்று வெள்ளி மோதிரத்தைத் தெரிவு செய்து அதை அணிந்து கொள்வதே மிகவும் சிறப்புக்குரியது. செம்பு மோதிரம் அணிவது பற்றி யஹ்யா அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் அவர்களிடம் வினவப்பட்டபோது: "அதைவிட வெள்ளி மோதிரத்தை அணிவதே மிகவும் ஏற்றமானதும் சிறப்பானதுமாகும்” என்று அவருடைய பத்வாவில் கூறியிருக்கிறார்.
ஏனைய கனிப்பொருட்களால் செய்யப்பட்ட மோதிரங்கள்
மேற்குறிப்பிடப்பட்ட நான்கு வகையையும் சாராத ஏனைய கனிப் பொருட்களால் செய்யப்பட்ட மோதிரங்களைப் பொறுத்தவரையில் அவைகளை அணிவது கூடும் என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகக் காணப்படுகின்றது.
இப்னு ஹஸ்ம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "வெள்ளி, முத்து, மாணிக்கம், மரகதம் ஆகியவற்றை அணிந்து கொள்வது ஆண்களுக்கும் பெண்களுக்கும் அனைத்து விடயங்களிலும் ஹலாலானது”. (அல்முஹல்லா: 10/86)
அஷ்ஷெய்ஹ் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "தங்கமல்லாத வெள்ளியைச் சார்ந்த மோதிரம் அல்லது, அதுவல்லாத ஏனைய கனிப்பொருள் வகையிலிருந்து செய்யப்பட்ட மோதிரத்தைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கு அதை அணிந்து கொள்வது கூடுமாகும். அது பெறுமதிமிக்க கனிப்பொருள் வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் சரியே!” (அல்முன்தகா: 5/336)
முன்சென்ற தகவல்களின் சுருக்கம்:
தங்க மோதிரம்: ஆண்களுக்கு ஹராமானது, பெண்களுக்கு ஹலாலானது.
வெள்ளி மோதிரம்: ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஹலாலானது.
இரும்பு மோதிரம்: பேணுதல் என்ற அடிப்படையில் தவிர்ப்பது மிகச் சிறந்தது.
செம்பு மோதிரம்: பேணுதல் என்ற அடிப்படையில் தவிர்ப்பது மிகச் சிறந்தது.
மாணிக்கம், மரகதம், முத்து ஆகியவற்றால் செய்யப்பட்ட மோதிரம்: ஆண்கள் பெண்கள் ஆகிய இருபாலாருக்கும் ஆகுமானது.
குறிப்பு: மோதிரம் அணிகின்ற விடயத்தில் ஆண்கள் பெண்களுக்கான தனிப்பட்ட அலங்காரத்தை மேற்கொள்வதும், பெண்கள் ஆண்களுக்கான தனிப்பட்ட அலங்காரத்தை மேற்கொள்வதும் ஹராமானதாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களுக்கு ஒப்பாகக்கூடிய ஆண்களையும் ஆண்களுக்கு ஒப்பாகக்கூடிய பெண்களையும் சபித்தார்கள். (புஹாரி)
மோதிரம் அணிவதில் காபிர்களின் வழிமுறையைக் கையாள்வதும் ஹராமானதாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "யார் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகுகிறாரோ அவர் அக்கூட்டத்தைச் சார்தவராவார்”. (அபூதாவூத்)
அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அபூதாவூதில் இடம்பெறக்கூடிய ஹதீஸ்களை வேறு பிரிக்கும்போது இந்த ஹதீஸை ஸஹீஹ் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
சந்தேகங்களும் தெளிவுகளும்
மோதிரங்கள் குறித்த சில சட்டங்களை நாம் இதுவரைக்கும் உங்களுக்குத் தெளிவுபடுத்தினோம். மேற்குறிப்பிடப்பட்ட தகவல்களில் உள்வாங்கப்படாத மோதிரம் குறித்த இன்னும் பல செய்திகள் காணப்படுகின்றன. அவற்றை கேள்வி பதிலாக இங்கு தொகுத்துத் தர இருக்கிறோம்.
1. நிச்சயதார்த்த மோதிரம் - திருமணம் நிச்சயிக்கப்பட்டால் ஆண் பெண்ணுக்கும் பெண் ஆணுக்கும் அணியும் மோதிரம் - அணிவது கூடுமா?
பதில்: அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "மனிதர்களில் சிலர் திருமணம் செய்ய நாடினால் அல்லது, திருமணம் செய்தால் இதைத் தன் மனைவிக்கு அணிவிக்கின்றனர். இந்த வழமை இதற்கு முன்பு எங்களிடத்தில் அறியப்பட்டிருக்கவில்லை. அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இது கிறிஸ்தவர்களின் வழிமுறையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்கள். கிறிஸ்தவ மதகுருவிடம் கணவனும் மனைவியும் சென்று கிறிஸ்தவ ஆலயத்தில் கணவன் மனைவிக்கு சுண்டு விரலில் அல்லது, ஆழி விரலில் அல்லது, நடு விரலில் மோதிரத்தை அணிவிப்பார். இதன் சரியான முறையைப் பற்றி நானறியேன். என்றாலும், அஷ்ஷெய்ஹ் அல்பானி அவர்கள் இது கிறிஸ்தவர்களின் வழிமுறையிலிருந்து எடுக்கப்பட்ட ஒன்றாகும் என்று கூறியுள்ளார்கள்.
இதை விட்டுவிடுவது மிக ஏற்றம் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால், நாம் நாமல்லாத ஏனையவர்களுக்கு ஒப்பாகக்கூடாது. அத்தோடு இன்னொரு விடயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்! அது என்னவென்றால், சில மனிதர்கள் இதில் ஒரு நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார்கள். கணவன் மனைவிக்குக் கொடுக்கும் மோதிரத்தில் தன் பெயரை பதிப்பார். மனைவி கணவனுக்குக் கொடுக்கும் மோதிரத்தில் தன் பெயரைப் பதிப்பார். மனைவியின் பெயர் பதிக்கப்பட்ட கணவனுடைய கையில் இருக்கும் மோதிரமும் கணவனின் பெயர் பதிக்கப்பட்ட மனைவியின் கையில் இருக்கும் மோதிரமும் அதே நிலையில் காணப்படும் காலமெல்லாம் அவர்களுக்கு மத்தியில் பிரிவு ஏற்படாது என்று நம்பிக்கை கொள்வார்கள். இது ஷிர்க்கின் வகையைச் சார்ந்ததாகும்.
கணவனை மனைவிக்கு விருப்பமானவராகவும், மனைவியை கணவனுக்கு விருப்பமனாவளாகவும் ஆக்கவிடும் என்று மனிதர்கள் கருதக்கூடிய தாயத்தை இது சார்கின்றது. இப்படியான நம்பிக்கை காணப்படுமாயின் அது ஹராமாகும். எனவே, நிச்சயதார்த்த மோதிரம் இரு விடயங்கள் சேர்ந்ததாக அமைகின்றது.
முதலாவது: அது கிறிஸ்தவர்களின் வழிமுறையிலிருந்து எடுக்கப்பட்டது.
இரண்டாவதாக: அந்த மோதிரம் தான் தனக்கும் தன் மனைவிக்கும் மத்தியில் இணைப்பை ஏற்படுத்தும் என்று கணவன் நம்பிக்கை கொண்டால் அது ஷிர்க்கின் வகையைச் சாரும்.
எனவே, அதை விடுவதையே மிகச் சிறந்ததாக நாம் காண்கிறோம்”. (மாதாந்த சந்திப்பு: 1/46)
அஷ்ஷெய்ஹ் யஹ்யா அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:
"திருமணம் நிச்சயிக்கப்படுகின்றபோது வழங்கப்படும் நிச்சயதார்த்த மோதிரத்தைப் பொறுத்தவரையில், திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்பதற்கு அதனை அடையாளமாக வைத்துக் கொள்வதும், கணவர் தலாக் சொன்னால் அவர் பிரிந்து விட்டார் என்ற அடிப்படையில் அதைக் கழற்றுவதும் காபிர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் செயலாகும்”. (அல்கன்ஸுஸ் ஸமீன்)
அஷ்ஷெய்ஹ் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:
"நிச்சயதார்த்த மோதிரத்தைப் பொறுத்தவரையில் அது முஸ்லிம்களின் வழமைகளில் உள்ள ஒன்றல்ல. இந்த மோதிரம் திருமணத்தை முன்னிட்டு அணியப்படக்கூடிய ஒன்றாகும். இந்த மோதிரம் கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியில் விருப்பத்தை ஏற்படுத்துவதற்கான காரணம் என்றும், அதைக் கழற்றுவது அல்லது அணியாமல் இருப்பது கணவன், மனைவிக்கிடையிலான தொடர்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கை கொண்டால் அது ஷிர்க்கைச் சார்ந்ததாகக் கருதப்படும். மேலும் அது ஜாஹிலிய்ய நம்பிக்கையில் நுழைத்துவிடும். எனவே, எச்சந்தர்ப்பத்திலும் நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவது கூடாது.
முதலாவதாக: ஏனென்றால், அது நலவில்லாத மனிதர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் செயலைச் சார்ந்தது. இது முஸ்லிம்களிடம் தூதாக வந்த வழமையாகும். முஸ்லிம்களின் வழமையைச் சார்ந்ததல்ல.
இரண்டாவதாக: கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான தொடர்பில் இது தாக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை சேர்ந்திருந்தால் இது விடயத்தில் ஷிர்க் நுழையும். வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்”. (அல்முன்தகா மின் பதாவல் பவ்ஸான்)
அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:
"நிச்சயதார்த்த மோதிரம் என்று அழைக்கப்படக்கூடிய ஆண்கள் அணியும் தங்க மோதிரத்தைப் பொறுத்தவரையில் அது காபிர்களின் செயல்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாக அமைவதுடன் அவர்களிடம் இந்த வழிமுறை கிறிஸ்தவர்களிடமிருந்தே வந்தது. அவர்களிடம் காணப்பட்ட பழமை வாய்ந்த ஒரு வழமையின்பால் இவ்விடயம் திருப்புகின்றது. திருமண வைபவங்களின்போது கணவனுடைய இடக்கரத்தின் பெருவிரலின் உச்சிப் பகுதியில் அம்மோதிரம் வைக்கப்படும். அந்த நேரத்தில் கணவர்: தந்தையின் பெயரைக் கொண்டு எனக் கூறுவார். பின்பு அதை சுட்டு விரலின் உச்சிப்பகுதியில் வைத்து விடுவார். அந்த நேரத்தில் அவர் மகனின் பெயரைக் கொண்டு எனக் கூறுவார். பின்பு அதை நடு விரலின் உச்சிப்பகுதியில் வைப்பார். அந்த நேரத்தில் அவர் ரூஹுல் குத்ஸின் பெயரைக் கொண்டு எனக் கூறுவார். ஆமீன் சொல்லப்படுகின்ற நேரத்தில் அதை அவர் ஆழி விரலில் தரிபடுமாறு வைத்துக் கொள்வார்”. (ஆதாபுஸ் ஸிபாப்)
அஷ்ஷெய்ஹ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:
"நான் இதற்கு எந்த அடிப்படையையும் அறியமாட்டேன். இது முஸ்லிம்களின் வழிமுறையில் இருக்கவில்லை. இது கிறிஸ்தவர்களின் வழமையைச் சார்ந்ததே என்று நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். இன்னும், இந்த வழமை மனிதர்களிடம் லெபனான் போன்ற நாடுகளிலிருந்தே வந்தது என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். இதை விடுவது அவசியமாகும் என்று நான் கருதுகின்றேன். காபிர்களுக்கு ஒப்பாகுவதை விட்டும் இதுவே மிக ஏற்றமானதும் தூரமானதுமாகும். எங்களுடைய ஸலபுஸ் ஸாலிஹீன்கள் இதைச் செய்பவர்களாக இருந்தார்கள் என்றும் நாம் எத்திவைக்கப்படவில்லை. பெண் பேசப்பட்டு அவளுக்கு முடியுமான மஹரைக் கொடுக்க முற்பட வேண்டும். இதுவே போதுமானது. ஆனால் நிச்சயதார்த்த மோதிரம், வளையலைப் பொறுத்தவரையில் அதற்கு எந்த அடிப்படையும் இல்லை”. (பதாவா நூரின் அலத்தர்ப்)
சஊதி அல்லஜ்னதுத் தாஇமா அறிஞர்கள் கூறுகின்றார்கள்:
"இதற்கு இஸ்லாத்தில் எந்த அடிப்படையும் இல்லை. மாறாக, இது பித்அத்தாகும். முஸ்லிம்களில் மடையர்களும் பலவீனமானவர்களும் இது விடயத்தில் காபிர்களிடம் இருக்கக்கூடிய வழமையை கண்மூடித்தனமாகப் பின்பற்றியுள்ளனர். இது தடுக்கப்பட்டது. ஏனெனில், காபிர்களுக்கு ஒப்பாகக்கூடிய விடயம் அதில் இருக்கின்றது. இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள்”. (பத்வா இலக்கம்: 4127)
2. வுழூச் செய்யும்போது அல்லது கடமையான குளிப்பை மேற்கொள்ளும்போது மோதிரத்தைக் கழற்ற வேண்டுமா?
இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் "வுழூச் செய்பவர் மோதிரத்தை அசைக்க வேண்டுமா?” என வினவப்பட்டது. அதற்கவர்கள்: "அது (விரலுடன்) ஒட்டியதாக இருந்தால் அதை அசைத்துக் கொள்வது கடமையாகும். அது விசாலமானதாக இருந்தால் (அசைப்பது அவசியமில்லை) அது செல்லுபடியாகும்” என்று கூறினார்கள். (அல்முங்னீ:1/153)
இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
"ஒரு மனிதருடைய விரலில் மோதிரம் இருந்து, அதற்குக் கீழ் நீர் சென்றடையாவிட்டால் அதை அசைப்பதைக் கொண்டோ அல்லது அதைக் கழற்றுவதைக் கொண்டோ அதற்குக் கீழ் நீரை அடையச் செய்வது கடமையாகும் என்று எமது அறிஞர்கள் கூறியுள்ளார்கள்”. (அல்மஜ்மூஃ 1/394)
3. இஹ்ராம் அணிந்தவர் மோதிரம் அணியலாமா?
அஷ்ஷெய்ஹ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் இஹ்ராம் அணிந்தவர் கடிகாரம் அணியலாமா? என வினவப்பட்டது. அதற்கவர்கள்: "கடிகாரம் அணிவது மோதிரம் அணிவதைப் போன்றதே. இன்ஷா அல்லாஹ் அதில் எக்குற்றமும் இல்லை” என்று பதிலளித்தார்கள். (மஜ்மூஉ பதாவா வமகாலாத் முதனவ்விஆ: 17)
4. மோதிரத்தில் வைக்கப்படும் இரத்தினக்கல் மோதிரத்தின் வகையைச் சார்ந்ததாக இருப்பது அவசியமா?
பதில்: இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:
"இரத்தினக்கல் மோதிரத்தின் வகையைச் சார்ந்ததாகவோ அல்லது, வேறொரு வகையாகவோ இருப்பது கூடும். என்றாலும், அது மோதிரத்திற்கு உடன்படக்கூடியதாக அமையப்பெற்றிருப்பது மிக ஏற்றமாகும். அதைப் பெரிதாக்குவது தடை செய்யப்பட வேண்டும். ஏனெனில், அது பெருமைக்குள் நுழைந்துவிடும். மேலும், அதில் பெண்களுக்கு ஒப்பான செயலும் காணப்படுகின்றது. ஏனென்றால், அவர்கள் வழமையில் இரத்தினக்கல்லை பெரிதாக்குவார்கள்”. (அஷ்ஷர்ஹுல் மும்திஃ)
5. ஒருவர் தனது மோதிரத்தில் அல்லாஹ் என்ற பெயரைப் பதிக்கலாமா?
பதில்: இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:
"இது அவசியமற்றது. இப்படியான நிலைமைகளின் ஆகக் குறைந்த பட்ச சட்டம் வெறுக்கத்தக்கது என்பதேயாகும்.... இவை அனைத்தும் பித்அத்தான காரியங்களாகும். அல்லாஹ்வின் பெயரை இழிவுபடுத்தப்பட்டதாக ஆக்கிவிடுவதை இது அவசியப்படுத்தும். அதேபோன்று, இது போன்ற மோதிரத்தை இடது கையில் அணிந்திருப்பதால் ஒருவர் மலசல சுத்தத்தின்போது அழுக்குகளைத் தொடுவார். இது மிகவும் அபாயகரமான விடயமாகும்”. (அஷ்ஷர்ஹுல் மும்திஃ)
- முற்றும்
- அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்