பள்ளிவாசலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்



பள்ளிவாயில்கள் அல்லாஹ்வுக்கே உரியன

அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன. எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (72:18)

ஒருவர் அல்லாஹ்வுக்காக வணங்குமிடம் ஒன்றை உருவாக்கினால் அவருக்காக சொர்க்கத்தில் அது போன்றதை (வீட்டை) உருவாக்குகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம், அஹ்மத்: உஸ்மான்(ரலி) 

பள்ளிக்கு வரும்போது அமைதியைக் கடைபிடித்தல்

நீங்கள் இகாமத்தை செவியுற்றால் தொழுகைக்காக நடந்து வாருங்கள்;. (அப்போது) அமைதியையும், கண்ணியத்தையும் கடைபிடியுங்கள். வேகமாக ஓடி வராதீர்கள். (ஜமாஅத்தில்) உங்களுக்கு கிடைத்ததை தொழுங்கள், உங்களுக்குத் தவறியதை நிறைவேற்றுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா, நஸாயி, அபூதாவூத்: அபூஹூரைரா(ரலி) 

அல்லாஹ் தவறுகளை மன்னித்து, அந்தஸ்த்துகளை உயர்த்துகின்ற காரியத்தை அறிவிக்கட்டுமா? கஷ்டமான நேரத்தில் முழுமையாக ஒளு செய்து பள்ளிக்கு அதிகமாக நடந்து வருவது, (ஒரு) தொழுகைக்கு பிறகு மறு தொழுகையை எதிர்பார்ப்பது என்று கூறிவிட்டு இதுதான் மாபெரும் போராட்டம் என மும்முறை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஅத்தா, முஸ்லிம், திர்மிதி: அபுஹூரைரா(ரலி) 

பள்ளியில் நுழையும் போது:

பிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலுல்லாஹ் அல்லாஹும்மஃபதஹ்லி அப்வாப ரஹ்மதிக

 அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி மஸ்ஜிதுள் வலது காலை வைத்தவுடன் நபியவர்கள் மீது இந்த சுருக்கமான ஸலவாத்தையும் ஸலாமையும் சொல்ல வேண்டும். அல்லாஹ்வின் அருளும் ஈடேற்றமும் அல்லாஹ்வின் தூதர் மீது உண்டாவதாக என்பது இதன் பொருள். இப்படி நபியவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்த உடனே நமக்காக, 'அல்லாஹ்வே, உன் அருளின் வாசல்களை எனக்கு திறப்பாயாக' என்று கேட்க வேண்டும்.

உங்களில் ஒருவர் பள்ளியில் நுழையும்போது 'அல்லாஹூம் மஃப்தஹ்லி அப்வாப ரஹ்மதிக்க' (பொருள்: இறைவா! உனது அருள் வாயில்களை எனக்கு திறப்பாயாக!) என்று கூறட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்: அபூஎஸைத்(ரலி) 

பள்ளியில் நுழையும் போது வலது காலை வைத்து நுழைய வேண்டும். இடது காலை வைத்து வெளியேற வேண்டும். புகாரி : இப்னு உமர்(ரலி)

பள்ளியில் நுழைந்ததும்:

உங்களில் எவரேனும் பள்ளிவாயிலுக்கு சென்றால் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம். புகாரி, முஸ்லிம், அஹமத், நஸாயி: ஆபூகதாதா(ரலி) 

தொழுகைக்காக காத்திருப்பவரின் சிறப்பு:

தொழுத இடத்திலேயே ஒளூ முறியாத நிலையில் அடுத்த தொழுகைக்காகக் காத்திருப்பவருக்கு யாஅல்லாஹ்! இவரை நீ மன்னிப்பாயாக! இவருக்கு நீ அருள்புரிவாயாக! என மலக்குகள் பிராத்திக்கின்றனர். புகாரி, முஅத்தா: அபூஹூரைரா (ரலி)

பள்ளிக்கு துர்வாடையுடன் வரக்கூடாது:

வெங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒருவர் சாப்பிட்டால் நமது பள்ளிக்கு வரவேண்டாம். ஏனெனில் மனிதர்கள் துன்புறும் அனைத்தின் மூலமும் மலக்குகள் துன்புறுகிறார்கள். புகாரி, முஸ்லிம்: ஜாபிர்(ரலி)

ஒரே இடத்தை நிரந்தரமாக்கக் கூடாது:

ஒட்டகம் வழக்கமாக்கிக் கொள்வது போல் பள்ளியில் (தான் தொழுவதற்கென) எந்த ஒரு இடத்தையும் நிரந்தரமாக்கிக் கொள்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அஹ்மத்: அப்துர் ரஹ்மான் பின் ஷிஃப்லி(ரலி)

பாங்கு கூறிய பின் காரணமின்றி வெளியேறுவது:

பாங்கு கூறப்பட்ட பின் நயவஞ்சகர்களைத் தவிர வேறு யாரும் (பள்ளியை விட்டு) வெளியேற வேண்டாம், திரும்ப வருபவரைத் தவிர. முஅத்தா: ஸயீத் பின் முஸய்யப்(ரலி)

சத்தத்தை உயர்த்துதல்:

நான் மஸ்ஜிதில் நின்று கொண்டிருந்தேன், என்னை ஒருவர் பிடித்தார் (நான் திரும்பியபோது) உமர் (ரலி) அவர்களைப் பார்த்தேன். நீர் போய் அ(ங்கு பேசிக் கொண்டிருந்த)வ் விருவரையும் அழைத்துவாரும் என்று அவர்கள் கூற நான் அவர்களை அழைத்து வந்தேன் (அவர்களை) நீங்கள் இருவரும் யார்? எங்கிருந்து வருகிறீர்கள் எனக்கேட்டார்கள். அவர்கள் தாயிஃபிலிருந்து வருகிறோம் என்றனர், நீங்கள் இருவரும் இவ்வூர்வாசிகளாக இருந்திருந்தால் நபி(ஸல்) அவர்களின் பள்ளியில் பேசியதற்காக உங்களை தண்டித்திருப்பேன் என்று உமர்(ரலி)அவர்கள் கூறினார்கள். புகாரி: ஸாயிப் இப்னு யஸீத்(ரலி)

பள்ளியின் சுத்தம்:

பள்ளியில் துப்புவது தவறாகும், அதற்கு பரிகாரம் அதை போக்குவதாகும். முஸ்லிம்: அனஸ்(ரலி) 

பள்ளியில் இழந்த (தொலைந்த) பொருளைத் தேடுதல்:

எவரேனும் பள்ளியில் காணமல் போனதைத் (சத்தமாக) தேடக் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் உனக்கு திருப்பித் தராமல் இருப்பானாக! பள்ளிகள் இதற்காகக் கட்டப்படவில்லை எனக் கூறட்டும். முஸ்லிம்: ஆபூஹூரைரா(ரலி) 

பள்ளியில் வியாபாரம்:

பள்ளியில் (பொருள்) விற்பவரையோ, வாங்குபவரையோ நீங்கள் கண்டால் (அவரிடம்) உனது வியாபாரத்தில் அல்லாஹ் வெற்றியைத் தராமல் போகட்டும் எனக் கூறுங்கள். திர்மிதி: ஆபூஹூரைரா(ரலி) 

ஜூம்மா உரையின் போது அமரும் முறை:

இமாம் ஜூம்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது முழங்காலைக் கட்டிக்கொண்டு அமர்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். முஸ்லிம்: ஜாபிர்(ரலி) 

இமாம் ஜூம்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது உன் அருகில் இருப்பவனை நோக்கி பேசாமல் இரு என்று நீ கூறினாலும் நீயும் வீணான காரியத்தில் ஈடுப்பட்டவனாவாய். (ஜூம்மாவின் பலன் கிடைக்காமல் போய்விடும்) முஸ்லிம்: அபூஹூரைரா(ரலி) 

பள்ளியில் கவிதைப் பாடுதல்:

பள்ளியில் கவிதை பாடுவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அபூதாவூத்: அம்ர் பின் ஷூஐப்(ரலி)

பள்ளியில் உறங்குதல்:

நபி(ஸல்) அவர்கள் ஒரு காலின் மீது மற்றொரு காலைப் போட்டுக் கொண்டு மல்லாந்து உறங்குவதை நான் கண்டேன். திர்மிதி: அப்துல்லா பின் ஜைது பின் ஆஸிம்(ரலி) 

நாங்கள் வாலிபர்களாக இருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளியில் பேசிக் கொண்டிருப்போம், உறங்குவோம். அஹ்மத்: இப்னு உமர்(ரலி) 

பள்ளியில் கைதிகளை கட்டி வைக்கலாமா? பள்ளிக்குள் முஸ்லிமல்லாதோர் வரலாமா?

நஜ்து பிரதேசத்தை நோக்கி சிறிய குதிரைப் படை ஒன்றை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா என்ற கூட்டத்தை சேர்ந்த ஸூமாமா பின் அஸால் என்பவரை பிடித்து வந்து பள்ளிவாயிலில் உள்ள ஒரு தூணில் கட்டிவைத்தார்கள்... நபி(ஸல்) அவர்கள் ஸூமாமாவை அவிழ்த்து விடுங்கள் என்றார்கள். அவர் பள்ளிக்கு அருகில் இருந்த குட்டைக்குச் சென்று குளித்தார்கள். பின்னர் பள்ளிக்கு வந்து வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறினார். புகாரி: அபூஹூரைரா(ரலி) (ஹதிஸின் சுருக்கம்)

பள்ளியில் கூடாரம் அமைத்து நோயாளியை தங்க வைத்தல்:

அகழ் போரின் போது ஸஃது பின் முஆத்(ரலி) அவர்கள் கை நரம்பில் தாக்கப்பட்டார்கள். அவரை அருகிலிருந்து நோய் விசாரிப்பதற்கேற்ப பள்ளியிலேயே அவருக்காக கூடாரம் ஒன்றை நபி(ஸல்)அவர்கள் ஏற்படுத்தினார்கள். (ஹதீஸ் சுருக்கம் ) புகாரி: ஆயிஷா(ரலி) 

பள்ளியில் உண்ணுதல் பருகுதல்:

பள்ளியில் உண்ணலாம், பருகலாம். இப்னுமாஜா: அப்துல்லா பின் ஹாரிஸ்(ரலி) 

பெண்கள் பள்ளிக்கு வந்துத் தொழுதல்:

அல்லாஹ்வின் பள்ளிவாயிலில் (தொழக்கூடாது என) அல்லாஹ்வின் அடிமைகளான பெண்களை தடை செய்யாதீர்கள். அஹ்மத், அபூதாவூத்: அபூஹூரைரா(ரலி) 

பள்ளிக்கு வரும் பெண்கள், கணவன் - பெற்றோர் அனுமதி பெற வேண்டும்:

பெண்கள் பள்ளிக்கு வர உங்களிடம் அனுமதி கோரினால் பள்ளிக்கு வருவதை நீங்கள் தடை செய்யாதீர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன். முஸ்லிம்: இப்னு உமர்(ரலி) 

பெண்கள் பள்ளிக்கு நறுமணம் பூசிக் கொண்டு வரக்கூடாது:

(பெண்களே!) உங்களில் எவரும் பள்ளிக்கு வந்தால் நறுமணம் பூசவேண்டாம். முஸ்லிம்: ஜைனப் (ரலி) 

பள்ளியை விட்டும் வெளியேறும் போது:

அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக்க மின் ஃபழ்லிக்க (இறைவா! உன் அருளை உன்னிடம் கேட்கிறேன்) என கூறட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்: அபூ உஸைத் (ரலி)
Previous Post Next Post